அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரும்பு முள்வேலி
4

இதுபோன்ற உணர்ச்சிகளின் மோதுதல், பலரால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

வெறுப்புணர்ச்சி இயற்கையானது அல்ல; மூட்டி விடப் படுவது; மனிதத்தன்மைதான் இயற்கையானது, அதனைப் போர் மாய்த்துவிடுகிறது என்பதை விளக்கிட. ‘இரும்பு முள்வேலி’யில் மோனா, மனிதத் தன்மையின் எடுத்துக் காட்டாக விளங்குகிறாள். மெத்தப் பாடுபட்டுத் தன்னை வெறுப்புணர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டவளாக!

அவள்மீது வெறுப்புணர்ச்சிகொண்டோர் பாய்கின்றனர்.

இது, காவல் புரிய வந்திருந்த ஒரு பிரிட்டிஷ் வீரனுக்குத் துணிவைக் கொடுத்து; மோனாவைச் சுற்றி வட்டமிடத் தொடங்கினான்.

ஜெர்மானியனுக்கே இணங்கியவள், நாம் தொட்டால் பட்டா போய்விடுவாள் என்று எண்ணிக்கொண்ட அந்த இழி மகன், ஓரிரவு அவள் வீடு சென்று கற்பழிக்கவே முயலுகிறான். அவள் போரிடுகிறாள்; அலறுகிறாள். எங்கிருந்தோ வந்த ஒருவன், அந்தக் கயவனைத் தாக்கித் துரத்துகிறான், தக்க சமயத்தில் வந்திருந்து தன் கற்பினைக் காத்த வீரன் யார் என்று பார்க்கிறாள் மோனா. ‘ஆஸ்க்கார்! அரும்பு மலர்ந்தேவிட்டது.

நிகழ்ச்சிகள் பலப்பல உருண்டோடுகின்றன.

கற்பழிக்க வந்த கயவனை ஜெர்மன் கைதிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர், ஒருநாள்; மோனா தான் அவனைக் காப்பாற்றுகிறாள்.

தன்னைத் தாக்கியவர்களைத் தூண்டிவிட்டவன் ஆஸ்க்கார் என்று பழிசுமத்துகிறான் காவலாளிகளின் தலைவன். விசாரணை நடத்த மேலதிகாரிகள் வந்தபோது, ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பதை விளக்கிக் காட்டுகிறாள் மோனா. தன் கற்பைக் கெடுக்க காவலர் தலைவன் முயன்றபோது, காப்பாற்றியவன் ஆஸ்க்கார் என்பதைக் கூறுகிறாள். ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

இனிக் களைந்தெரிய முடியாத அளவு வளர்ந்துவிட்ட காதல் உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு இருவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். களத்திலே போர், ஜெர்மானியருக்கும் பிரிட்டிஷாருக்கும்; இங்குக் காதலா! ஒப்புமா உலகு? ஊரோ, மோனா ஜெர்மானியனுக்கு கள்ளக்காதலி ஆகிவிட்டாள் என்று ஏசுகிறது, சபிக்கிறார்கள் - வெறுப்பைக் கக்குகிறார்கள். அண்ணன் நாடு காக்க உயிரைக் கொடுத்தான்; இவள் பகைவனுக்குத் தன்னையே கொடுத்துவிட்டாள்! பிறந்தாளே இப்படிப்பட்டவள் ஒரு வீரக் குடும்பத்தில்! இவளையும் நாடு தாங்கிக்கொண்டிருக்கிறதே என்றெல்லாம் ஏசினர்.

மோனாவுக்கு இந்தத் தூற்றலைப் பற்றியெல்லாம் கவலை எழவில்லை, அவளுடைய கவலை முழுவதும், அவள் உள்ளத்தில் இடம்பெற்றுவிட்டிருந்த காதல் பற்றியே! என்ன முடிவு ஏற்படும். இந்தக் காதலுக்கு! இந்தக் காதல், நாடு, இனம் எனும் கட்டுகளை உடைத்துக்கொண்டு பிறந்துவிட்டது. போர்ப் புகையால் அரும்பை அழித்துவிட முடியவில்லை. மலரே ஆகிவிட்டது!! ஆஸ்க்காருடன் கடிமணம் செய்துகொண்டு வாழ்ந்தாக வேண்டும் இந்தப் போர்ச் சூழ்நிலையில் இது நடைபெறக்கூடிய காரியமா! அனுமதி கிடைக்குமா! சமுதாயம் ஒப்புக்கொள்ளுமா!

