அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

பிடிசாம்பல்
4

பரஞ்ஜோதி! காடு மலை கடந்து, ஆறுகளைத் தாண்டி, அஞ்சா நெஞ்சன், ஆற்றல் மிக்கோன், வடநாட்டு வீரனை வீழ்த்திய வல்லமைசாலி, புலிகேசியை வென்றவன் என்ற எண்ணத்தை, அதன் மூலம் வீரத்தை, தமிழ் இனத்தின் தீரத்தை, தமிழகத்தின் கீர்த்தியை ஊட்டும் உருவமாக அமைந்து விட்டால், பிறகு தமிழரின் வெற்றி எட்டுத் திக்கும் கொட்டுவரே! இனி அப்பயமில்லை! பரஞ்ஜோதியைப் பக்தராக்கி விட்டோம்; இனித் தாளமும் மத்தளமும் கொட்டுவர் தமிழர். தாராளமாகக் கொட்டட்டும்; புலிகேசி! சாளுக்கிய நாட்டுக்காக இரத்தத்தைக் கொட்டினாய்! உன் இரத்தத்தைக் குடித்து வெற்றி கண்ட தமிழரின்மீது இதோ வஞ்சகம் தீர்த்துக் கொண்டேன்! ஒரு பிடி சாம்பலால்! முடிவில் இந்தப் பிடி சாம்பல், சாளுக்கிய நாட்டின் சாம்பல், வெற்றியைப் பெற்றுத் தந்தது.

சாளுக்கிய நாட்டுக்குச் செல்லும் வழியில், எதிர்ப்படுவோரிடம், பழைய நண்பர்களிடம், பாதி பட்டுப்போன மரம் கருகிக் கிடந்த இடம், போர் நடந்த களம் ஆகிய இடங்களைக் கண்டபோது எல்லாம், வெற்றிக் களிப்புடன், வில்லாளன் இங்ஙனம் பேசினான் - சில சமயங்களிலே கூவினான் - கூத்துமாடினான்! ஆம்! அவன் ஆனந்தமடைந்ததிலே ஆழ்ந்த அர்த்தமிருந்தது; பல்லவ நாடு திறமை மிக்க படைத் தலைவரை இழந்து விட்டது; பல்லவப் படை, போர்த் திறனும், போர் பலவற்றிலே பெற்ற அனுபவத்தை எடுத்துக் கூறும் ஆற்றலையும் படைத்த பரஞ்ஜோதியாரின் துணையை இழந்தது; ஒளியிழந்த மணிபோல, கூர் இழந்த வாள் போலாயிற்று பல்லவ நாடு. இதனை மக்கள் உணரக் கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால், உணர்ந்தனர் - பல ஆண்டுகளுக்குப் பிறகு.

“சாளுக்கிய படை வருகிறதாமே!”

“படை பெரிய அளவாம் - மிக வீரமாகப் போராடும் படையினராம்.”

“ஆமாம்! ஆனால் என்ன! நாமென்ன, படைபலமற்ற நாட்டிலேயா வாழ்கிறோம். நரசிம்மப் பல்லவனின் திருக் குமரனிடம் தேர்ச்சி பெற்ற படை இருக்கிறது. கவலை ஏன்?”

“படை இருக்கிறது - பெரும் படைதான் - ஆனால் பரஞ்ஜோதி இல்லையே! பரஞ்ஜோதி இல்லை என்ற தைரியத்தாலல்லவா, வாதாபி தரைமட்டமானதைக் கண்டு கலங்கிய சாளுக்கியர், மீண்டும் தலைதூக்க - நமது நாட்டின் மீது போர்த்தொடுக்கத் துணிந்தனர்.”

“பரஞ்ஜோதி இன்று இருந்தால்...”

“பரஞ்ஜோதி இல்லையே...”

“பரஞ்ஜோதியை இழந்த பிறகு, நமக்கு வெற்றி ஏது...”

கலங்கிப் பேசினர், காஞ்சிபுரத்து அரசு அவையினர், இதுபோல். அவசர அவசரமாக, அணிவகுப்புகள் தயாராயின. முரசுகள் ஆர்ப்பரித்தன! ஆயுத ஒலி கிளம்பிற்று; நால்வகைச் சேனை கிளம்பிற்று; பாய்ந்து வரும் சாளுக்கியப் படையைத் தடுக்க, எல்லாம் இருந்தது. ஆனால் மக்கள் மனதிலே நம்பிக்கை எழவில்லை. ஏனெனில், களத்திலே நின்று படைகளை நடத்திச் செல்ல பரஞ்ஜோதி இல்லை - படைத்தலைவர் பரஞ்ஜோதிதான் மடத்தலைவர் சிறுத்தொண்டரானாரே.

