அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


“நாடும் ஏடும்”
2

மதம்பிடியா ஏடுகள்
நமது பண“டிதர்கள் இலக்கிய ஏடுகளை மதம் எனும் போர்வையால் மறைத்துள்ளார்கள். இந்த நாட்டு ஏடுகளால் நாட்டு மக்கள் பயனுறவேண்டுமாயின், இந்த நாட்டு மக்கள் நற்பண்புள்ள ஏடுகளைப்பெற்று வாழ்வில் ஏற்றமுற வேண்டுமானால், இந்த மதப்போர்வையைக் கிழித்தெறிய வேண்டும். இந்த மதமெனும் மாசு இலக்கியங்களைவிட்டு அகலாமுன்னம் நமக்கு நன்மை பயக்கும் நல்ல இலக்கியங்களோ ஏடுகளோ இல்லாமல்போகும். இலக்கியமின்றி நிலைத்திராத மதம் மதமல்ல. இது வெறும் மதந்தான். மக்களுக்குள்ள மதத்தின் எடுத்துக்காட்டுதான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இலக்கியமின்றி இலங்கமுடியா மதம் வேண்டாம் நமக்கு. மதமின்றித் திகழ வொண்ணாத இலக்கியமும் வேண்டாம் நமக்கு. இந்த மதப் போர்வையைப் போர்த்துப் போர்த்து மக்களை மடையர்களாக்கிவிடுகின்றனர் இந“நாட்டு ஏடுகள். இந்த ஏடுகளைப் படித்துப் படித்து மக்கள் வாழ்வை பெரிதென எண்ணாது, மகேஸ்வரன் முன் மண்டியிட்டு மாலை பாடினால் மட்டும் போதும். மண்டபங்கள் கட்டினால் மட்டும் போதும், திருவிழாக்கள் தினந்தினம் நடத்தினால் தான் நாட்டுக்கு நன்மை என்று நம்பி தம் அறிவு ஆக்கம், சொல், செயல், சிந்தனை, சிறப்பு, ஊக்கம்-உறுதி-உழைப்பு, கல்வி கேள்வி முதலிய எல்லாவற்றானும் முற்போக்கடைய முற்படாமல் அவைகளை, வீணே, ஆண்டவனின் அற்புத லீலா விநோதங்களைப் படிப்பதிலும், பாடுவதிலும், விழாக்கொண்டாடுவதிலும், காலத்தை, கருத்தைச் செலவிடுகின்றனர். ஸதல புராணங்களைப் படித்துப் படித்து ஸ்தோத்திரத்திலே மூழ்கிக் கிடக்கின்றனர்.

மக்கள் மனத்தாலும் நினைக்கொணாத மாசுமிக்க மடத்தனங்களை மகேசுவரனுக்கேற்றி மனங்குழைந்து மகிழ்கின்றனர். கடவுள் பேரால், சாஸ்திரத்தின் பேரால், சாதிமதப் போராட்டங்கள் சர்வ சாதாரணமாய் நாட்டில் நடைபெறுகின்றன. மக்களை மக்கள் மதியாத மனப்பாங்கும் ஒருவனை ஒருவன் தொடாத, தொல்லை தரும் தொட்டில் பழக்கமும், சாதிச் சண்டை, சமயச் சண்டை, கண்மூடி கபோதி வழக்கங்களும் மக்களிடையே மலிந்து கிடக்கக் காரணம் ஏடுகள் எல்லாம் எம்பெருமான் லீலைகளையும் இலக்கியமெல்லாம் இதிகாசங்களையும் புராணங்களெல்லாம் கடவுளரைப்பற்றிய மாயத்தனமான கதைகளையும் எடுத்தியம்பிமக்களின் மதியை மதம் எனும் மாசால் மறைத்து மடித்து மாபாதகஞ்செய்வதல்லால் வேறு காரணமும் உளதோ? கூறுமின்? இவ்விதம் கேட்பதில் குற்றமென்ன தோழர்களே! நாட்டில் நடைபெறும் நாசவேலைகள் எல்லாம், கடவுளை, மதத்தை முன்வைத்தல்லது மற்றெதன் வாயிலாய் நடைபெறுகின்றன. நாட்டிலே பலர் தீண்டாதார். நாட்டிலே அன்பே வடிவமாய் அனைத்துலகும் படைத்துக் காத்தழிக்கும் அண்ணலார் கோயில்கள் அநேகம். அந்தணருக்கு அவர் அண்மையிலே இருக்க இடம். ஆனால் அக்கோயிலைத் திருத்தமாய்ச் சமைத்த சிற்பிக்கு இடம் வெகு தொலைவிலே. நந்தி தேவர் அருகிலே. மேலும் தீண்டாதார் அருள் திரு ஆண்டவன‘ன் அருள் திருக்கோவிலைத் தீண்டவும் தகுதியற்றார். அத்தீண்டாத வரைக் கோவிலுக்குள் நுழையவைக்க வேண்டுமென விழைந்தால் அதற்கு மறுப்பு, வேத ஆகம சாஸ்திரங்களிலிருந்து தரப்படுகின்றது. இதனையும் ஐயங்கொள்ளாமல் அறியாமல் சிறிதும் ஆராய்ச்சி செய்யாமல் மதத்தால் அவர் தம் மதி மந்தமடைந்திருப்பதால் பெரிதும் மதிக்கின்றனர். இதுதானா ஏடுகளின் இணையில்லாத் தொண்டு.

