அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

பிடிசாம்பல்
3

பரஞ்ஜோதியாரே! பல்லவ சாம்ராஜ்யத்தின் கீர்த்தி மிக்க படைத் தலைவர் என்ற நிலையிலே, பாவியேன், ஒரு பரம பக்தரை, சைவ அன்பரைச் சிறைப்படுத்தி வைத்திருந்தேன். இறைவனின் அன்பனை, இரக்கமற்ற போர்த் தொழிலிலே புகுத்தினேன். இன்று அந்தத் தவறை உணர்ந்தேன். இனித் தாங்கள், எல்லையற்ற இன்பம் தருவதும், இகபரசுகத்துக்கும் ஏதுவாவதும், தங்கள் இருதயத்துக்கு இன்பமூட்டுவதுமான சிவத் தொண்டு செய்து கொண்டு சுகமே வாழ்வீராக!

“வேந்தே! இதென்ன வார்த்தை! இதன் பொருள் என்ன? இனி நான் அரச அவையில்...”

“அரச அவையில் என்றும் நீர் ஓர் மணிவிளக்கு. ஆனால், என் படைத்தலைவன் என்ற சிறு தொழில் புரியச் சொல்லிப் பழி ஏற்க மாட்டேன்...”

“படைத் தலைவனாக இனி நான்...”

“அதனை நான் அனுமதிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்! தாங்கள் இருக்க வேண்டிய இடம் வேறு! வேந்தர் சபையிலே வேலை தாங்கும் வேலையல்ல, விழி மூன்றுடையோனின் சேவை செயது விளங்க வேண்டும் தாங்கள்.”

பரஞ்ஜோதி திகைப்படைந்தார் - பிரதானியர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை - வைணவர்கள், புன்சிரிப்பை அடக்கிப் பார்த்தனர், முடியவில்லை - மன்னன், அவையைக் கலைத்துவிட்டு, அரண்மனைக்கு சென்றுவிட்டான்.

பரஞ்ஜோதியார் வாழ்க!

சைவம் ஓங்குக!

நரசிம்மப்பல்லவன் வாழ்க!

நாதனின் நற்றொண்டன் வாழ்க!

என்று நகரெங்கும் முழக்கம். மன்னனின் கனவிலே ஈசன் பிரத்யட்சமாகி இட்ட கட்டளையாம் என்று தெளிவற்றவர்கள் பேசினர். அதுவே நகரெங்கும் பரவிவிட்டது - பகுத்தறியக் கூடியவர்கள், இதைத் தடுக்க முடியவில்லை.

பரஞ்ஜோதியார் தமது மாளிகை சென்றார் மனவாட்டத்துடன்.

மன்னன் மதி மிக்கவன்! எதிர்பார்த்ததைவிட, அதிகத் திறமையாகவே காரியத்தைக் காவலன் முடித்துவிட்டான். சைவத் தவ வேடதாரியின் மொழி கேட்டு, மன்னன் மிரண்டே போனான் போலும். உண்மையிலேயே பழியும் பாவமும் தன்னைப் பற்றிக் கொள்ளும் என்று கருதினானோ என்று வைணவ மார்க்கத்தவர் பேசிக் கொண்டனர் - சைவத்துக்கு, அரச அவையிலும் அதன் மூலம் நாடெங்கும் ஏற்பட்ட செல்வாக்கு இனிச் சிதைந்தொழியும் என்று எண்ணி மகிழ்ந்தனர். வைணவத்துக்கு நேரிட இருந்த விபத்து, தவிர்க்கப்பட்டது என்று களித்தனர்.

