அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

புதிய பொலிவு
3

“என்ன நய்னா கவனிக்காமலே போறே? என்ன தான் வாழ்வு ஒசந்துட்டாலும் இப்படி நட்டுப் பொட்டிட்டுக்கக் கூடாது...” என்று ஆரம்பித்த மூலைக்கடை முத்தையன், “அதுக்கென்ன அண்ணேன்!”

ஆசாமி ‘டாப்’ திறந்துடறேன்... நம்மைச் சரியாவே கவனிக்கிறதில்லை... என்னடா எஜமானுக்குத்தான் உன் மேலே உசிராமேன்னு நம்ம ஜதைக்கரானுங்க பேசறானுங்க, இங்கே சரிவர நம்மைக் கவனிக்க ஆள்கிடையாது எவ்வளவு கண்ணுங் கருத்துமா நான் கவனிக்கிறேன், ஒரு காக்கா குருவிக்குத் தெரியுமா? இரகசியம்? அப்படி எல்லாம் பாடுபாடறேன், ஏழைமேலே இரக்கம் காட்டாம இருந்தா நல்லதா சொல்லுங்க” என்று கெஞ்சிக் கூத்தாடிப் பேசியதாகச் சாந்திக்கு உதவி கேட்டுப் பெறும் அளவுக்கு, வேலப்பனுடைய நிலைமை ஒரு ஆறே மாதத்தில் உயர்ந்துவிட்டது. ஆசாமியின் நடை உடைபாவனையே மாறிவிட்டது... தொழில் அவனைப் புது ஆளாக்கிவிட்டது. சுருள் மீசை - சந்தனப் பொட்டு - விரலிலே சிகரெட் டின் - இப்படிக் கோலமே மாறிவிட்டது. வேலப்பன், கள்ளச்சாராய விற்பனையில் கை தேர்ந்தவனாகிவிட்டான்; அவன் மட்டும் ‘காச்சினது’ சாப்பிடமாட்டான் நாற்பதோ ஐம்பதோ, வீசி எறிந்தால் ‘அசல்’ கிடைக்கும், விஸ்கி, பிராந்தியோ, அதைத்தான் சாப்பிடுவான் இளவட்டம், இந்தப் பசங்களுக்கு! அதைச் சாப்பிட்டுவிட்டு குடல் வெந்து சிலது சாகும் - குளறிக் குத்தாடி சிலது சிலது போலீஸிலே சிக்கிக் கொள்ளும் - வேலப்பனுக்குப் புதிய அந்தஸ்தே ஏற்பட்டு விட்டதே அந்த உலகத்தில் முதல் ‘சில்க் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டபோது அவனுக்குச் செல்லி மீது நினைவு சென்றது. அவள் கன்னமும் இந்தச் சட்டையும் உராய்ந்தால் எப்படியாகும். ஆனந்தம் என்று எண்ணிப் பார்த்தான். விதவிதமான பட்டுச் சேலைகள் புதுதினுசு ஜாக்கெட்டுகள், பவுன் நகைகள் இவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்துச் செல்லி இவற்றால் தன்னை அலங்கரித்துக் கொண்டு எதிரே நின்று கொண்டு சிரித்து பேசுவாள் - கனவில்!!

