அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சூழ்நிலை
4

இதோ, குலத்திற்கொரு நீதி, ஆண்டவனே கையாண்டதாகப் புகலும் புண்ணிய(!) வரலாறுகளை காட்டுகிறேன், பாருங்கள்!

பெரிய புராணத்திலே ஒரு நாயனார் புராணம். காரைக்காலம்மையார் புராணத்தைக் குறிப்பிடுகிறேன்!

காரைக்காலம்மையார் என்ற அம்மையார் சிவனார் மீது சிறந்த பக்தி கொண்டவர். காரைக்காலம்மையார் திருக்கைலாயத்தை யடைய விரும்பிப் புறப்பட்டார். கைலாயத்தையுடைய அவர் நடந்து நடந்து சலித்து, பெண் உருவை விட்டுப் பேயாகி, பிசாசாக உருமாறி, நடக்கச் சக்தியுற்று, உருண்டுருண்டு சென்றதனால் உடலும் தேய்ந்து, தேய்ந்து உருக்குலைந்து, அம்மையப்பனை, ஆலவாயப்பனை நோக்கி அபயக் குரல் கொடுத்தாராம்.

இந்த நேரத்திலே, பெண் வடிவு மாறி, பேயாகித் திரிந்து உருண்டுருண்டு, உடல் தேய்ந்த நிலையில் எம்பெருமான் தோன்றி, ‘அம்மே அம்மே’ என்று அன்பொழுக அழைத்து காரைக்காலம்மையை ஆட்கொண்டாராம்!

இது மட்டுமல்ல இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளைக் காண வேண்டும் இதே பெரிய புராணத்தில், வாருங்கள் செல்வோம்.

கண்ணப்பர், ஆரம்பத்தில் அவருக்கு, இந்தத் திரு நாமம் கிடையாது! திண்ணன் என்பது அவருடைய இயற்பெயர். அவர், காட்டிலே வசித்த வேட குலத்தவர். அவர் தினமும் சிவனைப் போற்றி வந்தாராம்.

ஒருநாள் சிவனாரின் ஒரு கண்ணிலே செந்நீர், குருதி! இரத்தம் வடிந்ததாம். அதைக்கண்டு மனம் மிக நொந்து என்ன செய்தும் இரத்தம் நிற்காத காரணத்தினால், தம்முடைய ஒரு கண்ணையே, அம்பினால் பெயர்த் தெடுத்து, செந்நீர் வடியும், குருதி கொட்டும் கடவுளின் கண்ணிலே அப்ப, குருதி நின்றதாம்!

மீண்டும் மற்றொரு கண்ணில், செந்நீர் வடியத் தொடங்கியதாம், என்ன செய்தார், இந்த அடியார், சிவத்தொண்டர்? தனது மற்றொரு கண்ணையும் பெயர்த்து, ஆண்டவனின் மற்றொரு கண்ணிலும் அப்பி, குருதி வெள்ளத்தை நிறுத்தத் துடித்தார். அடையாளத்திற்காகத் தமது பாதத்தைக் குருதி வடிவம் கண்ணின் மேல் வைத்துக்கொண்டு தனது மற்ற கண்ணை, இருக்கின்ற ஒரே கண்ணைப் பெயர்த்தாராம், அந்த அடியார்.

அப்போது சிவனார் தோன்றி, ‘நில்லு, கண்ணப்ப, நில்லு கண்ணப்ப!’ என்று கூறித்தடுத்தாட் கொண்டு அவருடைய கண்களைத் திரும்பவும் கொடுத்துதவிச் சென்றாராம்.

இப்போது குறிப்பிட்ட இரண்டு நிகழ்ச்சிகளையும் நினைவில் நிறுத்துங்கள்; நன்றாக.

இதோ மற்றொரு காட்சி, நிகழ்ச்சி, அதே பெரிய புராணத்திலிருந்து!

சம்பந்தர்-நால்வருள் ஒருவர்; பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர். பாலப்பருவத்தில், சிறு குழந்தையாக இருந்தபோது, அவருடைய தகப்பனார், குழந்தையைக் குளக்கரையில் விட்டு விட்டு, நீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தாராம்!

நீரில் மூழ்கியவர், தலையை மீண்டும் வெளியே தூக்குவதற்குள், அந்தச் சிறிய இடைக்காலத்தில், குழந்தை, தந்தையைக் காணவில்லை என்று எண்ணிப் பயந்து அழத் தொடங்கி விட்டதாம்!

குழந்தையின் அழுகுரல், உமையொருபாகனார் காதில் விழ, அவர் அம்மையோடு, உண்ணாமுலையாரோடு அங்கே தோன்றி, பொற்கிண்ணத்திலே, உமையின் முலைப்பாலை ஊட்டினாராம், அழுது கொண்டிருந்த அச்சிறுவனுக்கு, சம்பந்தருக்கு.

