அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

புதிய பொலிவு
2

கொடிமரத்தான் வேலப்பன் தலைமையிலே கிளம்பிய ‘கமிட்டி’யைக் கோவைக்கு அழைத்துச் சென்றான், எல்லா மந்திரிகளையும் காட்டினான், நூறு கெஜ தூரத்தில் இவர்களை நிறுத்தி வைத்து.

“என்னை ‘நீராகாரம்’ இருந்தாக்கொடு கவுண்டரய்யா! என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவர் தாம்பா, அதோ, மேசையை அடித்துப் பேசறாரே அந்த மந்திரி என்று கமிட்டியில் ஒருவர் சொன்னார்.

“இம்மாந் தொலைவிலே இருந்து இவங்களைத் ‘தரிசனம்’ செய்தூட்டுப் போகவா, கொள்ளைப் பணத்துக்கு, வேட்டு வைச்சிருக்கான் கொடிமரத்தான்” என்று கமிட்டியிலே இருந்த ஒரு கோபக்காரர் கேட்டார்.

மந்திரி பேசிக்கொண்டிருந்தார் – பேச்சு என்று கூறுவது பொறுத்தமல்ல – மிரட்டிக் கொண்டிருந்தார்.

“நம்முடைய ஜனங்களுக்கே ஒரு கெட்ட சுபாவம்; எப்போதும் ஏதாவது ஒரு குறையை எடுத்துக் கூறிக்கொண்டு மூக்காலே அழுதுகொண்டு கிடப்பார்கள். அது இல்லை இது இல்லை; இதைக் கொடு, அதைக் கொடு, என்று கேட்டுக் கேட்டு, ஆட்சியிலே இருப்பவர்களைத் தொல்லைப்படுத்தியபடி இருக்கிறார்கள். இது பாரதத்தின் பண்பு அல்ல... இதை நம்முடைய தலைவர்கள் பல தடவை எடுத்துச் சொல்லியும் வருகிறார்கள். வெற்றிலைக் கொடிக்காலிலே பூச்சி வந்து விட்டது, சாமி! எங்களைக் காப்பாற்றவேணும் என்று போன வாரத்திலே ஒரு பத்து பேர் என்னை வந்து கேட்டார்கள் (சிரிப்பு) சிரிக்காதீர்கள். நாடு எவ்வளவு கெட்டு வருகிறது. நம்முடைய ஜனங்களுடைய புத்தி எப்படி மட்டமாகிக் கொண்டு போகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். இப்படிப்பட்டவர்களைப் பற்றித்தான் நமது தேசிய மகாகவி, சுப்ரமணிய பாரதி ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், நெஞ்சு பொறுக்குதில்லையே; என்று பாடினார். எனக்கு எதுவும் தெரியாது. மாலையிலே அருமையாகப் பாடப் போகிறார்கள் ஸ்ரீமதி பட்டம்மாள். கேளுங்கள். பூச்சி வந்துவிட்டது, காப்பாற்றுங்கள் என்று என்னிடம் வந்து அழுதால் நான் என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள்? (மீண்டும் சிரிப்பு) பூச்சிகளை ஒன்றுவிடாமல் பிடித்து நசுக்கிப் போடவா? (பலத்த சிரிப்பு) மந்திரியின் வேலை இதுதானா? கரும்பு காய்ந்து போகிறது, கடலைக் கொட்டை கெட்டுப் போகிறது, இரும்பு கிடைக்கவில்லை. நெசவு நடக்கவில்லை. வாழை சரிந்து விட்டது. வரகரிசி முளைக்கவில்லை என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி மூக்கால் அழுது கொண்டிருந்தால் நாட்டிலே சந்தோஷம் எப்படி ஏற்படும்? இப்படித் தொல்லை கொடுத்தும் நாங்கள் ஆட்சியை நடத்த நேரம் எப்படிக் கிடைக்கும். (ஒரு சீட்டு தரப்படுகிறது. அதைப் படித்துவிட்டு) இதோ பார்த்தீர்களா, புதிதாக ஓர் அழுகுரல். குச்சிக் கிழங்குகளுக்கு மார்க்கெட் இல்லையாம்! (சிரிப்பு) உடனே நிவாரணம் அளிக்கவும் என்று எழுதி இருக்கிறார், ஓர் அன்பர். என்ன நிவாரணம் அளிக்கச் சொல்கிறாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்! குச்சிக்கிழங்குக்கு மார்க்கெட் இல்லை என்றால், நான் என்ன செய்ய வேண்டும் என்கிறார்? கூடையிலே வைத்துக்கொண்டு, தெருத் தெருவாகச் சென்று குச்சுக் கிழங்கோ! குச்சிக்கிழங்கு! என்று விற்கச் சொல்கிறாரா? (பலத்த கைத்தட்டல்; சிரிப்பு)...”