சிவபக்தன், ஆகவே சேனாதிபதியாக இருக்கக்கூடாது, இருப்பது மகாபாவம் என்று மன்னர் கூறுகிறார். எதிரிகளை ஒழித்தவன், இணையில்லாப் போர்வீரன், படைகளை நடத்திச் செல்வதிலே, திறமைமிக்கோன், இனி இவனால் பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் திக்கெட்டும் பரவும் என்று மக்கள் பூரிப்புடன் பேசிக் கொண்டனர். மன்னனோ! பொன்னும், பொருளும் பூமியும் கொடுத்து, வாளையும் கேடயத்தையும் பறித்துக் கொண்டான். ஏன்? என்ன நோக்கம்? சிவத்தொண்டு புரியத்தான் வேண்டும். ஆமாம், நானே அதனை அறிந்துதான் இருக்கிறேன். அத்தொண்டு செய்வதற்கும், நாட்டைக் காத்திடும் நற்றொண்டு புரிவதற்கும் எப்படி முரண் வந்து சேரும்.

என் ஐயன், எதிர்த்தோரை அழிக்காமல் விட்டவனல்லவே! திரிபுராந்தகனல்லவோ! அவர் அடியவனாம் நான், போர்த்தொழிலில் ஈடுபடுவது, சிவ நெறிக்குத் தகுதியல்ல என்றார் மன்னர்! என் செவியில் அச்சொல் வீழ்ந்தபோது, திகைத்தேன். அந்தத் திகைப்பு இன்னமும் மாறவில்லை; எப்படி மாறும்?
நானே, மறுத்துப் பார்த்தேன். இறைவனுக்கு ஆற்ற வேண்டிய தொண்டு போலவே, என் அரசனுக்கும் பணி புரியவதேயன்றோ முறை என்று வாதாடினேன். மன்னன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

தமிழகம் வாதாபியின் வீழ்ச்சியைக் கேட்டுக் களித்தது. வாதாபி... என்வெற்றி... கடைசியில் அந்த வெற்றி... என்னை அரச அவையிலிருந்து விரட்டிவிடவா பயன்பட்டது! அவனுக்கு அடியவனாக இருந்து வருபவன். ஆகவே, இங்கு வேண்டாம்! யாரும் கேட்டறியா வாதம்! எதிர்பாராத விபத்து! ஏன்? என்பால் மன்னருக்கு என்ன கோபம்? வெறுப்புக்குக் காரணம் இல்லையே பேழையும் பொற்கட்டிகளும் மானியமும் அளித்தார் மன்னர்; அளித்து, என்னை ‘பஜனை’ செய்யச் சொல்கிறார்!

பரஞ்ஜோதி! பரம பக்தன்! சிவத்தொண்டு புரியும் செம்மல்! சிவனருள் காரணமாகவே, வாதாபியில் வெற்றி கிடைத்தது என்றனர் அமைச்சர். ஏன், அதே சிவனருள் அதன் பயனையும், என் மூலமாகவே மன்னன் அடையக்கூடாது? இதுவரை போர்த்தொழிலிலேயும் ஈடுபட்டபடி, சிவத் தொண்டும் செய்து கொண்டு, சிவனருளைப் பெற என்னால் முடிந்தது - அமைச்சர் கூறி அரசனும் ஒப்பின மொழிப்படியே யோசிக்கும்போது, அங்ஙனமிருக்க, எப்போதும் போலவே, அரச அவையில் இருந்து ஆற்ற வேண்டிய பணியினையும் செய்து கொண்டே என்னால் அதே சிவத்தொண்டில் ஈடுபட்டிருக்க முடியாதா! மன்னரின் நோக்கந்தான் என்னவோ!
பலப்பல எண்ணினார் பரஞ்ஜோதியார். காலை முதல் மாலை நெடுநேரம் வரையில், இதே சிந்தனை - “விரட்டப் பட்டோம்” என்பதுதான், அவருடைய சிந்தனையின் முடிவு. ஏன் என்று யோசித்தார். - அவருடைய சிந்தனையின் முடிவு. ஏன் என்று யோசித்தார். அவருடைய முகத்திலே புன்னகை பூத்தது. மெல்ல வாய்விட்டுக் கூறினார், “பாபம்! பீதி! பாபம்! பரிதாபம்!” என்று.

