அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

தஞ்சை வீழ்ச்சி
4

“செங்கமலம், சிறுவன்! சிரத்தில் முடியும்; கரத்தில் செங்கோலும் இருக்கிறது. ஆயினும்...”

“ஆட்சி புரிவதற்கான பக்குவம் இல்லையே என்பீர்.”

“செச்சே! ஆளத்தான் நீர் இருக்கிறீரே! வெங்கண்ணா உம்முடைய அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். அரசனாக இருப்பதை விட அரசனை ஆட்டிப் படைப்பவனாக இருப்பது, இலாபமானது - மேலும், அரசபீடத்தில் இருப்பவன் சிறுவன் உம்மால் மன்னனானவன். உம்முடைய சிருஷ்டி! உமது கைப்பதுமை! தஞ்சைத் தரணிக்கு! உண்மை அரசர், செங்கமலம்! பட்டம் மட்டுமே அவனுக்கு - அதிகாரம் அனைத்தும் உமக்கே.”

“உமது உதவியாலேதான், உரிமையுடைய செங்கமலம் மன்னரானார்!”

“மன்னரானார் - மண் பொம்மை! வேதியரே! பிடி உம்மிடம்தானே இனி. நாங்கள் போரிட்டோம் உன்பொருட்டு - இரத்தம் கொட்டினோம் - பொன் பெற்றோம்; இல்லை என்று கூறவில்லை - ஆனால் அரசை ஆளும் பதவி உமக்குக் கிடைத்தது. இன்று மட்டுமா! உமக்கு மட்டுமா! தஞ்சையில் விஜயராகவன் அரசாண்டான் - கோவிந்த தீட்சிதருக்குத்தான் செல்வாக்கு. அளகிரி ஆண்டான். உமக்குப் பெருமதிப்பு -செங்கமலம் ஆள வந்திருக்கிறான் - உமக்கே தான் செல்வாக்கு. அரசர்கள் வருவர், போவர். ஆட்டிப் படைக்கும் ஆரியரிடமே அதிகாரம் இருக்கும் என்று ஏற்படுகிறது. இதுவல்லவா அதிர்ஷ்டம். நான் வருகிறேன்; வேதிய வடிவில் உலவும் தஞ்சை வேந்தனே! விடைபெற்றுக் கொள்கிறேன்.”

வெங்கண்ணாவின் மனக்கண்முன், வெங்காஜி குறும்புப் புன்னகையுடன் தன் எதிரே நின்ற காட்சி தெரியலாயிற்று. வெங்கண்ணா, கேட்க வேண்டியதுதான் தாமதம். செங்கமலம், உடனே முதலமைச்சர் பதவியைத் தன் காலடியிலே வைப்பான் என்று எண்ணினான் வெங்கண்ணா. கேட்கவும் செய்தான். செங்கமலத்துக்கோ ஒரு பெரிய சிக்கல்! பீஜபூர் படையை அழைத்து வந்து, தஞ்சைத் தரணியை அளகிரியிடமிருந்து மீட்டு, முடி தந்தவர், வெங்கண்ணா - அவர் முதலமைச்சர் பதவியைக் கேட்கிறார். அதேபோது, அரசு இழந்து அனாதைக் குழந்தையாக இருந்த காலம் தொட்டு, அன்போடு தன்னைக் காப்பாற்றி வந்த, வளர்ப்புத் தந்தை, தன்னை முதலமைச்சர் ஆக்கவேண்டும் என்று கேட்கிறார் - அவருடைய பேச்சையும் தட்டி நடப்பதற்கில்லை; சிக்கலாகி விட்டது பிரச்சனை!

வெங்கண்ணா, தனக்கே அந்தப் பதவி உரியது, ஏனெனில், செங்கமலம் மன்னனானதே, என்னால்தானே என்று எக்காளமிட்டான்.

“அரசனானாய், மகனே! ஆனால் எதனால்? உன்னைப் பிழைத்திருக்கச் செய்தோம், நாங்கள், அதனால்! தஞ்சை அரச குடும்பம் அழிந்துபட்டது - உன்னை மரணத்தின் பிடியில் சிக்கிவிடாமல் பாதுகாத்தவர்கள், நாங்கள் - எனவே, உனக்குக் கிடைத்த அரசாட்சியிலே, எங்களுக்குத்தான் முதல் ‘பாத்யதை’ உண்டு” என்று வாதிட்டனர் வளர்ப்புப் பெற்றோர்.