தத்தளிக்கிறாள் மோனா - திகைத்துக் கிடக்கிறான் ஆஸ்க்கார்.

காரிருள் நீங்குமா, பொழுது புலருமா, புது நிலை மலருமா என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கிடக்கின்றனர் காதலால் கட்டுண்ட இருவரும்.

விடிவெள்ளி முளைக்கிறது, பல இடங்களில் செம்மையாக அடிவாங்கி நிலை குலைந்து போய்விட்டது ஜெர்மன் படைகள். கெய்சரின் வெறிக்கு நாம் பலியாக்கப்பட்டோம் என்ற உணர்ச்சி ஜெர்மன் மக்களிடம் பீறிட்டுக்கொண்டு கிளம்பிற்று. நம்மை அழிப்பவர், உண்மையான பகைவர் பிரிட்டனிலே இல்லை. ஜெர்மனியிலே இருக்கிறார்,போர் மூட்டிவிட்ட கெய்சரே நம்மை அழித்திடத் துணிந்தவர், நாம் அழிவைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால் கெய்சரை விரட்டவேண்டும்; போர் நிறுத்தத்தைக் கோரவேண்டும் என்று ஜெர்மன் மக்கள் துணிகின்றனர்; சமாதானம் ஏற்படுகின்றது. பீரங்கிச் சத்தம் நிற்கிறது; இரும்பு முள்வேலிகள் அகற்றப்படுகின்றன. கவலை தோய்ந்த முகங்
களிலெல்லாம் ஒரு களிப்பு பூத்திடுகிறது. போர் முடிந்தது! அழிவு இனி இல்லை! பகை இல்லை, புகை எழாது! களம் நின்று குருதி கொட்டினர் எண்ணற்றவர்;ஆயிரமாயிரம் வீரர் பிணமாயினர்; இனி வீரர் வீடு திரும்பலாம்; பெற்றோரை மகிழ்விக்கலாம். காதற் கிழத்தியுடன் கொஞ்சி மகிழலாம், குழந்தைகளின் மழலை கேட்டு இன்பம் பெறலாம் உருண்டோடி வரும் பீரங்கி வண்டிகள் கிளப்பிடும் சத்தம் வீழ்ந்து வீழ்ந்து வேதனைத் தீயால் துளைக்கப்பட்ட செவிகளில் இனி மகனே! அப்பா! அண்ணா! மாமா! தம்பி! அன்பே! கண்ணாளா - என்ற அன்பு மொழி இசையெனப்புகும்; மகிழ்ச்சி பொங்கும்.

சடலங்கள் கிடக்கும் வெட்ட வெளிகள், இரத்தம் தோய்ந்த திடல் அழிக்கப்பட்ட வயல், இடிபாடாகிவிட்ட கட்டடங்கள், ஆழ்குழிகள், அதிலே குற்றுயிராகக் கிடந்திடும் வீரர்கள் - இவற்றையே கண்டு கண்டு புண்ணாகிப் போயிருந்த கண்களில், இனி வாழ்வு தெரியும், மாடு மனை தெரியும் மக்கள் சுற்றம் தெரிவர், விருந்து மண்டபம் தெரியும், விழாக்கோலம் தெரியும், பூங்கா தெரியும், ஆங்கு உலவும் பூவையின் புதுமலர் முகம் தெரியும்; கண்கள் களி நடமிடும்.

மோனாவுக்கு ஆஸ்க்காருக்கும்கூடப் புதுவாழ்வு பிறந்திடு மல்லவா!

பகைவனிடமா காதல், ஜெர்மன் வெறியனிடமா காதல் என்ற பேச்சுக்கு இனி இடமில்லை அல்லவா?

சமாதானம் ஏற்பட்டுவிட்டது, இனி ஜெர்மானியரும் பிரிட்டிஷ் மக்களும் பகைவர்கள் அல்லர், வெவ்வேறு நாட்டினர், நேச நாட்டினர். இனி மோனாவை ஆஸ்க்காரிடமிருந்து பிரித்து வைக்கும் பேதம் ஏது!

