அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாம்
2

எப்படி, செல்லமாக வளர்த்த காளை சொந்த மாட்டில் முளைத்த கொம்பு என்று நம்பக் கூடாதோ அப்படித்தான் நாடாள வந்தவர்கள் நயவஞ்சகர்கள் ஆகிவிட்ட நேரத்தில் அவர்கள் நம்மகட்சிக்காரர்கள், நல்லது செய்யாமல் விட மாட்டார்கள் என்று நம்பக்கூடாது. ஊராள வந்தவர்கள் வழி தவறி சென்றால் முறையாக நட என்று அறிவுறுத்த மாற்றுக் கட்சி வேண்டும். இதை மக்கள் மறந்துவிடக்கூடாது. சதா ஆட்சியுடன் போக்கை கவனிக்க வேண்டும். ஆட்சி அத்துமீறி நடந்தால் மக்கள் வாழ்வு நலிந்துவிடுமே என்று கவலை கொள்ள வேண்டும். அவசியமானால் சர்க்காரைக் கண்டிக்கவும் வேண்டும்.

“ஓகோ! காங்கிரஸ் சர்க்கார் செய்வதையெல்லாம் கண்டிப்பதும் கண்டிக்கச் செய்வதும்தான் உன் வேலையா?” என்றால் நிச்சயம் அதுவல்ல! காங்கிரஸ் சர்க்கார், முன்பு குறிப்பிட்டபடி, நல்லது செய்தால் ஆதரிக்கிறோம். கெட்டது செய்தால் கண்டிக்கிறோம். மதுவிலக்கு கூடாது என்று சர்க்கார் மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தபோது நாம் “இனி எல்லோரும் குடித்துத்தான் ஆக வேண்டும், மது விலக்கு கூடாது” என்னும் மடத்தனமான பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அதற்கு மாறாக மதுவிலக்கு சட்டம் வந்த போது அதை ஆதரித்திருக்கிறோம். தீர்மானம் செய்தோம், பத்திரிகைகளிலே எழுதினோம். இன்னும் சொல்லப்போனால் நானும் எனது நண்பர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் நல்லதம்பி என்னும் திரைப்படத்தின் மூலம் மதுவிலக்கு பிரச்சாரம் செய்திருக்கிற அளவுக்கு இந்த மாகாண சர்க்கார் செய்திருந்தது. மாகாண சர்க்கார் மதுவிலக்கு பிரச்சாரத்தை பூலோகத்தோடு விட்டார்கள். “நல்ல தம்பி” மூலம் நாங்கள் பூலோகம் திருந்தினால் மாத்திரம் போதாது தேவலோகத்திற்கும் இது தேவை என்ற அளவுக்கு சர்ர்காரின் மதுவிலக்கு சட்டத்தை ஆதரித்திருக்கிறோம்! சட்டம் காங்கிரஸ் சர்க்காரால் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை, அதற்கு மாறாக ஆதரித்திருக்கிறோம்.

பின் ஜமீன் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார்கள். கொண்டு வந்தபோது ஜமீன்தாரர்கள் பழைய ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்கள் என்ற பாசத்தால் ஜமீன் ஒழிப்பு பிரச்சாரம் செய்யாமல் விட்டுவிடவில்லை. சட்டத்தை எதிர்த்து விரோதமாக பிரச்சாரம் செய்தோமா? சட்டத்தை ஆதரித்தோம்; அதற்கு ஆதாரம் காட்டினோம். சென்னையில் நடந்த சர்வ கட்சிக் கூட்டத்தில் சட்டத்தை உருவாக்கும் கர்த்தா என்ற முறையில் அப்பொழுது மந்திரியாக இருந்த காளா வெங்கட்டராவும் பேசிய சர்வகட்சிக் கூட்டத்தில் நானும் அவர்களுடன் ஒன்றுகூடி சட்டத்தை ஆதரித்துப் பேசினேன். அதற்குப் பிறகு அறநிலைய பாதுகாப்பு மசோதா வந்தது. அதையும் ஆதரித்தோம்; எதிர்க்கவில்லை!

