அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

புதிய பொலிவு
4

செல்லி! செல்லி! செல்லி! என்று பலவகையான, ஆனால் அன்புச் சுருதி குறையாமல், ஓயாமல் கூப்பிடுவான் வடிவேலன். திருமணத்துக்குப் பிறகு, முன்னாலே அவன் கண்டதைவிட அதிகக் கவர்ச்சி அவளிடம் இருப்பதைக் கண்டான், களிப்புற்றான்.

அவன், எத்தனையோ முறை, தன் நண்பர்களிடம் வாதாடி இருக்கிறான், கிராமத்திலே இருக்கிற கவர்ச்சி இங்கே, நகரத்திலே கிடையாது, செடி கொடியிலே இருந்து, மாடு கன்றும் சரி, மக்களும் சரி, அங்கே நான் ஒரு விதமான இயற்கை எழிலுடனும் வளத்துடனும் இருக்க முடிகிறது, ‘டவுனில்’ எல்லாம் பூச்சுத்தான், எதிலும் இயற்கை எழில் தங்கி இருப்பதில்லை. பாரேன், வேடிக்கையை, தோட்டத்தில் மலர்ச் செடி வைத்து அழகைக் காணவேண்டும் என்று இல்லாமல், வீட்டின் கூடத்தில், மேடையின் பேரில் கண்ணாடிப் பாத்திரத்தில், காகிதப் பூங்கொத்தைச் செருகி வைத்து அழகுபார்க்கிற ரசிகர்கள் தானே நாமெல்லாம், நகரத்தில். அங்கே போய்ப் பாரடா, மலர்க் குவியலை. பச்சைப்பட்டின்மீது நவரத்தினங்களைத் தூவி இருப்பது போலிருக்கும்! மலர் தூவுவார்கள், ராஜ குமாரிகள் நடந்துசெல்லும் பாதையில் என்று கதைபடிக்கிறோம், கிராமத்துப் பெண்களுக்கு, மலர்ப்பாதை தானாகவே அமைந்திருக்கிறது. அழகுக்கேற்ற ஆற்றல் கிராமத்துப் பெண்களிடம் இருக்கிறது; இங்கே, ஏழெட்டுக் கடைக்காரர் தயவு கிடைத்தால்தானே, ஓர் எழில் மங்கையைக் காணமுடியும். தையற்காரர்களின் தயவு இல்லாமல், பாதிப் பெண்கள், உருவாகவே தெரிய முடியாதே! பவுடர்காரன், எவ்வளவு ‘அகோரங்களை’ ‘அனுமதிக்கத்தக்கதுகள்’ ஆக்கிவிடு கிறான்!! இப்படித்தான் இங்கே அழகிகள் தயாரிக்கப்படுகிறார்கள். அங்கு அப்பழுக்கற்ற அழகு தானாக மலர்ந்துவிடுகிறது - காலையிலே நீராகாரம், நடுப்பகல் உணவு, இரவு, காலையிலே இருந்ததில் கொஞ்சம் - இடையிடையே மாம்பிஞ்சோ புளியம்பழமோ, பச்சரிசி மாங்காயோ பழுக்காத கொய்யாவோ, எதுவும் இல்லையானால் கதிரைக் கசக்கிப் புடைத்தெடுத்து, பால்ததும்பும் மணியோ, எதையோ ஒன்று வாயில் போட்டுக் குதப்பிக்கொண்டு, குதூகலமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் குதூகலப் பேச்சும் குறும்பான ஆடல் பாடலும், கண்டால்தானே தெரியும். இங்கே நாட்டிய ராணிகள் தங்களுக்குத் தெரிந்த தளுக்கு, குலுக்கு மினுக்கு, வெட்டு, எல்லாவற்றையும் காட்டிப் பார்க்கிறார்கள், பாம்பாக நெளிகிறார்கள், பச்சை மயில் போல ஆடுகிறார்கள்-, என்ன செய்தாலும், கவர்ச்சி கனியாது என்பதைத் தெரிந்துகொண்டு, இப்போது, கிராமிய நடனம் ஆடுகிறார்கள், பார்த்தாயா! நாடோடிப் பாடல் - கிராமிய நடனம் என்பதன்மீது இன்று அக்கறை சென்றதற்குக் காரணம், நகரத்து நாட்டியத்தையும், பட்டணத்து பாணி உள்ள பாட்டையும் மட்டும் கொண்டு நகரமக்களே, திருப்தி சொள்ளவில்லை என்பது புரிந்துவிட்டது; ஆகவேதான், கிராமிய மகிமையைக் காட்டுகிறார்கள்! எந்தக் கிராமத்திலாவது, நகரத்து நாட்டியம், பட்டணத்துப் பாட்டு நடைபெறுகிறதா? இல்லையல்லவா? - என்று ஆர்வம் பொங்கப் பொங்கப் பேசுவான்.