பல்லவர் படை வரிசையிலே மட்டுமல்ல, பரஞ்ஜோதியார் நினைவு சென்றது. தாக்க வரும் சாளுக்கியப் படை வகித்துக் கம்பீரமாக வருகிறான் வில்லாளன் - “பாய்ந்து செல்லுங்கள்! பயமின்றிச் செல்லுங்கள்! பல்லவ நாடு, பரஞ்ஜோதியில்லா நாடு! பயமில்லை, படைகளை மட்டும் படைத்த நாடு, படைத் தலைவர் மடத்தினுள் சென்றுவிட்டார். பிடி சாம்பலால் பெரும் படைத் தலைவனை, சிறுத்தொண்டனாக்கிவிட்டேன். இனி பயமில்லை, ஜெய முண்டு, செல்க!” என்று கூவினான் களிப்புடன்.

அவன் சொன்னது சரியாகவே இருந்தது. வெற்றி சாளுக்கிய மன்னனுக்கே. புலிகேசியின் புதல்வன், நரசிம்மனின் மகனைத் தோற்கடித்தான். காஞ்சிபுரத்தில் தோற்ற மன்னன், வாதாபியை எண்ணாதிருந்திருக்க முடியுமா? வாளிழந்து நின்றபோது, பரஞ்ஜோதியைப் பற்றிய நினைவு வராமலிருக்க முடியுமா? வெற்றி பெற்ற சாளுக்கியப் படை வெறியாட்டமாடிக் கொண்டு, காஞ்சிபுரத் தெருக்களிலே பவனி வந்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு, சாளுக்கிய நாட்டிலே இருந்து கொண்டு வந்த பொருளின் குவியல்கள், யானை மீதும் குதிரை மீதும் ஏற்றப்பட்டு, முன்னே செல்ல, வெற்றிச் சங்கொலிக்க, பின்னே, பிடிபட்ட சாளுக்கியர்கள் வரிசையாக நடத்தி வரப்பட, இருமருங்கும் ஊர் மக்கள் நின்று வாழ்த்தொலி கூற, பரஞ்ஜோதி, வாதாபியை வென்ற வீரன் பவனி வந்த காட்சி, மக்கள் மனக்கண்முன் தோன்றாதிருக்க முடியுமா? கண்கள் குளமாயின!

பரஞ்ஜோதி வெற்றிப் பவனி வந்த வீதிகளில் சாளுக்கிய மன்னன் பவனி வந்தான். அவன் சித்திரகாந்தா எனும் குதிரை மீதமர்ந்து வந்தான். அவனுடைய படைகள் சாளுக்கிய நாட்டுக்கு வாழ்த்தொலி கூறின. பல்லவ நாட்டுத் தலைநகருக்குள்.

பல்லவ மன்னனைப் பணியச் செய்தான் சாளுக்கியன்.

தன் பாதத்தை முத்தமிடச் செய்தான், சாளுக்கிய மன்னன்!

பல்லவ மன்னன், அந்த விநாடியில், எத்தனை முறை எண்ணினானோ பரஞ்ஜோதியைப் பற்றி!

எவ்வளவு ஆயிரமாயிரம் மக்களின் கண்களிலே, நெருப்பைச் சுடும் நீர் வெளி வந்ததோ!

தாய்நாடு பிறனிடம் அடிமைப்பட்டுத் தார்வேந்தன் எதிர்நாட்டு மன்னனின் பாதத்தை முத்தமிடக் கண்ட பிறகு, கண்களா அவை? புண்களல்லவா! ஆஹா! பரஞ்ஜோதி மட்டும் மடலாயம் புகாமல், படையில் இருந்திருந்தால்... என்று எண்ணித் துடித்தனர் மக்கள். வேறென்ன செய்வர்?

‘பிடி சாம்பல்! பிடி சாம்பல்!’ என்று முழக்கமிட்டான் வில்லாளன்.

