அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரும்பு முள்வேலி
3

அதே இதழ்களில், போர்ச் சூழ்நிலையிலும், இதயம் படைத்தவர்கள் நற்செயல் சில புரிகின்றனர் என்பதற்கான செய்திகள் வெளி வருகின்றன. மோனா அதைப் பார்த்துப் பார்க்கிறாள். ஏற்கெனவே மெல்ல மெல்ல அவள் உள்ளத்திலிருந்து கலைந்துகொண்டிருந்த வெறுப்புணர்ச்சி மேலும் கலைகிறது.

எப்போது கலையத் தொடங்கிற்று அந்த வெறுப்புணர்ச்சி? ஆஸ்க்கார் எனும் ஜெர்மானியனைக் கண்ட நாள்தொட்டு; அவன் பேச்சிலே குழைந்திருந்த பாசத்தை உணர்ந்த நாள்முதல்.

ஜெர்மானியரின் பாசறைப் பகுதியில், பலத்த அடிபட்ட பிரிட்டிஷ் போர் வீரனொருவன் தப்பிச் செல்ல முயல்கிறான். துரத்திப் பிடிக்க வருகின்றனர். ஒரு வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறான். அது ஒரு ஜெர்மானியன் வீடு!

அந்த வீட்டிலே, ஜெர்மன் படைத்தலைவர்கள் சிலர் விருந்துண்டுக் களிநடமாடுகின்றனர்.

வீட்டுக்கு உரியவனான ஜெர்மானியன், பிரிட்டிஷ் வீரனைக் கண்டு விடுகிறான்.

ஒரு குண்டு! ஓர் அலறல்! ஒரு பிணம்! பிறகு கை தட்டல், பாராட்டு, வீரப்பதக்கம்!! - இப்படித்தானே நிகழ்ச்சி வடிவம் கொண்டிருக்கவேண்டும். அதுபோல நடக்கவில்லை.

உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ள வந்த பிரிட்டிஷ் படை வீரனை, அந்த ஜெர்மானியன் பிடித்து மேலிடம் ஒப்படைக்கக் கூட இல்லை. ஜெர்மன் தளபதிகள் கண்களில் பட்டு விடாதபடி மறைந்துகொள்ள வழிசெய்து தருகிறான். அந்தத் தளபதிகள் சென்றான பிறகு, பிரிட்டிஷ் வீரனைத் தப்பி ஓடிவிடும்படிச் சொல்லுகிறான்!

பிரிட்டிஷ் வீரன் உயிரை ஜெர்மானியன் காப்பாற்றுகிறான்! தீராத பகை! ஓயாத போர்! பயங்கரமான பழிவாங்கும் உணர்ச்சி! எங்கும் வெறுப்புணர்ச்சி கப்பிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஒரு ஜெர்மானியன் இதயம் படைத்தவனாகிறான், இரக்கம் காட்டுகிறான், பகைவனுக்கே துணை செய்கிறான்.

இந்தச் செய்தியை மோனா இதழிலிருந்து முதியவருக்குப் படித்துக் காட்டுகிறாள்.

புரிகிறதா அப்பா, எந்த இனத்திலும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இதோ இந்த ஜெர்மானியன் நல்லவனல்லவா? என்று கேட்கிறாள். முதியவர் மனத்தில் மூண்டுள்ள வெறுப்புணர்ச்சியைக் குறைத்திடலாம் என்ற எண்ணத்துடன்.

முதியவர் அதற்குத் தயாராக இல்லை.

“இவன் நல்லவனாக இருக்கலாம் மகளே! ஆனால், என் மகன் உயிரைக் குடித்த குண்டு வீசியவன், இவனுடைய மகனாக இருந்திருந்தால்... மகளே! ஜெர்மானியரில் நல்லவர் என்று ஒரு பிரிவும் உண்டா? வெறியர்கள்! அழிந்துபட வேண்டியவர்கள்! மனிதகுல விரோதிகள்! ?” என்று முதியவர் பேசுகிறார்.