“ஏண்டா வடிவேலா பொதிபொதியாகக் கொட்டிக்காட்டணும் -சுருக்கமாகச் சொல்லவேணும்னா கிராமத்துக் கட்டழகியைக் கலியாணம் செய்துக்கொள்ளவும் நான் தயார்னு சொல்லேன்” என்று நண்பர்கள் கேலி பேசுவர்.

தயார்...! என்று தயா விஷயமாகப் பேசுவானேன். கிராமத்துப் பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் இது உறுதி!” என்று திட்டவட்டமாகச் கூறிவந்தான்.

“சொன்னபடியே செய்தே காட்டிவிட்டானே! செல்லி அழகான பெண்தான், ஆனா அசல் பட்டிக்காடு! முகத்திலேயே அந்த முத்திரை விழுந்திருக்கு” என்று கலியாணத்துக்குப் பிறகு கூறினர். பெருமையுடன் தன் நண்பர்களிடம், “டேய்! பார்த்தாயா, சொன்னபடி நடத்திக் காட்டினேன்” என்று பேசுவான்; “என்னமோடப்பா, நீ சந்தோஷமாக இருந்தாப் போதும்” என்று கூறினர்.

செல்லியைப் பொறுத்தமட்டில், பணிவிடை செய்வதன் மூலம் வடிவேலனை மகிழ்விக்க வேண்டும் என்பதிலே அக்கறையே இருந்தது, வேலப்பனிடம் கொண்டிருந்த ‘பிரேமை’ இனி மீண்டும் எழாது வேறோர் திசையில் செல்லாது - ஆனால் வடிவேலனிடம் நல்ல மதிப்பு இருந்தது - சிலவேளை களிலே பரிதாபமாகக்கூட இருந்தது. நாமோ பட்டிக்காடு இவரோ படித்தவர் பட்டணத்துக்காரர் - பணக்காரர் - இவர் ஏன், இந்தப் பட்டணத்திலே எத்தனையோ பேர் ராணிபோல் இருந்தும், என்னைத் தேடிக் கண்டுபிடித்தவர்களின் நடை உடை பாவனையிலே உள்ள நாகரீகத்துக்கும், என் போக்குக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே. எதைத் தொட்டாலும், சோப்புப் போட்டு கை கழுவி, உடனே ஈரம் போகத் துணியால் துடைத்துக் கொள்ளுவேன், பிறகு முந்தானையில் துடைத்துக் கொள்ளுவேன் - நான் இங்கே, இவருக்கு வந்து வாய்ப்பது என்றால், எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. களத்து மேட்டுக்கு ஓடுவதும், முழங்காலளவு சேற்றிலே இறங்கி நடப்பதும், மரத்தில் ஏறிக் காய் பறிப்பதும், மடுவில் நீந்திக் குளிப்பதுமாக இருந்து வந்த என்னை, இங்கே, காலிலே ஜாண் உயரத்தில் பூட்சும், கையிலே ஓர் அலங்காரப் பையும் கண்ணுக்குத் தங்கக் கம்பி போட்ட கண்ணாடியும் போட்டுக்கொண்டு, முக்கால் சிரிப்பும் கால் பேச்சும் கலந்தளித்துவரும் நாகரிகப் பெண்களின் நடுவில் கொண்டுவந்து ஏன் நிறுத்தினார் என்றே தெரியவில்லை. அவர் மேஜைமீது அடுக்கடுக்காகப் புத்தகங்கள் - ஒருவரியும் எனக்குப் புரியாது... ஆனால் என்னிடம் அவர் காட்டும் அன்பைக் கண்டாலோ அவருடைய காலைத் தொட்டுக் கும்பிடவேண்டும் போலத் தோன்றுகிறது. கதை ஒன்று கேட்டிருக்கிறேன் சின்ன வயசில், வேண்டுமென்றே ஒரு ராசா தன் நாட்டிலே இருந்த பிச்சைக்காரனுக்கு ஒருநாள் ராஜா வேலைகொடுத்து, அதை அவன் எப்படி எப்படி உபயோகப்படுத்துகிறான் என்று வேடிக்கைப் பார்த்தானாம் - அதுபோல இது ஒரு வேடிக்கையோ என்னவோ என்று எண்ணிக்கொண்டு, அதற்கு ஏற்றபடியே நடந்துகொண்டு வந்தாள்.
* * *

