அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

தஞ்சை வீழ்ச்சி
3

அரசர்களை உண்டாக்க முடியும், அளகிரி! ஆரியன், பிறக்க மட்டுமே முடியும். வெங்கண்ணா ஓர் வேதியன் - போர்வீரனா என்று எண்ணி அல்லவா, என் பேச்சைக் கேட்க மறுத்தாய் - மூடனே! நீ அறியாய் வெங்கண்ணா எந்தப் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதை.

“நீ அதனை அறியும்படியாகச் செய்கிறேன்.”

“அளகிரி! அந்தணர்களை ஆதரி!”

“ஏன் அந்தணரை மட்டும் குறிப்பிடுகிறீர்! மற்றவர் மக்களல்லவோ?”

“எவ்வளவு மமதையோடு பேசினாய் - என்னை மதிக்க மறுத்தாய் - நீ மண்டலாதிபதி! இருந்தால் என்ன? இனி மண்டலத்துக்கு வேறு அதிபதியைத் தேடுகிறேன், பார். வெங்கண்ணா வீரனல்ல... வேதியன்... தசரதனல்ல; வசிஷ்டன் - அரசனல்ல... ஆரியன் - பார் அவன் ஆற்றலை.

உனக்கு நான், புதைந்து கிடந்த பொக்கிஷத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தேன் - எதற்கு?

என் குலத்தவருக்குச் செலவிட மனம் இல்லை உனக்கு. ஆரிய சேவை செய்ய மறுக்கும் இந்த அளகிரியை அழித் தொழித்தாக வேண்டும்.”

என்று எண்ணியபடி அரண்மனையை, விட்டுக் கிளம்பினான். மூளை வேகமாக வேலை செய்யத் தொடங்கிற்று - துஷ்ட மிருகங்களுக்குக் கண்கள் இரவிலேதான் ஒளிபெறுமாம் - அதுபோல வஞ்சகத் திட்டம் வகுக்கும்போதுதான் வெங்கண்ணாவின் புத்தி மிகக் கூரிமையாக வேலை செய்யலாயிற்று. இனி நாம் நமது கற்பனைக் காளையும் கலைக் கன்னியும், என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

செங்கமலத்தை அரசனாக்க வேண்டும் என்றல்லவா அவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். அவர்கள் திட்டம் ஏதும் கொண்டில்லை, தஞ்சைத் தரணியை ஆளும் உரிமை கொண்ட செங்கமலம், எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான்! அவனை அரசனாக்குவது, நாட்டுப்பற்று கொண்டோருடைய கடமை என்பதை எடுத்துக்கூறி, மெல்ல மெல்ல ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் அளகிரியிடம் விரோதம் கொண்ட வெங்கண்ணாவின் உதவிகிடைக்கும் என்று ஆவல் கொள்வது இயற்கைதானே! வஞ்சக வெங்கண்ணாவுக்கும் உரிமைக்காக உயிர் கொடுக்கவும் துணிவுடன் பணியாற்றி வந்தவர்களுக்கும் தொடர்பு ஏற்படாமலிருக்க முடியுமா? செங்கமலம் எனும் அரச குமாரன், நாகப்பட்டினம் செட்டியார் மாளிகையில் இருக்கும் ‘செய்தி’ கிடைத்ததும் கூர்மையான கருவி கிடைத்ததாக எண்ணிக் களித்தான் வெங்கண்ணா. அளகிரியை அழிக்க அபூர்வமான கருவி கிடைத்து விட்டது என்று எக்காளமிட்டான். திட்டம் மேலும் உருவெடுத்தது. கூறுவானா யாரிடமாவது? ஏமாளியா, கூற! திட்டத்தின்படி காரியத்தைச் செய்யக் கிளம்பினான். எங்கு? நாகைக்கா! ப்பூ! அங்கு இலட்சியவாதிகள் செல்லுவர்; இவனோ காரியவாதி. இவன் சென்ற இடம், பீஜபூர்.

