அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சூழ்நிலை
5

பக்தர் வரிசையிலே கூட இந்தப்பாதுபாடு, குலத்துக்கொரு நீதி, காணப்படுகிறதே! பக்தர்களிலுமா இரு பிரிவுகள் மேல்-கீழ், உயர்வு-தாழ்வு என“ற மனப்பான்மை? என்று கேட்கிறேன்.

ஒரு சிலர், அதுவும் குறிப்பாகப் பார்ப்பன பக்தர்கள் மட்டும் எலக்ட்ரிக் லிஃப்ட் (ணிறீமீநீNக்ஷீவீநீ லிவீயீN) ஏறிச் செல்லும் பக்தர்களாகவும், பார்ப்பனரல்லாதார் இரும்புச் சுழல் படிக்கட்டு ஏறிச் செல்லும் பக்தர்களாகவும் இருப்பது, இலக்கியங்களிலும், புண்ணிய கதைகளிலும் காணப்படுவது மனிதர்கள் பிரிந்து வாழ்ந்திடும் சூழ்நிலையைத்தானே ஏற்படுத்தும், ஏற்படுத்தியுமுள்ளது.

எலக்ட்ரிக் லிஃப்ட் (மின்சாரத் தூக்கி-ணிறீமீநீNக்ஷீவீநீ லிவீயீN ) சில உயர்ந்த மிகப் பெரிய மாடிக் கட்டிடங்களில் உயரே செல்லவும் கீழே வரவும் அமைக்கப்பட்டிருக்கின்றது! இந்த மின்சாரத் தூக்கியில் ஏறவும், இறங்கவும் ஒரு சிலருக்கு மட்டுமே, அனுமதி உண்டு! மற்றவர் மாடிக்குச் செல்ல, படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். சில இடங்களில் படிக்கட்டுகள் இரும்புச் சுழல் படிக்கட்டாக அமைந்திருக்கும். இரும்புச்சுழல் படிக்கட்டில், சுழன்று அதாவது சுற்றிச் சுற்றிச் செல்லும் படிகளில் ஏறிடுவதும், இறங்கிடுவதும் கடினமான காரியம்; கால்கள் கடுக்கும். இந்த முறையிலே பலர் செல்ல வேண்டிய நிலை, மாடிக்கு!

சுலபமான வழியில், சுகமாகப் பரமன் அருள்பெறும் பார்ப்பன பக்தர்களாகவும், எலக்ட்ரிக் லிப்ட் பக்தர்களாகாவும் மற்றவர் இரும்புச் சுழல் படிக்கட்டு பக்தர்களாகவும் காணப்படுகின்றனர். புண்ணிய புராணங்களில்! உயர்ந்த குலத்துக்கு ஒரு நீதி தாழ்ந்த குலத்துக்கு வேறு நீதி! மாற்றப்பட்ட வேண்டாமா? சிந்தியுங்கள் நன்றாக!

இலக்கியங்கள் இத்தகை விதி, வேலுலக வாழ்வு, குலத்துக்கொரு நீதி, என்ற மூன்று தத்துவங்களைப் போற்றும் முறையிலேயே, போதித்திடும் அளவுடனேயே அமைந்துள்ளனவே! இந்த மூன்று கருத்துகளும் மக்களை நல்வழிப் படுத்திடப் பயன்படுகின்றனவா? மனிதன் மனிதனாக வாழ்ந்திடும் சூழ்நிலையை உண்டாக்கிடத்தான் பயன்படுகின்றனவா? கூறுங்கள்!
மனிதன் தனது சூழ்நிலைக் கேற்பத்தான் வாழ்கிறான், வாழவும் முடிகிறது! மறுக்க முடியாத உண்மை இது!

சூழ்நிலை! சுற்றுச்சார்பு சூழ்ந்துள்ள நிலைமை, சுற்றியுள்ள தன்மை, பரவிக்கிடக்கும் பண்பு, பழக்க வழக்கம், பகுத்துணரும் அறிவு, பாடுபடும் முறை, பலனடைந்திடும் அளவு, வாழ்க்கை வசதி, வளம், ஆகிய பலப்பல நிலைமைகளை ஒட்டித்தான் மனிதன் வாழ்கிறான். ‘சூழ்நிலை’க்குக் கட்டுப்பட்டே மனித வாழ்வு நடக்கிறது!

