அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

பிடிசாம்பல்
1

“சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்! பாய்ந்து சென்ற திக்கெலாம் வெற்றி கண்ட வேந்தன், பராக்கிரம மிக்க பார்த்திபன், சாளுக்கிய திலகம் புலிகேசியும் போரில் தோற்றான்; அவனுடைய குருதி சாளுக்கிய மண்ணிலே குழைந்து கிடக்கிறது. வீர உரையாற்றி, வெற்றி முழக்கமிட்டு, பிடிபட்ட மன்னர்களை விரட்டிப் பேசிய, அவனுடைய வாயிலே இரத்தம்! புகழ் மாலை தாங்கிய உடலிலே, புண்! சாளுக்கிய நாடே! தீயிட்டனர் உனக்கு! தீய்ந்தது உன் எழில்! செல்வம் கருகி விட்டது. புகழ் புகைந்து போயிற்று. மாடமாளிகைகளிலே நெருப்பு! மண்டபங்களெல்லாம் மண்மேடுகளாயின. அழிந்தது கோட்டை. மிகுந்தது என்ன? எதிரியிட்ட தீ, தன் பசி தீர சாளுக்கிய நாட்டைத் தின்று தீர்த்தான பிறகு, மிச்சமானது என்ன? சாம்பல்! ஆம்! சாளுக்கிய நாட்டின் கதி இதுவாயிற்று. பிடி சாம்பல்! முடிவிலோர் பிடி சாம்பல்!”

சாளுக்கிய நாட்டின் மீது, பல்லவன் நரசிம்மன் போர் தொடுத்தான் - போரென்றால், மிகப் பயங்கரமானது; வரலாற்றிலே மிகமிகக் குறிப்பிடப்பட வேண்டிய சம்பவம்.

வாதாபி, சாளுக்கியத்தின் தலைநகரம் - எழில்மிக்க இடம். பல்லவப்படை, அந்த அழகு நகரை, அடியோடு அழித்து விட்டது. வாதாபியின் அழிவுபோல், வேறெந்தப் போரிலும், வேறெந்த நகருக்கும் அழிவு நேரிட்டதில்லை என்று கூறுவர் - அவ்வளவு பயங்கரமான அழிவு. சாளுக்கியனின் படைகள், சண்ட மாருதத்தில் சிக்கிய கலம் சுக்கு நூறாவது போல, சின்னா பின்னமாயிற்று. ஊர், உருத் தெரியாது அழிந்தது. மன்னனும் களத்திலே பிணமானான். பல்லவப் படையின் தாக்குதலால், சாளுக்கிய சாம்ராஜ்யமே படுசூரணமாகி விட்டது.

வாதாபி, இன்றைய பம்பாய் மாவட்டத்திலே உள்ள இடம்! அதனை அழித்த பல்லவப் படையோ, காஞ்சியிலிருந்து கிளம்பிச் சென்றது - பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரம் காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் - வாதாபி! இடையே, எவ்வளவு தொலைவு!! இடையே, எவ்வளவு ஆறுகள், காடுகள், நாடு நகரங்கள்! இவ்வளவையும் தாண்டிச் சென்று, சிங்கத்தை அதன் குகையிலே சென்று தாக்கிக் கொன்றிடும் வீரம்போல பல்லவனின் படை, மாற்றானின் மணிபுரிக்குச் சென்று, தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றது.

சாளுக்கியன், சொந்த நாட்டுக்குள்ளிருந்து கொண்டு போர் நடத்தினான் - பல்லவனோ, எதிரி நாட்டுக்குள் நுழைந்து, கடும் போரிட்டு வெற்றி பெற்றான். மகத்தான வெற்றி! சாளுக்கிய மக்களின் மனத்தை மருட்டிவிட்டது, பல்லவ மாவீரர்களின் பேராற்றல்!

எங்கும் நாசம் நர்த்தனமாடிற்று! அழிவு எனும் அந்தகாரம் கப்பிக் கொண்டது சாளுக்கியத்தை. அந்த அழிவு கண்ட சாளுக்கிய வீரன் கதறினான், ‘பிடி சாம்பல்! முடிவிலொரு பிடி சாம்பலாகிவிட்டது சாளுக்கிய நாடு!!’ என்று.

