அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சூழ்நிலை
2

காட்டு மிராண்டியாக காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்து, இலைகளையும், தழைகளையும் உடுத்தி, கிடைத்த கிழங்கையும், கீரைகளையும், வேட்டையாடிய மிருகங்களின் பச்சை இறைச்சியையும் புரிந்து வாழ்ந்த நிலையிலிருந்து, மனிதன், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் அமைந்த அழகு நகரங்களைக் கட்டி, பட்டு, பருத்தி, கம்பளி, போன்ற ஆடைகளை அணிந்து, அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு முதலிய அறுசுவை ஆகாரங்களைப் புசித்திடும் இன்றைய நாகரிக நிலைமைக்கு வளர்ந்திருக்கிறான்.

இந்த வளர்ச்சிக்கு, மனிதனிடமுள்ள, மற்ற உயிரினங்களிட மில்லாத பகுத்தறிவு முதற் காரணம், மூல காரணமுமாகும்.

மனிதன் நாகரிக முதிர்ச்சி பெறப்பெற, இயற்கை வளத்தைப் பல வழிகளிலும் தனக்கு உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொண்டே வரத்தலைப்பட்டான்.

கண்ட இடங்களிலே திரிந்து, கிடைத்தவற்றைக் கிடைத்த நேரத்தில் புசித்து, இளை தலைகளை யணிந்து இருட்டிய நேரத்திலே இருக்கின்ற இடமே வீடெனத் தூங்கி வாழ்ந்த ஆரம்ப மனித வாழ்க்கை, இன்று, நாடு, நகரங்களில், அறுசுவை ஆகாரவகைகளோடு அலங்கார ஆடை அணிகள் பூண்டு வாழும் நாகரிக நிலைக்கு உயர்ந்துவிட்டது, படிப்படியாக.

இந்த மாறுதலுக்கு, மனித வாழ்வின் மகத்தான மாறுதலுக்கு, மனிதனிடம் உள்ள அறிவே, பகுத்தறிவே அடிப்படை, ஆதாரம் வழிகாட்டி!

சிந்திக்கத் தொடங்கிய மனிதன், முதல் சிந்தனையாளன், இயற்கை வளத்தை, தனது வாழ்வு வசதியாக அமையும் வகைக்குப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவு, நாகரிக வாழ்வின் ஆரம்பக் கட்டம், முதல் அத்தியாயம்.

உணவைச் சேமித்த வைக்கத் தொடங்கி, மழை, வெயில் இவற்றிலிருந்து பாதுகாப்புடன் வாழ, குகைகளைக் கண்டுபிடித்து, குடிசைகள் கட்டி, வீடுகளை உண்டாக்கி, நாடுகள், நகரங்கள் வரை மனிதன் முன்னேறினான், தனது அறிவைக் கொண்டு.

சிந்திக்கத் தொடங்கிய முதல் சிந்தனையாளன், சுயநலமுள்ளவனாக, தன்னைப் பற்றிய எண்ணத்தை மட்டுமே கொண்டவனாக இருந்து விட்டிருந்தால், இன்றைய உலகம், நாகரிக உலகம் ஏற்பட்டிருக்க முடியாது.

மனிதன், தான் வாழ வேண்டும்; தன்னைப் போலவே, பிறரும் வாழ வேண்டும். மனிதர் எல்லோரும் மனிதராகவே வாழ்ந்திட வேண்டும் என்ற மனப்பான்மைப் கொண்டவனாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், மனித இனம் ஒன்றுபட்டு, நாகரிக வாழ்வு வாழ முடியும்.
நாகரிக வாழ்வு, பலப்பல சாதனங்களை, முன்னேற்ற வழிகளை, முற்போக்கு கருத்துக்களை, நாளுக்கு, நாள் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டே செல்கிறது; மனிதனது பகுத்தறிவு பண்பட்டுக் கொண்டே வருகிறது; மேன்மேலும் வளர்ந்து வளப்பட்டுக் கொண்டே போகிறது!

இன்றைய நிலையில் தமிழர்கள் வாழ, மனிதராய் வாழ, மனிதனது முக்கிய தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் என்று முதல் தேவைகளை, தேவையான அளவு பெற்ற திருப்தியான வாழ்க்கையா, வாழ்கிறார்கள்?

