அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

புதிய பொலிவு
1

“அம்மாடியோ...! நான் மாட்டேன். யாராச்சும் பார்த்துட்டா...?”

சாமி சாட்சியாச் சொல்றேன்...
பெத்தவங்க பெரியவங்களைக் கேட்டு முடிப்பயா, எங்கூட வந்து ‘கெக்கெபிக்கே’ன்னு கொஞ்சிகிட்டு இருந்தா...?

நானென்ன மாடப்புறவா, நீ சீட்டி அடிச்சதும் ஓடி வந்து, உன் தோளிலே தொத்திக்கிட...

சினிமா பார்த்துப் பார்த்து, நீ வேண விளையாட்டக் கத்துகிட்டே... இதோ பாரு... எனக்கு அதெல்லாம் பிடிக்காது சொல்லிட்டேன்...

ஆமா, நீ இதுவரையிலே என்னிடம் சொல்லவே இல்லையே, உனக்குப் பொரிவிளங்கா உருண்டைன்னா, ரொம்பப் பிரியமாமே... இந்தா, இரண்டுதான் மிச்சமாச்சி...

உன் கண்ணுக்கு நான் அழகுன்னா, ஊரார் அவ்வளவு பேருமா, என்னை அழகின்று சொல்லுவாங்க; குப்பி பாட்டி என்னை என்னா சொல்லும் தெரியுமா?

போடிபோடி கோணவகுடுக்காரி, எப்பப் பார்த்தாலும் தூங்கிக்கிட்டு கிடக்கறயே, பொண்களுக்கு இதுவா இலட்சணம்னு சொல்லும்...

அப்பப்பா! போதும்போதும்னு ஆயிடுது உன்னன்டெ மாட்டிட்டா.... இது என்ன கன்னமா பச்சரிசி மாங்காயா? முகத்தைப் பாரு சாமியாரு மாதிரி...! தா! ரொம்ப விளையாடாதே, வெட்கமா இருக்கு... சிரிப்பு பகீல்னு வருது... இந்தா அந்தா பக்கம் சோளக் கொல்லையிலேதான் சொக்கப்பன் இருக்கறான்... அவன் காதிலே நான் சிரிக்கிறது விழுந்தது, அவ்வளவுதான், வீட்டுக்கு வந்து கலகத்தை மூட்டி விட்டுத்தான் தூங்கப் போவான்...

உன்னை நம்பாமெ நான் வேற யாரை நம்புவேன். என் மனசிலே அந்த நம்பிக்கை இல்லைõயானா, இப்படி உங்கூடப் பழகுவனா. பேசுவனா... ஆனா, ‘எதுக்கும் ஆகவேண்டிய காரியத்தைக் காலகாலத்திலே முடிச்சுட வேணும்டி, ஆம் பிள்ளைக மனசு ஒரு வேளைபோல மறுவேளை இருக்காது... எந்தப் பாவிமகனாவது, கதைகட்டி ஊரிலே உபத்திரவத்தை மூட்டாதே முன்னமேயே, மூணுமுடி போட்டுக்கிடறதுதான் நல்லது’ன்னு இஞ்சிக் கொல்லையார் மக இருக்கா பாரு பருவதம். அவ சொல்றா...”

