அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


“நாடும் ஏடும்”
3

கம்பர் செய்த தொண்டு
கம்பராமாயணத்திலே கம்பன் கிட்கிந்தையை வருணிக்குங்கால் அதனையொரு சிறந்த நாடாகக் காண்கின்றான். ஆங்கு வசதியும் மக்கள் சகல கலாவல்லவர்கள் என்றும் சாஸ்திர விற்பன்னர்கள் என்றும், நீதி தவறாது ஆண்டவர் என்றும், பலப்பல ஆடை ஆபரணங்கள் அணிந்திருந்தனர் என்றும் பெண்கள் மிக அழகுள்ளவர்கள் என்றும், பேசுவதில் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் கூறி முடிவில் அவர்கள் குரங்குகள் விலங்குகள் என்று கூறுகின்றான். இது முன்னுக்குப் பின் முரண்பாடல்லவா!

மக்களின் கருத்திற்கேற்ற நற்குணங்கள் யாவும் படைத்தவர்கள் என்று கூறிய அதே வாயால் அவர்களைக் குரங்குகள் என்று அடுத்தாற்போன்று கூறுவது முறையா? அறிவுடையார் ஒப்பும் உம்மையாகுமா? நேர்மையா? மற்றும் கம்பன் இலங்கையை வருணிக்கும்பொழுது மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் அமைந்த நகர் என்று கூறுகின்றான். கற்றார் வேதேமோதினர், நகரெங்கும் ஆடல் பாடல் நிரம்பியிருந்தது. ஆங்காங்கு வீணை இசைக் கருவிகளின் ஓசை எழுந்தது என்று சிறப்பாகக் கூறுகின்றான். ஆனால் அங்கு வதிந்தவர்கள் இரக்கமில்லாதவர்கள் என்று கூறுகின்றான். ஆண்கள் மகா கோர உருவினர். நீண்ட வாயும், கோரைப் பற்களும், செம்பட்டை மயிரும், கரிய மேனியும், பெரு உடலும் கொண்டு விகாரமாய் விளங்கினர் என்கின்றான். ஆனால் பெண்களைப் பற்றிக் கூறும்பொழுது மட்டும் அவரது இயற்கையான பெண்களைப் பாடுவதிலுள்ள தனி விருப்பப்படி அழகிகள், அந்தர மாதர்க்கு ஒப்பானவர்கள் என்று கவி தீட்டியிருக்கிறார். ஆண்கள் அழகற்ற விகார உருவினர். ஆனால் பெண்கள் அழகுள்ள அணங்குகள். இதிலே ஆண்-பெண் பொருத்தம் உண்டா. அன்றி நம் நாட்டுத் தற்கால முறைப்படி, காதலின்றிக் கணவன் மனைவியராகச் சேர்க்கப்பட்டாலுங் கூட அவர்கட்குப் பிறக்கும் ஆண்கள் எல்லோரும் அழகற்ற அநாகரிகர்களாயும், பெண்கள் எல்லோரும் அழகுமிக்க அணங்குளாவும் விளங்குவர் என்று சிந“தித்துப் பாருங்கள். இத்தகைய கருத்துக்கள் காலத்திற்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு மாற்றப்பட வேண்டுமா? என்று ஆராய்ச்சி செய்யுங்கள். உங்கள் அறிவிற்கு வேலை தாருங்கள் தோழர்களே!

பழைய ஏடுகளில் நீதிகள் நிறைந்திருக்கின்றனவாம். நீதியின் நேர்மை நடுநிலைமை நவிலப்படுகின்றனவாம். சான்றுகளும் பல பகரப்படுகின்றன. அறவுரை அடிக்கடி அறிவுறுத்தப்படுகின்றது. உண்மை என இக்கூற்றைக் கொண்டாலும் நல்ல நீதி கொண்ட ஏடுகள் எவையெனத் தெரிந்து கோடல் எளிதன்று. நீதியின் தத்துவம் ஓர் நூலில் ஒருவிதமாயும் பிறிதொன்றில் பிறிதோர் வண்ணமாயுமிருக்கின்றன. அவற்றில் நீதியைப் பற்றியே மக்கள் வாழ்க்கைக்கு வேண்டியனவற்றையே கூறும் நூல் திருக்குறளாகும். எத்தேயத்தார்க்கும் எக்குலத்தார்க்கும் ஒப்ப முடிந்த ஓர் நீதி நூலாகும். சிற்சில இடைஞ்சல் நீக்கப்பட்டின்.