“அடச்சே! எழுந்திருங்கடா, போவோம். மகாப் பெரிய மனுஷங்க....” என்று கோபமாகக் கூறிக்கொண்டே பெரியவர் எழுந்தார்; ‘கமிட்டி’ அவ்வளவும் கொட்டகையைவிட்டு வெளியேறிவிட்டது; கொடிமரத்தான் பின்னோடு ஓடிந்தான்.

“ஏன்?ஏன்? எங்கே கிளம்பிட்டீங்க?”

“எங்கேயா? கூடை வாங்கிகிட்டு வந்து, உன்னோட தலைவன் தலையிலே கவிழ்க்க. வெட்கமில்லாமெ எங்களாண்டை பேச வேற வந்துட்டய்யா...?”

“என்னங்க இது, எதுக்கு இவ்வளவு கோவம்?”

“கோவம் வரலாமா, பாவம்! அங்கே வாரி வாரிக் கொட்டறானே ஒரு புத்திசாலி, கருணையை; அதைப் பார்த்துமா கோவம் வரலாமான்னு கேட்கறே! ஆகவேண்டிய காரியம் ஆயிடிச்சி, இனி நாம அடிச்சவரையிலே இலாபம்னு எண்ணிக்கிட்டு, அந்த மனுஷன், ஆகாசத்துக்கும் பூமிக்குமா, குதிச்சுக் குதிச்சுப் பேசறானே – ஜனங்க மூக்காலே அழறாங்கன்னு... இவனுக நாட்டை நடத்தற நடப்புக்கு, ஜனங்க அழாமெ, இவனுங்க எதிரே வந்து டான்சு ஆடுவாங்க, டான்சு... என்னா எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசறான் அந்த மனுஷன். கஷ்டப்படறம், அதைச் சொல்லி, ஐயா! அப்பான்னு! வேண்டிக்கொள்கிறோம்.... அதைக் கேக்கப் பொறுக்கலியாமே இவருக்கு. குச்சிக்கிழங்குக்கு மார்க்கட்டு இல்லையானா, நான் என்ன செய்ய, கூடையிலே வைச்சிக்கிட்டு விற்கவான்னு கேட்கறானே, இதுவாய்யா ஒரு மந்திரி பேசற மரியாதையான பேச்சு. குத்தல் பேச்சு இல்லியா அது. அவனவன் கும்பி காயுதேன்னு கஷ்டப்பட்டுக்கிட்டு, இவனுங்ககிட்டத்தானே அதிகாரம் இருக்குது, போயி நம்மோட குறையைச் சொல்லுவோம்னு வந்தா, கூடையிலே வைச்சிக்கிட்டு விற்கவான்னு கேலி பேசறாரு... பெரிய குபேரரு! வித்தா என்னவாம்! தலையிலே கூடையைத் தூக்கி வைச்சா, பூமி பொளந்துடுமா, இல்லை, இவரோட, மண்டை வெடிச்சுடுமா... பேசறான் பார், மகா பெரிய மேதாவிங்கன்னு நினைச்சுகிட்டு. போன வருஷம் நான் என் கண்ணாலே பார்த்தனே, நெசவுக்காரனுக கஷ்டப்படறாங்கன்னு சொல்லி, கைத்தறித் துணிமூட்டையைத் தூக்கித் தோளிலே போட்டுக்கிட்டு தெருத்தெருவா போய் வித்தானுங்களே, இந்தக் கழகத்துக்காரனுங்க... கௌரவமா போயிடிச்சி... மக்களோட கஷ்டத்தை உணர்ந்த மகராஜனுகன்னு ஏழை எளிய வங்க வரவேத்தானுங்க... இவர் என்னடான்னா, கிண்டல் பேசறாரு, கிண்டல்! கூடையைத் தூக்கினதே இல்லை... பொறக்கறப்பவே ஓட்டுப் பொட்டியோட பொறந்தவரு...”