பணம் சேரச்சேர, அவனுக்குச் செல்லி என்ன நினைப்பாள், இது ஒரு பொழப்பா என்று கேவலமாக பேசுவாளோ, எந்தச் சமயத்திலே போலீஸிலே சிக்கிக் கொண்டு கம்பி எண்ண வேண்டிவருமோ, அடிமடியிலே நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வது ஒரு வாழ்வோ என்று வெறுப்போடு கேட்டபாளே என்றெல்லாம் எண்ணம் சென்றது. மொத்தமாக ஓர் ஆயிரம் சேர்ந்ததும் போதும், இத்தோடு கிராமம் போய்விடுவோம், கலியாணம் செய்து கொண்டு செல்லியுடன் ஆனந்தமாக வாழலாம் என்று தோன்றிற்று. மறுபடியும், சே! விற்று விட்டு வந்த நிலத்தை திருப்பி வாங்கலாமா அந்தக் கிராமத்திலே காலடி எடுத்து வைப்பது என்று தோன்றிற்று இன்னும் கொஞ்சம் காலம் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான். மூன்று நாலு ஏக்கர் அயன் நஞ்சை வாங்கக் கூடய அந்தஸ்து வந்தது போயிவிடலாம் என்ற எண்ணம் வந்தது! அங்கே போய் ஏறும் எருதும் துணை யென்று, மறுபடியும் முழங்காலுக்கு மேலே துணியைக் கட்டிக் கொண்டு, முண்டாசு கட்டிக்கொண்டு, உழுது கொண்டு கிடக்க வேண்டியது தானா, இனி ஏன் அந்தப் பிழைப்பு, இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு, வேறு ஒரு ‘டவுன்’ போகலாம், அங்கு நல்ல வியாபாரம் ஆரம்பித்து, நாலுபேர் மதிக்கத்தக்க மனிதனாகலாம் என்று ஆசை பிறந்தது. இப்படி ஒவ்வோர் தடவை ஆசை பிறக்கும்போதும், வேலப்பன், தன்னுடன்தான் அழைத்துக்கொண்டு சென்றான் செல்லியை - கற்பனை இரதத்தில்! செல்லியை இவன் தாராசங்கம் தமயந்தியின் நேசம் ஏற்படுகிறவரையில் மறக்கவில்லை. தாரா சங்கம் தமயந்தியுடன் ‘தொழில்’ முறையிலே தான் அவனுக்கு முதல் தொடர்பு ஏற்பட்டது. வாடிக்கையாக ‘சரக்கு’ வாங்கி வந்ததில் இருநூறு ரூபாய் அளவுக்குப் பாக்கி ஏறிவிட்டது - பணம் வருவதாகக் காணோம். மூலைக்கடை முத்தைய்யன் இதற்குள் வேலப்பனை, ‘எஜமான்’ ஆக்கிக் கொண்டிருந்தான்.

“எஜமான் சும்மாவிடக் கூடாதுங்கோ அவளை. ஆமா, பணத்தை எப்படியும் வாங்கியாகணும் நாங்க இவ்வளவு பேரு எதுக்கு இருக்கிறோம் உங்க உப்பை தின்னுவிட்டு, இந்த வேலை கூடச் செய்யாவிட்டா மனுஷ ஜென்மமா நாங்க. ஒரு உத்தரவு கொடுங்க, அவ வீட்டிலே பூந்து கலாட்டா செய்து பணத்தைக் கறந்துகிட்டு வந்து கொடுக்கிறோம்.”

“முத்தையா! அவளை நீ கண்டதுண்டமா வெட்டிப் போட்டாக்கூட, பணம் கிடைக்காது; போவுதுபோ, விட்டுத் தொலை. இனி ‘சரக்கு’ கொடுக்காதே, அவ்வளவுதான்.”

“எஜமன், இது எனக்குப் பிடிக்கலே. நீங்களா பார்த்து எத்தனையோ தான தர்மம் செய்றீங்க, அதுசரி. சிவராத்ரி உற்சவம் சிறப்பாச் செய்திங்க, ஊர்ஜனங்களெல்லாம், ‘ஐயாவோட’ தரும குணத்தைப் பாராட்டினாங்க, அது நமக்குச் சந்தோஷம் கொடுக்குது. ஆனா, பணத்தை வாங்க முடியாமெ ஏமாந்துவிட்டுப் போயிட்டாங்கன்னு ஒரு சின்ன சொல்லு கேட்கப் படாதுங்க - அது நமக்குப் பிடிக்கல்லே, சரி அவளை நாயேன்னு வேணாம், பேயேன்ன வேணாம், மிரட்டிக் கேட்கவேணாம், வேறு வகையில் அந்தப்பணம் வந்துசேர வழிசெய்யலா மேல்லோ.”

“வேறே வழி என்ன கண்டுபிடிச்சிருக்கே...”

“சரின்னு சொல்லுங்க எஜமான், அவளை உழைச்சி பணம் சம்பாரிக்க வைச்சிக் கடனைத் திருப்பிக் கட்டுடின்னு கேட்கறேன்...”

“அப்படீன்னா...?”

“அவளை ‘டிராமா’ ஆடச் சொல்றது, அதிலே பணம் வருதில்லே, நம்ம கடனை எடுத்துக்கொள்றது.”