மதப்பித்தர்கள் செயல்
இத்தகைய திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் எம்மதத்திலும் சேராத இயல்பினராய்த்தான் இருந்திருக்க வேண்டும். அவரையும் இம்மதப்பித்தர்கள் ஏடுகளிலே திருவள்ளுவர் மதவாராயச்சி என மகுடமிட்டு ஒவ்வொருவரும் அவரைத் தத்தமது மதத்தைச் சேர்ந்தவரெனக் கொள்கின்றனர். கூசாமல் கூறுகின்றனர். சான்றுகளாக திருக்குறளிலிருந்து சிற்சில சொற்களையும், சொற்றொடர்களையும் எடுத்துக்காட்டி இச்சொல், இச்சொற்றொடர் எந்தம் இறைவனைக் குறிக்குமாகலின் தமிழ் மறையை மலர்வித்த வள்ளுவர் எந்தம் மதத்தைச் சார்ந்தவர். என்னே எந்தம் மதத்தின் மாண்பு! திருவள்ளுவரே கொண்ட தமதம் எம்முடைய மதமெனில் அதன்பால் குற்றங்காணலுங் கூடுமோ? என்று எண்ணி இறும்பூதெய்துகின்றனர். என்னே இவர்தம் இழிமதி. மதம் கலவாத ஏடு ஒன்றாகிலும் இருந்து மக்களுக்குப் பயன்படும் நிலையிலிருந“தால் அதனை மதப்புரட்டிலே சிக்க வைத்து மக்கள் அறிவைப் பாழ்படுத்துகின்றார்களே! இவர்தாம் அவைகளிலுள்ள நீதிகளைச் சுவைப்பவராம்! நேர்மையை அநுபவிப்பவராம் என்னே இம்மதங்களின் மீளாத் தொல்லை! என்று தணியும் இந்த மடமையில் மோகம் மாந்தர்க்கு அன்றே நாடு நலம் பெறும் நன்னாள்.

நீதி நிலையுடையதா?
தவிர, நீதி நீதி என்று கூறுகின்றார்களே, நீதி என்றும் நிலையுடையதா? நிகண்டுகட்குக் கட்டுப்பட்டு நிற்கக் கூடியதா? அல்லவே அல்ல. ஒரு காலத்தில் நீதி மற்றொரு காலத்தில் மாற்றப்படலாம் காலத்தையும் கருத்தையும் கொண்டு. நீதி நிலையற்றது நிலைமைக்கு ஏற்றபடி மாறும். இதுதான் நீதி என்று அறுதியிட்டு கூற எவராலும் முடியாது. மறுமுறையும் கூறுகின்றேன் ஏடுகளிலே எழுதப்பட்ட நீதிகள் என்றும் நிலையுடையனவல்ல என்று எந்தெந்தச் சமயத்தில் மாற வேண்டுமோ மாற்றப்பட வேண்டிய மனப் பண்பு மக்களிடை மலர்கின்றதோ மாற்றித்தான் தீர வேண்டும் என்ற நிலைமை நாட்டில் நீடிக்கிறதோ அன்றெல்லாம் அது மாறும். மாறிக்கொண்டே வரும். மாறிக்கொண்டே போகும்.

சான்றாக ஏ.ஆர்.பி.விதிகள் நகரிலே ஏற்படுமுன்னர் வண்டிகட்கு ஒளிமிகு விளக்குகள் போட வேண்டியது அப்போதைய காலத்திற்கு, நிலைமைக்கு, கருத்துக்கு ஏற்ற நீதி. ஆனால் ஏ.ஆர்.பி. விதிகள் நடமாடத் தொடங்கின. பின்னர் மங்கலான, முற்றும் மறைக்கப்பட்ட விளக்குகளுடனே வண்டிகள் நடமாட வேண்டியது என்பது இப்போதைய காலத்திற்கு, கருத்திற்து, நிலைமைக்கு ஏற்ற நீதி. வலுத்தவன் இளைத்தவனை ஏய்த்தது. ஒரு காலத்திலே நீதி. அது இக்காலத்திலும் செல்லுமா?

