அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

தஞ்சை வீழ்ச்சி
1

சிங்கம் இரை கிடைக்காது திகைத்தாலும், சிறு நரிக்கு எங்கேனும் ஏதேனும் இரை கிடைத்துவிடும் என்பர்! வீரர்கள் வாழ்வு இழந்து, தாழ்வு தீண்டிடும் வேதனை நிலை பெறுவதுண்டு - வஞ்சகர்களோ எப்படியோ, எதைச் செய்தோ, வாழ வழி அமைத்துக் கொள்வர். இந்தச் சோகச் சுமையை, தமிழக வரலாற்றுச் சுவடியிலே காணலாம் - தெளிவாகவும் விளக்கமாகவும் இராது - ஓரிரு வரிகள் - சிறுசிறு சம்பவங்கள் முறையிலே!!

முடிதரித்த மன்னர்கள் அரசு இழந்தால் அல்லற்படுவர்!

புதிய முலாம் பூசப்பட்டவர்கள் மன்னர்களாகி, புது வாழ்வு துவக்குவர்.

அரசர்கள், வாழ்வு தாழ்வு எனும் இரு நிலைகளிலும் உருட்டப்படுவர். கால வேகத்தால். ஆனால், புரோகிதரோ, புன்னகையை இழந்ததில்லை! மன்னன் மாறுவான்; மணிமுடி, சிரம் மாறும்; மறையவர் குலத்துதித்து அரசவையில் இடம் பிடித்த ‘ஜடாமுடி’யில் நிலைமாறாது.

‘இவர்களல்லவா பாக்கியசாலிகள் என்பர் பாரும் - இவர்களின் முழு உருவம் இது மட்டுமல்ல.

நாட்டு நிலை மாறினாலும் தங்கள் நிலையிலே தாழ்வு புகாதபடி பார்த்துக் கொள்ளும் திறமைசாலிகளாக மட்டுமல்ல, புரோகிதர் இருந்தது - நாட்டுநிலை இப்படி இப்படி மாறிவிடக் கூடும் என்று முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதற்கேற்பத் தங்களைத் தயாராக்கிக் கொள்ளும் யூகசாலிகள்!!

அதுமட்டுமா! நாட்டின் நிலையை இவ்வண்ணம் மாற்றி அமைத்தால், தமது நிலையிலே இவ்வண்ணம் ஏற்றம் கிடைக்கும் என்று யூகித்து, யாரும் அறியா முறையில், எவரு ம் குறை கூறாத தன்மையில், நாட்டு நிலையை மாற்றி அமைப்பர்.

இதன்படி, மணிமுடிகள் உருண்டிடவும், மண்டலங்கள் கை மாறிடவும், மன்னர்கள் ஓடிடவும், மாமிசப் பிண்டங்கள் மன்னர்களாகிடவுமான, ‘சம்பவங்களை’ உண்டாக்கி வந்தனர். புரோகிதர்கள்; குருமார்கள் என்ற நிலைக்குக் குறைவு ஏதும் ஏற்படாத வகையிலே, இந்தச் ‘சம்பவங்களை’ உண்டாக்குவர்.

அரசுக்குள்ளே சமர் மூளும் - களங்களிலே கழுகுகள் வட்டமிடும் - அரண்மனைகளிலே அழுகுரல் எழும் - கோட்டை கொத்தளங்கள் தூள் தூளாகும் - அகழிகளிலே முதலைகளுக்கு விருந்து கிடைக்கும் - இந்த நாட்டுக்கும் அந்த நாட்டுக்கும் போர் என்று சரிதம் இந்தச் சம்பவத்துக்குப் பெயரிடும் - ஆனால், மிகமிகக் கவனமாகக் கூர்ந்து பார்த்து, விடுபட்ட வரிகள், துண்டாடப்பட்ட நிகழ்ச்சி ஓவியங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தால் சரிதம் வெளிப்படையாகக் கூறாமலிருக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். வீண் வேலை என்றெண்ணிச் சிலரும், விஷவாடை வெளியாகிவிடுமே என்று சிலரும், விளக்கமறிவது சிரமமான காரியமாயிற்றே என்று சிலரும், இருந்து விடுகின்றனர் - இதனால் முழு உண்மை மங்கி, மடிந்துவிடுகிறது. கமண்டல நீருக்கும், மக்களின் குருதிக்கும் இருந்துவந்த பயங்கரத் தொடர்பு மறைக்கப்பட்டுவிடுகிறது. மங்கிக் கிடக்கும் உண்மைகள், தேய்ந்து தெரியும் சம்பவங்கள் - இவைகளிலே ஒன்று, தஞ்சை வீழ்ச்சி - வீரம், வஞ்சகத்தால் வதைக்கப்பட்ட விபரீதச் சம்பவம்.
தஞ்சைத் தரணி தமிழகத்தின் பூஞ்சோலை - அன்றும்!

