அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கபோதிபுரக் காதல்
2

எல்லோரும் ‘அட்சதை’ மணமக்கள்மீது போட்டனர்! பரந்தாமனும் போட்டான். போடும்போது பார்த்தான் சாரதாவை! அவள் கண்களில் நீர் ததும்பியபடி இருந்தது. “புரோகிதர் போட்ட ‘புகை’ கண்களைக் கலக்கிவிட்டது” என்றாள் வேதவல்லி, அல்ல! அல்ல! பாழும் சமூகக் கொடுமை, அந்தக் கோமளத்தின் கண்களைக் கலக்கிவிட்டது” என்று எண்ணினான் பரந்தாமன்.

ஆம்! ராதாவை அவன் காதலித்தான். அவளும் விரும்பினாள். அவளே, அவன் பாட்டியுமானாள். என் செய்வான், ஏங்கும் இளைஞன்?

ராதாவின் சோகம், பரந்தாமனின் நெஞ்சம் பதறியது. வேதவல்லியின் வாட்டம், இவற்றைப்பற்றி மாரியப்ப பிள்ளைக்குக் கவலை ஏன் இருக்கப் போகிறது.

வீட்டிலுள்ள கஷ்டத்தினால் கழுத்தில் அணியும் நகையை விற்றுவிட்டால், வாங்குகிறவர்கள், விற்றவர்களின் வாட்டத்தை எதற்காகக் கவனிக்கப் போகிறார்கள். அந்த நகையைத் தாங்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் மட்டுந்தானோ இருக்கும். அதைப்போலவே மங்கை மனமாவட்டம் கொண்டாலும், தனக்கு மனைவியானாளல்லவா அதுதான் மாரியப்ப பிள்ளைக்கு வந்த எண்ணம், தன் இரண்டாம் மனைவி இறந்தபோது காரியஸ்தன் கருப்பையா தேறுதல் கூறும்போது, “எல்லாம் நல்லதுக்குத்தான் வருத்தப்படாதீர்கள்” என்று கூறினான்.

அன்றலர்ந்த ரோஜாவின் அழகு பொருந்திய ராதாவை அடையத்தான் போலும், அந்த விபத்து நேரிட்டது என்று கூட எண்ணினார் மாரியப்ப பிள்ளை. கலியாணம் முடிந்து விருந்து முடிந்து மாலையில் நடக்க வேண்டிய காரியங்கள் முடிந்து ஒருநாள் ‘இன்பம்’ பூர்த்தியாயிற்று. அன்றிரவு வேதவல்லி, விம்மிவிம்மி அழும் ராதாவுக்கு, என்ன சொல்லி அடக்குவது என்று தெரியாது விழித்தாள். பரந்தாமன் பதைபதைத்த உள்ளத்தினானனாய், படுத்துப் புரண்டான்.

மறுதினம், சாரதாவுக்கு, காய்ச்சல் வந்துவிட்டது. இரவு முழுதும் அழுது அழுது கண்கள் சிவந்துவிட்டன. இருமலும் சளியும், குளிரும் காய்ச்சலுமாக வந்துவிட்டது. மறுநாள் நடக்கவேண்டிய சடங்குகள் முடிந்து, உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டு போயினர். பரந்தாமனுக்கும் போக எண்ணந்தான். ஆனால், ராதாவுக்குக் காய்ச்சல், விட்டபிறகு போகலாம். காய்ச்சலாக இருக்கும்போதே ஊருக்கு போய்விட்டால், எப்படி இருக்கிறதோ, என்ன ஆயிற்றோ என்று கவலைப்படத்தானே வேண்டும், என்று எண்ணியதால் அவன் அங்கேயே தங்கிவிட்டான்.