“மகனே! நீ உண்மையிலேயே ராஜா ஆவதற்கு முன்பே - அந்த எண்ணம் வரவே முடியாத காலத்திலேயே உன்னை, அன்புடன், “ராஜா! ராஜா!” என்று கொஞ்சிய தாய் கேட்கும் பிச்சையை, துச்சமென்று தள்ளிவிடுவது தகுமா?

எவ்வளவு அன்புடன் அவர் உன்னை வளர்த்து வந்தார். உன்னைத் தூக்கிச் சுமந்து சுமந்து தழும்பேறிய தோளிலே, பீதாம்பரம் போர்த்து, பிரதானியரில் முதல்வராக இருக்கச் சொல்வதா? உன்னால் முடியாத காரியம்! உனக்காக நாங்கள் பட்டபாடு கொஞ்சமா?” என்று தாய் கேட்க, ‘அம்மா! என்னை வாட்ட வேண்டாம்...’ என்று கதறிக் கூறுகிறான் செங்கமலம். இந்தச் சிக்கலான நிலையிலே, மன்னன் இருந்தான் - மமதை வளர்ந்துவரும் நிலையில் வெங்கண்ணா இருந்தான். “கெஞ்சிப் பெற வேண்டுமா நான், தஞ்சைத் தரணி, அவனுக்கு என்னால் கிடைத்தது என்று உறுமிடலானான் வெங்கண்ணா.

பதவிப் பித்தம் பிடித்தாட்டலாயிற்று - சரி - இரண்டிலொன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று துணிந்து விட்டான் வஞ்சக வெங்கண்ணா. செங்கமலத்தை மிரட்ட
லானான். மன்னன் தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை எடுத்துரைத் தான். சீறினான் வெங்கண்ணா. அந்தச் சீற்றத்திலேவெங்கண்ணா, மன்னனை எவ்வளவு துச்சமாகக் கருதியிருக்கிறான் என்பது வெட்ட வெளிச்சமாயிற்று.

“மன்னரே!... மன்னரானவரே! மன்னராக்கப்பட்டவர் நீர் என்பதை மறப்பது நன்றல்ல! நன்றி கொன்றவருக்கு நாடாளும் பட்டம் இருந்து என்ன பயன்! காட்டு நீதி காட்டுகிறீர் - உமக்கு இந்த நாட்டைப் பெற்றுத் தந்த என்னை உதாசீனம் செய்கிறீர்...”

“என் அன்னையின் கண்ணீர்...?”

“என் கோபம்?”

“இரண்டுக்கும்தான் பயப்படுகிறேன்.”

“இரண்டில் ஒன்றுக்குத்தான் கட்டுப்பட வேண்டும். அரசு அமைத்த என்னை அமைச்சனாக்காவிட்டால்... எங்கோ கிடந்த உன்னை தஞ்சைப் பதிக்கு மன்னனாக்கிய என்னை விரோதித்துக் கொண்டால்...”

“மறையவரே! என் சிக்கல் தீர்ந்தது - வேதனை ஒழிந்தது.”

“முடிவுக்கு வந்தீரா? முடி தந்த எனக்கு...”

“நல்ல முடிவுக்கு வந்தேன்.”

“என்ன முடிவு செய்தீர்? அமைச்சர் பதவி...?”

“என் தந்தைக்கு அளிப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.”

“ஆ!... அமைச்சுப் பதவியை எனக்கு அளிக்கப் போவ தில்லையா - அழிவை அணைத்துக் கொள்ள...”

“ஆணவத்தை அழிக்கத் தீர்மானித்துவிட்டேன்.”

“ஆரியரே! உமது சீற்றமே, என்சிக்கலைப் போக்கிற்று.”

கட்டளையிட்டுப் பெற வேண்டிய என் தாய், கண்ணீர் பொழிகிறாள். கபடமே உருவானநீ, என்னை மிரட்டிப் பதவியைப் பறிக்கப் பார்க்கிறாய்.

அரசனான மகனே! என்று அன்னை அன்புடன் அழைக்கிறாள்.

ஆணவத்தோடு நீ பேசுகிறாய், என்னை அரசனாக்கியதாக.