ஒருவேளை உணவுக்கும் வழியற்றவர்கள், ஒட்டிய வயிறு படைத்தோர், எசியால் பரிதவித்துக் குழிவிழுந்து கண் படைத்தோர், காதடைந்தோர், உணவின்றி உடல் மெலிந்து, உருமாறி வாடினோர் இல்லையா? உடுக்க உடையின்றித் தவித்திடுவோர், கிழிந்த கந்தலை உடுத்துபவர், அழுக்கு ஆடையணிந்தோர் காணப்பபடவில்லையா, தமிழ் நாட்டில்? இருக்க இடமின்றி, தெருவில் நின்று தவித்திடும் கூட்டம் கிடையாதா? வானமே கூரையாக கையே தலையணையாக, பூமியே பஞ்சணையாக, வீசும் காற்றே போர்வையாக உறங்கிடும் மனிதர்கள் ஏன் இல்லை?

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடமின்றித் தவிப்போர் தொகை, ஏராளமாகத்தான் இருக்கிறது, இங்கே, தமிழ்த் திருநாட்டில்!

ஏன், இந்தநிலை, இல்லாத நிலை, இழிநிலை, இருக்கிறது இருக்க வேண்டும், இந்தக் காலத்திலும்!
இயற்கை வளமில்லையா? உழைக்க உடலுறுதி பெற்ற மக்களில்லையா? இருக்கிறது, எல்லாம் இருக்கிறது! இருந்தும் பயன்?

இருக்கும் இயற்கை வளத்தைப் பண்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வழியில், முறையில், தமிழரது அறிவு, ஆற்றல், சிந்தனை, செல்லவில்லை என்பதே முக்கியகாரணம்!
இங்கு மக்கள், வாழ வேண்டும், வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணமற்று இருக்கிறார்கள். இருக்கும்படி செய்யப்பட்டிருக்கிறார்கள்!

‘ஏதோ, நாம் கொடுத்து வைத்தது, இவ்வளவுதான் நம்மாலாவது என்ன? எல்லாம் விதிப்படி தானே நடக்கும்! ‘கொடுத்துவைத்தவன், வாழ்கிறான், கொடுத்து வைக்காதவன், வறுமையில் புரண்டு வாடி நெளிகிறான்’ ‘புண்ணியம் செய்தவனப்பா, நன்றாக வாழ்கிறான், அனுபவிக்கிறான்’ என்றெல்லாம் நாட்டில், நிலை தவறிய, நிம்மதியற்ற, ஏழை மக்கள், தாழ்ந்த மாந்தர், வாழ்க்கைத் தரம் குன்றிய வறுமைக் கூட்டத்தினர் பேசுகின்றனர்.

இந்த முறையிலே, கஷ்டத்திற்குக் காரணம் கடவுள், துன்பத்திற்குக் காரணம் புண்ணியமற்ற பிறப்பு, இல்லாமைக்குக் காரணம், கொடுத்து வைக்காதது, வேலை கிடைக்காது வாடுவது விதியின் செயல் என்றுதான் மக்கள் ஆறுதலடைகின்றனர்; தமக்குத் தாமே தேறுதலும் அளித்துக் கொள்கின்றனர்.

வாழ்வுப் பாரத்தை, தாங்க முடியாது, தள்ளாடித் தாங்கி, வறுமைச் சுமையைச் சுமக்க முடியாது வளைந்து, நெளிந்து, சுமந்து வேதனை வாழ்வு, வறண்ட வாழ்வு வாழ்கின்றனர்.

அர்த்தமற்ற திருப்தியும், வெறுப்பான வாழ்வும், சாவை எதிர்நோக்கிய சஞ்சல புத்தியும், கொண்ட சத்தற்ற வாழ்வுதான், இன்றைய மக்களின், பெரும்பகுதி மக்களின் வாழ்க்கை நிலை வாழ்க்கைத்தரம்!

வாழ்க்கை வாழ்வதற்கே வாழ வேண்டும், வளமாக வாழ வேண்டும். வாழத்தான் வேண்டும், வாழ்ந்தே தீருவோம் வாழ்க்கையைப்பற்றி கருத்து இப்படித்தானே இருக்க வேண்டும், மக்களுக்கு! ஆனால் மக்கள் வாழாதவர்களாக, வாழ முடியாதவர்களாகவே வாழ்ந்திடக் காரணமென்ன?
நாட்டிலே, பரவிக்கிடக்கும் நானாவித கருத்துக்களையும் ஊன்றிக் கவனித்துப் பாருங்கள். மக்கள், தமது இல்லாமைக்கும், இழிநிலைக்கும் ‘விதி’ ‘கர்மவினை’ ‘ஆண்டவன் விட்டவழி’ என்ற வேதாந்தம் பேசி, ‘ஏதோ இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும்’ என்ற அளவிலே இருப்பதைக் காணமுடியும்!