இப்படித்தான் பேசத் தெரிந்தது அந்த வஞ்சிக் கொடியாளுக்கு. கிராமத்துக் கட்டழகி. எனவே அவளுக்கு, ‘அன்பே! ஆருயிரே! இன்பமே! இன்னமுதே! இதய ஜோதி! என்ற முறையில் பேசத் தெரியாது. கண்ணாளா! தங்களைக் கண்டதும், கதிரவனைக் கண்ட கமலம் மலருவதுபோல என் அகமும் முகமும் ஒருசேர மலருகிறது; வீணையின் நரம்புகளை இசைவல்லான் தொட்டுத் தடவி இனிய கானத்தைப் பிறந்திடச் செய்வதுபோல, என்னைத் தொட்டிழுத்து முத்தமிட்டதும், எனக்கு வாழ்வின் கீதம் வசீகரமாகக் கேட்கிறது’ என்றெல்லாம் ‘வசனம்’ பேசத் தெரியாது; அவள் அப்படிப்பட்ட வசனங்களைச் சினிமாவில் இரண்டோர் முறை கேட்டதுண்டு – அப்போதுகூட அவள், எப்படி வெட்கத்தைவிட்டு இப்படியெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்று எண்ணிக் கொள்வாள். அவள் கல்லூரிப் பெண்ணல்ல, காதலுக்காகச் சாம்ராஜ்யங்களை இழக்கத் துணிந்தவர்கள், வாள் முனையை எதிர்தவர்கள், ஊர்ப்பகையை ஏற்றுக் கொண்டவர்கள், உருமாறிப் போனவர்கள், உன்மத்தரானவர்கள் ஆகியோர் பற்றிய கதைகளிலே துக்கப்படவும் கஷ்டப்படவும்தான் பெண் ஜென்மம் இருக்கிறது என்றுதான் தெரிந்து கொண்டிருந்தாள். மல்லிகையின் மணம், ஆகா! மனத்துக்கு அளிக்கும் இன்பத்துக்கு ஈடானது வேறேதுமில்லை என்று, காகித மலரினை முகர்ந்து கொண்டே, பேசிடும் நாடகக்காரர்போல அல்லாமலும் காதலைப் பெற்று இன்புற்று அனுபவம் பெறாமலேயே, வீட்டில் காட்டுக் கூச்சலின்றி வேறு கேளாத குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டே,காதலின் மணம், மாண்பு, மதுரம் ஆகியவை பற்றிய பேச்சோ பாட்டோ தெரிந்து கொள்ளாமலேயே, உண்மைக் காதலைப் பெற்று மகிழ்ந்தாள் – அவளுக்கு அந்த இன்பத்தை அளித்த வேலப்பன், ‘வசனம்’ கேட்டிருக்கிறானே தவிர, மனப்பாடம் செய்துகொண்டு பேசுபவனல்ல, சில சமயங்களில் ஓர் அடி இரண்டு அடி, காதல் பாட்டுப் பாடுவான், தலைப்பு ஒன்று, முடிவு மற்றொன்றாக இருக்கும்!! கொடி அறியாமல் மணம்கொண்ட மல்லிகை மலர்ந்திருப்பதுபோல் செல்லியின் உள்ளத்தில் காதல் பூத்து, மணம் பரப்பிற்று. கிராமம், எனவே யாரும் அறியார்கள் என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருந்தபோதே செல்லாயி, வேலப்பன், விஷயம் வெகுவாகவும் வேகமாகவும் பரவிக்கொண்டிருந்தது. வம்பு தும்புக்குப் போகாதவன், வருவாய் அறிந்து செலவு செய்பவர் பெரியவர்களிடம் மரியாதை காட்டுபவன், பொருளுக்காக அலையமாட்டான், இல்லை என்று எவரிடமும் கை ஏந்தவும் மாட்டான், உழைப்பான், நத்திப்பிழைக்கமாட்டான் – ஊருக்கு உபகாரம் செய்வான். பெரியதனக்காரனாகி மிரட்டமாட்டான் – என்று வேலப்பன் குணம் கிராமத்தாரால் பாராட்டப்பட்டது.

அம்மை நோய் கடுமையாகப் பரவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்திலே பாதிப் பேர்களைப் பலிவாங்கிவிட்டது – அந்தச் சமயத்தில்தான், வேலப்பனுடைய தாயும் தந்தையும் இறந்து போயினர் – ஒண்டிக் கட்டையானான் வேலப்பன்.

“இனி அவனுக்கு ஒரு கால்கட்டு ஏற்பட்டு அதன் வயித்திலே ஒரு பூவோ பிஞ்சோ முளைத்த பிறகுதான், வேலப்பனுக்கு ஒரு குடும்பம் அமைய வேண்டும்” என்று கிராமத்துக் கிழவர்கள் பேசிக் கொள்வார்கள்.

“அவனுக்கு மட்டும் தெரியாதா? தெரிஞ்சுதான் வேலப்பன், நம்ம சடையாண்டி மக இருக்காளே, செல்லி அவளைச் சுத்திச்சுத்தி வட்டமிட்டுக்கிட்டு வாரான் – என்று குறும்புத்தனமானவர்கள் பேசுவார்கள்.