கைதிகளை விடுதலை செய்து ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பி விடும்படி உத்தரவு வந்துவிட்டது. சிறுசிறு அளவினராக அவர்கள் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் ஆஸ்க்கர்? அவனையும்தான் போகச் சொல்லுவார்கள் ஜெர்மனிக்கு. அவன் போய்விடுவதா! நான்? என் கதி! - என்று எண்ணுகிறாள் மோனா.

பிரிட்டிஷ் பெண்ணை மணம் செய்துகொள்பவன் ஜெர்மனி போகத் தேவையில்லை, என்றோர் விளக்கம் கிடைக் கிறது; மோனா மனத்திலே ஒரு நம்பிக்கை எழுகிறது.

ஆஸ்க்காரைத் திருமணம் செய்துகொண்டு தீவிலேயே வாழலாம்; பண்ணை வேலைகளை இருவரும் கவனித்துக் கொள்ளலாம். கள்ளி என்றும் விபச்சாரி என்றும் ஏசிப் பேசினவர்கள் கண் முன், நாங்கள் காதலித்தோம் கடிமணம் புரிந்து கொண்டோம் காண்பீர்! ஏதேதோ கதைத்தீர்களே முன்பு. இப்போது புரிகிறதா? நாங்கள் எந்த முறைகேடான செயலிலும் எங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை; முறைப்படி திருமணம் செய்துகொண்டோம் என்று கூறிடலாம்; வீசப்பட்ட மாசுகூட துடைக்கப்பட்டு விடும் என்று எண்ணிக்கொண்டாள் மோனா. பேதைப் பெண்! இந்த உலகம் உண்மைக் காதல் வெற்றிபெற அவ்வளவு எளிதாக அனுமதி கொடுத்து விடுகிறதா! துளியும் எதிர்பாராதிருந்த இன்னல்கள் தாக்கிடக் கிளம்பின.

மிராசுதாரர், குத்தகைக் காலம் முடிந்துவிட்டது, இனிப் பண்ணையைவிட்டு வெளியேறு என்று உத்திரவு பிறப்பித்தார்.

மறுபடியும் குத்தகைக்குக் கொடுமய்யா! எப்போதும் போலத் தொகை கொடுத்து வருகிறேன், பாடுபட்டு, பண்ணையும் நடத்து என்கிறாள் பாவை. “உனக்கா! ஊர் என் முகத்திலே காரித்துப்பும்! ஜெர்மனிக்காரனுடன் திருட்டுத்தன மாகத் தொடர்பு கொண்டவளல்லவா நீ! உன் அப்பனே அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செத்தானே! நீதானே அவனைக் கொன்று போட்டாய்! உனக்கு என் பண்ணையைக் குத்தகைக்குத் தர முடியாது. விரைவில் வெளியேறு என்று கண்டிப்பாகக் கூறி விட்டான் மிராசுதாரன்.

