அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கபோதிபுரக் காதல்
6

வேதவல்லி வேப்பிலையும் கையுமாக அவன் பக்கத்தில் வீற்றிருந்தாள்.

அம்மையின் வேகம் அதிகரிக்க, பரந்தாமனின் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. வேதவல்லி வேப்பிலை கொண்டு வீசி, உபசாரம் செய்தாள். மாரியோ கேட்கவில்லை. பரந்தாமனின் மேனியில் துளி இடங்கூடப் பாக்கி இல்லை. எங்கும் சிவப்புப் பொட்டுகள், பூரித்துக் கொண்டிருந்தன. பரந்தாமனின் உடல் எரிச்சல் சொல்லுந்தரமன்று, அவன் அம்மைத் தழும்புகளைத் தேய்த்துவிடுவான், தழும்புகள் குழைந்துவிடும். வேதவல்லி, “ஐயோ, அபசாரம், அபசாரம் மாரி, கோபிக்காதே மகன்மீது சீறாதே மாவிளக்கு ஏற்றுகிறேன்” என்று வேண்டுவாள். மாரிக்கு என்ன கவலை.

இரவு பத்து மணிக்கு, ஓர் உண்டை அபினெடுத்தாள் ராதா, பாலில் கலக்கினாள். நேரே படுக்கையறை சென்றாள். பாதி மயக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் “ராதா, எனக்கேண்டி கண்ணே இவ்வளவு பால்! நீ கொஞ்சம் சாப்பிட்டால்தான்” என்று கூறினான், கெஞ்சினான். “வேணாமுங்கோ, சொல்றதைக் கேளுங்கோ, நான் இப்போதுதான், பெரிய டம்ளர் நிறைய பால் சாப்பிட்டேன்” என்று சாக்குக் கூறினாள் ராதா.

அந்த நேரத்திலே அவனுக்கு ஏதோ குஷி! விளையாட வேண்டுமென்று தோன்றிவிட்டது.

“நீ குடித்தால்தான் நான் குடிப்பேன்” என்று கூறிவிட்டான்.

“பால் ஆறிப்போய் விடுகிறதே!”

“ஆறட்டுமே யாருக்கென்ன?”

“விளையாட இதுதானா சமயம்”

“சரசத்துக்குச் சமயம் வேண்டுமோ”

“சின்ன பிள்ளைபோல விளையாட வேண்டாம்; எனக்கு தூக்கம் வருகிறது. நீங்கள் பால் குடித்துவிட்டால் படுத்துத் தூங்கலாம்”

“தூங்க வேண்டுமா! ஏன் நான் ஆராரோ ஆரிரரோ பாடட்டுமா தொட்டிலிலே படுக்க வைக்கட்டுமா” என்று கூறிக்கொண்டே ராதாவைத் தூக்க ஆரம்பித்துவிட்டான், கணவன். ராதாவுக்குத் தன்னையும் அறியாமல் ஒருசிரிப்பு வந்துவிட்டது.

“ஐயய்யோ! இதேது இவ்வளவு சரசம். என்ன சங்கதி! பால்யம் திரும்பிவிட்டதோ” என்று கேட்டுக்கொண்டே “இதோ பாருங்கள் இப்படி, என்மீது உமக்கு ஆசைதானே” என்றாள்.

தலையை வேகமாகக் கிழவன் அசைத்தான்.

“சத்தியமாக, ஆசைதானே” என்று கேட்டாள் ராதா.

“சாமுண்டி சாட்சியாக நிஜம்” என்றான் கிழவன்.

“அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். பாலைக் குடித்துவிட்டுப் பிறகு பேசுங்கள்” என்றாள் ராதா.

“ஹுஹும் நான் மாட்டேன். நீ கொஞ்சமாவது குடிக்க வேண்டும்” என்றான் கிழவன். சொல்லிக்கொண்டே பால் செம்பை, ராதாவின் வாயில் வைத்து அழுத்திக்கொண்டே விளையாடினான். கொஞ்சம் பால் உள்ளேயும் கொஞ்சம் அவள் மேலாடையிலும் விழுந்தது.