பீஜபூரில், சுல்தான் ஆண்டு வந்தான், அங்கு மராட்டிய மாவீரன் சிவாஜியுடைய தம்பி, வெங்காஜி பெரும் பதவியில் வீற்றிருந்தான். படை பலம் கொண்ட வெங்காஜியிடம், வஞ்சகத்தை ஆயுதமாகக் கொண்ட வெங்கண்ணா சென்றான்!

வெங்காஜி, நிலைமையை அறிந்து கொண்டான். வீர வெற்றிகள் பெறலாம் என்ற எண்ணம், தூண்டிற்று. மாவீரன் சிவாஜி போலவேதான் அவன் இளவலும் ரணகள சூரன் எனப் ‘பாரத்வர்ஷம்’ புகழும் என்று எண்ணினான். அளகிரிக்குத் துணைபுரிய மதுரை சொக்கநாதன் வரமாட்டானென்ற செய்தி, வெங்காஜிக்கு மேலும் தைரியமூட்டிற்று. கிளம்பின படைகள்! வெங்கண்ணா, ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தஞ்சை சென்றான்.

மாற்றானுக்கு இடங்கொடேல் என்ற முதுமொழிக்கும் மனு வழி பிறந்தவரின் திட்டத்துக்கும், முரணாக இருக்கிறதே - இதனை எங்ஙனம் பிறர் ஒப்புவர் என்று கேட்கத் தோன்றும் எவருக்கும், இலட்சியத்தை முன்வைத்து, அளகிரி ஆண்டு வந்த தஞ்சையை, உரிமை பெற்ற செங்கமலத்துக்குப் பெற்றுத் தருவதைக் கடமை என்று கருதினர் அவர்கள். வெங்கண்ணா வேற்று நாட்டவனைக் கூட்டிக் கொண்டு வந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கத் துணிந்து விட்டதை அவர்கள் என்ன கண்டார்கள்? அவர்களுடைய நோக்கமும் நேர்த்தியானது; முறையும் சிலாக்கியமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். சுயநல நோக்கம் கொண்ட வெங்கண்ணா சூழ்ச்சித் திட்டத்தைத்தானே முறையாகக் கொள்வான். யார் தடுத்தாலும் கேட்கவா செய்வான்? தடை செய்பவர்களைத் தகர்த்திடத் துணிவான். செங்கமலத்துக்காக அவர்கள் கிளம்பினர்! வெங்கண்ணாவோ, அளகிரியை அழிக்கக் கிளம்பினான் - மற்றவர்கள் அவனுக்கு வெறும் கருவிகள்.

“வெங்கண்ணா! என்ன? போன காரியம் முடிந்ததா? நமது கனவு நனவாகுமா?”

“வெற்றியை வெங்கண்ணா அழைக்கும்போது யாரால் அதனைத் தடுக்க முடியும். அளகிரி, அரசு சாஸ்வதம் என்று எண்ணிக்கொண்டு என்னை உதாசீனம் செய்தான் - அலட்சியப் படுத்தினான் - அவமானப் படுத்தினான்...”

“ஆரிய! சுயசரிதத்தைப் பிறகு கூறுமே! என்ன ஏற்பாடு செய்தீர், செங்கமலத்தை மன்னராக்குவதற்கு? அதைச் சொல்லும் முதலில்.”