ஏடுகளிலே மதம், அங்கும், இங்கும், எங்கும், என்றும், அநுதினமும் காட்சியளிக்கின்றது. இந்நிலை மாறவேண்டும். மாற்றப்படவேண்டும். மாற்றித்தான் தீரவேண்டும். நாம் பிற நாட்டு நூல் நிலையங்களைச் சென்று பார்ப்பின் ஆங்கு கற்றறிந்த, நல்லோரால் இயற்றப்பட்ட மத நூல்கள் மிக சிலவாகத்தானிருக்கும். அறிவுரை பகரும் ஏடுகள் எண்ணற்று மிளிரும். மதங்கலவாத ஏடுகளின் எண்ணிக்கை எண்ணற்கரியன.

ஒவ்வொரு வீட்டிலுமுள்ள படிப்பறையிலும் இத்தகைய நிலைமைதான் உண்டு. ஆனால் இங்கோ! இதற்கு நேர்மாறான நிலைமை. இந்த நாட்டிலே வீடு கட்டுவார். அதிலே பலப்பல அறைகளும் அமைப்பார். மாட்டுக் கொட்டைகை ஒருபால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால் பெண்டிர் வீட்டுவிலக்கமானால் வதிய மற்றோர்பால் அறை அமைப்பர் வீட்டினிலே. மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மறவார். ஆனால் அறிவூட்டும் அறவுரை மிக்க ஏடுகள் நிறைந்த படிப்பறையைப்பற்றி பகற் கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப் படுத்தக்கூடியதன்று. ஆயினும் அது அவர் தம் சிந்தனையில் தோன்றாது. யாவும் மதப் பயித்தியத்தின் விளைவுதான் எனில் மிகையாகாது. வீட்டிலே ஏடுகள் என வைத்திருப்போர் நம் தமிழ் பண்டிதராவர். அவையும் அவர்தம் சொந்தமல்ல. கலாசாலை நூல் நிலையங்களிலிருந்து இரவலாகப் பெற்றவைதான். (தமிழாசிரியர்கள் தாமே ஏடுகள் வாங்கும் நிலையிலே அவர் தம் வருவாய் நிலை இல்லையென்பதை நாமறிவோம்) அவை அடுக்காக அவர் தம் மனையிலே மாண்புற விளங்கும். அவையாவும் மத நூல்களாகவே விளங்கும். மதம் கலவாத நூல்கள் யாதொன்றும் அவர் தம் மனையில் காணக்கிடைக்கா. நூல்களின் அருமை பெருமை தெரியாத பள்ளி நூல் நிலையங்களிலே அவை கிடப்பதைவிட நமது இல்லத்தில் இனிது வீற்றிருக்கட்டுமே என்று அவற்றைப் பூரிப்போடு போற்றி வைத்திருப்பர்.

இந்த மத நூல்கள் கடவுளரைப்பற்றிக் கூறும் கருத்துக்கள் முன்பின் முரண்பாடுடையனவாயுளவே. மூடனும் கண்டு ஏளனம் செய்யும் ஏமாற்றங்கள் நிறைந்துள்ளனவே! நீக்குரோவும்கூட தன் கடவுளுக்கு இத்தகைய அநாகரிக, அற்புத, ஆபாச லீலைகள் வேண்டாம் என்று வெறுத்துத்தள்ளும் அளவுக்கு ஆபாசங்கள் ஆசார சீலமென்றும் கடவுள் திரு அவதார லீலை யென்றென்றும் கடவுளரைக் கயமைக் குணத்திற்கு உட்படுத்தியுள்ளனவே இந்த ஏடுகள், இவை வேண்டுமா? அவசியமா? என்று எண்ணுங்கள். சிந்தியுங்கள். சீர்த்தூக்கிப்பாருங்கள் தோழர்களே!