“அடச்சே! இவனைப் பாரு! வயசுக் காலத்தின் இதெல்லாம் நடைபெறத்தானே செய்யும். எல்லோருமேவா, இவனைப்போல சுடுமூஞ்சிச் சுப்பனும் இருப்பானுக... ஒவ்வொருத்தரும், அந்தப் பழக்கத்திலே, ஓடி ஆடிப் பாடிக்கிட்டுத்தான் இருப்பான். பய, தப்புத்தண்டா பேர்வழி இல்லா, செல்லி இருக்காளே அவளும், சூதுவாதில்லாமே பேசிச் சிரிப்பது தவிர, பழிபாவத்துக்குப் பயந்த பொண்ணு; அப்பா! அப்பா! சடையாண்டி என்ன இலேசுப்பட்டவனா? கொஞ்சம் சந்தேகம் வந்தாலும்போதும், சீவிடுவான் தலையைச் சீவி!” என்று அனுபவமிக்க பெரியவர் கூறுவார்.

செல்லி – வேலப்பன், காதலில் கடும்புயல் ஏதும் வீசவில்லை. மூன்றாவது ‘ஆசாமி’ யாரும் குறுக்கிட அமளி மூட்டவில்லை. சடையாண்டியும் தடை காட்டவில்லை. கலியாணத்தைச் சுருக்கமாக முடித்துவிட வேண்டும், என்று வேலப்பனிடம் சடையான் ‘ஜாடைமாடை’யாகச் சொல்லியும் விட்டான். கிராமத்துக்கு ஒரு நல்ல விருந்து விசேஷம் நடத்துகிற அளவுக்குக் கொஞ்சம் ‘காசு’ சேரட்டும் என்று வேலப்பன் காத்துக் கொண்டிருந்தான். அதற்காக அவன் முன்மாதிரி யோசனைகள் செய்வதுண்டு. செல்லாயிக்கு வெள்ளைக்கல்லிலே கம்மலும், சிவப்புக் கல்லிலே மூக்குத்தியும், காலுக்கு வெள்ளியிலே கொலுசும் கழுத்துக்கு ஏதாச்சும், செய்து போட்டு, கிராமத்தானுக்கெல்லாம் ‘ஒரு வேளைச் சோறு’ போட்டுக் கலியாணத்தை ‘சம்பிரதாயமாக’ச் செய்ய வேண்டும் என்பது வேலப்பன் ஆசை.

“வேலப்போய்! உன் கண்ணாலத்திலே ஊர்கோலம் உண்டா டோய்!” என்று கேலி செய்வார்கள், ஒத்த வயதினர்; “ஆமாம்டா! செய்தா என்னடா! ஆனையிலே அம்பாரி, குதிரை மேலே மேள தாளம், பொய்க்கால் குதிரை, கூத்தாட்டம், எல்லாம்தான் நடக்கப் போவுது. பவுன், பவுனாய் விளையுது, என் கொல்லையிலே... நீங்களெல்லாம்தான், பழைய மாதிரியாகவே, காரும் சிறுமணியும் விதைத்திட்டு கிடக்கறீங்க. நான், ‘குச்சிக்கிழங்கு’ போட்டிருக்கறேன்... தங்கமாட்டம் விலை போகுது, குச்சிக்கிழங்கு தெரியுமா... பட்டணத்துச் சீமைக்கெல்லாம் வண்டி வண்டியாப் போகுது... அதிலே கிடைக்கப் போற காசைத்தான் நம்பிக்கிட்டு இருக்கறேன்... குச்சிக்கிழங்குக் காசு ஆனதும் நாள் பார்க்க வேண்டியதுதான்” என்று செல்லப்பன் உற்சாகத்துடன் கூறுவான்.

நகரத்திலே ஒரு வேலையாக வேலப்பன் போயிருந்தபோது, ‘குச்சிக்கிழங்கு’ பயிரிடுவதாலே கிடைக்கும் இலாபத்தைக் குறித்துக் கடைவீதியிலே பேசிக்கொண்டதைக் கேட்டு, பிறகு பலபேரிடம் இதைப்பற்றிய விவரம் கேட்டுத் தெரிந்து கொண்டான். பிறகு குச்சிக்கிழங்கு பயிர் வைத்தான்... யாரோ வியாபாரி, பயிர் வளமாக வந்தபோது பார்த்துவிட்டு, ‘மகசூல்’ முழுவதும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுவதாக வாக்களித்தார்; வேலப்பருக்கு அதனாலே அதிக நம்பிக்கை ஏற்பட்டது.

செல்லாயியை அவன் சந்திப்பதென்பது, மாலை வேளைகளில் யாருமறியாமல், என்கிற விதத்தில்.