“அளகிரியைத் துரத்திக் கொண்டு அழிவு வரப்போகிறது - அரசு அவனிடமிருந்து பறிக்கப்பட்டு - நமது செங்கமலத்திடம் தரப்படும் - நீதான் ஆஸ்தான கலாவாணி - உனக்கு உயரிய அந்தஸ்து - நமது நற்காலம் ஆரம்பமாகிறது. ஆயாசமடையாதீர் - நாம் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை சிசலேகா! என்னைச் சாமான்யனென்று எண்ணினால் அந்தத் துஷ்டன். வேற்படைக் காரனா, வேதமோதிதானே என்று எண்ணி இறுமாப்புடன் என்னை எதிர்த்துப் பேசினான். பார், லேகா! இன்னும் சில நாட்களிலே - அடுத்த வெள்ளியன்று - அளகிரியை அழிக்கவரும் பிரம்மாண்டமான படை கிளம்பப் போகும் தூளி, அளகிரி வாழும் அரண்மனையைச் சூழ்ந்து கொள்ளப் போகிறது. பாண்டிய மன்னனின் தம்பி, போரிலே புலி! வருகிறார்கள், இந்தப் புலியைக் கொல்ல, வேட்டைக்காரர்கள்.”

“படையா? எவ்விடமிருந்து? யார் அழைத்து வருகிறார்கள்? தஞ்சைப் பகுதியின் கோடி பாகங்களிலே இருந்து படை திரட்டினீரா?”

“படையைத் திரட்ட வேண்டுமா? திரட்டப்பட்டுத் தயாராக இருப்பதும், திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டி வருவதுமான, ஒரு வல்லரசின் படையை அல்லவா, அளகிரியைத் தொலைக்க வரச்செய்திருக்கிறேன். நாட்டிலே அளகிரி ஒருவன்தானா மன்னன். இவன் ஒருவனிடம் மட்டும் தானா படை இருக்கிறது.”

“வெங்கண்ணா! விளக்கமாகக் கூறுங்கள் - எந்தப் படை? நான் விடுதலைப் படையை தஞ்சைத் தரணியிலுள்ள சுந்தர வீரர்களைக் கொண்டே அமைக்க வேண்டுமென்றேனே! நீர் கூறும் படை எவ்விடத்தது?”

“விடுதலைப் படைதான் இதுவும்! ஆணவ அளகிரியிடமிருந்து தஞ்சையை விடுவிக்கப் போகும் படை - வீரப்படை - வெற்றிப் படை - இந்த வேதியின் சுட்டுவிரல் காட்டும் திக்கைச் சுடுகாடு ஆக்கும் சக்தி வாய்ந்த சண்ட மாருதப் படை - டில்லி பாதுஷாவையும் எதிர்க்கக் கூடிய படை - சசிலேகா! பராக்கிரம மிகுந்த பீஜபூர் சுல்தானின் படை வரப்போகிறது! நமக்கு உதவி புரிய.”

“என்ன! என்ன! வெங்கண்ணா! பீஜபூர் படையா? சுல்தானின் சேனையா?”

“ஆமாம்! வெங்கண்ணாவைச் சாமான்யமென்றானே அளகிரி.”

“ஆஹா! வெங்கண்ணா! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? நாசத்தைக் கூட்டிக்கொண்டு வருகிறாயே. நமது நாட்டிலே நியாயம் பெறுவதற்கு! நாம் போராடலாம், புரட்சி நடத்தலாம். சதிகூடச் செய்யலாம். நாட்டுப் பற்றுக் கொண்ட வீரர்களை எல்லாம் திரட்டலாம் - நியாயம். ஆனால் இதற்காக அன்னிய நாட்டானையா அழைத்து வருகிறீர் - தேசத்தை நாசமாக்கும் காரியமாகுமே அது. தஞ்சைமீது பீஜபூர் படைகள் பாய்ந்தால், பிறகு சர்வநாசம் ஏற்படுமே. அளகிரி மட்டுமா, அழகு தஞ்சையே அழிந்து விடுமே. அன்னிய ஆட்சி ஏற்பட்டுவிடக்கூடுமே.”

“வீண் பீதி! பீஜபூர் படை நமக்குச் செய்யும் உதவிக்காகக் கொஞ்சம் பணம்தர ஒப்புக் கொண்டேன். அவ்வளவுதான். ஆட்சி நமது இஷ்டப்படி செங்கமலத்துக்குத்தான். அதிலே சந்தேகம் வேண்டாம். நான் ஏமாளியல்ல.”