சூழ்நிலை மனிதனை மனிதனாக்குகிறது; மனிதத்தன்மையற்ற மிருகமாகவுமாக்குகிறது! மாபாவியாகவும் தாழ்த்துகிறது! மனிதன் பொய்பேசுவது-புரட்டுகள் செய்திடுவதும் அஞ்சுவதும், அக்கிரமங்கள் செய்வதும் ஆள்வதும்-ஆளப்படுவதும், வாழ்வதும் வீழ்வதும், உயர்வதும் தாழ்வதும் சூழ்நிலையைப் பொறுத்துத்தான் இருக்கின்றன.

தனி மனிதன் ‘தரம்’ உயர்ந்தால் போதும்; தனிமனிதன் ‘பண்பு’ வளர்க்கப்பட வேண்டும். தனி மனிதன் தரம், பண்பு வளர, உயர உயர, சமுதாயத்தின் தரமும் பண்பும் தானே வளரும், உயரும் என்றெல்லாம் பேசப்படுவது தவறு, சரியல்ல! நடைமுறைக்கு ஒத்து வராத தத்துவம், அது!

தனி மனிதனது தரம் மட்டும், பண்புமட்டும் வளர்ந்தால் போதுமா? உயர்ந்தால் முடிந்துவிட்டதா? சமுதாய வளர்ச்சி, சமுதாயச் சிறப்பு தோன்றிட முடியுமா-தனி மனிதனது சிறப்பினால், உயர்வினால், பண்பட்ட தன்மையால் மட்டுமே?

சிந்திக்க வேண்டும்! தனி மனிதன் ‘தரம்’ ஏன் குறைகிறது? தனி மனிதன் ஏன் பண்பற்றவனாகிறான்? எந்தக் காரணத்தால் தனி மனிதன் திருடுகிறான்? பொய் பேசுவது ஏன்? புரட்டுகள் செய்து எதற்காக கலகங்கள் நடப்பது எந்த நோக்கத்தோடு? என்றெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்! நமக்கு நாமே கேள்விகள் கேட்டு, விடைகளைக் காணவேண்டும்.

மனிதனது நிலையை, அவனது தன்மையை, அவனது வாழ்க்கை முறையை, ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்தக் கேள்விகட்கெல்லாம் விடை, நல்ல விடை, நிலைமையைச் சரிவர விளக்கிடும் விடை கிடைக்கும்; காணவும் முடியும்.

தனி மனிதரில் எத்தனை பேர் தரமும் பண்பும் படைத்தவர்களைக் கண்டோம், இன்றுவரை!

தாயுமானவர் ‘தரம்’ குறைந்தவரா? பட்டினத்தடிகள் ‘பண்பு’ படைத்தவரல்லவா? இராமலிங்க அடிகள் இருந்தநிலை, தரமும் பண்பும் படைத்தது தானே! இராமகிருஷ்ணர், விவேகாந்தர், உத்தமர் காந்தியார் போன்றாருக்கு, தனி மனிதன் என்ற அளவிலே தரமும் பண்பும் இல்லாமலா போய்விட்டன? இருந்தனவே! ஆனால்...? சமுதாயம் சீர்பட்டதா? இல்லையே! ஏன்? எதனால்?

தனி மனிதரில் தரமும் பண்பும் மிக்க முனிபுங்கவர், தவசிரேஷ்டர்கள், அவதார புருடர்கள், அருளாளர்கள், அறநெறி யுணர்ந்தோர், அன்புவழி நடந்தோர், வாழ்ந்தோர், பலரைக் கண்டோம், கேட்டோம், பார்த்தோம், படித்தோம், பழகினோம் போற்றினோம், புகழ்ந்தோம்-அத்துடன் முடிந்தது!
தனி மனிதனைப் போற்றி, மனிதனைவிட மேம்பட்டவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அவதார புருடர்கள், ஆண்டவன் தூதர் என்று கொண்டு போய் நிறுத்தி வாழ்த்தி வணங்குகினோம் வேறென்ன?

