தோழர்களே!
உங்களிடை இன்று எனது மதிப்பிற்குரியவரும், உங்கள் ஆசிரியரும்
எனது முன்னாள் ஆசிரியருமான திரு. கந்தசாமி முதலியார் அவர்கள்
தலைமையில் பேசும் பெரும்பேறு வாய்த்தமைக்குப் பெரிதும் இறும்பூதெய்துகிறேன்.
மற்றும் நான் கல்வி கற்றுத் தேர்ந்த இதே பச்சையப்பன் கல்லூரி
மாணவத் தோழர்களாகிய உங்களிடையே பேச நேர்ந்த இவ்வாய்ப்பை
நினைத்தும் மகிழ்கிறேன். இதுபற்றி மிகுதியும் பெருமையடைகிறேன்.
இவ்வாய்ப்பை எனக்களித்த இத்தமிழ்ச் சங்கத்தாருக்கு எனது
மனமுவந்த நன்றி செலுத்த மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது
நன்றி அவர்க்குரித்தாகுக!
ஏடு எது?
நாடு மக்களால் நிறையப்பட்டிருக்கும் ஒன்று. ஏடு நாட்டு மக்களால்
கற்கப்படுவது! கையாளப்படுவது! செய்யப்படுவது போற்றப்படுவது.
அந்தந்த நாட்டிலுள்ள ஏடுகளைப் பார்த்தால் அந்தந்த நாட்டு
மக்களைப் பற்றி, வரலாறுகளைப்பற்றி, வாழ்க்கை வளங்களைப்பற்றி,
நாகரிகத்தைப் பற்றி, குணங்களைப்பற்றி, பழக்க வழக்கங்களைப்பற்றி
பாங்குற எளிதாக, ஏமாற மார்க்கமின்றித் தெளிவாகத் தெரிந்து
கொள்ளலாம். ஆம்! நாட்டிலுள்ள ஏடுகள், நாட்டில் உள்ளதை,
நடப்பதை, மக்கள் வாழ்க்கை முறைகளை வகுத்துக் காட்டும் கண்ணாடியாகக்
காட்சியளிக்க வேண்டும். நாட்டு மக்களை மேன்மையுறச் செய்யும்
தூண்டா விளக்காய் துலங்குதல் வேண்டும். நாட்டிற்கும் ஏட்டிற்கும்
தொடர்பிருக்க வேண்டும். நாட்டோரை நடுநிலை பிறழா நல் நீதிபதிகளாக்க
உறுதுணை செய்யும் ஊன்று கோலாக உதவ வேண்டும்.
தொல்காப்பியம்
நிற்க, நான் இன்று நாட்டோடு, நாட்டு மக்களோடு நீங்காத்
தொடர்பு கொண்டு பழகி வருகின்றேன். நீங்களும் உங்கள் கல்வி
முடிந்த உடன் அத்தகைய தொடர்பு கொள்வீர்கள் என்றும் துணிபுடையேன்.
மக்களுடைய அன்றாட வாழ்வை அலசிப் பார்“கின்றேன். அறிவோடு
ஆராய்ந்து பார்க்கின்றேன். எனவே நாட்டாரோடு நாட்டானாய்
நாட்டு மக்களை யறிந்த ஒருவனும், உங்களைப் போன்று கலை பயிலும்
மாணவத் தோழர்களும் சந்தித்து அளவளாவுதல் முற்றும் முறையே.
முயற்சியோடு நாளும் நாளும் நடாத்துதல் மிக மிக நன்றே.
நான் இன்று நாட்டில் நடமாடி வரும் நானாவித ஏடுகளில் சிலவற்றைப்
படித்திருக்கின்கிறேன். சிலவற்றைப் பார்த்திருக் கின்றேன்.
பலவற்றைப் பற்றிப் பண்பாளர்கள் பன்னிப் பன்னிப் புகழ்வதைப்
பல முறை கேட்டிருக்கின்றேன். அத்தகைய வித்தகரால் போற்றப்பெறும்
பண்டை நூல்களில் ஒன்று, நந்தம் தொல்காப்பியம். நான் தொல்காப்பியம்
தொன்மை நூலென்றும் தமிழரின் தனித்தமிழ் நூல் என்றும், விழுமிய
கருத்துக்களை இழுமென் மொழியால் எடுத்தியம்பும் ஆற்றல் வாய்ந்த
அரும் பெரும் பொக்கிஷம் என்றும், தமிழனின் தனி நாகரிகத்தை
நாட்டோர் நன்கு உணர, நயமாக நவிலும் நிகண்டெனவும், தன்னேரிலாத்
தமிழ் மொழி தரணியெங்குந“ தழைத்தோங்க தகுமுறை வகுத்த ஒப்பிலாப்
பண்டைத் தமிழ் இலக்கணமென்றும் அறிவேன். எப்படி? படித்துப்
பாங்குறச் சுவைத்ததனாலா? அல்ல. படித்த பண்டிதர்கள், நான்
கூறுகின்றேன். சிறிதும் கூச்சமின்றிக் கூறுகின்றேன். நான்
தொல்காப்பியம் படித்ததில்லை என்று தமிழநின் தொன்மைப் பெருநூலைப்
படிக்கவில்லை என்றுதான் கூறுகின்றேன். அதுபற்றி நான் சிறிதும்
வெட்கப்படவில்லை. வெட்கப்படக் காரணமுமில்லை, வெட்கப்பட வேண்டியதுமில்லை.