“நீ ஒரு எத்தன்!”

“நாவை அடக்கிப் பேசடா, நல்லறிவற்ற நாயே.”

“ஆஹா! அடே, வஞ்சகா! தேசத்துரோகி! என்னையா கேவலப்படுத்தத் துணிந்தாய்.”
(வீரன் வாளை வீசி மார்புக்குக் குறி பார்க்கிறான் - சசி இடையே நின்று கொண்டு)

“வாளை என் மீது வீசு முதலில். வெட்கமில்லையா உங்கட்கு. பொது விரோதியை ஒழிக்க வேண்டிய சமயமிது. இந்தச் சமயத்திலே போர் முறை பற்றிய விவாதத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதா. வெகு அழகு.”

“சசி! உன் மதி கண்டு மகிழ்கிறேன். இவன் கருத்தறியாக் காளை. கண்டபடி பேசுகிறான். கடுங்கோபம் எழச் செய்கிறான். அளகிரியின் படையை, இவனுடைய வாள் வென்றுவிடுமா! துள்ளுகிறான் வீரன்! அளகிரியின் படையை எதிர்க்க, அதைவிடப் பெரியதும், வலிவுள்ளதுமான படையைக் கூட்டி வருவதுதானே யுத்தம்?”

“அதுதான் இல்லை என்கிறேன். வருகிற படை, அளகிரியையும் விரட்டிவிட்டு, தஞ்சையையும் ஆக்கிரமித்துக் கொண்டால்...?”

“வீண் சந்தேகம்...!”

“சந்தேகம் வீண், விபரீதம் என்று எது வேண்டுமானாலும் சொல்லு. ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது?”

“நேரிடாது.”

“என்ன உறுதியின் மீது அதனைக் கூறுகிறீர்!”

“என் அறிவு எனக்குக் கூறுகிறது.”

“அறிவு! அன்னியனிடம் அடைக்கலம் புகுந்து, நம் நாட்டு அரச விவகாரத்தைத் தீர்த்துக் கொள்வது நியாயமல்ல. கேடு நிச்சயம் நாட்டுக்குத்தான்.”

“பீஜபூர் படையை வரவழைப்பது தவறு என்று பேசுகிறாயே; நியாயம், சரி, அளகிரியின் படையை எதிர்த்து நாம் மூவர் என்ன செய்ய முடியும்.”

“நாம் மூவர், கருத்துடன் சிறிது பொறுமையுடன் வேலை செய்து வந்தால், அளகிரியின் படைவரிசையிலேயே பிளவு உண்டாக்க முடியும். தஞ்சையில் வீரர்கள் கிடைக்காமற் போகமாட்டார்கள். படையில் மட்டுந்தான் போர் வீரர்கள் உள்ளனர் என்று எண்ணாதீர். பொதுமக்களுக்குச் சமயம் நேரிட்டால், படைகளையும் எதிர்த்துப் போரிடமுடியும் - தெரியும் - நாம் உள்நாட்டிலேயே ஓர் உத்தமப் படையை நிறுவ முடியும் - அதன் மூலம் வெற்றி பெற முடியும் - வெளி நாட்டான் உதவி இன்றி, நீர் செய்திருக்கும் ஏற்பாடு, கடைசியில் தஞ்சையை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதாகவே முடியும்.”

“நான் உன்னிடம் வாதிடப் போவதில்லை. என் ஏற்பாடு முடிவானது. தீர்மானம் மாற்ற முடியாதது. பீஜபூர் படைகள் தஞ்சைத் திசையை நோக்கிப் புறப்பட்டு விட்டன.”
“பெரிய பாதகம் புரிகிறாய்.”