நீயும், என் மனம் உருகப் பேசினால் என்ன செய்வது - இருவருக்கும் நான் கடமைப்பட்டவனாயிற்றே - அன்னையின் கண்ணீர் - ஆரிய நண்பனின் அன்பு மொழி எனும் இரண்டும் எம்முன் பொழியப்பட்டால், நான் மனக்குழப்பமடையத்தானே வேண்டி வரும் - யாருடைய மொழிக்குக் கட்டுப்படுவது என்று எண்ணிக் குழம்பினேன் - உன் ஆணவப் பேச்சு எனக்கிருந்த குழப்பத்தைப் போக்கிவிட்டது. என் தாயின் கண்ணீர் வென்றது.”

“நிதானமாக யோசித்துச் சொல் - சிரத்தில் இருக்கும் மூடி.”

“பரம்பரைப் பாத்யத்தின் சின்னம் - அறிந்துரைத் தாய் - அவ்வளவுதான் - அரசனாக்கினான் - எதற்கு? உனக்கு அடியமையாக இருக்கவா? இதற்கு நான் ஏன் அரசனாக இருக்க வேண்டும்! இப்போதல்லவா தெரிகிறது, உன் போக்கின் காரணம் - தஞ்சைக்கு நீ ஓர் பொம்மை ராஜா தேடுகிறாய் - அதற்கு என்னைப் பொம்மையாக்குகிறாய் - அரசனாக இருப்பேன் - இல்லையேல் சாதாரண மனிதனாக இருப்பேன் - அடிமையாக மட்டும் இருக்கமாட்டேன் - முடி தரிப்பது உனக்குப் பிடி ஆள் ஆவதற்கு என்றால், இது என் காலடியில் கிடக்கட்டும் - கவலை இல்லை - இதை வேண்டேன்.”

“அரசர், ஏட்டுச் சுரையை நம்புகிறார்.!”

“நீ உன் பரம்பரைக் குணத்திலே நம்பிக்கை வைக்கிறாய் - அரசுரிமை எனக்கு நிலைக்காதபடி செய்துவிட யோசிக்கிறாய் - முடியவும் கூடும் - ஆனால் முடிதான்போகும் என் தன்மானம் நிலைக்கும் - அரசன் என்ற பெயர் இராது; அதேபோது ஆரிய அடிமை என்ற இழி சொல்லும் எனக்கு இராது - அரச பீடத்தில் அமர்ந்திருக்கலாம்; ஆனால் ஆரியதாசனாக இருக்கச் சம்மதிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறாய், கேள், ஆணவம் கொண்டவனே! நான் தாசனாக மாறுகிறேன் - அதனால் தஞ்சைத் தரணி ஆளும் நிலை போனாலும் கவலை இல்லை.

போ! அரசு இருக்குமட்டும் அரசனாகவே இருப்பேன் - உன் அடி பணிய மாட்டேன்.

என் அன்னை வென்றாள் - போ! முடிந்த முடிவு!

“ஆம்! முடி போவதானாலும் சரி என்ற முடிவுக்கு வந்தாகி விட்டது.”

“சரி!”

எரிமலை வெடித்தது! வஞ்சகம் பீறிட்டுக் கிளம்பிற்று! வெங்கண்ணா சீறினான்! ‘சரி’ என்று கூறினானே, என்ன அதன் பொருள்? சரி, இவ்வளவுதானா, உன் நன்றி காட்டும் தன்மை என்று வெறுத்துக் கூறினான் என்பதா! செச்சே வெங்கண்ணா அல்லவா, சரி என்று சொன்னான். அண்ணன் தம்பிக்குள் பகை மூட்டிய வெங்கண்ணா! அளகிரியை அழிக்க அன்னிய நாட்டுப் படையை அழைத்துவந்த வஞ்சகனல்லவா? சரி, என்றான்! அதன் பொருள் என்ன? சரி, எனக்கு உபயோகப்பட முடியாதா, உன்னால். இனி, உன்னையும் தொலைத்து விடுகிறேன் என்பதுதான்! செங்கமலம் என் பேச்சை மறுத்துவிட்டான், எனவே, இனி அவன் மன்னனாக வீற்றிருப்பதா, நான் அதைக் காண்பதா என்று எண்ணினான். நாட்டுப் பற்றுக்கொண்டவனாக இருந்தால், வாளா இருந்து விட்டிருப்பான். வெங்கண்ணா போன்ற வன்கணாளர்களுக்கு, நாட்டுப்பற்று, நெறி, முறை எதுதான் உண்டு? யாரை அழித்தாகிலும், வாழ்வுபெற வேண்டும் - என்பது தானே அவன் போன்றாரின் எண்ணம்? எனவே வெங்கண்ணா செங்கமலத்தை ஒழித்து விடுவது என்று தீர்மானித்தான். எப்படி என்று ஒரு கணம் யோசித்தான் - உடனே புன்னகை பிறந்தது. வெண்ணெயை வைத்துக் கொண்டு, நெய்க்கு அழுவதா? வெங்காஜி இருக்கும்போது, வழி வேறு தேடவா வேண்டும் என்று மெல்லக் கூறிக் கொண்டான். வேகமாகச் சென்று வெங்காஜியைக் கண்டான்.