ஏன்? தமிழே தம் தனம் எனக் கருதும் பற்பல தமிழ்ப் பண்டிதர்களிலேயே
அநேகர் தொல்காப்பியத்தைப் பழுதற நன்குணர்ந்தோர் இல்லை.
ஏன“ கிடையாது? தொல்காப்பியம், பழம்பெரும் நூல் என்றும்,
இன்னும் பலவிதமாகவும் புகழப்படுகின்றதேயன்றி அது மக்களுள்
சிற்றறிவுடைய மக்களுங் கூடப் புரிந்து கொள்ளக்கூடிய விதமாய்
நாட்டிலே, மக்களுடைய மார்க்கட்டிலே வந்து நடமாடவில்லை. நடமாடும்படி
செய்ய பெரும் புலவர்கள் விடுவதில்லை அதற்காக பெருமுயற்சி
எடுப்பதில்லை என்ற காரணத்தைதான் கூறமுடியும்.
தொல்காப்பியத்தைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் பேரறிவாளர்கள்,
பெரும்புலவர்கள், பண்டித மணிகள், நாவலர்கள் முதலானோர் சிறு
சிறு நூல்களாகத் திரட்டி, சிறு சிறு வெளியீடுகளாக, சிறு
சிறு வருவாயுள்ளோரும் வாங்கி வாசித்து வாழ்க்கை வளம்பெற
உறுதுணை செய்தல் வேண்டும். அது அவர்தம் கடன், அறிவுக்கேற்ற
வேலை, ஆராய்ச்சிக்கேற்ற பணி.
நல்ல தீர்ப்பு
வாழ்க்கையில் நாம் சிறந்த பொருள்களை, வாழ்க்கைக்கு வளமான
பொருள்களைச் சிறிதும் வாட்டமின்றிப் பெற முடியாது. ஓயாத
உழைப்பும், சலியாத முயற்சியும் வேண்டும். சான்றாக முத்துக்களைப்
பெறவேண்டுமானால் கடலின் கொந்தளிப்பையும், சுறா மீன்களின்
உபத்திரவத்தையும் அகற்றி ஆண்மையோடு முத்துக் குளிக்க வேண்டும்.
கண்ணைப் பறிக்கும் பற்பலவித ஆபரணங்கள் செய்ய தங்கம் வேண்டுமானால்,
பாறையின் வெடிப்பிற்கும் மணலின் சரிவிற்கும் துணிந்த பல்லாயிரவர்
பொற்சுரங்கங்களிலே அல்லும் பகலும் அனவரதமும் பாடுபட வேண்டியிருக்கின்றது.
அதுபோலவேதான், ஏடுகளிலும், இலக்கியங்களில் சிறந்தவற்றை,
நாட்டுக்கு நலம் பயக்கும் ஏடுகளை மனிதனை மனிதத் தன்மையுள்ளவனாக
விளங்கத் தூண்டும் இலக்கியங்களை அறிவை அகலப் பரப்பும் இடுக்கண்களோடு
இடறி மோத நேரிடும். பலரின் பரிதாபத்திற்கும் கேலிக்கும்
கண்டனத்திற்கும் உள்ளாக நேரிடும். அவற்றை அறிவாளர் அறமென
மதியார். எடுத்த காரியத்தை எதிர்ப்புக்கும் ஏளனத்திற்கும்
அஞ்சாமல் புகழ்ச்சிக்கும் பூசலுக்கும் மண்டியிடாமல் தொகுத்து
முடிப்பர். அது மனிதர் மனிதருக்கு மனிதத் தன்மையோடு செய்யும்
நேரிய செல். அதுதான் முறை நல்ல தீர்ப்பு.
திருக்குறள்
நந்தம் தமிழ்நாட்டில் தமிழ்மறையெனப் பல்லோராலும் போற்றப்படும்
திருக்குறளைத் திருத்தமாக அறிந்தவர் மிகமிகச் சிலர். அத்தகையோரை
விரல்விட்டு எண்ணிவிடலாம். பலர் அதன் உள்ளுறை என்னவென்பதையும்
அறியார். பண்டிதர்களிலும் பலர் அதனைப் பெருமைக்காகப் படிக்கின்றார்களே
ஒழியக் கருத்தூன்றிக் கற்பவர் மிகச் சிலரே. நானும் திருக்குறள்
அறிவேன் என்று பேசிப் பெருமிதம் அடைவோர் பலராவர். அவர்தம்
நிலைகண்டு இரங்கார் எவரே!
போராட்டம்
இலக்கியங்கள் ஏடுகள், மக்களின் மார்க்கெட்டிலே மலிந்து நடமாட
வேண்டுமானால், இலக்கியம் கோபுர உச்சியிலிருந்து குப்பை
மேட்டுக்கு வரத் தயாராக இருக்க வேண்டும். கற்றோரும் மற்றோரும்
பண்டிதரும் பாமரரும் பணக்காரனும் ஏழையும் படித்துணரும் பாங்கிலே,
எளிய நடையிலே இயல்பான இயற்கைக் கருத்துக் கூறும் கருத்தைக்
கவின்பெறச் செய்யும் கருத்துக்கள் நிரம்பியும் அமைய வேண்டும்.