மாரியப்ப பிள்ளை மகிழ்ச்சியின் மேலீட்டால் பரந்தாமனை, “டேய் பயலே. அங்குப் போய்த்தான் என்ன செய்யப் போகிறாய். இங்கேயே இருப்பதுதானே. பத்துப் பேரோடு பதினொன்றாக இரு. இங்கே கிடைக்கிற கூழோ தண்ணியோ, குடித்துவிட்டு காலத்தைத் தள்ளு. ஏதோ வயல் வேலையைப் பார்த்துக்கொள்ள வண்டி பூட்ட ஓட்ட ஆள் வைத்திருக்கிறேன். அவனையும் ஒழுங்காக வேலை வாங்கு. இரு இங்கேயே” என்று கூறினார். காரியஸ்தன் கருப்பையாவும், இந்த யோசனையை ஆதரித்தான். வேதவல்லியும், இது நல்ல யோசனை என்றாள். பரந்தாமன், “சரி பார்ப்போம்” என்று கூறினான். அவனுக்கு, தான் காதலித்த ராதா, ஒரு கிழவனின் மனைவியாக இருப்பதைக் கண்ணாலே பார்த்துக்கொண்டிருக்க இஷ்டமில்லை. ராதாவுக்கு உடம்பு சரியாகும் மட்டும் இருந்துவிட்டு, ஊர் போய்ச் சேருவது என்று முடிவு செய்தான்.

ராதாவுக்கு ஒரு நாட்டு வைத்தியர் மருந்து கொடுத்து வந்தார். ஜூரம் குறையவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ஜூரம் விட்டது ஆனால் களைப்பும், இருமலும் அதிகமாக இருந்தது. அன்று மருந்து வாங்கிக்கொண்டு வர, பரந்தாமனையே அனுப்பினார்கள். வைத்தியர், வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து சேர்ந்தான். வைத்தியர், சற்று வெறியில் இருந்தார். அவர் கொஞ்சம் ‘தண்ணீர்’ சாப்பிடும் பேர்வழி. எனவே, அவர் கிண்டலாகப் பேசினார். இது பரந்தாமனுக்குப் பிடிக்கவில்லை.

“வாய்யா, வா! என்ன மருந்துக்கு வந்தாயா! யாருக்கு? ராதாபாய்க்குத்தானே” என்று ஆரம்பத்திலேயே கிண்டலாகப் பேசினான்.

“ஆமாம் வைத்தியரே, பாவம் கலியாணமானதும் காய்ச்சல் இப்படி வந்துவிட்டது ராதாவுக்கு” என்றான் பரந்தாமன்.

“ஏனப்பா வராது. ஏன் வராது சொல்லு? பெண்ணோ பதுமைபோல ஜிலுஜிலுன்னு இருக்கிறாள். பருவமோ ஜோரான பருவம். புருஷனாக வந்த ஆளோ ஒரு கிழம். இதைக்கண்ட பெண்ணுக்கு வருத்தம் இருக்காதா?” என்றான் வைத்தியன். “இதெல்லாம் நமக்கேன் வைத்தியரே. எல்லாம் ஆண்டவன் எழுதி வைத்தபடிதானே நடக்கும்” என்றான் பரந்தாமன். “ஆண்டவனை ஏனப்பா இந்த வேலைக்கு அழைக்கிறே. அவர் தன் வரைக்கும் சரியாகத்தான் செய்து வைத்துக்கொண்டார். பார்வதி பரமசிவன் ஜோடிக்கு என்ன குறை! லட்சுமி – விஷ்ணு இந்த ஜோடிதான் என்ன இலேசானதா, சாமிகளெல்லாம் பலே ஆசாமிகளப்பா, அவர்கள் பேரைச் சொல்லிக்கொண்டு நாம்தான் இப்படி இருக்கிறோம் என்று வைத்தியன் சொன்னான்.

பரந்தாமனுக்கு இந்த வேடிக்கைப் பேச்சு சிரிப்பை உண்டாக்கியது. பரந்தாமன் சிரித்ததும், வைத்தியருக்கும் மேலே பேச்சு பொங்கிற்று. உள்ளேயும் ‘அது’ பொங்கிற்று!