நீதியைக் காலத்திற்கும் கருத்திற்கும் நிலைமைக்கும் ஏற்ப நடுநின்று வழங்கும் ஏடுகள் தோன்றித்தான் தீரும். அத்தகைய நூல்களை இந்நாட்டு நாவலர்கள், பண்டித மணிகள், சொற் செல்வர்கள் செய்து தரல் வேண்டும். அதுவே முறை. பழைய நீதிகளிலும் இன்றைக்கும் இயைந்து வருவனவற்றை வேண்டா மென்று எந்தப் புல்லறிவாளனும் புகலான். எனவே என் சொற்கேட்டு எவரும் மருள வேண்டாம். மனம் வைத்து மக்களுக்குப் பணிபுரியும் ஏடுகள், இனப்பற்றை மிக்கூட்டும் இலக்கியங்கள், கடவுளைக் கயவனாக்காத கதைகள், வாழ்க்கை வளமுற வழிகாட்டும் கயவனாக்காத கதைகள், வாழ்க்கை வளமுற வழிகாட்டும் வாழ்க்கைச் சரிதங்கள், வரலாறுகள், கற்பனைகள், காவியங்கள் செய்து தர முன்வாருங்கள், வாருங்கள் என்று வரவேற்கின்றேன் வாலிபத் தோழர்களே! என் சொல்லைக் கேளுங்கள். கேட்டுச் சிந்தியுங்கள். செயலுக்கு வேண்டுவதா? செம்மைப்பட வழி காட்டுமாய காட்டும் என்று கருத்தில் பட்டால் கலங்காது போரிடுங்கள். வெல்வீர் விரைவிலே. வீழ்த்துவீர் வீணரை, நாட்டுக்கு நலம் பயப்பீர்! என்று உங்கள் சிந்தனையைச் சற்றுத் தூண்டிவிடுகின்றேன். சீர்தூக்கிப் பாருங்கள். அறிவினால் ஆராய்ந்து பாருங்கள் அறம் எது என்று அதன் வழி நடவுங்கள். நலன் எய்துங்கள்.

உலகிலே உத்தமர்களின் ஓயா உழைப்பினாலும் அறிவாளிகளின் குன்றாத ஆராய்ச்சியாலும் உண்டாக்கப்படும். விஞ்ஞானக் கருவிகள் ஆகாய விமானங்கள், பறக்கும் குண்டுகள் முதலிய இன்னபிற புதுமைகள் எல்லாம் நம்முடைய பண்டைய புராண இதிகாசங்களிலிருந்து காப்பியடித்தவை என்று கழறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளல் போன்ற ஏமாளித்தனம் அல்லவா! நாட்டிலே ஆகாய விமானம் ஆகாயத்திலே பறக்கும். கிராமத்தான் அதுகண்டு அதிசயமுறுவான். ஆ! ஆ! இந்த வெள்ளைக்காரன் என்ன கெட்டிக்காரன் என்பான். அத்தருணம் அண்டையிலே இருப்பார் ஓர் இராமநாத சாஸ்திரிகளோ! அல்லது சோமசுந்தர குருக்களோ! எவராவது உடனே உரைப்பார். என்ன அப்பா பெரிய அதிசயத்தைக் கண்டுவிட்டாய். நம்முடைய புராணத்திலே இல்லாத ஆகாய விமானமா? இராமாயணத்திலே புஷ்பக விமானத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நேற்றுக்கூடக் கேட்டாயே, அதற்குள்ளாகவா மறந்துவிட்டாய். அந்தக் காலத்திலே இல்லாத விமானமா? எல்லாம் நம்முடைய வேதங்களிலிருந்து காப்பியடித்தவைதான். இன்னும் ஒரு சிறிய விஷயம் பார். அதோ பறப்பது என்ன? கருடன்.
கருடன் என்ன நேராகப் பறக்கிறது. பார்ப்பதற்கு ஆகாய விமானம் போல இல்லையா? அந்தக் கருடனைப் பார்த்துதான் அவனும் (வெள்ளைக்காரனும்) காப்பியடித்திருக்கிறான். அந்தக் கருடன் மெக்கானிசம் தான் அந்த ஏரோப்பினேனில் இருக்கின்றது. வேறென்ன? என்று வாய் வேதாந்தம் பேசுவர். அப்படியா சங்கதி நான் என்னுமோண்ணு பார்த்தேனே என்று ஒரு அலட்சியப் பேச்சு பேசிவிட்டு வழி நடப்பான். கிராமத்தான் இத்தகைய உரையாடல் ஊரிலே, நாட்டிலே இல்லையென யாரும் இயம்ப முடியாது. இத்தகைய மனப்பான்மை நாட்டிலே வளரும் மட்டும் நாடு முன்னேறுமா?

அக்கினியாஸ்திரம் வாயுவாஸ்திரங்கள் எங்கே?

