அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாம்
6

எதை இவர்கள் ‘இந்தா’ என்று கொடுத்தார்கள்? பாகிஸ்தானை கொடுப்பதற்கு. முதல் வினாடி வரையிலே பாகிஸ்தான், பாரதமாதாவை துண்டு போடக்கூடாது என்று கூறி வந்தவர்கள் தானே இவர்கள். பாகிஸ்தான் கேட்ட போதாவது காங்கிரஸ் தலைவர்கள் முதற்கொண்டு சாதாரண தொண்டர் வரையிலே முஸ்லீம்கள் இந்த நாட்டுப் பரம்பரை குடிகள் அல்ல, அவர்களுக்கு தனி நாடு கொடுத்தால் பாதகம் விளைவிக்கும் என்ற காரணத்தையாவது காட்டினார்கள். நாம் கேட்கும் திராவிட நாட்டுக்கு முடியாது என்பதற்கு இதுவரை என்ன காரணம் காட்டினார்கள்? இதுவரை எந்த காங்கிரஸ் தலைவராவது, காங்கிரஸ் தொண்டராவது திராவிட நாடு வடநாட்டாருடன் சேர்ந்திருந்தால்தான் வாழ முடியும். அதற்கு இன்னின்ன காரணங்கள் என்று சொல்லுவதிலே விவேகம் இல்லாவிட்டாலும் வீரமாவது இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளலாம்.

திராவிட நாடு கூடாது, அது தீங்கு விளைவிக்கும் என்று சொன்னால் எப்படி அறிவுள்ளவர்கள், ஆண்மையுள்ளவர்கள் ஒத்துக்கொள்ள முடியும்? வேற்று நாட்டார் என்று கூறிய முஸ்லீம்களுக்கு தனி நாடு இந்தியாவில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்து விட்டு சொந்த நாட்டவராகிய நமக்கு மாத்திரம் இல்லை என்றால் இதை உலகம் எள்ளி நகையாடாதா? கோரி பரம்பரை, கஜினி பரம்பரை என்று சொன்ன முஸ்லீம்களுக்குக் கொடுத்தவர்கள்,சேர சந்ததியினருக்கு சோழ வம்ச வாலிபர்கள் இதை ஒத்துக்கொள்வார்களா? சொந்த நாடு இல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடம் கொடுத்திருக்கிறார்கள். தங்கம் விளையும் பூமியை தாயகமாக உடையவர்களுக்கு இல்லை என்கிறார்கள். உலகத்தில் நல்லெண்ணம் உள்ள நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?

இன்னும் சில விசித்திர சித்தர்கள், ஆந்திரத்தில் இவர்கள் கழகம் இல்லை, கன்னடத்தில் இவர்கள் கழகம் இல்லை, கேரளத்தில் இவர்கள் கழகம் இல்லை, இவர்கள் திராவிட நாட்டுக் கொள்கைகளை அவர்கள் திராவிட நாட்டுக் கொள்கைகளை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்களா, இவர்களாகக் கத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆந்திரத்தில், கன்னடத்தில், கேரளத்தில் நமது கழகம் இல்லை. அங்கெல்லாம் பிரசாரம் இல்லாத காரணத்தால் பிரசாரம் செய்வதற்கு நேரமில்லை, வசதியில்லை. இனி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஆனால் அங்கெல்லாம் பிரச்சாரம் செய்யவில்லை என்பதற்காக அவர்கள் வாழுமிடத்தையும் சேர்த்து திராவிட நாடு கேட்கக் கூடாது என்று விதியில்லை. ஆந்திரத்திலும் கன்னடத்திலும் கேரளத்திலும் நமது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து அவர்கள் ஒப்புதலை வாங்கியபிறகுதான் திராவிட நாடு கேட்க வேண்டும் என்று அவசியமுமில்லை. பாகிஸ்தான் வருவதற்கு முன் இப்பொழுது இந்தியாவின் வடமேற்கிலும் வட கிழக்கிலுமுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் மாத்திரம் பிரச்சாரம் செய்து அவர்கள் ஒப்பந்தத்தைப் பெற்ற பிறகுதான் முஸ்லீம்கள் பாகிஸ்தான் கேட்க ஆரம்பித்தார்கள்? பாகிஸ்தானின் சிருஷ்டி கர்த்தாவான ஜின்னா பிறந்தது பாகிஸ்தானில் அல்ல, பாகிஸ்தானில் சேராத பம்பாய் மாகாணத்தில்! பாகிஸ்தானைப் பற்றி பிரச்சாரம் செய்யும் சங்கமே பம்பாயில்தான் இருந்தது. பாகிஸ்தானின் பிரதமர் லியாகத் அலிகான் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்தவர். அவர் ஐக்கிய மாகாணத்தில் பாகிஸ்தானின் தேவையைப் பற்றி பிரசாரம் செய்தார். லியாகத் அலியைப் பார்த்து “நீ ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்தவர், நீ கேட்கும் பாகிஸ்தான் வடமேற்கிலுள்ள பஞ்சாபிலும் சிந்துவிலும் இருக்கிறது. அங்க போய் பிரச்சாரம் செய் ஐக்கிய மாகாணத்தில் பிரச்சாரம் செய்யாதே” என்று யாரும் கூறவில்லை. பாகிஸ்தானைப் பற்றி பம்பாயிலும் ஐக்கிய மாகாணத்திலும் ஜின்னாவும் லியாகத் அலியும் பிரச்சாரம் செய்த போது இப்பொழுது பாகிஸ்தானின் பகுதிகளாக இருக்கும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாப், சிந்து, வங்காளம் ஆகிய மாகாணங்களில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான்தான் வேண்டும் என்று கூட்டறிக்கை விடவில்லை.