இயற்கைக்குச் சோதனை
முழுமுதற் கடவுள், எம்பெருமான், கயிலைவாழ் கடவுள், பார்வதி சமேதரன், அம்மையப்பன், அர்த்த நாரீஸ்வரன் அருள் திருவிளையாடல்களைக் கேளுங்கள் அவருக்கு அருமருந்தன்னவன் இயற்பகை என்பான். சிவனடியார் கேட்டதையெல்லாம் இல்லையென்னாது அவர் கொடுத்து வந்தாராம். அவர் இவன்பால் மாறாக் காதல் கொண்டு அவனருளையே சிந்தித்து வாழ்ந்து வாராநின்ற காலையில் சிவனார் புறப்பட்டார். எங்கு? தமதன்பன் இரக்கும் சிவ நேசர்க்கு இல்லையென்னாதீயும் இயற்பகையின் பக்தியைப் பரிசோதிக்க. சிவனார் இயற்பகையிடம் சென்றார். சென்று இல்லையென்னாதீயும் இயற்பகை நீதானோ என்று கேட்டார். அதற்குத் தலைவணங்கிய இயற்பகையை நோக்கி ஆயின் உம் இல்லக் கிழத்தியை எம்மோடு அனுப்புக என்றார். இயற்பகையும் மிக மகிழ்ந்து தன் மனையாளை அவருடன் அனுப்பினார். இது முறையன்றெனத் தடுத்த முதியோரையும் அடாது என அறிவுறுத்திய அறிவாளரையும் கூடாது எனக்கூறிய சுற்றத்தாரையும் கொன்று குவித்து, இயற்பகையார் தம் மனையாளுடன் சிவனார் சிறிதும் தடையின்றிச் செல்லுமாறு செய்தார். பின்னர் சிவனார் தம் திருவுருவங் காண்பித்து அவரை ஆட்கொண்டனராம். என்னே! சிவனாரின் திறம்.

தோழர்களே! உங்கள் சிந்தனைக்குச் சற்று வேலை கொடுங்கள். இயற்பகை தன் வாழ்க்கைத் துணைவியைக் கூட மதத்தின்பால் தன் மதியை அடகு வைத்திருந்தமையால் பிறனுடனுடன் பிரியத்தோடு அனுப்பி வைக்கும் நிலையை அடைந்தார். மனைவியை வேண்டிய சிவனார் தானே நேரில் வந்து கேட்டனரா? இல்லை. பிராமணவடிவங்கொண்டு வந்து கேட்டார். யார்? நம்முடைய சிவனார். எப்படிப்பட்ட பிராமண வடிவம். தூர்த்தப் பிராமண வடிவங்கொண்டு வந்தார். இதற்குப் பொருள் திரு.வி.க.நடையிலே கூற வேண்டுமானால் காமாந்தகாரங்கொண்டு கட்டழிந்த தோற்றத்தோடு கூடிய பிராமணன் என்பதாகும். இத்தகைய பிராமணன் கேட்டபோது கூசாமல், எண்ணாமல், ஏதும் கேட்காமல் தம் மனையாளைத் தந்தார் இயற்பகையார். சிவனாருக்கும் வேறு சோதனை கிடைத்திலபோலும், இதைத் தவிர பக்தனைச் சோதிக்க, காமாந்தகாரங்கொண்ட பிராமணனுடன் மனைவியை, அவளை யேதுங் கேட்காமல் அனுப்பி வைத்த மாண்பு எதை விளக்குகின்றது? பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்பதையல்லவா? கணவன் பக்தியைத் தானே பரிசோதிக்க வந்தார் கடவுள். தன்னை ஏன் பரிசோதிக்க வேண்டும். தான் ஏன் கணவனை விட்டு அகல வேண்டும் என்ற கருத்து அவர் தம் மனைவியாருக்கு தோன்றவில்லை போலும்! கணவனுக்கு மனைவி அடங்குதல் வேண்டும் என்பது கடமை என்று கொண்டாலும் அது கருத்துக் களங்கம் விளைத்தல் கூடாது.