உமையின் அருட்பாலை உண்ட சம்பந்தர், அருட் செல்வராக எல்லா முணர்ந்தவராக மாறிவிட்டார் என்று மேலும் தொடர்கிறது, சம்பந்தர் வரலாறு!

மூன்று காட்சிகள், ஒரு புராத்திலிருந்து பெரிய புராணம் என்ற ஏட்டிலிருந்து! மூன்று அடியார்களின் அருட்காதை! மூன்று நாயன்மார்களைச் சிவபெருமான் ஆட்கொண்ட வரலாறு, வழி, வகை முறை! மேலே குறிப்பிடப்பட்டவை! எடுத்துக்காட்டப் பெற்றவை! என்னால் கூறப்பட்டவை புராணத்திலிருந்து.

இந்த மூன்று நாயன்மார்களில் முதல் இரண்டு நாயனார்களைச் சிவனார் ஆட்கொண்ட முறையையும், மூன்றாவது நாயனாரை ஆட்கொண்ட முறையையும் எண்ணிப் பாருங்கள்.
காரைக்காலம்மையாருக்குப் பேயாகி, உருக்குலைந்து, உருண்ட பின்னர்தான் ‘அம்மே, அம்மே’ என்ற அருள்வாக்கு பிறந்தது. அம்மையப்பரிடமிருந்து! கண்ணப்பருக்கோ, கண்களைப் பெயர்த்து அப்பின நேரத்திலே தான் ‘நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப’ என்ற கனிவுமொழி கடவுளருள் வாக்கு, கிட்டியது, கிடைத்தது!

தந்தையைக் காணவில்லையே என்று தன் போக்கிலே அழுது கொண்டிருந்த சம்பந்தருக்குச் சடுதியில் சிவனருள் கிடைத்துவிட்டது. உடனே, உமையின் முலைப்பாலையுண்டதால்!
கடும் சோதனைக்குப் பிறகு, காரைக்காலம்மைக்கும், கண்ணப்பருக்கும் கடவுளருள்! ஆனால் சம்பந்தருக்கோ சர்வ சாதாரண முறையில் அழுதவுடன் தன்னிச்சையாக, தந்தையைக் காணவில்லையே என்று அழுதவுடன் அம்மையின் முலைப்பால்! இரண்டிற்குமிடையே எவ்வளவு வேறுபாடு! வேதனை நிறைந்த வேறுபாடு! என்ன காரணத்தால்! சிந்திக்க வேண்டாமா, இது பற்றி!
சம்பந்தர், பார்ப்பனர் மற்ற இருவரும் பார்ர்பனரல்லாதார் என்ற காரணந்தானே! வேறென்ன இதற்குக் காரணம்?

பெரியபுராணத்திலுள்ள எந்த நாயனாரை எடுத்துப் பார்த்தாலும், இந்த நிலை, இரண்டு வித அருள்பாலிக்கும் தன்மைகள், பார்ப்பன பக்தருக்கு ஒருவிதம், பார்ப்பனரல்லாத பக்தருக்கு வேறுவிதம் என்ற முறையில்தானே காணப்படுகிறது! எடுத்துப்பாருங்கள், புரட்டுங்கள் புண்ணிய புராணத்தை, பெரிய புராணத்தை! பின்னர் கூறுங்கள், நான் கூறுவது உண்மையா, அல்லவா என்று? உண்மைதானே, மறுக்க முடிகிறதா பாருங்கள்! முடியாது, மறுக்கவே முடியவில்லை என்ற நிலைதானே!

இதுமட்டுமல்ல, ஆண்டவனின் திருவிளையாடல்கள் எதை எடுத்துக் கொண்டாலும், குலத்துக் கொரு நீதி என்ற முறையிலேதான், பார்ப்பனருக்கு ஒருமுறை, மற்றவருக்கு வேறு முறை என்ற ஒழுங்கு முறையேதான் கையாளப்பட்டிருக்கிறது. ஆண்டவனால் கூட, என்பதைத்தான் காண முடிகிறது! சந்தேகம் வேண்டாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு திருவிளையாடற் புராணத்திலிருந்து! மாபாதகந் தீர்த்த படலம், இதோ பாருங்கள்!

ஒரு பக்தன், காளைப் பருவத்தையடைந்தான். கட்டழகியான தன் தாயையே புணர்ந்தான். தந்தை இருப்பதால்தானே தயக்கம் ஏற்படுகிறது என்று தத்துவம் பேசித் தந்தையையும் கொன்று விட்டான். பின்னர் மருள் கொண்ட காரணத்தால் ஊரைவிட்டு வெளியேறிச் சுற்றி, இறுதியாக மதுரை வந்தடைந்தான்.