“எது எப்படி ஆவதானாலும் எனக்கு அக்கறை இல்லை-, என்னை அரச அவையிலே, ஆணவத்துடன் அவமதித்த அந்த அளகிரி அழிய வேண்டும் - அவனுடைய கொற்றம் கவிழ வேண்டும் - என்னை விரோதித்ததன் பலன் என்ன என்பதை அவிவேகி உணர வேண்டும் - அளகிரி - இரு, வருகிறது படை; வேதிய வெங்கண்ணாவின் வீரப்படை.”

“சசி! கேட்டாயா கெடுமதியாளன் பேச்சை!வருகிறதாம் படை - எதற்கு? செங்கமலத்தை மன்னராக்குவதுகூட இரண்டாந்தரமான வேலை - முதல் வேலை, முக்கியமான வேலை - இந்த மகானபாவரின் மனோ பீஷ்டத்தை நிறைவேற்றுவது. எவ்வளவு சுயநலம் பார்த்தாயா! அளகிரி மீது வஞ்சம் தீர்த்துக் கொள்வதிலேதான் இந்த ஆரியனுக்கும் அக்கரையே யொழிய, தஞ்சையைச் செங்கமலத்திடம் தருவது அல்ல இவன் குறிக்கோள் செங்கமலம், நான், நீ யாவரும் இவனுக்குத் கருவிகள் - துரோகி! இவனை நான் துளியும் நம்ப முடியாது.”

“வீராதி வீரனே! இப்படி என்னைக் கைவிடலாமா? உன்னை மலைபோல நம்பித்தானே இந்தக் காரியத்தில் இறங்கினேன்... எப்படி? போதுமா, இன்னமும் கொஞ்சம் பணிய வேண்டுமா, உன்னிடம்? முட்டாள்! உன் உதவியை எதிர்பார்த்தா நான் இந்த விவகாரத்தில் இறங்கினேன். எவ்வளவு பெரிய படை எனக்கு ஏவல்புரியக் கிளம்பி இருக்கிறது. வீர வெங்காஜியின் தலைமையில்! வெங்காஜி யார் தெரியுமா? சிவாஜியின் தம்பி! சிவாஜி யார் தெரியுமோ? காகுபட்டரின் சிஷ்யன்! காகுபட்டர்யார் தெரியுமோ? என் குலம் - என் இனம் - ஆரியன்! அறிவற்றவனே! உன்னுடைய அட்டகாசத்தை இனி அனுமதிக்கப் போவதில்லை! (கை தட்ட நாலு பேர் ஓடி வருகிறார்கள்) உம்! முதல் கைதி!”

(கத்தியை வீசுகிறான் - நால்வர் பாய்கின்றனர். சசியின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறான் வெங்கண்ணா, வீரன் கைது, கைகால் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்
படுகிறது.)

“ஆரம்பமே இப்படியா? வெங்கண்ணா! அவரை விடுவிக்கச் சொல்!”

“உன் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். பீஜபூர் படையினால்தான் அளகிரியைத் தோற்கடித்துச் செங்கமலத்துக்கு அரசு தரமுடியும். அதனை உணராது ஆர்ப்பரிக்கும் இந்தக் காளையை அந்தப் படை இங்கு வரும்போது வெளியே விட்டுவைப்பது, ஆபத்தாக முடியும். ஆகவே நிலைமையிலே உள்ள கொந்தளிப்பு தீரும் வரையில்...”

“சிறையிடத் தீர்மானமா?”

“சிறையல்ல, சேல்விழியே! சீற்றம் கொள்ளாதே! என் பாதுகாப்பில் வைத்திருக்க உத்தேசம். அவனை மட்டுமல்ல, உன்னையும்தான் -” கை தட்டுகிறான். பணியாட்கள் வருகிறார்கள். அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறான். “உம்! இரண்டாம் கைதி! - இந்த லாவண்யவதியை அழைத்துச் செல்லுங்கள்.”