அந்தச் சாளுக்கிய வீரனின் அழுகுரல் கேட்ட தமிழ் வீரர் சிலர், தாய்நாட்டைத் தீ தின்னக் கண்டு தேம்பியவனைப் பிடித்திழுத்துக் கேட்டனர், “ஏடா! மூடா! எதுக்குக் கதறுகிறாய்?” என்று. “யாரிவன் பித்தன்! பிணக்குவியலுக்கிடையே பிதற்றிக் கிடக்கிறான்! பிடி சாம்பலாம், பிடி சாம்பல்! பேதை! தமிழ்நாட்டு வீரமெனும் வெந்தழலிற் பட்டால், எதுதான் பிடி சாம்பலாகாது? வாதாபி மட்டும் விதிவிலக்கோ! உமது புலிகேசி மட்டும் தப்புவானோ! சிங்கங்கள் பலச் சீறிப் போரிட்டுச் செந்தமிழ் நாட்டவ

ரிடம் பங்கப்பட்டதை இவன் அறியான் போலும்! ஏடா! மூடா! புலிகேசி தமிழகத்தைத் தாளின்கீழ் போட்டுத் துவைக்கலாம் என்று எண்ணினான்; அவனுடைய சேனை தோற்றோடும் போக்கில், அவனுடைய பிணத்தைத் துவைக்கும் என்பதைக் கண்டானா அவன். வேங்கி நாட்டிலே அவன் பெற்ற வெற்றி, வெறியூட்டிவிட்டது. வடநாட்டு வேந்தன் ஹர்ஷனை வென்று விட்டதாலேயே, தன்னை மிஞ்சிடும் தார்வேந்தன் எவனும் இல்லை என்று இறுமாந்து கிடந்தான்; இறந்துபட்டான்! அவனுடைய நகரம் எரிந்துபட்டது. தமிழரிடம் கலந்துறைவோர், அவரி

டம் திங்களின் குளிர்ச்சியைக் காண்பர்; எதிர்த்தோர், கதிரவனின் வெம்மையால் கருகுவர்.” என்றனர் தமிழ் வீரர். சோகத்தோடு சாளுக்கியன், “ஆம்! வீரர்களே! வெற்றியால் களித்துள்ளவரே! கருகித்தான் போயிற்று, எமது வாதாபி!” என்ற கூறினான்.

“சாளுக்கிய நாடு...?” என்று கேலி செய்தனர் தமிழ் வீரர்.

“இனி, தலை தூக்காது.” - என்று தலையைக் கவிழ்த்துக் கொண்டு பேசினான் சாளுக்கியன். அழிந்துபட்ட நகரைவிட, அவன் அதிக பரிதாபமாகக் காணப்பட்டான்.

வெற்றி பெற்ற பல்லவப் படை, வேழம் முதற்கொண்டு வேழமுகச் சிலை வரையிலே, ஒன்றுவிடாமல், சாளுக்கிய நாட்டுப் பொருள்களைப் பல்லவ நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அந்தச் சாளுக்கியனும், பல்லவ நாட்டுக்கு இழுத்து வரப்பட்டான். - போரிலே பிடிபட்டவனல்லவா! அவனுடைய கண்கள், சாளுக்கியத்தின் அழிவைக் கொண்டு கலங்கிற்று - ஆனால், பல்லவ நாட்டிலே, ஒவ்வொருவர் முகத்திலும் வெற்றி ஒளிவீசக் கண்டு, பல்லவத்தின் எழிலைக் கண்டு, அவனுடைய கண்கள் அடைந்த வேதனை. களத்திலே எழுந்ததைவிட அதிகமென்றே கூறலாம்.

சாளுக்கியன் பிடிபட்டவன், அடிமை, யுத்தக் கைதி என்று தன்னைப் பற்றிப் பல்லவ நாட்டவர் கேலி பேசினதால் கூட அவன் மனம் புண்படவில்லை.

“வாதாபி படுசூரணமாயிற்று.”

“சாளுக்கியம் சிதைந்தது.”

“புலிகேசி பிணமானான்.”

இந்த வார்த்தைகள், எந்தப் பக்கத்திலும் கிளம்பின! நாலா பக்கங்களிலிருந்தும் அம்புகள், வேல், ஈட்டி முதலியன பாய்ந்து வந்து தாக்குவதுபோல, சாளுக்கியனின் செவியில், இந்த வார்த்தைகள் வீழ்ந்தன.