கழனிப்பக்கம் இருவருக்குமே வேலை இருக்கும் – தோப்புத் துரவுக்கு இருவருமே போகவேண்டிய அவசியம் நேரிடும், அப்போதெல்லாம் சந்திப்புதான்.

“தா! செல்லாயி! வாயேன், அதோ அந்தாலே இருக்கிற திருக்குளத்தண்டே, பூ பறிச்சுத் தாரேன், தாமரைப்பூ. அழகா இருக்கும்...” என்று அவன் சில வேளைகளில் அழைப்பான். அவன் கண்கள் வேறு ஏதேதோ பேசும். செல்லாயிக்குச் சிரிப்பு வரும், கோபமும் பயமும் வந்தவள் போலாகி, “அம்மாடியோ...! நான் மாட்டேன்... யாராச்சும் பார்த்தூட்டா...?” என்று கேட்டுவிட்டு, ஓடிவிடுவாள்.

“பயங்காளிப் புள்ளே! சுத்த பயந்தாங்கொள்ளி!...” என்று கேலியாகக் கூறுவான், வேலப்பன்; கூறிக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்வான், யார் கண்ணிலாவது பட்டு விட்டோமோ என்ற பயத்தால்!!

“சாமி சாட்சியாச் சொல்றேன், அப்பாரு பேசிகிட்டு. இருந்ததை நான் என் காதாலே கேட்டேன், உனக்குத்தான் என்னைக் கட்டி வைக்கப் போறாங்க...” என்று செல்லாயி ஒருநாள், அவனுக்குத் தைரியம் அளிப்பாள்; பிறகோர் நாள், அவளே பயந்த நிலையில், ‘மூணுமுடி’ போட்டாத்தான் நல்லது என்று யாராரோ சொல்கிறார்கள் என்று கவன மூட்டுவாள்!

இதற்கிடையிலே, பொரிவிளங்காய் உருண்டைகள் அவனுக்குக் கிடைக்கும், நகக்குறி இவளுக்கு! அது அதிகம் தேவைப்படாமலே, எல்லாப் பயிரும் செழிப்பாக வளரும் கிராமமல்லவா, காதல் மட்டும் என்ன விதிவிலக்கா! கவர்ச்சியாக வளர்ந்து வந்தது.
* * *

குச்சிக்கிழங்குதான் இனி ஆகவேண்டிய காரியத்தை ஆகும்படிச் செய்யவேண்டும்...அது ஓங்கி வளர்ந்து, உருவம் பெறுவதற்கான உழைப்பினை, தட்டாமல் தயங்காமல் வேலப்பன் கொட்டினான் – பயிரும் அருமையாக வந்தது – கிழங்கும் தரம்தான் என்று தெரிந்தது – ஆனால் ‘பலன்’ எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை.

குச்சிக் கிழங்கு மூலம் தயாரான ‘சவ்வரிசி’ வங்காள நாட்டுக்கு ஏராளமாகச் சென்றுகொண்டிருந்தது–அதனாலேயே நல்ல கிராக்கி இருந்தது – விலையும் சூடு பிடித்து இருந்தது – அதனால் குச்சிக்கிழங்கு பயிர் செய்தால் கணிசமான இலாபம் கிடைத்தது.

குச்சிக்கிழங்கு கொண்டு செய்யப்படும் ‘சவ்வரிசி’ சத்தற்றது, உடலைக் கெடுக்கக் கூடியது, இனி வங்களாத்தில் அதனைக் கொண்டுவரக் கூடாது என்று, புதிதாக ஓர் உத்தரவு கிளம்பிவிட்டதாகச் சொல்லி, வியாபாரிகள், குச்சிக்கிழங்கு வாங்குவதைக் குறைத்துக்கொண்டார்கள் – பத்து மாதம் பாடு பல கொடுத்து, பிரசவத்தின்போது ஆபத்தையே உண்டாக்கி கடைசியில், வைத்தியர் உதவிபெற்று, வெளியே வந்த குழந்தை, ‘ஊமை’ என்று தெரிந்தால், தாயின் மனம் என்ன பாடுபடும்! வேலப்பன் நிலைமை அப்படியாகிவிட்டது. கண் எதிரே குழந்தை இருக்கிறது, கருவில் உருவாகியது, மெத்தக் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தது, வாரி அணைத்து, உச்சிமோந்து முத்தமிட்டு பட்ட கஷ்டம் அத்தனையும் பஞ்சாகப் பறந்ததடா பாலகனே, என்று கொஞ்சிக் குலவிய தாய், தான் பெற்ற செல்வம், ‘ஊமை’ என்று அறிந்தால், துடிதுடிக்காதிருக்க முடியுமா? வேலப்பன், குச்சுக்கிழங்கு பாங்காக வளர வளர, அதை வெற்றியுடனும் பெருமையுடனும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கிடந்தான். அவனைப் பார்த்து வேறு சிலரும் அந்தக் கிராமத்திலும் சுற்று வட்டாரத்திலும் அதே பயிர் வைத்தார்கள் – என்றாலும் வேலப்பன் கொல்லையிலே இருந்ததுதான் முதல்தரமானது என்று எல்லோருமே சொன்னார்கள்.

