அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சூழ்நிலை
3

பழைமை, பழைமை என்று பத்தாம்பசலிக் கொள்கையையே கொண்டிருந்தால், காலிகோ பைண்டு செய்து, பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மேலட்டைகளைக் கொண்ட புராணப் புத்தகங்களைக் கண“டிருக்க முடியாது! புராண கால இலக்கியங்கள் ஏடும் எழுத்தாணியுடனேயே, ஓலைச் சுவடிகளிலேயே அடங்கிவிட்டிருக்கும். அனைவரும் படித்தறியும் புத்தகமாக, நூல் வடிவில், அச்சிடப்பட்டிருக்க முடியுமா? அல்லது, யாரோ, எந்த நாட்டிலோ, கண்டு பிடித்த அச்சுப் பொறியைத்தான் அதற்குப் பயந்படுத்தலாமா?

புதிய சாதனங்களால், பழைய கருத்துக்களைப் பரப்பிடப் பயன்படுத்திடத் தவறவில்லை; அதே நேரத்தில் புதுமைக் கருத்துகளுக்கு வித்திடும் விவேக புத்தியைக் கையாண்டிட மறுத்திடும் நிலை! மூட நம்பிக்கையால் முற்போக்கு இலக்கியங்கட்கு முட்டுக்கட்டை போடும் நிலை! இந்த நிலை மாற வேண்டாமா? மாற்றப்பட வேண்டாமா?

‘சூழ்நிலை’! காலவேகம், மணிதனது முன்னேற்றம், எண்ணப் புரட்சியின் வேகமான முன்னேற்றம், விஞ்ஞான அறிவு, ஆராய்ச்சி, வாழ்க்கை முறையை, அதற்கான சுற்றுச் சார்பை, சூழ்ந்துள்ள தன்மைகளை, தரப்படுத்தி, வளப்படுத்தி நல்ல ‘சூழ்நிலையை’ உண்டாக்கித் தருகிறது, உருவாக்கிக் கொடுக்கிறது!

நல்லனவெல்லாம் பழைமையின் தரத்தைப் பரப்பிட, பழைமையின் தரத்தை, ஏற்கனவே இருக்கும் தரத்தையே, மேலும் உயர்த்திட, உபயோகிக்கப்படுகிறதே தவிர நல்ல பயனைத்தரும் வழியில் வகைப்படுத்திட, திருத்தியமைத்திட, மனம் இல்லை!

மாற்றினால், பழைமைக்கு பெருமை குன்றும், குறையும்; புதுமை, புதுக்கருத்துக்கள் மேலோங்கிவிடும். பழைமையின் புனிதத் தன்மை பட்டுவிடும், மறைந்தொழியும் ‘தரம்’ தாழ்ந்துவிடும். தரம் தாழ்ந்து விடும் என்று மாற்றத்தை, மனித முன்னேற்றத்தையே, பழைமையின் பேரால், பழைய இலக்கியங்களை பங்கம் ஏதுமின்றிப் பாதுகாத்திட வேண்டும் என்ற பழக்கத்தால், தடுத்து நிறுத்த முனைவது, நம்மை நாமே, நமது எதிர்கால வாழ்க்கையையே, நம்மைவிட்டு விலக்கி வைத்தவர்களாவோம்.

ஒரு குறிப்பிட்ட தரத்தை மட்டுமே பெரிதெனக் கொண்டிருந்தால், சக்கி முக்கிக் கற்களைக் கொண்டு தீ, நெருப்பை உண்டாக்கும் முறையிலிருந்து நினைத்த நேரத்திலே, நினைத்த இடத்திலே நெருப்பை உண்டாக்கிடும் தீப்பெட்டி தோன்றியிருக்குமா? காய்ந்த இலை, தழை, சருகுகளைக் குவித்து தீ வைத்து, ஒளி உண்டாக்கிய காலம் மாறி, தீ வட்டிகள் ஏற்பட்டு, தீவட்டியிலிருந்து எண்ணெயும் திரியுமிட்ட அகல விளக்குகளைப் பெற்று, அதன் பின்னர் மண்ணெண்ணெய் விளக்குகள் பெட்ரோமாக்ஸ் போன்ற காந்த விளக்குகளும், இதற்கிடையே மெழுகுவர்த்திகளும் தோன்றி, இன்று எல்லாவற்றிற்கும் மேலான, வசதியான, ஒரு சிறு பொத்தான் அழுத்தினால், ஒளி மிகத் தந்திடும் மின்சார விளக்குகளைப் பெற்றுள்ள நிலை, வசதியான சவுகரியமான நிலைக்கு முன்னேற முடியாது, என்பதை உணர மறுப்பவர் யார், யார்? யார்தான் மறுத்திட முடியும், இதனை? முடியாதல்லவா?