கிராமத்துக் கட்டழகியின் கவர்ச்சி, நகரத்துச் சூழ்நிலையில் மெல்ல மெல்லத் தானாகவே மாறிக் கொண்டு வரலாயிற்று; ஒருவரும் கவனிக்கக்கூட முடியவில்லை. பசுமைக்குப் பக்கத்திலே இந்த ‘இளமை’ உலாவிக் கொண்டிருந்த காட்சிக்கும் பங்காளவில், ஆள் நடமாட்டம் இல்லாமல், அந்தஸ்தைக் காட்டும் பொருள்களுக்கு மத்தியில் செல்லி இருந்த காட்சிக்கும் வித்தியாசம் காணப்பட்டது அதைக் கவனித்தறிய வடிவேலனால் முதலிலே முடியாமற் போனற்குக் காரணம், அவன் அவளிடம் சொக்கிக் கிடந்ததுதான்! மடுவிலே இறங்கி, மகிழ்ச்சியுடன் நீந்தி விளையாடுவாள், கிராமத்தில், வேறு பெண்களும் குளிக்க வருவார்கள் - விளையாட்டுப் பலமாகிவிடும், தண்ணீரை வாரி இறைத்துக் கொள்வார்கள். யார் முதலிலே வெளியே தலையைத் தூக்குகிறார்களோ அவர்களுக்கு மூன்று குட்டு தலையிலே என்று பந்தயம் கட்டிக்கொண்டு, தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பார்கள் - உலர்ந்ததும் உலராததுமாகவே கூந்தலைக் கோதி முடிந்து கொள்வார்கள்- இவைகளாலே அவர்களிடம் உள்ளத்திலே ஒரு சுறுசுறுப்பும், உடலிலே ஒரு மினுமினுப்பும் ஏற்பட்டது - எழிலூட்டிற்று. இங்கே, வெந்நீர்! விதவிதமான சோப்புக் கட்டிகள்! பேசாமல் சிரிக்காமல், குளித்துவிட்டு, வர வேண்டும். குளிப்பது கிராமத்திலே, விøளாயட்டிலே ஒன்று. இங்கு, கடமைகளில் ஒன்று! கிராமத்திலே, கண்களுக்கு விருந்தளிக்கப் பல காட்சிகள் - கிளி பழத்தைக் கொத்தித் தின்னும், காடை கௌதாரி கீழே சிதறிக் கிடக்கும் மணிகளைப் பொறுக்கித் தின்னும், வயலோரத்து நீரோடையில் வாத்துகள், பல இடங்களிலே மரம்குத்திப் பறவைகள், மடுவிலே விதவிதமான மீன்கள், பட்டுப்பூச்சிகள் எங்குப் பார்த்தாலும் வண்ணத்தை அள்ளித் தெறித்ததுபோல, ஆட்டுக் குட்டிகள் துள்ளுவதும், கயிறு அறுத்துக் கொண்டு ஓடிவரும் காளையைப் பிடிக்க உழவர்கள் கூச்சலிடுவதும், பெண்கள் பயந்து ஒதுங்குவதும், இப்படிப் பல காட்சிகள் கண்டு, அதனாலே உள்ளத்திற்கு உற்சாகம் கிடைத்தபடி இருந்தது. முயற்சி - வெற்றி - இந்த இரு கட்டங்கள் தானே, மனித உள்ளத்திற்கு எழிலும் உரமும் தருவன; அந்த நிலை, கிராமத்திலே விநாடிக்கு விநாடி ஏற்பட்டு வந்தது. ஒவ்வொரு காரியமும் வெற்றி அளிக்கும்போது களிப்பூட்டும். இங்குக் கடிகாரத்தின் முட்கள், பிறருக்காக, ஒழுங்காக வேலைசெய்து கொண்டிருப்பது போல, வாழ்க்கை அமைந்திருந்தது. கடிகாரம் மணி அடிப்பதுபோல, இங்குச் சில நேரம் பேச்சு - சிரிப்பு - மற்ற நேரத்தில், ஒழுங்கான, நிதானமான, அளவிடப்பட்ட ஓட்டம்!! செல்லியின் வாழ்க்கை இதுபோல இருந்ததில்லையே. அவளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது எண்ணிப் பார்க்கும் போது, அவள் காதிலே அவள் குதூகலமான குரலொலிபட்டு, நாட்கள் பலவாகிவிட்டன. கிராமத்திலே, ஒருநாளைக்கு நூறு தடவை, அவள் கூவுவாள் பெரியப்பா! அண்ணேன்! பாட்டி! அப்போய்! அட, உன்னைத்தான்! கூனுக்கிழவா! கொண்டைக்காரி! சண்டைக்காரி - இப்படி ஒவ்வொருவருக்கு ஒரு பெயரிட்டு, உரத்த குரலில் கூப்பிடுவாள், ஓடிச்சென்று சிலரைத் தடுத்து நிறுத்துவாள், சிலர் கரத்தைப் பிடித்திழுத்து விளையாடுவாள் - எல்லாம் பழங்கதை யாகிவிட்டது. உரத்த குரலில் பேச வேண்டி அவசியமே ஏற்படவில்லை. எப்போதும் கண்பார்வையில் பட்டபடி இருக்கிறாள் வேலைக்காரி! மாமி, எதிரிலேயே சோபாவில் உட்கார்ந்து கொண்டு ‘பாரதம்’ படிக்கிறார். அவரோ, வந்ததும் ஓவியம் எழுதுகிறார் - அது முடிந்ததும், எப்படிக் கண்ணழகு? உன்னோடு போட்டி போடுதா உனக்கும் இவளுக்கும் போட்டி, யார் ஜெயிப்பீர்கள்? என்று, கொஞ்சுவார்! வேறே பேசவேண்டிய நிலைமையே வருவதில்லை. வாயடைத்துக் கொண்டல்லவா இருந்திருக்கிறோம் இவ்வளவு நாட்களாக, என்று எண்ணி, தனக்குத்தானே ஆச்சரியப்பட்டாள்.

பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட வந்தவள் என்பதாலே, செல்லியிடம், உபசாரம் பேச, நாகரிகப் பெண்கள் வருவதுண்டு.

‘வாங்க...’ என்று மரியாதையாகத்தான் அழைப்பாள், ஆனால் மறுகணமே, அவர்களுக்கும் நமக்கும் ஒட்டிவராது என்று பயம் தோன்றும் - மாமியுடன் பேசிவிட்டுப் போகட்டும் என்று இருந்து விடுவாள், இவளுக்கென்ன இவ்வளவு கர்வம் என்று எண்ணிக் கொள்வார்களோ என்ற பயத்தால் சில நாட்களில் வந்த பெண்களுடன் பேசுவாள்; அவர்கள் கேலி செய்யும் விதமாக இருக்கும், அவளுடைய கேள்வி பதில் இரண்டுமே!!

பட்டிக்காடுன்னாலும், சுத்தமாகச் சுட்டெடுத்தது - என்றாள், ஒருத்தி - வேகமாக நடந்தால், காற்று அடித்துக் கொண்டு போய்விடத்தக்க ஒத்தை நாடிக்காரி! அவளுடயை மனத்தில், தானோர் பூங்கொடி என்று எண்ணம் - கொடிபோல உடல் இருந்தது! பூபோல எதுவும் கிடையாது.

“நம்மோடு பேசுவதற்கே இவள் இவ்வளவு திண்டாடு கிறாளே, வடிவேலன் ஒரே கலை விஷயமாகப் பேசுவானே, என்ன பேசுவாள் இவள்” என்று கேட்பாள் ஒரு குறும்புக்காரி, மற்றொருத்தி, “போடி பேசுவது மட்டும்தான், புருஷன் பெண் ஜாதிகளுக்குள் இருக்கும் வேலை. பேசத்தெரியாவிட்டால் என்னவாம்!!” என்று வேறோர் வம்புக்காரி பேசுவாள்.

“நாட்டுக்கட்டை என்று கேலியாகச் சொல்லுவா, எனக்கு அதனுடைய பொருள் முன்னாலே தெரியறதில்லே, இப்ப, இவளைப் பார்த்தபிறகு, புரிஞ்சுது...” என்பாள் அவலட்சணத்தை மறைக்க நாளெல்லாம் பல வகையால் பாடு பட்டுக்கொண்டு வந்த ஒரு நோஞ்சான்.