“கேளப்பா கேளு இந்த மாதிரி ‘ஜோடி’ சேர்ந்தால் காரியம் ஒழுங்காக நடக்காது. என்னமோ, மாரியப்ப பிள்ளைக்குப் பணம் இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்த வேதவல்லி இந்த மாதிரி முடிச்சு போட்டுவிட்டாள். பணமா பெரிசு! நல்ல ஒய்யாரமான குட்டி ராதா. அவளை ஓர் ஒடிந்து விழுந்து போகிற கிழவனுக்குப் பெண்டாக்கினால், அந்தக் குடும்பம் எப்படியாவது? உனக்குத் தெரியாது விஷயம். மாரியப்பபிள்ளை, ஆள் ரொம்ப முடுக்காகத்தான் இருப்பாரு. ஆனால், இந்த ‘பொம்பளை’ விஷயமென்றால், நாக்கிலே தண்ணி சொட்டும், அந்த ஆளுக்கு. ரொம்ப சபலம் ரொம்ப சபலம், எப்படியோ பார்த்து, போட்டுட்டான் சரியான பெண்ணை, தன் வலையிலே” என்றான் வைத்தியன்.
பரந்தாமன் பார்த்தான் மேலே பேச்சு வளர ஆரம்பிக்கிறது. வைத்தியர் ரொம்ப வாயாடி என்பது தெரிந்துவிட்டது. நேரமாயிற்று மருந்துகொடு வைத்தியரே, போகிறேன் என்று கேட்டான். வைத்தியர், மருந்து கொடுக்கிறேன். ஆனால் மருந்து மட்டும் வேலை செய்தா போதாது. அந்தப் பெண்ணுக்கு மனோவியாகூலம் இருக்கக் கூடாதே. அதுக்காக என்ன மருந்து தரமுடியும். நான் ஜூரம் தீர மருந்து தருவேன். குளிர்போக குளிகை கொடுப்பேன். காய்ச்சல் போக கஷாயம் தருவேன். ஆனால், ராதாவின் மன வியாதியைப் போக்க நான் எந்த மருந்தைக் கொடுப்பது. தம்பீ, சரியான ஜோடி நீதான். ராதாவுக்கு மருந்தும் நீயே” என்றான் வைத்தியன்.

தன் ராதாவைப் பற்றி இவ்வளவு கிண்டலாக ஒரு வைத்தியன் பேசுவதா – அதிலும் தன் எதிரிலே பேசுவதா என்று கோபம் வந்துவிட்டது பரந்தாமனுக்கு. ஓங்கி அறைந்தான் வைத்தியனை.

“படவா மருந்து கேட்க வந்தால் வம்புதும்புமா பேசுகிறாய். யார் என்று என்னை நினைத்தாய்” என்று திட்டினான்.

வைத்தியன், வெறி தெளிந்து “அடே தம்பி நான் வேடிக்கை பேசினேன் கோபிக்காதே. இந்தா மருந்து” என்று சொல்லிவிட்டு மருந்து கொடுக்கச் சென்றான்.