வைணவர்கள், விழாக் கொண்டாடினர், இரகசியமாக - பரஞ்ஜோதி தொலைந்தான் அரச அவையைவிட்டு என்று களித்து. சைவர்கள், பகிரங்கமாகவே விழாக் கொண்டாடினர், மன்னன் சைவத்தின் மேன்மையை உணர்ந்து, சிவ பக்தராம் பரஞ்ஜோதியாரை, சிவத்தொண்டு புரிக என்று கூறிவிட்டான் - இனிச் சைவம் கொழிக்கும் எதிரிப் படைகள் முறிந்தது போல. எமது சைவத்துக்கு எதிராக உள்ள மார்க்கங்கள் அழிந்துபடும்என்று பெருமையுடன் பேசிக் கொண்டனர். மன்னன், அரண்மனைத் தோட்டத்திலே, தனியாக உலவ அமைக்கப்பட்டிருந்த மணிமண்டபத்திலே, உலவியவண்ணம், ஏதேதோ எண்ணிக் கொண்டே இருந்தான். இடையிடையே மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான். இருள் சூழ்ந்தது. பணியாள், விளக்கு ஏற்றி வைத்து விட்டுப் போய்விட்டான். விளக்கை அடிக்கடி தூண்டி விட்டுக் கொண்டே மன்னன் உலவினான் - அவன் மனதிலே உலவிய எண்ணங்கள்; அவை இவை.

“அப்பா! மிகமிகச் சிரமப்பட வேண்டி இருந்தது. சிக்கலான காரியம்! பரஞ்சோதி எதிர்பார்த்திருக்க முடியாது. தெரிந்து கொண்டும் இருக்க முடியாது. ஒரே திகைப்பு.

ஆனால் என்ன செய்வது! ஓங்கி வருகிறது. அவன் கீர்த்தி. ஒப்பற்ற வீரன் பரஞ்ஜோதி என்று மண்டலமெங்கும் பேசுகிறார்கள் சகலரும் - ஆமாம்! இடையிடையே ஒப்புக்கு ஒரு மொழி என்னைப் பற்றி வருகிறது. இதற்கு நான் ஏன் மன்னனாக இருக்க வேண்டும்! மண்டலம் புகழ்வது வாதாபியை வென்றவனை! மண்டலத்துக்கு நான் மன்னன்! அலங்காரப் பொம்மை! அந்த நிலையில் மகேந்திரன் மகன் இருப்பதா! படைத் தலைவன் பரஞ்ஜோதியைக் கொண்டுதான், பல்லவ மன்னன் தன்னைத் தமிழருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமை பிறந்தது. நரசிம்மன் யார் தெரியுமோ? வாதாபியை வென்ற வீரர் திலகம். பரஞ்ஜோதியார் வாழும் பல்லவ நாட்டுக்கு மன்னன்! படைத்தலைவன் முதலில், பல்லவ மன்னன் பிறகு! மன்னன் மண் பொம்மை, பரஞ்ஜோதி; அதைக் காட்டும் விளக்கு!

பரஞ்ஜோதியாக இருக்க இசையலாம், யாரும்! பரஞ்ஜோதியின் புகழ் ஒளிமுன், மின்மினி போன்று மன்னவன் என்ற பட்டத்தை மட்டும் தாங்கிக் கொண்டிருக்க யாருக்கு மனம் இடங்கொடுக்கும்?

எங்கே போர் மூண்டாலும் இனி, என்ன பேசுவர், ‘பல்லவனுக்குப் பயமில்லை. பரஞ்ஜோதியார் இருக்கிறார்’ என்று கூறுவர். என் அரசு, அவருடைய ஆற்றலை அரணாகக் கொண்டுதான் நிலைக்க முடியும் என்ற நிலை! எத்தனை மண்டலங்களிலே இதுவரை கேலிமொழி பேசினரோ, யான் என்ன கண்டேன்.”

“பல்லவன் ஏன் போருக்குத் துள்ளுகிறான் தெரியுமா? பரஞ்ஜோதி இருக்கிற தைரியம்!”