தமிழர, தாழ்ந்ததற்குக் காரணம், தமிழகத்தில், தமிழரது எண்ணங்களில் ஏற்பட்ட பக்தி, புராணம் மோட்சம், நரகம், மேலுலக வாழ்வு, கர்மம், வினை, விதி என்பன போன்ற கருத்துக்கள், மனிதனது சிந்தனைக்குத் தடை செய்திடும் கருத்துக்கள் புகுந்து ஆதிக்கம் செலுத்தினதுதான் என்பது நன்கு விளங்கும்!

இத்தகைய, இடைக்காலத்தில் ஏற்பட்ட தமிழரைத் தாழ்த்திய தமிழருக்குத் தேவையற்ற, கருத்துக்கள் தான் தமிழ் இலக்கியத்தில் ஏராளமாகக் காணப்பட்டு, அவையே, பக்திப் பாடல்களாக, புண்ணிய புராண ஏடுகளாக, வேத ஆகமங்களாக, ஆராய்ச்சி நூல்களாக, மனு நீதிகளாக, மார்க்கண்டேய புராணமாக, மதக் கிரந்தங்களாக, வசிஷ்டர் வாக்குகளாக, பகவான் திருவாய்மலர்ந்தருளிய மொழிகளாக, முனிபுங்கவரும், தவசிரேஷ்டர்களும் கேட்டு, வழிவழியாகத் தங்கள் சீடகோடிகளுக்குச் சொல்லப்பட்ட போதனைகளாக நாட்டிலே ஏடுகளாக நடமாடுகின்றன!
இயற்றமிழ் இலக்கியத்தில், பெரும்பகுதி நாட்டு மக்களுக்குத் தெரிந்துள்ள; தெரியப்படுத்தப்பட்டுள்ள பலவும், புராண ஏடுகளாகவும், புண்ணிய புராண ஏடுகளாக, வேத ஆகமங்களாக, ஆராய்ச்சி நூல்களாக, மனு நீதிகளாக, மார்க்கண்டேய புராணமாக, மதக் கிரந்தங்களாக, வசிஷ்டர் வாக்குகளாக, பகவான் திருவாய் மலர்ந்தருளிய மொரிகளாக, முனிபுங்கவரும், தவசிரேஷ்டர்களும் கேட்டு, வழிவழியாகத் தங்கள் சீடகோடிகளுக்குச் சொல்லப்பட்ட போதனைகளாக நாட்டிலே, ஏடுகளாக நடமாடுகின்றன!

இயற்றமிழ் இலக்கியத்தில், பெரும்பகுதி, நாட்டு மக்களுக்குத் தெரிந்துள்ள, தெரியப்படுத்தப்பட்டுள்ள பலவும், புராண ஏடுகளாகவும், புண்ணிய காதைகளாகவும், இதிகாசங்களாகவும், பகவத் லீலைகள் பற்றியதாகவுந் தான் இருக்கின்றன!

‘வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்’ தேவைதானா, இந்தக் கருத்து, இன்றும்?

‘காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா, மாயனார் குயவன் செய்த மண்ணுபாண்டம் ஓடடா” பாடுகிறார்களே பக்தியோடு, என்ன நினைப்பது? வாழ எண்ணம் எங்கிருந்த வரும், வாழ்வை நம்பாவிடில்?

‘வாழ்வை நம்பாதே!’ எதைத்தான் நம்புவது? வாழ்ந்தால் தானே. எதையும் நம்ப முடியும்? வாழாவிட்டால், வாழ வழி தேடாது சும்மா இருந்தால் சுகம் வருமா? சோம்பேறி என்ன பட்டமல்லவா, கிடைத்துவிடும், சுலபத்தில்!

‘வாழ்வை நம்பாதே’ பாடிக்கொண்டே பிச்சையெடுப்பார்.

‘வாழ்வை நம்பாதே’ வாயில், பாராயணம், கையிலே திருவோடு, வாழ்க்கைக்கு வழி தரும் காசு, பணம், உணவு பெற்றிட! என்ன வேடிக்கை! விசித்திரம், முரண்பாடு!