வேலை ஒன்றும் கடினமில்லை. அதிலும், அவன் வேலைக்கு அமர்ந்திருந்த இடம், பல்லவ சாம்ராஜ்யாதிபதியின் அரண்மனைக்கு அடுத்த அந்தஸ்துள்ளது! படைத்தலைவர் பரஞ்சோதியிடம், அந்தச் சாளுக்கியன் வேலைக்கு அமர்ந்தான். தாய் நாட்டின் வெற்றிக்காக, வீரவாளேந்தி, பணிபுரிந்து வந்த அந்தச் சாளுக்கியனுக்கு, என்ன வேலை கிடைத்தது? பரஞ்சோதியின் ஆயுதச்சாலையில் காவல்!! பரஞ்சோதிக்கு அடைப்பம் தாங்கும் பணி; எடுபிடி வேலை செய்வது, நிலத்தில் உழுவது, தோட்டக்காவல் - இப்படி ஏதேனும் வேலை தந்திருந்தால்கூட, அந்தச் சாளுக்கியனின் மனம் வேதனை அடைந்திருக்காது. ஆளப் பிறந்தவர்கள் கூட ஆளடிமையானதுண்டு. படையிலே பணிபுரிய வேண்டியவன், பணியாளானால் பரவாயில்லை, சகித்துக் கொள்ளலாம் என்றாவது தோன்றும். ஆனால், சாளுக்கியனுக்குத் தரப்பட்ட வேலை, பரஞ்சோதியின் ஆயுதச் சாலையிலே காவல் புரிவது!

அந்த வாள் - எத்தனையோ சாளுக்கியப் படைத்தள பதிகளின் சிங்களை வெட்டி வீழ்த்திய வாள்! சாளுக்கியரின் குருதி தோய்ந்த வாள்! வேல்! அம்பி! ஈட்டி! எறிவாள்! சொருகுவாள்! வளை மற்றும் பல பொறிகள் எல்லாம் சாளுக்கிய சாம்ராஜ்ய அழிவுக்குப் பயன்பட்ட கருவிகள்! புலிகேசியைப் பிணமாக்கிய படைத்தலைவனின் ஆயுதச்சாலையிலே, காவல் புரியவேண்டும்! சாளுக்கியன் மனம் மிக மிக வேதனைப் பட்டதிலே ஆச்சரியமென்ன! தாய்நாட்டை அழித்த கருவிகள், நாள்தோறும் பார்க்க வேண்டும்; அவை வரிசையாக, ஒழுங்குபடுத்தவேண்டும், பழுது பார்க்க வேண்டும் - இவை, சாளுக்கியனின் பணி! இதைவிட, நாள்தோறும், நானூறு சவுக்கடி பெற்றுக் கொள்ளவேண்டும். என்று கட்டளையிடலாம்! பிரதி தினமும் பாம்புப்புற்றிலே கரத்தைவிட்டுக் கடிபட வேண்டும் என்ற தண்டனை தந்திருக்கலாம்.

ஒவ்வொரு நாளும், பரஞ்ஜோதியின் ஆயுதச்சாலையில் காவல் புரிவதைவிட, ஒவ்வொரு விநாடியும், அந்த வாளைக் காண்பதைவிட, அந்தத் தண்டனைகள் கொடுமையல்லவே என்றெண்ணினான் சாளுக்கியன்.

இவ்வளவு வேதனையில் தள்ளப்பட்ட, வில்லாளன் - அந்தச் சாளுக்கியனின் சிறப்புப் பெயர் அங்ஙனம் அமைந்திருந்தது - தன் தாய்நாட்டைப் பற்றி எண்ணத் தவறவில்லை. எண்ணினது மட்டுமல்ல, தன் ஆயுள் முடிவதற்குள், தாய் நாட்டுக்கு ஏற்பட்ட பழியையும் இழிவையும், தன் இரத்தத்தால் கழுவ வேண்டும் என்று தீர்மானித்தான்.

அவன் அந்தப் பிடி சாம்பலை மட்டும் விடவில்லை பேழையில் இருந்தது. சிறு பட்டுத் துண்டிலே முடியப்பட்டு! யாருமறியாவண்ணம், ஒவ்வோர் நாளும் நடுநிசியில் செல்வான்; பேழையைத் திறப்பான்; கண்களிலே கொப்பளிக்கும் நீரைத் துடைப்பான்; பட்டு முடிப்பை எடுப்பான், பார்ப்பான்; பெரு மூச்செறிவான்; ‘பிடி சாம்பல்! பிடி சாம்பல். முடிவிலொரு பிடி சாம்பல்! சாளுக்கியன் கரத்தில் சாளுக்கிய நாட்டின் அழிவைக் காட்டும் பிடி சாம்பல்!’ என்று தனக்குள் கூறிக் கொள்வான்; பட்டு முடிப்பைப் பேழையுள் வைப்பான்; பிறகு படுக்கையிற் சென்று புரள்வான்; கண்ணை மூடினால், களம் தெரியும்; திறந்தாலோ, விளக்கொளி தீப்பந்தமாகக் காணப்படும்; விடிய விடியத் துடித்தபடி இருப்பான்! வேறென்ன செய்வான்! வெற்றி பெற்ற வீரரிடம், அவனோர் வேலைக்காரன். சரணடைந்த சாளுக்கியன் தன் தாய்நாடு சாம்பலானதைக் கண்டவன்!