“இதோ பாருங்க... இந்த மந்திரி இப்படித்தான் எப்பவும் வம்பும் தும்பும் பேசறவரு... இவர்போலவா மத்தவங்க... போகாதிங்க... இருங்க... மத்த மந்திரிகள் பேசறதைக் கேளுங்க...”

“ஏன், இந்த ஒரு மந்திரி அபிஷேகம் பண்ணின போதாது, மத்தவர்களோட அர்ச்சனையையும் கேட்டுட்டுப் போகலாம் என்கிறயா? அடெ அப்பா! கொடிமரம், போதும்டா, எங்களுக்கு வேணுங்கிறது கிடைச்சுப் போச்சு. உனக்கு வேணுங்கிறதையும் நாங்க கொடுத்தாச்சி. எங்களை இத்தோடு விட்டுடு... மானமாவது தக்கட்டம்...”

கமிட்டியினர் கடுங்கோபத்துடன் செல்வது கண்டு கொடிமரத்தான் பயந்துபோனான் – திரும்பி அதே கிராமத்திலே நடமாடவேண்டுமே!
* * *

வேலப்பனுக்குத்தான் இதனால் அதிகச் செலவு; கிழங்கு ‘கால்வாசி’ விலைக்குக் கூடப் போகவில்லை. ‘முட்டுவழி’ கட்டி வரவில்லை. கிழங்குப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க எடுத்துக்கொண்ட முயற்சியால் கடன் வேறு; வேலப்பன் கலியாணத்தைப் பற்றிய எண்ணத்தையே விரட்டி அடித்தான்; செல்லாயியால் கண்ணீர் சுரப்பதைத் தடுக்க முடியவில்லை; கன்னம் அந்த முத்துக்களைத் தாங்கிக்கொள்ள மனமின்றி, நெஞ்சிலிருந்து கிளம்பியவை அங்கேயே போய்ச் சேரட்டும் என்று அனுப்பிவிட்டது.

“வேலப்பா! ஏண்டாப்பா! இதுக்கெல்லாமா, மனசைத் தளர விட்டுவிடறது, இதுவரையிலே நான் இதுபோல எத்தனை கஷ்டத்தைத் தாங்கிகிட்டேன், காஞ்சிருக்கும், மழையாப் பொழிஞ்சி அழிச்சி இருக்கும், மாடுகண்ணு ‘கோமாரி’யிலே செத்திருக்கும், மனுஷாளுகளே மாண்டு போயிருப்பாங்க. பலா மாதிரி நோயாலே... அதுக்காக இப்படியா, மனசு ஒடிஞ்சி போயிட்டேன். பைத்தியக்காரப்புள்ளே! போயி! காரியத்தைப் பாரு. இந்தத் தடவை இல்லாட்டா, அடுத்த வருஷம் நல்லது ஏற்படுது, என்னா இப்ப? உனக்கு என்னடா குறைச்சல்! எனக்கு இந்தத் தடவை ‘சோளம்’ நல்லபடி இருக்குது – போதுமே நமக்கு” என்று சடையாண்டி பலமுறை ஆறுதல் கூறியும், வேலப்பனுக்குத் திருப்தி ஏற்படவில்லை; விசாரம் அவனை வாட்டியபடி இருந்தது. காரணமின்றிக் கோபம் வரும்; கண்டவருடன் வம்புக்குப் போகத்தோன்றும்; மாடு கன்றுகள் கூட அவன் கோபத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டி வந்தது. செல்லிக்கு அவனைப் பார்க்கும்போது நடுக்கமே ஏற்படும் – சுட்டுத் தள்ளிவிடுவது போலப் பார்க்கிறான்!!