கடல் கொந்தளித் தெழுந்ததால் புயல் கிளம்பி, இன்று அந்தப் பூந்தோட்டம் அழிவுற்றுக் கிடக்கிறதே அதுபோன்றே கமண்டல நீர் கொந்தளித்தது; வஞ்சகப் புயல் வீசி, தஞ்சைத் தரணியை முன்னமோர் நாள் பிணக்காடு ஆக்கிற்று!

தஞ்சை செல்வோம் - ஆண்டு 1673! ஆள்பவர், வேந்தன் விஜயராகவன்!!

தஞ்சைத் தரணி மட்டுமல்ல, தமிழகமே வைதீக ஆரிய மார்க்கத்துக்கு இரையாகிவிட்டிருந்தது - எனவே, புரோகித வகுப்பாருக்கு, அளவுகடந்த செல்வாக்கு. வீரத்தாலல்ல, பக்தியினால்தான். மன்னர்கள் புகழ் தேடுவது என்ற முறை வலுத்துவிட்ட காலம் அது. இத்தனை களம் கண்டான், வீரப்போரில் ஈடுபட்டு இவ்வளவு தழும்புகளை உடலில் பெற்றான் என்று மன்னர்களைக் குறித்துப் புலவர் பெருமக்கள் வியந்து பாடும் காலம் அல்ல - இன்னின்ன கோயில்களைக் கட்டினான் - இலட்சம் பிராணமர்களுக்கு அன்னதானம் அளித்தான் என்று பிராமணோத்தமர்கள் பாராட்டிப் பேசி, ஆசீர்வாதம் செய்து வந்த காலம்.

மன்னர் மகனுக்கு ‘அட்சராப்பியாசம்’ (கல்வி துவக்கம்) நடக்கும். நவரத்தினங்களைக் கொட்டி, அதைக் கொண்டு, அரசகுமாரனை, ஓர் அந்தணர் எழுத வைப்பார்! பிறகு நவரத்தினங்கள், அந்தணர்களுக்குத் தானாமாகத் தரப்படும். அப்போதுதான், அரசகுமாரன் புத்தியில் ‘பிரகஸ்பதி’யாக வேண்டும் என்று பிராமணர்கள் ஆசிர்வாதம் செய்வர்!

கும்பகோணம் இராமர் ஆலயம், கும்பேஸ்வரர் கோயில், திருவையாறு ஜம்புசேகர் தேர், பசுபதி கோயிலில் தேனுகேசுரர் மண்டபம், மன்னார்குடியில் மணிமண்டபம் - இப்படித் திருப்பணிகள் செய்வர். மன்னர்கள் - மறைவர் வாழ்த்துவர் - மகேசன் அருள் பாலிப்பார்!

துலா புருஷதானம் - ஸ்வர்ண கோதானம் - பூதானம் இப்படிப் பலப்பல!

அந்தணர் அகமகிழ இவைகள் - மன்னர் மனமகிழ்ச்சிக்காக அரண்மனை, கலைக்கூடமாக்கப்பட்டு விளங்கிற்று. கல் பேசும் சிற்பியின் திறத்தால்! கலை, துடியிடையாக, கொவ்வை அதரமாக, கடைக்கண்ணாக, இடை நெளிவாக, இசையாக, நாடகமாக, நானாவிதமான உருவிலே, கொஞ்சிக் கூத்தாடி, மன்னர்களைக் களிப்புக் கடலிலே தள்ளும்! அருக்கு மங்கையர் மலரடி வருடுவர் அரண்மனையில். எனினும் ஆலயம் சென்று அரங்கனின் திருவடி சரணம் என்று பக்தியையும் சொரிவர்! சல்லாபிகளின் சதங்கை ஒலிக்கும். அரண்மனையில் - ஆலயமணியோசை மன்னன் மனதிலே பகவத் நாம சங்கீர்த்தனத்தின் பெருமையைப் பதியவைக்கும்! கூந்தலைக் கோதும் கரங்கள் அரண்மனையில் - கூப்பிய கரங்கள் ஆலயத்தில்! இங்ஙனம் இன்பத்திலே மூழ்கியிருந்த மன்னர்கள் காலம்!