காங்கிரஸ் சர்க்கார் நல்லது செய்திருந்தால் பாராட்டியிருப்போம். ஆதரித்திருப்போம். ஆனால் அதேபோல அவர்கள் கெடுதல் செய்திருந்தால் தயவு தாட்சணியம் இன்றி கண்டித்திருப்போம். அதுதான் நமது கொள்கை. அன்று மாத்திரம் அல்ல, இன்றும், என்றும் இதையேதான் செய்கிறோம், செய்வோம்! திராவிடர்களின் கலாச்சாரத்திற்கு ஊறு தேடுகிற நோக்கத்தில் கட்டாய இந்தியை காங்கிரஸ் சர்க்கார் கொண்டுவந்த நேரத்திலும், திராவிட நாடு திராவிடருக்கே என்பது தீங்கானது என்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர்களும், சர்க்கார் மந்திரிகளும் ஈடுபட்ட நேரத்திலும் நாங்கள் அவர்கள் செல்லும் பாதை தவறானது என்று கண்டிக்கத் தொடங்கினோம். இது போலவே சர்க்காரின் உணவுக் கொள்கையும் நூல் விநியோகிக்கும் முறையும் தவறானது என்று உணரும்போது சர்க்காரைக் கண்டிக்கிறோம்.

வேண்டுமானால் நாளையே இந்த காங்கிரஸ் சர்க்கார் 16 அவுன்ஸ் அரிசி தருகிறேன் என்று ஒரு அறிக்கை விடட்டும் நாம் சர்க்காரைக் கண்டிக்கிறோமா பாருங்கள்! கொடுப்பார்களா காங்கிரஸ் சர்க்கார்? கொடுக்கிறோம் என்று சர்க்கார் அறிக்கை விடமுடியுமா? முடியாது என்று வெட்ட வெளிச்சமாக அவர்களே கூறுகிறார்கள். அவர்களால் உணவுப் பஞ்சத்தைப் போக்க முடியவில்லை நாம் மக்கள் உணவில்லாமல் மடிகிறார்கள் அதற்கு அவசரமாக ஒரு மார்க்கம் கண்டுபிடிக்க வேண்டும். அதை சர்க்கார் செய்யவில்லை என்று சொன்னால் தங்களால் உணவுப் பஞ்சத்தை தீர்க்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் நாங்கள் பேசினால் இருக்கும் நிலைமைக்கு இவர்கள் தவறான வியாக்யானம் தருகிறார்கள் என்றும் விஷயத்தை திரித்துக் கூறுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். உணவுப் பஞ்சத்திற்கு தாங்கள் தரும் தெளிவைத் தரவில்லையே என்று சொன்னால் புதிதாகத் தேர்தல் திட்டம் தயாரிக்கப்பார்க்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தார் என்கிறார்கள். உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை, இருக்க இடமில்லை, சர்க்காரை ஏன் என்று கேட்கவோ ஆளில்லை. மக்கள் மாற்றுக் கட்சியில்லாமல் தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் மக்களின் குறையை சர்க்காருக்கு எடுத்துக் கூறவும், சர்க்காரின் தவறை கண்டித்து திருத்தவும் மாற்றுக்கட்சி தேவை, நல்ல மாட்டுக்கு மூக்கணாங் கயிறு இருப்பது போல என்று எடுத்துச் சொல்கிறோம். மக்கள் ஜனநாயகக் காலத்தில் சர்க்காரைக் கவனிக்கவும், கண்டிக்கவும் அவர்களுக்கு உள்ள உரிமையை மறந்துவிடக்கூடாது என்று மக்கள் பால் எங்களுக்கு உள்ள ஆர்வத்தாலும் சொல்கிறோமே தவிர மந“திரி பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நச்சு நினைப்பால் அல்ல!