ஊர் மக்கள் கொண்டிருந்த வெறுப்பு மாறவில்லை. இங்கு எவரும் ஆதரிக்கமாட்டார்கள்; தங்கும் இடமும் தர மாட்டார்கள்; தொழிலும் நடத்தவிடமாட்டார்கள் என்பது புரிந்துவிட்டது. ஆஸ்க்கார் கூறினான். “கலக்கம் வேண்டாம்! நாம் வாழ வழி இருக்கிறது. நான் ஜெர்மானியன் என்றாலும், பிரிட்டனில்தான் ஒரு தொழில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தேன். போர் மூண்டதும் ஜெர்மானியன் என்பதால் என்னைச் சிறைப் பிடித்தார்கள். நான் தவறேதும் செய்தவன் அல்ல என்பதும், ஜெர்மனியில் கெய்சர் மேற்கொள்ளும் போக்கினைக் கண்டிப்பவன் என்பதையும், நான் வேலை பார்த்த தொழில் நிலையத்தார் அறிவர்; அப்போதே எனக்கு உறுதி அளித்தார்கள், போர் முடிந்து புது உறவு மலர்ந்ததும் நீ இங்கேயே வேலைக்கு வந்து அமரலாம்; உனக்காக அந்த வேலை காத்துக் கொண்டே இருக்கும் என்பதாக இப்போது அதை நினைவுபடுத்திக் கடிதம் எழுதுகிறேன். வேலை கிடைத்துவிடும்; பிரிட்டன் சென்று வாழ்ந்திடலாம்; போர்க் காலத்து நிகழ்ச்சிகள் கெட்ட கனவுபோல கலைந்தோடிப் போய்விடும். இல்லறம் எனும் நல்லறத்தில் இன்பம் பெறுவோம்; இனத்தைக் காட்டி ஒன்றுபட்டுவிட்ட இதயங்களைப் பிரித்திட முடியாது என்பதை உலகு உணரட்டும் என்றான். இசையென இனித்தது அவன் பேச்சு. ஆனால் சின்னாட்களில் இடியெனத் தாக்கிற்று பிரிட்டிஷ் தொழில் நிலையம் அனுப்பி வைத்த பதில் கடிதம். வேலை இப்போதைக்கு இல்லை! போர் முடிந்துவிட்டது என்றாலும், இங்கே ஜெர்மானியர்கள்மீது பரவிவிட்டுள்ள வெறுப்புணர்ச்சி குறையவில்லை. இந்நிலையில் தொழில் நிலையத்தில் ஒரு ஜெர்மானியனை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தாக முடியும். கடிதம் இந்தக் கருத்துடன். ஆஸ்க்கார் அழவில்லை; சிரித்தான்! வெறுப்புணர்ச்சியின் பிடியிலே உலகே சிக்கி விட்டிருப்பதை எண்ணிச் சிரித்தான்! மோனா! போர் நின்றுவிட்டது என்கிறார்களே, எங்கே நின்று விட்டது! சமாதானம் மலர்ந்துவிட்டது என்கிறார்களே, எங்கே அதன் மணம்! பகை உணர்ச்சி ஒழியா முன்பு போர் நின்றுவிட்டது என்று கூறுவது பொருளற்ற பேச்சு மோனா! போர் நடந்தபடி இருக்கிறது! வெறுப்புணர்ச்சி தாண்டவமாடிய படியேதான் இருக்கிறது. இதோ பார் கடிதத்தை! ஒரு ஜெர்மானியனை வேலைக்கு வைத்துக்கொள்ள முடியாதாம்! ஆபத்தாம்! ஆஸ்க்காரின் பேய்ச் சிரிப்புக் கேட்டு மோனா பயந்துவிட்டாள்! நிலைமையை அறிந்து கண்கலங்கினாள்.

அமெரிக்கா, இனவெறி அற்ற இடம், யாரும் சென்றிடலாம், தாயகமாகக் கொண்டிடலாம் என்ற செய்தி அறிந்தனர் காதலர். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரே வெள்ளக் காடாக இருக்கையில் தொலைவிலே ஒரு பசுமையான இடம் தெரிந்தால் மகிழ்ந்திடும் புள்ளினம்போலாயினர். புறப்படுவோம் அமெரிக்காவுக்கு; புதிய உலகுக்கு; இன பேதமற்ற சமுதாய நெறி தவழ்ந்திடும் நாட்டுக்கு என்று எண்ணினர். ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது. எந்த இனத்தவரும் அமெரிக்கா வந்து குடியேறலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு பணத்தோடு வந்தால் மட்டுமே இடம் கிடைக்கும், ஒரு வசதியுமின்றிப் புகுந்து கொண்டு நாட்டுக்குப் பாரமாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனை குறுக்கிட்டது.

பண்ணை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக மோனா தனக்குச் சொந்தமான பசுக்களை விற்றுவிட்டாள். அவளிடம் இருந்த செல்வம் பசுக்கள் மட்டுமே! ஆகவே இப்போது அவள் பரம ஏழை! ஆஸ்க்காரோ ‘கைதி’யாக இருந்தவன்! இருவரும் பணத்துக்கு என்ன செய்ய முடியும்! அமெரிக்காவை மறந்துவிட வேண்டியதுதான். அது பொருள் உள்ளவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் பொன் விளையும் பூமி. ஏழைக்கு இங்கு இடமில்லை! வேறு என்ன செய்வது? வாழ இடம்? வாழ வழி?