“சுத்தமாக் கழுவிடணும், தெரியுதா... துளிசேறு இருக்கப்படாது...” என்று கூறி, மோட்டார் ஓட்டிக் கொண்டு வந்தவன் எட்டணாவைக் கொடுத்தான், பொடிப்பயலிடம்; அவன் அந்த மோட்டாரை மிகச் சுத்தமாகக் கழுவித்துடைத்துக் கொண்டிருந்தான். அலுப்பினாலே, மரத்தடியில் துண்டு விரித்துப் படுத்துத் தூங்கிவிட்டான், மோட்டார் ஓட்டிக் கொண்டுவந்தவன். அவன் விழித்தெழுந்ததும், சொல்லிவிட்டுப் போகாலாம் என்று, பொடிப் பயல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

வேலப்பன் அந்தப்பக்கம் வந்தான், காருக்குப் பக்கத்தில் சிறுவன் இருப்பதைக்கண்டு, “ஏண்டா! ராத்திரிகூடச் சாப்பிடலயே, காலயிலே எங்கே, சுத்த வந்தூட்டே, கஞ்சி கொடுக்கத் தேடினேன், காணமே... ஆமா, இது என்ன, மோடாரு... இவருயாரு, துரை, சொகமாத்தூங்கறாரு?” என்று கேட்டான்.

“பார்த்தயாண்ணேன், எட்டணா... எருமைமாடு மூணு தேச்சிக் கழுவறமாதிரிதான், இருந்திச்சி - இந்த மோடாரைக் கழுவிவிட. எட்டணா கிடைச்சுது! மந்தை எருமையை மேய்ச்சி தேய்ச்சி குளிப்பாட்டி விட்டாக் கூட, கால்காசு கிடைக்காது, இங்கே. பாரு, எட்டணா?” என்று சிறுவன் பெருமையாகச் சொன்னான்.

“ஆமாம்டா, இனி இப்படித்தான், மோட்டாரு கழுவி நீ புழைக்க வேண்டியதுதான், நானும், ஏதாவது ரயில் துடைக்கப் போகவேண்டியதுதான். வேறே புழைப்பு? அப்படியாப்பட்ட குச்சிக்கிழங்கு போட்டே கட்டிவராமே கஷ்டம் வந்துடுச்சின்னா, இனி இங்கே எதை நம்பிகிட்டுக் கிடக்கறது” என்றான் வேலப்பன்.

மரத்தடியில் படுத்துத் தூங்கிக் கொடுக்கறாங்க?” என்று கேடடான் வேலப்பன்.

‘மோடார் கார் ஒட்டுபவனுக்கு நாற்பது ஐம்பது ரூபா சம்பளம் கிடைக்கும்” என்றான், அவன்.

“பாரேண்டா, இவரு பேசற தினுசை. வகைக்கு உங்க எஜமான் எம்மாஞ் சம்பளம் கொடுக்கறார் சொல்லய்யான்னா...”

“அதுபா? எனக்கு எஜமான் இல்லையே நான் டிரைவர் இல்லா... என்னோட ‘கார்’தான் இது என்றான் அவன்.

“என்ன...? வியைõடறிங்களா...”

“இல்லேப்பா! விளையாட்டு என்ன இதிலே! கார் என்னுடையதுதான்...”

“அப்படியா... நானு... நீங்க... மரத்தடியிலே படுத்துத் தூங்கிகிட்டு இருக்கவே, டிரைவருன்னு...”