“எனக்கும் ஒரு பரஞ்ஜோதி கிடைத்தால் நானும் நரசிம்மப் பல்லவன் போலப் பெருமை அடைந்துதான் இருப்பேன்” என்றெல்லாம் பேசி இருப்பர். என் மண்டல மக்களும் அதே மனப்போக்கைக் கொண்டுள்ளனர்.

பல்லவன் - பரஞ்ஜோதி - இரு பதவிகளில்! என்னைக் கேட்டால், பரஞ்ஜோதிப் பதவியே மேல் என்பேன்!

இரு ‘அரசு’ ஏற்பட்டு விட்டது. ஆம்! ஆற்றலரசனாகி விட்ட பரஞ்ஜோதி ஓர் அரசர்! அரசர் மகனானதால் அரசனான நான் ஓர் அரசன்! ஒரு மண்டலத்தில் இரு அரசர்களா? கூடாது! நிலைக்காது!!

ஆகவேதான், அவர் விலகுவதால் நஷ்டம் என்ற போதிலும் விலக்க வேண்டி நேரிட்டது. மண்டலம் பலவற்றை, அந்த மாவீரனுடைய துணையால் பெறலாம்! ஆனால் என்ன பலன்? புது மண்டலங்கள், பழைய மண்டலம், இரு இடமும், என்னை மட்டுமல்லவே, அவரையும்தானே, அரசராகக் கொள்ளும்! பல்லவ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த படைத்தலைவர் பரஞ்ஜோதியால் முடியும்! ஆனால் சாம்ராஜ்யம் மட்டுந்தானா விரிவாகும், அவருடைய கீர்த்தியும், செல்வாக்கும் கூடத்தான் வளரும்! ஓங்கி வளரும்! என்னை மன்னன் மறைக்குமளவு வளரும்! அரசனைக் கேலிச் சித்திரமாக்கும் நோக்கம் அளவுக்கும் படைத்தலைவனின் புகழ் பரவும்! செ! அந்த நிலையை நரசிம்மன் விரும்ப முடியுமா? பரஞ்ஜோதியில்லாப் பல்லவ சாம்ராஜ்யத்தை நான் ஆள வேண்டும் - அரசன் என்ற பெயருக்கு அப்போதுதான் நான் அருகதையுள்ளவனாவேன்.

ஆமாம்! நரசிம்மன் அரசனாகவும், பரஞ்ஜோதி படைத் தலைவராகவும் இருந்தால், மன்னன் என்ற நிலையே மங்கும். மங்குவதோடு முடியுமா? அந்த மாவீரன் மனதிலே மாசு இல்லை. ஆமாம்! இன்று இல்லை! மாசு உண்டானால்? ஆசை ஏற்பட்டால்? மங்குவது மட்டுமா, அந்த மாவீரன் மனதிலே, மகுடத்தின் மீது ஆசை பிறந்தால், நரசிம்மன் சிரத்திலே இருக்கும் நவரத்தின கிரீடம் ... ஆமாம்... பறிக்கப்பட்டும் விடக்கூடும்... படைத்தலைவர்கள் பட்டத்தரசர்களை வெட்டி வீழ்த்திக்கூட இருக்கிறார்கள்!

பரஞ்ஜோதி அப்படிப்பட்டவரல்ல! ஆனால் எப்படியோ எதிர் காலம்! இன்னும் இரண்டோர் வெற்றிகள் வாதாபி வீழ்ந்தது போல் வேறு சில பல நகர்கள் வீழ்ந்து, வெற்றி மாலை மேலும் பல, அவர் மார்பில் வீழ்ந்தால், எண்ணம் எப்படி எப்படி மாறுமோ! என்னென்ன தூவுவரோ, சதி செய்யும் தந்திரக்காரர்? யார் கண்டார்கள்!

கொஞ்சும்போதே கிளி கடித்து விடுகிறதே கோதையர் இதழை! மன்னனாம் எனக்குள்ள புகழை மிஞ்சிடும் புகழ்பெற்ற மாவீரன் பரஞ்ஜோதியின் கூர்வாள், புகழின் சின்னம் இன்று. நாளை அதுவே புரட்சிக் கருவியாக மாறினால்?...

