அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாம்
3

அவர்கள் பாரதியார் பாட்டுக்கு தடை விதித்தார்கள். இவர்கள் பாரதிதாசன் பாட்டுக்கு தடை விதிக்கிறார்கள். அவர்கள் தேசிய கவி பாடிய விசுவநாத தாசுக்கு தடை போட்டார்கள். இவர்கள் ‘விடுதலை’க்கும், ‘திராவிட நாட்டிற்கும்’ தடை போடுகிறார்கள், அவர்கள் தேசிய புத்தகங்களை பறிமுதல் செய்தார்கள். இவர்கள் திராவிட நாடு சம்பந்தமான புத்தகங்களை பறிமுதல் செய்கிறார்கள். அவர்கள் மக்களின் தலைவர்களை சிறையில் தள்ளினார்கள். இவர்களும் மக்களின் தலைவர்களை சிறையில் தள்ளுகிறார்கள். அவர்கள் 144 போட்டார்கள் மக்கள் கூட்டம் கூடாமல் தடுக்க-இவர்கள் 144 போடுகிறார்கள் மக்கள் கூட்டம் கூடாமல் தடுக்க அவர்கள் தேசிய தலைவர்களுடன் போகுமிடமெல்லாம் கூடவே குற்றம் கண்டுபிடிக்கும் சி.ஐ.டி கூட்டத்தையும் அனுப்பினார்கள். இவர்களும் நாம் போகுமிடமெல்லாம் கூடவே குற்றம் கண்டுபிடிக்கும் அவர்களை அனுப்புகிறார்கள். அவர்கள் இ.பி.கோ. 153 வது செக்ஷனை நம்பி வாழ்ந்தார்கள். இவர்களும் இ.பி.கோ. 153 வது செக்ஷனை நம்பி வாழ்கிறார்கள். அவர்களுக்கும் இவர்களுக்கும் தோலில் காணும் நிற வித்தியாசத்தைத் தவிர வேறு என்ன வித்தியாசத்தை நீங்கள் காண்கிறீர்கள்?

வெள்ளைக்காரன் சர்க்கார் போய் காங்கிரஸ் சர்க்கார் வந்து என்ன சுகத்தைக் கண்டோம். நான் ஒரு புத்தகம் எழுதினேன். அதற்காக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன். அந்த புத்தகத்தின் பெயர் “ஆரியமாயை” அது எழுதப்பட்டது. 1942 ல். அதற்காக வழக்குத் தொடரப்பட்டது. 1950ல் புத்தகம் எழுதி ஒன்பது ஆண்டுகள் ஆனபிறகு ஆறு பதிப்பிலே ஒவ்வொரு பதிப்புக்கும் சுமார் 3000 வீதம் மொத்தம் 18000 புத்தகங்கள் வெளிவந்த பிறகு, அதை சுமார் லட்சத்திற்கு மேல் மக்கள் படித்து அந்த லட்சம் மக்களிலும் குறைந்தது 2000 பேர்கள் பக்கத்துக்கு பக்கம் பாராமல் ஒப்புவிக்கும் சக்திபெற்ற பிறகு, அதாவது குதிரை கோவில்பட்டியில் பறிபோகி, அது வேலூருக்கு வந்தான பிறகு கொட்டிலை இழுத்துப் பூட்டுவது போல், நான் எழுதிய புத்தகத்திற்கு தடை போடுகிறார்கள். 1942 ல் எழுதிய புத்தகத்திற்கு 1950ல் குற்றம்காண்கிறார்கள். 9 வருட காலமாக உண்டாக்காத வகுப்பு துவேஷத்தை இப்பொழுது மாத்திரம் அது எப்படி உண்டாக்கும் என்பது தெரியவில்லை.