“அவ ‘டிராமா’ நடந்தாத்தானே!”

“நாம நடத்தறது”
* * *

வேலப்பன், ‘டிராமா’ கண்ட்ராக்டரானான் - கடனை வசூலிக்கத்தான். முதல் நாடக்கதிலே ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுகட்ட மூன்று நாடகம் தேவைப்பட்டது. நாலாவது நாடகத்தின் போது, தமயந்தி “ஏதோ உங்களோட தயவு...” என்று கொஞ்சிப் பேசி, தாராசசாங்க நாடகத்திலே அவன் கண்ட அருவருப்பை ஆனந்தமாக்கிவிட்டாள்! செல்லி விடைபெற்றுக் கொண்டாள்; தமயந்தி முத்தையனுக்கு ‘அண்ணி’ ஆகிவிட்டாள்; வியாபாரஸ்தலமே தமயந்தியின் வீடு என்றாகி விட்டது. வேலப்பன், ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்தவன் என்ற அறிகுறியே மறைந்துவிட்டது எப்போதும் கண் சிவந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தமயந்தி “அவர் வேண்டா மென்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்:” என்று டிராமா காண்ட்ராக்டர்களுக்குக் கூறி, புதிய அந்தஸ்துக்குச் சென்றுவிட்டாள். ஊர்மக்களிடம் தான் அவள் முன்புபோல, தாராசசாங்கம், சாரங்கதாரா, அல்லி அர்ஜூனா, சந்திரமதி ஆகியவற்றை நடித்துக் காட்டவில்லையே தவிர, வீட்டில், எல்லாம்தான்!!

ஆறு பவுனாம்! என்று கூறி அலட்சியமாகச் செயினைத் தமயந்தியிடம் தருவான், வேலப்பன், ஆறோ, நூறோ உங்கள் அன்-புதான் எனக்குப் பெரிது இந்த நகை யாருக்கு வேண்டும்... என்று நாடகமாடாக்குறையை ஓரளவுக்கு நீக்கிக் கொள்ளும் முறையில் பேசுவாள். அட, அட, அதென்ன அப்படிப் பார்க்கறே! என்று வேலப்பன் கேட்கவேண்டிய கட்டம் நடக்கும் உஹும் என்பாள் அடி அம்மா! என்பாள், இப்படி நவரச நாடகம் நடைபெற்றபடி இருக்கும்.

தமயந்தி, நாடக வாய்ப்பும் கிடைக்காமல், நல்ல ஒரு சம்பந்தமும் கிடைக்காமல் திண்டாடியபோது, அவளை ஏறெடுத்துப் பாராமல் இருந்தவர்களும், ஏளனம் பேசியவர்
களும், வேலப்பனுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்ட பிறகு, அவளிடம் ‘ஆசை’ கொள்ள ஆரம்பித்தார்கள்.

நல்லாத்தான் இருக்காடா! நாற்பது வயசுன்னு நாம நையாண்டி செய்தா போதுமா, நேத்து சாய ரட்சை அவ, நவக்கிரகம் சுத்தறதுக்கு வந்தா கோயிலுக்கு; எப்படி இருக்கிறா தெரியுமா? இருவது இருவத்தைஞ்சி தான் மதிப்புப் போடுவாங்க வயசு - ஐம்பது அறுபதுன்னு கேட்டாலும் ஆகட்டும்னு சொல்லிப் போடுவாங்க, அப்படி இருந்தா - என்று கூறி ரசிக்க ஆரம்பித்தார்கள்.

நாடகக் காண்ட்ராக்டுகள் எடுத்து எடுத்து நொடித்துப் போனவர், பாலு வாத்தியார்; பல ஆயிரக்கணக்கிலே பணத்தை நாடகக் காண்ட்ராக்ட்டிலே பாழாக்கிவிட்ட பிறகு அவருக்குக் கிடைத்த பட்டம் அந்த வாத்தியார் என்பது.