பரஞ்ஜோதியின் ஆற்றலை, வாதாபியின் வீழ்ச்சி, தமிழகம் உணரச் செய்தது. நரசிம்மப் பல்லவனின் கீர்த்தி, பல்லவ சாம்ராஜ்யத்தின் சிறப்பு, இவை பற்றி மக்கள் பேசாமலில்லை, பெருமை அடையாமலுமில்லை. ஆனால், பரஞ்ஜோதியைப் பற்றிப் பேசியான பிறகுதான்!

பரஞ்ஜோதியின் புகழ் வளர்வது கண்டு, சாளுக்கியன் ஏற்கெனவே வேதனைப் பட்டதைவிட அதிகமாக அனுபவித்தது சகஜம். ஆனால், பரஞ்ஜோதியின் புகழ் வளருவது கண்டு, பல்லவ சாம்ராஜ்யத்திலே வேறு சிலருக்கு வேதனை பிறந்தது. அவர்கள், பரஞ்ஜோதிபோல, படைத் தளபதிகளுமல்ல - புகழுக்காகப் போட்டியிடுபவர்களுக்குள் உண்டாகும் மாச்சரியம் என்ற அளவிலே கருதலாம். ஆனால், பரஞ்ஜோதியின் புகழ் ஒளி கண்டு, வேதனைப்பட்டவர்கள், வீரர்களல்லர்!

பல்லவ சாம்ராஜ்யம் பல்வேறு வளங்களுடன் சிறந்து விளங்கிற்று. செல்வம் செழித்த இடம். கலையும் ஓங்கி வளர்ந்திருந்தது. மன்னன் நரசிம்மன், வைணவன் - ஆனால், சைவரின் பகைவனல்லன்!

சைவம் - வைணவம் இரண்டும் வெளிப்படையாக ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டு, ஊரைக் களமாக்கிய காலமல்ல அது. அந்தக் கோரம் குறைந்துவிட்டது. குறைய வேண்டிய அளவு. வேறோர் மார்க்கம், இரண்டையும் அறைகூவி அழைத்தது. அந்த மார்க்கமே, சமணம். சமணத்தின் ஆதிக்கத்தைக் கண்டு, வைணவமும் சைவமும் அஞ்சின - அஞ்சினதுடன், இரு சக்திகளும், கூட்டுச் சக்தியானாலொழிய, சமணத்தை வீழ்த்த முடியாது என்று முடிவு செய்தன. எனவே தான் சைவ - வைணவ, மாச்சரியம் குறைந்தது. அரியும், அரனும் ஒன்றுதானென்று பேசப்பட்டு வந்தது. இரு மார்க்கங்களும், இறைவனின் திருவடிகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பட்டன - சமணம் போல, நிரீஸ்வரவாதமல்ல அவை - என்று பேசவும் தலைப்பட்டன.

இந்த ‘பாசம்’ இருந்த காலம் - பல்லவ சாம்ராஜ்யம் ஓங்கி வளர்ந்த சமயம். பல்லவ மன்னர்களும், சைவ - வைணவம் இரண்டையும் ஆதரித்து வந்தனர். மன்னரின் ஆதரவு பெற்றதால், இவ்விரு மார்க்கங்களும், மகோன்னத நிலை அடைந்தன. பெரும் பொருள் செலவிட்டுக் கலை நிபுணர்களை கொண்டு அழகான பல பெரிய கோவில்களை அமைத்து மன்னர்கள். ‘பக்திமான்’கள் - ‘கலாவாணர்கள்’ என்ற விருதுகளுடன் புகழடைந்தனர். சமணம், ஆதரிப்பாரற்றுப் போயிற்று. இசையும் நடனமும், கூத்தும் கேளிக்கையும் பஜனைகளும் பல்வேறு விழாக்களும், சைவ வைணவச் செல்வாக்கை அதிகரிக்கச் செய்ததுடன், மக்களுக்குப் பெரியதோர் மனமயக்கத்தை ஊட்டின. இத்தகு முறைகளற்றதாலும் தத்துவங்களின் மீது கட்டப்பட்டதாலும், துறவு நிலையைப் பெரிதும் வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாலும், சமணம் செல்வாக்கிழந்தது. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்ற முறைக்கேற்றபடி, மன்னரின் ஆதரவைப் பெற்ற சைவ - வைணவத்தையே மக்களும் ஆதரித்தனர்.