அந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை மோனாவினால், அந்த இடத்தைவிட்டுச் செல்கிறாள்.

முதியவர் காண்கிறார்! என்னமோ நேரிட்டு விட்டிருக்கிறது, என் மகளின் மனத்திலே ஓர் மாறுதல் புகுந்து விட்டிருக்கிறது, என்ன காரணம் இந்த மாறுதலுக்கு? என்றெண்ணித் திகைக்கிறார்

போரினில் ஈடுபட்டு இதயம் இரும்பாகி விடும் நிலையிலே கூட, மனிதத்தன்மை பளிச்சிட்டுக் காட்டத் தவறுவதில்லை என்பதற்கான சான்றுகள் ஒன்றன்பின் ஒன்றாக மோனாவுக்குக் கிடைக்கின்றன. அதன் காரணமாக ஜெர்மானியர் அனைவருமே கொடியவர்கள் என்ற எண்ணம் தகர்ந்து போய்விடுகிறது.

அவர்களிலேயும் நல்லவர்கள் உண்டு என்ற எண்ணம் பிறக்கிறது.

ஜெர்மானியர் எல்லோருமே கொடியவர்கள் என்றால் இவ்வளவு நல்லவனான ஆஸ்க்கார் எப்படி அந்த இனத்திலே பிறந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. மோனாவின் மனமாற்றம் வேகமாக வளர்ந்தவண்ணம் இருந்தது. ஆனால் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டிருந்ததோ, வெறுப் புணர்ச்சிதான். முதியவரே ஒவ்வொரு நாளும் ‘பிதா’வை வேண்டிக் கொண்டிருக்கிறார், கொடிய ஜெர்மானியரைக் கொன்றொழி என்று.

ராபி களத்திலே கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது பிரிட்டிஷ் படை வரிசையினால் தாக்கப்பட்டு, குற்றுயிராகிய ஒரு ஜெர்மன் போர் வீரர், ராயி இருந்த ‘குழிக்கு’ அருகே துடித்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைக் கண்ட ராபி உருகிப் போனான். இவனை இப்படி இம்சைப்பட விடக்கூடாது என்ற இரக்க உணர்ச்சி எழுந்தது. பாய்ந்தோடிச் சென்று துடித்துக் கிடந்த ஜெர்மானியனைத் தன் வரிசையினர் பதுங்கிக் கிடந்த ‘குழிக்கு’ இழுத்துக்கொண்டு வந்தான். ஆனால் அந்த முயற்சியில் ஜெர்மன் படை வரிசையினரின் குண்டுகள் அவனைத் துளைத்தன; துடித்துக் கிடந்தான்.

ஒரே குழியில், ஒரு ஜெர்மன் போர்வீரன், பிரிட்டிஷ் படையினரின் குண்டடிப்பட்டு; ஒரு பிரிட்டிஷ் போர் வீரன், ஜெர்மன் குண்டடிப்பட்டு! ஜெர்மானியன் துடிப்பது கண்டு மனம் தாளவில்லை பிரிட்டிஷ் ராபிக்கு! ஜெர்மன் வீரனைக் காத்திடச் சென்றபோது ஜெர்மன் குண்டு தாக்குகிறது பிரிட்டிஷ் ராபியை! குண்டடிபட்ட இருவரும் ஒரே குழியில் கிடக்கிறார்கள்.

பிரிட்டிஷ் படை வேறிடம் செல்கிறது, அடிப்பட்ட இருவரையும் விட்டுவிட்டு.

ஜெர்மானியன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டான்; பிரிட்டிஷ் ராபியோ மரணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டான்.

கடைசி நேரம் நெருங்குவது அறிந்த ராபி, தன் கைக் கடிகாரத்தைக் கொடுக்கிறான் ஜெர்மானியனிடம், நீ உயிர் தப்பி ஊர் திரும்பினால் இதனை என் தங்கையிடம் சேர்த்துவிடு என்று கூறிவிட்டு.