“விவரம் புரியாமெ, நாம எப்பவும் நெல்லு நெல்லுன்னு கட்டிக்கிட்டு அழறோம். ‘போட்டா நெல்லு போடாட்டி புல்லு’ன்னு இருந்துவிடறோம். அண்ணனேன்! நெல்லிலே கிடைக்கறதைவிட, வாழை கரும்பிலே அதிகம். வெற்றிலைக் கொடிக்காலிலே நல்ல இலாபம் கிடைக்குதாம். அதுக்கெல்லாம் பாடு அதிகம் – பலனும் அதிகம் – குச்சுகிழங்குக்குப் பலன் அதிகம், பாடு அதிகம் தேவையில்லை” என்று வேலப்பன் விவரித்தபோது, “இதெல்லாம் நமக்கு எதுக்குடா? இம்மாங் காலமா நெற்பயிர் பண்ணி பிழைச்சு வந்தமா, கிழங்கு தோண்டிக்கிட்டுக் கிடந்தமா?’என்று முதியவர்கள் பேசினர் – என்றாலும் அவர்கள்கூட கொல்லையில் குச்சுக்கிழங்குப் பயிர் நிமிர்ந்து நின்றபோது, வேலப்பனைப் புகழ்ந்தார்கள். “பய, கெட்டிக்காரன் தான். பாரேன் பயிரை; மூக்கணாங் கயிறுபோடாத காளை முறைச்சிகிட்டு நிற்குமே அதுபோல இருக்கு” என்று கூறினர்.

வேலப்பன், இந்தப் பேச்சை எல்லாம் கேட்டு, மேலும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டான். கொல்லையைச் சுற்றிப் பார்க்கும்போதெல்லாம், வேலப்பனுக்குக் கலியாணப் பந்தலே தெரிந்தது.

இவ்விதம் இன்பக் கனவு கண்டுகொண்டிருந்தவனுக்குப் பேரிடி விழுந்தது. ‘மார்க்கெட் நிலவரம்’ – குச்சிக் கிழங்குக்குக் ‘கிராக்கி’ இல்லை, வாங்குவார் இல்லை என்ற செய்தி அவனைச் செந்தேள்போல் கொட்டிற்று. முதலிலே, இது யாரோ வேண்டுமென்றே பொறாமையாலே கட்டிவிட்டது என்று எண்ணினான்; விவரம் அறிந்துவர நகரம் சென்று திரும்பிய பிறகுதான், அவனுக்கு மனமே உடைந்துவிட்டது. அங்குத் தெளிவாகவே சொன்னார்கள்; பல கிராமங்களிலே இந்தச் செய்தி தெரிந்து, விவசாயிகள் தலைமேலே கைவைத்துக் கொண்டு கிடக்கிறார்கள் என்று கூறினர். குச்சிக் கிழங்கு, உள்நாட்டிலே செலவாகக்கூடிய பண்டம் என்ற எண்ணத்திலே வெளிநாட்டுக்குக் கிழங்கு தேவையில்லையாம். என்று கூறப்பட்டது கேட்டு மெத்தக் கலங்கிப் போயினர்.