“மரத்தடி! மாந்தோப்பு! மணம்! ஏர் உழவுப் பாடல்! ஏத்தப் பாட்டு! நாத்து நடும் பெண்கள் எங்கும் பசுமை! எங்கும் புதுமணம்!...” என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டே அந்த ஆசாமி, சுற்றிலும் இருந்த காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந் தான். வேலப்பனுக்குக் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. வாழ்க்கை குன்றுகிறது இனிக் கிராமத்திலே இருந்துகொண்டு காலந் தள்ளுவது முடியாது கிராமத்தைப் பார்த்துப் பார்த்து வெறிச்சென்று கிடக்கிறது, உழைப்பது தவிர வேறொன்றும் காணோமே, பட்ட பாட்டுக்குப் பலன் கிடைக்கவில்லையே, இதைவிட்டுத் தொலைந்தால் போதும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாõன் இங்கே ஒருவர் - அவரும் இளைஞராகத்தான் இருக்கிறார் வாழ்க்கையில் வசதி உள்ளவர் - மலரே! மணமே! மடுவே! மாடே! ஏதே! எழிலே! என்று ஏதேதோ கூறி மகிழ்கிறார்!!

வேலப்பன் பெருமூச்செறிந்தான்...!

“கிராமத்துக் கவர்ச்சி, புகை கப்பிக்கொண்டு சந்தடி அதிகமாகிக் கிடக்கும் நகரத்திலே ஏது!”

“பணம் நிறைய இருக்கு அங்கே...”

“என்னமோ போங்க, வேடிக்கையாகப் பேசறிங்க! உங்களிடம் இருக்கிறது எங்களிடம் இல்லையேன்னு நாங்க கிராமத்துக்காரரு கஷ்டப்படறோம், நீங்க வேறே எதுவோ ஒண்ணு எங்களண்டை இருக்குன்னு சொல்லிப் புகழ்ந்து பேசறிங்க...”

“கண் இருக்கவேண்டியது தானப்பா, ஆனா கண்ணாலே பார்க்க, நல்ல பொருள் இருக்கவேண்டுமால்லவா? பார்க்க, பாம்பு தேளும், படுகுழியும் நெருப்புக்குண்டமும்தான் இருக்கிறது என்றால், கண் இருந்துதான் என்ன பயன்?”

“அது சரிங்க-, ஆனா, பவுன் பவுனா கொட்டி இருக்கு தினுசு தினுசா பண்டமிருக்கு, வகை வகையா அருமையான சாமான் இருக்கு, ஆனா இதை எதையும் பார்க்கக் கண் இல்லேன்னா, என்னாங்க, பிரயோசனம்?”

“ஆஹா! பாரேன், இதையே அங்கே படிப்பு இருக்கிறது புளியேப்பம் வருமளவுக்கு, ஆனால் இதோ இப்போது நீ பேசினயே, அந்தப் பக்குவம் அந்த நகைச்சுவை அறிவு இருப்பதில்லையே...”

“நீங்க யாருங்க...”

“பைத்தியக்காரன் இல்லையப்பா. இப்படிப் பேசினதாலே, உனக்கு இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கும், நான் பைத்தியம் பிடித்தவனல்ல, கிராம்த்திடம் எனக்கு அவ்வளவு பாசம், மதிப்பு, மோகம் என்று கூடச் சொல்லலாம். பத்து நாளைக்கு ஒருதடவையாவது, ஏதாவது ஒரு கிராமம் சென்று, அங்கே உள்ள காட்சிகளைப் பார்த்தால் தான் என்மனத்திலே, ஆயாசம், அலுப்பு எல்லாம் போகும், ஒரு புதுத்தெம்பு ஏற்படும்.”

“அப்படி ஒரு பழக்கமா உங்களுக்கு... எங்களுக்கு ஒரு ஆறுமாசத்துக்கு ஒரு தடவையாவது, ‘டவுன்’ பக்கம்போயி, பளபள விளக்கு, பலவர்ண ஜொலிப்பு சினிமா, பஜாரு, இதை எல்லாம் பார்த்தாத்தான், ஒருமாதிரி தெம்பு... ஆனா, அதுக்குக் கொஞ்சம் காசு செலவாகும்... அதுதானே இங்கே கிடைக்கறதில்லை... ஆசையிலே மண் விழுந்துடுது அப்போ பார்க்கப்போ...”