ராபி இறந்து விடுகிறான்; அந்த ஜெர்மானியன் பிழைத்துக் கொள்கிறான்.

அவன், ஆஸ்க்காருக்குப் பள்ளித் தோழன். விவரம் தெரிந்து கொண்டு அந்தக் கைக்கடிகாரத்தை ஆஸ்க்காருக்கு அனுப்பி வைக்கிறான். ராபியின் தங்கையிடம் கொடுத்து விடு, அதுதான் ராபியின் கடைசி விருப்பம் என்பதைக் கூறு என்று.

ஆஸ்க்கார் இந்தத் தகவலையும் கைக்கடிகாரத்தையும் மோனாவிடம் கொடுக்கிறான். அவள் மனம் பாகாய் உருகி விடுகிறது.

கடும்போர் நடைபெறும் களத்திலேகூட இப்படி ஒரு நட்புணர்ச்சி பூத்திட முடிந்ததே!

ஒரே பதுங்குமிடத்தில் அடிபட்ட இருவர்; ஒருவர் ஜெர்மானியர் மற்றவர் பிரிட்டிஷ்.

அவர்கள் வெட்டிக்கொள்ளவில்லை. சுட்டுக்கொள்ள வில்லை; மரணப் படுக்கையிலே வீழ்ந்துவிட்டிருந்த அந்த இருவரும் நட்புணர்ச்சி பெற்றனர், முடிந்தது.

இந்த மனிதத் தன்மைதான் இயற்கையானது.

போர் இந்த இயற்கையான பண்பை அழித்து விடுகிறது.

ஒருவரிடம் ஒருவர் நட்புணர்ச்சி காட்டிடப் பிறந்த மக்களை, ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ளி கொள்ளச் செய்கிறது; வெறி ஊட்டுகிறது; மனிதத் தன்மையை மாய்க்கிறது; போர்! ஏன்தான் போர் மூட்டிக்கொள்கின்றனரோ! என்றெல்லாம் எண்ணி உருகுகிறாள் மோனா.

ஒரு முனையில், தன் தகப்பனாரின் உள்ளத்தில் வளர்ந்த வண்ணம் இருந்த வெறுப்புணர்ச்சியைப் போக்கிடப் போரிட வேண்டி இருந்தது. வெற்றி கிட்டவில்லை.

மற்றோர் முனையில், ஆஸ்க்கார் நிற்கிறான், இதயத்தில் இடம் கொடு என்று கேட்டபடி; மறுத்திடவும் முடியவில்லை, கொடுத்திடவும் துணிவில்லை; போர் மூள்கிறது; நாளாகவாக மோனாவின் போரிடும் ஆற்றல் குறைந்துகொண்டு வருகிறது.

எப்போதும் ஆஸ்க்கார் பற்றிய நினைவு; இரவிலும் பகலிலும்; பார்க்கும்போது பார்க்காதிருக்கும்போதும், அந்தப் பாசம் நிறைந்த கண்கள் அவளைப் படாதபாடு படுத்துகின்றன.
வாய் திறந்து அவன் தன் காதலைக் கூறிவிடவில்லை. ஆனால் அவன் கண்கள் வேறென்ன பேசுகின்றன! ஜெர்மானியர்களை வெறுத்த நிலைமாறி, அவர்களிலும் நல்லவர் இருக்கின்றார்கள் என்ற அளவுக்குக் கருத்து மாற்றம் கொண்டு, ஆஸ்க்காரிடம் பச்சாதபம் காட்டத் தொடங்கி, பிறகு பரிவு கொள்ளத் தொடங்கி, இறுதியில் காதலே அல்லவா அரும்பத் தொடங்கிவிட்டது. நெஞ்சிலே நெருப்பு மூண்டு கிடந்தது; அங்குக் காதல் மலருகிறதே; எப்படி? எண்ணுகிறாள், விம்முகிறாள்; குமுறுகிறாள்; எப்படியாவது தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் போராடுகிறாள்; துடிக்கிறாள்.