கண் இருக்கு காது வரையிலே! ஆனா, மிரளமிரள அல்லவா விழிக்கிறாள்!

புருவத்திலே பார்த்தயாடி, எவ்வளவு கத்தை கத்தையா இருக்கு மயிர் - ஆனா, அதை ஒழுங்காக மை தடவி, வைத்திருக்கத் தெரியலையே...

அதிக உயரமில்லே, ஒட்டகைச்சிவிங்கி மாதிரி! குள்ளவாத்து மாதிரியுமில்லே, சரியான அமைப்புத் தான் இருக்கு, அனா, அந்த உடற்கட்டுக்குத் தகுந்த உடை உடுத்தத் தெரியறதோ! காளி சிலைக்கு போர்த்திவைத்திருக்கறதுபோல, சேலையைச் சுத்திண்டு கிடக்கறா - பார்க்கச் சகிக்கல்லே... ...

கூல்டிரிங் கேட்டுட்டு, தான் படாதபாடு பட்டேனே ஒருநாள் - பத்துத்தடவை, புரியறது மாதிரியா - பிறகு கொண்டு வந்து கொடுத்தா. ஓர் இழவும் புரியல்லேகிளப்புக்குப் போவமான்னு நான் ஒரு நாள் கேட்டேன், “ஏன், ஏன் இன்னக்கி வீட்டிலே என்ன? சமையல் கிடையா தான்னு கேட்டாளே! முண்டம், கிளப்புன்னா ஓட்டல்னு எண்ணிக்கொண்டா, பிறகு அவளிடம் கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்றது போலச் சொல்லி, வெகுபாடுபட்டு மெம்பராக்கினேன்...

வடிவேலன், வெசுவயஸ்படம் எழுதியிருக்காண்டி ரொம்ப நன்னா இருக்கு. பார்க்கும்போது, நெருப்பு நம்ம மேலேயே வந்து விழுந்துடுமோன்னு தோணும் அவ்வளவு தத்தரூபமா எழுதியிருக்கான்... இவ சொல்றா, இது என்ன படம், நெருப்பைப் போய் படமா எழுதவேணுமான்னு கேட்கிறா? இப்படி என்னைக் கேட்ட மாதிரி, அவனைக் கேட்டிருந்தா, தலைதலைன்னு அடித்துக்கொண்டு சன்யாசம் வாங்கிக் கொண்டு விடமாட்டானோ வடிவேலன்.
இப்படி எல்லாம் பேசுவார்கள் நாகரிக நங்கைகள் - வில வேளைகளில் செல்லத்தின் செவியில் படும்படி கூடப் பேசுவார்கள். கோபமாக இருந்தது. இருந்தும் பொறுத்துக் கொண்டாள். நாம் இங்கு வந்திருப்பது, இதுகளிடம் நல்ல பெயர் வாங்க அல்ல அவருக்கு அன்பு தர - அதை நாம் வஞ்சனையின்றிச் செய்து வருகிறோம் - அவர் நம்மிடம் ஒரு குறையும் காணவில்லை, எப்போதும் போலத்தான் பிரியமாகப் பேசுகிறார், அது போதும் நமக்கு, என்று திருப்தி அடைந்தாள்.

பிரியமாகப் பேசுகிறார் என்று அவள் எண்ணிக் கொண்டதிலே தவறு இல்லை. ஆனால் எப்போதும் போல அல்ல! அதை அவளாலே அவ்வளவு எளிதாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை
* * *

“ஏன் செல்லா! பீச்சுக்கு வருவதிலே உனக்கு என்ன சங்கடம்? அந்த இடம் என்ன, புலி கரடி உலவுகிற இடமா என்ன?” என்று ஆரம்பமாயிற்று அதிருப்தி படலம். எதுவரையில் சென்றது என்றால் “நான் போயிட்டு வருகிறேன் பீச்சுக்கு; ஊர்மிளா வந்தால் சொல்லு, நான் பீச்சிலே இருப்பேன்” என்று சொல்லிவிட்டுத் தனியாகக் கடற்கரை செல்லும் அளவுக்குச் சென்றது.