‘யாரிவன் பித்தன்? பிதற்றுகிறான்! பிடி சாம்பலாம், பிடி சாம்பல்!’ என்று அன்று வாதாபியில் வில்லாளனைக் கடிந்துரைத் தனரே தமிழ் வீரர்கள்; அவர்கள் இம்முறை என்ன கூற முடியும் “ஆம்! பிடி சாம்பல்! பிடி சாம்பலைத் தந்து பரஞ்ஜோதியாரைப் பூசிக் கொள்ளச் செய்து, மடத்துக்குள் அனுப்பினோம்; இன்று படைத்தலைவர் இன்றித் திகைத்துத் தோற்றோம்! பிடி சாம்பலால் தோற்றோம்.” என்று மெல்லக் கூறிக் கொண்டனர்.

“அழுக்கற்ற வெண் சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும், குடைகளையும் பிடித்துக் கொண்டு புலிகேசியின் - அறுவகைப் படைகள் செல்லுங்கால், கிளம்பிய, தூசியானது எதிர்க்க வந்த பல்லவவேந்திரன் ஒளியை மங்கச் செய்தது. பல்லவனும் காஞ்சிபுரத்து மதில்களுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.”

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன்முன் கொணர்ந்தான்.”
- சேக்கிழார்.

புலிகேசியின் புதல்வன் விக்ரமன், நரசிம்மன் பல்லவன் மகன் பரமேஸ்வரனைத் தோற்கடித்து, சித்திரகாந்தா என்ற தன் குதிரை மீது அமர்ந்து, உருவிய வாளுடன் பவனி வந்து, பரமேஸ்வரனைத் தன் பாதத்தை முத்தமிடச் செய்தான்.” - வரலாறு.

மகேந்திர பல்லவன் புலிகேசியிடம் தோற்றான். மகேந்திரன் மகன் நரசிம்மன், புலிகேசியைத் தோற்கடித்தான். - கொன்றான். புலிகேசியின் மகன் விக்ரமன், நரசிம்மனின் மகன் பரமேஸ்வரனைத் தோற்கடித்துப் பணிய வைத்தான்.

காஞ்சிபுரம் கலங்கிற்று. புலிகேசியின் வெற்றி முரசு கேட்டு; மகேந்திரன் காலத்தில், காஞ்சிபுரம் களித்தது. மகேந்திரனின் மகன் காலத்திலே, புலிகேசி களத்தில் கொல்லப்பட்டு, தலைநகர் வாதாபி தீக்கு இரையான செய்தி கேட்டு காஞ்சிபுரம் மீண்டும் கலங்கிற்று, புலிகேசியின் மகன் விக்ரம், நரசிம்மனின் மகன் (மகேந்திரனின் பேரன்) பரமேஸ்வரனைப் பணிய வைத்தது கண்டு.

அழுகுரல் - ஆனந்தம் - அழுகுரல் - மாறி மாறி வரும்! இதற்கு ஏதேனும் காரணம் இருந்தாக வேண்டுமே! ஒன்றும் இல்லையோ! மகேந்திரன், களத்திலே புலி, பல வெற்றிகளைப் பெற்றவன்; எனினும் புலிகேசியிடம் தோற்கிறான். பிறகு அதே புலிகேசி, மகேந்திரனின் மகனிடம் தோற்கிறான். பிறகு, புலிகேசியின் மகன் விக்ரமன், நரசிம்மனின் மகன் பரமேஸ்வரனைத் தோற்கடிக்கிறான்.

இந்த விசித்திர வரலாற்றுக்கு, ஒரு விளக்கம், எங்கோ ஓர் உண்மை புதைந்திருக்க வேண்டும் - அதைக் கண்டறியும் முயற்சியே மேலே தீட்டியுள்ள வரலாறு கலந்த கற்பனை உரை.

என் முடிவு இது! பரஞ்ஜோதி படைத்தலைவராக இருந்ததால், பல்லவ நாட்டின் ராணுவ பலத்தைச் சாளுக்கியம் உணர முடிந்தது - வாதாபி வீழ்ந்தது.

படைத் தலைவரிற் சிறந்த பரஞ்ஜோதி, சிறுத்தொண்டராகி விட்ட பிறகு, பல்லவ நாட்டுப் படை பலம் சரிந்தது; தோல்வி வந்தது.

பரஞ்ஜோதி, சிறுத்தொண்டன் ஆனார் என்பதை நான், ஆக்கப்பட்டார் என்கிறேன்.