நம்முடைய முன்னோர் கருத்து, முற்காலப் புலவர்கள் பாடியவை, எழுதியவை என்ற ஒரே காரணத்திற்காக, பண்டைய இலக்கியங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்பக் கூடாது. அவற்றில் உள்ள கருத்துக்களைப் பற்றிய, எதிரான கருத்துக் கொள்வது கூடாது, பேசுவது குற்றம், எழுதுவதற்குத் தடை, மாபாவி என்ற பட்டம், பழி, ஏசல், பூசல், தூற்றுதல்! சரியா? முறைதானா?
பண்டைய இலக்கியங்களில் ‘தரம்’ உள்ள இலக்கியங்கள். அவற்றை ஆராய்ந்து, அலசிப்பார்த்தால் அவற்றின் ‘தரத்தை’ உயர்ந்த இலக்கியப் பண்பை, இலக்கிய மாண்பை அறிய முடியாது. பழிப்பர். அது மிகமிகப் பாபம். அடாத செயல் என்று பேசிடுவது பண்டைய இலக்கியங்களுக்குத் ‘தரம்’ அல்ல, அவற்றிற்கு, உண்மையிலேயே பெருமை தரவதுமாகாது! மாறாக, அவற்றின் ‘தரம்’ அற்ற தன்மையையும் தாழ்ந்த நிலையையும், சிறுமையையுமே குறிப்பிடுவதாகத்தான் தோன்றுகிறது!
‘பயம்’ ஏன்? ஏன், கருத்து வேற்றுமை கூடாது? சரியா, தவறா? தேவைதானா, என்று சிந்திக்கக்கூட ஆராய்ச்சி செய்து முடிவு கண்டிடவும் உரிமையில்லையா?

அறிவுக்கு அப்பாற்பட்ட இலக்கியங்கள், அப்பாலேயே நிற்கட்டும்; மனிதனது அறிவுக்கு வேலை தரும் அறிவு இலக்கியங்களே தேவை என்ற நிலைமை, சூழ்நிலை உண்டாகித் தீரும் நாள் வெகுவிரைவில் வந்தே தீரும் என்பது நிச்சயம், உறுதி!

‘தரம்’ குறைந்து விடும்; ‘தரம்’ கெட்டு விடும் என்று எதற்கெடுத்தாலும் பேசுவது, குறிப்பிடுவது ஏன்? எதற்காக இந்தப் பீதி, பயம் எல்லாம்?

ஆண்டவனைப் பற்றிய அருந் நூல்களைப் பற்றிய ஆராய்ச்சியா? மகேஸ்வரனைப் பற்றிய மத நூல்களிலே மாற்றமா? புண்ணிய கதைகளிலே, புதிய பாதையைத் தேடுவதா? மறுமலர்ச்சிக் கருத்துக்கள் காணவில்லையே என்ற மனச்சங்கடமான கேள்வியா? தகாது! ஆகாது! கூடாது! என்பது, ஏன்? எதனால்?

தகாத காரியம், தரம் கெட்டுவிடும், தரம் கெட்டு விடும், என்ற கூக்குரலிடும், அன்பர்களைக் கேட்கிறேன். ‘தரம்’ என்றால் என்ன? எது தரம்? எதிலே தரம்? எதைக்கொண்டு, எந்தத் துலாக் கோலைக் கொண்டு தரம் தாழ்ந்துவிடும் தரம் தாழ்ந்துவிடும் என்ற தாரக மந்திர உபதேசம்.

‘தரம்’ மேன்மையைக் குறிப்பதா? தன்மையைக் குறிப்பதா? அறிவையா? ஆராய்ச்சியையா? சன்மார்க்கத்தையா? சமரசத்தையா? நீதியையா? நேர்மையையா? எதைக் குறிப்பிடுவது, ‘தரம், தரம், என்ற தாரக மந்திரம்; எது என்று கேட்கிறேன், குறிப்பிட்டுக் கூறுங்கள்!

“இவ்வுலக வாழ்வை நம்பாதே! மாய வாழ்வு, மருள் தரும் வாழ்வு, உலக இன்பத்தையே தேடியலைவது, சிற்றின்பத்தைத் தேடி சித்தங்கலங்கிடாதீர்! பேரின்பப்பெட்டகத்தின் பால் உங்கள் சித்தம் நிலைக்கட்டும், ‘அவன்’ புகழ்பாடி சிந்தை குளிருங்கள்!” என்று ஏடுகள் எடுத்தக் கூறுவதையே தரம், தரம் என்று பேசுகின்றனர், நம்புகின்றனர் போலும்.