பொறாமையா எனக்கு? இல்லை! இருக்காது! - அப்படியும் திட்டமாகச் சொல்வதற்கில்லையே.

அன்றோர் நாள் பவனி வந்தேன்... “பல்லவ சாம்ராஜ்யாதிபதி, நரசிம்ம மகாராஜாதி ராஜர் வாழ்க!” என்று பெருந்திரளான மக்கள் அன்புடன் ஆரவாரம் செய்தனர். அதே மக்கள், அடுத்த விநாடி அவரைக் கண்டதும் “புலிகேசியை வீழ்த்தி ஈடில்லாத் தலைவர், எமது பரஞ்ஜோதியார் வாழ்க!” என்று ஆரவாரம் செய்தனர்.

என்ன இருந்தாலும், எனக்கு உரைத்த வாழ்த்தொலியை, பரஞ்ஜோதியாருக்கு அளித்த வாழ்த்தொலி வென்றுவிட்டது!

நான், பல்லவ சாம்ராஜயாதிபதி! அவ்வளவுதான் சொன்னார்கள் மக்கள்!

அவரை? எமது பரஞ்ஜோதி என்றல்லவா அழைத்தனர்.

எனக்கு இலேசாகக் கோபம்! பொறாமை, கொஞ்சம் உண்டாயிற்று - மறைப்பானேன். கொஞ்சம் அச்சம்கூடத்தான். அருவருப்பும் தட்டிற்று, அடிக்கடி மக்கள் வெற்றி வீரன், வாதாபியை வென்ற தீரன் என்றெல்லாம் அவரைப் புகழக் கேட்டு.

மன்னனும் மனிதன்தானே! மனம் நிம்மதியாகவா இருக்க முடியும் மன்னன், மக்களின் மனம், படைத்தலைவனிடம் அடைக்கலம் புகுவது கண்டு?

பரஞ்ஜோதியாரிடம் எனக்கும் மதிப்புத்தான். இல்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால், அவர் அருகே இருக்கும் வரை, நான் அரசனாக இருக்க முடியாது. நரசிம்மன் அரசனாக வேண்டும்! பரஞ்ஜோதியில்லாமல், பல வெற்றி பெற்றாக வேண்டும். பல்லவ மன்னனிடம் ஒரு படைத்தலைவன் இருந்தான், பரஞ்ஜோதி அவன் பெயர், என்று வரலாறு இருக்க வேண்டுமேயொழிய, பரஞ்ஜோதியைப் படைத்தலைவராகக் கொண்ட பல்லவ மன்னன் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் நரசிம்மன் என்று வரலாறு இருத்தலாகாது.

ஆகவேதான் அவரை நீக்கிவிட்டேன்.

நல்ல வேளை! சைவ - வைணவ மாச்சாரியத்தைக் கொண்ட அந்தப் பிரதானியர்கள் கிடைத்தனர். அவர்கள் சொன்ன யோசனையும், தக்கதோர் உதவியாக அமைந்தது.

கரணமின்றி அவரை நீக்கியிருக்க முடியாது - கலகமே பிறந்துமிருக்கும். சைவர் என்ற துவேஷத்தால் வைணவ மன்னர், பரஞ்ஜோதியை விலக்கிவிட்டார் என்ற வதந்தி பரவினால், வீண் வம்பாகும். அவரைச் சிவத்தொண்டு புரியச் செய்துவிட்டேன். அதுவே சரியான முறை! பரஞ்ஜோதியாரை, படைத்தலைவர் பதவியிலிருந்து விலக்கிவிட்டு மட்டும் இருந்தால், ஆபத்து வேறு உருவில் வரக்கூடும்! ஆமாம்! எந்த மண்டலமும் அவர் வரவை ஆவலோடு எதிர்பார்க்கும். சென்றால் பல்லவ சாம்ராஜ்யமும் சிதையும்.