வைத்தியனை, கோபத்திலே, பரந்தாமன் அடித்து விட்டானே தவிர, அவனுக்கு நன்றாகத் தெரியும். வைத்தியன் சொன்னதிலே, துளிகூட தவறு இல்லை என்று. ராதாவின் நோய் மன வியாதிதான் என்பதிலே சந்தேகமில்லை. அது அவனுக்குத் தெரிந்ததுதான். பிறர் சொல்லும்போதுதான் கோபம் வருகிறது. அதிலும் ராதாவைக் கிண்டல் செய்வது போலக் காணப்படவேதான் கோபம் மிக அதிகமாகிவிட்டது ஆழ்ந்து யோசிக்கும்போது, அந்த வைத்தியர் மட்டுமல்ல. ஊரில் யாரும் அப்படித்தானே பேசுவார்கள். நேரில் பேச பயந்து கொண்டு இருந்துவிட்டாலும் மறைவில் பேசும்போது இதைப்பற்றிக் கேலியாகவும், கிண்டலாகவும்தானே பேசுவார்கள் என்று எண்ணிய பரந்தாமன், ஆஹா! இந்த அழகி ராதாவுக்கு இப்படிப்பட்ட கதி வந்ததே, ஊர் முழுவதும் இனி இவளைப் பற்றித்தானே பேசுவார்கள். என்னிடம் வைத்தியன் கிண்டலாகப் பேசியதே எனக்குக் கஷ்டமாக இருந்ததே. ராதாவின் காதில், இப்படிப்பட்ட கேலி வார்த்தைகள் விழுந்தால், மனம் என்ன பாடுபடுமோ, பாவம், எங்கெங்கு இதே வேளையில் கிழவனை மணந்தாள் என்று கேலி செய்யப்படுகிறதோ, எத்தனை கணவன்மார்கள், தமது மனைவியிடம், “நான் என்ன, மாரியப்ப பிள்ளையா?” என்று கிண்டலாகப் பேசுகிறார்களோ! எத்தனை உணர்ச்சியுள்ள, பெண்கள், “நான் குளத்தில், குட்டையில், விழுந்தாலும் விழுவேன், இப்படிப்பட்ட கிழவனைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று பேசுகின்றனரோ, சேச்சே! எவ்வளவு கேலி பிறக்கும், கிண்டல் நடக்கும். இவ்வளவையும் என் பஞ்சவர்ணக்கிளி, எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும். நான் அவள் கருத்தைப் போக்க என்ன செய்ய முடியும். எனக்கோ, அவள், பாட்டி! என்று எண்ணிப் பரந்தாமன் வாட்டத்துடன் வீடுவந்து, வேதவல்லியிடம், மருந்தைக் கொடுத்தான்.

“தம்பி, நீயே, இந்த வேளை, உன் கையாலேயே மருந்தைக் கொண்டு. கொடுக்கிற வேளையானது, அவளுக்கு உடம்பு குணமாகட்டும்” என்று கூற, மருந்து கொடுக்க பரந்தாமன், ராதா படுத்துக் கொண்டிருந்த அறைக்குச் சென்றான்.

நல்ல அழகான பட்டுமெத்தை! அதன்மீது ராதா ஒரு புறமாகச் சாய்ந்துகொண்டு படுத்திருந்தாள். அவள் படுத்துக் கொண்டிருந்த பக்கமாக. தலையணை, சிறிதளவு நனைந்து கிடந்தது, கண்ணீரால்! “ராதா! கண்ணே இதோ இப்படித் திரும்பு. இதோ பார், பரந்தாமன், மருந்து எடுத்து வந்திருக்கிறார்” என்று வேதவல்லி கூறிக்கொண்டே, ராதாவை எழுப்பினாள்.

ராதா, தாயின் குரலைக்கேட்டு, திரும்பினாள். கண்களைத் திறந்தாள். பரந்தாமன், மருந்துடன் எதிரில் நிற்பதைக் கண்டாள். அந்த ஒரு விநாடிப் பார்வை, ராதாவின் உள்ளத்தில் புரண்டு கொண்டிருந்த கருத்துக்கள் அத்தனையையும் காட்டிவிட்டது. கைநடுக்கத்துடன், மருந்துக் கோப்பையைப் பிடித்துக்கொண்டு, பரந்தாமன் நின்றான். “வேதம்! வேதம்” என்று வெளியே வேதவல்லியின் புருஷர் கூப்பிடும் சத்தம் கேட்டது. வேதவல்லி, “இதே வந்தேன்” என்று கூறிக்கொண்டே வெளியே போனாள். காதல் நோயால் கட்டில்மீது படுத்துள்ள மங்கையும்,அவளைக் காதலித்துக் கிடைக்கப் பெறாது வாடிய பரந்தாமன், கையில் மருந்துடனும் இருவருமே அங்கு இருந்தனர்.

அந்த அறை ஒரு தனி உலகம்!

அங்கு இன்பத்திற்குத் தடை இல்லை! கட்டு இல்லை! காவல் இல்லை! பெண்டு கொண்டேன் என அதிகாரம் செலுத்த மாரியப்ப பிள்ளை இல்லை. மகளே, என்னை வேலை செய்கிறாய் என்று மிரட்ட வேதவல்லி இல்லை. கனைத்து மிரட்ட ராதாவின் தகப்பன் இல்லை.

காவலற்ற, கட்டற்ற உலகம்! காதலர் இருவர் மட்டுமே இருந்த உலகம்.