“இப்போ சரி! உன் உதடுபட்ட உடனே, இந்தப் பால் அமிர்தமாகிவிட்டது. இனி ஒரு சொட்டுப் பால்கூட விடமாட்டேன்” என்று கிழவன் கொஞ்சுமொழி கூறிக்கொண்டே பாலைக் குடித்தான். பக்கத்தில் படுத்த ராதாவை நோக்கிச் சிரித்தான்.

“ஆலமர முறங்கக் குட்டி அடிமரத்தில் வண்டுறங்க, உன் மடிமேலே நானுறங்க, குட்டி என்ன வரம் பெற்றேனோடி” என்று பாடத் தொடங்கினான். ராதா, அவள் பாசாங்கு செய்வதைக் கண்டுகொண்டான். அவளுடைய காதில் சிறிய துரும்பை நுழைத்தான். அவள் சிரித்துக்கொண்டே எழுந்து விட்டாள்!

“என்னை ஏமாற்ற முடியுமோடி குட்டி, என்னிடம் சாயுமோடி” என்று பாடினான். இரண்டொரு விநாடியில் குறட்டை விட்டான் பாசாங்கு அல்ல! நிஜம். பாலில் கலந்திருந்த அபின் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. ராதா, கணவனைப் புரட்டிப் பார்த்தாள், எழுந்திருக்கவில்லை. பிறகு, அவள் படுக்கையைவிட்டு எழுந்து, பெரிய பச்சை சால்வையொன்றை எடுத்துப் போர்த்திக்கொண்டு புறக்கடை கதவைத் திறந்து கொண்டு, கழனிப் பக்கம் நடந்தாள். இருட்டு. தவளையின் கூச்சல் காதைத் துளைத்தது. சேறும் நீரும் கலந்த வழி. தொலைதூரத்தில் நரியின் ஊளை. ஆங்காங்கு, வீட்டுப் புறக்கடைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் அசைவதால் உண்டாகும் மணி ஓசை, மர உச்சியில் தங்கி ஆந்தை கூச்சலிட்டது. ராதா பயத்தையும் மறந்து நடந்தாள். கணவனின் பிடிவாதத்தால் பாலைக் கொஞ்சம் பருகியதால், அபின் அவளுக்கு மயக்கத்தைத் தந்தது. அதையும் அவள் உணர்ந்தாள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்தாள்? எங்கே? தன் தாய் வீட்டுக்கு. ஏனெனில் பரந்தாமன் பிழைப்பதே கஷ்டம், அவன் உயிர் போகும் முன்னம் ராதா வந்து பார்த்து
விட்டுப் போனால்தான் போகிற பிராணனாவது சற்று நிம்மதியாகப் போகும் என ராதாவுக்கு அவள் தாய் சேதி விடுத்திருந்தாள். எனவேதான் ராதா பதைத்து, கணவனுக்கு அபின் கலந்த பால் கொடுத்துவிட்டு, பறந்தாள், தன் காதலனைக் காண.

“ராதா வரவில்லையே, ராதாவுக்கு என்மீது கோபமா? ஆம்! நான் அவள் வாழ்விற்கே ஒரு சகுனத் தடைபோல வந்தேன். ராதா என் மனத்தைக் கொள்ளை கொண்ட ராதா” என்று பரந்தாமன் அலறிக்கொண்டிருந்தான்.

கண் இரப்பை மீதும் அம்மை இருந்ததால் பரந்தாமனுக்கு கண்களைத் திறப்பதென்றாலும் கஷ்டம். திறந்ததும் வலிக்கும். வலித்ததும் மூடுவான். ‘வந்தாளா ராதா’ என்று கேட்பான்.

“தம்பீ, வருவாள் பொறு, சற்றுத் தூங்கு” என்பாள் ராதாவின் தாய்.

“தூக்கம்! எனக்கா! அம்மணி நான் செல்கிறேன் ராதா இங்கு வரமாட்டாள். நானே அங்குச் செல்கிறேன்.

போனால் என்ன? அவள் கணவன் என்னைக் கொல்வானா! கொல்லட்டுமே? நான் செத்துதான் பல வருஷங்களாயிற்றே.

எனக்கு இல்லாத சொந்தம் அவனுக்கா?

தாலி கட்டியவன் அவன்தான்! ஆனால் அவளுடைய கழுத்தின் கயிறுதானே அது! நான் அவள் இருதயத்தில் என் அன்பைப் பொறித்துவிட்டேன். எனக்கே அவள் சொந்தம்.