ஆரிய மாயை புத்தகம் எழுதியதற்காக என்னைச் சிறையில் போட்டுவிட்டார்கள் சரி! அதைப்படித்த எண்ணற்ற வாலிபர்களை என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் இதயத்திலே குடிகொண்டிருக்குமே “ஆரிய மாயை” கருத்துக்கள் அதற்கு என்ன செய்யப் போகிறார்கள்? ஒவ்வொரு வாலிபராகக் கூப்பிட்டு “உன் உள்ளத்திலே “ஆரிய மாயை” கருத்து இருந்தால் அதை கக்கு “நீ வா உன்னுடைய எண்ணங்களிலே ஆரிய மாயைக் கருத்துக்கள் கலந்திருந்தால் அவைகளை எடுத்து வீசிவிடு என்று சொல்லப்போகிறார்களா? சிறையில் தள்ளிவிட்டார்கள். புத்தகம் எழுதிய குற்றத்திற்காக அந்தப் புத்தகத்திலே உள்ள கருத்துக்களை மனப்பாடம் செய்துவிட்ட எண்ணற்ற வாலிபர்களை என்ன செய்யப்போகிறார்கள்? அது அவ்வளவு சுலபமா? அவர்கள் அதை ஒத்துக்கொள்வார்களா?

‘ஆரிய மாயை’ அவ்வளவு என்ன ஆபத்தான புத்தகமா? வெள்ளைக்காரர்கள் காலத்தில் இல்லாத வகுப்பு துவேஷத்தை இப்பொழுது புதிதாகப் போதிக்கிறதா? ஒருவர் எழுதிய புத்தகத்தைக் கண்டு அவ்வளவு அச்சமா? அதைப்படித்தால் ஆட்சிப்பீடம் ஆடிவிடும் என்றால் ஆட்சிபீடம் அவ்வளவு பலஹீனமானதா? அதை நாட்டிலே உலவ விட்டால் பூகம்பம் ஏற்பட்டுவிடுமா? எழுத்தாளன் பேனாவைத் தொட்டால் சர்க்காருடைய கஜானாவின் சாவி காணாமல் போய்விடும் என்ற கிலி இருந்தால் அந“தக் கிலி இருக்கலாமா? பேனா வீரர்கள் உங்களிடம் கிடையாதா? ‘கல்கி’ ஆசிரியருக்குத் தெரியாதா? ‘விகடன்’ ஆசிரியருக்குத் தெரியாதா? ‘மித்திரன்’ ஆசிரியருக்குத் தெரியதா? ஏன் ‘தினமணி’ ஆசிரியர் தோழர் சிவராமனைக் கூப்பிட்டு ‘எடு பேனாவை இந்தா காகிதம் எழுது ஆரியமகிமையைப்பற்றி என்று கட்டளையிட்டு இதோ “ஆரிய மகிமை” என்று காட்டலாமே, தைரியமிருந்தால்! அதையல்லவா செய்திருக்க வேண்டும். ‘ஆரிய மாயை’யும் நாட்டிலே உலவட்டும். ‘ஆரிய மகிமை’ யும் நாட்டிலே உலவட்டும். மக்கள் நீதிபதிகள். அவர்கள் மனம் உரைகல். பக்கத்துக்குப் பக்கம் இரண்டையும் மக்கள் படிக்கட்டும். அபத்தம் இருந்தால் எடுத்து வீசி, எறிந்து விடுகிறார்கள். தேவை என்றால் எடுத்துக்கொள்கிறார்கள். இதுவல்லவா நேர்மை, நீதி, அறிவு, ஆண்மை உள்ளவர்கள் செய்ய வேண்டியது. அதை விட்டு ‘ஆரியமாயை’ புத்தகத்திற்கு மாத்திரம் தடை போடுவது என்ன நியாயம்?

‘ஆரிய மாயை’யாவது ஒரு நூல் வடிவிலே எழுதப்பட்டது. பெரியார் நூல் எழுதவில்லை அவர் எங்கெங்கோ, எப்பெப்பொழுதோ பேசிய பேச்சில் குறிப்பிட்டவைகளையும், உட்கார்ந்திருக்கும் போது சொன்னவைகளையும், அவர் பத்திரிகையில் எழுதியவைகளையும் சேகரித்து ஒருவர் ‘பெரியார் பொன்மொழி’ என்று அச்சிட்டு விற்றதற்காக பெரியாருக்கு சிறை தண்டனை தந்தார்கள். தரலாமா? ஜனநாயக ஆட்சியில் எழுத்துரிமை கிடையாதா? வெள்ளைக்காரர்கள் போலத்தான் ஆளத் தெரியுமா?