சிற்பிகளின் சிந்தனை, சிற்பங்களைச் செதுக்கிடும் அளவோடு ந‘ன்று, ஆண்டவன் ஆலயங்களை அழகுடன் அமைத்திடும் பணியோடு முடிந்திருந்தால் மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் கோட்டைகளையும், கொத்தளங்களையும், சுற்றுச் சுவர்களையும் சூழ்ந்த மதில்களையும், மலையரண் களையும், கொண்ட மகத்தான மாபெரும் நகரங்களைக் கண்டிருக்க முடியுமா? நாடுகளைத்தான் பார்த்திருக்க முடியுமா?

கட்டடமமைப்போரின் கவனம், கருத்து, கடும் உழைப்பு, கலைத்திறமை யாவும் கண்கவர் ஆலயங்களோடு நின்று விட்டிருந்தால் காடுகளை அழித்து, மேடுபள்ளங்களைச் சரிப்படுத்தி, சமன் செய்து, கழனிகளை உண்டாக்கி, வயல்களையமைத்து, வளப்படுத்தி விளைபொருள்களை உற்பத்தி செய்திடும் வாய்ப்புத்தான் கிடைத்திருக்குமா?

கரடு முரடான காட்டு வழிகளை மாற்றி, நல்ல நல்ல பாதைகளை யமைத்திருக்க முடியுமா? செப்பனிட்ட பாதைகளை சீர்திருத்தப்பட்ட பாதைகளைக் கண்டிருக்க மாட்டோம். சரளைக் கற்களாலான கரடு முரடற்ற பாதை, சமன் செய்யப்பட்ட பாதை, சருக்கு நிலமற்ற பாதை, பாரவண்டிகளும், பல திறம்பட்ட வாகனங்களும் வசதியாகச் சென்றிடும் பாதையைக் கண்டிருக்கவே முடியாது.

இந்த நிலையிலிருந்து மாறி, மேலும் மேலும் முன்னேறி, தார் ரோடுகளும், சிமெண்ட் பாதைகளும் இன்று சர்வ சாதாரணக் காட்சிகளாக நாட்டிலே நிலவுகின்றன.

மலைகளைக் குடைந்து இருப்புப் பாதைகள் அமைக்கப் படுகின்றன. மலையுச்சியை நோக்கியும், மலையுச்சியிலிருந்து மலையடிவாரத்தை நோக்கியும் பாதுகாப்பான, பாதைகள் பல உண்டாக்கப்பட்டு விட்டன.

காட்டு வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, நாட்டு வளத்தைப் பெருக்கிட பெரும் அணைக்கட்டுகள், பேராறுகளைக் கடந்திடப் பெரும், பெரும் பாலங்கள் தோன்றியிருக்க முடியுமா-அறிவும் ஆராய்ச்சியும் சிந்தித்திடும் திறனும், செயல்முறையும், செயல் திறனும், பக்தியைப் பெருக்கி முக்தி தந்திடும் கோபுர வாயிற் படியளவிலேயே, எம்பெருமானார் திருக்கோயில்களின் அருட்சுவர்களுக்கு இடையிலேயே அடங்கிவிட்டிருந்தால், அடக்கப்பட்டிமிருந்தால்!