ஓஹோ! ஊரைக்கேள், ராதா யார் என்று என்பானோ! ஊரைக் கேட்டால், ஊராருக்கு என்ன தெரியும? உள்ளத்தைக் கேட்டுப் பார்க்கட்டுமே. ஏதோ இங்கே வா அம்மா இப்படி. நீயே சொல். ராதா உன் மகள்தான். நீ சொல், ராதா எனக்குச் சொந்தமா, அந்தக் கிழவனுக்கா!

யாருக்கம்மா சொந்தம்! கொண்டுவா ராதாவை! இனி ஒரு க்ஷணம் விட்டு வைக்கமாட்டேன். என் ராதா, என்னிடம் வந்தே தீரவேண்டும்” என்று பரந்தாமன் அலறினான். கப்பல் முழுகுவதற்கு முன்பு, கடல் நீர் அதிகமாக உள்ளே புகும். அதுபோல, பரந்தாமன் இறக்கப் போகிறான். ஆகவேதான் அவன் எண்ணங்களும் மிக வேகமாக எழுகின்றன என வேதவல்லி எண்ணி விசனித்தாள்.

ராதாவைப் பெற்றவள் அவள். அவளே ராதாவைக் கிழவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தாள். பரந்தாமனோ ராதா யாருக்குச் சொந்தம் கூறு எனத் தன்னையே கேட்கிறான். வேதவல்லி என்ன பதில் சொல்வாள்.

“கதவைத் தட்டுவது யார்?”

“அம்மா! நான்தான் ராதா!”

“வந்தாயா, கண்ணே வா, வந்து பாரடி அம்மா பரந்தாமனின் நிலையை...” என்று கூறி, ராதாவை வேதவல்லி அழைத்து வந்தாள்.

பரந்தாமனைக் கண்டாள் ராதா. அவள் கண்களில் நீர் பெருகிற்று.

உள்ளம், ஒரு கோடி ஈட்டியால் ஏககாலத்தில் குத்தப்பட்டதுபோல் துடித்தது. குனிந்து அவனை நோக்கினாள்.

அந்த நேரத்தில் பரந்தாமனின் எண்ணம், அன்றொரு நாள் ஜூரமாக இருந்தபோது ராதாவுக்கு முத்தமிட்ட காட்சியில் சென்றிருந்தது. அதனை எண்ணிப் புன்சிரிப்புடன் அவன் மீண்டும் உளறினான். “ராதா நான் உன்னைக் காதலிக்க, நீ என் பாட்டனுக்குப் பெண்டானாயே, உன்னை விடுவேனோ! ஒரு கயிறு உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுமா! என்னைவிட அக்கயிறு என்ன பிரமாதமா! வா! ராதா! வந்துவிடு!” என்று உளறினான்.

“தம்பி பரந்தாமா, இதோ இப்படிப் பார், ராதா வந்திருக்கிறாள்” என்று வேதவல்லி கூறினதும், பரந்தாமன், “யார் ராதவா, இங்கேயா” என்று கேட்டுக்கொண்டே கண்களைத் திறந்தான், ராதாவைக் கண்டான். படுக்கையிலிருந்து தாவி, தன் கரங்களால் ராதாவை இழுத்தான். ராதா தழுதழுத்த குரலுடன் கண்களில் நீர் ததும்ப, “வேண்டாம் வேண்டாம் என்னைத் தொடதீர்கள்” என்றாள்.

பரந்தாமனின் விசனம் அதிகமாகிவிட்டது. கரங்களை இழுத்துக்கொண்டான். “மறந்துவிட்டேன் ராதா அம்மை தொத்து நோய் என்பதை மறந்துவிட்டேன். என் பிரேமையின் பித்தத்தில், எனக்கு எதுதான் கவனத்துக்கு வருகிறது” என்று சலிப்புடன் கூறினான்.