அல்லது எங்களை மாத்திரம்தான் கஷ்டப்படுத்துகிறீர்களா? எங்களை சிறையில் தள்ளிவிட்டால் மக்களை வாழ வைத்து விட முடியுமா? மக்களுக்கு வயிறார உணவு, மானம் காக்க உடை அறிவு வளர கல்வி, நோய்தீரமருந்து, நல்ல பாலங்கள், விஞ்ஞான நிலையங்கள், கலா மண்டபங்கள் ஆகியவைகளைக் கொடுத்தும் நீங்கள் வாழ்வதற்கு நாங்கள் தடையாக இருக்கிறோம் என்றால் எங்களை தாராளமாக சிறையில் தள்ளட்டும். இப்பொழுது உள்ளதை விட சிறை வாழ்வு மேல் என்று சிறைக்குப் போய்விடுவோம். ஆனால் நாங்கள் சிறையில் படுகிறதைவிட நீங்கள் அதிகமாக வெளியே கஷ்டப்படுகிறீர்கள்.

தலைமுறை தலைமுறையாக அரிசி சாப்பிட்டவர்களுக்கு அரிசி இல்லை. நெல் விளையும் விளை நிலங்கள் பல இருந்தும் அரிசி இல்லை, கோதுமை சாப்பிடு என்கிறார்கள். உலகத்திலேயே மலிவான உணவு அரிசி என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அரிசியை உலையிலே போட்டு ஒரு கொதி கொதித்தவுடன் ஒரு உப்புக்கல்லைப் போட்டு இறக்கி வைத்து விடலாம். சாப்பாடு தயாராகிவிடும். கோதுமையில் அவ்வளவு சுலபமாக சாப்பாடு செய்து விட முடியாது. கோதுமையை ரொட்டியாகவோ, உப்புமாகவோ செய்துதான் சாப்பிட முடியும். அவைகளுக்கும், உபகரணங்கள் தேவையாயிருக்கும், ஏழையாயிருந்தால் காரமான சட்னி. பணக்காரராயிருந்தால் பலகாரங்கள் வேண்டியிருக்கும். சர்க்காருக்கு தூதுவர்கள் உள்ளது போல் கோதுமை ஆகாரத்திற்கு பலகாரங்கள் சட்னி போன்ற உபகரணங்கள் வேண்டியிருக்கும். அதற்கு தமிழன் பட்ஜெட் இடம் கொடுக்காது. அதற்காகத்தான் தமிழர்கள் அரிசி வேண்டும் என்கிறார்கள். ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் அரிசி கேட்டால் ஒரு அமைச்சர் கோதுமை சாப்பிடு என்கிறார், ஒரு அமைச்சர் பருத்திக் கொட்டையைத் தின்னுங்கள் என்கிறார். இன்னொரு அமைச்சர் புளியங்கொட்டையைத் தின்னுங்கள் என்கிறார். விளையாட்டுக்குச் சொல்லவில்லை. மத்திய சர்க்கார் மந்திரி முன்ஷிதான் அப்படிச் சொன்னார்.