மேலும் தற்காலத்திலேயுள்ள குண்டு, தீக்குண்டு முதலியனவெல்லாம் பழையகால வாயுவாஸ்திர அக்கினியாஸ்திரங்கள் தான் என்று வீண் பெருமை பேசுகின்றனர். அத்தகைய அஸ்திரங்கள் அந்தக் காலத்தில் இருந“தனவோ? இல்லையோ? என்பது ஒருபுறமிருக்கட்டும். அவை நமக்குத் தெரியா. ஆனால் இக்காலத்தில் இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அவைகளைக் காணலாம். எங்கு? ஏழை பாட்டாளிகளின் வீட்டில். ஏழை பாட்டாளி நாளெல்லாம் உழைத்து நலிந்து மாலையில் ஆயாசம் தீர அமுதரசத்தைப் (கன்னை) பருகி ஆனந்தமாக உள்ளே நுழைந்து அவன் தனது மனைவியை அறையும் அறைதான் அக்கினியாஸ்திரம். அதைப்பெற்று அவள் அழுவதால் வழியும் கண்ணீர் நமக்கு வருணாஸ்திரத்தின் வனப்பை நினைவுக்குக் கொண்டுவருகின்றது. அதைக்கண்டு அக்குடியன் விடும் பெருமூச்சே வாயுவாஸ்திரமாகும். இத்தகைய அஸ்திரங்களைத்தான் அன்றாட வாழ்க்கையிற் காண்கின்றோம். தீக்குண்டு அக்கினியாஸ்திரத்தைக் கண்டு உண்டாக்கியது என்று கூறுவது அறியாப் பாலகரும் எள்ளி நகையாடத்தக்க ஏமாற்றும் வித்தை. புதியனவெல்லாம் நம் நாட்டுப் பழம்பெரும் பொக்கிஷங்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை என்று பேசிப் பூரிப்பதிலே பெருமை ஏதாவது உண்டா? இல்லை. முக்காலும் இல்லை. இதனால் வீண் வீறாப்பு பெருகுகிறது. மதி தேய்ந்து மந்தமடைகிறது. அறிவு அசட்டை செய்யப்படுகிறது. பழையனவற்றில் பெருமை உண்டு. புதியனவெல்லாம் பழமையைக் கண்டு தான் செய்தவை என்றாலும் அவை இன்று எங்கே? எங்கே, எங்கே என்று கேட்கின்றேன். அந்நியனிடம் சோரம் விட்டு அண்ணாந்து ஆர்ப்பாட்டம் செய்கிறாயே. அது உனக்குப் பெருமையா? சிறுமையா? உன் நாட்டிலே இருந்தது என்று உரத்து உரத்துப் பேசுகின்றாயே அந்த வீரம் இன்று எங்கே? எங்குப்போய் ஒளிந்தது? சமத்துவம் பண்டைய ஏடுகளிலே சரமாரியாகப் பரவிக் கிடக்கின்றதென்கின்றாயே, அந்தச் சமத்துவம் இன்று நாட்டிலே சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தாலும் சல்லிக்காசு பெறுமான அளவுகூட அகப்படவில்லையே. பழமை வீரம் பேசுவது பயனளிக்குமா என்று ஆராய்ந்து பாருங்கள் நாட்டுக்கு நலம் தருமா? பயனளிக்காது என்பதில் பிழையில்லை. தராது என்பதில் தப்பிதம் இல்லை. இதனால் தமிழனின் மானம் பறிபோகிறதென்பதற்கோர் தடையில்லை.