தயங்கித் தயங்கிக் கூறினான் ஆஸ்க்கார், ‘மோனா நீ மட்டும் சம்மதித்தால், நாம் நிம்மதியாக வாழ, மதிப்புடன் குடும்பம் நடத்த வழி இருக்கிறது. போரை மறந்து ஜெர்மனிக்கு வந்திருக்கச் சம்மதித்தால், நாம் இருவரும் அங்குச் சென்று வாழ்ந்திடலாம், அம்மா அன்புள்ளம் கொண்டவர்கள். என் வாழ்வே தன் வாழ்வு என்பவர்கள் உன்னைக் கண்டால் பூரித்துப்போவார்கள்! போகலாமா?” என்று கேட்டான். மோனா சம்மதித்தாள். இடம் எதுவாக இருந்தால் என்ன, அவருடன் இருந்திடும் இடமே எனக்குத் திருஇடம் என்று கருதினாள். ஆர்வத்துடன் கடிதம் எழுதினான் ஆஸ்க்கார் தன் அன்னைக்கு. பதில் வந்தது. இருவர் நெஞ்சிலும் நெருப்பை வாரிக் கொட்டுவதுபோல்.

எப்படியடா மனம் துணிந்தது நம்மை நாசமாக்கிய பிரிட்டிஷ் இனத்தின் பெண் ஒருத்தியைக் காதலிக்க. அவர்கள் நமக்குச் செய்த கொடுமையை எப்படி மறந்துவிட முடிந்தது. உன் தங்கை, பத்து வயதுச் சிறுமியைக் கொன்றது பிரிட்டிஷ் குண்டு என்பதையும் மறந்தனையா? காதல் கண்ணை மறைக் கிறதா! என் மகனா நீ! ஜெர்மானியன்தானா நீ? நாட்டைவிடப் பெரியவளோ உன்னை மயக்கிவிட்ட கள்ளி! - என்றெல்லாம் கண்டனச் சொற்களைக் கொட்டியிருந்தாள் மூதாட்டி அந்தக் கடிதத்தில்.

போர் முடிந்துவிட்டது என்றால் புதுநேசம் பிறந்து விட்டது, பகை அழிந்துவிட்டது, பாசம் பிறந்துவிட்டது என்பதல்ல பொருள், பீரங்கி ஓசை இல்லை, படைகொண்டு தாக்குதல் இல்லை, ஆனால் ஜெர்மானியர் ஜெர்மானியர்தான், பிரிட்டிஷார் பிரிட்டிஷார்தான் - வெவ்வேறு இனம்! என்ற கருத்து பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதனை இருவரும் உணர்ந்தனர். வெறுப்புணர்ச்சியற்ற ஒரு நாடே கிடையாதா! இனத்தை மறந்து இதயங்கள் ஒன்றுபட்டதால் கடிமணம் புரிந்து கொண்டு வாழ்ந்திட இடமளிக்கும் நாடே கிடையாதா என்று எண்ணி ஏங்கினர்.
ஓர் இடம் இருக்கிறது, போரும் பகையும் அற்ற இடம்; பேதமும் குரோதமும் அற்ற இடம்; மனிதர்களாக வாழக்கூடிய இடம்; வெறுப்புணர்ச்சி நுழைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது மோனா! நான் அங்குப் போய்விடுவது என்று தீர்மானித்துவிட்டேன் என்று கூறுகிறான் ஆஸ்க்கார். அது எந்த இடம் என்று கேட்கிறாள் மோனா! அவன் கூறுகிறான்; அவள் திடுக்கிட்டுப் போகிறாள்; மறுகணம் உறுதி பெறுகிறாள்; உண்மைதான் ஆஸ்க்கார்! அந்த இடமே பகைப்புயல் வீசாத இடம், நிம்மதியாக வாழ்ந்திட ஏற்ற இடம்; ஆனால் அங்கு நீ மட்டுமா செல்வது; எனக்கும் அதே இடந்தான்; இருவருமே செல்வோம் நமக்கு ஏற்ற அந்த இடத்துக்கு என்கிறாள் மோனா. அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், கொந்தளிக்கும் கடல், மரணபுரியில் மட்டுமே நாம் வாழ்ந்திட முடியும்; மக்களை மாக்களாக்கிடும் வெறுப்புணர்ச்சி தீண்டாத இடம் அதுவே. வேறு எந்த இடமும் நம்மை ஏற்றுக்கொள்ளாது! உன் இனம் என்ன? என்று கேட்கும்; உன் மரபு என்ன? என்று கேட்கும். மரணபுரியில் மட்டுமே அந்தக் கேள்விகள் எழுவதில்லை. மான் தீவிலே இடம் இல்லை! பிரிட்டன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அமெரிக்காவிலே தங்கிட அனுமதி இல்லை. ஜெர்மனி துரத்து கிறது உள்ளே நுழையாதே. இடம் கிடையாது என்று. அதோ ஆழ் கடல்! கொந்தளித்தபடி இருக்கிறது. அலைக்கரம் நீட்டி வா! வா! என்று அழைக்கிறது. காதலால் கட்டுண்ட என் மக்களே! நாடு பலவும் உங்களை வாட்டுகின்றனவா, இனபேதம் கிளறிவிடும் வெறுப்புணர்ச்சியால். கவலைப்படாதீர்கள்! இதோ நான் இருக்கிறேன். உங்களை ஆரத்தழுவி வரவேற்றிட! இங்கு இனபேதம் பகை உணர்ச்சி கிடையாது! வந்திடுவீர்! வந்திடுவீர்! என்று கூவி அழைக்கிறது. பல நாடுகள் இடமளிக்க மறுத்து விட்டன இந்தக் காதலருக்கு; காதலின் மேன்மையினை அறிந்திடும் திறனற்று. இதோ இந்த இடமே நமக்கு ஏற்ற இடம் என்று வருகின்றனர்! என் பெருமை உணர்ந்து வருகின்றனர்! - என்ற மகிழ்ச்சிப் பெருக்கில்தான், கொந்தளிக்கிறதோ.