ஆனால் சர்க்கார் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எங்களை மாத்திரம் என்பதல்ல சர்க்கார் தவறு செய்தபோது அதை யார் கண்டித்தாலும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு மாசு கற்பித்து வாயை அடக்கிவிடுகிறார்கள். ஒலிபெருக்கி இருக்கிறது. அது திடீரென்று வேலை செய்யவில்லையென்று வைத்துக்கொள்ளுங்கள். பேசியவர் ஒலிபெருக்கி கொண்டு வந்தவரைப் பார்த்து “ஒலிபெருக்கி ஏன் சரியாக வேலை செய்யவில்லை?” என்று கேட்டால், “பணம் நீயா கொடுத்தாய், நீ அல்ல பணம் கொடுத்தது பேசாதே” என்பது பணம் கொடுத்து அழைத்துவந்த கழகக் காரியதரிசி கேட்டால் “நீயா ஒலிபெருக்கி முன் பேசுகிறாய், நீ பேசாமல் போ” என்பது, மக்கள் கேட்டால் “பணம் கொடுத்தவரும் அல்ல, பேசுபவரும் அல்ல நீங்கள் யார் கேட்க” என்பது இந்த நிலையில் சரியாக ஒலிபெருக்கி கருவியை வைத்துக்கொள்ளாதவர் பதில் இருந்தால் நாம் அவரைப்பற்றி என்ன கருதுவோம்? அது மாதிரிதான் இந்த சர்க்கார் சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்று கம்யூனிஸ்ட் கண்டித்தால் “நீ மாஸ்கோ கூலி பேசாமல் இரு” என்பது மீறிப்பேசினால் “சேலத்திலே விசித்திரமான சிறை இருக்கிறது ஆள் உள்ளே போனால் பிணமாக வெளியில் வரலாம், போக விருப்பமா?” என்பது முஸ்லீம் சொன்னால் “நீ பாகிஸ்தானத்திற்கு போகவேண்டியவன்-நீ சும்மாயிரு” என்பது- ஜெயப்பிரகாஷ் நாராயணனும் அவரைச் சார்ந்த சோஷியலிஸ்டுகளும் கேட்டால் அடுத்துவரும் தேர்தலில் பதவியைக் கைப்பற்ற முயற்சி செய்கிறாய், வாயை மூடு” என்பது சுபாஸ் சந்திரபோஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கேட்டால் “நீங்கள் முதலில் சுபாஸ் போஸை தேடிக்கண்டுபிடியுங்கள், பிறகு இதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தார்களாகிய நாங்கள் கேட்டாலோ, “நீங்கள் பூலோகத்திலேயே வாழத் தகுதியற்றவர்கள், நீங்கள் எல்லாம் நரகத்திற்கு போக வேண்டியவர்கள், நீங்கள் பேசாமல் இருங்கள்” என்பது, என்ற முறையில் சர்க்காரின் பதில் இருக்கிறது! இப்படி யார் கண்டித்தாலும் ஏதாவதொரு மாசு கற்பித்து, “நீ பேசாதே” “நீ வாயை மூடு” “நீ சும்மா இரு” என்றால் யார்தான் சர்க்கார் தவறு செய்யும்போது, செய்யாதே என்று சொல்வது? அல்லது பாராளுபவர்கள் கெட்ட வழியில் சென்றால் யாரும் தட்டிக் கேட்கக் கூடாதா?

இப்பொழுது நடைபெறும் ஆட்சிக்கு ஜனநாயக சர்க்கார் என்று பெயரா? கூட்டம் கூட்டி எங்கள் குறையை கூறிடுவோம் என்றால் 144 போடுகிறார்கள் நாடகம் நடத்தினால் தடை என்கிறார்கள்- பாட்டு பாடினால் “பாடாதே” என்கிறார்கள்-கருப்புக் கொடி பிடித்தால் “அடி” என்கிறார்கள். கொஞ்சம் அடிப்படை உரிமையில் ஆசை வைத்து தடைய மீறினால் “அடி! அழ அழ அடி, இரத்தம் ஒழுகும் வரை அடி, சீறினால் சிறையில் தள்ளு. உருமாறினாலும் உயிர் போகும் தறுவாயானாலும் அவர்களை அதிலிருந்து விடாதே வெளியே” என்கிறார்கள்! இதை ‘கப்சிப்’ சர்க்கார் என்று சொல்லமுடியுமே தவிர எப்படி? ஜனநாயக சர்க்கார் என்று சொல்வதற்கு இலட்சணங்கல் இவை தானா? நாடாள்வோருக்கு நாட்டு மக்களிடம் நல்லெண்ணம் இருக்கிறது என்பதை இவைகள் மூலம் தான் காட்டுகிறார்களா? நாடாள்வோருக்கு ஆற்றல் இருந்தால், தைரியமாகக் கூறட்டும் நாங்கள் ஹிட்லர் போலத்தான் ஆள்வோம். நாங்கள் முசோலினி போலத்தான் ஆள்வோம். நாட்டில் ஒரே கட்சிதான் இருக்கலாம்; அதுவும் காங்கிரசாக இருக்க வேண்டும். காங்கிரசாக இருப்பதிலும் இப்பொழுதுள்ள காங்கிரஸ் கட்சிதான் இருக்க வேண்டும். கிருபளானி காங்கிரஸ் கட்சியாக இருக்கக்கூடாது என்று சொல்லட்டும். இப்படி சொன்னால் அவர்கள் செயலில் விவேகம் இல்லாவிட்டாலும் வீரமாவது இருக்கும். இப்பொழுது இவர்கள் செயலில் வீரமும் இல்லை, விவேகமும் இல்லை!