தரம் கெட்டுவிடும், தரம் கெட்டுவிடும் என்று கூறிக் கூறி விடாப்பிடியாக இன்றைய புத்தக வித்தகர்கள், இலக்கிய கர்த்தாக்கள், ஏடெழுதிகள், எண்ணத்தை எழுத்துருவில் வடித்துத் தருவோர், கவிகள், கலைஞர்கள், காவிய கர்த்தர்கள், கட்டுரையாளர்கள், கதாசிரியர்கள் ஆகிய எல்லோரும் பழைய இலக்கியங்களுக்கு விளக்க உரைகள் தந்திடுவதிலும், பழைமையிலேயே புதுமை கண்டு பூரிப்பதிலும், பூத்துவரும் புதுயுகக் கருத்துக்களை பழைமைக்கு புத்துயிரளிப்பதிலுமே தங்கள் காலத்தையும், கருத்தையும், நேரத்தையும், நினைப்பையும், நடப்பகுதையும் செலவிடுகின்றனர்.

உயர்ந்த இலக்கியங்கள், உத்தம இலக்கியங்கள், சிறந்த இலக்கணங்கள், என்பவையெல்லாம் எம்பெருமானைப் பற்றியேதான் இருந்திடவேண்டுமா? ஆண்டவன் அடியார்களைப் பற்றிய புராணங்களாகவே, புண்ணியத்தைப் போதித்திடும் பக்திரசப் பாடல்களாகவே பழைமையை நிலைநாட்டிடும் பண்பு படைத்தவைகளாகவே விளங்கிடத்தான் வேண்டுமா இன்றும், இன்றைய சூழ்நிலையிலும்?

பழைமைக்கும் புதுமைக்கும் உள்ள வேறுபாட்டை, மாறுபட்ட தன்மையை ஏன், சில நேரங்களில் முற்றிலும் முரண்பட்ட தன்மையையும் காண முடிகிறதே!

எடுத்துக்காட்டாக பண்டைய போர்முறையையும் இன்றைய போர் முறையையும், பண்டைய பாதுகாப்பு முறையையும் தற்காலத் தற்காப்பு முறையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பழைமைக்கும் புதுமைக்கும் உள்ள மாற்றம், மகத்தான மாறுதல், தெளிவாகத் தெரியும்.

படை! படை என்றதும் யானை, குதிரை, தேர், காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன!

பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து கோட்டை கொத்தளங்களோடு கூடிய நாட்டையும் கோட்டையைச் சுற்றி மதிலரண்களும், அதைச்சுற்றி அகண்ட, ஆழமான அகழிகளையும், அந்த அகழிகளைத் தாண்ட முடியாது நிறுத்திட, தடுத்திட, வல்லமைமிக்க முதலைகளையும் கொண்டு வாழ்ந்திருந்த தமிழ் வேந்தர்களைப் பற்றிய வரலாறுகளைக் காண்கிறோம்.

கலிங்கத்துப் பரணியை விட முன்னாள் போர் முறையை, போர்த் திறமையைக் கண்டு களித்திட வேறு நூல்களும் வேண்டுமா? வேண்டியதில்லையே!

நான் படித்த ஒரு பழந்தமிழ் ஏட்டிலே, படித்தது மிக நன்றாக நினைவிலிருக்கிறது. நான் படிப்பது குறைவு, குறைந்த அளவாகவும் இருக்கலாம். ஆனால் படிப்பது குறைந்தாலும் படித்ததை மறப்பது கடினம், மிகமிகக் கடினம். அந்தத் தமிழ் ஏட்டிலே மிகச்சிறந்த தற்காப்புக் கருவியை தமிழ் மன்னன் கையாண்டதைக் கண்டுகளித்தேன்.

கோட்டை மதில்களிலே மதில்களில் ஏறி, மதில்களைக் கடக்கத் துணிந்திடும் எதிரிப் படையைத் தடுக்கத் தானாக இயங்கிடும் பொறியை அமைத்திருந்தான் அத்தமிழ் மன்னன், தமிழ் வேந்தன். எதிரி மதிலேறியதும் அவனது நெஞ்சையிறுக்கிக் கொன்றிடும் திறன் படைத்த பொறி, அந்தப் பொறி! குரங்குப் பொறி என்று அந்தப் பொறி அழைக்கப்பட்டதாம்!