மோட்டார் புறப்பட்டுவிட்டது - வேலப்பனுடைய மனம் அந்த ‘மோட்டாருடன்’ சென்றுவிட்டது; உடல் மட்டும்தான் கிராமத்தில் உலவிக்கொண்டிருந்தது.

அதுவும் கொஞ்சநாள்தான். வேலப்பன், ‘டவுன்’ வாசியாகிவிட்டான் - நிலத்தை யாருக்கோ கொடுத்து விட்டு, கடனைக் கட்டிவிட்டு, கையில் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு சென்றான். இதை வைத்து ஏதாவது தொழில் செய்யவேண்டும், வியாபாரம் நடத்த வேண்டும் என்று பலமாதிரி திட்டங்கள் மனத்தில். நிலம் கைமாற முடிந்தது, செல்லத்தின் மனம்? படாதபாடுபட்டது.

மடியிலே நாலு நூறு ரூபாயுடன் டவுனில் நடமாடியபோது, வேலப்பனுக்கு எப்போதும் ஏற்படாத ஒரு தெம்பும் தைரியமும் வந்தது; கடைவீதியிலே உலவும்போது அவன் கண்களிலே நம்பிக்கை ஒளிவிடும். சின்னக் கடையாக ஆரம்பித்து, சாமார்த்தியமாக வியாபாரத்தை நடத்தித்தானே, இவர்களிலே பலர், பெரிய கடைகள் வைத்துக்கொண்டு பணம் சேர்க்க முடிந்தது. நாம் ஏன் இப்படிச் செய்யக் கூடாது? ஏன் நம்மாலே முடியாது? என்று எண்ணிக் கொள்வான். அவன் உள்ளத்தில் ஓராயிரம் யோசனைகள் தோன்றித் தோன்றி ஒன்றோடொன்று மோதுவதாலே சில நொறுங்கிப்போயின, யோசனைகள் குழம்பி விட்டன; யாராவது தக்கபடி யோசனை சொன்னாலும் மட்டுமே நல்லது, என்று எண்ணிக் கொண்டான்.

‘டவுன்’ இதற்கா, ஆளை வைத்துக்கொண்டில்லை? இதையே பெரிய தொழிலாகக் கொண்டவர்களை, அவன் தெரிந்து கொண்டதில்லை - அவனாலே கண்டுபிடிக்க முடியவில்லை - இவனைக் கண்டுகொள்ளவா அவர்களால் முடியாது. முதலில் மோப்பம் பிடித்தவன், முத்தையன் - மூலைக் கடை முத்தையன் - என்பது அவனுக்குப் பட்டப் பெயர்! ஆனால், அவனுக்குக் ‘கடை’ கிடையாது; மூலைக் கடை, மூசா ராவுத்தருடையது; அங்கு எப்போதும் வட்டமிட்டபடி இருப்பான்; அதனால், அந்த வட்டாரத்தினர், அவனுக்கு மூலைக் கடை முத்தையன் என்று பெயரிட்டனர்.

முத்தையன் வழக்கப்படி நாலு நட்சத்திர பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு, புதுவியாபாரத் திட்டமொன்றை, மூசாராவுத்தருக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.

“பத்து இருக்குமேல்லோ ராவுத்தரே வருஷம் நீ இங்கே வந்து? என்ன செய்திருக்கே? இதுவரையிலே! பத்துப் பவுனில் நகை செய்தானே, அது தானே...”

“அதுமட்டும் இப்ப இருக்குதா? பள்ளிக்கூடம் படிக்குது...”