எது தன்மான உணர்ச்சி?
எடுத்துக்காட்டாக, கூடகோபுரம் போன்ற மாடமாளிகையிலே, மக்களொடு மாண்புற வாழ்ந்த மனிதன் ஒருவன், கால நிலைமையாலோ கருத்தழிவினாலோ, கர்வத்தாலோ, கயமைத் தனத்தாலோ பிறரின் படுமோசத்தாலோ வறிஞனானான் என வைத்துக் கொள்வோம். அவனது மாட மாளிகை மாற்றானுக்கு உரிமையாய் விட்டது. சிலகாலம் சென்றபின் அவ்வறியனான முன்னாள்செல்வன் தன் நண்பன் ஒருவனோடு அவ்வீதி வழியே செல்லப் புறப்படுங்கால் அவனது மானம் அவனை அவ்வீதியில் காலெடுத்து வைக்க விடாது. அவன் தன்மானமுடைய வனாயிருந்தால் தவறி அவ்வழி புக நேரினும் அவ்வீட்டை ஏறெடுத்துப் பாரான். தன்மான முள்ளோன் தன் நண்பன் அம்மனையின் மாண்பைக் குறித்துப் பேசினும் தலைகவிழ்வான். மனையைப் பார்க்க மனமில்லாததால் நண்பன் அதுபற்றி அவனோடு உரையாடப் புகினும் இரண்டொரு சொற்களால் தன்னிலையை உணர்“த்தாது உணர்த்தி வேறு போக்கில் உரையாடலைத் திருப்பி அவ்விடம் விட்டு விரைவிலே நகர்வான். அதுதான் மனிதனின் தன்மான உணர்ச்சி. அது ஒவ்வொரு உயிர்க்கும் வேண்டும். மிக இன்றியமையாததும் கூட ஆனால் தன்மானமற்ற தன்மையாளன் தூரத்தே வரும்பொழுதே, நண்பன் வேறு வழி செல்லப்புகினும் தடுத்து, நமது மனை மகா நேர்த்தியானது இதோ இந்த வீதியில்தான் உள்ளது. பார்த்துப் போகலாம் வா, ஆகா! அதன் அழகே அழகு, அதனை வைத்து அநுபவிக்கக் கொடுத்து வைக்க வேண்டும், சுற்றிலும் பூங்காவென்ன, நடுவே நடுவேயுள்ள கண்ணாடிகளின் நேர்த்தியென்ன? என்று இன்னும் பலப்பல பேசுவான். முடிவிலே அது ஒரு காலத்திலே நம்மிடமிருந்த மனைதான், அப்பொழுதிருந்த சீரும் சிறப்புமென்ன, என்னை இவன் ஏமாற்றி இம்மனையைப் பறித்துக் கொண்டான். இருந்தாலும் நான் அநுபவித்து ஆண்ட அரண்மனைதானே என்று உள்ளம் நெகிழ்வான். உற்சாகம் காட்டுவான். இதுபோன்ற தன்மைதானே நம் தற்காலப் பழம்பெருமை பேசும் வீரர்களின் செயல்.

மிக நல்ல உவமை
இன்னும் சற்று விளங்க உரைக்க வேண்டுமானால், சான்று சற்றுக் கடுமையாக இருக்கும் என்ற போதிலும் உங்கள் மன்னிப்பு கிடைக்கும் என்ற மனப்பான்மையோடு ஒன்று கூறுகின்றேன். சோலையிலே இருவர் உல்லாசமாக உலவுகின்றனர். உரையாடல் மிக உன்னதமாயிருக்கின்றது. இருவரும் இளவயதினர். இளமை விருந்தை நுகர்கின்றனர் வசந்தகாலத்திலே. ஒருவர் ஆண், மற்றொருவர் பெண். மனமொத்த காதலர்கள் என்றுதான் மாசற்ற மனத்தினர் எண்ணுவர். அது சமயம் இருவர் அவ்வழியே வருகின்றனர். அழகான இக்காட்சியைக் கண்டு களிப்படைகின்றனர். ஆனால் இருவரில் ஒருவர் மற்றவரைப் பார்த்து என்ன ஐயா! ஏதோ ஒரு மாதிரி பார்க்கிறீர், எல்லாம் எம்மிடமிருந்துதான் அவள் யாரோவென்று நினைக்காதீர் அவனோடு சல்லாபமாக இருக்கின்றாளே யென்று அவள் என்னுடைய மனைவியாக இருந்தவள்தான். அவள் அழகென்ன? அற்புத குணமென்ன? எனக்கும் அவளுக்கும் இருந்த பொருத்தம் தான் என்ன என்று எக்காளமிடுதற்கு ஒப்பாகுமென்று கூறுகின்றேன். தப்பிதமா? முறையல்லவா? நேர்மையோடு நினைத்துப் பாருங்கள் நேயர்களே!

பெரும் பெரும் பண்டிதர்களும் புலவர்களும் நாவலர்களும் இத்தகைய பழம்பெருமையில் பாசம் வைத்து நாட்டைக் கருதாமல் ஏடுகள் செய்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனரே. இந்த நிலைகண்டு என் மனம் பெரிதும் வருந்துகின்றது. எண்ணத்திலே ஏக்கம் உண்டாகிறது என்று நீங்கும் இந்த வீண் பெருமையென்று. சிந்தித்தவண்ணமே இருக்கின்றேன். காலம் இதனை மாற்றும் வருங்கால உலகம் இதற்கோர் வழிகோலும் என்ற நம்பிக்கைதான் மேலும் மேலும் சலியாதுழைக்க ஊக்குகின்றது. உரிமைக்காக, மக்களின் வாழ்க்கை உரிமைக்குப் போரிடும் உணர்ச்சியில் உள்ளம் ஊடுருவிச் செல்கின்றது.