ராதா பதைபதைத்து “பரந்தாமா! தப்பாக எண்ணாதே. தான் என்னைத்தொட்டால் அம்மை நோய் வந்துவிடுமென்பதற்காகக் கூறவில்லை. நீ தொடும் அளவு பாக்கியம் எனக்கில்லை. நான் ஒரு பாவி” என்றாள். புன்னகையுடன் பரந்தாமன் “நீயா பாவி, தப்பு தப்பு. ராதா நான் பாவி, நான் கோழை, என்னால்தான் நீ துயரில் மூழ்கினாய்” என்று கூறிக்கொண்டே சிங்காரவேலனிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்த ‘போட்டோவை’ சாரதாவிடம் கொடுத்தான். சாரதா சிறிதளவு திடுக்கிட்டுப்போனாள். பரந்தாமனைப் பார்த்து “இந்தப் படத்தைக் கண்ட பிறகுமா, என்மீது உனக்கு இவ்வளவு அன்பு. நான் சோரம் போனதைக் காட்டும் சித்திரங்கூட உன் காதலை மாற்றவில்லையா” என்று கேட்டாள்.

“ராதா, கல்லில் பெயர் பொறித்துவிட்டால், காற்று அதனை எடுத்து வீசி எறிந்துவிடுமா!” என்றான் பரந்தாமன். அவனுடைய இருதய பூர்வமான அன்புகண்ட ராதாவால் அழுகையை அடக்கமுடியவில்லை. இவ்வளவு அன்பு கனியும் பரந்தாமனிடம் வாழாது வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டு வழுக்கி விழுந்ததை எண்ணினாள். ஆனால் அவன் என் செய்வான்!

சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருக்கி ஊற்றப்பட்டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சருக்கு மரமாக்கிவிட்டது, அதில் தம்மிஷ்டப்படி செல்ல விரும்பி சருக்கி விழுந்து சாய்ந்தவர், கோடி கோடி, அதில் ராதா ஒருத்தி.

“ராதா ஒரே ஒரு கேள்வி. என்மீது கோபிப்பதில்லை யானால் கேட்கிறேன்” என்றான் பரந்தாமன்.
“குணசீலா, உன்மீது எனக்குக் கோபமா வரும்? கேள், ஆயிரம் கேள்விகள்” என்றாள்.
“அந்தப் படத்திலுள்ள கருப்பையாவுடன் நீ காதல் கொண்டிருந்தாயா!” என்று சற்று வருத்தத்துடன் கேட்டான் பரந்தாமன்.

“கருப்பையாவிடம் காதலா! வலை வீசும் வேடன்மீது புள்ளிமான் ஆசைகொண்டா வலையில் விழுகிறது” என்றாள் சாரதா.

“தெரிந்துகொண்டேன். ஆம்! நான் எண்ணியபடிதான் இருக்கிறது. நீ அவன் மீது காதல் கொள்ளவில்லை. அவன் உன் நிலைகண்டு உன்னைக் கெடுத்தான். நீ என்ன செய்வாய் பருவத்தில் சிறியவள்” என்று பரந்தாமன் கூறிக்கொண்டே ராதாவின் கரத்தைப் பிடித்துத் தன் மார்பின் மீது வைத்துக்கொண்டு, “ராதா! நீ இதனுள்ளே எப்போதும் இருந்து வந்தாய். அன்று உன்னை முந்திரிச்சோலையில் கண்டபோது உன் முத்திரை என் இருதயத்தில் ஆழப்பதிந்தது. அதனைப் பின்னர் அழிக்க யாராலும் முடியவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் தடவை ‘அரகரா சிவசிவா அம்பலவாணா’ என்று சொல்லிப் பார்த்தேன். உன் கவனம் மாறவில்லை. தில்லை, திருவானைக்காவல், காஞ்சி எனும் தலங்களெல்லாம் சென்றேன். என் ‘காதல்’ கரையவில்லை. எப்படிக் கரையும்! ‘உமை ஒரு பாகன்’, ‘இலட்சுமி நாராயணன்’, ‘வள்ளி மணாளன் முருகன்’, ‘வல்லபைலோலன்’ என்றுதான் எங்கும் கண்டேன். நான் தேடிய உமை நீ தானே!” என்று பரந்தாமன் பேசிக்கொண்டே இருந்தான்.

கேட்கக் கேட்க ராதாவின் உள்ளம் தேன் உண்டது. ஆனாலும், கடுமையான அம்மையின்போது, பேசி, உடம்புக்கு ஆயாசம் வருவித்துக் கொள்ளக்கூடாதே, என்று அஞ்சி “பரந்தாமா போதும் பிறகு பேசுவோம், உன் உடம்பு இருக்கும் நிலைமை தெரியாது பேசிக்கொண்டிருக்கிறாயே” என்று கூறி ராதா அவன் வாயை மூடினாள்.