“வெங்காஜி! வெற்றி உம்மை அழைக்கிறது. தஞ்சை உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது அரசாள்வதற்கேற்ற அறிவாற்றல் படைத்தோனே! அரசபீடம் தயாராக இருக்கிறது - வருக!”

“வெங்கண்ணா! என்ன பேசுகிறீர்?”

“பேசுகிறேனா! அழைக்கிறேன், மகாப் பிரபோ! அரசாள வருக என்று அழைக்கிறேன்.”
“சித்த ஸ்வாதீனமற்ற.”

“நிலை அல்ல!”

“விருந்துக்கு அழைப்பதுபோல...”

“விருந்துதான்! வெஞ்சமர்தானே வீரருக்கு விருந்து. முன்னம் தஞ்சையினின்றும், தகுதியற்ற அளகிரியை விரட்ட வந்தீர் - வென்றீர் - இம்முறை, தஞ்சைக்கு அரசனாக வீற்றிருக்கும் அறியாச் சிறுவனின்ன அடாத செயலால் நாடு சீர்குலைந்து நாசமாகாமல் தடுக்க...”
“தடுக்க...”

“தஞ்சையை அவனிடமிருந்து மீட்கவேண்டும்.”

“மீட்க வேண்டுமா?”

“ஆம்! பிறகு, அரியாசனத்தைத் தாங்களே அலங்கரிக்க வேண்டும்.”

“வெங்கண்ணா, பேசுவது தஞ்சை அரசுபற்றி! வெங்காஜியிடம், மராட்டியனிடம், அந்நியனிடம். வெளிநாட்டானிடம்.”

“வெங்காஜியிடம் பேசுகிறேன் - வீரனிடம் பேசுகிறேன் - அந்நியன்! வெளி நாட்டான்! அர்த்தமற்ற வார்த்தைகள், ஆற்றலுள்ளவன் அரசனாதலே முறை.”

“புதியதோர் நீதி நூல்!”

“நீதியல்ல என்றே கூறுவர். எனினும்...”

“தேசத் துரோகமுமாமே!”

“அப்படியும் கூறுவர் - யார் எப்படிக் கூறினும், செங்கமலம் இனித் தஞ்சையை ஆளக்கூடாது - செங்கோல், ஓர் வலிவுள்ள கரத்தில் இருக்க வேண்டும் - அந்தக் கரம் - இது தமிழ் நாட்டிலே அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும் அரும்பணி புரிய இக்கரம் வேண்டும்!”

“அழைப்பது அமளிக்கன்றோ!”

“அமளிக்குப் பிறகு ஆனந்தமன்றோ!”

“ஆரிய! ராஜதந்திரப் பேச்சை நிறுத்துங்கள்; செங்கமலத்தை ஒழித்துவிடத் தீர்மானித்த காரணம்.”

“காரணம்! அவனை அரசனாக்கியதே தவறு என்பதை உணர நேரிட்டதுதான்.” வேண்டிக் கொள்வேன். தஞ்சைத் தரணி இயற்கையின் கொஞ்சு மொழியால் சீராட்டப்படுவது - காவிரி பாயும் பொன்னாடு - பொன் விளையும் பூமி - வளமிக்க நாடு.”

“உண்மை! செல்வம் கொழிக்கும் தேசம்! நீர்வளம், நிலவளம், குடிவளம் நிரம்பியது.”

“அது அருவி பாட - ஆற்றோரத்தில் அதற்கு ஏற்றபடி தமிழணங்குகள் ஆடுவர் - சோலையிலுள்ள கிளியும் குயிலும் பாட, அதற்கேற்றபடி மயில் ஆட, - மன்னவா! - முன்கூட்டியே கூறிவிட்டேன் மன்னா என்று - இத்தகைய இயற்கையின் எழில் மிக்க எமது நாடு.”
“துறைமுகங்களும் உள்ளன.”

“ஆம்! வெளி உலகுடன் தொடர்பு சுலபம் - கப்பல் வாணிபம், பண்டைக்கால முதலே உண்டு, தமிழகத்துக்கும் யவனத்துக்கும்.”