“மருந்தைக் குடி, ராதா!”என்றான் பரந்தாமன்.

ராதா வாயைக் கொஞ்சமாகத் திறந்தாள். மருந்து நெடியினால் முகத்தைச் சுளித்தாள். கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தான் பரந்தாமன், ராதா, திற வாயை, இதோ, மருந்து, குடித்துவிடு” என்று மருந்தை ஊற்றிவிட்டு, வாயைத் துடைத்தான். அந்தத் ‘தீண்டுதல்’ ராதா அதுவரை கண்டறியாத இன்பத்தை அவளுக்குத் தந்தது. முகத்திலே ஒருவித ஜொலிப்பு, கண்டுகொண்டான் பரந்தாமன், குனிந்து, அவளுடைய, கொஞ்சும் உதடுகளில், ஒரு முத்தம் கொடுத்தான்.

“ஆஹா! என்ன வேலை செய்தாயடி கள்ளி! என்ன வேலையடா செய்தாய் மடையா” என்று கர்ஜித்தார், மாரியப்ப பிள்ளை வாயிற்படியில் நின்றுகொண்டு.

‘மடையா!’ என்ற சொல் காதில் விழுந்த உடனே, பரந்தாமன், காதல் உலகை விட்டுச் சரேலெனக் கிளம்பி, சாதாரண உலகுக்கு வந்தான். மணமான ராதாவை, கணவன் காணும்படி, முத்தமிட்டதும், பேரன் செய்த செயலைப் பாட்டன் கண்டதும், அவள் நினைவிற்கு வந்தது. அவனோ, ராதாவோ, மேற்கொண்டு எண்ணவோ, எழவோ நேரமில்லை! மடையா! என்று கர்ஜித்துக் கொண்டே மாரியப்பபிள்ளை, எருது கோபத்தில் பாய்வதுபோல, பரந்தாமனின் மீது பாய்ந்தார். அவன் கழுத்தைப் பிடித்தார். அவன் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. கைகால்கள் வெடவெடத்தன. மாரியப்ப பிள்ளையின் பிடியினால், பரந்தாமனின் கண்கள் பிதுங்கி வெளிவந்துவிடுவது போலாகிவிட்டது. பரபரவெனப் பரந்தாமனை இழுத்து எச்சரித்தார். மாரியப்ப பிள்ளையின் கரத்துக்குப் பரந்தாமன், எம்மாத்திரம்! அடியறுத்த மரம்போல, சுருண்டு சுவரில் மோதிக்கொண்டான் பரந்தாமன், குபீரென மண்டையிலிருந்து இரத்தம் பெருகிற்று. ஐயோ! என்று ஈனக்குரலில் அலறினாள் ராதா! என்ன! என்ன! என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே வேதவல்லியும் அவள் புருஷனும் கருப்பையாவும் வந்தனர்.

பரந்தாமன், இரத்தம் ஒழுக நிற்பதையும், ராதா, கண்ணீர் பெருக நடுங்குவதையும், கோபத்தின் உருவமென, பிள்ளை உருமிக் கொண்டிருப்பதையும் கண்டவுடன் வந்தவர்களுக்கு, விஷயம் ஒருவாறு விளங்கிற்று.

“நடடா! நட! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பாதகா! நட இங்கு நிற்காதே” என்று மாரியப்ப பிள்ளை கூறிக்கொண்டே பரந்தாமனின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அறையைவிட்டு வெளியே கொண்டு வந்தார்.

“எஜமானருக்குத்தான் சொல்கிறேன். இவ்வளவு உரக்கக் கூவாதீர்கள். அண்டை அயலார் காதில் கேட்கப் போகிறது” என்று கருப்பையா கூறினான்.