ஆனால் நம் நாட்டு இலக்கிய கர்த்தாக்கள் செய்துள்ள இலக்கிய
சேவை இதற்கு நேர்மாறானது. அதனைப் பண்டிதரும் பகுத்தறிய முடியாத
பண்புடனே சமைத்துள்ளனர். சிற்றறிவினர் சிந்தனையில் சிந்திக்கவும்
கூடாத சிறப்புற்று விளங்குகின்றன இந்நாட்டு ஏடுகள்.
இன்றைய இலக்கியங்களிலே சிலவற்றிற்கு மூலத்தைவிட அவற்றின்
விரிவுரைகளும், விருத்தியுரைகளும“ பன்மடங்கு கடினமாகத் திகழ்கின்றன.
மற்றும் இக்காலப் பண்டிதர்கள் தம் காலத்தை இந்த உரை நல்லது
அல்லது அந்த உரை நல்லது. இது இன்னாரால் கொள்ளப்படுவதால்
சிறப்புடையது. அது அன்னோரால் கொள்ளப்பட்டமையால் ஒவ்வாதது
என இத்தகைய போராட்டங்களிலே கழிக்கின்றனர். சிறிதும் நாட்டைப்
பற்றிய நாட்டமின்றி கடமை பற்றிய கருத்தின்றி மற்றும் இத்தமிழ்
பண்டிதர்கள் ஒருவர் மீதொருவர் பொறாமையும் பொச்சரிப்பும்
பூண்டு ஒருவரையொருவர் தாக்கிப் பேசி எழுதும் இழிகுணத்தையே
மேற்கொண்டுள்ளனர். எனது மதிப்பிற்குரிய தலைவர் பெரியார்
ஈ.வே.இராமசாமி அவர்கள் கூறுவார். சில சமயம் இந்தத் தமிழ்ப்
பண்டிதர்கள் ஒரு பன்னிருவர் சேர்ந்து ஒரு சிறு மாநாடு நடத்தினாலும்,
அருகே ஒரு ஸ்பெஷல் போலீஸ் வேண்டும். அவர்களிடை நிகழும்
சண்டை சச்சரவை தீர்ப்பதற்காக என்பதுதான் அது. அது கேட்டு
நாம் மனம் மிக மிருளுவதுண்டு. ஆனால் சென்ற திங்கள் காஞ்சியிலே
பொங்கல் விழாக் கொண்டாடினர். நானும் போயிருந்தேன். திரு.மே.வீ.
வேணுகோபாலன் என்பார் தலைமை தாங்கினார். நம் மதிப்பிற்குரிய
நண்பர் திரு.மா. இராசமாணிக்கம் அவர்கள் சொற்பொழிவு ஆற்றுங்கால்
ஓர் ஐயவினா தரப்பட்டது கூட்டத்திலுள்ள சிலரால். சிவம் என்னும்
சொல் வடமொழியா? அன்றித் தமிழா என்பதே அவ்வையவினா. அதற்கு
திரு.இராசமாணிக்கம் அவர்கள் சிவம் என்பது தனித் தமிழ்ச்
சொல் தான் என்றார். தலைவர் திரு. வேணுகோபாலன் அவர்கள்
தன் முடிவுரையில் சிவன் என்னும் சொல் தமிழல்ல. அது வடமொழிதான்
என்று வன்மையாகக் கூறினார். உடனே இராசமாணிக்கனார் எழுந்து
வேணுகோபாலரைப் பார்த்து அது தமிழ்ச் சொல்தானே. மற்றும்
அது மறைமலையடிகள் கருத்தாயிற்றே என நவில வேணுகோபாலர் சபையோரைப்
பார்த்து அந்த மறைமலையடிகள் கருத்திருக்கட்டும். இந்த வேணுகோபாலன்
சொல்லுகின்றேன் சிவம் என்னுஞ் சொல் வடமொழிதான் என்று,
என்று கூறிமுடித்தார். இவ்விதம் வழக்காடும் வழக்கத்தை விடாப்பிடியாகப்
பிடித்துக் கொண்டு மீளாக் குழப்பத்தில் திளைக்கின்றனர்.
அவர்களின் பெருமையெல்லாம் பன்னூற் பாண்டித்ய மெல்லாம் மற்றவர்களின்
நூல்களில் குற்றங் குறை காண்பதில் உளதென உள்ளத்தில் உறுதி
கொண்டுள்ளனர். மற்றொருவர் சொல்லில், நூலில் காவியத்தில்
குறைகாணாவிடில் தம் திறமை முற்றும் முதிர்ந்ததல்ல என்ற மூடநம்பிக்கையை
மூல மந்திரமாகக் கொண்டிருக்கின்றனர். என்னே! இவர் தம் அறிவும்,
ஆற்றலும், படிப்பும் பண்பும் செல்லுமாறு? மற்றும் ஒருவர்
எழுதும் ஏட்டிற்கும் மற்றொருவர் மறுப்பும் அம் மறுப்பிற்கு
மறுப்பாகப் பிறிதொரு ஏடு எழுதுவதும் இந் நாட்டின் அன்றாட
நிகழ்ச்சிகளாக நீடிக்கின்றன. சான்றாக இன்று தலைமை தாங்கும்
அறிஞர் ஒரு நல்ல ஏட்டை நாட்டிற்கு நல்கினார் என நினைமின்.
