அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

தஞ்சை வீழ்ச்சி
2

நாகப்பட்டினம், நேர்த்தியான துறைமுகம் அன்று. வணிகர் கோட்டமாக விளங்கிற்று. அந்த நகரிலே செல்வம் குடி கொண்ட மாளிகை ஒன்றில்...

வேந்தன் விஜயராகவன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மாண்டனர் - ஒரு குழந்தை தவிர என்று கூறப்பட்டி ருந்ததல்லவா! அந்தக் குழந்தை சிறுவனாகி செங்கமலம் என்ற பெயருடன், அந்த மாளிகையிலே இருந்து வருகிறான்.

வணிகனின் மகன் என்றே நாகப்பட்டினத்தார் அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தஞ்சைத் தரணிக்கு மன்னனாகும் உரிமை கொண்டவன் இந்தச் செங்கமலம் என்பது ஓரிருவருக்குத்தான் தெரியும். சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த உண்மையை அறிவிக்க சிலர் இரகசியமாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். செங்கமலத்தைத் தஞ்சைத் தரணிக்கு மன்னனாக்க வேண்டும் என்பது, நாட்டுப் பற்றும், நல்லெண்ணமும் கொண்ட சிலருடைய எண்ணம். யாரார் அவ்விதம் எண்ணம் கொண்டி ருந்தனர்? இரகசியமல்லவா அது? வெளியே தெரியாது! அப்படிச் சிலர் உண்டு - விஷயத்தை விளக்கமாக்குவதற்காக, நான் காட்டியுள்ள கற்பனைக் காளை கலைக்கன்னி மூலம் இதை அறிந்து கொண்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்ன தோன்றும் அவனுக்கு? ஆஹா! இது சரியான வழி! தனியாகப் போரிட்டு நாம் அழிவதைவிட, தக்க சமயத்தை உண்டாக்கிக் கொண்டு, தஞ்சைத் தரணிக்கு உண்மையை உரைத்திடலாம் - தக்க சமயம் வருவதற்காக, நாகப்பட்டினத்தில் செங்கமலம் இருந்துவரும் விஷயத்தைத் தக்கவரிடம் கூறி, மெல்ல மெல்ல ஆதரவு திரட்டவேண்டுமென்றுதானே தோன்றும்! தோன்றினால், விஷயம் வெளியாகாவண்ணம் பக்குவமாக நடந்து கொண்டு, ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபடுவானல்லவா! சரி, நமது கற்பனைக் காளையும் கலைமங்கையும், இந்தக் காரியத்திலே ஈடுபடட்டும்; வேறு சிலர், என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதைக் கவனிப்போம். வாருங்கள், மீண்டும் தஞ்சைக்கு.

அதோ, செல்கிறான், ஒரு வேதியன்.

கணக்கெழுதுபவன் - ஏழ்மை நிலைமைதான் - எண்ணமோ, ஏழடுக்கு மாளிகை மீது செல்கிறது - அத்துடனும் நிற்கவில்லை - மேலே மேலே எழுகிறது!

எழுதுகோல்தான், கரத்தில் - எனினும் எண்ணமோ, செங்கோலைப் பற்றிய திட்டங்களிலே பாய்கிறது.

அரசாங்கக் கணக்கெழுத அமர்த்தப்பட்டவன்தான் - ஆனால் அவன் தஞ்சையின் தலை எழுத்தை மாற்றி எழுத வேண்டும் என்ற துணிவு கொண்டிருக்கிறான். வேதியன் - வஞ்சகன் - வெங்கண்ணா எனும் பெயருடையான் - என் கற்பனையில் உதித்தவனல்ல - உண்மை உருவம் - தஞ்சையின் உரிமைக்கு உலை வைத்த உலுத்தன்.