‘தரம்’ என்றால் என்ன? எது தரம்? எப்படித் தரம் என்பது தெரிந்தால்தானே, எடுத்துக்கூறினால்தானே ‘தரம்’ ‘தரமாக’ இருக்க முடியும்! தரத்தைத் தாழந்திடாது பாதுகாக்கவும் முடியும்?
பழைய புராணங்களிலே, புண்ணிய கதைகளிலே, பண்டை இலக்கியங்களிலே, எது தரம் “எந்தப் பகுதி மேன்மையானது, எந்தக் கருத்து களிப்பூட்டுவது, எது சிந்தனையைக் குளிர வைத்திடுவது, எது ‘தர’ மானது என்பதைக் காட்ட வேண்டும்.

‘தரம்’ என்பது என்ன? எதைக் குறிப்பது ‘தரம்’ என்ற தற்காப்பு வார்த்தை, ‘தரம்’ என்ற தாரகமந்திரம், உபதேச மொழி! காணாத, காணவும் முடியாத, தெரியாத, தெரிந்து கொள்ளவும் முடியாத, புரியாத, புரிந்துகொள்ளவும் முடியாத ‘தரம்’ என்பதுதான் என்ன?

பழைமை, பழம் பெருமை, முன்னாள் வாக்கு, முன்னோர் கருத்து, அருளிலக்கியம், ஆலய வழிபாட்டுப் பாடல், புண்ணியந்தரும் புராணம், பேரின்ப இலக்கியம் என்ற அடைமொழிகள் மட்டுமே, போதுமென்ற கருத்தா? தரத்தைக் குறிப்பிட, இவையே போதுமா? கூறிவிடுங்கள் திட்டமாக, தீர்மானமாக!
இது தரம், அதுதான் தரம், என்ற ஒரு நிலையை, நினைப்பை, நடப்பை, கருத்தை, கவர்ச்சியை, குறிப்பிட்டுக் கூறிவிடுங்கள்! தரம் என்பதற்கு ஒரு வரம்பு ஏற்படுத்துங்கள், முதலில்!
தரம் என்பது பயன் தரும் நிலையா, நினைப்பா, நடப்பா? தரம் என்பது பக்தியா? பாராயணமா? அல்லது பழையனவெல்லாம், பண்டை இலக்கியங்கள் எல்லாம் தரமானவை, அவைதான் முடிந்த முடிவுகள், கருத்துக்கள் என்றாவது, தைரியத்தோடு முன் வந்து, கூறுங்கள், குறிப்பிட்டு தெளிவாக, தீர்மானமாக!

பழைமை மீது கொண்ட பற்றினால், பாசத்தால், பக்தியினால் புதுமை தேவையற்றது; புதுமையையும், பழைமையிலேயே கண்டு மகிழ்ந்திடுவது, என்ற நிலையிலேயே, இலக்கியம் இடம் பெயராது; இருந்த இடத்திலேயே, இருக்கத்தான் வேண்டும் என்ற எண்ணமுடையோராகவே இன்றைய தமிழ்ப் புலவர்களும், தமிழ் நாட்டுத் தலைவர்களும், தமிழ்ப் புத்த வித்தகர்களும் விளங்கிடுவது, நல்லதா? நாகரிக உலகில் வாழ்ந்திடும் நமக்கு, நல்லறிவு நாளுக்கு நாள் பெருகிவரும், காலவேகத்திற்கேற்ற முறையிலே கருத்து மணம் பெருகிவரும் காலத்திலே, தேவைதானா, இனியும்? சிந்தியுங்கள்!

காலவேகம்! காலவேகம், மனித வாழ்வைப் பலப் பல விதங்களிலே மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது.

பழைமைதான், ‘தரம்’ என்ற நிலையோடு, புதுமை எண்ணங்களே தோன்றிடாது, கட்டுப்பட்டு மனிதன் வாழ்ந்திருப்பானாகில், இன்றைய புதுமைகள், புதிய பாதைகள், நல்வாழ்வுப் பாதைகள், வாழ்க்கை வசதிகள், கருத்து முன்னேற்றங்கள், காலத்தின் வேகத்தோடு ஒட்டி, மாறி முன்னேறியிருக்க முடியுமா? மனித வாழ்வு, மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு, பகுத்தறிவு நிலைக்கு, நல்ல ‘தரம்’ நற்பயன் பெற்றதாக உருமாறித்தான் இருக்குமா? முடியாதே!