மற்றும் அதில் யாதொரு குற்றங்குறைகளுமில்லை யெனவும் கொள்மின்.
அதிலே சொற்செறிவும் பொருட்செறிவும் பொருந்தி இருக்கலாம்.
இலக்கிய ரசமும் காவியக் குழைவும் எதுகை மோனைகளின் இயற்கை
யமைப்பும் சரிவர அமைக்கப்பட்டிருக்க லாம். கலைப் பண்பாடு
மிகுந்திருக்கலாம். கருத்துப் பிழை கடுகத்தனையும் காணக்
கிடைக்காதிருக்கலாம். என்றாலும் புலவர் எவரையேனும் அதுபற்றி
அபிப்பிராயம் கேட்டால் அவர் அது முற்றும் நல்ல நூல் என்று
தீர்ப்பு கூறார். குறையேதேனும் காண்டல் அன்றோ அவர்தம் அறிவுடைமைக்குப்
பூஷணம், புலமைக்கு அணிகலன், ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டு.
எனவே அவர் இந்நூலாசிரியர் செய்ததெல்லாம் சரிதான் ஆனாலும்
நூல் முற்றிலும் அவருடைய சொந்தமன்று. முற்றும் இரவல். அதில்
100க்கு 20 பாகம் திருக்குறளையும் 20 பாகம் சிலப்பதிகாரத்தையும்
20 பாகம் சங்க நூற்களையும் 10 பாகம் மணிமேகலையையும் இவ்வண்ணமாக
ஒரு நூலிலிருந்து ஒரு முத்தையும் மற்றொரு நூலிலிலிருந்து
மாணிக்கத்தையும் பிறிதொரு நூலிலிருந்து பிறிதொரு வைரத்தையும்
பொறுக்கிக் கோத்திருக்கின்றார் என்று அவர்பால் குற்றங்
காண்பர். இதுவே தம் கடன் என்று பணியாற்றும் புலவர் பெருமக்களை
என்னென்று இயம்புவது.
இலக்கியப் பண்டிதர்களும் பண்டித மணிகளும் பாவலர்களும் மற்றுமுள்ள
கலைஞானிகளும் கலா ரஷகர்களும் நாட்டைப்பற்றி, நாட்டிலேவதியும்,
தமிழ் நாட்டிலே வாழும“ நாலரைக்கோடி மக்களைப் பற்றிக் கவலையுற்றார்.
எண்ணியும் பாரார். எவர் சொல்லையும் கேளார். நாட்டிற்கும்
ஏட்டிற்கும் தொடர்பு கலப்பு உண்டா? இல்லையா? என்றும் தம்
கண் கொண்டு பாரார். எ“லலாமறிவோம் யாம் என இறுமாந்து இன்புறுவர்.
நாட்டில் நடமாடும் ஏடுகளின் வழி, ஊட்டும் உணர்ச்சிகள் ஊடே,
ஏற்றும் எண்ணங்களின் ஏவற்படிதான் நாட்டு மக்கள் செயலாற்றுவர்
என்பது இவர் தம் சிந்தனைச் சுடரிலே சிறிதும் தோன்றுவதில்லை.
நாட்டின் நிலைக்கேற்ற நிகண்டுகள் நிச்சயம் தேவை என்பதை நினைத்துப்
பார்ப்பதும் இல்லை. நாட்டு ஏடுகள் எடுத்தியம்புவது என்ன?
நகரிலே வீட்டிலே நடப்பது என்ன என்பதை ஊர்ந்து உணர்கின்றார்களில்லை.
வீரம் விளைக்கும் காவியங்களும் கற்பின் மாட்சி விளக்கும்
கதைகளும் நீதி நடுநின்று நவிலும் நிகண்டுகளும் நந்தம் தமிழ்நாட்டிலே
உண்டு என்று உள்ளங் குளிரும் புலவோர் அந்த நிகண்டுகள் அந்த
வீரம் விளைக்கும் காப்பியங்கள் மக்களிடை, எத்துணை மலிவாக
எளிதாக நிலவுகிறது. நிலவச் செய்கின்றனர் அல்லது மலிவாக எளிதாக
இவ்விலக்கியங்களை மக்கள் கடைவீதியிலே நிலவும் நிலைதான் நாட்டில்
உண்டா என்பதுபற்றிக் கனாக் காண்பதும் கடினம். கற்றோரின்
கவிதாத் திறனும் ஆராய்ச்சி அறியும் புலமையின் பூஷணமும் சிந்தனையின்
சிறப்பும் ஏற்றத்தின் எடுத்துக்காட்டும் மற்றும் எல்லாம்
பழங்காவியங்களுக்குப் பதவுரை பகருவதோடு சரி. நிகண்டுகளுக்கு
நித்தநித்தம் புத்தம் புதிய உரைகளும் விளக்கங்களும் அள்ளியள்ளித்
தெளித்து அதனை எவரும் அறிய முடியாத அகராதி வைத்துத் தான்
படிக்க நேரும் பரிதாப நிலைக்கு மக்களை இழுத்துச் சென்று
மயங்க வைப்பதே மாண்பு. பழமையோடு அன்றாடம் தோன்றும் புதுமைக்
கருத்துக்களை ஒட்ட வைத்து என்னே எந்தம் முன்னோர் மூதறிவு
என்று பழமையில் புதுமை கண்டு பூரிப்படைவதே புலமையின் பொக்கிஷம்
என்ற நிலைமை தான் இன்று நாட்டிலே நர்த்தனமாடுகின்றது. மக்கள்
மருளும் படியான மகா கடின நடையையே பின்பற்றுகின்றனர். பழையனவற்றிற்குக்
கூறும் தத்துவார்த்தங்களும் விளக்கங்களும் எளிதிலே புரியாதவை.