கேட்டாயா பெண்ணே! அக்கொடியவர் செயலை. பள்ளிக்கூடத்தின் மீது குண்டுவீசி, பச்சிளங் குழந்தைகளைக் கொன்றுவிட்டனர். இந்தப் பாவம் சும்மா விடுமா! ஆண்டவன் இதைச் சகித்துக் கொள்வாரா! நமது அரசாங்கம் பழிக்குப் பழி வாங்காமலிருக்குமா! உடனே கிளம்ப வேண்டும், ஜெர்மன் குழந்தைகளைக் கொன்று போடவேண்டும். ஒரு பிரிட்டிஷ் குழந்தை கொல்லப்பட்டால், ஓர் ஆயிரம் ஜெர்மன் குழந்தைகள் கொல்லப்பட வேண்டும்! ஒன்றுக்கு ஓராயிரம்! பழிக்குப் பழி! - என்று பதறுகிறார் முதியவர்.

அவர்கள் செய்த கொடுமையை நாமும் செய்வதுதான் நியாயமா!

குழந்தைகள் தூய்மையின் சின்னம்! ஜெர்மன் குழந்தை களாக இருந்தால் என்ன! - இவ்விதம் பேசிப் பார்க்கிறாள் மோனா; முதியவரின் கோபம் அதிகமாகிறதே தவிர பழிவாங்கும் உணர்ச்சி மாறுவதாக இல்லை.

அதே சம்பவம் பற்றிய சேதி அறிந்த ஆஸ்க்கார், பச்சாதாபம் காட்டுகிறான். என் நாட்டவர் இந்தக் கொடுமை செய்ததைக் கேள்விப்பட்டு நான் வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன் என்கிறான். மோனாவின் மனம் சாந்தி அடையவில்லை. மிகக் கடுமையான முறையில் பேசுகிறாள்.

நீ வெட்கப்பட்டு என்ன பயன், வேதனைப்பட்டு என்ன பயன். எங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிட்டதுபோன்ற கொடுமை, உங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிடவேண்டும், அப்போது புரியும் என்று மோனா கூறிவிட்டுப் போகிறாள். ஆஸ்க்கார் திகைத்துப் போகிறான்.

சில நாட்கள், வரையில் மோனா ஆஸ்க்காரைப் பார்க்க முயலவில்லை, ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சிகொள்ள முயல்கிறாள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை! கைதிகள் முகாமிலேயும் இசை, விருந்து, விழாக்கோலம்.

அன்றிரவு ஆஸ்க்கார் வருகிறான், வீடு நோக்கி.

வீட்டுக்குள்ளேயே வந்தமருகிறான்; காரணம், தனக்கு ஏற்பட்ட வேதனையை மோனாவிடம் கூறி ஆறுதல்பெற. அவனுடைய வீட்டின்மீது பிரிட்டிஷ் குண்டு வீசப்பட்டதில், அவனுடைய தங்கை பத்து வயதுச் சிறுமி இறந்துவிட்டிருக்கும் செய்தி அன்று அவனுக்குக் கிடைத்திருக்கிறது; வேதனை தாள மாட்டாமல் வந்தேன், ஆறுதல் அளித்திட வேறுயாரும் இல்லை. அதனால் இங்கு வந்தேன். தங்கச் சிலை என் தங்கை! பத்தே வயது! சின்னஞ்சிறு சிட்டு! என் உயிர்! எங்கள் குடும்பத்துக் கொடிமலர்! - என்றெல்லாம் கூறிக் குமுறிக் குமுறி அழுகிறான் ஆஸ்க்கார்.