சான்றாக, பாரதத்திலே ஐவருக்குந் தேவியான பாஞ்சாலியை எடுத்துக் கொள்வோம். அவளைப் பாண்டவர் சூதிலே தோற்றனர். வென்ற துரியோதனன் வீரமுடன் தம்பிக்கு கட்டளையிட்டான். துரௌபதையை சபைக்கு கூட்டிவா வென்று துச்சாதனன் துரௌபதையை அழைத்தான். அவள் தான் வீட்டு விலக்காயிருப்பதால் அரசவைக்கு வரலாகாது என்றாள். துச்சாதனன் அவள் தங்கள் அடிமையென்றும் தருமன் முதலானோர் அவளைத் தங்களிடம் சூதாட்டத்திலே பணயமாக வைத்துத் தோற்றமையால் அவள் தங்கள் சொற்படி நடக்க வேண்டுமெனவும் நவில்கின்றான். கணவனால் கண்ணியமாகப் பந்தயத்திலே தோற்கடிக்கப்பட்ட தான், கணவன் சொற்படி. கருத்துப்படி நடக்க கடமைப்பட்டவள் என்ற அறிந்த பின்னரும், அவள் கேட்கின்றாள் பாண்டவர் என்னை முன் தோற்றனரா அன்றித் தங்களைத் தோற்றபின் என்னை தோற்றனரா என்று. தங்களைத் தோற்றுப்பின் தன்னைத் தோற்றனர் என்பதறிந்தவுடன், தாங்கள் அடிமையாயின பின் தன்னைப் பந்தயம் வைக்க அவர்கட்கு உரிமையில்லை. ஆகவேதான் துரியோதனாதியர்க்கு அடிமையாக நியாயமில்லை என்று தன் கருத்தைக் கூறினாள். அரசவையில் முறையிட்டாள். பிறகு பலாத்காரமாக அவள் துகில் உரியப்பட்டபோது, கண்ணன் அருளை வேண்ட, சேலையவிழ்ந்த நேரத்திலே தட்டாது காட்சியளிக்கும் தனது இயற்கைக்கேற்ப மாதவனும் மங்கை மானங்காத்தான் என்று கதை சொல்லப்படுகின்றது. கடமையைக் கருத்தோடு சேர்த்து வாதிட்ட பாஞ்சாலியின் அளவுக்காவது, இயற்பகையார் தம் இல்லக்கிழத்தி பிராமணரை நோக்கி, ஐயா, என் கணவர்தான் உமக்கடிமை. நானல்ல, அவருக்குத்தான் சோதனை, எனக்கல்ல என்றாவது கூறியிருக்க கூடாதா?

சதி அநுசூயைக்குச் சோதனை
இன்றேல் சதி அநுசூயைபோல் சற்றுத் தம் அறிவால் அன்பர் (கணவன்) செய்கையையும், ஆண்டவனின் வேண்டுகோளையும் அலசிப் பார்த்திருக்கலாகாதா? என்று கேட்கின்றேன், அநுசூயா பதிவிரதா சிரோன்மணி. இரும்புக் கடலையைச் சிற்றுண்டியாக்கித் தரும் பாங்குடைய பத்தினி. விருந்தினரை உபசரிக்கும் உத்தமி. அவர் தம் பெருமை ஏழுலகங்களிலும் எட்டிப் பரவிற்று. அவ்வநுசூயையின் பெருமை தமக்கு இழிவு தருகின்றது. தம் சீரும் சிறப்பும் சிதைக்கின்றது என்று கருதினர் மும்மூர்த்திகளின் மனைவியர். அழுக்காறு கொண்டனர். ஆகவே தத்தம் துணைவரை ஏவி அநுசூயையின் பெருமையைக் குறைத்துச் சிறுமைப்படுத்த சொல்லினர். மூலக்கடவுளர் மூவரும் தத்தம் இல்லக்கிழத்தியின் ஏவலை சிரமேற்கொண்டு சென்றனர். அநுசூயையின் வீட்டிற்கு அவர் தம் அன்பர் (கணவர்) அயலே சென்றிருக்கும்பொழுது துறவிகள் போல மாற்றுருக் கொண்டனர். மங்கை நல்லாளை நண்ணினர். பிச்சைக் கேட்டனர். தருவேன் என்றால் மங்கை, சரி. எங்கள் இச்சைப்படி பிச்சை இடுவையோ என்றனர் மும்மூர்த்திகள். ஆகா, அவ்விதமே உங்கள் இச்சைப்படி பிச்சையிடுவேன் என்றாள் நங்கை. உடனே மூர்த்திகள் மூவரும் அங்ஙனமாயின் நிர்வாணமாக நின்று நீ எமக்கு பிச்சையிடுக என்றனர் வந்த விருந்தினரை உபசரித்தல் தன் கடமை. மேலும் அவர்கள் இச்சைப்படி பிச்சையிடுவாதகவும் உறுதி கூறியிருக்கின்றாள். எனினும் அநுசூயை அவர்கள் மீது ஐயங்கொண்டாள். அவர்களை நோக்கி நீங்கள் கேட்டவண்ணம் செய்தால் முறை ஆனால் அது நீதிக்கு முரண்பாடானது அறிவுக்கு ஒவ்வாதது என்று மறுத்தாள். உடனே கோபங்கொண்டனர் மும்மூர்த்திகளும். எங்களை யாரென்று நினைத்தாய். நாங்கள் மும்மூர்த்திகள். சொன்ன சொல்லை மீறினால் நாங்கள் சபிப்போம் உன்னை என்று உறுமினார்கள். மும்மூர்த்திகள் வந்து கேட்கின்றார்களே என்று மதி தயங்கவுமில்லை. பயங்கொள்ளவுமில்லை. மும்மூர்த்திகள் நீங்களல்ல, மும்மூர்த்திகள் என்று நவின்று நாட்டை நாசம் செய்ய வந்த வேடதாரிகளாகும் நீங்கள் அல்லது மும்மூர்த்திகளேயாயினும் அறிவு மழுங்கி ஆராய்ச்சி மடிந்து மானமற்றவராய் வந்திருத்தல் வேண்டும். இது கேட்கத் தகுந்தது. இது கேட்கத் தகுதியற்றது என்ற பாகுபாடு அறியா மூடர்களே! உங்களை நம்பேன் என்று கூறினாளாம். சொன்ன சொல் தவறாதிருக்க வேண்டுமல்லவா!