தரமும் பண்பும் மிக்கார், மனிதரின் மாணிக்கம், ஞானிகள், ஜீவன் முக்தர்கள், மகாத்மாக்கள், மதபோதகர்கள், ஆழ்வார்கள், அடியார்கள், அவதார புருடர்கள் என்ற முறையில்தானே வைக்கப்படுகிறார்கள், போற்றப்படுகிறார்கள்?

அவர்களைப் போற்றி, புகழ் பாடிப்பாடி மகிழ்வதுடன் நின்று விடுகிறதே, மற்றவரது எண்ணம், எழுச்சி, நினைப்பு, நடப்பு எல்லாம் இதுவே போதுமா? இதுதானா தனி மனிதனது தரமும் பண்பும் வளர்ந்ததன், உயர்ந்ததன் பயன், பலன்?

சமுதாய முன்னேற்றம் என்பத என்ன? இத்தகை நிகழ்ச்சிகளே தானா? எண்ண‘ப் பாருங்கள்!

எத்தனை யெத்தனையோ மகான்களும், மகாத்மாக்களும், அடியார்களும், ஆழ்வார்களும், ஆண்டவன் தூதர்களும், ஆண்டவன் அவதார்களும், தோன்றிய பின்னருங்கூட மனிதரது நிலை உயரக் காணோமே! ஏன்? எந்தக் காரணத்தால்? தனி மனிதனது தரமும் பண்பும் அவனவன் சூழ்நிலைக்கேற்ப அமைகிறது என்பதுதானே, உண்மைக் காரணம்!

சூழ்நிலைக் கேற்றபடி மனிதன் உருவாகிறான், உருவாக்கப்படுகிறான், பலப்பல விதங்களிலே என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

சூழ்நிலை செய்திடும், மனநிலைகளை, மாற்றங்களை, ஆக்கங்களை, அழிவுகளை, நன்மை தீமைகளைக் காண வேண்டும் கண்டு சூழ்நிலை சரிவர, அமைய வேண்டியதன் அவசியத்தை, அவசரத்தை உணர்ந்தாக வேண்டும்-உணர்ந்து ஆவன செய்வதே தீர வேண்டும்!

கந்தன் ஒரு தொழிலாளி. கட்டை வெட்டுவான் ஒருநாள் கட்டை வண்டியிழுப்பான் மற்றொரு நாள்; மூட்டை தூக்குவான் வேறோர் நாள். கூலி வேலை செய்வதே வாழ்க்கை அவனுக்கு.

கிடைத்த கூலியைக் கொண்டு, உண்ண முடிந்த அளவு உண்டு, ஏதோ கந்தைகளை யுடுத்து, வீதியின் ஓரங்களிலே படுத்துப் புரண்டு உறங்கி அவன் வாழ்கிறான்! அவனிடம் தரமும் பண்பும் தேடினால் உயர்ந்த வாழ்வை, வாழ்வின் இலட்சியத்தைத் துருவிப் பார்த்தால் கிடைக்குமா? எண்ணிட, தான் ஏன் கூலியாகக் காலந்தள்ள வேண்டும், என்று எண்ணிப் பார்க்க அவனுக்கு நேரமேது? நிம்மதியற்ற, நிலையுமற்ற வாழ்க்கை, வறண்ட வாழ்க்கை வாழும் அவனிடம் சென்று தத்துவம் பேசினால், சிவஞானபோத உபதேசம் செய்தால் என்ன சொல்லுவான்? முத்தமிழில் பேசமாட்டான்; தலையிலடித்துக் கொள்வான். தலைவிதியை நொந்து கொள்வான். வேறென்ன செய்ய முடியும், அவனால்? தலைவிதி, தன்னை தாழ்த்திவிட்டது என்று தனக்குத்தானே சமாதானம் செய்து வாழ்கிறான். ‘விதி’ என் நம்பிக்கை அவனை வாழவிடவில்லை. வாழ்க்கையின் முன்னேற்ற எண்ணம் அவனிடம் தோன்றவில்லை! இது அவனது சூழ்நிலை. அர்த்தமற்ற, அறியாமை நிலை?

கெட்டவன், பொய்யன், புரட்டன், திருடன், சோம“பேறி, ஏய்ப்பவன், எத்தன், காமுகன் என்று வாழ்வது யாருக்குத்தான் பிடிக்கும்?