வேதனை நிரம்பிய இந்தச் செய்திபற்றி அவனுக்குக் கிடைத்த கடிதத்தைப் படித்துவிட்டு மோனா கலங்குகிறாள். அருகே செல்கிறாள் ஆறுதல் கூற! அணைத்துக்கொள்கிறாள்! அவன் மெய்மறந்த நிலை அடைகிறான். எவருமே பிரிக்க முடியாததோர் அணைப்பு! காலமெல்லாம் இதற்காகத்தானே காத்துக்கிடந்தோம் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ள வில்லை, ஆனால் அந்த அணைப்பின் பொருள் அதுவாகத்தான் இருந்தது.

ஜெர்மானியரும் பிரிட்டிஷாரும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொள்கின்றனர். இங்கு ஓர் ஜெர்மன் வாலிபனைத் தழுவிக்கொள்கிறாள் ஓர் பிரிட்டிஷ் கன்னி; காம வெறியால் அல்ல, கயமைக் குணத்தால் அல்ல, எந்தத் தடையும் தகர்த் தெரியும் காதலின் தூய்மை தந்திடும் வலிவு காரணமாக இரண்டு உள்ளங்கள் கலந்துவிட்டன; இன பேதம், மூண்டுள்ள பகை, நடைபெறும் போர், கப்பிக்கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி எதுவும் அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் ஜெர்மனி - பிரிட்டன் என்ற நாட்டுக் கட்டுகளை மீறியதோர் காதலால் கட்டுண்டு கிடந்தனர். ஒரு நிமிடமா, ஓராயிரம் ஆண்டுகளா எவ்வளவு நேரமாக ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நின்றனர் என்பது இருவருக்கும் புரியாத நிலை. நாடு இனம் எனும் உணர்ச்சிகளைக் கடந்த நிலை மட்டுமல்ல, காலத்தையும் கடந்ததோர் நிலை! காதல் உணர்ச்சி அவர்களைப் பிணைத்து விட்டது.

கீழே ஏதோ பேச்சுக்குரல் கேட்ட முதியவர், தள்ளாடித் தள்ளாடி வந்து பார்க்கிறார், ஜெர்மானியனுடன் தன் மகள் குலவு வதை! திகைத்தார்! துடித்தார்! பதறினார்! கதறினார்! அடி கள்ளி! உன் அண்ணனைக் கொன்றவர் ஜெர்மானியர்; நீ அணைத்துக் கொண்டிருப்பது ஒரு ஜெரமானியனை! விபசாரி! குடும்பத்துக்கும், நமது இனத்துக்கும் இழிவு தேடிவிட்டாயே! இந்தக் கள்ளக் காதல் காரணமாகத்தான் உன் போக்கு மாறிவிட்டிருந்ததா! பாவி! இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமா! உன் அண்ணனின் ஆவி உன்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு சித்திரவதை செய்யாதா? அண்ணன் உயிர் குடித்த அக்கிரம ஜெர்மானிய இனத்தானுடன், அடிப் பாதகி! விபசாரி.

முதியவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. மகனைக் களத்திலே சாகடித்தான் ஒரு ஜெர்மானியன்! மகளின் கற்பையே அழிக்கத் துணிந்தான் மற்றோர் ஜெர்மானியன்! இதனைக் கண்ட பிறகமா உயிர் தங்கும் உடலில்! கீழே சாய்ந்தார். கூக்குரல் கேட்டு அங்கு வந்த பண்ணையாட்கள், முதியவரைப் படுக்கையில் கிடத்தினர். மோனாவின் இழிசெயலைப்பற்றி முதியவர் பதறிக் கூறியது அவ்வளவையும் அவர்கள் கேட்டுவிட்டிருந்தனர். மோனா இனி அவர்களிடமிருந்து தப்ப முடியாது. அவள் பாதகி, காதகி, விபசாரி! என்று கூறிடும் அந்த ஊர் முழுதும். திரும்பிப் பார்த்தாள், ஆஸ்க்காரைக் காணோம். நடந்ததை நினைத்துக் கொண்டாள், அவளுக்கே நடுக்கம் எடுத்தது. படுக்கையில் பார்க்கிறாள், முதியவர் மரணத்தின் பிடியில் தன்னை ஒப்படைத்துவிட்டதை. சுற்றிலும் பார்க்கிறாள், சுட்டுவிடுவது போன்ற பார்வையைச் செலுத்தும் பண்ணையாட்களை. முதியவர் இறந்துவிட்டார்.