“உடம்பு ஒன்றும் போய்விடாது. போனாலும் என்ன? உன்னைக் கண்டாகிவிட்டது. உனக்கு இருந்துவந்த ஆபத்தைப் போக்கியுமாகிவிட்டது. இனி நான் நிம்மதியாக...” என்று கூறி முடிப்பதற்குள் ராதா மீண்டும் அவன் வாயை மூடி, “அப்படிப்பட்ட பேச்சு பேசக்கூடாது. நான் சாகலாம், ஆனால் உங்களுக்கு ஒரு கெடுதியும் சம்பவிக்கலாகாது” என்று கூறினாள். சாரதாவைக் கண்ட ஆனந்தம் அவளிடம் பேசியதால் ஏற்பட்ட களிப்பு பரந்தாமனின் மனத்தில் புகுந்தது. அயர்வு குறைந்தது. பேசிக்கொண்டே கண்களை மூடினான். அப்படியே தூங்கிவிட்டான். அவன் நன்றாகத் தூங்கும் வரை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் ராதா. மெல்ல குறட்டை விட்டான் பரந்தாமன், ராதா மெதுவாக எழுந்தாள். தாயை அழைத்தாள், இருவரும் சமையலறை சென்றனர். அடுப்பில் நெருப்பை மூட்டினர். பரந்தாமன் தந்த போட்டோவை எரியும் நெருப்பில் போட்டு கொளுத்தி விட்டனர். பின்னர் ராதா மெல்ல நடந்து வீடு சென்றாள். படுத்துறங்கும் கணவன் பக்கத்தில் படுத்தாள் பூனை போல. சில நிமிடங்கள் வரை ராதாவின் கவனம் முழுவதும் பரந்தாமன் மீதே இருந்தது. திடீரென அவள் திடுக்கிட்டாள். ஏன்? தன் கணவன் குறட்டைவிடும் சத்தமே கேட்கவில்லை. என்றுமில்லாத அதிசயமாக இருக்கிறதே என்று எண்ணி, மெதுவாகக் கணவன் மீது கையை வைத்தாள். பனிக்கட்டி போல ஜில்லென இருந்தது. அலறிக்கொண்டே, அவர் உடலைப்பிடித்து அசைத்தாள். பிணம் அசைந்தது. அபின் அதிகம், மரணம்.

ராதா விதவையானாள். குங்குமம் இழந்தாள். கூடின பந்துக்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்தனர். வேதவல்லி தன்னைப் போலவே ராதாவும் ஆனது கண்டாள்; மனம் நொந்தாள்.

ராதா விதவையானாள், பரந்தாமன் குருடனானான். அம்மையிலிருந்து அவன் தப்பித்துக் கொண்டான், ஆனால் அவனது கண்கள் தப்பவில்லை. பார்வையை இழந்தான் பரந்தாமன், ராதாவுக்கு நேரிட்ட விபத்தைக் கேட்டான். மனம் நொந்தான். ஏன்? ராதாவுக்கு இதனால் மனக்கஷ்டம் வருமே என்பதனால். அம்மை போயிற்றே தவிர, எழுந்து நடமாடும் பலம் பரந்தாமனுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் பிடித்தது.

ஒரு மாதத்துக்குப் பிறகு, பரந்தாமன் ராதாவைக் காணச் சென்றான். கண் இழந்தவன் கபோதி எனினும் அவளைக் காணமுடியும் அவனால். கண் இழந்தான், கருத்தை இழக்கவில்லையல்லவா!

ராதா, தாலியை இழந்தாள், பிறரால் பிணைக்கப்பட்ட கணவனை இழந்தாள், தன் வாழ்க்கையில் அதனை ஒரு விபத்து எனக்கொண்டாள். ஆனால் அதனாலேயே தன் வாழ்க்கையில் இருந்து வந்த இன்ப ஊற்று உலர்ந்துவிட்டதாகக் கருத முடியவில்லை.