கெட்டவனாக வேண்டும், பொய்யேதான் பேசவேண்டும், சோம்பித்தான் திரிய வேண்டும், ஏய்த்துப் பிழைப்பதே நல்லது, எத்தன் என்பது புகழ்தரும் வாழ்வு, காமுகன் என்றால் போற்றுவர் யாவரும், கள்ளன் என்றால் கண்ணியம் என்று எண்ணி, தீர்மானம் செய்து, மனதார விரும்பியா இத்தகைய செயல்களில் மனிதன் ஈடுபடுகிறான்? அவனுக்குப் பெருமை தரும் வழிகள் என்றா மதித்துச் செய்கிறான் தீச்செயல்கலையெல்லாம்?

வாழ வழி இதுதான் என்று எப்போது எண்ணி, இறங்குகிறான், எத்தனாக, ஏய்ப்பவனாக! கள்ளத்தனம் செய்திடும் எண்ணம், நினைப்பு, தீர்மானம் தோன்றிடுவது ஏன்? எப்போது, எந்த நிலையில்? முறையற்ற செயல், தகாதவேலை, கீழான காரியம், இழிமுறை என்பதையறிந்தும் ஏன் ஈடுபடுகிறான், இத்தகைய முறைகளில்? என்றெல்லாம் எண்ணியெண்ணி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் மனிதனது தன்மை, தரம், பண்பு தகாத வழியில் செல்லும் நிலை, நேரம், காலம், காரணம், துணிவு, தீர்மானம் சுருங்கக் கூறுமிடத்துச் சூழ்நிலை விளக்கும்-புரியும்-தெரியும்-முழு நிலையில், உருவில்!

இல்லாததால் திருடுகிறான். இல்லாதவன் திருடுகிறான். பட்டினியால் பிறர் பொருளை அபகரிக்கிறான் என்று கூறிவிடுவது; சுலபம், சர்வ சாதாரணமான வார்த்தை! இது மட்டும் போதாது, திருடன் திருடும் காரணத்தைத் தெரிந்து புரிந்து கொள்ள!

இல்லை, வாழ வழி இல்லை. உண்ண வழி இல்லை. ஒரு வேளை சோற்றுக்கும் வழி இல்லை, என்ன உடனே திருடவா துணிகிறான்? இல்லையே, இருக்கவே முடியாதே!

இல்லாதவன் இருப்பவனிடம் வேலை தேடுகிறான்; கேட்கிறான். உழைக்க அவன் தயார்; ஆனால், வேலைதான் கிடைக்கவில்லை. சுற்றிச்சுற்றி யலைகிறான்-சோம்பேறி என்ற பட்டந்தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என்ற நிலை. வீட்டிலோ மனைவி மக்கள் வேறு பட்டினி! வயதான மாதா பிதாவின் நிலை மகா மோசம், வேதனைதரும் காட்சி! நோயாளிக்குழந்தை வேறு.

இவன் ஒருவன் பெறும் ஊதியம் அந்தக் குடும்பத்திற்குப் புதுவாழ்வு-புத்துணர்ச்சி தந்திடும் புதையல்!

இந்த நிலையிலே அவன் அலைந்து அலுத்த ஆயாசத்துடன் வீடு நோக்கித் திரும்புகிறான்! ஏக்கம் ஒரு பக்கம், துக்கம் ஒரு பக்கம் துயர் துடைத்திட வழியில்லையே என்ற துன்பச் சூழல் மற்றோர் பக்கம்-பட்டினிக் குடும்பம், பதைபதைத்து துடித்திடும் துன்பக் காட்சியின் தோற்றம் தோன்றி உண்டாக்கிடும் துன்ப வெள்ளம் மற்றோர் புறம்-என்ற நிலையில், சூழ்நிலையில் அவன் நடக்கிறான், வீடு நோக்கி, அலுத்த ஆயாசத்துடன்.

தன் விதியை நோகிறான். கதியற்ற நிலையை எண்ணியெண்ணிக் கலங்குகிறான், கஷ்டப்படும் குடும்பத்தை நினைத்துக் கண்ணீர் வடிக்கிறான். ‘கடவுளே’ என்று ஏங்குகிறான். கண்டவரிடமெல்லாம் கடன் கேட்கிறான்.