“கேட்பதென்ன, செய்வதென்ன, என் போறாத வேளை. ஒரு வெட்கங்கெட்ட சிறுக்கியைத் தேடிப் பிடித்துக் கட்டிக் கொண்டேன். என் சோறு தின்றுவிட்டு சோரம் செய்கிறாள் இந்தக் கள்ளி இன்று இருவரும் கொலை! ஆமாம்! விடமாட்டேன்! எடுத்துவா, அரிவாளை இரண்டு துண்டாக இந்தப் பயலையும் துண்டுத் துண்டாக அந்தக் கள்ளியையும் வெட்டிப் போடுகிறேன். விடு, கருப்பையா கையைவிடு. டே கிழ ராஸ்கல்! நல்ல பெண்டுடா! என் தலைக்குத் தீம்பாகக் கொண்டு வந்தாய். நிற்காதே என் எதிரே யாரும் நிற்க வேண்டாம் யார் நின்றாலும் உதை குத்து வெட்டு கொலை ஆமாம்! விடமாட்டேன் என்று மாரியப்பபிள்ளை, இடி முழக்கம் போலக் கத்தினார். அவர் ஆயுளில், அதைப்போல, அவர் கத்தியதில்லை.

காரியஸ்தன் கருப்பையா விடவில்லை அவர் கரங்களை. “எஜமான்! எஜமான் சற்று என் பேச்சைக் கேளுங்கள். ஊர் நாடு தெரிந்தால் நமக்குத்தானே இழிவு. டே, பரந்தாமா போய்விடுடா வெளியே வேதம்மா நீங்களும் போங்கோ என்று மிகச் சாமர்த்தியமாகக் கூறிக்கொண்டே துடித்துக் கொண்டு கொலைக்கும் தயாராக நின்றுகொண்டிருந்த மாரியப்ப பிள்ளையை மெதுவாகத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

மாரியப்ப பிள்ளை, போன உடனே, வேதத்தின் புருஷர், பரந்தாமனை, நையப் புடைத்து “பாவி! ஒரு குடும்பத்தின் வாயிலே மண் போட்டாயே!” என்று அழுதார்.

“புறப்படடி! போக்கிரிச் சிரிக்கி, போதும் உன்னாலே எனக்கு வந்த பவிசு” என்று ராதாவைக் கட்டிலிலிருந்து பிடித்து இழுத்து மூவருமாகத் தமது வீடு போய்ச் சேர்ந்தனர்.

பரந்தாமன், இன்னது செய்வதென்று தோன்றாது ஊர்க்கோடியில் இருந்த பாழடைந்த மண்டபத்தில் புகுந்து கொண்டான் அன்றிரவு. ஊரில் லேசாக வதந்தி பரவிற்று, ராதா வீட்டாருக்கும், அவள் கணவனுக்கும், பெருத்த தகராறாம், ராதாவைக் கணவன் வீட்டைவிட்டு துரத்திவிட்டார்களாம், என்று பேசிக்கொண்டனர்.

வீடு சென்ற ராதா, நடந்த காட்சிகளால், நாடி தளர்ந்து சோர்ந்து படுத்துவிட்டாள். ஜூரம் அதிகரித்துவிட்டது. மருந்து கிடையாது. பக்கத்தில் உதவிக்கு யாரும் கிடையாது. அவள் பக்கம் போனால் உன் பற்கள் உதிர்ந்துவிடும் இடுப்பு நொறுங்கிவிடும் என்று வேதத்துக்கு அவள் கணவன் உத்திரவு.

எனவே தாலி கட்டிய புருஷன் தோட்டத்தில் தவிக்க, காதலித்த கட்டழகன் மண்டை உடைபட்டு, பாழ்மண்டபத்தில் பதுங்கிக் கிடக்க, பாவை ராதா படுக்கையில் ஸமரணையற்றுக் கிடந்தாள்.
இரவு 12 மணிக்குமேல், மெல்ல மெல்ல, நாலைந்து பேர், பரந்தாமன் படுத்திருந்த மண்டபத்தில் வந்து பதுங்கினர். அவர்களின் நடை உடை பாவனைகள், பரந்தாமனுக்கு, சந்தேகத்தைக் கொடுத்தது. வந்தவர்களிலே ஒருவன், மெதுவாக, பரந்தாமன் அருகே வந்து தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்த்தான். பரந்தாமன் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தான்.