நாட்டிலே கீர்த்தியுடன் உள்ள நடிகர்கள் ஒவ்வொருவரும், பாலு வாத்தியாரால்தான், முதலில் கைதூக்கி விடப்பட்டவர்கள் என்று பெயர் உண்டு. அவர் அந்தப் பழைய சம்பவங்களைக் கதை கதையாகச் சொல்லுவார். தன்னாலே முன்னுக்கு வந்தவன் பிறகு தன்னை மதிக்காமல் நடந்துகொண்டால், உடனே வேறு ஓர் ஆளைத் தயார்செய்து, அவனுக்கு நிறைய விளம்பரம் கொடுத்து, மெடல் கொடுத்து, மாலை கொடுத்து, போட்டிக்குக் கிளப்புவதிலிருந்து மற்றும் கொட்டகை கிடைக்காமலிருக்கும் போது எப்படித் தந்திரம் செய்து கொட்டகையைப் பெறுவது என்பது வரையிலே அவர் சுவைபட எடுத்துக்கூறுவார். இடையிடையே இருமல் வரும் அதைமட்டும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

தமயந்திக்கு வாத்தியாரிடம் மதிப்பு உண்டு.

தமயந்திக்கு, வேலப்பனிடம் தொடர்பு ஏற்பட்டதாலே ஒரு புது ‘மவுசு’ வந்திருப்பது தெரிந்து, தனக்காக ஒரே ஒரு ஸ்பெஷல் டிராமாவுக்கு மட்டும் தமயந்தி ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.”

“வாத்தியாரே! அதென்ன எனக்கு நீங்க இவ்வளவு சொல்லணுமா? முதமுதலிலே நான் மாதவி வேடம் போட்டனே, அன்னக்கி, என் காலுக்கு உங்க கையாலேதானே ‘சதங்கை’ கட்டி ஆசீர்வாதம் செய்திங்க. அதை எல்லாம் நான் எப்படி மறந்துடுவேன்.

“செய்த நன்றியை மறக்காதவர்களைத்தான் மனஷாள்னே சொல்லியிருக்கு தமயந்தி. உனக்கும் தெரியுமே. ஓரடி வீராசாமி பாடுவானே ஒரு பாட்டு கவனமில்லே, தோடியிலே,

“நன்றி செய்தாரை
என்றும் மறவாதே
நாயினும் கேடுகெட்டு
நாசமாகாதேன்னு...”

“ஆமாம். ரொம்ப நல்லாப் பாடுமே வீராசாமி இப்ப எங்கே பேரே காணோம்?”

“எப்படிப் பேர் நிலைக்கும். பாட்டுத்தான், செய்த நன்றியை மறக்காதேன்னு, செய்கை அப்படி இல்லையே. அதனாலே ஆசாமி ரொம்ப ‘டல்’லாயிட்டான் இப்பத்தான் மறுபடியும் புத்தி வந்து, காலிலே வந்து விழுந்தான், செய்ததை மறந்துடுங்கண்ணா, இப்ப நான் உன்னை ஒரு ஸ்பெஷலுக்கு வற்புறுத்தி கூப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணம். அந்தப் பயதான் ராஜபார்ட், தெரியுதா அவனை ஒரு மடக்கு மடக்கோ ணும் - ஆசாமி, அசந்து நிற்கணும்... அப்படிக் கனஜோரா இருக்கணும்...”

“உங்க ஆசீர்வாதம், ஆனா அவன் ‘தோடி’ பாடி ஜனங்களை ஏமாத்திப்போடுவான்...”

“அட, நீ, மோகனத்திலே பிடி... பய, சுருண்டு கீழே விழறான் பாரு... உனக்கு இந்த இரகசியம் தெரிஞ்சி இருக்கட்டும் - பயலுக்கு இப்ப குளறுவாயாயிட்டுது - ள வெல்லாம் ல தான்... ழாவே நுழையாது...”

“எனக்கு எப்பவுமே பயம் கிடையாதே. அப்பேர்ப்பட்ட ஆர்ப்பாட்ட ராஜபார்ட் அய்யாகுட்டியோட தூக்குத் தூக்கி போட்டு யாராலும் சமாளிக்கவே முடியாதுன்னு சொன்னாங்களே, கவனமிருக்கா வதந்தி யாரோ காட்பாடியிலே சுருளிமலை மேலே உருளும் இருளனவன்... என்கிற பாட்டுப் பாடி, ‘கள்ள பார்ட் செய்தனே...”