அளகிரி ஆள்கிறான் - பிராமணர்கள் வாட்டமடைகிறார்கள் - அவன் ஆரிய விரோதி அல்ல - எனினும் அவன் விஜயராகவன் அல்ல! விஜயராகவனாக இருக்க வேண்டுமானால், பணம் ஏராளமாக வேண்டுமே! அளகிரியிடம், அதிகமான செல்வம் குவியலில்லை - போரில் சிக்கிச் சீரழிந்த தஞ்சையை மீண்டும் வாழவைக்கும் அளவுக்குத்தான், செல்வம் திரட்டமுடிந்தது. விழாக்கள் இல்லை - விருந்துகள் மிகமட்டம் - தானாதிகாரியமோ சரிவர நடைபெறவில்லை - அரண்மனையிலே கலை இல்லை - ஆலயத்திலே முன்போலக் ‘காணிக்கை’ கொட்டவில்லை. எனவே பிராமணர்களின் முகத்திலே மலர்ச்சி இல்லை; மனதிலே புகைச்சல் மூண்டு வந்தது. வெங்கண்ணாவோ, பெரியதோர் திட்டம் போட்ட வண்ணம் இருந்து வந்தான். அவனையொத்த வர்களிடம் பேச நேரிட்டபோது, தன் மனதிலுள்ள இரகசியத்தை வெளியிடாமல், ‘சூசகமாக’ப் பேசலானான்.

“என்ன ஸ்வாமி விசாரம்?”

“ஒன்றுமில்லை - விசாரத்துக்குக் காரணம் ஒன்றா இரண்டா கூற.”

“விஜயராகவருடைய காலம் போய்விட்டதே என்ற ஒன்றே போதும், நமக்கெல்லாம் விசாரம் தர. மன்னன் என்றால் விஜயராகவனல்லவா மன்னன்! எவ்வளவு தான தருமங்கள் - எவ்வளவு பகவத் ப்ரீதி - எவ்வளவு பிராமண பக்தி - உம்! எல்லாம் பழங்கதையாகிவிட்டது.”

“ஸ்வாமி! அளகிரியின் சுபாவம் எப்படி?”

“அதையேதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் - அதே சிந்தனைதான். பாண்டியநாடு, தமிழ் மரபில் விசேஷ அக்கரை இருக்கிறது.”

“வீரன்!”

“விவேகியுங்கூடி! உம்! வேதியருடன் அளவளாவு வதிலே. நாயக்க மன்னர்கள்போல விசேஷ சிரத்தை காணோம்.”

“கொஞ்சமும் இல்லை என்று கூறும் வெங்கண்ணா!”

“வெற்றி கிடைத்தது வீரர்களால் - சரி - கிடைத்த வெற்றிக்கு ஒரு சந்தோஷக் கொண்டாட்டம் நடத்தி, பிராமணருக்கு ஒரு தான தருமம் செய்தானா? விசேஷ யாகாதிகள் உண்டா? கைங்கரியம் உண்டா?”

“செய்ய உத்தேசமிருக்கிறதா இல்லையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.”

“இதென்ன அப்படிப் பேசுகிறீர்? செய்ய மனமிருந்தால், தடை என்ன செய்வதற்கு?”

“பணம் இல்லை! கிடைத்தால் செய்வானா என்பது பற்றியே சிந்திக்கிறேன்.”

“எங்கிருந்து இனிப் புதிதாகக் கிடைக்கப் போறது பணம்?”

“பணம் கிடைக்கும்! வழி இருக்கிறது! எனக்குத் தெரியும்! ஆனால் அவனுக்குத் தெரிவிப்பது நல்லதா... தெரிவிக்கலாமா... தெரிவித்தால் அவன்... சத்காரியங்களுக்குச் செலவிடுவானா? அதுதான் தெரியவேண்டும்.”

அளகிரியோ, நாட்டைத் திருத்தத் திட்டங்கள் தீட்டுவான்; பணம் போதுமான அளவு இல்லை என்ற காரணத்தால், கை விட்டுவிடுவான்; கவலைப்படுவான். வெங்கண்ணா மனதிலே உருவாகிக் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினான். மன்னன் அளகிரியிடம் சென்றான், மிக முக்கியமான விஷயம் பேச.

“அரசே! பொக்கிஷ நிலை சரியாக இல்லை என்று தாங்கள் கொலுமண்டபத்திலே கவலையுடன் பேசினது கேட்டேன்.”

“வெங்கண்ணா! நானோ பாண்டிய நாட்டில் இருக்க வேண்டியவன் - போர் மூலம் இப்பகுதியைப் பெற்றேன் - என் ஆட்சி, முன்பு இந்த ஆட்சியைவிடப் பலமடங்கு அதிக வசதி யுள்ளதாக இருந்தாலும்கூட, அன்னியராட்சி தானே என்று மக்கள் எண்ணுவர். நானோ, முன்பு இருந்த ஆட்சியின் சோபிதத்திலே பத்திலோர் பாகமும் செய்து தர முடியாத நிலையில் இருக்கிறேன் - போதுமான பணம் இல்லை.”