அப்பொழுது எல்லைப்புற மாகாணத்திற்கு பிரதமராய் இருந்த கான அப்துல் கபார்கான் பாகிஸ்தான் கூடாது என்றார். சிந்து மகாணத்து பிரதமர் அல்லா பக்ஷ் பாகிஸ்தான் கூடாது என்றார். பஞ்சாப் மாகாணத்தில் பிரதமராய் இருந்த சர் ஹயத்கானும் பாகிஸ்தான் வேண்டாமென்று சொன்னார். வங்காளத்துக்கு பிரதமராயிருந்த பஸ்லுஸ் ஹக் ஜின்னாவிடம் விருப்பம் ஏற்பட்ட நேரத்தில் கூடாது என்பார். இப்படி இப்பொழுது பாகிஸ்தான் வேண்டுமென்று ஜின்னா சொன்னபோது முதலில் எதிர்ப்புதான் வந்தது, பூரண ஆதரவு வரவில்லை. கடைசியில் பாகிஸ்தான் கிடைக்காமலா போய்விட்டது? அதே போல் திராவிட நாடு கிடைப்பதற்கு எடுத்தவுடனேயே எல்லாவிடத்திலிருந்தும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. காங்கிரஸ்காரர்கள் ஆந்திரர்களும், கன்னடியர்களும், கேரளத்தவர்களும் இவர்களிடம் திராவிட நாடு வேண்டும் என்று சொன்னார்களா என்று கேட்கிறார்களே, இவர்களிடம் அவர்கள் எப்போதாவது திராவிட நாடு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டார்களா? ஏன் வீண் விவாதத்தைக் கிளப்புகிறீர்கள்.

பாகிஸ்தான் பாதகஸ்தான் என்றார்கள். முஸ்லீம்கள் பிற இனம் என்றார்கள். கோரி பரம்பரை என்றார்கள், சரித்திரப்படி சாத்தியமில்லாத காரியத்தைக் கேட்கிறார்கள் என்றார்கள், மறுபடியும் மொகலாய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கப் பார்க்கிறார்கள், முஸ்லீம்கள் மத வெறியர்கள் என்றார்கள், ஆனால் இன்று...? பாகிஸ்தான் பிரதிநிதியும் கராச்சியில் உறவு மாநாடு கூட்டுகிறார்கள். எவர்களை விரோதி என்று கருதினார்களோ, எவர்களை தேசத்துரோகி என்று சொன்னார்களோ, எவர்களுடன் சேர்த்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தார்களோ அவர்களுடன் இப்பொழுது கைகுலுக்கிக் கொள்கிறீர்கள்.

முஸ்லீம்கள் கைபர் கணவாய் வழியாய் வந்தவர்கள் சும்மா வரவில்லை குதிரையில் வந்தவர்கள். நம்மை ஆட்டிப் படைத்தவர்கள், நமக்கு அநியாயம் புரிந்தவர்கள் என்றார்கள் அவர்களுக்கு அளந்து கொடுத்தார்கள். கிழக்கிலும், மேற்கிலும் நாங்கள் இந்த நாட்டவர் எங்களுக்கு தனி இடம் கொடு என்றால் தூற்றுகிறார்கள். ஜின்னாவை இராட்சதன் என்றார்கள். “இரட்சதக்” கூட்டமும் இந்தியாவின் “தேவர்கள்” கூட்டமும் இன்று கராச்சியில் கூடியிருக்கிறார்களே அமிர்த கலசத்தைப் பருகுவது போல! அது எப்படி முடிந்தது? லியாகத் டெல்லிக்கு வந்தார். இந்தியாவின் ஜனாதிபதி விருந்து வைத்தார். பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் விருந்து வைத்தார்.

பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலியும், இந்தியாவின் பிரதமர் பண்டித நேருவும், ஒருவருடன் ஒருவர் கைகுலுக்கிக் கொள்கிறார்கள். அது எப்படி முடிந்தது? ‘இது முடியாது. நடக்காது’ என்று பாகிஸ்தான் கொடுப்பதற்கு முதல்வினாடி வரையில் சொன்னார்களே அதை ஞாபகப்படுத்திக் கொள்ளட்டும்.

இந்தியாவின் வடமேற்கிலும், வடகிழக்கிலும் இரு வேறு முனைகளிலும் பாகிஸ்தான். இடையே இந்துஸ்தான் இருக்கிறது. இந்தக் கூடம் எந்த நேரத்திலும் களமாகாலாம். அந்த அளவுக்குப் போர் புகை இரண்டு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இருந்தும் பாகிஸ்தான் தந்தார்கள். நாங்கள் கேட்கும் திராவிட நாட்டில் நடுவே கூடம் எதுவுமில்லை. இப்பொழுதுள்ள சென்னை மாகாணத்தையே திராவிட நாடு என்று அழைக்கிறோம். அதையே தரும்படி கேட்கிறோம்.

திராவிட நாட்டுக்கு மூன்று பக்கமும் கடல், மூன்று பக்கமும் மலைகள், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை, வடக்கே உயர்ந்த விந்தியமலை. இயற்கை அரண் உடைய நாடு, 5 கோடி மக்களையுடைய நாடு, கடல் கடந்து வெளிநாட்டிற்குச் சென்ற தோழர்களைத் தேடி அழைத்து வந்தாலும் தங்க இடம் தரும்நாடு. இங்கு நஞ்சைகளைப் பார்க்கலாம், புஞ்சைகளைப் பார்க்கலாம், கோலாரிலே தங்கம், சேலத்திலே இரும்பு, யுரோனியம், திருவிதாங்கூரிலே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காடுகள், காட்டிலே அகில், தேக்கு காட்டுப் பக்கத்திலே சாலைகளைப் பார்க்கலாம், சாலைகளுக்கும் பக்கத்திலே சிந்து பாடும் சிற்றாறுகளைக் காணலாம், உழைப்பாளிகளைப் பார்க்கலாம். சோழர்கள் ஆண்ட இடத்தைப் பார்க்கலாம், பாண்டியர்கள் பரிபாலனம் செய்த இடத்தைப் பார்க்கலாம். சிலப்பதிகாரத்தைப் பார்க்கலாம், மணிமேகலையைப் பார்க்கலாம். 5 கோடி மக்கள் வாழ வளமான திருவிடம் இதைத் தாருங்கள் என்கிறோம் ‘தரமாட்டேன்’ என்கிறார்கள். பாகிஸ்தான் தந்த அதே கையால் திராவிடநாடு தரமாட்டேன் என்கிறார்கள். அறிவுள்ள உலகம் இதை ஒத்துக்கொள்ளுமா?

டில்லியுடன் சேர்ந்திருப்பதால் இன்னின்ன லாபம் என்று எடுத்துக்காட்டத்தான் முடியுமா? கூட்டத்திலே நடுவிலே எழுந்திருந்து ‘நாங்களெல்லாம் தரையில் கீழே உட்கார்ந்திருக்கிறோம் நீ மாத்திரம் ஏன் மேடை மீது நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாய்’ என்று ஒரு விதண்டாவாதக்காரர் கேட்டால் ‘உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் அதற்காகத்தான் மேடை மீது இருக்கிறேன்’ என்று தானே பதில் கூற வேண்டும். மேலே இருப்பதால்தான் மக்களை எல்லாம் பார்க்க முடிகிறது. அது மேடையிருப்பதால் அடையும் லாபம் அது போல் திராவிட நாடு வடநாட்டுடன் சேர்ந்திருப்பதால் என்ன லாபம்? வடநாட்டுடன் சேர்ந்திருப்பதால்தான் அரிசிப் பஞ்சமில்லை, துணிப்பஞ்சம் இல்லை, நாலு பக்கங்களிலும் தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன’ என்று சொல்ல முடியுமா? அல்லது வடநாடு அதிக பலம் பொருந்தியது, அங்குள்ள வீராதி வீரர்களுடன் நாம் சேர்ந்திருப்பதால்தான் நமக்கு வீரம் வருகிறது என்று சொல்லமுடியுமா? வடநாட்டுடன் நாம் சேர்ந்திருப்பதால் இன்ன லாபம் என்று காட்ட முடியுமா? முடியாது. காரணம் காங்கிரஸ்காரர்களுக்குத் திறமையில்லாததால் அல்ல, அங்கு சட்டியிலே இல்லை! ஆகவே அகப்பையிலும் இல்லை!! சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!