பின்னர் தனது கற்பின் மகிமையால் அவர்களைக் குழந்தைகளாக்கிக் கொண்டு பிச்சையிட்டதாக கதை சொல்கின்றது. அதன் உண்மை ஒருபுறம் இருக்கட்டும். கடவுளே நேரே வந்து கேட்டபோதும் தருமநியாயம் எடுத்துச்சொல்லி வாதாடின அந்த அளவு“ககாவது இயற்பகையாரின் மனையாள் கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் யாவரும் பக்தியின்பால் சித்தங் கலங்கிச் சீரழிந்துக் கிடந்தனர். மனைவியைத் தாவென் னும் மாண்புமிக்க மகேஸ்வரனையும் நிர்வாண பிச்சையிடு என்று கேட்கும் நீதியற்ற கடவுளையும் பாடும் நிகண்டுகளுமா நமக்குத் தேவை? வேண்டவே வேண்டாம்.

திருவிளையாடல்
இதே பரமசிவன் திருவிளையாடற்புராணத்திலே புரிந்துள்ள லீலையைக் காண்போம். தாய்ப் பன்றி இறந்துவிட்டது. பன்றிக் குட்டிகள் பசியால் பரிதவிக்கின்றன. கண்டார் முப்புரம் எரித்த பெம்மான். உளமுருகினார். உடனே தாய்ப் பன்றியின் உருவம் தாங்கினார் பன்றிக் குட்டிகளின் பசித் தீர்ந்தார். அவற்றைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார். பின்னர் அவற்றைப் பாண்டியனிடம் கொண்டு சென்று ஆண்டு அவன் அவைக் களத்திலே வீற்றிருந்த மந்திரிகளை நீக்கி அவர்களுக்கு பதிலாக இவைகளை அங்கு அமர்த்தினான். அத்துடன் விட்டாரா? அம்மந்திரிமார்களின் பத்தினிகளையும் இவைகளுக்குப் பத்தினிமார்களாக அமைத்தார் என்று திருவிளையாடல் புராணம் செப்புகின்றது. இது நாடறிந்த உண்மை. இது தகுமா? முறையா? அறிஞர் ஆற்றும் அறமா? ஆண்டவன் செய்யும் அற்புதமா? ஆபாச வேலையா? அக்கிரமமா? மக்களை மடையராக்கும் வழியல்லவா? இதனைப் பாடும் ஏடும் வேண்டுமா நமக்கு? இதனால் யாது பயன் நாட்டுக்கு. நவிலுங்கள் நாட்டின் எதிர்காலப் பெரியோர்களே!

கடவுள் திருடுகிறார்
பிறிதொரு கடவுள் அவதாரமான கண்ணன் சிறு வயதிலே வெண்ணெய் திருடுகிறான். சற்றுப் பெரியவனான பிறகு பெண்கள் குளிக்குங்கால் அவர் தம் சேலைகளைத் திருடுகிறான். பின்னர் கோபியர்களோடு பற்பல லீலைகள் செய்கின்றான். அர்ஜுனனுக்கு அழகிய அணங்குகள் அநேகரைக் கூட்டி வைக்கிறான். பாரத யுத்தத்திலே சிறந்த ராஜதந்திரத்தைக் கையாளுகிறான். நாலு வருணங்களைப் படைத்தவன் நான் தான் என்று கீதை செய்கிறான். இத்தகைய கடவுளரை ஆதாரமாகக் கொண்டு ஒழுகினால் நம் மக்கள் மாண்புறும் காலம் என்றோ? மதிபெறும் காலம் காணக்கிடைக்குமா? அன்றி அறிவால் ஆராய்ந்து அறமெனப் பட்டதைத் துணைக்கொண்டு செல்வது நேர்மையா? செப்புங்கள் எதிர்காலச் செம்மல்களே!