“பகவான் கடாட்சிப்பார் வேந்தே! மக்களிடம் அக்கரை கொண்டு, நல்லாட்சி நடத்த விரும்பும் தங்களுக்கு அஷ்ட ஐஸ்வரியமும் தர, ஆண்டவன் தயங்க மாட்டார்.”

“வேதியரே! ஆர்வமூட்டும் உமது பேச்சு கேட்டு அக மகிழ்கிறேன். ஆனால், பகவத் கடாட்சம் கிடைப்பது எப்போது? மக்கள் மனம் மகிழ நான் நல்லாட்சி நடத்துவது எப்போது? உடனடியாகப் பணமன்றோ தேவை.”

“சோழ நாட்டுச் சிறப்பு, பாண்டிய பரிபாலனத்தால் பல மடங்கு சிறப்புறும்.”-

“கவிதை அது - நிலைமை வேறாக இருக்கிறதே.”

“கவிதை அல்ல காவலரே! நம்பிக்கை. ஏன், வரம் என்றுகூடக் கூறுவேன். மன்னவா! தங்கள் மனோபீஷ்டம் நிறைவேறும்படிச் செய்யும் சக்தி எனக்கு இருக்கிறது. தங்கள் காலடியிலே, தங்க மோகராக்களையும், நவரத்னக் குவியலையும் கொட்டுகிறேன் பாரும். இந்தப் பஞ்சைப் பிராமணன் ஏதோ ஏய்க்கிறான் என்று எண்ணாதீர். நான் உமக்குப் பெருநிதி கிடைக்கும் மார்க்கம் உரைக்கவே வந்தேன்.”

“பெருநிதியா? எங்கிருக்கிறது?”

“பெரும் புதையல்! தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.”

“புதையலா? எங்கே? மறையவரே! மறைந்துள்ள மாநிதியை நான் பெறுவது எங்ஙனம்?”
“என்னப்பன், எம்பெருமான், அரங்கன் அருளால் பெரும் புதையல் உமக்குக் கிடைக்கும். வாரும்! அண்ணலைச் சென்று வணங்கி வரங்கேட்போம்!”

“திரு அரங்கத்துக்கா?”

“இல்லை. வேந்தன் விஜயராகவனுக்குத் திருவரங்கத்து அண்ணலிடம் அளவு கடந்த பக்தியல்லவா? அதனால், அண்ணல் அரங்கத்தில் சயனக் கோலத்தில் இருப்பது போன்றே, அரண்மனையில், தோட்டக் கோயில் அமைத்து அரங்கனைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.”
“அங்குச் சென்று?”

“சென்று, பெருஞ் செல்வம் பெறுவோம் வாரீர் - ஆனால் நாம் இருவர் மட்டுமே போக வேண்டும்.”

இருவரும் தோட்டக் கோயில் சென்றனர் - அரங்கனைக் கண்டனர். வெங்கண்ணா அரங்கனை நோக்கி)

“அரங்கண்ணலே! அரசன் அளகிரி வந்திருக்கிறார். உம்மிடம் வரம் கேட்கிறார். அரசு நிலைக்க, செழிக்க, சிறக்க, பணம் வேண்டும். எல்லாச் செல்வத்திலும் மேலான செல்வமே! எமது அரசருக்குப் பெருநிதி அருள வேண்டுகிறேன். மன்னவா! அண்ணலின் அருளைப்பார், இப்போது” என்று கூறிவிட்டு அருகே சென்று அரங்கனைத் தூக்க, மூடிபோல் எழும்புகிறது. உள்ளே பேழை. மன்னன் ஆச்சரியத்துடன் சென்று பார்க்க, பெரும் புதையல் இருக்கக் கண்டு மகிழ்கிறான்.

வெங்கண்ணாவைக் கட்டித் தழுவிக் கொள்கிறான். நவரத்னக் குவியலைப் பிடியாக எடுத்துப் பூரிக்கிறான்; தங்கக் கட்டிகளைத் தூக்கிப் பார்க்கிறான்.