அநுமான் சொல் செல்வனாம்!
சமீபத்தில் நான் ஒரு பண்டிதருடன் உரையாடி கொண்டிருந்தேன். அதுபோழ்து உலகிற் சிறந்த செல்வர்கள் யாவர் என்ற விவாதம் ஏற்பட்டது. பண்டிதர் பதட்டமின்றிக் கூறினார். டெமாஸ்தனிஸ், பர்க், அநுமான் ஆகிய மூவரும் சொற்செல்வர்கள் என்று அநுமான் சிறந்த சொற்செல்வனாம். இது கேட்டு என் நிலை கலங்கிற்று. பழைமை மோகம் பண்டிதர்களின் பகுத்தறிவு எத்துணை பாழ்படுத்தியுள்ளது. பாழ்படுத்துகின்றது என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணானேன். என் செய்வது? டெமாஸ்தனிஸ் சிறந்த சொல்செல்வன் என்பதை ஒப்புக்கொள்ளலாம். பர்க் விஷயத்தில் கூட சிறிது ஐயப்பாடு நேர்கிறது. பர்க் பேசுகின்ற பொழுது உணவுக்கு மணி அடிக்கிறது. என்ற வாசகம் நினைவுக்கு வருகின்றது. பர்க் பேசுவதில் வல்லவன். ஆனாலும் கேட்போர் உள்ளத்தைத் தன்பால் திருப்பும் திறமற்றவன் என்றுதான் கொள்ளவேண்டியிருக்கின்றது. ஆனால் கடல் தாண்டிச் சீதையின் இருப்பிடமறிந்து இலங்கையைக் கொளுத்தின அநுமனையும் இவ்வரிசையில் சேர்ப்பது என்பதை நினைக்குந்தோறும் நகைப்பு மேலிடுகின்றது. அநுமானது திருவுருவப் படத்தைப் பார்க்கும் எவராவது அவரது வாய் வனப்பைக் காணும் எவராவது அநுமானும் சொற்பெருக்காற்றவல்லன் என்று நினைப்பரோ? நினைக்கத்தான் இடமிருக்கின்றதா? தாடைகளின் அமைப்பைக் காணும்போது உடல்நூல் வல்லார் தம் சிந்தனைக்கு விருந்தாகும் கேள்வி இது. தாடைகளின் அமைப்பை விடுத்து சொற்செல்வன் என்று கொண்டாலும் கொள்வோம். உலகச் சொற்பொழிவாளர் வரிசையிலே அநுமானும் ஒருவன் என்று பிறதேசத்தவர் கேள்விப்பட்டு நம்மை உங்கள் சொற்செல்வன் அநுமனின் சொற்செல்வங்கள் எங்கே? சொற்பெருக்கங்கள், சொற்போர்கள், அறிவுரைகள், அறவுரைகள், ஆராய்ச்சித் தொடர்கள் எங்கே? நாங்கள் காண வேண்டும் அவனுடைய ஆற்றலை, எடுத்துக் காட்டுங்கள் அவனுடைய ஏடுகளை என்று கேட்டால் இதற்கு யாது விடை பகர்வர் எம்மனோர், எம்புலவர் பெருமக்கள்? ஏதாவது இருந்தால்தானே பதில் வரும். கம்பன் கவிதைபால் கரைகாணாக் காதல் கொண்டு நாட்டு வளப்பமறியாத கவிதா ரத்தினங்களால் காணப்படும் சொற்செல்வர் வேறு எவ்விதமிருப்பர்?