ஊரே அவளைத் தூற்றுகிறது! பண்ணையாட்கள் அவளிடம் வேலை செய்வது இழிவு என்ற கூறி விலகிக் கொள்கிறார்கள்.

அப்பனைச் சாகடித்தவள்.
ஜெர்மானியனுடன் குலவினவள்,
கெட்ட நடத்தைக்காரி,
காம சேட்டைக்காரி.
எனவெல்லாம் தூற்றுகிறார்கள்; இதயத்தைத் துளைக் கிறார்கள், நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்க முடியுமா? இனத்தவர் முழுவதும் ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சியைக் கக்கிடும்போது இவள் ஒரு ஜெர்மானியனுடன் காதல் கொண்டால் சகித்துக்கொள்வார்களா! இனத்துரோகி நாட்டுத் துரோகி! பெண்குலத்தின் பெருமையையே அழித்தவள் என்று பேசத்தான் செய்வார்கள். ஜெர்மானியன் பிரிட்டனைத் தோற்கடித்து, பொன்னையும், பொருளையும்தான் கொண்டு போயிருப்பான், இந்தப் பொல்லாதவள் ஜெர்மானியனிடம் கற்பையே அல்லவா பறிகொடுத்தாள்; மனமொப்பி!

பண்ணை முழுவதும், முதியவர் மோனாவுக்கே சொந்த மாக்கி வைத்திருந்தார். தூற்றுவோர் தூற்றட்டும் என்று எண்ணிக் கொண்டு மோனா பண்ணை வேலைகளைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

மோனாவும் ஆஸ்க்காரும் பல நாட்கள் சந்திக்கக்கூட இல்லை.

அவர்கள் இருவரும் கள்ளக்காதல் நடத்திக்கொண்டிருந்தனர், அதனை ஒரு நாள் முதியவர் கண்டு பிடித்துவிட்டார் என்று ஊர் பேசிற்று; நடைபெற்றதோ ஒரு கணம் தோன்றி அவர்கள் இருவரையும் பிணைத்துவிட்ட காதல் உணர்ச்சி. அதனை அவள் விளக்கிடத்தான் முடியுமா. ஊரே தூற்றுகிறது அவளை விபசாரி என்று.

வெறுப்புணர்ச்சிக்கும் மனிதத் தன்மைக்கும் நடைபெறும் கடும் போர், உள்ளத்தை உலுக்கிவிடத்தக்கது, பலருடைய வாழ்க்கையிலே விபத்துக்களை மூட்டிவிடக் கூடியது என்பது ‘இரும்பு முள்வேலி’போன்ற ஏடுகள் மூலம் விளக்கப்படுகின்றன.

ஆனால் இதிலே எடுத்துக் காட்டப்படும் ‘மக்கள் மனப் போக்கு’ எளிதிலே மாற்றப்படுவதில்லை, மூட்டிவிடப்பட்ட வெறுப்புணர்ச்சியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள மக்களில் பெரும்பாலோரால் முடிவதில்லை.

வெறுப்புணர்ச்சி சூழ்நிலை கப்பிக்கொண்டிருக்கும் போதும் மோனா போல் ஒருவரிருவர் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர் - என்றாலும் வெறுப்புணர்ச்சியின் பிடியில் தம்மை ஒப்படைத்துவிட்ட மக்கள், ‘மோனா’ போன்றவர்கள்மீது சீறிப் பாய்வர்.