இந்த ‘வெற்றி’க்காக ஏற்பட்ட, சைவ - வைணவக் கூட்டுறவு, சமணம் இனித் தலைதூக்காது என்ற நிலை ஏற்பட்ட பிறகு, மீண்டும் போட்டியிடலாயின. இம்முறை நடந்த போட்டி, மக்களிடை, தத்தமது மதத்தின் அருமைபெருமைகளை எடுத்துக் கூறியும், வேறு மதத்தின் சிறுமைகளை எடுத்துக் காட்டியும், நடத்தப்படும் பிரச்சாரமாக அமையவில்லை. பல நாட்கள் ‘அரியும் - அரனும் ஒன்றே’ என்று மக்களிடையே பேசியாகிவிட்டதால், மீண்டும், அரி - அரன் இருவரில், யார் உண்மைத் தெய்வம், சைவம் - வைணவம் இரண்டிலே எது சிறந்த மதம் என்ற போட்டிப் பிரச்சாரத்தை நடத்துவது முறையுமாகாது, பலனும் தராது என்பதை அறிந்த, அம்மதத் தலைவர்கள், மக்களிடம் சென்று பேசி, மண்டையை உடைக்கும் கலகத்தை மூட்டிவிடும் முறையைக் கைவிட்டு, அரண்மனையை முற்றுகையிடலாயினர்! மன்னரிடம் செல்வாக்குப் பெற்று, தமது மார்க்கத்துக்கு மதிப்புத் தேட எண்ணினர். அரசாங்க மதம் என்ற அந்தஸ்து கிடைப்பதற்காக அரும்பாடுபட்டனர். இந்த முயற்சியில், போட்டியில், ஓரோர் சமயம், சைவரும், பிறிதோர் சமயம் வைணவரும் வெற்றி பெறுவர் - அதற்கேற்றபடி சைவத்துக்கோ, வைணவத்துக்கோ, ஆதிக்கம் கிடைக்கும். அரசபலம் பெற்று அந்த மதம் ஓங்கும்.

இந்தப் ‘போட்டிக்கு’ப் பல்லவநாடு, வளமான இடமாக அமைந்தது. ஓர் அரசர், வைணவத்தை ஆதரிப்பார் - அவர் காலத்தில் எங்கும் வைணவக் கோவில்கள் எழிலுடன் கிளம்பும்! விழாக்கள், வைணவத்தின் சார்பில் நடைபெறும். மற்றொருவர், சைவத்தை ஆதரிப்பார் - அவர் காலத்திலே சைவக் கோவில்கள் கட்டப்படும்; இம்முறையில், இரு மார்க்கங்களும் தழைத்தன.

நரசிம்ம பல்லவன், வைணவ மதத்தை ஆதரித்தான் - அவனுடைய தகப்பனோ, சைவன். மன்னன் மகேந்திரன் காலத்திலே, மகேஸ்வரனுக்குக் கோவில்கள் கட்டப்பட்டு, மானியங்கள் அளிக்கப்பட்டன. மகேந்திரன் மகன், நரசிம்மப் பல்லவன், வைணவ மதத்தை ஆதரித்தான்.

இந்நிலையில், படைத்தலைவர், வாதாபியின் மாபெரும் வெற்றி பெற்ற மாவீரன், பரஞ்ஜோதி சைவன். பரஞ்ஜோதியின் புகழொளி கண்டு, வைணவருக்கு அருவருப்பு ஏற்படாமலிருக்க முடியுமா! மன்னனின் ஆதரவு வைணவத்துக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் வெற்றி ஒளியோ, சைவப் பரஞ்ஜோதி மீது வீசுகிறது - சைவர் பெருமையடைகின்றனர் - இது இத்துடன் நிற்குமோ, அன்றி, அரண்மனைக்குள், சைவம், புகுநிலை ஏற்படுமோ! பரஞ்ஜோதி புகழ் பெருகுவது, வைணவத்துக்கு இருட்டடிப்பாய் முடியுமாயின், என் செய்வது என்ற அச்சம் அரிதாசர்களைப் பிடித்தாட்டிற்று.

“பரஞ்ஜோதி, மாவீரன்; தமிழ் நாட்டின் திலகம்; பல்லவ சாம்ராஜ்யத்தின் மணிவிளக்கு.”

“ஹர்ஷனை வென்றான் புலிகேசி! புலிகேசி தோற்றான் நம் பரஞ்ஜோதியிடம்!”