முறையல்ல, நெறியல்ல என்று கூறுவதற்கு எவர் முன் வந்தாலும், இதுதானே நடந்திருக்கும். வெங்கண்ணாவின் வெறி வேறு - இலட்சியவாதிகளின் ஆர்வம் முற்றிலும் வேறானது. நான் காட்டிய கற்பனை வீரன் போன்றாரும் கலை மங்கை போன்றாரும், கபடனாம் வெங்கண்ணாவின் பாதையிலே குறுக்கிட்டால், வெஞ்சிறைதானே கிடைக்கும்! மரணமும் கிடைக்கும். இலட்சியத்துக்காக உழைக்க முன் வந்த கற்பனை வீரனும் கலை மங்கையும், சிறையில் இருக்கட்டும். அளகிரியைக் காண்போம். மராட்டிய வீரன் வெங்காஜி அழைத்து வந்த சுல்தானின் படைகளை, எதிர்த்து நிற்கும் ஆற்றல் அளகிரிக்கு இல்லை. துளியும் எதிர்பாராத நேரத்தில், கொஞ்சமும் எதிர்பாராத இடத்திலிருந்து பலமான தாக்குதல் கிளம்பவே, அளகிரி திகைத்துப் போனான். வெளிநாட்டிலிருந்து படைகளைக் கூட்டிவரும் அளவுக்கு வஞ்சகனான வெங்கண்ணா, தஞ்சைத் தரணியிலே உள்நாட்டுத் துரோகிகளைத் திரட்டாமலா இருந்திருப்பான்? அளகிரியினால், அழிவைத் தடுக்க முடியவில்லை. மதுரை சொக்கநாதனோ, தம்பி அளகிரியின் புத்திக்குத் தக்க பாடம் கிடைக்கட்டும் என்று இருந்துவிட்டான். பீஜபூர்படைகளை ஒழிக்க, அளகிரிக்குத் துணையாக வரவில்லை. தனி அரசல்லவா, தனி அரசு! எவ்வளவு நெஞ்சழுத்தம், அளகிரிக்கு! படட்டும், படட்டும் - எக்கேடோ கெடட்டும்; கெடட்டும் என்று இருந்துவிட்டான். அளகிரி தோற்றான் - படைகள் - சின்னாபின்னமாயின - வெங்காஜி வெற்றி முரசு கொட்டினான் - வெங்கண்ணா வெற்றி வெறியானான். அளகிரி நாட்டைவிட்டு ஓடி ஒளியலானான்! வெங்காஜியின் படை துரத்திச் சென்றது. கடைசியில் அளகிரி அரியலூர் காட்டிலே சென்று ஒளிந்து கொண்டான். தன் நிலைமையை எண்ணி எண்ணிக் கதறினான் - மனம் குழம்பி விட்டது - பித்தம் பிடித்தலைந்தான். வேந்தன் பித்தனானான். வேதியன் வெற்றி வீரனாகத் தஞ்சையில் உலவி வந்தான்!!

“அந்தோ, அழிந்தேன்! மூடன், கபடனுக்கு இரை
யானேன்! வஞ்சக வெங்கண்ணாவின் சதியால் வீழ்ந்தேன்.”

அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஆரியனே! உன்னை நான், அரசு அவையிலே வீற்றிருக்க அனுமதித்தேன் - உன்னுடைய மோசமான கருத்தை உணரவில்லை.

அரசு நம்மிடம்! படை பலம் நம்மிடம்! இவனிடம் என்ன இருக்கிறது?

போரில் நாம் புலி! இவனுக்குப் போர்த்தொழில் என்ன தெரியும் என்று எண்ணி ஏமாந்தேன்.