அந்த இலக்கியம் தோன்றிய காலத்தையும் அதன் தொன்மையையும் எண்ணிப் பார்த்திடும் நேரத்திலே அந்தக் காலத்தின் போர்த் தரம் மிக மிக முன்னேறியிருந்தது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

தேசிங்கு ராஜன் கோட்டையும் அதன் பாதுகாப்பும் அதிலே அமைக்கப்பட்டுள்ள வழுக்குப் பாறைகள் பற்றிய செய்தியும், சரித்திரச் சான்றும் அந்தக் காலத்திய அதன் தரத்தைப் பற்றிய மதிப்பையும், மரியாதையையும் நினைத்தால் நம் நெஞ்சம் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்திட வில்லையா?

மேற்குறிப்பிட்ட போர்முறைகள் தவறானவை, தரமற்றவை என்று கூறிட நான் எண்ண வில்லை. ஆனால், அவை கையாளப்பட்ட காலத்தையும், நேரத்தையும் நினைவில் நிறுத்தியேதான் அவற்றைப் பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்று தான் கூற விரும்புகிறேன்.

அந்தக் காலத்திற்கேற்ற முறையில், அவை மிகவும் சிறந்தவை, தரமானவை என்பதை எவரும் மறுக்க முடியாது என்பது உண்மைதான். அதற்காக, அந்த முறையே இன்னும் தேவை, அவைகளே போர் முறைகள், போர்ச்சாதனங்கள் என்று இன்றும் கையாண்டால், நாட்டு நிலைமை, தற்காப்பு என்ன ஆகும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்!

பண்டைய முறையிலே தேவையானவற்றைத் தெரிந்து எடுத்துப் போற்றத் தவறக்கூடாது; அப்படியே தேவையற்றவற்றைத் தள்ளிடவும் தயங்கிடக் கூடாது!

அந்த நாளிலே, ஒரு சில மன்னர்கள், யாக யோகாதிகளிலே பெரிதும் நம்பிக்கை வைத்துப் பகைவரை ஒழித்திடப் பெரிய பெரிய யாகங்களைச் செய்து, ஓமகுண்டங்களை வளர்த்தாகக் கூடச் சில ஏடுகள் கூறுகின்றன.

பழைய முறை என்று, இந்தக் காலத்தில், யாகம் செய்து ஓமகுண்டத்திலே நெருப்பை வளர்த்து, தீச்சுழலை எழுப்பினால் தீயின் ஒளி தரும் வெளிச்சத்தைக் கண்டு, விமானத்திலே சுற்றும் வெளி நாட்டான் சுலபமாக, குண்டு வீசிடத்தானே யாகமும் யோகமும் பயன்படும்?

இன்று நீராவிக் கப்பல், நீர்முழுகிக் கப்பல் என்று பலவகைக் கப்பல்களில் கடல் கடந்து சென்று வாணிபம் புரிகிறோம். மோட்டார், இரயில், ஆகாயவிமானம் போன்ற பிரயாண சாதனங்களில் பயணம் செய்கிறோம்.

பழங்கால பிரயாண சாதனங்களல்ல இவை, என்று நவீன பயண சாதனங்களைத் துறந்து, ஒதுக்கிவிட்டு, மீண்டும் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு, கால்நடையாகவும், கட்டை வண்டியிலும் எறியுமே, பிரயாணத்தைத் தொடங்க வேண்டும் என்று கூறும் பழைமை விரும்பியைக் காண முடியுமா, இன்று, இந்த நாட்டில்? காணவே முடியாதல்லவா!

இதைப் போலவேதான், இலக்கியத்துறையிலும் காலத்திற்கேற்ற கருத்துக்கள் புகுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறேன். தவறா? முறையல்லவா? சிந்தித்துக் கூறுங்கள், பதில்!

இலக்கியங்கள் இன்று பெரும்பாலும் போதிக்கும் முதற்கருத்து, முக்கியக் கருத்து ‘விதி’ என்ற தத்துவமாகும்!