“பய, மூஞ்சி செத்துப் போச்சே”

“அதனாலே, எனக்கு இந்த ஓரடி, ஒன்பதடி எல்லாம் பத்திக் கவலையில்லே... இது இருக்கே, என்னோட வீட்டுக்காரு, உசிரு என்மேலே. அது வந்ததிலிருந்து நான் அய்யனார் சாட்சியா, மனசாலேகூடத் தப்பா நடந்ததில்லே. அது, டிராமாவுக்குக்கூடப் போகப்படாது - தலை இறக்கமா இருக்குதுன்னு, ஒரே பிடிவாதம் பிடிக்குது. அதைமட்டும் சரிப்படுத்தி விட்டாப் போதும், ஒரு நாலு நாளைக்குச் சாதகம், மூணுநாள் ஒத்திகை இருந்தாப் போதும்...” கொளுத்திப்பிடலாம் போ”
* * *

சரிப்படுத்த முடியவில்லை! ஸ்பெஷல் நடக்கவில்லை வாத்தியார் விரோதியானார்; போலீஸ் ‘துப்பு’ கிடைக்கப் பெற்று சுறுசுறுப்பாயிற்று. வேலப்பனுக்கு ஒரு வருடம்; தமயந்திக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்!! வாத்தியார் பழி தீர்த்துக் கொண்டார்.

“தீந்தது வாணவேடிக்கை” என்று கேலி பேசினர் ஜதைகள். திக்காலொருவராக ஓடினர் எடுபிடிகள். அவனவனிடம் அகப்பட்டதை அவனவன் சுருட்டிக் கொண்டான். கிராமத்திலே செய்தி பரவி, செல்லாளைச் செந்தேளாய்க் கொட்டிற்று - மற்றவர்களும் வருந்தினார்கள்.

சிறையிலே வேலப்பன், வெளியே சென்றபிறகு, மீண்டும் எப்படி வாழ்க்கையைத் துவக்குவது, என்பது பற்றியே எண்ணம் மனம் இடம் தரவில்லை என்றால் அவன், செல்லியைத் திருமணம் செய்து கொள்வதுபற்றி எண்ணத்தான் முடியுமா!

செல்லியின் உலகத்திலிருந்து வேறு உலகம் வந்தாகி விட்டது - சேற்றிலே விழுந்து விட்டாலும் பரவாயில்லை, மணியை எடுத்துக் கழுவிச் சுத்தமாக்கி விடலாம், மலக்குழியில் வீழ்ந்துவிட்டால்!! வேலப்பன் மலக்குழியில் வீழ்ந்துவிட்டவனாக மட்டும் தன்னை எண்ணிக் கொள்ளவில்லை, தானே மலமாகி விட்டதாகக் கூறிக்கொண்டான். எல்லா நல்லவற்றையும் பெற்றிருந்தேன், இப்போது, எல்லாக் குப்பைக் கூளமும் சேறு சகதியும் நிரம்பிய நாற்றப்பாண்டமாகி விட்டேன். செல்லியின் உலகம் வேறு - என்ற தீர்மானமான முடிவுக்கு, ‘ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை’ என்ற தீர்ப்புக் கிடைத்த அன்றே வந்து விட்டான்.

செல்லிக்கு, ‘பைத்தியம்’ பிடிக்கவில்லை - அதுதான் ஆச்சரியம். அவளுடைய மனதுக்கு இந்தச் சேதி எவ்வளவு பெரிய பேரிடி என்பதை அந்தக் கிராமம் அறியும் வேலப்பன் வேகமாகக் கெட்டு வருகிறான் என்ற செய்தி, கிடைத்த ஒவ்வோர் தடவையும், செல்லி செத்துச் செத்துப் பிழைத்து வந்தாள் - ஒரு வருடம் கடுங்காவல் என்று கேள்விப்பட்டபோது, அவளால் எதையும் சாகடிக்க முடியவில்லை - ஏற்கெனவே எல்லாம் செத்துக்கிடந்த நிலை.