செய்யத்தக்க வேலைகள்
இக்கால பண்டித மணிகள் பழமை விரும்பிகள் பழமையில் உள்ள புன்மையை விடுத்து கருத்துக்குக் களங்கம் விளைக்கும் இடங்களை எடுத்து மக்களுக்குப் பயன்படுமாறு அவற்றைச் செய்து தரலாகாதா? நீதிபற்றித் தனி ஏடு ஒன்று அமைக்கலாம். அதிலே பல புலவர்களின் கருத்தையும் ஒருங்கு திரட்டிக் குவிக்கலாம். காதல்பற்றித் தனியேடு செய்யலாம். அதிலும் பல பண்டிதர்களின் கருத்துக்கள் இடம்பெறச் செய்யலாம். அதுபோலவே நட்பு, மதம், போர், அரசாட்சி முதலியனபற்றி விழுமிய கருத்துக்களைப் பண்டைய ஏடுகளிலிருந்து எடுத்துத் தனித்தனியே தொகுத்து மக்களிடை பரப்பலாகாதா? இதுபோன்றே, தொல்காப்பியம், திருக்குறள் இவற்றையும் உரைகளையும் சிறு சிறு தொகுதிகளாக வெளியிட முடியாதா? பலரின் மாறுபட்ட கருத்துக்களையும் அவற்றில் தெளிவுறப் பொறிக்கலாகாதா? அதனைக் காணும் மக்கள் எது நன்றோ அதனைக் கொள்வர் தத்தம் கருத்திற்கேற்ப பழமை போகக்கூடாது எனக் கச்சையை வரிந“து கட்டுவோர் இம்முறையை கோடல்முறை, அதுவன்றிப் பழைமையைப் பாகுபடுத்தி பகுத்தறிவோடு பார்க்கத் துணிவின்றேல் பழமை பாழாகும் என்பதைக் காலப்போக்கு அவர்களுக்கு எடுத்துக்காட்டும். ஆராய்ச்சிக்கு முதலிடம் தாருங்கள் பண்டிதர்களே!

எச்சரிக்கை!
பண்டிதர்களே, புலவர்களே, நாவலர்களே, இலக்கிய கர்த்தாக்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! சிந்தியுங்கள் என்பதுதான் அது. அறிவோடு சிந்தியுங்கள்! நடுநிலை என்று எண்ணுங்கள். ஏடுகளைப் பாருங்கள். எத்துனை வேறுபாடுகள் உள்ளனவென்று. ஏடுகளால் நாட்டிற்கு விளைந்த நன்மையைக் கணக்கெடுத்துப் பாருங்கள். பார்த்து சிந்தித்து, சீர்தூக்கி நல்ல முடிவுக்கு வாருங்கள். அதன் வழி நடவுங்கள். பருத்தறிவைப் பயன்படுத்துங்கள். காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த இலக்கியங்களை இயற்றுங்கள். இன்றேல் உங்கள் காலம் பழைய புராணங்களோடு நிற்க வேண்டிய, தவிர்க்க முடியாத நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை செய்கின்றேன். எச்சரிக்கையை கோமாளியின் கூத்தென்று ஏமாளித்தனமாக எண்ணாதீர். நிலைமை நிச்சயம் மாறும் என்பதைப் பற்பல நாட்டு வரலாறுகளைப் படித்துப் பார்க்கின் உணரலாம். காலம் அறிந்து கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நிலைமையறிந்து நீதி வழங்குங்கள். நாட்டையறிந்து ஏடுகள் இயற்றுங்கள். மதத்தைப் புகுத்தி கலையைக் கறைப்படுத்தும் கயமைத்தனத்தைக் கைவிடுங்கள். அதனால் மக்களை மக்களாக வாழச் செய்வீர்கள். மற்று நிர்வாணப் பிச்சை கேட்கும் ஆண்டவனைப் பாடின மக்களை நிர்வாண காலமாகிய காட்டுமிராண்டிக் காலத்திற்கு இழுத்துச் செல்லும் இழிசெயல் புரிந்தோராவீர். மக்கள் மதியைக் குறைத்த குறைமதியாளராவீர்.