அதாவது, பரஞ்ஜோதியை, மன்னன், சைவன், என்ற காரணத்தைக் காட்டிப் பதவியிலிருந்து விலக்குகிறான்.

இதற்கு மூன்று காரணங்கள் இருக்க வேண்டும்மென்பது என் யூகம்.

1. சாளுக்கியர் தந்திரம்.

2. வைச, வைணவ ஆதிக்கப் போட்டி.

3. மன்னனுக்குப் பரஞ்ஜோதியாரிடம் ஏற்பட்ட இலேசான பொறாமை.

இவை அர்த்தமற்றன என்றோ, விஷம் நிறைந்தன என்றோ, விதண்டாவாதம் என்றோ குறைகூறப் பலர் உளர் என்பதை நான் அறிவேன். ஆனால், அவர்களை நான் கேட்க விரும்பும் சில கேள்விகளுக்கு அவர்களிடமிருந்தல்ல, உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் - அவர்களிடமிருந்து சிந்தனையை எதிர்பார்க்கிறேன்.

1. புகழ் பெற்ற பரஞ்ஜோதிக்குப் பிறகு, படைத் தளபதி என்ற பெயருக்குரிய வேறோர் வீரரின் பெயரும் பல்லவர் வரலாற்றில் இல்லாமற் போனது ஏன்?

2. கீர்த்தி பெற்ற பிறகு பரஞ்ஜோதியை, படைத்தலைவர் பதவியிலிருந்து மன்னன் விலக்குவானேன்?

மன்னன் விலக்கினான் என்று எப்படிக் கூறலாம்? மன்னன், பரஞ்ஜோதியாரின் பெருமையை உணர்ந்தான் என்றன்றோ அதற்குப் பொருள் என்று அறனடியார்கள் கூறுவர். அவர்களுக்குக் கூறுகிறேன், மன்னன் விலக்கினார் - பரஞ்ஜோதி மறுத்தார் - திகைத்தார் - இந்தப் பாடல்களை மீண்டும் ஓர் முறை படிக்க வேண்டுகிறேன் - என்னை மறந்து.

உங்கள் கண்முன், பதவியில் இருக்கக்கூடாது என்று தந்திரமாகப் பேசும் மன்னனும், திகைக்கும் பரஞஜோதியும தெரிவர்.

மேலும், எத்தனையோ அடியார்களும், தொண்டர்களும், நாயன்மார்களும், சைவத்தின் பெருமையை நினைவூட்டவும், நிலைநாட்டவும் உளர்.

ஒரு பரஞ்ஜோதி சிறுத்தொண்டராக்கப்படாமல், படைத்தலைவராகவே இருக்க அனுமதித்தால், நஷ்டம் இல்லை, நாட்டுக்கும் சைவத்துக்கும் . ஏற்கெனவே ஏராளமாக உள்ள அடியார் கூட்டத்தில், இராணுவ வரலாற்றுக்கே ஓர் தலைசிறந்த எடுத்துக்காட்டாக இன்றுவரை, உலக வரலாற்று ஏடுகள் வரை, யாருடைய பெயர் இருக்க வேண்டுமோ, அந்தப் பரஞ்
ஜோதியை அடியவர் கூட்டத்தில் சேர்த்து, வீரக்கோட்டத்துக்கு நஷ்டம், ஈடுசெய்யமுடியாத நஷ்டத்தை உண்டாக்கிவிட்டனர் இது. சரிடியா? சிந்திக்க வேண்டுகிறேன்.

சிந்தனையை, குறிப்பாகச் சிவநேசர்களின் சிந்தனையைக் கிளறவே இச்சிறு ஓவியம். பாராயணத்துக்குப் பயன்படுத்திய பாடல்களை, இதோ, சற்று நான் கூறினவை சரியா என்பதைப் பகுத்தறிவுப் பயன்படுத்திப் படித்துப் பாருங்கள்.

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரந் துகளாகத்துளை நெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித் தொகையும்
இன்னன எண்ணிலா கவர்ந்தே இகலரசன் முன் கொணர்ந்தார்.”

பரஞ்ஜோதியார், தென்னகரமாம் வாதாபியை வென்று அங்கிருந்து மணியும் அணியும், கரியும் பரியும் கொணர்ந்தார் என்று அறிவிக்கிறது இச்செய்யுள்.