இதற்கு முன்பு சரித்திரத்தில் மக்கள் உணவுப் பஞ்சத்தால் தவிக்கும் பொழுது இவ்வளவு கேவலமாக ஒரு பொறுப்புள்ள சர்க்கார் அதிகாரி கூறிய, சம்பவத்தை உலகத்திலேயே ஒரே ஒரு நாட்டில்தான் ஒரு தடவை நிகழ்ந்ததாக நாம் படித்திருக்கிறோம். பிரான்சில் பர்கண்டி என்று ஒரு மாகாணம் இருந்தது. அதற்கு பல்லான் என்பவன் கவர்னர். அவன் காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இப்பொழுது இங்கு இருப்பதுபோல, பல்லான் ஆட்சியில் ரொட்டிக் கிடங்குகளுக்கு முன் இங்கு மக்கள் அரிசிக் கிடங்குகளுக்கு முன்னிற்பது போல் வரிசை வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். வாரத்தில் அநேக நாட்கள் இங்கே அரிசிக் கடைகளின் கதவுகள் பூட்டிக் கிடப்பது போல் அங்கு ரொட்டிக் கிடங்குகளின் கதவுகள் பூட்டிக் கிடந்தன. பாட்டாளிகள் ரொட்டி கிடைக்காமல் திண்டாடிõர்கள். பல்லான் மாளிகையில் மதோன்மத்தர்களுடன் மதுவுண்டு கேளிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். மக்கள் மாளிகைக்கு வெளியே ‘பசி’ ‘பசி’ என்று கூறினர். கொலு மண்டபத்தில் வீற்றிருந்த பல்லான் காதில் இது விழுந்தது. வெளியே வந்து மக்களைப் பார்த்தான். “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். மக்கள் ‘பசி’ ‘பசி’ என்று கூவினர். “என்ன அவ்வளவு பசியா?” பல்லான் கேட்டான். “ஆம் பிரபோ! நாங்கள் மாடாய் உழைக்கிறோம். இருந்தும் உண்ண உணவில்லை பசி” மக்கள் பதில் கூறினர். “நீங்கள் மாடு போலவா உழைக்கிறீர்கள்” மீண்டும் பல்லான் கேட்டான். “ஆம்” என்றனர் மக்கள். “அப்படியானால் நீங்களும் புல்லைத் தின்னுங்கள்” என்று கூறிவிட்டு பல்லான் உள்ளே போய்விட்டான். உள்ளே போனவன் வெளியே வரவில்லை. வெளியே கூடியிருந்த மக்கள் கலைந்து விட்டார்கள்.

ஆனால் கவர்னர் மேல் இருந்த ஆத்திரம் அவர்கள் இருதயத்தை விட்டு வெளிவரவில்லை. உடனே ஒருவன் ஏன் பல்லான் அவ்வளவு ஆனவமாகப் பதில் கூறினான் என்று கேட்டான். ‘அவன் கையில் ஆட்சியிருப்பதால்’ பக்கத்தில் உள்ளவன் பதில் கூறினான். “அவனை அழித்தால் என்ன?” இவன் அவனுக்குச் சொன்னான். செய்தி இந்த இடத்திலிருந்து அந்த இடத்திற்குப் போனது அந்த இடத்திலிருந்து அதற்கப்புறம் இருந்த பக்கத்திற்குப் போனது பாரிசில் பரவியது. பிரான்சே புரட்சியாக மாறிவிட்டது. சீமான்களின் சிரங்கள் வெட்டுப் பாறையின் மேல் கொண்டு வந்து துண்டிக்கப்பட்டன. கடைசியில் “பர்கண்டியின் கவர்னர் பவ்லான் இழுத்து வந்து அவன் தலையை வெட்டுப் பாறையில் சாய்த்து “போடுங்கள் கத்தியை” என்றனர் போட போகின்ற நேரத்தில் கூட்டத்திலே “வெட்டாதே” என்று ஒரு குரல் கேட்டது, “ஏன் வெட்டாதே என்கிறாய்?” என்று மக்கள் கேட்டனர். மீண்டும் “வெட்டாதே” என்றது அந்தக்குரல். “முடியாது, கொடியோன் இவனை வெட்டத்தான் வேண்டும்” என்று கூவினர் மக்கள். “வேண்டாம் சற்று பொருங்கள் காரணம் இருக்கிறது” என்று ஓடோடி வந்தான் ஒருவன். கையிலே ஒரு பிடி புல்லைக் கொண்டு வந்து பவ்லான் வாயில் திணித்தான். “இப்பொழுது வெட்டுங்கள் அந்தப் பாதகனை” என்றான் பவ்லான் தலை வெட்டுண்டு மண்ணிலே புரண்டது. அந்தத் துர்பாக்யமான நிலை இந்த நாட்டு மந்திரிகளுக்கு ஏற்பட வேண்டும் என்பதல்ல நம் கோரிக்கை. பழைய வரலாற்றில் நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் இரண்டாவது தடவையாக இந்த நாட்டில் ஒரு மந்திரி “பசி-அரிசி தேவை” என்று சொல்லும் மக்களைப் பார்த்து புளியங்கொட்டையைத் தின்னுங்கள் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டவே! ஆனால் நமது மந்திரிகள் அன்று பிரான்சில் நடந்த சம்பவம் போதிக்கும் பாடத்தை மறந்து விடக்கூடாது. ஆள்கிறோம் ஆட்சி நமது கையிலே, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் ஆணவம் கூடாது. அப்படியிருந்தால் அதை எதிர்த்து பிரஞ்சு மக்கள் போல பயங்கரப்போர் புரிவதல்ல நம் நோக்கம். அறப்போரில் பிரியம் உள்ளவர்கள். பலாத்காரத்தை ஒரு போதும் தூண்டமாட்டோம்.