அவற்றை விளங்கத் தெரிந்து விழைவோர் இப்புலவர் குழாத்தை
அண்டுவதே ஆகாத காரியம் ஏன்? இலக்கியம், புலமை எனும் அரியணையிலே
அரசோச்சும் செம்மல்கள் பால் ஏதோ சிறிதுதெரிந்தவர் செல்வது
எளிதல்லவே! மற்றும் தம்மோடு ஒப்பாருடனும் மிக்காருடனுந்தான்
வாதம் நிகழ்தல், ஆராய்ச்சியுரை ஆற்றல், வினா விடை யிறுத்தல்
முறையென அம்மூதறிஞர் கருதிக் கொண்டிருக்கின்றனர். அதைத்
தடுத்துக் கேட்பது ஆகாது. அது ஆசான்-மாணாக்கன்-குரு-சிஷ்யமுறைக்குப்
பங்கம் விளைக்கும் செயல். அடக்க ஒடுக்கமாய் ஆசான் அறிவுரை
கேட்டு வாளாயிருப்பதே வணக்கத்திற்கறிகுறி. அன்றிக் குறுக்கே
கேட்பது குதர்க்கம். குறும்புக்காரன் செயல் அது என்ற கருத்துடையவர்கள்தான்
அவர்தம் சீடராகிச் செம்மையுறலாம். அவ்விதம் இருந்தும் தப்பித்தவறி
எவனாவது சந்தேகம் சரிவரத் தெரியவில்லை, புரியவில்லை என்று
கேட்டு விட்டால் அப்பா! உனக்கு அந்தப் பக்குவம் இதனை புரிந்து
கொள்ளும் நிலைக்கு நீ இன்னும் வரவில்லை. அந்நிலையை அடைந்த
பின் வா என வாயுறை வழங்குவர். எந்நிலை அந்நிலை என உசாவினால்
உறுமுவர். அந்தோ! அந்நிலை அவனருளின்றிக் கிட்டாது. அவனை
(கடவுளை)த் தொழு என்று திருவாய் மலர்ந்தருளுவர்.
பழமையில் மூழ்குதல்
பழையனவற்றிற்கு விளக்கம் விருத்தியுரை கூறுதலின்றி வேறு
நூல்கள் இந்தக் காலத்திற்கும் கருத்திற்கும் ஏற்ற முறையிலே,
நடையிலே செய்து தர இக்காலப் புலவர்களால் முடியாதா? முடியும்.
ஆனால், அவர்கள் பழையனவற்றைப் புது மெருகிட்டுப் பார்த்துப்
பார்த்துப் புளங்காகிதம் அடைவதே தம்செயற்கருஞ் செயலெனக்
கருதுகின்றனர். மக்கள் சிந்தனையைத் தூண்டும் நூல்கள் இயற்றுவதற்கு
மக்கள் வீரம் அடைவதற்கு, நீதியை நடுநின்று நோக்குதற்கு
சாதி பேத சமயச் சண்டைகளை ஒழிப்பதற்கு, பொருளாதார மாறுபாட்டை
மடிப்பதற்கு, புத்துலகம் சமைப்பதற்கு, கயமைத்தனமான கண்மூடி
கபோதி பழக்க வழக்கங்களை மதத்தின் பேரால், சமயத்தின் பேரால்,
சாஸ்திரத்தின் பேரால், பழமையின் பேரால் பின்பற்றி வறுமையில்
மடமையில் கண்மூடித்தனத்தில் மக்கள் மருண்டு, உழலும் மாயா
மார்க்கத்தை வேரறுப்பதற்கு அவசியமானவற்றை அணைந்து பற்றி
அல்லாததையகற்றி, எதையும் பகுத்துணர்ந்து பார்க்க வழிகோலும்
ஏடுகள் இயற்றினார்களா? இயற்றுகின்றார்களா? இக்கால இலக்கியக்
கர்த்தாக்கள் இனியேனும் இயற்றுவார்களா? நாட்டிற்கும் ஏட்டிற்கும்
தொடர்பில்லா வகையிலே நாட்டின் இனத்திற்கு இம்மியும் பயன்படாக்
காவியங்களும் ஏட்டில் எடுத்தியம்புவது ஒன“றாயும் எண்ணத்திலே
வேறாயும் அன்றாட வாழ்க்கையில் நாட்டில் நடப்பது பிறிதொன்றாயும்
ஏடுகள் அøக்கப்படும்வரை இனம் எழுச்சியுறுமா? மக்களிடையேயுள்ள
மடமைத்தனம் மறையுமா? ஏட்டின் மூலம் நாட்டின் நிலையறியலாம்
மேனாடுகளிலே இது சர்வ சாதாரணம். அவ்விதம் நாட்டின் நிலை
நவிலா ஏடு மாளட்டும். இலக்கியம் இறக்கட்டும், கலை கலையட்டும்.