“பைத்தியக்காரப் பய! யாரோ பட்டணத்துக்காரனுக பேச்சைக் கேட்டு இவனும் கெட்டான். மத்தவங்களையும் கெடுத்துப்பூட்டன். இவன் பேச்சை நம்பி குச்சிக்கிழங்கு பயிர் வைத்தவனெல்லாம் ‘கோ’ன்னு கதறிக்கிட்டு கிடக்கிறானுங்க – இவனுக்கு என்ன ஒண்டிக்கட்டை – மற்றவங்க பலபேரு சிறுசும் பெரிசுமாசக்கணக்கிலே வைத்துக்கொண்டு கஷ்டப்படுறாங்க. இப்ப இவனா எல்லோரோட கிழங்க வாங்கிக் கொள்ளப் போகிறான்” என்று சிலர் பேசினார். வேலப்பனுக்கு ஆத்திரம் வந்தது. “நானே மனம் வேதனைப்பட்டுக் கிடக்கிறேன், இந்தப் பாவிகள் வேறு என்னை வாட்டி எடுக்கிறார்களே. சே,சே என்ற ஜென்மங்களய்யா இதுகள்” என்று முணுமுணுத்தான்.

செல்லாயி, நிலைமை அறிந்து, சிரித்துப் பேசினால் வேலப்பனுக்குக் கோபமாக இருக்கும் என்பதை எண்ணி, முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாள். சலிப்பும், சோகமும் கொண்டான். ஒவ்வோர் நாளும் உச்சிப் போதுக்குள் மடுவில் இறங்கிக் குளித்துவிடுவாள், தலையைக் கோதிக் கட்டிக்கொள்ள ‘கிழிசல்’ தெரியாமல்,சேலையைப் பக்குவமாகக் கட்டிக் கொள்வாள், தலைக்குக் காட்டுப் பூவாவது பறித்துச் சூட்டிக் கொள்வாள், கலகலவென்று சிரித்துப் பேசுவாள்.

கால் பூமியிலே ‘பாவுதா’ பார்டா அந்தக் குட்டிக்கு. நடக்கற போதே இவளை என்னமோ இந்தப் பூமி தூக்கித் தூக்கிக் குலுக்கிவிடறது போலல்லவா நடைபோடறா... நாட்டியக்காரியாட்டமா...” என்று கேலியாகப் பேசுவார்கள் செல்லாயியை; கிழங்குக்குக் கிராக்கி இல்லை என்பதாலே, வேலப்பன் விசாரப்பட்டான் – அதைக் கண்ட செல்லாயி, நாலு குழந்தைக்குத் தாயாகி, நாத்தி மாமி கொடுமையாலே நசுக்குண்டு போனவள் போலானாள்.

“அது ஒண்ணுதான் குறைச்சல். ஆமாம் எல்லாரும் நல்லவங்கதான்... அவங்க அவங்கபாடு அவங்களோடே...” என்று எதற்கும் எரிச்சலுடன் பதில் பேசுவாள். உடம்பு ‘கசகச’வென்றாகிவிட்டதே. கழுவித் தொலைப்போம் என்றுதான் மடுவில் இறங்குவாள் – முன்புபோல மகிழ்ச்சியுடன் அல்ல.

அவளுக்கு வேலப்பனைப் பார்க்கவே பயமாக இருந்தது.

என்ன வேதனைப்படுகிறானோ, எவ்வளவு கோபமாக இருக்கிறானோ, இந்த நேரத்திலே போய்ப் பேசினால், அவனுக்கு மேலும் வேதனைதான் கிளம்பும். மேலும், என்னவென்றுதான் பேசுவது; கேட்கப் போனா, கிழங்கு விலை போகாவிட்டா என்னா, கரும்பு இல்லையா புகையிலையிலே பணம் வராதா, என்றா தைரியம் பேசமுடியும். அதையே அல்லவா அவன் நம்பிக்கொண்டிருந்தான். வேறு வழி ஏது? அந்த வேதனையை மாற்றமுடியுமா? என்று எண்ணினான். இந்தச் சமயம் அடிக்கடி சென்று வேலப்பனைப் பார்ப்பதுகூடச் சரியல்லவென்று எண்ணிக் கொண்டார்.