வாள் என்னிடம்; வஞ்சகம் அவனிடம்! படை என்னிடம்; கபடம் அவனிடம்! அந்தோ! நான் வீழ்ந்தேன் - விரட்டப்பட்டேன். என் பரம்பரைக்கே பழி தேடிக் கொடுத்தேன்! முத்தமிழ் முழங்கும் தமிழகத்தை, மராட்டியப் படையிடம் ஒப்படைத்து விட்ட பெரும்பாவியானேன்! எல்லாம் அந்த வஞ்சகனால்!
அவனுடைய பேராசைக்கு இடமளிக்க மறுத்தேன் - அவன் என்னை அரச பீடத்திலே ஓர் பதுமையாக இருக்க அல்லவா ஏற்பாடு செய்தான் - அளகிரி - எப்படி அதற்குச் சம்மதிக்க முடியும்? வீரக் குலத்தில் உதித்து, எப்படிப் பஞ்சாங்கக்காரனிடம் பணிய முடியும்?

பாவி! படுமோசம் செய்தானே! பீஜபூரானை ஏவினான் - நாட்டுக்குத் துரோகமல்லவா என்று எண்ணினானா - மக்களுக்குக் கஷ்டமல்லவா என்று நினைத்தானா - நண்பனுக்குத் துரோகமாயிற்றே என்று நினைத்தானா?

இரத்தத்தைக் குடித்தலையும் புலியே, நீ அவ்வளவு துரோகம் செய்யமாட்டாய்!

நயவஞ்சகத்தைக் கற்றுக் கொள்ள, நாட்டுக்கு ஓடு, நரியே! அங்கே உனக்கு நல்ல ஆசான் கிடைப்பான், வஞ்சக வெங்கண்ணா!

புல்லிலே படுத்திருந்து, நடப்பவரைக் கடிக்கும் பாம்பே! உனக்கு இல்லை அவ்வளவு விஷம்! நீ ஆளை மட்டுமே கொல்வாய் - அவன் அரசைக் கொன்றான்!

அந்த வஞ்சகனுடைய பேச்சைக்கேட்டு, என் அண்ணனுக்குத் துரோகம் இழைத்தேன். தன் வீரதீர பராக்கிரமத்தால், தஞ்சையை வென்று, தம்பிக்குத் தரணி ஆளும் தகுதி கிடைக்கட்டும் என்று அன்புடன் என்னைத் தஞ்சைப்பதிக்கு அரசனாக்கினான் - என் அண்ணன்.

நான் நன்றி கெட்டவன்! துரோகி! என் அண்ணனையே எதிர்க்கத் துணிந்தேன். தஞ்சை தனி அரசு! என்றல்லவா பிரகடனம் செய்தேன். எவ்வளவு ஆணவம் எனக்கு? அண்ணன் என்ன எண்ணுவான்? துரோகமல்லவா என்று நினைத்தேனா! இல்லை; வெறி! வஞ்சன் ஊட்டிய வெறி என்னைப் பிடித்து ஆட்டிற்று! மதுரை மண்டலத்துக்குத் தஞ்சை சிற்றரசு அல்ல என்றேன் - தனி அரசு என்றேன் - தனி அரசு! தனி அரசா? ‘சனி’ அரசு கண்டேன்! இதோ, காட்ட அரசானானேன்.

பீஜபூர் படை வந்திருக்குமா, தஞ்சையும் மதுரையும் ஒரு சக்தியின் இரு கூறுகள் என்ற நிலை இருந்திருப்பின். வந்திருப் பினும், பாண்டிய நாட்டுப் படைகள் பாய்ந்து வந்து மராட்டியரைத் தாக்கி, என் மானத்தைக் காத்திருக்குமே!

துரோகி நான்! என் அண்ணனுக்கே கேடு செய்தேன் - நாடு இழந்தேன் - காடு சுற்றகிறேன் - காட்டிலே துஷ்டமிருகங்களாவது என்னைக் கொன்று போடக் கூடாதா? எல்லாம் மிரண்டு ஓடுகின்றனவே!