நமக்கு வேண்டுவது ஏட்டைப் புரட்டினால் நாடு, நாட்டின்மக்கள்,
மக்கள் வாழ்க்கை, அவர்தம் வாழ்க்கை வளன், நாகரிகம் இன்ன
பிற யாவும் தெள்ளிதின் விளங்குதல் வேண்டும். அது ஏட்டோடு
நிற்றல் சாலாது. நடைமுறையில் நடப்பதையே நவிலும் நூலாதல்
வேண்டும்.
ஒரு காலத்திய ஏடுகள் பிறிதொரு காலத்தின் நிலைக்கு, கருத்திற்குப்
பொருந்தாவெனின் அது மாற்றப்பட வேண்டும். இன்றேல் அந்தந்தக்
காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த ஏடுகள் உண்டாக்கப்பட வேண்டும்.
மக்கள் உள்ளதை உள்ளவாறு உணரச்செய்யும் ஏடுகள் தேவை. மடமையை
மடியவைக்க வழிகோலும், வழிகாட்டும் வளம் பொருந்திய காவியங்கள்,
கதைகள் தேவை. மக்கள் நிலையை உயர்த்த உறுதுணையாகும் ஏடுகள்தான்
தேவை. இன்றேல் நமக்கு ஏடுகள் வேண்டாம். அவற்றால் இனம் இழிவுற
வேண்டாம். மடமைக்கு வித்திடும் மாண்புள்ள மறைகள் வேண்டாம்.
ஏன்? பண்டை இலக்கியங்களில்லாமல் எந்த நாடும் முன்னேறவில்லையா?
உலகத்தாரால் உயர்ந்த நாடு என்று உரைக்கப்படவில்லையா! இலக்கியத்தால்தான்
நாடு முன்னேற முடியுமா? சான்றாக, துருக்கியும் ஆஸ்திரேலியாவும்
பண்டை இலக்கிய பெருமை வாய்ந்த நாடுகள் அல்லவே! மக்கள் அங்கு
மாக்களாகிவிட்டனரா, இலக்கிய மில்லாத காரணத்தால். கருத்துக்கினிப்பூட்டும்
காவியங்களோடு காலத்துக்கேற்ற கதைகளும் நாளடைவில் தோன்றத்
தான் செய்யும். நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்புள்ள நாடுகள்
என்றும் நலியாது. நாட்டிலே சிறந்த ஏடுகள் எல்லையற்றவையிருப்பினும்
அந்நாட்டிற்கும் அவ்வேடுகட்கும் சிறிதும் சம்பந்தமின்றிச்
சதுர் ஆடிக் கொண்டிருந்தால் அந்நாடு நாளடைவில் நசித்துப்
போகும். கலை நாகரிகம் யாவும் மறைந்தொழியும், பண்டைமாண்
தமிழும் இங்ஙனம் தொடர்பற்றே செல்லுமானால் மடமைக்கு மண்டியிடும்
எடுப்பார் கைப்பிள்ளையாய் ஏங்கித் திரியும் என்பது திண்ணம்.
சான்றாக இன்று பழம் பெரும் இலக்கியங்களைப் பெற்றுள்ள கிரீஸ்,
சைனா தேசத்தைப் பாருங்கள். அந்நாடுகளிலேயுள்ள ஏடுகள் மிகச்
சிறந்தவை. தத்துவத்திலே தரணி முழுதும் ஆள்பவை. எனினும் அந்நாடுகள்
சிறப்பற்றுச் சீர்கேடுற்றிருப்பதேன்? இலக்கிய மெல்லாம் இனத்தை
மறந்ததுதான் காரணம். ஏடுகள் எல்லாம் நாட்டின் நிலையை எண்ணாத
ஏமாளித் தனத்தினால்தான் என்றால் அது மிகையாகாது. முறை முற்றும்
உண்மைகூட.