மதத்தால் மயங்கிய மன்னவன்
கடவுளரின் கயமைத்தனத்தையும் கபோதிக் குணத்தையும் ஏடுகளின்றி எடுத்துக் காட்டப் புகின் அஃது ஓர் எல்லைக் குட்படாது நீண்டு செல்லும். மதமானது சிறந்த இலக்கியங்களுடே செறிந்து விளங்குவதால் மதியிழந்த மன்னர்கள் எத்துணையர், எத்துணை அறிஞன் பணி நாட்டு நலன் கருதாமல் நாசமாயிற்று. நம் நாட்டிலே ஓர் மன்னன் வேட்டைக்குச் சென்றான். வழியிலே ஒரு குளம். அக்குளத்திலே தவளைகள் கரசர என்று ஓசையிட்டவண்ணமாயிருந்தன. அரசன் மகா சிவபக்தன். சிவ புராணங்களைக் கரைகண்டவன். அவன் காதிலே இந்த கரகர என்ற ஓசை அரகர என்று வீழ்ந்தது. வீழலும் அம்மன்னவன் மனம் மிக நொந்தான். ஏன்? சிவநேசர்கள் குளத்தில் குளிரினால் வாடுகின்றார்களே என்ற ஏக்கத்தால், உடனே காவலாளர்க்குக் கட்டளையிட்டான். அரண்மனைப் பொக்கிஷத்தை குளத்தில் கொண்டு வந்து போடுங்கள். அவை அடியார்கட்கு உபயோகப் படட்டும் என்று தவளைகள் சப்தத்தையும் தவறாகக் கேட்டான். வேந்தன் தவளைக்கட்குப் பொன்னும் மணியும் உதவுமா என்று பகுத்துணர வில்லை. அந்தப் பொன்னும் மணியும் நாட்டிலே நலியும் ஏழைகளின் ஏக்கத்தை எத்துணை எளிதில் போக்கும் என்பதையும் எண்ணினானில்லை குளத்தில் போடும் பொருள் எவர்க்கும் எத்துணையும் பயன்தராது என்பதறியாது மதமெனும் மயக்கத்திலாழ்ந்து பக்தியெனும் பரிதாப வலையில் சிக்கி அறிவை அடகு வைத்துப் பொருளைவாரி மறைந்தான். இதைக் கேட்கும்போது ஏடுகளில் பார்க்கும்போதும் நமக்கு நகைப்புதான் வருகின்றது. அம்மன்னன் பால் இரக்கமும் உண்டாகின்றது. மதப்பற்றினால் மன்னன் மதியிழந்ததைப்போல் மன்னன் வரலாற்றை ஏட்டிலே காணும் நாட்டு மக்கள் எத்தனை பேர் இன்னும் மதியை மதத்தின்பால் மண்டியிட்டுப் பறிகொடுப்பர் என்ற எண்ணம் எமைவாட்டுகின்றது. எனவே இத்தகைய மதம் கலந்த அநாகரிக, ஆபாச, புராணங்கள் நிறைந்த கதைகளைப் பாடுதற்கே ஏடுகள் பயன்படுமானால், அறிவு, ஆராய்ச்சி என்றாவது நம் நாட்டில் உதிக்குமா? ஆண்மை பெருகுமா? ஆற்றல் அதிகரிக்குமா? வாழ்க்கையி“ல் வளம் காண்போமா? வழங்குங்கள் இதற்கோர் நல்ல தீர்ப்பு வாலிபத் தோழர்களே!

இத்தகைய ஏடுகள் மதியை வெருட்டி மனதை விதியில் இருத்தி மக்கள் அறிவை மயக்கி, ஆண்டவன் அருளால் அனைத்தையும் அரைக் கணத்தில் பெறலாம் என்ற ஆசையைக் கிளப்பி மக்கள் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முழு மூடர்களாக்குகின்றனர். அதுவுமின்றி நாம் இலக்கியங்களிலே, ஏடுகளிலே மதத்தைப் புகுத்தி ஆண்டவன் திருவிளையாடல்கள் என்றும், அவதாரங்கள் என்றும் அறிவுக்குப் பொருந்தாதவற்றைக் கூறி கடவுளருக்குக் கயமைத்தனத்தையும், கபோதிக் குணத்தையும் ஆபாச ஆசாரங்களையும் ஏற்றி ஏளனத்திற்குள்ளாக்குகின்றோம். கடவுளை மதிகெட்டவனாகக் காட்டுகின்றோம். இவைகளைத் தவிர வேறு ஏடுகளை இக்கால இலக்கியப் பண்டிதர்கள் ஏன் செய்து தரலாகாது?

தற்கால இலக்கியக் கர்த்தாக்கள்
நமது சேதுப்பிள்ளையவர்கள் எழுதுவது வேலும் வில்லும் அதற்கு அடுத்தாற்போன்று, சேதுப் பிள்ளையவர்கள் தம் நூலிலே கம்பராமாயணத்தையும் சுந்தரபுராணத்தையும் சரிவரக் கையாளவில்லை என்று வேறு நூல் ஒருவர் இயற்றுவர். சோமசுந்தரபாரதியாரின் ஏடு தசரதன் குறையும் கைகேயியின் நிறையும் என்பது திரு.வி.க.வின் ஏடு பெரிய புராணத்திற்குப் புத்துரை. மறைமலையடிகளார் நூல் மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி பிறிதொரு புலவர் இயற்றுவார் இதிகாசங்களிலே காணும் நீதிகள் என்று இவ்விதம் பழையபத்தாம் பசலியையே திரும்பத்திரும்ப வெவ்வேறு நடையில் கொண்டு வருவதால் நாட்டுக்கு வரும் நன்மை என்ன? நன்கு சிந்தியுங்கள் அறிவு கொண்டு ஆராயுங்கள் கலை பயிலும் காளைகளே!

