அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சூழ்நிலை
8

“அச்சமில்லை! அச்சமில்லை! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை! அச்சமில்லை!” என்று மக்கள் வெள்ளையனை எதிர்த்து ஆர்ப்பரிக்கும் அளவுக்கு வீர உணர்ச்சியைத் தட்டியெழுப்பினவே, பாரதியின் பாடல்கள்!

பயன், சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களைத் தயாரித்துத் தருமளவுக்குப் பயன்பட்டனவே பாரதியின் பாடல்கள் அன்று.

முதலில் பயன் கருதிப் பரவிய போற்றப்பட்ட பாடல்களிலே இன்று தரமும், பண்பும் இருப்பதைப் பலர் காட்டிடக் காண்கிறோம் கூறிடக் கேட்கிறோம்.

இன்று இசையரங்குகளிலே, தனி அரசு செலுத்திடும் தியாகராஜ கீர்த்தனங்களின் ஆரம்ப நிலை என்ன? எந்த அளவுக்கு அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன என்பதை எண்ணிப் பாருங்கள்.

தியாகராஜ கீர்த்தனங்கள் ஆரம்பத்தில் பஜனை மடங்களிலே பாடப்படும் வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமே மதிக்கப்பட்டன கையாளப்பட்டன.

நாளடைவில் காஞ்சீபுரம் நயினாப்பிள்ளை அவர்கள் அவற்றிற்கு இராகம், தாளம், பல்லவி முதலிய இசை அமைப்புகளை பிரித்துப் பாகுபடுத்தி, பாடிக் காட்டினார் முதலில்.

நயினாப்பிள்ளை அவர்கள் செய்த மாறுதல் இசைத் துறையிலே மாறுதலை உண்டாக்கிவிட்டது! இதன் பின்னரே தியாகராஜ கீர்த்தனம் இசைவாணவர்களின் திறமையை எடுத்துக் காட்டிடும் கருவியாகக் கையாளப்பட்டு வருகிறது.

இந்த முறையிலேதான், பயன் கருதிச் செய்யப்படும் எந்த மாறுதலும், மறுமலர்ச்சியும், அதற்கான முயற்சியும் ஆரம்பத்திலே தரம் தாழ்ந்தவைகளாகக் கருதப்பட்டாலும், அவைதரும் பயனுள்ள விளைவுகளால் பலவித நன்மைகள் நிச்சயம் ஏற்படுகின்றன.

நான் இடையிலே குறிப்பிட்டபடி தமிழர் வாழ்வு தழைக்க, தமிழ் மணம் நாடெங்கும் செழித்துக் கொழிக்க, தமிழர், தமிழராய் வாழ, தன்மானத்துடன் வாழ, தமிழன் தன்னைத்தான் உணர்ந்து தன்னம்பிக்கை பெற்றுத் தன்னையும், தன்னைச் சுற்றிலுமுள்ள சமுதாயத்தின் சூழ்நிலையைத் தெரிந்து-புரிந்து-தெளிந்து-வாழும் நிலைக்கான வகையில், வழியில், முறையில் முடுத்தமிழ் விளங்க வேண்டும், பயன்பட வேண்டும், பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை மறுபடியும் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.

இசைத் துறையையும் பழைமையை நீக்கிப் புதுமை எண்ணங்களையும், நல்வாழ்வுக் கருத்துகளையும், புகுத்திப் பயன்படுத்த வேண்டும்.

வானொலியை (ரேடியோவை) த் திருப்பினால் “ஏன் பள்ளி கொண்டீரையா ஸ்ரீரங்கநாதரே” என்பன போன்ற பாடல்களைக கேட்கிறோம் அடிக்கடி. என்றோ படுத்து, எழுந்திராத எழுந்திருக்கவும் முடியாதவரைப்பற்றி ஆராய்ச்சியேன்? இதை விட்டு மக்கள் மனவளத்திற்கான பாதையில் இசை வல்லுநர்கள் இசைவாணர்கள் தம் திறமையைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.

நாடகத்துறை நல்லதொரு மலர்ச்சி அடைந்துள்ளது, மறுமலர்ச்சித் துறையில் என்பதற்குச் சந்தேகமே இல்லை.

கடந்த பத்தாண்டு காலத்திலே “திருமழிசை ஆழ்வார்” “அய்யப்பன்” போன்ற ஓரிரு புராண நாடகங்கள் தவிர, வேறெந்த புராண நாடகங்களும் அரங்கேற்றப்பட்டதாகத் தெரியவில்லை!

“மானேஜர்”, “ரத்தக்கண்ணீர்” வாழ முடியாதவர்கள் “விடியுமா?” “யார் குற்றவாளி?” “தோழன்” “கைதி” என்பன போன்ற பலப்பல நாடகங்கள் தான் நாட்டில் நடமாடுகின்றன!

இவைகளிலே கலைத்திறனும், தரமும் குறைந்திருக்கலாம் ஒரு சில புலவர்களின் எண்ணப்படி. ஆனால், காலத்திற்கேற்ற கருத்துகளும், சமுதாய சீர்திருத்தத்திற்கான வழிகளும், வகைகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன, ஆரயப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது!