சடையாண்டியும், செல்லியின் திருமணம் என்பது, இனிச் செய்து தீரவேண்டிய ஒரு கடமை, சடங்கு, ஊர் உலகத்துக்காகச் செய்தாக வேண்டிய ஏற்பாடு என்றுதான் கருத முடிந்தது. காய்ச்சல் வந்தவனுக்குத் தெரியும், வாய்க்கசப்பு இருப்பதும், எதைச் சாப்பிட்டாலும், பிடிக்காது என்பதும், என்றாலும், கஞ்சி குடித்துத் தீரவேண்டி இருக்கிறதல்லவா! செல்லிக்கும் ஒரு கலியாணம் செய்துதானே ஆகவேண்டும் என்று சடையாண்டி எண்ணியது, அதேமுறை முறையிலேதான். அவனுக்கா? எனக்கு இஷ்டமில்லை.

எனக்கு அவன் ஏற்றவனல்ல; அவனோடு என்னாலே குடித்தனம் செய்ய முடியாது. - என்று கூறி, பெற்றோரை எதிர்த்துப் போராடியாவது, தன் மனதுக்கு இசைந்தவனை, தன்னை உண்மையாகக் காதலிப்பவனைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும் என்று கூறும் நிலையில் செல்லி இல்லை.
எனக்கு அவர்தான் வேண்டும் - என்று வேலப்பன் இருந்தால்தானே போரிட! வேலப்பன் எங்கே இருக்கிறான்? சிறையிலிருந்தாலும் பரவாயில்லை, ஏதோ காலக்கோளாறு - கயவர் சூது - ஆத்திரத்தால் அறிவு இழந்த நிலை - இப்படி ஏதேனும் ஒரு சமாதானம் செய்துகொள்ள முடியும் - அவன்தான் வேண்டும் என்று வாதாட முடியும். வேலப்பன் சிறையில் இருப்பவன் மட்டுமல்ல - எல்லா நற்குணங்களும் சிதைந்துபோய் உள்ள நிலையில் அல்லவா இருக்கிறான்; சாரு போய்விட்டது, சக்கை தானே மிச்சம்!!
தன்னை மணம் செய்துகொண்டு, ‘வாழ்வு’ நடத்த முடியாத அளவுக்கு, நற்குணங்கள் யாவற்றினையும், நல்ல நினைப்பினைக்கூட நாசமாக்கிக் கொண்டுவிட்டவன், வேலப்பன். எனவே, இனி அவனை எதிர்பார்ப்பதும் வீண் - அவனுக்காக ஏங்கித் தவிப்பதும் அவசியமற்ற செயல்! உள்ளத்தில் புகுந்து எதிர்காலம் பற்றி ஏதேதோ இன்பக் கனவுகளைக் கூறி நம்பிக்கை தந்துவந்த வேலப்பன், திரும்பி வரவே போவதில்லை. ஏமாற்றம், திகைப்பு, துடிப்பு, வறுமை, ஏக்கம், பேராசை, சூது, மோசடி, காமக்களி
யாட்டம், எனும் பல காட்டுமிருகங்கள் அவனைத் தாக்கித் தாக்கி, பிய்த்துக் கடித்து மென்று தின்று, கீழே துப்பிவிட்டன. இனி அவன் யாருக்கும் பலன் இல்லை - அவன் இனி அவனாகவே இருக்க முடியாது!!

செல்லி, இனி எதற்காகவும் எதிர்பார்த்தும் காத்துக் கொண்டுமிருக்க வேண்டியதில்லை எது கிடைத்தாலும் சரி - மூன்றாம் தாரம், நாலாம் தாரமாக இருந்தாலும் சரி - மூட்டை சுமக்கும் கூலிக்காரனுக்கு மனைவியாக வேண்டியதானாலும் சரி, தயாராகி விட்டாள். சமூகம் ஆண் - பெண் கூட்டுறவு ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டிலே இருக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறது, அதை மீறுவானேன் என்ற எண்ணத்தால், திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தாள் செல்லி.