“எதுவோ, பரதேசி கட்டைபோலிருக்கு” என்று சோதித்த பேர்வழி, மற்றவர்களுக்குக் கூற, வந்தவர்கள் மூலையில் உட்கார்ந்கொண்டு கஞ்சா, பிடித்துக்கொண்டிருந்தனர். அந்த நெடி தாங்கமாட்டாது பரந்தாமன் இருமினான். வந்தவர்கள் குசுகுசுவெனப் பேசினார்.

அதே நேரத்தில், “டார்ச் லைட்” தெரிந்தது. ஆஹா! மோசம் போனோமடா முத்தா. சின்ன மூட்டையை மடியிலே வைத்துக்கொள். பெரிசை அந்தப் பயல் பக்கத்திலே போட்டுடு, புறப்படும் பின்பக்கமாக, என்று கூறிக்கொண்டே ஒருவன், மற்றவர்களை அழைத்துக்கொண்டு, இடித்திருந்த சுவரை ஏறிக்குதித்து ஓடினான். பரந்தாமன் பாடு, பெருத்த பயமாகிவிட்டது. ஓடினவர்கள், கள்ளர்கள் என்பதும், சற்றுத் தொலைவிலே டார்ச் லைட் தெரிவதும், போலீசாரின் ஊதுகுழல் சத்தமும் கேட்டதும், ‘புலியிடமிருந்து தப்பிப் பூதத்திடம் சிக்கி விட்டோம்’ என்று பயந்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்தான். கள்ளர்களோ ஒரு மூட்டையைத் தன் பக்கத்திலே போட்டுவிட்டுப் போயினர். அது என்ன என்றுகூட பார்க்க நேரமில்லை. டார்ச் லைட் வர வர கிட்டே நெருங்கிக் கொண்டே வரவே வேறு மார்க்கமின்றித் திருடர்கள், சுவரேறிக் குதித்ததைப் போலவே தானும் குதித்து ஓடினான். கள்ளர்கள் தனக்கு முன்னால் ஓடுவதைக் கண்டான். அவர்கள் சொல்லும் பாதை வழியே சென்றான். அது ஓர் அடர்ந்த சவுக்கு மரத்தோப்பில் போய் முடிந்தது. கள்ளர்கள் எப்படியோ புகுந்து போய்விட்டனர். பரந்தாமன் சவுக்குத் தோப்பில் சிக்கிக் கொண்டு விழித்தான். அதுவரையில் போலீசாரிடம் சிக்காது தப்பினதே போதுமென்று திருப்தி கொண்டான். தன் நிலைமையைப் பற்றிச் சிறிதளவு எண்ணினான். அவனையும் அறியாமல் அவனுக்குச் சிரிப்பு வந்தது. என் பாட்டிற்கு ஜுரம். நான் அவளுக்கு மருந்து கொடுப்பதைவிட்டு முத்தம் கொடுப்பது. பாட்டன் என் மண்டையை உடைப்பது, அவருக்குப் பயந்து, பாழும் மண்டபத்துக்கு வந்தால் கள்ளர்கள் சேருவது, அவர்கள் கிடக்கட்டும் என்று இருந்தால் போலீசார் துரத்துவது, அதனைக் கண்டு அலறி ஓடிவந்தால் சவுக்குத் தோப்பில் சிக்கிக்கொள்வது, நரி ஊளைவிடுவதைக் கேட்க நல்ல பிழைப்பு என் பிழைப்பு! என்று எண்ணினான். சவுக்கு மரத்திலிருந்து ஒரு சிறு கிளையை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டான் கையில். ஏனெனில், தூரத்தில் நரிகள் ஊளையிடுவது கேட்டது அவை வந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான். சவுக்கு மலார் வைத்துக்கொண்டு உட்கார்ந்தபடி இருந்தான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவன் கண்கள் தானாக மூடிக்கொண்டன. அவன் தூங்கிவிட்டான் அலுத்து.