வாழ்வையும் தாழ்வையும் வளர்ப்பது ஏடே
நாடு மேன்மையுறுவதும் தாழ்வுறுவதும் ஏட்டிற்கும் நாட்டிற்கும்
உள்ள தொடர்பைப் பொறுத்துத்தானிருக்கிறது. நாட்டிலே நலிந்தோர்
மிகுதியாயினகாலத்து, ஏட்டில் அவர் தம் வறுமைக்கு காரணம்
கூறாது, இழிவுக்கு மருந்து இயற்றாது, பூங்காவையும், கோயிலையும்
இளங்காதலரையும், காதல் நெறியையும் அரசரையும் அந்த உலகத்திலே
(தேவ லோகத்திலே) அநுபவிக்கப்போகும் இன்பத்தையும் பற்றி
இணையிலாக காவியங்கள் எண்ணிறந்தன இயற்றப்படுமேல் அவ்விலக்
கியங்களால் எவர்க்கு என்ன பயன் விளையும்? வறுமையால் வாடும்
மக்கள் அதனைப் படித்தால் அவர்தம் வாட்டம் வாடுமா? அன்றி
வளருமா? என்று சிந்தியுங்கள். தோழர்களே! அரசபோகம் அதிகமாகுமா?
அன்றி அரசர் நாட்டு வறுமையாயினர் வாட்டம் போக்க நாட்டம்
உறச் செய்யுமா? அதற்கு வழிகாட்டுமா? வாழ்வில் சலிப்பூட்டுமா?
அன்றி முயற்சி திருவினையாக்கும் என்று முயன்று வாழ்க்கையை
வளம்படுத்தி வாழ வகை சொல்லுமா? என்றுதான் உங்களைக் கேட்கிறேன்.
இந்நாட்டு ஏடுகள்
நம் நாட்டு இலக்கியங்களிலே காண்பது ஒன்று. நாட்டிலே நடப்பது
பிறிதொன்று. நான் ஊர் சுற்றிச் சுற்றி களைப்பால் கால்வாய்
ஓரங்களிலே களைப்பாறும்போதும், இரயிலிலே பிரயாணம் செய்யும்
போதும் மற்றும் பலப்பல காலங்களிலும் சிந்தித்திருக்கின்றேன்.
சிந்தித்து வருகிறேன். பல நாட்கள் தூக்கம் வராமல் துன்பப்பட்டிருக்கிறேன்.
இந்த நாட்டு ஏடுகளில் காணும் கவின் பெறும் காட்சிகளை நாட்டிலே
ஏன் காண முடியவில்லை? காணப்படாததற்கு காரணம் என்ன? என்பன
பற்றித் துருவித்துருவி ஆராய்ந்து ஆயாசமடைந்த காலமுண்டு.
இந்த நாடு எடுப்பார் கைப்பிள்ளையாய் ஏமாளித்தனம் மிகக் கொண்டு
இருப்பதே அடிப்படையான காரணமாகலாமோவென ஐயுற்ற காலமுமுண்டு.
நான் நம் நாட்டு ஏடுகளிலே படித்திருக்கின்றேன். நம் நாடு
நன்செய்யாலும் புன்செய்யாலும் நாற்புறமும் சூழப்பட்ட தென்று
நாடெங்கும் செந்நெல்லும் செங்கரும்பும் மற்றும் விளை பொருள்களும்
மலிந்து கிடக்குமென்று ஆனால் ஊரிலே, நாட்டிலே, நகரிலே நாம்
காணுவது நேர்மாறான காட்சிகள். படிப்பது பசிப்பிணி யறியா
மக்கள் பார்ப்பது பசியால் மிக நொந்து மெலிந்து வாடி வதங்கும்
பல்லாயிரக்கணக்கான பாட்டாளிகள். ஏட்டில் காண்பது கண்ணுக்கினிய
காட்சி தரும் கூட கோபுர மாடமாளிகைகள் அலங்காரமான ஆபரண வகைகள்.
இன்ன பிறவற்றை இன்பம் நுகரும் மக்கள். ஆனால் கண்ணால் காண்பது
காதால் கேட்பது யாவும் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி உடுக்க
உடையின்றி ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கும் பரிதாப நிலைமை.
நீர் நிலவளம் மிகுந்த செல்வமுடைத்தாய் சீர்பெற்றிலங்கும்
நாடு என ஏட்டிலே நவிலப்படும் நாட்டிலே ஏன் இந்தத் தோற்றங்கள்.
எண்ண முடியாத ஏழைமக்கள், பசிக்கு உணவில்லாத பச்சிளம் குழந்தைகள்
என்று கேட்கின்றேன்.
ஏன் பல இலட்சக்கணக்கானவர் சிங்கப்பூர், மலாய், நெட்டால்
முதலிய நாடுகட்குத் தத்தம் பெண்டுபிள்ளைகளோடும் தன்னந்தனியராகவும்
தாம் பிறந்த நாட்டைவிட்டு அல்லல்பட்டு அரை வயிற்றுக் கஞ்சிக்காவது
வழி கிடைக்காதா என்று வாட்டத்தோடு போகின்றனர்? இறைவனைப்
பாடும் இலக்கிய கர்த்தாக்கள், பகலவனைப் பாடும் பண்டிதர்கள்,
காதலைப்பாடும் கலைவாணர்கள், இயற்கை எழிலையும், நட்பின் மேன்மையை
நாடறியச் செய்யும் நாவலர்கள், பண்டைப் பெருமையைப் பாடும்
புலவர் குழாங்கள், பரமன் திருவிளையாடலைத் திருத்தமாகப் பதிப்பிக்கும்
திருக்கூட்டத்தார்கள் அய்யன் உலா அம்மை அந்தாதி பாடி எல்லாம்
வல்ல எம்பெருமானை ஏத்தியேத்தித் தொழும் பணியிலேயே ஈடுபட்டு
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடியை இழைத்து இழைத்துப்
பாடிச் சுவைக்கும் பக்திமான்கள் மற்று எவராவது இந்த நாட்டிலே
செல்வம் கொழித்திருக்க, எம்பெருமானுக்கு எல்லையற்ற திருக்கோயில்கள்
எழுப்பப்பட்டு அன்றாடம் ஆறுகால பூசை தவறாது நடந்துவர அதற்கென
மலைபோல் செல்வம் முடங்கிக் கிடக்க, இத்தனை குடும்பங்கள்
மண்ணோடு மண்ணாய்ப் பசியால் வாடி மடிகின்றனவே என்பதை நினைத்ததுண்டா?