ஊர்மிளா, வடிவேலனைப் பெறவேண்டுமென்பதற் காகவே, வெளியே கிளம்பும் போதெல்லாம், குறைந்தது ஒரு மணி நேரம், கண்ணாடிம் கையுமாக ஒரு வருடம் இருந்தவள். கல்லூரியில் ‘ஆங்கில டான்ஸ்’க்கு அவளுக்குத்தான் மெடல் கிடைத்தது. அவளிடம் வடிவேலனுக்குக் காதலோ என்று சந்தேகம் பிறந்தது, செல்லிக்கு; கோபமாகக்கூட இருந்தது பிறகோ அவர் எது செய்தாலும் பொறுத்துக்கொள்வேன்; தெரியாமல் என்னைக் கலியாணம் செய்து கொண்டார், என் நடைநொடி பாவனை இல்லை என்னால் மாறவும் சுலபத்திலே முடியவில்லை அவர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டார், பாவம் ஊர்மிளா உல்லாசமாகப் பேசுகிறாள், அதிலே அவருக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி. அதையாவது அவர் பெறட்டும் - என்று நினைத்துக் கொள்வாள் கோபம்கூட மறையும்.

அடுத்த கட்டம் ஆரம்பமாயிற்று! மாமி அதைத் துவக்கி வைத்தாள். “செல்லி! ஒரு படித்த புருஷன் நாலுபேருடன் மதிப்பாக பழகி வருகிறவன், நாகரிகமானவன், அவனோட மனசு சந்தோஷப்படுகிற மாதிரியாக இருக்கவேண்டும் என்கிற அறிவு இருக்க வேணாமாம்மா! கழுத்திலே தாலிøய் கட்டி விட்ட பிறகு, மனைவியுடன் புருஷன் ஆசையா இருந்துதானே தீரணும், போதுமா? அவனுக்கு மனம் குளிரும்படியா, நாகரிகமாக உடுத்திக்கொண்டு, நல்ல இன்பமாகப் பேசிக்கொண்டு, பொழுது போக்காக இருந்தால்தானே, அவன் உன்னை எப்போதும் அன்பாக நடத்துவான். எண்ணெய் வடிந்து நெற்றியிலே வழியுது - அதைக் கூடத் தெரிந்துகொள்ளாம லிருக்கறே, அதே கோலத்திலே, பல பெண்கள் உன்னைப் பார்க்கிறாங்க, பின்னாலே போயி, எவ்வளவு கேலியாகப் பேசுறாங்க தெரியுமா? செச்சே! இப்படியா இடிச்ச புளியாட்டம் இருக்கிறது.” என்று புத்தி சொல்லி வந்தார்கள்; புதிய கோலம் பெறுவதற்கான வழிகளை, வேலைக்காரி மூலம் சொல்லிக் கொடுத்தார்கள். செல்லியும், நாகரிகக் கோலத்தை - உதட்டுச் சாயம் உட்பட - கொள்ள ஆரம்பித்தாள், சகிக்க முடியாத கோரம் அவளிடம் குடிபுக வந்தது.

கூந்தலை அள்ளிச் செருகிவிட்டு, சிறுமலர்ச் செண்டு வைத்திருந்தபோது, இருந்த எழில், முன்பக்கம் கொம்புபோலக் கூந்தலைச் சுருட்டிவிட்டு, பின் பக்கம் இரண்டு சாட்டைகளைத் தொங்கவிட்டு, தலையிலே ஒரு பூக்கூடையைச் சுமந்து கொண்டு செல்லி காட்சி தந்தபோது வடிவேலன், வெட்கப்படும் வடிவம் காட்டிற்று!

ஊர்மிளாவை இதே கோலத்தில் பார்த்தவர்கள், கிளியோ பாட்ரா என்பார்கள்! செல்லிக்கு அதே அலங்காரம், ஆபாசமாக இருந்தது. இவ்விதமே, நாகரீக நங்கையாக வேண்டும் என்பதற்காக, செல்லி எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியும் அவளுடைய இயற்கை எழிலைப் பாழாக்கிவிட்டது. செல்லிக்கும் வடிவேலனுக்கும் இடையிலே இருந்த தொலைவு அதிகரித்தது; ஊர்மிளாதான் வடிவேலனுக்கு, ஓவியக்கலைக்கே ஆதாரமானாள். புன்னகையுடன் ஊர்மிளா! புல்லை வாயில் தடவியபடி உர்மிளா! படுத்த நிலையில் ஊர்மிளா! பந்தாடும் ஊர்மிளா! என்று செல்லியின் ஓவியத்தை அகற்றி விடவில்லை; அந்த இடம் ஊர்மிளாவின் ஓவியக் காட்சிக் கூடமாகவே மாறிவிட்டது.