விதவிதமான ஆபரணங்களைக் காண்கிறான். “அற்புதம் அற்புதம்! அந்தணரே! அரங்கன் சயனித்திருந்தது, அந்த அஷ்ட ஐஸ்வரியத்தின்மீது!! தந்திரமான ஏற்பாடு! மறையவரே! தாங்கள் எப்படி இதனை அறிந்தீர்?”

“அரங்கன் அடியேனுடைய கனவில் தோன்றி இதனைக் கூறினார்.”

“மக்களுக்குக் கூறலாம் மறையவரே! எனக்கு உண்மையைக் கூறும். எப்படித் தெரிந்தது இந்தச் சூட்சமம்?”

“இந்தச் சூடச்மத்தை, என் அண்ணா, முன்பு ஓர் சிற்பி கூறக்கேட்டு என்னிடம் உரைத்தார்.”

“நன்றி, மாதவரே! என் மனமார்ந்த நன்றி. இனித் தஞ்சைத் தரணியில் சுகம் கொஞ்சிடச் செய்கிறேன். இடிந்த கோட்டைகளைச் செப்பனிடுவேன் - தூர்ந்த அகழிகளைத் தோண்டிடச் செய்வேன் - கலைக்கும் இடமுண்டு - மக்களின் நிலை உயரச் செய்வேன் - மனதிலே உள்ள பல திட்டங்களையும் நிறைவேற்றுவேன். மாநிதி கிடைத்தது - மகிழ்ந்தேன் - மறையவரே, உமக்குப் பொன் வேண்டுமளவு தருகிறேன்.”

“தங்கள் தயை போதும் வேந்தே!”

“இல்லை, குடும்பத்துக்கு வேண்டுமானால், கூச்சம் வேண்டாம், கேளும்.”

“வேண்டாம் வேந்தே! எனக்கேன் செல்வம்? பெருநிதி தஞ்சை மன்னருக்கு உரியது!”

“என் நன்றிக்கு அறிகுறியாகத் தாங்கள் இந்த முத்தா ரத்தைத்தடை கூறாமல் அணிந்து கொள்ளத்தான் வேண்டும். மறையவரே! இந்தப் பச்சைகள், தங்கள் செவிகளில், குண்டலமாக இருக்க அருள் புரிந்தாக வேண்டும்.”

“வேந்தே! தங்கள் கொடைத்திறனும் அன்பும் கண்டு நான் பிரம்மானந்தமடைகிறேன்.”

“என் களிப்பு அளவு கடந்தது வேதியரே! அண்ணலை மீண்டும் சயனிக்கச் செய்வோம்! பெருநிதிகாத்து, எனக்குத் தந்தருளிய பெம்மானே! உன் பொன்னடி போற்றுகிறேன்.”

கணக்கெழுதி வந்த வெங்கண்ணாவின் நிலை, ஒரேயடியாகத் திடீரென்று உயர்ந்தது. அரசன், அளகிரி, வெங்கண்ணாவுக்குப் புதியதோர் அந்தஸ்தைத் தந்தான். இதன் காரணம் புரியாமல், பலர் பலவாறு பேசிக் கொண்டனர்.

வெங்கண்ணாவைப் பார்த்துச் சிலர் பொறாமைப் பட்டனர்.

பிராமணோத்தமர்கள், வெங்கண்ணாவின் ஜாதகப் பலன் அப்படிப்பட்டது என்று பேசினர்.

வெங்கண்ணா, விவேகி. எனவேதான் வேந்தன் அவரை தன் ஆஸ்தானத்திலே ஆலோசகராக இருக்கச் செய்திருக்கிறார் என்று பேசினர் சிலர்.

தஞ்சை மக்களின் கவனத்தைத் தன் பக்கம் இழுக்கும் அளவுக்கு உயர்நிலை பெற்றான் வெங்கண்ணா - எனினும், அவன் மனம் திருப்தி பெறவில்லை - திட்டம் பூரணமாக வில்லை என்று விசாரப்பட்டான்.

அளகிரி, தஞ்சையை ஆண்டுவந்தான் - எனினும் மதுரைச் சொக்கநாதனே மேலரசன், எனவே அளகிரி, எதையும் அண்ணனைக் கேட்டே செய்து வருவான். அதுதானே முறை! ஆனால் வெங்கண்ணாவுக்கு இது பிடிக்கவில்லை.