இப்போது நிர்ப்பயம்! பரஞ்ஜோதியார், வாளெடுத்துத் தன் வல்லமையை நிலைநாட்டி, வளரும் புகழ் மேலும் ஓங்கச் செய்து, என் புகழையும் மங்கச் செய்ய முடியாது; வேற்றூர் சென்று என் மனதை மருட்டவும் முடியாது! அவர் இனிச் சிவத் தொண்டு புரிந்து வருவார்! இங்கே என் விருப்பத்தின்படி, பல்லவனின் படை இருக்கும். போரில் வெற்றியும் கிடைக்கும்! தளபதி யார்? பரஞ்ஜோதியல்ல. மன்னனை மிஞ்சும் ஜோதியல்ல, நானாகப் பார்த்து உண்டாக்கும் ‘ஜோதி’ இருக்கும்.

ஆம்! நரசிம்மனின் வீரத்தையும், புகழையும் இழக்காமலிருக்க வேண்டுமானால், நரசிம்மனின் படை, தலைவர் பரஞ்ஜோதியாரை இழக்கத்தான் வேண்டும். மணிமுடி தரித்த எனக்கு மன்னனுக்குரிய வீரம், கீர்த்தி கிடைக்க வேண்டுமானால், பரஞ்ஜோதியார் மடம் புகுந்தாக வேண்டும். ஆகவேதான் அவரை மடத்தில் சென்று மகேஸ்வரனைத் தொழுமாறு கட்டளையிடவில்லை - வேண்டிக் கேட்டுக் கொண்டேன் - வென்றேன்; மன நிம்மதியும் பெற்றேன் - வாழ்ந்தேன்.

விளக்கொளி மங்கலாயிற்று. உலவிக் கொண்டே நரசிம்மப் பல்லவன், நிழலுருவத்தைக் கண்டான் - சிரித்தான் - விளக்கைத் தூண்டிக் கொண்டே, “பரஞ்ஜோதி! எனக்கு ஒளி கொடுக்க ஒரு ஜோதி வேண்டாம்! என்னால் தூண்டிவிடப் பட்டு, ஒளிவிடும் ஜோதி போதும்” என்றுகூறிக் கொண்டே, அரண்மனை உட்பகுதிக்குச் சென்றான். காற்றுவீசி, விளக்கு அலைந்தது; எண்ணெய் குறைந்தது; தூண்டிவிட ஆளில்லை, விளக்கு படர்ந்து போய்விட்டது - எங்கும் இருள்மயம்!