கண்ணைத் திறக்கிறா, கலம் தண்ணி விடுகிறா! அவன் வானத்தைப் பார்க்கிறான், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளுகிறான். அந்தக் குடும்பம் படுகிறபாடு, கல்நெஞ்சக் காரனையும் கதறவைத்து விடும்டாப்பா - என்று கிராமத்தார் பேசிக் கொண்டனர்.
* * *

ஓவிய நிபுணர் வடிவேலன், வழக்கப்படி பல கிராமியக் காட்சிகளைத் தீட்டிவந்ததுபோலவே, அங்கும் வந்தான் - ஒரு மரத்தடியில், உட்கார்ந்து கொண்டு, சற்றுத் தொலைவிலே ஆடுகள் மேய்ந்து கொண்டு இருப்பதை ஒப்புக்கு அவ்வப்
போது கவனித்துக் கொண்டிருந்த செல்லியைக் கண்டான், அவனுடைய கருத்து மலர்ந்தது, கவர்ச்சிகரமான கிராமியச் சூழ்நிலையில், கட்டழகு வாய்ந்த அந்தக் குமாரி, கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்த காட்சி, முதல்தரமகாக அமைந்திருந்தது. உடனே எடுத்தான் திரையையும் தீட்டுக் கோலையும், ஓவியம் உருவெடுத்தது. ஓவியக் காரனுக்காகவே உட்கார்ந்திருப்பதுபோலச் செல்லியின் நிலைமை இருந்தது; அதைச் சாதகமாக்கிகொண்டு, வேகமாக மேல்வாரியான படம் தீட்டிவிட்டான்; இனி அதற்கு உயிரூட்டும் வகையில் வேலை செய்ய வேண்டும்.

இரவு பகலென்று பாராமல், வேலை செய்தான் - ஓவியம் மிக அருமையாக அமைந்துவிட்டது. நண்பர்கள் திறமையைப் பாராட்டினர்; அவனோ, உண்மை உருவத்தை எண்ணிப் பூரித்துக்கொண்டிருந்தான்.

மேகங்கள் அலைவதுகூட அப்படியே தெரிகிறது பார், என்று ஓவியத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவர் நிபுணர்கள்.

அவனோ, அந்தக் கண்களிலே கப்பிக்கொண்டிருக்கும் துக்கத்துக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருந் தான் - கவலையுடன்.

அட, இந்த ஆட்டுக் குட்டி, கிராமத்திலே நல்ல மேய்ச்சல் கிடைப்பதால் எவ்வளவு கொழுகொழு என்று இருக்கிறது பார், என்று பாராட்டிவிட்டு, இதோ இந்தக் குட்டிக்கு மட்டுமென்ன, வெயில் என்றும் மழை என்றும் பாராமல், கால் கடுக்குமே கைவலிக்குமே என்று கவலைப்படாமல், ஓடி ஆடிப்பாடு பலபடுவதாலே, உடற்கட்டு வளமாக இருக்கிறது - இளமையும் எழிலும் சேர்ந்தஉடன், சிற்பி செதுக்கிய செப்புச்சிலை போலத் தெரிகிறது. என்று மற்றவர்கள் புகழும்போது, ஓவியனுக்கு, ஓவியத்தின் பிடியிலும் அகப்படாதிருந்த கவர்ச்சி கண்முன் தோன்றிற்று. எல்லோரும் ஓவியத்தைப் பார்த்து இவன் திறமையைப் பாராட்டிக்கொண்டிருந்தனர், அவனோ அவளையே எண்ணிக் கொண்டிருந்தான்.

கிராமங்கள் பலவற்றுக்குச் சென்று அவன் தன் கருத்திலே மகழ்வூட்டிய எத்தனையோ காட்சிகளைக் கொண்டு வந்திருக் கிறான் - பச்சைக்கிளிகள் பறந்து செல்லும் காட்சி, பால் சுவைக்கும் கன்றினை அன்புடன் தாய்ப்பசு நாவினால் தடவிக் கொடுத்திடும் காட்சி, உழவுத் தொழிலிலே உள்ள பல்வேறு வகையான காட்சிகள் கிராமியப் பெண்களின் குறும்புப் பார்வை, உழவனின் உடற்கட்டு, வெள்ளை உள்ளம் கொண்டவன், புதுமைப் பொருளை விறைத்து விறைத்துப் பார்ப்பது, ஆகிய பல காட்சிகள் அவனிடம் சிக்கி, ஓவியமாயின - ஆனால், இந்தக் கட்டழகி - திரையில் மட்டும் தீட்டி வைக்கப்பட வேண்டியவளல்ல, உள்ளத்திலே தங்கிவிடவேண்டியவள் என்று வடிவேலன் தீர்மானித்தான்.