மோனா, பிரிட்டிஷ் இனம்; ஆஸ்க்கார், ஜெர்மன் இனம்; இருந்தால் என்ன? காதல் அவர்களைப் பிணைக்கிறது! அதிலே என்ன தவறு என்று எண்ணிட முடியவில்லை, வெறுப்புணர்ச்சி கொண்ட மக்களால்.

எந்த நாட்டிலும் இவ்விதமான உணர்ச்சியின் பிடியில் சிக்கிக்கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம்.

பெர்ல் பக் எனும் உலகப் புகழ்பெற்ற ஆசிரியர். தமது படைப்புகளில், இதுபோன்ற உணர்ச்சிக் குழப்பங்களை விளக்கிக் காட்டியுள்ளார்.

மோனாவுக்கு ஏற்பட்ட பிரச்சினை தன் மனதிலே இடம் பெற்ற ஜெர்மானியனை மணம் செய்துகொள்வது தவறல்ல என்பதை நாட்டவர் ஒப்புக்கொள்ளச் செய்திடவேண்டும் என்பதாகும்.

மற்றோர் ‘முனை’யைக் காட்டுவதுபோல, பெர்ல் பக் ஓர் கதையைத் தீட்டி அளித்துள்ளார் ஜப்பானியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் போர் நடந்திடும் நேரம் - இரண்டாவது உலகப்போர் இட்லர் மூட்டிவிட்ட போர்!

ஜப்பானியரைக் கண்டதும் சுட்டுத்தள்ளவேண்டும் என்ற உணர்ச்சி அமெரிக்கர்களுக்கு; அதுபோன்றே ஜப்பானியருக்கும். இது ‘தேசிய உணர்ச்சி’ என்ற மதிப்புப் பெற்றுவிட்டிருந்த நேரம்.

அவனும் மனிதன்தான்! - என்று பேசுவதே தேசத் துரோகம்!

அவன் ஜப்பானியன், ஆகவே கொல்லப்பட வேண்டியவன் என்ற எண்ணம், ஏற்புடையது என்று ஆக்கப்பட்டு விட்டிருந்த சூழ்நிலை.

அந்நிலையில், ஏதோ விபத்திலே சிக்கி, குற்றுயிராகிக் கிடந்த நிலையில் ஓர் அமெரிக்கன், கடலோரம் கிடத்தப்பட்டிருப்பதை ஒரு ஜப்பானியன் காண்கின்றான்.

அந்த ஜப்பானியன் ஒரு டாக்டர். அமெரிக்கனோ, உயிருக்கு மன்றாடுகிறான்!

டாக்டரின் கடமை என்ன? விபத்திலே சிக்கி உயிர் துடித்துக்கொண்டிருப்பவனைக் காப்பாற்றுவது! இனம், ஜாதி எனும் எதனையும் கவனிக்கக்கூடாது. நோயாளி - டாக்டர் என்ற தொடர்பு மட்டுமே அப்போது தெரியவேண்டும்.

வீட்டுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்கிறான் அமெரிக்கன் பிழைத்துக்கொள்கிறான்.

எந்த அமெரிக்கனைக் கொல்வது, ‘தேசியக் கடமை’ என்று கொள்ளப்படிருக்கிறதோ, அந்த அமெரிக்கனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டுவிட்டான்!

மருத்துவன், தன் கடமையைச் செய்தான்! ஆனால் ஜப்பானியன் என்ற முறையில் செய்யவேண்டியதை மறந்து!!

இது தேசத் துரோகம் என்று கருதப்படுமே, தன்மீது பழி வருமே என்ற பயம் பிடித்துக்கொள்கிறது ஜப்பானிய மருத்துவரை.

அதே ஊரில் இருந்த மேலதிகாரியிடம் சென்று, ஓர் அமெரிக்கன், பிடிபட்டிருக்கிறான் என்றும், தன் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறான் என்றும் கூறுகிறான்.