உறுதி பிறந்துவிட்டது, புது உற்சாகமே வந்துவிட்டது. இருவரும் புறப்படுகின்றனர், தமக்கு ஏற்ற நாடு நோக்கி;

குன்றேறுகிறார்கள்! மேலே மேலே செல்கின்றனர்! பகை உணர்வும் வெறுப்புணர்ச்சியும் நெளியும் இடம், அதோ கீழே காலடியில்! அவர்கள் உயரச் சென்றுவிட்டனர்! குன்றேறிப் பார்க்கின்றனர், கீழே ஆழ்கடல்! அலைக்கரங்கள் அழைக்கின்றன.

ஆரத்தழுவிக் கொள்கின்றனர். மேலே வானம்! கீழே கடல்! மணமேடையோ சிறு குன்று!! இயற்கையோ எழிலளிக்கிறது மண வீட்டுக்கு! எதிர்ப்பார் இல்லை! ஏளனம் பேசுவார் இல்லை! இனம் வேறு வேறு அல்லவோ என்று குளறுவார் இல்லை. காதலரிருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம்! அந்த இன்பத்தில் திளைத்திருந்தனர், புதுவாழ்வு பெற்ற இருவரும்.

ஆஸ்க்கார், தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை எடுத்து, மோனாவையும் சேர்த்துத் தன்னுடன் பிணைத்துக் கொண்டான். ஈருடல் ஓர் உயிர்! அந்த ஈருடலும் கூட ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கட்டும் என்று எண்ணினான்போலும்.

கண்களைக் கண்கள் கவ்விக்கொண்டன.

அந்தக் கண்கள் என்னென்ன பேசிக்கொண்டனவோ! ஒரு புன்னகை பூத்திருக்கும்! இதழமுது சுவைத்திருப்பர்! நம் காலடியில் கிடக்கிறது குள்ளமனம் படைத்தோர் இருக்கும் இடம்! அவர்கள் தொட முடியாத உயரத்தில் நாம் நிற்கிறோம்; காதலின் சிகரத்தில்! இனி... சென்று சேர்ந்தனர் கடலடி. மரணபுரி அவர்களை வரவேற்றுக் கொண்டது. மாதாகோவிலின் மணி ஓசை கிளம்புகிறது போர் முடிந்தது. பகை ஒழிந்தது சமாதானம் மலர்ந்தது என்று அந்த ஓசை கூறுகிறது என்பர்!
இல்லை போய்ச் சேர்ந்தனர்; போரற்ற, பகையற்ற, பேதமற்ற, வெறுப்பற்ற இடம் போய்ச் சேர்ந்தனர் என்றல்லவா ஒலி அறிவிக்கிறது!

காதற்பயணம் முடிந்தது, போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்! வாழ்க காதலர்! வாழ்க காதல்! என்று ஒலிக்கிறதோ!!

(காஞ்சி - 1966)