விஜயராகவனும், மகாபக்தன் - மகா ரசிகன்! கடவுட் காரியமும் கலை ஆர்வமும், ஒத்த அளவு கொண்டிருந்தான்!

காவியம் படித்தலும், ஓவியத்தைக் கண்டு களிப்பதும், தர்க்கம் கேட்பதும், பண்டித சிரோமணிகளிடம் பாடம் கேட்பதும், நாடகம் காண்பதும், நாதன் அருள் பெறும் மார்க்கத்தை ஆராய்வதும், விஜயராகவ வேந்தரின், நித்திய நடவடிக்கைகள்.

பிராமணோத்தமர்களின் மனம் துளியும் கோணலாகாது என்ற திடம் கொண்ட தீரன், மகன் மன்னாரு என்பான், துள்ளுமத வேட்கைக் கணையாலே தாக்கப்பட்ட நிலையில் ஓர் ஆரிய மங்கையிடம் தகாத முறையிலே நடந்து கொண்டது கேட்டு, மகனென்றும் பாராமல், சிறையில் தள்ளிய சீலன்! பூலோக ஸ்வர்க்கத்தில் பூதேவர் புடைசூழ கொலுவீற்றிருந்த கோமான்!! அந்த விஜயராகவவேந்தர் மீது போர் தொடுத்தான் மதுரை சொக்கநாதன்! கடும்போர்! விஜயராகவன்! வயோதிகப்பருவம் - சொக்கநாதன் படைகளோ சூறாவளி வேகத்தில், தஞ்சைத் தரணியைத் தாக்குகின்றன! மன்னன் மருண்டான் - மகேசனை வேண்டினான் - மறையவர் குலத்துதித்த பெரியவரை நாடினான் - சோமசுந்தர ஸ்வாமி என்பாரிடம் சென்று நிலைமையைக் கூறி, மார்க்கம் கேட்கலானான் மன்னன்.

“ஸ்வாமி! அடியேனுக்கு வந்துள்ள இந்த ஆபத்து போக மார்க்கம் கூறி அருள வேண்டுகிறேன்.”
“விஜயராகவா! விசாரத்தை விடு; பரம பக்தனான உன்னைப் பகவான் கைவிடுவாரா? ஏன் கலங்குகிறாய்?”

“சொக்கன் படை பிரம்மாண்டமானது.”

“துரியனிடம் கூடத்தான் இருந்தது - கண்ணன் பாண்டவரைக் காப்பாற்றினான் - நீ தரும் சொரூபன் - தடுமாற்றம் வேண்டாம் - ஜெயம் நிச்சயம்.”
மன்னன் திகைத்து நிற்கிறான் - சோமசுந்தர ஸ்வாமிகளின் சீடர்களிலே ஒருவன், குருவாக்கியத்தை விளக்கமாக விரிவுரை செய்கிறான்.
“மன்னரே! குருதேவர் கூறிய பிறகும், குனிந்த தலை நிமிராமல் இருப்பதோ? கொற்றவனே! நிமிர்ந்து நில்லும். கூர்வாளை ஏந்திப் புறப்படும் போருக்கு. வெற்றி நிச்சயம். படைபலம் பாண்டி நாட்டானிடம் இருந்து என்ன செய்ய முடியும்! பரமனின் துணை, அதனினும் மேலான பலமன்றோ? விஜயராகவ வேந்தரே! உமது பக்தியின் மேன்மையை உணராதவரன்றோ, இந்தப்போரின் முடிவு என்னாகுமோ என்று கவலை கொள்வர். எவ்வளவு கைங்கரியங்கள் செய்திருக்கிறீர் - ஆலயத் திருப்பணிகள் அனந்தம் - பிராமணருக்குத் தந்துள்ள தான தருமங்கள் கொஞ்சமா - நீர் செய்த சத்காரியம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அக்ரோணிச் சேனையாக உருவெடுத்துக் களத்தில் உமக்கு உதவி புரிந்து, மதுரைப் படையைச் சிதறடிக்கும். இது குருதேவர் வாக்கு - சத்யவாக்கு! சத்தியத்தின் முன்பு, எத்தகைய சேனாசக்தியும் நில்லாததல்லவா!