“ஆமாம் மறந்துட்டேன்... இந்த ஆனைமார்க் அல்வாப் பொட்டலம் வாங்கி, எல்லாம் நாத்தமடிச்சி போயி, சாக்கடையிலே வாரிகொட்டிவிட்டயே, அதிலே வந்த நஷ்டத்துக்குப் போய்விட்டதில்லை, மறந்தூட்டேன். உனக்கு எங்கேய்யா, நம்ம பேச்சு ஏறுது? எந்தெந்தப் பயலோ புழைக்கிறான், நான் சொல்ற ஏற்பாட்டைக் கச்சிதமாச் செய்து, நமக்கு வேண்டிய மனஷராச்சேன்னு நான், உன்கிட்டே ஒவ்வொரு பிளானையும் சொல்லிகிட்டுத்தான் வர்றேன், கேட்டாத்தானே.”
“ஏம்பா! நீ சொல்கிறபோது ‘ஜோரா’த்தான் இருக்கு, திட்டம் பிற்பாடு யோசிக்கறப்போ, பயம் ஏற்படுதே, புதுவெள்ளம் வந்து பழையவெள்ளைத்தை அடிச்சிக்கிட்டுப் போவுது என்பார்களே, அதுபோல, புதுசா ஏதாச்சும் செய்ய ஆரம்பிச்சி உள்ளதும் போயிட்டா என்னா செய்யறது என்கிற திகில்தான்...”

“உனக்குக் கொடுத்து வைக்கலேன்னு சொல்லு. கோழி அடைக்காக்கற மாதிரியா, உனக்கு இந்தப் பெஞ்சிலே உட்கார்ந்து, உட்கார்ந்து பழக்கமாயிட்டுது... வேறே யோசனை உதிக்கறதில்லே...”
வேலப்பன், தன்வேட்டியும் சட்டையும் அழுக்காகி விட்டதால்; வெளுக்க, ‘சோப்’ வாங்குவதற்காக வந்தான்; அவன் இலவசமாகத் தங்கியிருந்த இருளப்பன் மில்லில் தொழிலாளி, ஆறு குடித்தனத்துக்கு நடுவில் இருந்து வந்தான் - குளிக்க, துணி துவைக்க பொதுக் குழாய்தான் வேலப்பனுக்கு.

“சோப்புக் கட்டி ஒண்ணு”

“யாரடா, தம்பி! புதுசா இருக்கே? நீ, ஒரு சோப்புக் கட்டி கேட்கிறபோதே எனக்குப் புரிஞ்சுப் போச்சு. நீ டவுனுக்குப் புதுசு என்பது. எந்த ஊரு” என்று மூசா அல்ல, முத்தையன் கேட்டான் - கேட்டுவிட்டு, மூணுகட்டி கொண்ட பாக்கெட்டு நாலணா விலை - ஒரு கட்டியா வாங்கினா ஒண்ணரை அணா ஆகுது, பாக்கெட்டா வாங்கினா இலாபமாச்சே - அது கூடத் தெரியாதவனா இருப்பதைப் பார்த்துத்தான் நீ டவுனுக்குப் புதுசுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்” என்று முத்தையன் விளக்கம் கொடுத்தான் - மூசா ஒரு பாக்கெட் கொடுத்தார் - பணம் கொடுத்தான் வேலப்பன். புத்தியை முத்தையனிடம் பறி கொடுத்தான்.

மாதம் மூன்று ஆவதற்குள் ஆறுவகையான ‘தொழில்’ செய்தாகிவிட்டது - அத்தர் வியாபாரத்தில் தொடங்கி வத்தல் வியாபாரம் வரையிலே நடந்தது - பணம் மிச்சம் பத்துப் பதினைந்து என்ற அளவு வந்த பிறகுதான், மறுபடி மூசா ராவுத் தருக்கு யோசனை கூறிக்கொண்டு நாலுநட்சத்திர பீடி பிடிக்க மீண்டும் சென்றான் முத்தையன்.
* * *

அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தா இப்ப ஏன் அலைந்து திரியவேண்டி இருக்குது... இதோ பார் வேலப்பா! நானும் டவுனுக்கு வந்த புதுசிலே, மில்லுக்குப் போக மனம் வரவில்லை - பல்பொடி வியாபாரம், பால் வியாபாரம் எல்லாம் ஒரு மூச்சுப் பார்த்து விட்டு பிறகுதான், வயித்துக்கு கிடைச்சாப் போதும்னு, மில்லுக்குப் போனேன். நீ இன்னமும், ‘கனா’ கண்டுசிட்டே இருக்கறே. எப்படி மாறிப் போயிருக்கறே தெரியுமா? துரும்பா இளைச்சிப் போயிருக்கறே. எங்கே சாப்பிடறயோ, எப்போ சாப்படறயோ, இப்படி இளைச்சிப் போயிட்டே...”