நமது தற்காலப் புலவர்கள் பண்டையத் தமிழ் மன்னர்கள் வீரத்தை விளக்குங் கவிதைகளை ஏன் பாடக்கூடாது? செங்குட்டுவனின் வடநாட்டு யாத்திரையையும் ஆரிய மன்னான கனக வியசரைப் போரில் வென்ற வீரத்தையும் அவர் தம் முடியினிலே கண்ணகி சிலைக்குக் கல்த்தூக்கி வரச்செய்த பெருமையையும்பற்றி ஏன் ஒரு பரணி பாடக்கூடாது? ஏன் கடாரம் வென்ற தமிழரசர்களைப்பற்றி ஓர் காவியம் இயற்றக் கூடாது? பர்மா வென்ற பராந்தகனைப் பற்றி ஏன் ஒரு புகழ்மாலை இயற்றக்கூடாது. அறிவுபற்றியும், ஆராய்ச்சியின் மேன்மைபற்றியும் அன்றாட வாழ்க்கை வளம்பற்றியும் பலப்பல ஏடுகள் ஏன் எழுதக்கூடாது? இவர்களால் முடியாதா? முடிக்கும் ஆற்றல் இல்லையா? முடியும். ஆனால் முயலுவது கிடையாது. அவர்கள் இத்தகைய நாட்டுக்கும் ஏட்டுக்கும் தொடர்பூட்டும் பெரும் பணியிலே சிந்தை செலுத்தினால் நாடு நாளடைவில் புத்துணர்ச்சி பெற்றுப் புது வாழ்வு பெறும். பாடவேண்டுமென்றால் பரமன் திருவிளையாடல்களும், பூஞ்சோலைகளும், கோயில்களும் ஸ்தல மகிமைகளுந்தான் கிடைக்கின்றனவா? அன்றாட கஞ்சிக்கு அலையும் தோழனைப்பற்றி உள்ள முருகப் பாடிப் படிப்பவர் மனதில் இரக்கமுண்டு பண்ணலாமே நாட்டிலே உள்ள செல்வம் ஒரு சிலருக்கு மட்டும் பயன்பட்டு, பலருக்குப் பயன்படாது, கோயில்களிலும், மடங்களிலும், ஜமீன்தார்களிடையும் முடங்கிக் கிடப்பதை ஊரறியச் செய்யலாகாதா? நாட்டிலே ஆண்டி-அரசன், ஏழை- பணக்காரன், பறையன்-பார்ப்பான் என்ற மாறுபாடுகளின் இழிதன்மகைளை ஏடுகளின் மூலம் எடுத்தியம்பி மக்களிடை மறுமலர்ச்சிக்கான கிளர்ச்சி உண்டுபண்ணலாகாதா?

இவைகளை விடுத்து பக்தனைப் பரிசோதிக்க மனைவியையும், பிள்ளைக் கறியையும் கேட்கும் புண்மைக் குணத்தைக் கடவுளர்க்கு ஏற்றி அதனைப் பாடுவதால் நாட்டிற்கு நன்மை யாதும் உளதோ? இவைகள் நம்மைக் காட்டுமிராண்டி காலத்திற்கு ஈர்த்துச் செல்லவில்லையா? இதனை முதன் மந்திரி சர்ச்சில் கேள்விப்படின் நமக்கு கி.பி.2045 லாகிலும் சுதந்திரம் வழங்க எண்ணங் கொள்வாரா?

இத்தகைய கதைகளும் புராணங்களும் ஏடுகளும் இலக்கியங்களும் மக்களை கடவுளர்க்குத் திருப்பணி செய்வதிலும் திருவிழாக்கள் செய்வதிலும் அளவிறந்த பணத்தைச் செலவிட ஊக்குகின்றன. இதனால் ஏழை மக்கள் பணம், கல்வி, கேள்வி முதலியவற்றிற்குச் செலவிடப்படாமல் ஆச்சார அனுட்டானங்களுக்கும் ஆண்டவனின் நிவேதனத்திற்கும் அநாவசியமாகச் செலவிடப்படுகின்றது. அறிவு மழுங்குகின்றது. ஆராய்ச்சி குன்றுகின்றது. மடமை மலருகின்றது. மதி மடிகிறது. செல்வம் குறைகிறது. சமய சாதிச் சண்டைகள் வளருகின்றன. அமைதி அழிகின்றது. நாடு நலிகின்றது. நாட்டார் நாசமாகின்றனர். கலை, இலக்கியம், காவியம், யாவும் பண்டைய கலைகளோடு இலக்கியங்களோடு, காவியங்களோடு நின்று விட்டன. அவைகளைச் சுவைப்பதுதான் நன்று. அதுவே போதும்.