ஆயிரமாயிரம் அந்தணச் சிரேஷ்டர்கள், உமது வெற்றிக்காக அரிபரந்தாமனையும் அரனையும் வேண்டிப் பூஜை செய்தவண்ணம் உள்ளனர். அவர்களின் ஆசி, வெற்றியைத் தரும் என்பதிலே, வேதசாரம் உணர்ந்த உமக்குச் சந்தேகம் வரலாகுமா?

அதோ! ஆலயமணிகள் ஒலிக்கின்றன! உமது வெற்றியை வேண்டி விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன!

நாலு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்திநான்கு கலைக்கியானம் உணர்ந்து பரமனின் அருளைப் பெற்றுள்ள பிராமணோத்தமர்களின் ஆசியுடன் போருக்குக் கிளம்புகிறீர் - வெற்றியுடன் திரும்பிவிடவீர் - இது நிச்சயம் - சத்தியம - ஜெயவீரராக விளங்குவீர், விஜயராகவரே! விசாரம் வேண்டாம். வெற்றி நிச்சயம் புறப்படும்.”
வியஜராகவ வேந்தருக்கு மனம் நிம்மதியாயிற்று - புதிய நம்பிக்கை பிறந்தது - களம் புகுந்தார் - கடும்போர் போரின் கடுமை விநாடிக்கு விநாடி வளர்ந்தது - நாசம் தஞ்சையை வேக வேகமாகத் தழுவிக் கொள்ளலாயிற்று.

தஞ்சைப் படைகள் தோற்றோடின - மன்னன் களத்திலே பிணமானான் - மகனும் அங்ஙனமே! தேவிமார்கள் தீயில் வீழந்தனர்! விஜயராகவனின் குடும்பமே இறந்துபட்டது, ஒரே ஒரு சிறு குழந்தை தவிர! அந்தக் குழந்தையை, யாரோ, எங்கோ, எடுத்துச் சென்றுவிட்டனர்! தஞ்சை, சொக்கநாதனிடம் சிக்கிவிட்டது. “பக்திக் கவசம் பூண்டிருக்கிறாய், மன்னவா! மாற்றானின் படை உன்னைத் துளைக்காது” என்றார் குரு! சீடர்கள் அதற்கு ஆதாரங்களைக் கூறினர் - தஞ்சை தீயுண்ட நிலைபெற்றது.

மன்னனை, அவனாற்றிய ‘புண்ணம்’ காப்பாற்றும் என்று புகன்ற பூசுரத் தலைவருடைய சீடகோடிகளிலே ஒருவராக உங்களில் யாரேனும், இருந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். எனக்கேன் எத்தர் கூட்டத்திலே இடம் என்று கேட்பீர் - ஒப்புக்கு; உண்மையாகவே, அல்ல! கற்பனைபுரிக்குச் செல்ல அழைப்பு; வேறொன்றுமில்லை.

குருவோ ஆசீர்வதித்தார் - கொற்றவனோ தோற்றான்; பிணமானான்! சீடன் மனம் என்ன நிலைபெறும் சிறிதளவு சிந்தனையும், கொஞ்சம் மனிதத் தன்மையும் கொண்ட சீடன், என்ன எண்ணுவான்! என்ன எண்ணுவீர்கள், நீங்கள், சோமசுந்தர ஸ்வாமியின், சீடர்களிலே ஒருவராக இருந்திருக்க நேரிட்டிருந்தால்?

பயம் பிடித்துக் கொண்டு, ஓட்டமெடுத்துவிட வேண்டும், தஞ்சைத் தரணியைவிட்டு என்று எண்ணுவீர்களா?