அந்த அதிகாரி, அமெரிக்கனை இரவு இரண்டு ஆட்களை ஏவி கொன்றுவிடச் செய்வதாகக் கூறி அனுப்புகிறான்.

எந்த அமெரிக்கன் உயிரைக் காப்பாற்றினானோ, அதே அமெரிக்கன் உயிரைப் போக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரி கூறுகிறார்; அற்கு இந்த ஜப்பானிய மருத்துவர் உடந்தை!

இது கொலைபாதகச் செயல்! ஆனால், இரக்கமற்றவனா இந்த ஜப்பானியன் என்றால், இல்லை! உயிர் காத்தவன்! மருத்துவன்! எனினும் இதற்கு இணங்குகிறான். ஏன்? தன்னை ஒரு ஜப்பானியன் என்று மெய்ப்பித்துக் கொள்ள வேண்டுமே, அதனால்.

நாமாக அவனைக் கொல்லக்கூடாது. வேறு யாராவது கொன்றால் கொன்றுகொள்ளட்டும் என்று எண்ணுகிறான்.

இதற்கிடையில் அவன் மனத்தில் எவ்வளவு கடுமையான போராட்டம் நடந்திருக்கவேண்டும்!

ஜப்பானியனாக இருந்தாலும் தன் உயிரைக் காத்தானே இந்த உத்தமன் என்று எண்ணிக்கொண்டு படுத்துக் கிடக்கிறான் அந்த அமெரிக்கன்.

அவன் கொல்லப்படுவதற்கான ஏற்பாட்டினுக்கு அதே ஜப்பானியன் உடந்தையாகிறான் என்பதை அறியவில்லை. சாகக் கிடந்தவனை நாம்தானே காப்பாற்றினோம்; இப்போது அவனைக் கொல்வதற்கு நாம்தானே காரணமாக இருக்கிறோம்; அவனைச் சாகடிக்கவா பிழைக்க வைத்தோம் என்று எண்ணாமலிருந்திருக்க முடியுமா!

ஓரிரவு, ஈரிரவு, ஆகிறது; அமெரிக்கன் கொல்லப் படவில்லை.

கடைசியில், ஜப்பானியன், அமெரிக்கனை ஒரு படகில் ஏற்றி, தப்பிச் சென்றுவிட ஏற்பாடு செய்துவிடுகிறான். வேறோர் தீவில் அமெரிக்க முகாம் இருக்கிறது, அங்குப் போய்விடச் சொல்கிறான்.

மனிதத்தன்மை எனும் உணர்ச்சியின் வெற்றி என்பதா இதனை!

மேலதிகாரியிடம் சென்று, நீங்கள் சொன்னபடி ஆட்களை அனுப்பவில்லை; அவன் தப்பியோடிவிட்டான் என்று கூறுகிறான் ஜப்பானியன்.

மேலதிகாரி பதறவில்லை! அவரும் உள்ளூர அந்தக் ‘கொலை’ கூடாது என்று எண்ணினார்போலும்! அவர் உள்ளத்திலும் மனிதத்தன்மை மேலோங்கி நின்றிருக்கும்போல் தெரிகிறது.

உன் கடமையை நீ செய்தாய்; அமெரிக்கன் பிடிபட் டிருக்கிறான் என்பதை அறிவித்துவிட்டாய்; நான் அனுப்பிய ஆட்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள். சரி! நடந்தது நடந்துவிட்டது! நடந்தது வெளியே தெரிய வேண்டாம்! - என்று மேலதிகாரி கூறி விடுகிறார்.
ஆக இரு ஜப்பானியர், தம்மிடம் சிக்கிய ஓர் அமெரிக்கனைக் கொன்றுபோட வாய்ப்பு இருந்தும் அவனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டதுடன், தப்பியோடிடவும் செய்துவிடுகின்றனர்.