“அதெல்லாம் ஒண்ணுமில்லே நமக்கு, எதைச் செய்தா பணம் கிடைக்கும்னு கண்டறியற புத்தி இல்லே... பணம் சம்பாதிக்கிறாங்கன்னா, அவங்களுக்குச் சூட்சமபுத்தி இருக்கு, சுறுசுறுப்பு இருக்கு... நம்ம புத்தியைச் சொல்லு, ஒரே மந்தம்...”

“போடா, போ! எங்க மில்லுக்கு ஒருத்தன் வர்றான், முதலாளிகிட்டப் பேசறதுக்கு, எப்பவாவது, பெரிய பொதியன் - முகத்தைப் பார்த்தாலே முழு மூடம்னு தெரியும் - அவன் எவ்வளவு இலட்சம் சம்பாரிச்சு இருக்கான் தெரியுமா? ஐஞ்சாறு இலட்சம் இருக்கும்னு சொல்றாங்க... எல்லாம் பிராந்தி விஸ்கி வித்துத்தான்... இதிலே புத்திசாலித்தனம் என்ன தேவைப்படு தாம்! குடிக்கிறவனுங்க, கண்ணு மண்ணு தெரியாமெ விலை கொடுக்கறானுங்க; போதை, வெறி இதனாலே, இலாபம் மத்த வியாபாரத்தைக் காட்டிலும் அதிகமா வருது, குவியுது. மத்தவனோட முட்டாத் தனத்தாலே இலாபம் வந்ததே தவிர, இவானோட புத்திசாலித்தனத்தாலே என்ன இருக்குதாம் அவனைப் பள்ளிக்கூடத்திலே, சுத்த மக்குன்னு சொல்லியே துரத்திவிட்டாராம், வாத்தியாரு - இப்ப இவனோட வாடகைக் கணக்கு எழுதிப்பிழைக்கறாரு - பெரிய அறிவாளின்னு சொல்றாங்க அந்த ஆசாமியை...”

“அதுசரி, இப்பத்தான் மதுவிலக்கு இருக்கே...”

“ஆமாம், மதுவிலக்கு இருக்குது, கடை இருக்கே விற்கக் கூடாது, அவ்வளவு தானே...!

“அப்படின்னா...?”

“இப்ப ‘கடை’க்கு மனஷாள் போறதில்லை ‘கடை’ மனஷாளைத் தேடிக்கிட்டுப் போகுது! திருட்டு வியாபாரம் நடக்குது. முன்னாலே பகிரங்கமா வியாபாரம் செய்தான், இப்ப, அதுவே, இரகசியமா நடக்குது, இப்பத்தான் முன்னையைப் போல மூணு மடங்கு இலாபம். எங்க மில்காரன்கிட்ட அவன் வாரானே, எதுக்கு? எல்லாம் இதுதான்.”

“அப்படியா சமாச்சாரம். ஆனா அதெல்லாம் பெரிய இடத்திலே... தலைகாஞ்சதுக எங்கேயிருந்து வாங்கப் போகுதுங்க... அவங்களைப் பொறுத்தவரையிலே மதுவிலக்கு நிஜமாத்தான் இருக்கு...”
“அதுவும் தப்புதான், அவங்கமட்டும் என்னவாம்? பொதியன் பாட்டில் சரக்கு விற்கிறான், மத்த மட்டம் விற்கறான்...”

“மட்டம்....?”

“காச்சினதுடா! இப்ப அந்த வியாபாரம் தான் கனஜோர்... நானே மாசத்திலே ஓர் அஞ்சு பத்து அதுக்குத் தொலைக்கறேன்...”
“அடப்பாவி...!”