“படைத்தலைவருக்கேற்ற புத்தி கூர்மை, அஞ்சா நெஞ்சு அனைத்தும் படைத்த ஆற்றலானன்றோ நம் பரஞ்ஜோதி.”

“படைத்தொழில் நுட்பம் சகலமும் அறிந்தவர்.”

“வாதாபியின் வீழ்ச்சி...”

“வாடிக்கிடந்த மக்களைக் குதூகலப்படச் செய்து விட்டது.”

“மற்றையத் தமிழ் வேந்தர்களும்...”

“பாராட்டுவர், வெளியே; உள்ளே பொறாமை அடைவர்.”

“பயமிருக்கும்!”

“எங்கும் இந்த இணையில்லா வீரருக்குப் பெருமதிப் புத்தான்!”

“மக்கள், பரஞ்ஜோதியை...”

“வணங்குகிறார்கள்!”

“மன்னருக்கும் அவரிடம் அளவு கடந்த மதிப்பு!”

“இராதா? ரணகளச்சூரன்! வெற்றி வீரன்! வாதாபிக்குத் தீயிட்ட தீரன்! மகேந்திர மன்னன் தோல்வியைத் துடைத்த தளபதி! மட்டற்ற மதிப்பும் மங்காப் புகழும் இந்தப் பல்லவ பரம்பரைக்குப் பெற்றுத் தந்த தலைவன்...”

“ஆம்! ஆனால்... பரஞ்ஜோதி ஒரு சைவன்!”

“ஆமாம்! சைவன்!”

“சைவன்! மன்னன் வைஷ்ணவன்! நாமும் அரிதாசர்கள்! கீர்த்தி பெற்றவனோ சைவன்!”

“ஆனால், அதனால்”

“ஆனால் என்ன! அதனால் என்ன! பரஞ்ஜோதியின் புகழ், சைவத்துக்குத்தான் உரம் அளிக்கும். பாற்கடலிற் பள்ளி கொண்ட பரந்தாமனின் பக்தனான நரசிம்ம மன்னனின் மனமும், மெள்ள மெள்ள, சைவானம் பரஞ்ஜோதியின் கீர்த்தியைக் கேட்டுக் கேட்டு மாறி...”

“மகேந்திர மன்னன் மகன்! வைணவத்தை விட்டு...”

“தந்தை போலத் திருநீற்றுப் பூச்சுக்காரனாவானே!”

“நிச்சயம்! அரச அவையில் ஆற்றலரசன் பரஞ்ஜோதி வீற்றிருக்கும் வரை, வைணவத்துக்கு இந்த ஆபத்து ஏற்பட்டே தீரும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.”

“ஏன் அப்படி எண்ணுகிறீர்! எம்பெருமானின் பெருமைகளை எடுத்துக் கூறுவோம். சைவம் உயர்ந்ததா வைணவம் சிறந்ததா என்பதை பரஞ்ஜோதியே முன்னின்று பேசுவதாயினும், நமது கட்சி ஜெயம் பெறச் செய்யும் சக்தி நமக்கு இல்லையா? மேலும் பரஞ்ஜோதி போரிலே புலி; போதகாசிரியனோ? வீரன்; ஆனால் வைணவத்தை வீழ்த்தக்கூடிய விவகார ஞானஸ்தானே! வரட்டுமே, அப்படியொரு சந்தர்ப்பம். வைணவமே சிறந்தது என்று என்னால் - உங்கள் யாவரைக் காட்டிலும் ஞானத்திலே மிகக் குறைந்தவனான அடியேனால் ஸ்தாபிக்க முடியும்.”

“அசட்டுத்தனமான காரியம்! சைவம் பெரிதா, வைணவம் பெரிதா என்று சண்டையிடத் தொடங்கினால், சமணம் மீண்டும் தலைதூக்கும்.”

“உண்மை! அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது.”

“அரி - அர ஒற்றுமைக்கு அவசியம் இருக்கிறது;அந்த ஆபத்தைப் போக்கும் அரு மருந்து அது ஒன்றே மிச்சம். ஆகவே, சைவ - வைணவ விவாதம் கூடாது.”

“பிறகு...”

“அந்த முறை கூடாது! ஆனால், எப்படியேனும் பரஞ்ஜோதியை அரச அவையிலிருந்து நீக்கியாக வேண்டும். அவன் படைத்தலைவனாக வீற்றிருக்கவிட்டால், வைணவம் தானாக நசிந்துவிடும்.”

“மன்னனோ, பரஞ்ஜோதியைக் கிடைத்தற்கரிய பொக்கிஷமாகக் கருதுகிறான்.”