அதே நேரத்தில் கணவனுக்குத் தெரியாமல், வேதவல்லி மெதுவாக எழுந்து ராதா படுத்திருந்த அறைக்குச் சென்றாள். ராதாவின் நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை முத்து முத்தாகச் சொட்டிக்கொண்டிருந்தது. ஜாக்கெட் பூராவும் வியர்வையில் நனைந்துவிட்டது. ஜுரம் அடித்த வேகம் குறைந்து வியர்வை பொழிய ஆரம்பித்திருப்பதைக் கண்ட வேதம், தன் மகளின் பரிதாபத்தை எண்ணி, கண்ணீர் பெருகிக்கொண்டே தன் முந்தானையால் ராதாவின் முகத்தையும், கழுத்தையும், துடைத்தாள். ராதா கண்களைத் திறந்தாள். பேச நாவெடுத்தாள், முடியவில்லை. நெஞ்சு உலர்ந்து போயிருந்தது. உதடு கருகிவிட்டிருந்தது ஓடோடிச் சென்று கொஞ்சம் வெந்நீர் எடுத்து வந்தாள். அந்நேரத்தில் அதுதான் கிடைத்தது. அதை ஒரு முழுங்கு ராதாவுக்குக் குடிப்பாட்டினாள். ராதாவுக்குப் பாதி உயிர் வந்தது. தன்னால் வந்த வினை இதுவெனத் தெரியும் ராதாவுக்கு. ஆகவே, அவள் தாயிடம் ஏதும் பேசவில்லை. தாயும் ஒன்றும் கேட்கவில்லை. வேறு இரவிக்கையைப் போட்டுக்கொண்டாள். ‘என் பொன்னே! உன் பொல்லாத வேளை இப்படிப் புத்தி கொடுத்ததடி கண்ணே’ என்று அழுதாள் வேதம். ராதா, படுக்கையில் சாய்ந்துவிட்டாள். தாயின் கரத்தைப் பற்றிக்கொண்டு, “அம்மா! நான் என்ன செய்வேன் நான் எதை அறிவேன், என் நிலை உனக்கு என்ன தெரியும்” என்று மெல்லிய குரலில் கூறினாள். தாய் தன் மகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “காலையில் ஜுரம் விட்டுவிடும், இப்போதே வியர்வை பிடிக்க ஆரம்பித்துவிட்டது” என்று கூறினாள்.

“என் ஜுரம் என்னைக் கொல்லாதா! பாவி நானேன் இனியும் உயிருடன் இருக்கவேண்டும். ஊரார் பழிக்க உற்றார் நகைக்க, கொண்டவர் கோபிக்க, பெற்றவர் கைவிட நான் ஏன் இன்னமும் இருக்கவேண்டும், ஐயோ! அம்மா! நான் மாரி கோவிலில் கண்ட நாள்முதல், அவரை மறக்கவில்லையே. எனக்கு அவர்தானே மணவாளான் என நான் என் மனத்தில் கொண்டேன். என்னை அவருக்கே நான் அன்றே அர்ப்பணம் செய்துவிட்டேனே, அவருக்குச் சொந்தமான உதட்டை நீங்கள், வேறொருவருக்கு விற்கத் துணிந்தீர்கள். அவர் கேட்டார், அவர் பொருளை, நான் தந்தேன், அவ்வளவுதான். உலகம் இதை உணராது, உலகம் பழிக்கத்தான் பழிக்கும். என்னைப் பெற்றதால் நீங்கள் என் இப்பாடுபடவேண்டும் அந்தோ மாரிமாயி, மகேஸ்வரி, நீ சக்தி வாய்ந்தவளாக இருந்தால் என்னை அழைத்துக்கொள். நான் உயிருடன் இரேன், இரேன், இரேன்” என்று கூறி அழுதாள்.

நாட்கள் பல கடந்தன. வாரங்கள் உருண்டன. மாதங்களும் சென்றன. சாரதாவின் ஜுரம் போய்விட்டது. ஆனால் மனோ வியாதி நீங்கவில்லை. அவளைக் கணவன் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளவில்லை. பரந்தாமன் மனம் உடைந்து தொழிலைவிட்டு பரதேசியாகி ஊரூராகச் சுற்றினான். ராதாவின் தாயார், தனது மருமகப்பிள்ளையைச் சரிப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.