காங்கிரஸ் தலைவர்களும், சர்க்கார் மந்திரிகளும் உலகத்தின் முன் கூச்சமில்லாமல் துணிந்து இந்தியாவில் குடியரசு ஆட்சி நடக்கிறது என்று கூறுகிறார்கள். இங்கு நடக்கும் கோலாகலம் அங்கே யாருக்குத் தெரியும்? மேல்நாட்டு சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும், குடியரசு ஆட்சியில் அரசாளும் கட்சியின் போக்கு மக்களுக்குப் பிடிக்காவிட்டால் அடுத்து வரப்போகும் தேர்தல் வரை காத்திருந்து தேர்தலில் தங்கள் வோட்டை அந்தக் கட்சிக்குப் போடாமல் அவர்களுக்கு பிடித்த கட்சிக்கு போடுவார்கள். அந்தக் கட்சி ஆட்சி செய்ய ஆரம்பிக்கும். ஆனால் ஒரு தேர்தலுக்கும் மறு தேர்தலுக்கும் இடையே பெரும்பாலும் ஐந்தாண்டுகள் ஓடியாக வேண்டும். அதற்குள் அந்த இடையில் உள்ள ஐந“தாண்டு காலம் ஆட்சி செய்யும் கட்சி மீது வெறுப்பு ஏற்பட்டால் மந்திரிகள் வரும்போது தங்கள் மன வெறுப்பைக் காட்ட கறுப்புக்கொடி பிடிப்பார்கள், ஜனநாயக ஆட்சியில் கருத்து வேற்றுமையைக் காட்ட கருப்புக்கொடி மந்திரிகள் வரும்போது காட்டுவது என்ற முறையை மக்களின் அடிப்படை உரிமை என்று உலகத்திலுள்ள நாகரீக நாடுகள் எல்லாம் ஒத்துக்கொள்ளும். ஆனால் ஜனநாயக ஆட்சி நடப்பதாக கூறப்படும் இந்நாட்டில் நடப்பதென்ன?