தமிழ்நாடு போனாலும் போகட்டும், கம்பராமாயணமே வேண்டும் என்று நாட்டுப்பற்றின்றி கலைப்பற்றே (அதிலும் நாட்டோடு முற்றிலும் தொடர்பற்ற ஏடு) பெரிதும் மிகுந்து பழைய பத்தாம் பசலியையே பெரிதும் பிடித்து நிற்பாராயின், நான் உறுதியாகச் சொல்லுகின்றேன். அப்பண்டிதர்களின் காலமும் இத்துடன் முடிவடைந்தது என்று ஏன் இன்று உலகின் பலப்பல பகுதிகளிலும், ஏடுகளின் காலத்திற்கும் கருத்திற்கும் நிலைமைக்கும் ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றன. சான்றாக கசபியான்கா என்ற சிறுவனின் கதையை எடு“த்துக்கொள்வோம். கசபியான்கா என்னும் சிறுவன் தன் தந்தையோடு கப்பலில் சென்றான். கடல் நடுவே கொடிய கப்பற் சண்டை நடந்தது. கசபியான்காவின் தந்தையும் ஒரு கப்பற் சண்டை நடந்தது. கசபியான்களின் தந்தையும் ஒரு கப்பல் தலைவன். அவன் தன் மகனைக் கூப்பிட்டு ஒரிடத்தில் நிறுத்தி, குழந்தாய் நான் அழை“குமளவும் இவ்விடம் விட்டு நகராதே என்று உரைத்து ஏதோ அலுவலாக அப்பாற் சென்றான்.

சிறுவன் கசபியான்கா நல்ல பிள்ளை. தந்தை சொல் தட்டாத தனயன். கடமையை உணர்ந்த பாலன். சண்டையில் சைபியான்காவின் தந்தை உயிர் நீத்தான். இது இச்சிறுவனுக்குத் தெரியாது. திடீரென்று கப்பல் தீப்பிடித்துக் கொண்டது. கப்பலில் உள்ளோர் யாவரும் தமது உயிரைப் பெரிதென மதித்து பலவாற்றானும் உயிர் தப்பி ஓடினர், பாலன் கசபியான்காவை பலர் அழைத்தனர். அவன் போக மறுத்தான். தீ நாற்புறமும் அவனைச் சூழ்ந்து கொண்டது. அதுகாலையில் பலரும் அவனை வற்புறுத்தினர் உடன் வருமாறு. அவன் தன் தந்தையின் கட்டளையை மீறி நடக்க முடியாது என்று உறுதியுடன் கூறிவிட்டான். அனைவரும் போய் விட்டனர். கசபியான்கா, தந்தாய்! தந்தாய்! நான் போகலாமா, போகலாமா என்று பன்முறை கூவினான். தகப்பன் உயிரோடிருந்தாலல்லவா பதில் கிடைக்கும். எனவே தந்தை சொல்லைத் தலைமேற்றாங்கி அவ்விடத்திலேயே நின்று தீயில் மடிந்தான். தந்தையின்பால் அவன் செலுத்திய அன்பைக் கண்டு பலரும் அவனை போற்றினர். கவிகள் அவனை ஏத்தி ஏத்திப் பாடினர். அப்படிப்பட்ட கசபியான்காவைப் பற்றி இந்த நாளிலே ஏடுகளிலே பொறிக்கும் பொழுது கசபியான்கா தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற கடமையைக் கடைப்பிடித்து நடந்து மடிந்தான். ஆனாலும் அவன் தன் கடமையைக் கடைபிடித்தானேயன்றிக் கருத்தோடு ஒன்றிச் செய்தானில்லை என்று கூறப்புறப்பட்டிருக்கிறது. தீயின் வேகத்திலே கடலின் கொந்தளிப்பிலே கப்பல் உடையும் ஒசையின் நடுவிலே தந்தையின் மறுமொழி தனக்கு எட்டாதிருக்கலாம். அன்றித் தன் கூக்குரலும் தந்தைக்கு எட்டாதிருக்கலாம். அன்றி அத்தகைய போராபத்தினின்றும் தப்ப தந்தை சொல்லை மீறினால் குற்றமில்லை யென்று கொண்டிருக்கலாம், கசபியான்கா கடமையைத்தான் கவனித்தான், கருத்தோடு கவனிக்கவில்லை. கருத்துக்கே களங்கம் வந்து விட்டதே என்று முகவுரை தீட்டுகின்றார். அதற்கு மேனாட்டிலே இத்தகைய முற்போக்கான முறைகள் கையாளப்படுகின்ற காலையில் நம் நாட்டில் பழைமை பழைமை என்று பாடித் திரியும் பண்டிதர்கள் தம் பரிதாப நிலைகண்டு நாம் இரங்காது வேறென்ன செய்வது!