எழும்பி எழும்பித் தானாக அடங்கிவிடும் கோபம், ஏமாற்றம், வெட்கம், துக்கம் எல்லாம்கூடிச் செல்லியின் மீது படை எடுத்தன. அவள் ‘இளமை’ஓரளவுக்குக் கவசமாக நின்று தடுத்தது, என்றாலும் நீண்ட நாளைக்கு இந்தக் கவசம் பயன்படாது என்பதும் புரியும் நிலை வந்தது. செல்லியின் முகம், சோக பிம்பமாகிவிட்டது.

“ஏனம்மா! உலகத்தையே பறிகொடுத்தவபோல உம்முனு இருக்காளே, செல்லி, என்னவாம்? உடம்புக்கு ஏதாவது தொல்லையா? சொல்லித் தொலைச்சாத்தானே, ஏதாவது செய்யலாம்...”

“அவளுக்கு உடம்புக்கு என்னடா? வேளா வேளைக்குச் சாப்பிறா, விடியிற வரையிலே தூங்கறா, விசனம் என்ன இருக்கு, உடம்புகெட, சிலதுகளோட முகம் அப்படி. பதினெட்டிலே பால் வடியறது போல இருக்கும், இருவதிலே அழுது வடியும், அதுக்கு என்ன மருந்து இருக்கு, டாக்டரிடம்”

“ஊர் ஞாபகம் வந்திருக்கோ, என்னமோ? போகிறதா இருந்தா, அனுப்பி வையேன்...”

“நானே, அவ அப்பனுக்குக் கடிதம் போட்டுக் கூப்பிடணுமா? ஏண்டா, அதுவா நியாயம்? அவளப்பாவா வந்து அழைச்சி இருக்கணும்..”

“நடவு வேலையோ, நாத்து வேலையோ, யார் கண்டா?”

“இல்லையானா தாசீல் வேலையா இருக்கு! எந்த வேலையையும் இரண்டு நாளைக்கு ஒதுக்கி வைத்து விட்டு, வந்து மகாராஜனா அழச்சிக்கிட்டுப் போகட்டும் நானா தடுக்கறேன்”
* * *

செல்லிக்கு விஷயம் புரிய ‘ஆரம்பித்தது! அன்பு குறைந்தே போய் விட்டது. அவசரப்பட்டு இந்தக் கலியாணத்தைச் செய்து கொண்டோம் என்கிற எண்ணமே வடிவேலனுக்கு வந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டது.

தெரிந்து? உரிமைக்காகப் போராடுவேன் என்று நினைத்தாளா? அல்லது, அவனுடைய மனத்தைத் தன் வசம் மீண்டும் கொண்டு வரத்தக்க வழி என்ன என்று ஆராய்ந்தாளா? இல்லை. அவள் வடிவேலனாகத் தேடிக்கொண்ட மனைவி - அவள் அவனைக் கழனியோரத்தில் கண்டு சிரித்ததில்லை, களத்துமேட்டில் கை கோர்த்து விளையாடியதில்லை, கை அடித்துச் சத்தியம் செய்து கொடுத்ததில்லை, பொரி விளங்காய் உருண்டை கொடுத்துவிட்டு, நகக்குறியைப் பரிசாகப் பெற்ற தில்லை! அவள் அவனைக் கணவனாகப் பெற்றாள் - அது கூட இல்லை, அவன் அவளை மனைவியாகக் கொண்டிருக்கிறான். அதுதானே தொடர் பின் பொருள்? அது, மாறும், மறையும், அதற்காக என்ன செய்ய முடியும்? வந்ததை அனுபவிக்க வேண்டியதுதான், என்று கருதிக் கொண்டாள்.

கிராமச் சூழ்நிலை இல்லாமற் போனதாலேயே குலைந்து வந்த அவளுடைய கவர்ச்சி, கணவனின் மனம் மாறிவிட்டதால் ஏற்பட்ட வேதனையால், மேலும் கெட்டுவிட்டது. காய்ச்சல் அதிகமானவனுக்கு, அம்மையும் வந்தால் என்ன ஆகும், அதுபோல!!