துக்கம் விசாரிக்க வந்தவர்களெல்லாம், தனக்கும் மாண்டு போன தன் கணவருக்கும் இருந்த பொருத்தம், ஒற்றுமை, நேசம் முதலியவற்றைப் பற்றிப் பேசினர். அது வாடிக்கையான பேச்சுதானே! யாருக்குத் தெரியும். தன் காதலனைக் காணப் போகவேண்டும் என்பதற்காகக் கணவனுக்கு அபின் ஊட்ட, அது அளவுக்கு மீறிப் போனதால் அவன் இறந்தான் என்ற உண்மை.

தன் கணவனைத் தானே கொன்றதை எண்ணும்போது ராதாவுக்கு இருதயத்தில் ஈட்டி பாய்வது போலத்தான் இருந்தது. “நான் அவர் சற்று தூங்கவேண்டும் என்று அபின் கொடுத்தேனே யொழிய அவர் இறக்கவேண்டும் என்றா கொடுத்தேன். இல்லை! இல்லை! நான் எதைச் செய்தாலும் இப்படித்தானே ‘வம்பாக’ வந்து முடிகிறது. என் தலை எழுத்துப் போலும்” என்று கூறித் தன்னைத்தானே தேற்றிக்கெண்டாள்.

தன் வீட்டின் கடனைத் தீர்க்கத்தான், ராதாவின் தகப்பன் பணக்காரனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார். வேதவல்லியும் தன் மகள், நல்ல நகை நட்டுடன் நாலுபேர் கண்களுக்கு அழகாக வாழவேண்டும் என்ற விருப்பத்துக்காகத்தான் ராதாவை மணம் செய்ய ஒப்பினாள், ஆனால் அந்த மணம் மரணத்தைத்தான் ராதாவுக்குத் தந்தது. என் செய்வது? ஓட்டைப் படகேறினால் கரை ஏறு முன்னம் கவிழ்ந்தாக வேண்டுமல்லவா! ராதாவுக்கு அவள் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கைப்படகு ஓட்டையுள்ளது. அதில் எத்தனை நாளைக்குச் செல்லமுடியும். அந்த ஓட்டைப் படகுக்குக் கருப்பையா ஒட்டுப்பலகை! ஆனால் ஒட்டுப் பலகைதான் எத்தனை நளைக்குத் தாங்கும். அதுவும் பிய்த்துக் கொண்டு போய்விட்டது ஒருநாள். பிறகு படகே கவிழ்ந்துவிட்டது. கணவனே மாண்டான் இனி ராதா கரை சேருவது எப்படி முடியும்.

“முடியுமா? முடியாதா?”

“நான் என்ன பதில் கூறுவேன்”

“உன் உள்ளத்தில் தோன்றுவதை, உண்மையைக் கூறு.”

“ஊரார்...”

“ஊரார் பாழாய்ப்போன ஊராருக்குப் பயந்து பயந்து தானே நாம் இக்கதிக்கு வந்தோம். அறுபட்ட தாலி பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவை ‘ஊரார் ஊரார்’ என வீண் கிலி கொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு, ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன் காரியத்தை நீ செய்து கொள். உன் உள்ளம், உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன ராதா? இது ஆகுமா அடுக்குமா? தாலி அறுந்த முண்டைக்குக் கண் இழந்த கபோதியா? என்றுதான் கூறுவர். ஏளனம் செய்வர். எதிர்ப்பர். நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னைச் சமூக பகிஷ்காரம் செய்வர். ஆனால், அதனைப் பற்றி நீ ஏன் கவலை கொள்ள வேண்டும். ராதா, கேள் நான் சொல்வதை, நான் கண்ணிழந்தவன். ஆனாலும், உனக்குப் பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள் இந்தச் சமுதாயத்தின் சித்திரங்கள், எனக்குப் புகட்டும் பாடம் இதுதான்; சமூகம், திடமுடன் யார் என்பதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும், தாங்கி, பதுங்கினால் அவர்கள்மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும்.

ராதா, கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும் முன்னால் செல் ஓடிவிடும்.

“பழக்கவழக்கமெனும் கொடுமையை, தீவிரமாக எதிர்த்தால்தான் முடியும்” எனப் பரந்தாமன் சாரதாவிடம் வாதாடினான். தன்னை மறுமணம் செய்து கொள்ளும்படி.