அளகிரியை அண்ணனிடமிருந்து பிரித்துவிட வேண்டும் - தனியானால்தான், அளகிரியைத் தன் இஷ்டப்படி ஆட்டி வைக்க முடியும் என்று எண்ணினான் - சூதுமதி கொழுந்து விட்டெரிந்தது. கொற்றவனிடம் சென்றான்.

“பேராற்றல் படைத்த மன்னரே! பெருநிதியும் கிடைத்து விட்டது. ஒரே ஒரு குறைதான்...”
“என்ன குறை?”

“பேராற்றலுள்ள தாங்கள், சிற்றரசாக, பாண்டிய மண்டலத்தக்கு இறை செலுத்தும் அரசாக இருப்பது சரியோ? தனி அரசு நடாத்தத் தகுதியும், திறனும், தீரமும் படைத்திருந்தும், சிற்றரசாக இருப்பது...”

“பாண்டிய நாட்டில் உள்ளவன் என் அண்ணன் தானே! அண்ணனிடம்தானே இறை செலுத்துகிறேன்.”

“சகோதர நேசம் சிலாக்கியமானது மன்னவா! ஆனால், சிற்றரசு பேரரசு என்ற தொடர்பு இருக்க வேண்டுமா, அதற்காக? ஏன் இருக்க வேண்டும். தம்பி தனி அரசு ஆள்வது தகாது என்று பாண்டிய மன்னர் எண்ணுவரோ? தனி அரசுக்கு என்ன தடை இருக்கிறது.”

“தடை ஒன்றுமில்லை. அண்ணன் ஏதாவது தவறாக எண்ணிக் கொண்டால்...”

“அண்ணனின் மனம் என்ன எண்ணும் என்பதை மட்டுந்தானா கவனிக்க வேண்டும்! எதிலே குறைந்தவர் தாங்கள்? வீர திருத்திலா - அறிவு, ஆற்றலிலா - எதிலே குறைந்தவர் மன்னவா!”

“நான் இதுநாள்வரை சிந்திக்கவே இல்லை வெங்கண்ணா! சிற்றரசு என்ற கவனம் கூட இல்லை.”

“ஓலை வந்ததே மன்னவா! இறைப்பணம் அனுப்ப ஏன் தாமதம் என்று! தம்பிதானே, சௌகரியப்பட்டபோது அனுப்பட்டும் என்றா இருந்துவிட்டார், மதுரை மன்னர்? அளகிரிதான் அவருக்குத் தம்பி - தஞ்சை அரசர், கப்பம் கட்ட வேண்டிய நிலையிலுள்ள சிற்றரசர் - இதுதான் மதுரை மன்னரின் நினைப்பு.”

“அப்படித்தான் இருக்கிறது”

“ஏன் அப்படி இருக்கவேண்டும் என்றுதான் கேட்கிறேன். ஏன் தனி அரசாகக் கூடாது, தஞ்சை? தனி அரசாக இருந்தது தானே! தஞ்சை மக்கள் மனதிலே இந்தப் பெருங்குறை இருந்துவருகிறது - தஞ்சை, பாண்டிய மண்டலத்துக்கு உட்பட்ட சிற்றரசாகத்தான் இருக்க வேண்டுமா என்று கவலைப்படுகிறார்கள். மேலும், அண்ணன் இன்று ஆளுகிறார் பாண்டிய நாட்டில். நேசம், பாசம் இருக்கிறது. நாளை அண்ணன் மகன் ஆள்வானே - அந்தச் சிறுவனுக்கும் நீர் கப்பம் கட்டிக்கொண்டுதானே சிற்றரசனாக இருக்கவேண்டும். நியாயம் ஆகுமா அது?”

“இல்லைதான். ஆனால்...”

“ஆனால் என்ன? மன்னரே! தயக்கமின்றித் தஞ்சை தனி அரசு என்று பிரகடனம் செய்துவிடும். மாசு துடைக்கப் பட்ட மணியாகும் உமது கீர்த்தி. தமிழகத்திலே நீர் ஆட்சி செய்வது, சோழ வளநாடு! சோழநாட்டு வேந்தரான பிறகும், சிற்றரசாக இருப்பது, உமது ஆற்றலுக்கும் அழகல்ல, இந்நாட்டுக் கீர்த்திக்கும் பழிச்சொல்லாகும். வீண் கலக்கமே வேண்டாம்! தஞ்சைத் தனியரசென்று தெரிவித்துவிடுங்கள். சுதந்திர பேரிகைச் சத்தம் எழட்டும். முரசு கொட்டுக, தஞ்சைத் தனி அரசு என்று”

“ஆம்! வெங்கண்ணா! தஞ்சை, இனி தனி அரசுதான் பிரகடனம் தயாரிக்கிறேன்.”