குழப்பமடையத்தானே செய்யும் மனம்.

இதோ ஒரு சீடன் - கற்பனை உருவந்தான் - கட்டிளங்காளை - காவி உடை - களம் புகுமுன், சோமசுந்தரரின் காலடி வீழ்ந்து ஆசி பெற்ற மன்னனைக் கண்டவன் - தஞ்சை நாசமானதைக் காண்கிறான் கண்ணீர் காவி உடையிலே வீழ்கிறது; கருத்திலே புதியதோர் மலர்ச்சி பிறக்கிறது; மெல்லக் கூறுகிறான்.

“எங்கும் யாக குண்டங்களை எழுப்பினான்! தேவ ஒலியை நிரப்பினான்! வேள்வித் தீ எங்கும் தோன்றின. உறசவாதிகள் அமோகம்! கலைக் கூத்தாடிய இடம்! கவிதை புரண்டோடிய இடம்! பாதிப்பிரவாகம் மிகுந்த தஞ்சைப் பதி தோற்றது!

அதோ, கேட்கிறது, தோற்ற துயரால் உயிரை மாய்த்துக் கொள்ளும் தஞ்சை வீரர்களின் மரணக் கூக்குரல்!

அந்தோ! பாண்டிய நாட்டுப் படையின் வெற்றி முழக்கம்.

ஐயோ! அதோ ஜ்வாலை! தஞ்சை அந்தப்புர மாதர்கள் தீயில் வீழ்ந்து மடிகிறார்கள் - படுகொலை - சித்ரவதை - பக்திக்குப் பரிசு இதுவா? பிராமண ஆசீர்வாதப் பலன் இதுதானா? ஓம குண்டம் பலனளிக்கும் என்றனரே - அதோ, மாதர் மடிகின்றனரே பெருநெருப்பில்!

குருதேவர் கூறினது... பூதேவர்கள் புகன்றது... ஆலய விசேஷ பூஜைகள் - ஆசி மொழிகள் - அந்தணர்களின் மந்தி பலம்... எல்லாம் எங்கே? ஏன் பொய்த்துப் போயின? தோல்வியைத் தடுக்க முடியவில்லையே! - பக்திமானான மன்னனைப் பாதுகாக்க, புண்யம், அரணாக நிற்கவில்லையே! புகை கிளம்புகிறதே அரண்மனையில்! களத்திலே புலம்பும் குரல் கேட்கிறதே! என்ன சத்தம்? ஆ! என்ன, என்ன?

மன்னன் மாண்டான்!
ஐயோ!
மன்னாரும் மாண்டான்!
அட தெய்வமே!
மாதரசியும் மாண்டாள்.
ஆ! என்ன கொடுமை!
வெற்றி பெற்ற பாண்டியன் படை பவனி வருகிறது!
பவனி! வெற்றிப்பவனி! பாண்டியப் படைக்கு! விஜயராகவன் தோற்றான் - குடும்பமே சர்வநாசம் அடைந்தது... கொடுமை - கொடுமை! சொல்லொணா வேதனை - தோல்வி! தோல்வி! விஜயராகவனுக்காக தோல்வி? இல்லை! வீணுரை தோற்றது; வேதமும் வேள்வியும் - மானியமும் தானமும் யாகமும் யோகமும் - திருப்பணியும் திருப்பாசுரமும் - அந்தணரும் அவர்தம் ஆசியும் தோற்றன! - ஆஹா! மதிமோசம் போனான் மன்னன்! மதியை மாய்த்தோம், எம்போன்றோர்கள் கூடிக் கொண்டு! மன்னனைப் பக்திமானாக இருக்க செய்தோம் - பூரித்தோம் - பாராட்டினோம் - பஹவானால் இன்று தோற்கடிக்கப்பட்டான் - ஏமாற்றினோம், மன்னனை - ஏமாளி நானும் நம்பினேன் - நம்பச் செய்தேன். நாடு அன்னியனிடம்!