மதத்திற்கெனத் தனி எடு இயற்றுங்கள் மதம் வேண்டுமேல். அழகான கதைகளிலே, ஆராய்டச்சிமிக்க ஏடுகளிலே ஆண்டவன் அவதார லீலைகளைப் புகுத்தி அறிவைப் பாழ்படுத்தாதீர். அது அறமல்ல. அறிவுடைமையுமல்ல. ஆராய்ச்சிக்கு அணைபோடாதீர். ஆண்டவனுக்குரிய ஏடுகள் என்று தனியே தயாரியுங்கள் ஆண்டவனைவிட்டு அகலமுடியாவிட்டால். அதற்காக ஏடுகள் எல்லாம் எம்பெருமானுக்கே அர்ப்பணம் என்ற நிலைமை வேண்டாம். அதை மாற்றுங்கள். அதுதான் நீதி. நேர்மை கூட படித்த இளைஞர்கள் பகுத்தறிவு கொண்டு எதனையும் துருவித் துருவி ஆராய முற்பட்டு விட்டனர். நீங்கள் எத்துணை மண்டலங்கள் தவமிருந்து தத்துவார்த்தங்கள் கண்டு அவர் ஆராய்ச்சியை அலட்சியப்படுத்தியபோதிலும் உமது தத்துவார்த்தம் நிலைக்காது. பாமர மக்களைப் பகுத்தறிவாளர்களாக்கப் பாங்குள்ள ஏடுகள் எழுதித் தாருங்கள். இன்றேல் உலகம் உம்மை மதியாது என்பது எனது துணிவு. உண்மை உரை, நாட்டைக் கருதாவிடின், நாட்டின் நலிவு நாளடைவில் உம்மையும் பற்றும். எனவே ஆண்மையோடு அருந்தொண்டாற்ற முன்வாருங்கள். உலகம் உம்மைப் போற்றும் நாடு உம்மை ஏத்தும். ஆனால் நீவீர் சிலரின் சீற்றத்தைப் பெரிதெனவும் மதவாதிகளின் மமதையை மாலை எனவுங் கருதி மனம் தடுமாறி எங்களுக்கு எதிர்ப்பிரசாரம் செய்யாதிருப்பதே நீங்கள் நாட்டுக்குச் செய்யும் நல்லறமாகும். இதையேனும் நீங்கள் செய்ய முற்படலாமல்லவா?

நாட்டின் நன்மையைக் கருதி நலமுள்ள ஏடுகளைப் பண்டிதர்கள் இயற்றித் தராவிடில் நாளடைவில் நாடு இழிநிலையடையும். செவி சாய்ப்பார்களா இலக்கிய கர்த்தாக்கள் செயலில் இறங்குவார்களா கற்றுணர்ந்த கலாவல்லுநர்கள் எது எப்படியாகிலும் நாம் அபாய அறிவிப்பை அறிவித்துக் கொண்டு அறிவின் வழி யேகுவோம். எதிர்ப்பாரைக் கண்டு பின் வாங்கோம்.

தோழர்களுக்கு வேண்டுகோள்!
மாணவத் தோழர்களே! உங்கள் நேரத்தை நெடுநேரம் எடுத்துக் கொண்டேன். ஏதோ விருந்து கிடைக்குமென்று வந்தீர்கள். ஆனால் மருந்துதான் கொடுத்துள்ளேன். மருந்து என்றதும் மருள வேண்டாம். மருந்தை உண்டு உணர்வோடு ஒன்றிச் சுவைக்குங்கால் உண்மை தெரியும். கேட்டவற்றைச் சிந்தனையிலே கொண்டு சீர்தூக்கிப் பாருங்கள், அறிவுக்கு ஒத்ததைக் கொள்ளுங்கள். நாட்டுக்கும் ஏட்டுக்கும் தொடர்பு வேண்டுமா? வேண்டாமா? நாட்டு நலன் கருதா ஏடுகள் நமக்கு தேவையா? மதங்கலந்த ஏடுகள் மதியை வளர்க்குமா? அன்றி மதியை மறைக்குமா? மடமையைப் போற்றுமா வென்று எண்ணுங்கள். ஆண்டவனின் அற்புத குணங்கள் என்பவை அறிவுக்கு ஆராய்ச்சிக்கு, நாகரிக நாட்டார்க்கு நல்ல குணங்கள் என்றாவது ஏற்படுமா என்றும் கருத்திலே கருதுங்கள். இலக்கிய பண்டிதர்களின் இயல்பு நல்ல முறையில் இருக்கின்றதா வென்று இரவும் பகலும் பகுத்துணருங்கள். எது முறையோ அதன் வழி நடவுங்கள். எதிர்ப்புக்கு அஞ்சாதீர். ஏளனத்தைக் கேட்டு ஏமாறாதீர். மதத்தின் முன் மண்டியிடாதீர். கடவுளைக் கண்டு கருத்தழியாதீர். அறிவே துணை மானமே மனிதனை மனிதனாக்குகிறது என்பதை உணருங்கள். உலுத்தர் பேச்சை உதறித் தள்ளுங்கள். சமத்துவம் நாடுங்கள். சகோதரத்துவம் கோருங்கள். சாதி மத பேதத்தைச் சாடுங்கள். தோல்வி கண்டு சலிப்புறாதீர். மாற்றார் மமதை கண்டு மனம் மருளாதீர். சிந்தித்து முடிவுக்கு வாருங்கள். அதன் வழி செயலாற்றுங்கள் செம்மல்களே! உங்கள் யாவருக்கும் எனது நன்றி.

-முதல் பதிப்பு: 1945. தமிழ் உலகம் காரியாலயம், சென்னை.