“கருதுகிறானல்லவா! இனி மற்றவர்கள் செல்லாக்காசு தானே!”

“ஆமாம்!...”

“பரஞ்ஜோதி சைவன்! எப்படியேனும், ராஜசபையில் அவன் இனியும் இருக்க இடம் தரலாகாது.”

அச்சம் கொண்ட அரிதாசர்கள், இங்ஙனம் பேசிடாது இருக்க முடியுமோ! சைவம், பிரசாரத்தால் அல்ல; மன்னனிடம் செல்வாக்குப் பெற்று அல்ல, ஒரு மாவீரனின் வெற்றி ஒளியின் துணைகொண்டு இனி, செல்வாக்குப் பெறுமே, மன்னன் நரசிம்மன், அரிதாசன் என்று ஆனந்தமாகக் கூறினவுடன், ஆம்! ஆனால், படைத்தலைவர் பரஞ்ஜோதியார் சைவர் - அவர் பல்லவ நாட்டுக்கே மணிவிளக்காக உள்ளார்; அவர் சிவ பக்தர் - என்றென்றோ சைவர் கூறுவர்!
அரசு ஆதரவு அற்றுப் போய்விடுமோ என்ற அச்சம் கொண்ட வைணவர்கள், வாதாபியை வீழ்ச்சி பெறச் செய்த பரஞ்ஜோதியை, வைணவத்துக்கு வைரியாகிவிடக் கூடியவர் என்று எண்ணி ஏங்கினர். இந்த ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள, பேச்சு மட்டும் பயன் தருமா, செயலிலும் இறங்கியாக வேண்டுமல்லவா! என்ன செய்ய முடியும்? மெல்ல பிரச்சாரம் நடத்தினர். வருகிறது வைணவத்துக்கு ஆபத்து! மன்னன் நரசிம்மப் பல்லவனின் ஆதரவு பெற்ற வைணவத்துக்கு நெருக்கடியான நிலைமை வருகிறது. வாதாபியிலே பரஞ்ஜோதி பெற்ற வெற்றியைச் சைவர்கள் தமக்குச் சாதகமாகக்கொண்டு, சைவத்திற்கு அரசர் ஆதரவு கிடைக்குமாறு செய்யப் போகிறார்கள். வீழ்ந்தது வாதாபி! தாழ்ந்தது வைணவம் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும். எனவே, வைணவம் வாழ வேண்டுமானால், பரஞ்ஜோதியாருக்கு அரச அவையிலே, இன்றுள்ள செல்வாக்கு ஒழிந்தாக வேண்டும் - என்று பிரச்சாரம் புரியவும், கட்சி சேர்க்கவும், வைணவர்கள் முனையாமலிருக்க முடியாதல்லவா?

தாய்நாடு சாம்பலானதைக் கண்டு தவித்துக் கொண்டிருந்த சாளுக்கிய வீரன், வில்லாளன், இந்த நிலையை நன்கு அறிந்து கொண்டதுடன், தன் நோக்கத்துக்கு, இச்சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டான்.

“பரஞ்ஜோதி! எமது வாதாபிக்கு நெருப்பிட்டாயல்லவா? தீக்கு இரையாக்கினாய் திருநகரை! இதோ, தோற்ற சாளுக்கியன் மூட்டும் தீ, உன் நாட்டை அழிக்கப் போகிறது பார்!” என்று கூறவில்லை - ஆனால் அவன் செய்தது என்னவோ அதுதான். வெகுண்ட வைணவருக்கு, வேகமூட்டலானான், அவர்களிடம் பேசி. என்ன பேசினான்?

“புலிகேசி, பிணமானான் களத்தில்! கடும் புயலினால் வேருடன் களைந்து எறியப்பட்ட மரமானான். சாளுக்கியப் படை சின்னாபின்னமாகிவிட்டது. வாதாபி நகரம் தீக்கு இரையா
யிற்று. எல்லாம் நமது படைவீரர்களின் தீரத்தால் - அவர்கள் காட்டிய அபாரமான போர்த்திறனால்!”

“சாளுக்கியப் படை தோற்றது உண்மை. பல்லவருக்கு வெற்றி கிட்டியதும் உண்மை. ஆனால் அந்த வெற்றிக்குக் காரணம், பல்லவப்படை காட்டிய வீரம் என்று கூறுவது முழு உண்மையாகாது. நண்பர்களே! என் மீது கோபிக்க வேண்டாம். சாளுக்கியர் கோழைகளல்ல; வீரம், பல்லவருக்கு மட்டுமே உரித்தானதுமல்ல; பல்லவப் படை காட்டிய வீரம் மட்டுமல்ல, வாதாபியின் வீழ்ச்சிக்குக் காரணம்...”