தஞ்சை வீரனின் பிணம்!
பாபம். வீரனே! களத்திலே நின்று போரிட்டபோது, நீ எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தாயோ, என்னைப் போலவே! நமது மன்னர் பக்திமான்! பரமன் அருள் பெற்ற பிரமணோத்தமரின் ஆசிபெற்ற புண்யவான். அவருடைய வெற்றிக்காக ஆலயங்களிலே விசேஷ அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி நிச்சயம் நமக்குத்தான் என்று உறுதியுடன் போரிட்டிருப்பாய் - களத்திலே பிணமானாய் கர்ம வீரனே! உன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறேன் - என்னை மன்னித்துவிடு - இறந்த வீரர்கள் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க கோருகிறேன்.

நான் சோமசுந்தர ஸ்வாமிகளின் சீடரில் ஒருவன் - பக்தி வெல்லும் - சத்யம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர்களில் ஒருவன்.

மன்னன், நாங்கள் காட்டிய மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தான் - நீங்கள் மன்னரைப் பின்பற்றினீர்கள், தோல்வி கண்டீர்கள் - எம்மால் - யாகத்துக்குச் செலவான பணம், உமக்கு இன்னோர் வாளைத் தந்திருக்கக்கூடும்! திருப்பணிக்குச் செலவான திரவியம், இன்னொரு கோட்டைச் சுவருக்குச் செலவாகியிருந்தால் - பக்திக்காகச் செலவிட்ட பணம், பயனற்றுப் போய்விட்டது - நீ பிணமானாய் - நான்...? யோகியாவதற்கு இத்தனைப்பாடு - சே? யோகம் தோற்ற பிறகு - ஏன் இந்தக் கோலம் - நண்பா! உன்னை நம்பவைத்த கூட்டத்திலிருந்து இதோ விலகுகிறேன் - உன் தாளைக் கும்பிட்டேன் - இனி வீணனல்ல - வீரன் - வெற்றிக்கான வீரப்போர் - எங்கே சொக்கநாதன் படை! எங்கே? எங்கே?”

இதுதான் சரி - இப்படித்தான் நான் செய்திருப்பேன்! சேர்ந்தே இருந்திருக்கமாட்டேன், காவியக் கூட்டத்தில் - ஏதோ ஒரு காரணத்தால், எப்படியோ சேர்ந்திருந்தாலும், தஞ்சைத் தரணிக்கு அழிவு வந்ததைத் தடுத்திட முடியாது போன, வைதீகக் கூடாரத்தைவிட்டு வெளியேறித்தான் சென்றிருப்பேன் - வாள் எடுத்து வீரப்போரிடக் கிளம்பியிருப்பேன் என்று கூறுவீர். நான் அழைத்து வந்துள்ள கற்பனைக்காளை, அந்த நிலை பெற்றான்; சொக்கநாதன் படையைத் தன்னால் முடிந்தமட்டில் அழித்தொழிக்க எண்ணினான்.

வேந்தன் விஜயராகவனின் தஞ்சைத் தரணி, மதுரை மன்னன் சொக்கநாதனிடம் சிக்கிவிட்டது. சொக்கநாதன்-, தன் தம்பி, அளகிரி என்பானை அரியாசனம் அமரச் செய்தான்! அளகிரியின் படை, தஞ்சைத் தரணியில், எவ்விதமான எதிர்ப்பும் தலைதூக்க முடியாதபடி, காவல் புரிகிறது. காவியைக் களைந்துவிட்டு, கட்கமெடுத்து, நாட்டை மீட்கப் போரிடத் துணிந்த, கற்பனைக் காளை, என்ன செய்ய முடியும்? சமயம் கிடைத்தபோது மதுரைப் படையினன் எவனேனும் கோபம் அவ்வளவையும் அவன் மீது காட்டுவான் - தலையை வெட்டுவான்.

அங்ஙனம் அவன் செய்து கொண்டிருந்தான். ஒருநாள் அவன் சிக்கிக் கொள்ளக்கூடிய நிலை - ஓடினான் பயந்து - துரத்திக் கொண்டு வரலாயினர் துருப்பினர். இந்தச் சந்து, அந்தச் சந்து, எங்கெங்கோ நுழைகிறான் - விடாமல் துரத்திக் கொண்டு வருகிறார்கள். ஏதோ ஒரு வீடு - உள்ளே நுழைகிறான் - எழில் மங்கை ஒருத்தி, திகைத்து நிற்கிறாள் - கதவை அடைக்கிறான் - முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொள்கிறான். அவள் ஓரளவு அவன் நிலைமையை யூகித்துக் கொள்கிறாள் - அவன் அவள் அருகே செல்கிறான். இனி, நாமும், அந்தக் கற்பனைக் காளையின் நடவடிக்கைகளைக் கவனிப்போம்.