“வெங்கண்ணா! தஞ்சைத் தரணியைக் காப்பாற்றத் தயங்கேன்...”

“தஞ்சை வேந்தே! மன்னன் வெங்காஜி வாழ்க!”

“உஸ்... இதற்குள்...”

“ஏன்? இதுமுதல் என்று கூறும் - செங்கமலம் தொலைந்தேன்... வெங்காஜி வேந்தனானான் - வெங்கண்ணா வென்றான்.”

பிறகு! பிறகா? செங்கமலம் விரட்டப்பட்டான்; வெங்காஜி வேந்தனானான்! தமிழகத்திலே, மராட்டியர் ஆளவந்தனர்! சாத்பூரா மலைச்சாரலில் பிறந்த வெங்காஜி, காவிரி பாயும் தஞ்சைக்கு மன்னனானான்! மராட்டிய அரசு அமைந்தது, தமிழகத்தில்! இமயத்தில் இலச்சினையைப் பொறித்த வீரன் வாழ்ந்த தமிழகம், கனக விஜயன் தலையில் கல்லேற்றிச் சுமக்கச் செய்த தமிழகம், கடாரம் கொண்ட தமிழகம், மராட்டியரின் ஆட்சிக்கு இடமளித்துத் தாழ்நிலை பெற்றது! எப்படி? வெங்கண்ணாவின் வஞ்சகத்தால்! தஞ்சையின் வீழ்ச்சிக்குக் காரணம், வெங்கண்ணா எனும் வேதியன் என்பது, எவ்வளவு பேருக்குத் தெரியும்! தெரிந்த சிலர் கூறினாலும், எவ்வளவு பேருடைய செவியில் வீழ்ந்து, சிந்தனையைக் கிளறுகிறது! பிறந்தது தமிழகத்தில்; வாழ்ந்தது தமிழகத்தில்! பழகியது தமிழருடன்! பேசியது தமிழ் மொழி! எனினும், தமிழகத்தில் பூந்தோட்டத்தை, மராட்டியருக்குக் காட்டிக் கொடுத்தான் கயவன்! அந்நிய ஆதிக்கத்தைப் புகுத்தினான்! பொன்னும் பொருளும், போக போக்கியமும், மானியமும் பட்டயமும் பெற்றான் - பேராசை தணிந்திருக்கும். தமிழரின் தன்மானமோ - அழிந்துபட்டது; தஞ்சை வீழ்ந்தது - மராட்டிய அரசு ஆரம்பித்தது. மறத்தமிழர் நாட்டில்.

நாடு, உரிமையாளரிடம் இருக்கிறதா, அந்நியனிடம் ஆட்பட்டுக் கிடக்கிறதா என்பது பற்றிய கவலையற்று, கொடுங்கோலா, செங்கோலா என்பதைப் பற்றிய கவலையு மற்று, நமக்கு அந்தஸ்து உயர்வு உண்டா, நமது இனத்துக்கு மேலான நிலை இருக்கிறதா, பாடுபடாமல் பிழைக்கவும், பரிமளமிக்க வாழ்வு பெறவும், மேற்குலத்தோன் என்ற நிலை இருக்கவுமான முறையிலே நாடு நடத்ததப்படுகிறதா என்ற சுயநல வெறியுணர்ச்சி கொண்டு வெங்கண்ணா இருமுறை அரசுகளைக் கவிழ்த்தான் - நாட்டை நாசப் படுகுழியில் தள்ளினான்! இதுபோல, பரந்த இந்தத் துணைக் கண்டத்தில், வஞ்சகம் வென்றதைக் காட்டும் வேதனைதரும் நிகழ்ச்சிகள் பலப்பல நடைபெற்றன! அரசுகள் அழிக்கப்பட்டன - அறம் அழிக்கப்பட்டது - நாடு சீரழிவு பெற்றது. சுயநலமும் சூழ்ச்சித் திறனும், இனவெறியும், வைதீக வெறியும் கொண்டவர்கள் நாட்டுக்கு ஏற்படுத்திய நாசம், ஒன்றிரண்டு அல்ல - உள்ளத்தைக் குலுக்கக்கூடிய சம்பவங்கள் பலப்பல! தஞ்சை வீழ்ச்சி, அது போன்ற சம்பவங்களிலே ஒன்று! சரிதம் தரும் எச்சரிக்கை!

(திராவிட நாடு - 1953)