ராதாவுக்கு, மறுமணம் – தான் தேடிய பரந்தாமனை நாயகனாகப் பெறுவது என்ற எண்ணமே எதிர்கால இன்பச் சித்திரங்கள் அடுக்கடுக்காகத் தோன்றின. அவனுடைய அன்பு தன்னைச் சூழ்ந்து தூக்கிவாரி இன்ப உலகில் தன்னை இறக்குவதைக் கண்டாள். அவனுடைய கருவிழந்த கண்களில் காதல் ஒளி வெளிவரக் கண்டாள். சிங்காரத் தோட்டத்தில் அவன் கைப்பிடித்து நடக்க, காலடிச் சத்தம் கேட்டு மரக்கிளைகளில் அமர்ந்திருந்த கிளி, கொஞ்சுமொழி புகன்று, பறக்கக் கண்டாள். அவள் ஏதேதோ கூறவும் அவை, எண்ணத்தில் இன்ப வாடையைக் கிளப்பவும் கண்டான். அவன் அணைப்பு, அவன் முத்தம், அவன் கொஞ்சுதல், அவன் கூடி வாழ்தல் அவனுடன் குடும்பம் நடத்துதல் இவை யாவும் அவள் மனக்கண்முன்பு தோன்றின.

ராதா, இதோ உன் உலகம், நீ தேடிக்கொண்டிருந்த தேன் ஓடும் தேசம். நீ நடந்து சென்று வழி தவறி, சேர முடியாது தத்தளித்தாயே, அதே நாடு. காதல் வாழ்க்கை, பரந்தாமனுடன் இணைந்து வாழும் இன்பபுரி, போ, அவ்வழி. வாழு, அந்த நாட்டில், ஒருமுறைதான் தவறிவிட்டாய். அதற்குக் காரணம் என் தந்தை. இம்முறை தவறவிடாதே.

முன்பு நீ பேதைப் பெண். உன்னை அடக்க மடக்க பெற்றோரால் முடிந்தது. இப்போது நீ உலகைக் கண்டவள். இம்முறை உணர்ச்சியை அடக்காதே. நட இன்பபுரிக்கு. சம்மதங் கொடு பரந்தாமனுக்கு. அவன் உனக்குப் புத்துலக இன்பத்தை ஊட்டுவான். அவனுக்கு நீ தேவை. உனக்கு அவன். நீங்கள் இருவரும் தனி உலகில் வாழுங்கள். சாதாரண உலகைப் பற்றி கவலை ஏன்! பழிக்கும் சுற்றத்தார் இழித்துப் பேசும் பழைய பித்தர்கள், கேலி செய்யும் குண்டர்கள், கேவலமாக மதிக்கும் மற்றையோர், என்ன சொல்வாரோ என்பதைப் பற்றி நீ கவலைப்படாதே.

அவன் கபோதிதான்! ஆனால் அவனுக்குத்தான் தெரியும் உன்னை இன்பபுரிக்கு அழைத்துச் செல்ல. பிடித்துக் கொள் அவன் கரத்தை. அவன் குருடன்! எனவே உலகின் காட்சிகள் எதுவும் அவனுக்கு இனி தெரியாது. ஆனால் உன்னை மட்டும் அவன் அறிவான். பிறவற்றைப் பார்க்கவொட்டாதபடி தடுக்கவே பார்வை அவனை விட்டுச் சென்றும்விட்டது” – என ராதாவுக்கு விநாடிக்கு விநாடி காணும் காட்சிகள் யாவும் உணர்த்துவித்தன.

விதவை ராதாவுக்கும் விதியிழந்த பரந்தாமனுக்கும் மணம் நடந்தேறியது.

வீதி மூலைகளில் வீணர்கள் வம்பு பேசினர். சமையற்கட்டுகளில் பெண்டுகள் சகலமும் தெரிந்தவர்கள்போலக் கேலி செய்தனர். வைதீகர்கள் வந்தது விபரீதம் எனக் கைகளைப் பிசைந்தனர். உற்றார் உறுமினர். ஆனால், கபோதிபுரக் காதலை, இனி யாராலும் தடுக்கமுடியாது. அவர்கள் இன்பபுரி சென்று இன்பத்துடன் வாழ்ந்து வரலாயினர்.

விடுதலை – 1939