“ஆடலழகி, அஞ்சாதே! நான் அறப்போர் புரிபவன். அழகு தஞ்சையை அன்னியனிடமிருந்து மீட்க, நான் மறைந்திருந்து போர் புரிபவன். என்னைத் துரத்திக் கொண்டு, படைவீரர்கள் வருகிறார்கள். என்னைக் காப்பாற்று. தயவு செய்! எந்த நிமிஷமும் அவர்கள் வந்துவிடக் கூடும். ஆபத்தான நிலைமை. சத்தம் கேட்கிறது.”

“சரி, அதோ அந்த வாத்தியத்தை...”

(தட்டுக்கோலை எடுத்துக் கொள்கிறான் - வாளை மறைத்துவிட்டு அவள் ஆடுகிறாள்.)

“உங்களை நான் இதற்கு முன் தரிசித்திருக்கிறேன் - இப்போது பார்க்கிறேன்.”

“உன் மதிமொழி கண்டு நான் மகிழ்கிறேன் - தரிசித்தாய் முன்பு - பார்க்கிறாய் இப்போது? எவ்வளவு நுண்ணறிவுடன் பேசுகிறாய்.”

“காவியுடன் இருந்தபோது, தரிசித்தேன், மடத்தில்.”

“மடத்தனத்தை விட்டொழித்தேன் மாதரசி.”

“படைத்தொழிலை எடுத்தீர் போலும்.”

“ஆமாம்.”

“முன்பு பணிந்தேன் - இப்போது பயப்படுகிறேன்.”

“ஏன் பயம்?”

“ஏன் இராது? தஞ்சை சர்வநாசத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது - கோட்டைகள் தூளாகிவிட்டன - கொற்றம் அழிந்தது - சொக்கநாதன் துரைத்தனம் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில், நீர் கத்தி தூக்குகிறீர் நாட்டு விடுதலைக்கு - என்ன ஆகும் உம் கதி? வீரம், காட்ட வேண்டிய நேரமா இது? தேவை, அது தங்களிடம் இல்லையே என்று பயந்தேன்.

“யூகம் வேண்டும்! ஆமாம், ஆமாம்! நான் ஒருவன் கத்தி தூக்கி என்ன பயன் இப்போது...?”

“அதைச் சொல்லிவிட்டுக் கத்தியை எறிந்துவிட்டு மறுபடியும் கமண்டலம் எடுக்க உத்தேசமா?”

“இல்லை! இருக்கலாம்! நான் உன்னைக் கேவலம் தாசி என்று துச்சமாகத் தள்ளிவிடமாட்டேன்.”
“உம்! தள்ளிவிடாமல்...”

“உன்னுடன் தாய்... மற்றும் வீட்டில்...”

“ஆரம்பமாகிவிட்டதா?”

“என்ன?”

“வழக்கமான விசாரணை... யாரும் இல்லை, என் வீட்டில், தாய் நோயால் மாண்டாள் - சிசு ஒன்று கருவில் மாண்டது - அதுவும், அரண்மனையில் தீ தெரிந்ததே அதைக் கண்டபோது ஏற்பட்ட பீதியால்! அவர் - அவ்வளவுதான் கூற முடியும் அவரைப் பற்றி - அவர் போரிலே மாண்டார் - நான் வெளியூர் சபை ஒன்றிலே நாட்டியமாடப் புறப்படுகிறேன் - என் பெயர் சசிலேகா.”

“சசிலேகாவா?”

“ஆமாம்! விஜயராகவ மன்னர் சபையிலே வீற்றிருந்த மகா பண்டிதையின் பெயரையே என் அம்மா எனக்குச் சூட்டினார்கள்.”

“அழகான பெயர்.”

“ஆனால் பொருத்தமில்லை - நான் பண்டிதையமல்ல - பாடி ஆடிப் பிழைப்பவள்.”
“பாடலும் ஆடலும், கலை - சாமான்யமன்று.”