சேனைத் தலைவர் சிவபக்தரானார் - மாளிகை, காட்சிப் பொருளாக்கப்பட்டது - மடத்தில் குடி ஏறினார் பரஞ்ஜோதி - சாளுக்கியன் அந்தக் குடிபுகு விழாவை வெற்றி விழாவாகக் கொண்டாடினான். சின்னாட்கள். பரஞ்ஜோதியின் புதிய கோலத்தைக் கண்டு களிப்பதிலே செலவிட்டான். மடத்திலே புகுந்த படைத்தலைவரின் செயலைப் பலரிடம் பாராட்டிப் பேசினான். சிவநெறி புகுவோர் சிலர், பரஞ்ஜோதியாரைப்போலக் கொலைத் தொழிலாம் படைத்தொழிலை விட்டு விலக வேண்டுவதே முறை என்று கூறினான். பரஞ்ஜோதியின் பண்டாரக் கோலத்தைக் கண்டு ஏற்கெனவே மயக்கமடைந்தவர்கள், வில்லாளனின் தூண்டுதலால், அடியோடு மயக்கமுற்று, ஆளுக்கோர் மடம் தேடிக் கொள்ளலாயினர். படைத் தளபதிகள் பலர், மடம் புகுந்தனர் - களத்திலே அவர்களைக் கொல்வதைவிட, அவர்களை வாழ அனுமதித்து, அதேபோது அவர்களின் ஆற்றலைப் பயனற்றதாக்கிவிடுவது சிறந்தது. நாகத்தை அடித்துக் கொல்லலாம்; இல்லையேல், அதன் நச்சுப்பல்லைப் பெயர்த்தெடுத்துவிட்டுப் பெட்டியில் போட்டு வைக்கலாம்; ஆட வைத்துக்கூடி மகிழலாம் - அதுபோல, சாளுக்கியத்தை அழித்த படைவீரர்கள், அவர்களின் தலைவன் பரஞ்ஜோதி மடம் போய்ச் சேர்ந்தான் - பல்லவம், தன் கூர்வாளை, வெற்றி வாளை இழந்தது - இழக்கச் செய்தோம்; வென்றோம் என்று சாளுக்கியன் கூறிக் களித்தான். அவனுடைய நினைவு, உடனே தாய்நாட்டின் மீது சென்றது. இந்தச் சந்தோஷச் செய்தியை வெற்றிச் செய்தியைச் சாளுக்கியரிடம் கூற வேண்டும் என்று துடிதுடித்தான். பக்குவமாகப் பேசிப் பரஞ்ஜோதியாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்; சாளுக்கியம் செல்லப் புறப்பட்டான் - அவன் மனதிலே, சொல்லொணாக் களிப்பு ஓட்டம் பெருநடையாக, குதிரைக் கொட்டில் சென்றான் - அழகியதோர் கருங் குதிரையைத் தேர்ந்தெடுத்தான் - வெற்றி வீரன் போல் அதன் மீது அமர்ந்தான். குதிரை கம்பீரமாக நடந்தது - சாளுக்கியன் காஞ்சிபுரத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தான், வெற்றிக் களிப்புடன் - பிறகு ஊரைவிட்டுக் கிளம்பினான். குதிரை வேகமாக ஓடலாயிற்று; அதைவிட வேகமாக, அவன் மனதிலே எண்ணங்கள் கிளம்பிக் கூத்தாடின. மகேந்திரனைப் பணியச் செய்தபோது புலிகேசி பெற்ற பூரிப்பை விட அதிகக் களிப்பு வில்லாளனுக்கு. தனி ஆள்! படை இல்லை! ஆனால் வெற்றி கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தான்.

வென்றேன்! வென்றேன்! கொன்றேன்! கொன்றேன் சாளுக்கியத்தை வென்ற வீரனை! வாளிழந்து, போர் ஆற்றலொழிந்து போனான்.

மன்னா! புலிகேசி! எந்த வாதாபியைக் கொளுத்திச் சாம்பலாக்கினரோ, அந்த வாதாபியிலிருந்து படை அல்ல கிளம்பினது, நான் ஒருவனே கிளம்பினேன்; வென்றேன், பழி தீர்த்துக் கொண்டேன். வாதாபியைச் சுட்டெரித்துச் சாம்பலாக்கினர்! அதை நான் கண்டேன் கண்ணெனும் புண் கொண்டு! அந்தச் சாம்பலில் ஒரு பிடி! அதே ஒரு பிடிச் சாம்பல்தான், சாளுக்கியத்திலிருந்து நான் கொண்டு வந்த, ஆயுதம்! ஆம்! பிடி சாம்பல்!

முடிவில் ஓர் பிடி சாம்பல்! அதனையே உபயோகித்தேன்; பெற்றேன் பெரும் வெற்றி! பிடி சாம்பலால், முடியுடைய மன்னரையும் மிஞ்சிய புகழ் படைத்து, இடியெனப் போர் முழக்கமிட்டு, வெற்றிக்கொடி பிடித்து உலவிய வீராதி வீரன், வாதாபியைத் தீயிட்ட தீரன், புலிகேசியைப் போரிலே வீழ்த்தி சூரன், பல்லவ சாம்ராஜ்யத்தின் வீரச் சின்னமாக விளங்கிய படைத் தலைவன் பரஞ்ஜோதியைப் படுகளத்தில் அல்ல - பாய்ந்து தாக்கி அல்ல - கூர்வாள் கொண்டு அல்ல - அவனுடைய நாட்டில், அவன் அறியா வண்ணம், ஒரு பிடி சாம்பலால் வென்றுவிட்டேன்!