பழைய ஏடுகள்தான் தரமானவை! பழைய கருத்துக்களே தரமுள்ளவை! பழைய எண்ணங்களே, ஏற்பாடுகளே தரந்தருபவை! பழைய பழக்கங்களே, வழக்கங்களே, கொள்கைகளே, கோட்பாடுகளே முடிந்தவை; முற்றுப் பெற்றவை! ‘தரம்’ கொண்டவை, என்று மக்கள் கொண்டிருந்தால் நம் மூதாதைகள், முன்னோர்கள் முடிவு கட்டியிருந்தால், ஒரு கணம், ஒரு சிறிது நேரம் ஒரு சில வினாடிகள், நினைத்துப் பாருங்கள்; மனித வாழ்வு இருக்குமா? இருக்கத்தான் முடியுமா, இன்றைய நிலையில், சூழ்நிலையில் என்பதை!

முன்னேற்றம் எங்கே, முற்போக்குதான் எங்கே? எங்கேயிருந்து வரும், வந்திருக்கவும் முடியும் இன்றைய முன்னேற்ற நிலைக்கு, நாகரீக நிலைக்கு நல்வாழ்வுக் கட்டத்திற்கு, நமது நிலை, மனித வாழ்வின் வாழ்க்கை இன்றைய வாழ்க்கை முறை!

காட்டு மிராண்டியாக, காட்டிலும், மேட்டிலும், மலையிலும், மலைக்குகைகளிலும் வாழ்ந்த மனிதன் இன்று, நாட்டிலும் நகரிலும் வடகோபுரம் போன்ற மாட மாளிகைகளிலும் கட்டுப்பாடான, கண்ணியமான வாழ்வு நடத்தும் நிலைமைக்கு மாறியிருப்பானா? முடியாது! நிச்சயமாக நடக்காது நடந்திருக்கவே முடியாது.

மனிதன் காட்டுமிராண்டியாகவே காலம் முழுவதும் கழித்திருப்பான். நாமும் இன்றும், காட்டுமிராண்டிகளாகவே, கானகவாசிகளாகவே காடுகளிலும் மேடுகளிலும் அலைந்து திரிந்து கொண்டிருக்க மாட்டோமா, பழைமை, பழைமை என்று பழங்கால மனிதன் பழைமையையே போற்றி நின்றிருந்தால்!

முத்தமிழ் விழா கொண்டாடிடும் நிலை ‘முத்தமிழ்’ பற்றிய முழக்கங்கள் இருக்க முடியுமா, இங்கே இன்று! வசிஷ்டர், வியாசர் காலந்தான், கருத்துகளே ‘தரம்’ என்று தீர்மானித்து விட்டிருந்தால், நடக்காதே முத்தமிழ் விழா, முத்தமிழுக்கு விழா! முன்னேற்றம் என்ற எண்ணம் அரும்பியிருக்குமா? புதுப்புது கருத்துக்கள்தான் மலர்ந்திருக்க முடியுமா?

காட்டுமிராண்டிக் காலமல்ல, நாங்கள் குறிப்பிடும் பழங்காலம்; புராண காலந்தான் பழங்காலம், புண்ணிய புருடர்கள் தோன்றிய காலந்தான் பழங்காலம், இன்றுள்ள பழைய இலக்கியங்களில் காண்பவைதான் பழைய காலக் கருத்துகள், இன்றும், இனியும் தேவையான கருத்துகள் என்றாவது மாற்றிக் குறிப்பிட்டுவிட வேண்டும்.

வாதத்திற்காக இதனை, இந்த முடிவை ஒப்புக்கொண்டாலும், மனித நிலை, மனிதனது முன்னேற்றம் அந்த அளவோடு நின்றிருந்தால் கூட, இன்றைய ஏற்றமும், பெரும் முன்னேற்றமும், மானிட வாழ்வில் ஏற்பட்டிருக்க முடியாது என்பது திண்ணம்!

மனிதனது சிந்தனை, தெளிவு, முன்னேற்றம் புராணத்தோடு, பழைய இலக்கியங்கள் கூறும் அளவோடு நிலைத்து, நின்றுவிட்டிருந்தால் கூட இன்றைய சூழ்நிலை, நாகரிக வாழ்வு, நல்வாழ்வு உண்டாகியிருக்காது, உருவாகியுமிருக்காது என்பது உறுதி! மறுக்க முடியாத உண்மையுங்கூட!