“கதிர்முடி மன்னனும் இவர் தங்களிற்றுரிமை ஆண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப அறிந்த அமைச்சர்க ளுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலியுட மையினால்
எதிர்வருக் கிவ்வுலகிலில்லை என எடுத்துரைத்தார்.”

மன்னன் மகிழ்கிறான், பரஞ்ஜோதியாரின் ஆண்மையைக் கண்டு; அமைச்சர் கூறுகிறார் - பரஞ்ஜோதி, அறனடியார்; ஆகவேதான் வென்றார். அவருக்கு ஈடு இவ்வுலகில் இல்லை என்று கூறினர். இது இச்செய்யுளின் பொருள்.

“தம்பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன்.
வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன்
எனவெருவுற்றெமபெருமான் இது பொறுக்கவேண்டும் என இறைஞ்சினான்.”

சிவனடியாரா இவர்! இவரையா நான் போர்க்கள வேலையில் ஈடுபடுத்தினேன், அபசாரம் என்று மன்னன் வருந்தினான் என்பது இச்செய்யுளின் பொருள். இதிலே ஆச்சரியப் பகுதி என்னை எனில், படைத்தலைவர், சிவபக்தர் என்ற விஷயமும், மன்னனுக்கு மந்திரி சொல்லித் தான் தெரிய வருகிறது!

“இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ தீங்கென்ன ஆங் கவர்க்கு
நிறைந்த நிதிக்குவைகளுடன் நீடுவிருத்திகள் அளித்தே
அறம்புரி செங்கோலரசன் அஞ்சலி செய்துரைக்கின்றான்.”

மன்னனைப் பரஞ்ஜோதி வணங்கி, என் தொழில் போரிடுவது. அதைச் செய்வதிலே தீது என்ன? அது என்கடமை என்று கூற, மன்னனோ, அவருக்கு ஏராளமாகப் பரிசுகள் வழங்கிப் பேசலானான் என்பது இச்செய்யுளின் பொருள்.

“உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டுய்த்தீர் எம்முடைய மனக்கருத்துக்கினிதாக இசைந்துமதுமெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துசெம்மை நெறித்திருத் தொண்டு செய்யும் னெவிடையளித்தான்.”

அப்படியல்ல, அறனடியாரே! உமது பெருமையை உணராமல் இருந்துவிட்டேன். இனி நீர் மடத்தில் சென்று சிவத் தொண்டு புரிக! என்று மன்னன் கூறி அனுப்பிவிட்டான் என்பது இச்செய்யுளின் கருத்து.

இனி யோசியுங்கள். விலக்கப்பட்டார் பரஞ்ஜோதி; அதற்காக விசாரப்பட்டார் என்று நான் கூறினது தவறா? செய்யுள் யாவும், பெரிய புராணம் - நமது சரக்கல்ல. ஒவ்வொரு செய்யுளுக்கு உள்ளேயும், இடையிடையேயும் புதைந்துள்ள பொருளை, யூகித்துத் தீட்டினேன் - சிந்தனையைக் கிளற.

வேவலுக்கோ, ஐசன்ஹவருக்கோ, பைபிளிடம் ஆசை; ஏசுவிடம் விசுவாசம் என்று பிறர் கூறக்கேட்டு, ஆஹா! அப்படியா! அங்ஙனமாயின் மாதாகோயில் பாதிரி வேலைக்கு அனுப்புகிறோம் என்று, பிரிட்டிஷ் அமெரிக்க சர்க்கார்கள் கூறுமா? பரஞ்ஜோதிக்குக் கூறப்படுகிறது. ஏன்?

படைத்தொழிலில் இருப்பதால் சிவத்தொண்டு சாத்யமின்றிப் போகுமா? ஆவுரித்தித் தின்று உழல்பவனும், யனை நம்பினால், அவர்களே நாம் வணங்கும் தெய்வம் என்று சைவம் கூறப் போர்த் தொழிலைக் கடமையாகக் கொண்ட ரஞ்ஜோதியாருக்கு மட்டும், ஏன் மடாலயம் புகவேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டது? இவை நீங்கள் சிந்திக்க வேண்டியவை. ‘பிடி சாம்பல்’ தீட்டியதன் நோக்கம் அதுதான். ஆகவே சைவ மெய்யன்பர்கள், ‘பிடி சாபம்’ என்று சீறிடாமல், சற்றே சிந்தனையைச் செலவிடுங்கள்... முடியுமானால்!

(திராவிட நாடு - 1947)