வடிவேலன் வசதியான குடும்பத்தின் - வயதான தாயாருடன், தன் பூர்வீகச் சொத்தைப் பாழக்கிக் கொள்ளாமல் ஆடம்பரமின்றி வாழ்ந்து வந்தான். ஓவியத்திலே அவனுக்கு நிரம்ப ஆர்வம்; அதற்காக அவன் கிராமியக் காட்சிகளில் மனம் செலுத்தத் தொடங்கி, கிராமத்தினிடமே கவர்ச்சி பெற்றபோது கிராமக் கட்டழகியிடம் மனத்தைப் பறிகொடுத்தான்.

வடிவேலனுடைய தாயாருக்கு, தன் மகன் ஒரு நாகரிக நாரிமணியை மணம் செய்துகொண்டு, பார்ப்பவர்கள் பாராட்டத்தக்க விதமாக வாழவேண்டும் என்றுதான் விரும்பினார்கள். அதற்கான முயற்சிகள் பலதடவை செய்தார்கள் - எல்லாம் ஏமாற்றத்திலே தான் முடிந்தது - காரணம், அந்த அம்மையார் மீது நெடுங்காலத்து முன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட கதைதான். எனவே, வடிவேலன், கிராமத்துக் கட்டழகியைப் பெற விரும்புகிறான் என்று தெரிந்து-, முதலிலே, இதுதானா என் மகனுக்கு என்று வருத்தப் பட்டபோதிலும், ஏதோ, இதுவாவது மங்களகரமாக முடியட்டும் என்று எண்ணிக்கொண்டார்கள்; பெண் பார்த்து வரவும், ஏற்பாடுகள் செய்யவும் தானே கிளம்பினார்கள்.

இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாள், பாவம்’ இந்த இடம் பளிச்சென்று இருக்கிறது, பளபளப்பாகவும் இருக்கிறது, பணம் படைத்தவனாகவும் இருக்கிறான். கிழவனல்ல, அழகாகவும் இருக்கிறான், என்றாலும் பட்டணத்துப் படாடோபம் இல்லை, இந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு சீமாட்டிபோல வாழ்ந்தாலாவது, செல்லி இழந்துவிட்ட சந்தோஷம் ஓரளவுக்குத் திரும்பி வரக்கூடும் என்ற எண்ணத்திலே, சடையாண்டி, திருமணத்துக்குச் சம்மதமளித்தான்.

ஊரார் பார்த்துப் பரிதாபப்பட வேண்டிய நிலைமையில் அப்பா நம்மாலே ஆக்கப்பட்டுவிட்டார், என் கதி என்ன ஆகுமோ என்ற ஏக்கமே அவளை வாட்டி வதைக்கிறது, பெரிய இடத்திலே நான் வாழ்க்கைப் படுவதைக் கண்டபிறகாவது அவருடைய மனதுக்கு ஒரு சந்தோஷமும், பெருமையும் கிடைக்கட்டும், என் மருமகன் சாமான்யமானவனல்ல, இந்தக் கிராமத்தையே விலைக்கு வாங்கிவிடக்கூடிய அளவு பணம் இருக்கு, படித்திருக்கிறான், நல்ல மனம், பட்டணத்திலே அவனுக்குக் கோட்டைபோல வீடு இருக்கு, மோட்டார் கார் இருக்கு, இப்படிப்படட் இடம் கிடைச்சிருக்கு என் மகளுக்கு! அவளோட அழகுக்கும் குணத்துக்கும் இப்படிப்பட்ட அருமையான இடம்தான் வந்து வாய்க்கும். பாடுபட்டு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி என் மகளை நல்லபடியாக வளர்த்தேன் - அவ தங்கக்கட்டி குணத்திலே! அவளுக்கு இப்படிப்பட்ட இடம் தான் கிடைக்கும்!! என்று பேசிப்பேசி ஆனந்தப்படுவார், பல காலமாக மனத்தை அரித்துக் கொண்டிருந்த துக்கம் தொலையும், கடைசி காலத்திலே கண்களிலே களிப்பு இருக்கும் என்று எண்ணித்தான் செல்லி, திருமணத்துக்கு, ஆர்வத்துடன் சம்மதமளித்தாள்.