இந்த ‘விதி’ என்ற தத்துவம், இன்று மட்டுமல்ல, என்றுமே மனிதனுக்கு மகத்தான தீங்கிழைக்கும், எக்காலமும் கேடு தரும் தத்துவமாகும்.

விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிகக் கேடு, தீங்கு!

‘ஏனப்பா, ஏக்கம் என்ன வருத்தம் உனக்கு?’ என்று கேட்டவுடன் ஏக்கத்திற்கு விளக்கந்தராது, வருத்தத்தின் காரணத்தை விளக்கிடாது ஏன் உணரவும், உணராது, “எல்லாம் என் தலைவிதி” என்று தலையிலே அடித்துக்கொள்கிறானே மனிதன், அந்த நிலைமை மாறி, மனிதன் தனது வருத்தத்திற்கும், வாட்டத்திற்கும் தனது உழைப்பும், ஊக்கமும், அதற்கான சூழ்நிலையுமே காரணம் என்ற சூழ்நிலையை, தன்னைச் சுற்றிலுமுள்ள நிலையை நன்கு உணர்ந்து, அலசிப் பார்த்து, ஆராய்ந்து, தெளிந்து, சூழ்நிலைக்கேற்ப நடக்கவும், தனக்கும், பிறருக்கும், சமுதாயத்திற்கும் நன்மை தரும் சூழ்நிலையை உண்டாக்கும் சூழ்நிலையின் தன்மையறிந்தவனாக மாற வேண்டாமா?

விதி, விதி என்று தனது மதியை மதிக்காது, மந்தமதி படைத்தவனாகவே தமிழன் வாழத்தான் வேண்டுமா? ஆண்டவன் விட்ட வழி என்று கிடந்து, தன்னபிக்கையற்ற தமிழனாகவே, தாழ்ந்த தமிழனாகவே தமிழன் வாழக் கூடாது, இனியும்!

தமிழரைத் தட்டியெழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை! தன்னம்பிக்கை யூட்டும் ஏடுகளே தேவை! மதியைப் பெருக்கி, விதியைத் தொலைத்திடும் விளக்க நூல்கள் ஏராளமாகத் தேவை!
மகேஸ்வரன் புகழ்பாடி, மதத்தை நம்பி, மதி கெட்ட மனிதனாக வாழவிடும் மத இலக்கியங்கள் தேவையே இல்லை. குலத்துக்கொரு நீதி வகுத்து, மனிதனது, சுயமரியாதையைப் போக்கிடும் புராணங்கள், இலக்கிய வரிசையிலே, இருத்தல் கூடவே கூடாது!

“குலத்துக்கொரு நீதி” ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு வித, தனித்தனி தன்மையுள்ள, தராதரமுள்ள, பாரபட்சமான, நீதியைப் பகவான் லீலையென்றும், ஆண்டவனின் திருவிளையாடல்கள் என்றும் போற்றிப் புகழும் நிலையிலுள்ள இத்தகைய ஏடுகளுக்குத் தகாத ஏடுகள், தேவையற்ற நூல்கள் என்று தூரத் தூக்கியெறிந்து விடத்தான் வேண்டும்!

குலத்துக்கொரு நீதியா? அதுவும் ஆண்டவன் பேரிலா? என்று யாரும் ஆத்திரமோ அன்றி ஆச்சரியமோ கொண்டிட வேண்டாம். கற்பனையல்ல. நான் கட்டிவிட்ட கட்டுக்கதையுமல்ல; புராணங்கள், திருவிளையாடல்கள் என்று போற்றப்படும் புண்ணிய (!) ஏடுகளில் கூறப்படுவதைத்தான், நான் எடுத்துக் காட்டிக் கேட்கிறேன், இவை தேவைதானா என்று! கொஞ்சம் நிதானத்தோடு நான் கூறுவதைக் கேட்டு சென்று புராணங்களையும் புரட்டிப் பார்த்து சரியா, தவறா என்று சிந்தித்துப் பின் முடிவு கட்டுங்கள்!