“பழைய புராண இலக்கியங்களை எல்லாம் பயனற்றவை என்று ஒதுக்கி விடாதீர்கள். தேடித் துருவிப் பார்த்தால் தினையளவேணும் பயன் தராமல் போகாது” என்று கூறுகின்றனர் ஒரு சிலர்.
காஞ்சியிலே உள்ள பெரிய தேரிலே ஒரு மானை அமரவைத்து, தேரை கவனியாதே! மானைப்பார்! அதன் மருளும் விழிகளைப்பார்! அதன் உடலிலே உள்ள புள்ளிகளைப் பார்! காதுகளைக் கவனி! என்றால் எத்தனை பேர் காண்பார்-காணமுடியும்? இதுபோலத்தானே புராணங்களிலும், பயனைத்தேடி அலைவதும்.

முக்கனி படைத்த நாடு, முத்தமிழ் படைத்த நாடு, முத்தமிழால் முன்னேற, மறுமலர்ச்சி பெற முத்தமிழைப் போற்றுங்கள்! முத்தமிழை முன்னேற்றப் பாதைக்குப் பயன்படுத்துங்கள்.

தமிழில் வரலாறுகளில் வரும் விடுதலை வீரர்களைத் தீட்டிக் காட்டுங்கள். விஞ்ஞான முன்னேற்றத்தை விளக்குங்கள். மத-மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறியுங்கள். வாழ்ந்த இனம் ஏன் வீழ்ந்தது? எந்தக் காரணத்தால்? எந்தக் கருத்துகளை கையாள நேரிட்டதால் என்றெல்லாம் கேளுங்கள். விடை காணுங்கள்.

ஆராய்ந்து, ஆராய்ந்து அலசிப் பார்த்து அழைத்து வாருங்கள் தமிழன் தாழ்ந்ததற்கான காரணங்களை. தமிழர் வாழ்வில் புகுந்த முரண்பட்ட மத, மூடநம்பிக்கைகளைத் தமிழரிடமிருந்து விரட்டுங்கள்!

வஞ்சக வலை வீசி, தம் வாழ்வை வளப்படுத்திக் கொண்ட வைதீக வெங்கண்ணாவின் வரலாற்றை ஏட்டிலே படம் பிடித்துக் காட்டுங்கள். தன்மானத்துடன் தன் நிகரற்று விளங்கிய தஞ்சைப் பேரரசு வேதியன் வெங்கண்ணா வழி சென்றதால், வீழ்ந்த பரிதாபத்தை-சூழ்நிலையை நாடகமாக நடித்துக்காட்டுங்கள்! ஏன் செய்யக்கூடாது இவைகளையெல்லாம்?

வெங்கண்ணா மட்டுமா? எத்தனை பூர்ணையாக்கள் எத்தனை காகப்பட்டர்கள்! எத்தனை சாணக்கியர்கள்! அவர்களின் தந்திரங்களை யெல்லாம்-அவர்கள் கையாண்ட வேத சாஸ்திர புராண-மதமென்ற வஞ்சக வலைகளை யெல்லாம் விளக்கிக் காட்டுங்கள்! கூடாதா?
மீண்டும் கூறுகிறேன்; முத்தமிழ், சூழ்நிலையை மனித வாழ்வின் சூழ்நிலையை, வளப்படுத்தும், வகையிலே பண்படுத்தப்பட வேண்டும் பரப்பப்பட்ட வேண்டும்-பயன்படுத்தப்பட வேண்டும்.

சூழ்நிலையை எதிர்த்துப் போராடி முன்னேற முடியாது சிக்கிச் சீரழியும், மக்களை, ஏட்டிலும்,இசையிலும், நாடகத்திலும் கண்டு, மனித முன்னேற்றத்தின் எதிரான-மனிதாபிமானத்திற்கு மாறான நிலையை- சமுதாயத்தின் அமைப்பை- பழக்கங்களை- வழக்கங்களை- மனிதனது சுற்றுச் சார்பை-சூழ்நிலையைத் திருத்துங்கள், தெளிவாக்குங்கள், மாற்றுங்கள், அறிவின் துணைகொண்டு.

இளைஞர்களாகிய நீங்கள் இந்த மாணவப் பருவத்திலே, முத்தமிழிலே பற்றுக்கொண்டு, முத்தமிழ் மூலம் நாட்டின் நிலையை சூழ்நிலையை நன்கு தெரிந்து, நாட்டின் எதிர்கால ஏற்றத்திற்கான பற்று-பாசம்-பயிற்சி பெற வேண்டும்! பெற வேண்டும் பகுத்தறிவின் துணைகொண்டு!

வாழ்க! வளர்க!! முத்தமிழ்!!!

சென்னை தொண்டை மண்டலம்,
துளுவ வேளாளர் பள்ளியில்
9.2.1952 இல் முத்தமிழ் விழாவில்...