அளகிரியின் அடாத செயல் மதுரை சொக்கநாதனுக்குக் கோபமூட்டிற்று. வெங்கண்ணாவோ, அளகிரிமீது சொக்கநாதன் படை எடுத்து வந்தாலும், சமாளிக்க முடியும் என்று தைரியம் கூறி வந்தான். தம்பிமீது மூண்ட கோபம் வெறுப்பாக மாறிவிட்டது - எனவே, சொக்கநாதன் அற்பன்! அவசரபுத்திக்காரன்! என் மனதைப் புண்ணாக்கி விட்டான். இனி அவனுக்கு யார் துணை? எக்கேடோ கெட்டுத் தொலையட்டும். யார் வார்த்தையையோ கேட்டுக்கொண்டு ஆடுகிறான்’ என்று எண்ணி, தொடர்புகளை அறுத்துக் கொண்டான். பெரிய ஆபத்து நீங்கிவிட்டது என்று பூரித்தான், அளகிரி. “மதுரை மன்னன் மருண்டே போய்விட்டான், பார்த்தீர்களா மன்னவர்!” என்று உபசாரம் பேசினான், வெங்கண்ணா. கப்பலில் இருந்த நங்கூரம் எடுக்கப்பட்டு விட்டது - இனி, கடல் கொந்தளித்தால், கலம் ஆபத்திலே சிக்கிச் சீரழியும். இந்நிலையில், அளகிரி தான் சொல்லுகிறபடி எல்லாம் கேட்டுத் தீரத்தானே வேண்டும் என்று எண்ணினான் வெங்கண்ணா. அந்த வஞ்சகனின் மனக்கண் முன், தஞ்சை மன்னன் அளகிரி தனக்குத் தாசானுதாசனாக நின்றுகொண்டு குற்றவேல் புரியும் காட்சி தெரிந்தது. - புன்னகை, பெருஞ் சிரிப்பாக மாறிற்று. குரலிலே ஒருவகை அதிகாரத்தொனி; நடவடிக்கைகளிலே, ஆணவம் படியலாயிற்று. மன்னனுக்கு யோசனைகள் கூறலானான் - விரைவிலே கட்டளைகள் பிறப்பிக்காலானான். தன் இனத்தாருக்கு, விஜயராகவன், காலத்திலே கிடைத்து வந்தது போலவே காணிக்கைகள், தானங்கள் கிடைத்தாக வேண்டும் என்று கூறலானான். ஆரிய தர்மப் பாதுகாப்புத்தான் அரசனின் முக்கியமான கடமை என்று வலியுறுத்தலானான். செல்வத்தைச் சனாதனக் காரியங்களுக்குச் செலவிடுவதே சரியானது என்று சட்டம் பேசலானான். தயக்கமடைந்த மன்னனைக் கண்டிக்கலானான்.

அளகிரி ஆத்திரத்தைச் சின்னாட்கள் அடக்கிக் கொண்டான்; வெங்கண்ணாவின் ஆணவமோ வளரலாயிற்று.

அளகிரி, வெங்கண்ணாவின் போக்கைக் கண்டிக்கலானான் - ஆட்சி உரிமை தனக்கு என்பதை நினைவூட்டினான் - ஆற்றல் உண்டு என்பதை வலியுறுத்தினான்.

வெங்கண்ணாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. இனி, அளகிரி, தன் இஷ்டப்படி ஆடமாட்டான். பொன் கொடுப்பான் பட்டாடை நிறையக் கொடுப்பான், விருந்தளிப்பான், உபசரிப்பான், ஆனால் ஆட்சி முறையை மாற்ற இசையான் - ஆரியதாசனாக மாட்டான் என்பது விளங்கிவிட்டது. கோபம் கொப்பளித்தது. இதற்கா, நான் இவனுக்குப் புதையலை எடுத்துத் தந்தேன். என் வார்த்தையை வேதமாகக் கொள்வான். என் சுட்டுவிரல் காட்டும் வழி செல்வான் என்றல்லவா, எண்ணிக் கொண்டிருந்தேன். எதிர்த்துப் பேசுகிறான் - துச்சமாகக் கருதுகிறான் - இனி இவனால் ஆபத்தே கூட ஏற்படக்கூடும். எனவே இவனை ஒழித்தாக வேண்டும் என்று தீர்மானித்தான். நச்சு நினைப்பு ஓங்கி வளர்ந்தது! சதித் திட்டம் உருவாயிற்று. அளகிரியும் வெங்கண்ணாவுக்குக் கட்டுப்படுவதில்லை என்ற திட்டமான முடிவுக்கு வந்துவிட்டான். அப்போது:

“மன்னரே! கடைசி முறையாக உம்மைக் காண வந்திருக்கிறேன்.”

“கடைசி முறையா? காலதேவனின் அழைப்பை பெற்று விட்டீரா என்ன?”

“மன்னர் கேலி பேசுகிறார்! காலதேவனின் அழைப்பல்ல; புரட்சி பேசுகிறது என்று அறிவிக்கிறேன்.”

“ஏ! வெங்கண்ணா! உன் உருட்டல் மிரட்டல் வேலைகளை என்னிடம் காட்டாதே. ஏது, அளவுக்கு மீறி ஆர்ப்பரிக்கிறாய். இந்தத் தேசத்தின் மன்னன் முன்பு பேசுகிறோம் என்ற எண்ணம் துளியும் இன்றி, ஆர்ப்பரிக்கிறாய் - விளைவு தெரியாமல்!”

“முன்பு நான் ஆட்சியின் இலட்சணம் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று மட்டுமே கூறினேன்.”

“கூறினாயே! கொட்டிக்கொடு, திரவியத்தை எல்லாம் ஆரியக் கும்பலுக்கு என்று! விஜயராகவன் கொட்டிக் கொடுத்து என்ன பலன் கண்டான்?” என்று கேட்டேன்.

“இப்பொழுது நான் வந்திருப்பது, ஆரியரை ஆதரிக்கும் படி உம்மைக் கெஞ்சுவதற்காக அல்ல.”

“வேறு என்ன காரியமோ! வேதத்தின் உட்பொருளை விளக்கவோ?”

“அரச பீடத்தில் அமர்ந்திருப்போனே!”

(கன்னத்தில் அறைந்து) “ஆணவக்காரா! யாரிடம் மரியாதைக் குறைவாகப் பேசுகிறாய்...” (கை தட்டுகிறான்; காவற்காரர்கள் வருகிறார்கள்) இந்த வாய்க் கொழுப்புப் பிடித்தவனைச் சிறையில் தள்ளுங்கள்” என்று சீறுகிறான் அளகிரி - வெங்கண்ணா தலை தப்புமா என்று திகில் கொள்ளவில்லை; திமிருடனேயே நிற்கிறான். ஏன்? உயிரைத் துரும் பென மதிக்கும் உள்ளத்தானா! இல்லை, இல்லை! அளகிரியை ஒழிக்கச் சதித்திட்டம் தீட்டிவிட்டோம், எப்படியும் நிறைவேற்றிவிடுவோம் என்ற தைரியம். மேலும் பிராமணனான தன்னைக் கொன்றால் பிரம்மஹத்தி பிடித்துக் கொள்ளும் என்ற பயம் அளகிரிக்கு இருக்கும். எனவே கொல்லமாட்டான் என்ற தைரியம். மன்னனுடைய கோபம் சிறிது, தணிந்தது. “மண்டைக்கர்வம் பிடித்தாட்டுகிறது இந்தமறையவனுக்கு! எனினும் இவன் என் மண்டலத்துக்குப் பயனளிக்கும் பெருநிதி எனக்குக் கிடைக்கச் செய்தவன் - எனவே சிறையில் போட்டு வாட்ட வேண்டாம் - இவன் இனி என் அரண்மனைக்குள் நுழையக் கூடாது - வெளியே துரத்துங்கள்’ - என்று கூறினான். வெங்கண்ணா வெளியேறினான். “அளகிரி! என்னை யார் என்று அறியாமல் உன் அதிகாரத்தைக் காட்டத் துணிந்தாய். நீ அரசன் - அவ்வளவுதான்! நான் ஆரியன் - அதன் முழுப்பொருளை நீ அறிவாய்.