நான் இருக்கிற இருப்புக்கு இப்ப கண்ணாலம் ஒன்னுதான் குறைச்சல். எது எப்படிப் போனாலும் என்ன, என் பின்னோடு சுத்திக்கிட்டு திரி என்கிறயா? ஓ புள்ளே, என் எதிரே நின்னுகிட்டு இப்படிப் பல்லைக் காட்டாதே. நான் இருக்கற ஆத்திரத்திலே எனக்கு அரிவா மேலேதான் கவனம் போவுது. அடி அம்மா மவராசி! கொஞ்சம் உன்னோட அலுக்குக் குலுக்கை யெல்லாம் அடக்கி வச்சிடு...” என்று ஏதாவது கோபத்திலே பேசுவான் என்ற பயம் செல்லாயிக்கு. அதனாலே, அவனை அடிக்கடி சந்திப்பதைக் குறைத்துக் கொண்டாள்; பார்க்க நேரிடும்போதும், பழகாதவள்போல கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு வந்துவிடுவாள்.

எல்லாம் இருக்கிற வரையிலேதான் மக்க மனுஷாள், சுற்றம் உறவு எல்லாம் பாரேன், இந்தச் செல்லாயியை; நளைக்கு நாலு தடவையாவது ஓடியாந்து நச்சரிப்பா, இப்ப என்னடான்னா, பாத்தும் பார்க்காத மாதியாப் போறா, பழகாதவ மாதிரியா நடந்து கொள்றா; பவுன் நகை இனிக் கிடைக்காது என்கிற நினைப்புல வேண்டா வெறுப்பாப் பேசறா. இவ்வளவுதான் இதுகளோட சுபாவம். நம்ம போறாத வேளை, இதுவும் நடக்கும் இதுக்கு மேலயும் நடக்கும்’ என்று வேலப்பன் எண்ணிக்கொண்டான், வேதனை மேலும் வளர்ந்தது.

ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக் கொள்ளாததாலேயே, சந்தேகமும் சஞ்சலமும் இருவரிடமும் வளர்ந்தது. அதிக நாட்கள் இதை நீடிக்க விடக்கூடாது, ஒரு நாளைக்கு அவளை வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாகக் கேட்டுவிட வேண்டியதுதான் என்று வேலப்பன் முடிவு செய்து, நாளைக்கு அந்த வேலைதான் முதலில் என்று எண்ணினான்; அவனை இந்த வேலையைச் செய்ய விடாமல் தடுத்திட, வேறோர் அவசர வேலை குறுக்கிட்டது.
* * *

‘ஓட்டு’ கேட்கறபோது, தினுசு தினுசான பேரிலே இங்கே வந்து, கெஞ்சிக் கூத்தாடினானுங்க, பெரிய மனுஷனுங்க, இப்ப பார்த்தாயா, கழனி காஞ்சி போனாலும், குளம் வத்திப் போனாலும், எந்தக் கஷ்டம் வந்தாலும், என்னடாப்பா கஷ்டத்துக்குக் காரணம்? நான் என்னா செய்யணும், சொல்லு? அப்படின்னு கேட்க ஒருத்தன் வந்தானா பார்த்தாயா? எல்லாம், ‘ஓட்டு’ வரைக்கும்தான், இவனுங்களோட ஒட்டு உறவு” என்று துவக்கினான் ஒருவன் – வேலப்பன் குடிசையில்.

“ஆமாம், அப்பொ, ஆயிரத்தெட்டு சிபாரிசு பேசினாங்க. கவுண்டரே கவனிச்சிக்கங்க... கோனாரே, ஓட்டுப் போட்டுக் கொடுங்க, தேவரே, என்னை உங்களுக்கு இருபது வருஷமாத் தெரியுமே, என்றெல்லாம் சொந்தம் பேசினானுங்க...”

“ஆமாண்டா விடுடா! நமக்கும் அப்ப, உச்சி குளுந்து போச்சு. இவ்வளவு பெரிய மனுஷனுங்க, நம்மைத் தேடிக்கிட்டு வரானுகன்னு, நாமும் அவனுங்களுக்காக ஓடி ஆடி வேலை செய்தோம்... ‘ஓட்டு’ போட்டா, ஊர் க்ஷேமமா இருக்கப் பாடுபடுவீங்கிளா, எப்படிச் செய்யப் போறிங்கன்னு ஒரு பேச்சு கேட்டமா? நம்ம ஜாதிக்காரன், நம்ம பக்கத்துக்காரன், என்று எதை எதையோ நம்பினமே தவிர, நாணயமானவனா, யோக்கியமானவனா, நல்லபடி உழைச்சி ஊருக்கு உபகாரம் செய்யப் போறவனா என்கிற எதைப்பற்றியும் யோசிக்கலே. மகாத்துமா தெரியுமேலேன்னு கேட்டான், ஆமா அவரு என்னங்க, கடவுளோட அவதாரம்னு கைகூப்பினோம், மத்த எதையும் யோசிக்கலே...”