நெஞ்சில் ஈரம் இருந்து கைவைத்துச் சொல்லத் துணிவுண்டா?
அவ்வேழை மக்களின் பரிதாப நிலையைப் பாடினதுண்டா?
பாடிப் பாரோரின் பகுத்தறிவுக்குச் சிந்தனை தந்ததுண்டா?
வறுமையை நீக்க வழி கோலினதுண்டா? வறுமை தாண்டவமாட, நாடு
நலிந்து கொண்டே போக, அடிமைத்தளை அழுந்திக் கொண்டே செல்ல,
பழையை பிடித்துக்கொண்டு, மக்கள் பக்குவமடைய, மனோ உறுதிகொண்டு
வாழ்க்கையில் வழுக்காது விழிப்போடு செல்லச் சமுதாயத் தொண்டு
செய்யும் ஏடுகள் தேவையாகும் நேரத்திலே, இதிகாச புராணங்களைப்
பிடித்துக்கொண்டு அல்லியரசாணி மாலை பாடிக்கொண்டு, கம்பன்
கா‘யரசனையில் கருத்தைச் செலுத்திக்கொண்டு மதத்திற்கு மாசுவரா
வகையிலே, ஆண்டவன் லீலையை அப்பழுக்கின்றி உள்ளதுள்ளபடி நவிலும்
நல்லெண்ணம் ஒன்றை மட்டும் உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு,
காலத்திற்கும், கருத்திற்கும் நிலைமைக்கும் சுற்றுமுள்ள
சூழ்நிலைக்கும் ஏற்ப ஏடுகளை உண்டாக்காது, பழமையில் கண்மூடி
மோகம் கொண்டு இனத்தை இழிவு செய்யும் இலக்கிய ஏடுகளை ஏத்தி
ஏத்தித் தொழும் இலக்கிய வீரர்களே! உங்கள் கடமை இதுவா? இது
முறையா? அடுக்குமா? என்றும் நிலைக்குமா இந்த நீதி? நீங்கள்
சிந்தியுங்கள், நாட்டுக்கும் ஏட்டிற்கும் தொடர்பில்லாவிட்டால்
நாட்டு மக்களுக்கு வழி காட்டும் வகை யென்னவென்று, இனநலனை
கருதா இலக்கிய பணியால் இனம் இன்புறுமாவென்று. இனத்திற்கு
நலம் பயக்கும் ஏடுகளை இயற்றுதலே நம் கடமை. அதுவே நம் வேலை.
அதுவே மனித சமுதாயத் தொண்டு முற்காலத்தில் தமிழன் தன்னலங்கருதாது
உழைத்தான் தாரணியிலுள்ளோர் தம் நலனுக்காக என்பர். சூதும்
வாதும் விருப்பும் வெறுப்பும் அறியான் தமிழன். மானமே பெரிதென
மதித்தான் தமிழன். கப்பலோட்டி னான் தமிழன். கடாரம் வென்றான்
தமிழன். எவ்வுயிரையும் தன்னுயிர்போல் காத்து வந்தான் தமிழன்
என்று புலவர் பெருமக்கள் இஞ்ஞான்று பறை சாற்றுகின்றனர்.
உண்மை. மேலும் முற்கால தமிழர் வாழ்ந்த வகையை கூறுங்கால்
நமது திரு.வி.கலியாணசுந்தரனார் நடையிலே கூறவேண்டுமானால்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறலாம். இவ்வரிய உண்மைகளுக்கு
நந்தம் பண்டைய இலக்கியங்களிலே தக்க சான்றுகள் உள. ஆராய்ச்சி
வல்லுநரின் முற்ற முடிந்த முடிபுகளும் உள. அத்தகைய இலக்கியங்கள்
இன்று மக்கள் கடை வீதியிலே மலியாமல், ஏதோ சிற்சில புராணஇதிகாசங்களும்
ஆண்டவன் அருள் திருவிளையாடல்களைப் பாடும் பாசுரங்களும் மட்டும்
மலிந்திருக்கக் காரணம் என்ன? ஏன் நம் ஏடுகள் நாட்டிற்கு
நன்மை விளைக்கவில்லை. மற்ற நன்மை விளைத்திலாவாயினும் நாசம்
விளைக்காமலாவது இருக்கின்றனவா? இதுவும் இல்லை ஏன் இந்த நிலை?
|