வடநாட்டவர்கள் வீராதி வீரர்கள் என்றால் அதை மாணவர்கள் ஒத்துக்கொள்வார்களா? அவர்கள் பக்கம் பக்கமாகப் படிக்கிறார்களோ அவர்களுக்கும் அந்நியர்களுக்கும் நடந்த சண்டைகளில் வெற்றி பெற்றதையா படிக்கிறார்கள்? வீழ்ந்த கதையை அல்லவா படிக்கிறார்கள். செங்கிஸ்கான் படையெடுத்தார் தோற்றார்கள், கோரி படையெடுத்தான், தோற்றார்கள், பாபர் படையெடுத்தான், தோற்றார்கள், ஹூமாயூன் வந்தான் பட்டம் சூட்டினார்கள், இப்படியல்லவா அவர்கள் ஒவ்வொரு சண்டையிலும் தோற்ற கதையை சரித்திரம் கூறுகிறது. அப்படியல்ல திராவிடநாட்டு சரித்திரம், திராவிட நாடு வீழ்ந்த கதையையா கூறுகிறது? வடநாடு எந்தச் சண்டையிலும் வெற்றி பெற்றதாக சரித்திரம் காட்டமுடியாது. ஏராளமாகக் காட்ட முடியும், திராவிடர்கள் வெற்றிபெற்ற சம்பவங்களைச் சரித்திரித்திலே, சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விஜயரைத் தோற்கடித்து அவர்கள் தலையில் கல்லை ஏற்றினான். இமயத்தில் தமிழர்கள் கொடியை பொறித்தான். ராஜாராஜேந்திரன் பர்மாவை வென்றான். வெற்றிக்கறிகுறியாக ஸ்தூபம் நாட்டினான். குலோத்துங்கன். கலிங்கத்தின் மீது படையெடுத்து கலிங்கப் போரில் வெற்றி பெற்றான். கலிங்கத்துப் பரணி பாடியிருக்கிறார்கள். வெற்றி வரலாறு நம்முடையது. வீழ்ந்து கதை அவர்களுடையது. இப்படி ஒவ்வொரு சண்டையிலும் தோல்வியடைந்த தோல்விப் பரம்பரையினரிடம் வெற்றி வீரர்கள் தங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு இருக்க வேண்டுமா? அவர்கள் பாதுகாப்பில் நமக்கு ஆபத்து வராது என்று எப்படி நம்ப முடியும்?