“பேசுகிறாய், பெருமூச்செறிகிறாய், உண்மை அல்ல வென்கிறாய். நீ கூறுவதுதானே, பல்லவப் படையின் வெற்றிக்குக் காரணம். அவர்களின் வீரதீரமல்லவா?”

“அதுமட்டுமல்ல என்றுதான் கூறுகிறேன்.”

“ஆமாம் நண்பர்களே! அவன் கூறுவதிலும் அர்த்தம் இருக்கிறது. படைவீரர் காட்டிய வீரம் மட்டுமல்ல, வெற்றிக்குக் காரணம். படைத்தலைவர் பரஞ்ஜோதியாரின் அபாரமான ஆற்றலும், போர்த்தொழில் நுண்ணறிவுமேதான் வெற்றிக்கு முக்கிய காரணம்.”

“முக்கிய காரணம் என்று கூறினீர் வீரரே! பொருத்தமாகப் பேசினீர், குழம்பியநிலை மக்கள்; தலைவர் கூற்றை கேட்டல் வெற்றிக்கு முக்கிய காரணம் தளபதியின் தீரமும் திறமும். ஆனால் மூலகாரணம் ஒன்று இருக்கிறது.”

“அதென்னவாம், மூல காரணம்?”

“உண்டு.”

“உண்டெனினும் கூறும். விழியை உருட்டினால் விஷயம் விளங்குமோ! பெருமூச்சு, எங்களுக்குக் கூறும் பதிலாகுமா?”

“எனக்குத் தெரியும் அந்த மூலகாரணம். கூறினால், நீங்கள் சரி என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்களே என்றுதான் அஞ்சுகிறேன்.”

“அறிவுக்குப் பொருத்தமானது எது கூறினும், மறுப்புரை கூறுவது எமது மரபன்றோ. மூல காரணம் என்ன? சொல், கேட்போம்.”

“உரைக்குமுன் ஒன்று, உம்மைக் கேட்கிறேன்; கோபியாது பதில் கூற வேண்டும். வீரமும் வீரரும், படைவரிசை யும் படைக்கலன்களும், உங்கட்கு, பல்லவ வேந்தன் நரசிம்மன் காலத்துக்கு முன்பும் உண்டல்லவா?”

“ஏன் இல்லை! மன்னன் மகேந்திரன் காலத்தில் மாவீரர்கள் இருந்தனர்.”

“மகேந்திரன் காலத்திலே, போர் இருந்ததன்றோ?”

“ஆமாம்! போரிட்டோம்.”

“வருத்தமோ, வெட்கமோ வேண்டாம் நண்பர்களே! மகேந்திரன் காலத்திலே, தோல்வி கண்டீர்கள். பெருந்தோல்வி. வீரர்களே! வீரமும் தீரமும் நிறைந்த வேந்தன் புலிகேசியின் படைகள், பல்லவ நாட்டுக்குப் பயங்கரமானதோர் புயலாயிற்று. அதைத் தாங்க மாட்டாது தவித்த பல்லவப் படைதான், இன்று வாதாபியை வென்றது.”

“ஆமாம்.”

“எப்படி முடிந்தது என்று கேட்கிறேன்.”

“இது என்ன கேள்வி? வீர தீரமிக்க எமது படைகள், ஆற்றல் மிக்க எமது தலைவர், பரஞ்ஜோதியின் திறமையால் வெற்றி கிடைத்தது.”

“உண்மைக்கு வெகு அருகாமையிலே வந்து விட்டீர்களே! பரஞ்ஜோதி! ஆம்! அந்தச் சைவரின் பலம்! சைவத்தின் மகிமை! அதுதான் வெற்றியைத் தேடித்தந்தது. படைத் தலைவரின் சிவசக்தியே பல்லவத்தின் வெற்றிக்குக் காரணம். வாதாபியை, உமது படைவீரர் கொளுத்தினார் என்று எண்ணுகிறீர்! பித்தம் உங்களுக்கு. சிவபக்தராம் பரஞ்ஜோதி, சைவத்தின் பலத்தை, எமக்கு விளக்க அல்ல, வைணவ நரசிம்ம மன்னருக்கு விளக்க, திருபுராந்தகனை வேண்டித் தொழ, அவர் தமது நெற்றிக் கண்ணைத் திறந்தார் - ஒரு கணம்; ஆமாம்! எமது வாதாபி எரிந்தது - பிடி சாம்பல்! பிடி சாம்பல்! முடிவிலோர் பிடிசாம்பலாயிற்று!”