அந்த வெற்றியின் தன்மை எத்தகையது? ஆஹா! எண்ணும்போதே என் உள்ளம் பூரிக்கிறது. பரஞ்ஜோதி! தமிழகம் அந்த ‘ஜோதி’யைக் காண முடியாதபடிச் செய்துவிட்டேன்.

‘பரஞ்ஜோதி’ இனி இல்லை அல்லவா! அடியார் இருப்பார்! நாயன்மாராக இருப்பார்! ஆனால் தமிழகத்தின் தலை சிறந்த படைத்தலைவன் இனி இல்லை! வாதாபிகளைத் தாக்க வரும் வீரர்கள் இல்லை - தோத்தரிக்கும் திருவாயும் கூப்பிய கரமும் இருக்கும். இருக்கட்டும் - கோயில் கட்டுபவர் கட்டட்டும் - பதிகம் பாடுவர், - சலிக்காது பாடட்டும் - ஆனால் ஒரு மாவீரனை இழப்பர்; படைத்தலைவன் இனி இரான்.

வெற்றி மாலை பூண்ட மார்பிலே இனி வெண்ணிறச் சாம்பற்பொடி! விடு கணையை! வீசு வாளை! செலுத்து தேரை! குதிரைப் படை முன்னால் பாயட்டும்! வேற்படையாளர்கள் விரைந்து வருக! என்றெல்லாம் முழக்கமிட்ட வாயிலிருந்து இனி, ‘பொன்னார் மேனியன்’ - ‘பிறவாவரம் தாரும் அடியார்க்கும் அடியேன்’ என்றெல்லாம் பஜனைப் பதங்கள்தான் வரும். வாதாபியை வென்றவனை நான் வென்றேன்! புலிகேசியைக் கொன்றவன் மீது வஞ்சம் தீர்த்துக் கொண்டேன். மாற்றார்கள் என்றால் சீற்றம் கொண்டெழுவோனை, சிவனடியாராக்கிவிட்டேன். ஒருபிடி சாம்பலால்! ஒப்பற்ற சாளுக்கிய சேனையால் சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்துவிட்டேன். அஞ்சாநெஞ்சனை அடியவனாக்கி விட்டேன்.

வாளேந்திய கரம், இனி வழியே வருகிற பண்டாரங்களின் தாள் ஏந்திடும். தோள் பலத்தால் தொலை தூரம் வரை தன் நாட்டின் கீர்த்தியை நிலை நாட்டினான். இனி நாடு, வீரம், போர், வெற்றி இவை பற்றிய சிந்தனையே இராது. சிங்கத்தைச் சிறு முயலாக்கி விட்டேன்! வீரப்பட்டயம் கட்டிய நெற்றியில் விபூதிப்பட்டை!

பரஞ்ஜோதி சிறுத்தொண்டனானான். படைத்தலைவன் பக்தனானான்; முரசு கொட்டியவன் முக்திக்கு வழி தேட முனைந்து விட்டான்; வீரக் கோட்டத்திலே இடம் பெற வேண்டியவன் வீழ்ந்து வணங்க வேண்டிய கோயிலுக்குக் குடி ஏறிவிட்டான். சாளுக்கிய நாட்டுக்குச் சண்ட மாருதமாகியவன் சரித்திரத்தில் இடம் பெறாமல், சாதுக்கள் கூட்டத்தில் ஒருவனாகி விடுகிறான்! போர்ப் பயிற்சிக்கெனத் தமிழகம் ஓர் போற்றற்குரிய கழகம் அமைத்திடின், அதிலே சாளுக்கிய நாட்டை ஜெயித்துப் புலிகேசியைக் கொன்ற மாவீரன் பரஞ்ஜோதி என்று ஓர் சிலை இராது. அது எவ்வளவு பெரிய இலாபம் நமக்கெல்லாம்.