அளகிரிக்கு, அரியலூர் காடுதான் அரண்மனை... அளகிரி!

படுமனமே, படு! பார்ப்பனன் பேச்சைக் கேட்டாய்! படு, மனமே படு!

அளகிரி! அலைந்து திரி, அரியலூர்க் காட்டிலே! ஆரியன் உன் நாட்டிலே - அரண்மனையிலே உலவுகிறான். நீ காட்டிலே அலைந்து கொண்டிரு.

வேண்டும் எனக்கு. இதுவும் வேண்டும். இதற்கு மேலும் வேண்டும் - வஞ்சக வெங்கண்ணாவின் கொஞ்சு மொழியை நம்பிய எனக்கு இதுபோதாது - அரியலூர்க்காடு!

அண்ணா! சொக்கநாத பூபதி! இதோ, புது ராஜ்யம்! அரிய லூர்க்காடு! நான்தான் இங்கே ராஜா! என் பிரஜைகள், ஓநாய், நரி, பாம்பு, புலி, கீரி, காடை, கழுகு... ஏராளம்! ஏராளம்!

“அரியலூர் அரசன் அளகிரி வருகிறார், பராக்! பராக்!”

பித்தம் பிடித்த அளகிரி பிதற்றினான்; கதறினான்; அரியலூர்க் காட்டிலே அலைந்து, அலைந்து, மாண்டு போனான். மணிமுடிதரித்து, படை பல திரட்டி வாழ்ந்து வந்தான். வஞ்சக வெங்கண்ணாவால் வீழ்த்தப்பட்டான்; வேதிய வெங்கண்ணாவின் மமதை மலையென வளரத்தானே செய்யும்? மராட்டிய வீரனுக்ச் சன்மானங்களை வழங்கினான்; பீஜபூர் படைகளுக்குப் பரிசுகள் வழங்கினான். கேவலம் ‘ராயசம்’ வேலை பார்த்து வந்தான் - கணக்கெழுதும் வேலை - அவன், ‘ராஜாங்கப் பொக்கிஷத்தைத் திறந்து, சிவாஜியின் தம்பிக்கு வெகுமதிகள் அளிக்கிறான்!

வாள் ஏந்தி அறியான்! களத்திலே கிளம்பும் ஒலிகேட்டாலே உயிர் போகும் விதமான மனத்தினன் - அவன், தஞ்சைத் தரணியிலே தன்னிகரில்லா வெற்றி வீரனாக விளங்குகிறான்.

செங்கமலம் அரசனானான் - வெங்கண்ணாவின் திறமே இதற்குக் காரணம் என்று வியந்தனர் சிலர் - அவனுடைய ஆற்றலைக் கண்டு பயந்தனர் பலர் பீஜபூர் படைபெற வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டு, திரும்பிச் சென்றுவிட்டது. செங்கமல மன்னன் ஆட்சி ஆரம்பமாயிற்று! வெங்கண்ணா இனித் தன் ஆதிக்கத்துக்குக் குறைவு இல்லை என்று எண்ணினான். செங்கமலம், பெயருக்கு மன்னனாக இருக்கட்டும் - ஆட்சி, அதிகாரம் நம்மிடம் இருக்கும் என்று திட்டமிட்டான். முடி அவனிடம்; பிடி, நம்மிடம் என்று எண்ணினான். வெங்காஜி, தஞ்சையைவிட்டுப் போகுமுன்பே, தஞ்சைத் தரணி வெங்கண்ணாவின் அதிகாரத்தின் கீழ்த்தான் சிக்கிவிடும் என்பதை அறிந்தான் - யூகமுள்ள எவருக்கும் தெரியக்கூடியதுதானே அது. விடைபெற்றுக் கொள்ளும் போது, வெங்காஜியும் வெங்கண்ணாவும், எவ்வண்ணம் உரையாடல் நிகழ்த்தியிருப்பர்? எண்ணிப் பாருங்கள்.