“பொருத்தமற்ற பெயர் எனக்கு இருப்பதில் என்ன ஆச்சரியம்? அதனால் என்ன கவலை - நமது மன்னர் தோற்று இறந்தார் - பெயர்?”

“விஜய - ராகவன்”

“உ...ம் பெயருக்கேற்றபடி என்ன நடந்தது - பெயர், பெற்றோரின் ஆசையின் அளவுக்குறி; அவ்வளவு தான். உமது பெயர்...?”

“ஊஹும். சொல்லமாட்டேன் - அந்தப் பெயர் எனக்குத் துளியும் பொருத்தமில்லை என்று கூறிவிடுவாய் - உன் கேலி மொழியை என்னால் தாங்கமுடியாது.”

“தவவேடத்தைத் தாங்கியிருந்த உமக்கு, கேலிப்பேச்சைத் தாங்கவா சிரமமாக இருக்கும். கூறுங்கள்; என்ன உமது பெயர்?”

“கூறமாட்டேன். சசி! நீயே வேறு ஒரு பெயர் வைத்து விடு எனக்கு!”

“தொட்டிலில் படுத்துக் கொள்ளும் முதலில் - கூறுங்களென்றால்...”

“என் பெயர், எனக்கே இப்போது பிடிக்கவில்லை. நிச்சயமாகத்தான் - நீயே ஒரு பெயர் வைத்துவிடு.”

“என்னவென்று பெயர் வைப்பது? விசித்திரம் என்று பெயர் பொருத்தமாக இருக்கும். சம்மதமா?”
“ஊஹும் ... வேறே பெயர் - கலாதாசன் என்ற பெயரிடேன்.”

“கலைக்கு, திடீர்த் தாசர்கள் கூடாது.”

“உன் இஷ்டம், ஏதாவது பெயர்.”

“சின்னஸ்வாமி!”

“வேண்டாம்! அந்த நிலைதான் வேண்டாம் என்று விட்டுவிட்டேனே!”

“சரி! வீட்டிலேயே இரும் - நான் அரண்மனை போய் வருகிறேன் - பிறகு பெயரிடுகிறேன். ஆமாம்! தவசியாக இருந்தவர் தாசி வீட்டில் தங்குவது...”

“நான் தவசியுமல்ல இது இனித் தாசி வீடுமல்ல.”

“தைரியம் அமோகமாக இருக்கிறது.”

“சசி! உன் நெஞ்சிலே நான் இடம் பெற்றேனா? ஆனந்தம் - ஆனந்தம்... ப்ரியே!... சசி! நான் புதுவாழ்வு பெற்றேன்...”

“புது வாழ்வு எனக்குத்தான் கண்ணாளா! புதுவாழ்வல்ல! உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் வாழ்வைப் பெற்றேன் - முன்பு அன்னையிடம் சொர்ணம் தந்தவருக்கு அடிமையாக இருந்தேன் - இப்போது அன்பைக் காணிக்கையாகப் பெற்று என்னையே உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.”

“நீ தாசியுமல்ல - நான் தவசியுமாகேன் - நீ எனக்கு - நான் உனக்கு - நீ - சசி - நான்... நாம் இனி இல்லறம் நடத்துவோம்; இன்பம் பெறுவோம் - கட்டுகளும், கற்பனைகளும் ஒழியட்டும் - கண்ணே!

“அன்பே!”

இப்படி நான், கடமையை மறந்து, காதலில் - அதிலும் ஒரு தாசிப் பெண்ணின் காதலில் ஈடுபட்டு, வேட்டையாடிக் கொண்டிருந்திருக்க மாட்டேன் என்று சீற்றத்துடன் கூறுவீர்கள். நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள் - நான் காட்டும் கற்பனைக் காளை அவ்வண்ணம் செய்தான் - அவன் செய்ததும், வெறும் காதல் விளையாட்டு மட்டுமல்ல, சசிலேகா மூலம் அவன் மனதிலே கொண்ட கடமையை நிறைவேற்றிக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது. எப்படி என்கிறீர்களா? சரி, நாகப்பட்டினம் வரை சென்று வருவோம், வாருங்கள்!