அல்லது அப்பொழுது வீரம் இல்லை, இப்பொழுது வட நாட்டாருக்கு வீரம் இருக்கிறது என்றாவது கூற முடியுமா? அவர்கள் வீரம்தான் தெரிகிறதே? 3 வருடங்களாக கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து காஷ்மீரில் போராட்டம் நடத்திக் கடைசியாக சர்க்கார் சண்டையைப் பற்றி அறிக்கை விடுகையில் காஷ்மீரில் ஒரு பகுதி எதிரிகள் பக்கம் இருக்கிறது. மற்றொரு பகுதிதான் அப்துல்லா கையில் இருக்கிறது என்கிறார்களே அது இன்றும் வடநாட்டார்கள் சண்டையில் தோல்வியடைவதைத்தானே காட்டுகிறது. மூன்றாண்டுகள் போர் புரிந்தும் எப்படி காஷ்மீரின் ஒரு பகுதி இன்னும் எதிரிகள் வசம் இருக்கிறது என்று கேட்டால் பாதுகாப்பு இலாக்கா இந்திய துருப்புக்கள் இந்தப் பக்கமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது அந்தப் பக்கமாக பாக் துருப்புகள் மளமளவென்று வந்துவிடுகின்றன என்று கூறுகிறது. அந்தப் பாதுகாப்பு இலாக்காவுக்குப் பலதேவ்சிங் மந்திரி. காஷ்மீரைப் பற்றி பலதேவ்சிங் டில்லியில் ஒரு தடவை பேசும் போது குறிப்பிட்டார். “கீமீ ஷ்வீறீறீ ˆமீஸீபீ ஷீMக்ஷீ லிணீஸீபீ திஷீக்ஷீநீமீ, கிவீக்ஷீ திஷீக்ஷீநீமீ ணீஸீபீ ழிணீஸ்ஹ் Nஷீ ரிணீˆலீனீவீக்ஷீ” அதாவது காஷ்மீருக்கு நாம் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய மூன்றையும் அனுப்புவோம் என்பதாக! காஷ்மீருக்குக் கப்பற் படையை அனுப்பப் போகிறாராம்! காஷ்மீர் சண்டைக்கு கப்பல் படையை அனுப்பலாம் என்று கூறும் புத்திசாலி பாதுகாப்பு மந்திரியாக இருக்கும் டில்லி சர்க்காரிடம் நாம் திராவிட நாட்டை விட்டு வைக்கலாமா?

வரலாறு, வல்லமை, வளமை இல்லாத நாட்டவரிடம், வரலாறு, வல்லமை, வளமை உள்ள நாட்டார் ஏன் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும்? அதற்கு வழி சொல்ல முடியவில்லை நம்மைத் தூற்றுகிறார்கள். தூற்றல் பாணம் நம் நம்பிக்கையை துளைத்து விட முடியாது. நாங்கள் தூற்றலிலேயே முளைத்தவர்கள். ஆரம்பத்தில் நாங்கள் பேசியதற்குப் பரிசா பெற்றோம்? வீட்டிலே தாய் தந்தையர்கள் கோபப்பட்டார்கள், தெருவிலே போகும்போது பெரியதனக்காரர்கள் திட்டினார்கள். வைதீகர்கள் சீறினார்கள். நாங்கள் தூற்றலுக்கு அஞ்சமாட்டோம். ஆகவே எங்களைத் துளைக்க இனி நீங்கள் விட வேண்டியது தூற்றல் பாணம் அல்ல அறிவுப் பாணம்!
இனி நமது கோரிக்கையை டில்லி சர்க்கார் நன்றாய் அலசிப் பார்க்க வேண்டும். டில்லி சர்க்கார் நமது கோரிக்கையை ஒப்புக் கொள்ள வேண்டும். இது பற்றி மத்திய சர்க்கார் மந்திரிமார்களுடைய மனம் மாற வேண்டும். விரைவில் நமக்கு நல்லாட்சி தர முன் வர வேண்டும்.

மக்கள் தரும் பலம் நமக்கு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகிறது. நமது திராவிட நாடு திராவிடருக்கே என்னும் மூலாதார முழக்கம் மூலை முடுக்குகளிலெல்லாம் கேட்கிறது. நம் கொள்கைகள் நன்றாய் வேறூன்றி விட்டன. இனி வெகு நாள் நம் இலட்சியத்தை அலட்சியம் செய்ய முடியாது. நமது குறிக்கோளை முறியடிக்க முடியாது. இனி திராவிட நாட்டுப் பிரச்சனையைத் தெரியவில்லை, புரியவில்லை என்று சொல்லாதீர்கள். தெளிவு பெறுவதற்குத் திராவிட நாடு பற்றி வெளியாகியிருக்கும் புத்தகங்களைப் படியுங்கள். பத்திரிகைகளைப் பாருங்கள். விளக்கம் கேட்டு கழக நிலையத்துக்குக் கடிதம் எழுதுங்கள். நாங்கள் தரும் விளக்கத்தைப் படித்துப் பாருங்கள். சந்தேகம் நீ“ங்கி எங்கள் இலட்சியத்தில் பற்று ஏற்பட்டால், எங்கள் சக்தியை நம்பினால் கழகத்தில் சேருங்கள்.

‘வீழ்ந்த இனத்தை வெற்றிப் பாதையில் வைக்க நமது வாழ்நாளைப் பயன்படுத்துவோம்’ என்று உறுதி கொள்ளுங்கள். உறுதி-என்றும், வீண் போகாது வெற்றி பெறுவோம்!! விசையொடிந்த தாயகத்தை விரைவில் மீட்போம்!!

சிதம்பரம்-1951