“ஏன். யோசிக்கலை! நம்ம காளியாத்தா கோவில் கோபுரத்துக்குக் கலசம் வேணுமுன்னு கேட்டமே...”

“அட, அது ஒரு பிரமாதம்... ஐம்பதோ நூறோ ஆகப் போவுது... அவனுக, என்னதான் வேணும், சொல்லுங்க, இதிலே என்ன தப்புங்க, என்னாலானதை நான் செய்யணும்னு எனக்கு ஓர் ஆசை, வேறே ஒண்ணுமில்லே, அப்படி இப்படின்னு சொல்லவே, சரி, எதையோ ஒண்ணு கேட்டு வைப்பமேன்னு, ‘கலசம்’ வேணும்னு கேட்டம்... இது ஒரு பெரிய தப்பா?”

“வீண் விவகாரத்தை விட்டுத் தொலைங்கப்பா, தும்பை விட்டுப் போட்டு, வாலை பிடிக்கறது நம்ம பழக்கமாப் போயிட்டுது. அவனுங்க, சமயத்திலே காலைப் பிடி, தீர்ந்து போனதும் தலையைப் பிடி என்கிற வித்தையிலே கைதேர்ந்தவங்க. அது கிடக்கட்டும். இப்ப என்ன செய்யறது, சொல்லுங்க. குச்சிக்கிழங்கு விலை போலலேன்னா, நம்ம பக்கத்திலே வேணகுடி பாழாயிடும்... இதை என்ன செய்யறது, சொல்லுங்க.’

“அழுகிற புள்ளெக்குத்தானே பால் கிடைக்கும்....”

“அட அதான் கேட்கறேன், எங்கே போயி அழுகறது, என்னா சொல்லி அழுகறதுன்னு...”

“மந்திரிகிட்ட போகலாம் என்கிறாங்க...”

“யாரு? நாமா? மந்திரிகிட்டவா? மடைப்பய மகன்! அவனுங்க மந்திரியாவதற்கு முன்னே போனால் பார்த்திருக்க முடியும் – இப்பத்தான் மந்திரி ஆயிட்டாங்களே, இப்ப எப்படிப் பார்க்க முடியும்?”

“அழைச்சிகிட்டுப் போறேன், ஊருக்கு ஒருத்தர் இரண்டுபேரா, சேர்ந்து, ஒரு கமிட்டி போட்டா, போய்ப் பார்க்கலாம்னு...”

“யாரு நம்ம கொடிமரத்தான் சொல்றானா...?”

“ஆமாம். அவன் அடிக்கடி போய்ப் பார்க்கறானே மந்திரியை”

“சரி, அதுக்கு என்ன செய்யணுமாம்?”

“அட, இதெப்போயி, கொடிமரத்தானையேதான் கேக்கறதா? நமக்குப் புரியலியா? நாம என்ன அவனோட கஷ்டத்துக்கு, ஏதாச்சும் நம்மாலே ஆகிற சகாயத்தைச் செய்யவா, மாட்டோம்...”

“இப்ப, எல்லா மந்திரிகளும், கவர்னர்கூட, ஒரு பெரிய திருவிழாவுக்குக்கூடப் போறாங்களாம் அங்கேயே போய்ப் பார்த்துடலாம்னு, கொடிமரத்தான் யோசனை சொல்றான்... அவனும் நாம ஒரு நாலு பேருமாய்ப் போய் வாரச் செலவுக்கு, மகாநாட்டுக்கு டிக்கட்டு, சாப்பாட்டுச் செலவு, மாலை மரியாதைச் செலவு, எல்லாம் சேர்ந்து, நூறு நூத்திஐம்பதுக்கு மேலே பிடிக்காது என்கிறான். இதல்லாமபடிக்கு நாமெல்லாம் ஆளுக்குக் கீழுக்கு ஒண்ணு மேலுக்கு ஒண்ணு கதர் துணி வாங்கிக்கிடணுமாம் – மந்திரிகளோட மகாநாட்டிலே கதரோட போனாதான் நம்ம பேச்சை, காதுகொடுத்துக் கேட்பாங்களாம்...”

“கொடிமரத்தான் சொல்றானா?”

“ஆமாம்.”