கொஞ்ச நாட்ளுக்கு முன் சென்னைக்கு மத்திய சர்க்கார் மந்திரி ஆச்சாரியார் வந்தபோது ஜனநாயக முறைப்படி எங்கள் தோழர்கள் தங்கள் வெறுப்பைக் காட்ட கருப்புக்கொடி பிடித்த நேரத்தில் அவர்கள் சர்க்காரின் சாதாரண போலிசும், மலபார் ஸ்பெஷல் போலிசும் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல் துரத்தி துரத்தி அடித்தார்கள். ஏன் என்று கேட்டால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்தார்கள் என்று சொல்லுகிறார்கள். போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளத்தானா போலீஸ்? போலீஸ் அப்பொழுது எங்கே போனது? போலீஸ் இருந்த இடத்தில்தான் இருந்தது நமது தோழர்களும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யவில்லை. போலீஸ்காரர்களை நமது தோழர்கள் எங்கே நாங்கள் நிற்கலாம் என்று கேட்டார்கள். இந்த ஓரம் நிற்கலாமா, அந்த ஓரம் நிற்கலாமா, 100 பேர் போதுமா 1000 பேர் வரலாமா என்றெல்லாம் கேட்டு விட்டு சட்டத்திட்டத்திற்கு கட்டுப்பட்டு கருப்புக்கொடி பிடிக்கும் நேரத்தில்தான் சர்க்காரின் போலீஸ் படைகள் எங்கள் தோழர்களை நாயை அடிப்பது போல் துரத்தி துரத்தி அடித்தன. இந்த நாட்டிலுள்ள தேசியத்தாள்கள் அதைப்பற்றி என்ன எழுதின?” “கருப்புக்கொடி காட்டும் முயற்சி தோல்வியடைந்தது!” தோல்வியடையாமல் வெற்றியா பெறும்! கையிலே தடியுடன், இடையிலே வாளுடன், நெஞ்சிலே வஞ்சனையுடன் கையிலே ஒன்றுமில்லாத எங்கள் தோழர்களை ஓட ஓட அடித்தால்...? வெற்றி தோல்வியைப் பற்றி நாம் கவலைப்படவில்லை; அது வீரனுக்கு அழகும் அல்ல!!

கையிலே ஒன்றுமில்லாத எங்கள் தோழர்களை சர்க்கார் போலீஸ் படைகள் காரணமின்றி தடிகொண்டு தாக்கியபொழுது அவர்கள் உடலிலிருந்து இரத்தம் ஒழுகியதே, அது பற்றி, கண்ணீர் விடவில்லையே காங்கிரஸ்காரர்கள் யாரும், கண்டிக்கவில்லையே என்றுதான் வருத்தப்படுகிறோம்.

ஜனநாயக ஆட்சியில் அடிப்படை உரிமைக்காக அறப்போர் நடத்தும் தோழர்கள் அரசாங்கத்தால் அநியாயமாக அடிக்கப்பட்டு அவர்கள் தேகத்திலிருந்து ரத்தம் ஒழுகுகிறது என்றால் அதைக் கண்ட மக்களும் கேட்ட மக்களும் கண்ணீர் விட்டிருக்க வேண்டும். மனிதன் உரிமைகளின் மேல் கவலையுள்ள மக்களுடைய கண்ணீரும் இலட்சியத்திற்காக இன்னலைத் தாங்கும் எங்கள் தோழர்களின் இரத்தமும் ஒன்றாக வேண்டும் என்று மக்களுடைய கண்ணீரும் எங்களுடைய இரத்தமும் ஒன்றாகிறதோ அன்றுதான் உண்மை ஜனநாயகம் உதிக்க முடியும், நம் இன்பக் கனவு நனவாகும்!

ஆனால் எங்கள் தோழர்கள் தேகத்திலே இரத்தம் ஒழுகியதைக் கேட்டு எந்த தேசியத் தோழர்களுக்கும் கண்ணீர் வரவில்லை. ஏன் கண்ணீர் வரவில்லை. நாட்டிலே நடமாடும் மக்கள் கூறட்டும். காங்கிரஸ்காரர்களை, காங்கிரஸ்காரர்கள் என்று குறிப்பிடும் போது, திடீர் காங்கிரஸ்காரர்களை அல்ல, தேர்தல் காங்கிரஸ்காரர்களை அல்ல, பேரம் பேசும் காங்கிரஸ்காரர்களை அல்ல “அளக்காதே அண்ணாதுரை இன்னும் ஆறு மாதம் பொருத்திரு” என்று என்னிடம் நேரே கூறிடும் காங்கிரஸ்காரர்களை அல்ல உண்மை காங்கிரஸ்காரர்கள் உள்ளத்தில் தழும்பு ஏறியவர்களை தாங்கள் பகவத்சிங் பரம்பரை என்று சொல்லிக்கொள்வதிலே பெருமை அடைபவர்களை, வெள்ளை ஏகாதிபத்யத்தை விறட்டியடித்த காங்கிரஸ் வீரர்களைக் கேட்கிறோம், அவர்கள் கூறட்டும்!

வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்கும் இவர்கள் நடத்தும் ஆட்சிக்கும் என்ன வித்தியாசத்தைக் காணுகிறீர்கள்?