பாவந் தீர வேண்டி, பரமனை வேண்டினான், அந்தப் பாதகன் அருள் சுரந்திட வேண்டினார், ஆலவாயப்பனை நோக்கி, அந்தப் பரமசண்டாளன்; தாயைப் புணர்ந்து தகப்பனையும் கொன்ற அந்த அதர்மன்!

“பாதகா! பிடி சாபம், சண்டாளனே! நரகத்திற்குச் செல்ல கடவாய், செக்கிழு, செந்தீயைத் தழுவு!” என்றெல்லாம் கூறியிருப்பார் படு நரகில் தள்ளியிருப்பார், ஆலவாயப்பன், அந்தச் சண்டாளனை, என்று தானே எண்ணுகிறீர்கள், எண்ண முடியும், நீங்கள்!

ஆலவயாப்பன், அருள் சுரந்த விதம் வேறு! பாவியைப் பார்த்தார், ‘அப்பா, பொற்றாமரைக்குளத்தில் மூழ்கியெழு! பசுவுக்கு அறுகம்புல்லைப் போடு! கோயிலை மும்முறை வலம் வருக! உன் பாபந் தீரும், மோட்சம் கிட்டும்!’ என்று திருவாய் மலர்ந்தார்.

மாபாதகஞ் செய்தவனுக்கு மன்னிப்பு! மோட்சம்! இது ஆண்டவன் திருவிளையாடல், மாபாதகந் தீர்த்திட்ட திருவிளையாடல்!

திருவிளையாடற் புராணத்திலே உள்ளது இந்த திருவிளையாடல், மகாபாதகந் தீர்த்த படலம் இது!
இந்தப் பாவி, ஒரு பார்ப்பனர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது! மாபாதகஞ் செய்தவனுக்கும், அருள் வழியில் இவ்வளவு ஓரவஞ்சனை இருப்பது, ஆண்டவனே செய்வது-நீதியா? என்று கேட்பது கூடாதா? தவறா? எப்படித் தவறு?

‘குலத்துக்கொரு நீதி’ ஆண்டவனே ஒப்பிய நீதி; கடவுளே கடைப்பிடித்த நீதி என்று விளக்கிடும் ஏடுகள் தேவைதானா? ‘குலத்துக்கொரு நீதி’ போதனை தகுமா? முறைதானா? இந்தக் காலத்திலும், குலத்துக்கொரு நீதியா?

கடவுளைக் கேட்டதுண்டா, யாராவது, எந்தப் பக்தராவது, இது பற்றி, இத்தகைய, ‘குலத்துககொரு நீதி’ முறைப்பற்றி?

ஆண்டவன் எனக்கு வேண்டுமானால் காட்சி தரமாட்டான். காட்சியளிக்கவும் மறுக்கலாம்! பாவி நான், பக்தர்கள் அகராதிப்படி! ஆனால் பக்தர்கள் தம் முன் தோன்றிடும் ஆண்டவனைக் கேட்டிடத் தவறலாமா, ஏன் இந்த ஓரவஞ்சனை என்று?

தப்பித் தவறி ஆண்டவனே என் முன்னே தோன்றிவிட்டால் நான் நிச்சயமாக அவரைக் கேட்டிடத் தவறமாட்டேன்! கேட்டே தீருவேன். ‘அய்யா, ஆண்டவரே! அனைத்துயிரையும், படைத்துக் காத்தழிக்கும் எம்பெருமான் என்று பலராலும் போற்றப்படும் பெம்மானே! உம் அடியார்க்குத் தாங்கள் அருள் சுரக்கும் முறையிலே ஏன் இந்தப் பேதாபேதம், பாகுபாடு? பார்ப்பனருக்குச் சுலபமாக உமது கடாட்சம், கருணை கிட்டுகிறது! ஆனால் மற்றர்கள் பலப்பல துன்பங்களையும் கடும் சோதனைளையும் கண்ட பின்னரே, தங்கள் இன்சொல்லுக்கும், அருள்மொழிக்கும் ஆளாவது ஏனோ? “குலத்துக்கொருநீதி” தாங்களே காட்டுவது, தருமந்தானா? என்று கேட்டிடத்தான் போகிறேன் ஆண்டவனைக் கண்டால்!

ஆண்டவன் தோன்ற மாட்டார்! ஆகவே, ஆண்டவனுக்காகப் பரிந்து பேசிடும் அடியார்களை, அறநூல் வல்லுநர்களைக் கேட்கிறேன்! ‘குலத்துககொரு நீதி’ வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் காணப்படுவது நல்லதா? தேவைதானா?