சர்க்கார் உணவுப் பஞ்சத்தையும் துணிப் பஞ்சத்தையும் போக்க எடுத்துக் கொள்ளும் முயற்சியை இவர்கள் பாராட்டுவதில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, இவர்கள் இதுவரை இரண்டு பஞ்சங்களையும் போக்க எடுத்துக் கொண்ட முயற்சி என்ன பலனைத் தந்தது? விவசாயி விதையில்லை என்கிறான், நெசவாளி நூல் இல்லை என்கிறான், தொழிலாளி வேலை இல்லை என்கிறான், மாணவர்கள் படிக்க இடமில்லை என்கிறார்கள். பிணி போக்க மருத்துவ மனைகளில்லை. மருத்துவமனைகளிலே மருந்தில்லை, மருந்திலே பிணி போக்கும் தன்மையில்லை. எங்கும் எதை எடுத்தாலும் பஞ்சம். இந்த ஆட்சியைப் பாராட்டவில்லை யென்றால் யார் பாராட்டுவார்கள்?

நம் நாட்டிலே இருக்கும் உண்மை நிலையைச் சொன்னால் நமது சர்க்கார் மந்திரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் தாங்கள் போகமிடமெல்லாம் மக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பொய்யர்கள், எதையும் அழகாகப் பேசிவிடுவார்கள். அவர்கள் மயக்க மொழியில் மயங்கிவிடாதீர்கள்; சொல்லிலே சொக்கிவிடாதீர்கள்; அவர்கள் பத்திரிகைகளைப் படிக்காதீர்கள் என்று உபதேசிக்கிறார்கள். மக்கள் என்ன அவ்வளவு மட்டமாகவா இருக்கிறார்கள் எதைச் சொன்னாலும் கேட்டுவிட! ஒரு நாளும் இல்லை.

ஒலி பெருக்கி இருக்கிறது. பேசுவதை தொலைவிலும் கேட்கும்படி அது செய்கிறது என்று சொன்னால் நம்புவார்கள். அப்படிச் சொல்லாமல் “நான் காளி உபவாசி கூட்டத்திற்கு வருமுன் காளியைக் கும்பிட்டுவிட்டுப் பேச வந்திருக்கிறேன். என் காளியின் அருளால்தான் நான் இங்கு பேசுவது தொலைவில் தெளிவாகக் கேட்கிறது என்று சொன்னால் நம்புவார்களா? நான் தஞ்சையிலிருந்து இங்கு வரும் வழியில் ஆடுதுரையில் சற்று தங்கிவிட்டு வந்தேன் என்றால் நம்புவார்கள். அதை விட்டு நான் வரும் வழியில் ஆடுதுரையில் உள்ள ஒரு ஆடு பட்டுக்கோட்டையிலுள்ள ஓநாயின் மீது பாய்ந்ததைப் பார்த்தேன். ஓநாய்க்கும் ஆட்டுக்கும் நடந்த சண்டையில் ஆடு வெற்றி பெற்றது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீர்கள்.