அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சூழ்நிலை
6

கடன் தருவார் யாருமிலர்; கதியற்ற நிலை. துன்பமெல்லாம் கரை புரண்டோடும் சூழ்நிலை. மனிதன் மனம் மாறுகிறது! நிலைமை மாற, ஒரு பொழுதாவது நல்லபடி கழிந்துவிட, குடும்பத்தின் பசி தீர்ந்திட வழியில்லையா? வாழ்வா? சாவா? என்ற மனப்போராட்டத்திலே அவன் சிக்கித் தவிக்கிறான்!

திருடுவதா? பசிக்கொடுமை தீரத் திருடுவதா? குடும்பத்தை ஒரு வேளை காப்பாற்ற வழியில்லையே? வேறு வழி? திருடத்தான் வேண்டுமா? திருடன் என்பது தெரிந்தால்-மீண்டும் வாழ்வு ஏது? திருடனுக்கு வேலை தருவோர் யார்-இந்த ஒரு பொழுதுக்காக வாழ்வெல்லாம் திருட்டுப் பட்டம் நிலைத்து விடாதா கூடாது கூடாது என்று மனம் மாறுவான், ஆனால்...?

மனக் குழப்பம், வறுமை தந்த வாட்டம், வேலையற்ற வாழ்வு, பலநாள் பட்டினித் துன்பம், தொல்லை, குடும்பத்தின் கோரநிலை கொடுமை! கொடுமை! கொடிய சூழ்நிலை அவனுக்கு!

சூழ்நிலையின் காரணமாக, கொடுமையைத் தாளாது, தாளவும் முடியாது, திருடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். தயங்கித் தயங்கி, திருடத் துணிகிறான் முதலில், ஒருவேளைக்கு வேண்டியது கிடைத்துவிட்டால், திருடியேனும் பெற்று விட்டால், நாளை வேலை தேடிப் பிழைக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டு, திருடத் துணிந்து திருடனாகிவிடுகிறான்.

மறுதினமும் வேலை கிடைக்காவிட்டால், இதே நிலைக்குச் சற்றுத் தெளிவோடு செல்கிறான்; திருடுகிறான் மீண்டும், மீண்டும் திருடனாகவே ஆகிவிடுகிறான், காலப்போக்கில்! வேலை கிடைக்காத, வாழ முடியாத காரணத்தால், வறுமையால், கொடுமையால், வளமற்ற, வறண்ட சூழ்நிலையால்.

திருடன், பொய்யன், புரட்டன்-என்றும் மன்னிக்கப் படுவதில்லை. இன்றைய சமுதாயத்தில் திருடனுக்குத் தண்டனை தரும் அளவோடு தீர்ந்தது சட்டம்.

ஏன் திருடினான், திருடன் திருந்திட வழி என்ன? என்று எண்ணிப் பார்த்து, திருடர்கள் ஏற்படும்-ஏற்படக் காரணமான நிலைமைகளை, நினைப்புகளை கொடுமைகளை, சக்தியற்ற சூழ்நிலையை மாற்ற, மாற்றி நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டாமா?

சூழ்நிலையால் பொய் பேசும் மனிதன், தனது சூழ்நிலையை மாற்றிக்கொண்டு, நல்லவனாக மாற மார்க்கம் அமைக்க எண்ணி, துணிந்து நல்ல வழியிலேயே காரிய மாற்றும் சந்தர்ப்பமளித்தால், மாற முடியாதா, நல்லவனாக, பொய் பேசாதவனாக? முடியும். கெட்டவன் நல்லவனாவான். கெட்டவனாகும் சூழ்நிலை-நல்லவனாகும் சூழ்நிலையாக மாற்றப்பட்டால், கெட்ட சூழ்நிலையிலிருந்து, நல்ல சூழ்நிலைக்குச் சென்றால், செல்லும் வசதியும் வாய்ப்பும் அமைந்தால், அமைத்துத்தரப்பட்டால், அமைத்திடும் வழி அவனுக்குப் புரிந்தால், புரியும்படி செய்யப்பட்டால்! இதைச் செய்வது எப்படி? யார்? யார்? எதன் மூலம்? எந்த முறையில், வழியில் என்று கேட்கிறேன்!

சூழ்நிலை வளமாக்கப்பட, சுற்றுச் சார்பு தெளிவாக்கப்பட, வாழ்க்கை வசதி சரிபடுத்தப்பட மனிதன் சிந்திக்கத் தெரிந்து கொள்ள வேண்டும், தன்னைச்சுற்றி ஆராய்ந்தறியும் அறிவு பெற வேண்டும். தன்னம்பிக்கை கொண்டு தனது உழைப்பில் உறுதி கொண்டு, ஊக்கத்தைத் துணைக்கொண்டு, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற இலட்சிய வாழ்வு வாழக் கற்றுத் தெளிய வேண்டும்! இது எப்படி நடக்கும்? எப்படி நடத்துவது, எப்படி ஏற்படுத்துவது, இந்த சூழ்நிலையை!

சூழ்நிலைதான் முக்கியம், தனிமனிதனது தரமல்ல, பண்புமல்ல என்று கூறினேன். இதைக் கேட்டதும், தனி மனிதனுக்குத் தரம், தேவையற்றதா? தரமற்ற, பண்புமற்ற மனிதனைப் படைத்திடத்தானே, இந்தப் பேச்சு என்று எண்ணி விட வேண்டாம்.

தனி மனதினது தரமும் பண்பும் மட்டுமே போதாது, சமுதாயம், மனித இனம் சீர்பட, திருந்த, நல்வாழ்வு வாழ சூழ்நிலை, மனிதனை மனிதனாக வாழ வைத்திடும் நல்ல நிலை, நல்ல சூழ்நிலை, தேவை மிகமிகத் தேவை என்றுதான் கூறுகிறேன்.

மாந்தோப்பு அமைக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். அதற்குத் தேவையானவை என்ன? முதன் முதலில் மாஞ்செடிகள் தேவை. மாஞ்செடிகள் கிடைத்துவிட்டால் நல்ல மாந்தோப்பு கிடைத்துவிடுமா? கண்ட இடத்திலே நட்டால் மாந்தோப்பு வளமாக வளருமா? என்றுதானே யோசிப்போம், ஆரம்பத்தில்!

நல்ல நிலம் வேண்டும். நிலம் நன்றாகப் பண்படுத்தப் பட வேண்டும். நீர் வளமுள்ளதா, தேவைக்குத் தக்க முறையிலே, என்றெல்லாம் கவனித்து, நிலத்தைச் சீர்படுத்தி, செப்பனிட்டு, உரமிட்டு வளப்படுத்தி வகைப்படுத்திப் பின்னர் மாஞ்செடி நட்டால் முளைக்கும், நன்றாக, செழிப்பாகவும் வளரும்.

மாந்தோப்பு அமைய, நல்ல நிலமும், நிலத்தின் தரமும் பண்பும் கவனிக்கப்படுகின்றன! செடி வளரும் இடம், நல்லதாக இருக்க வேண்டும் என்ற நிலை, நியதி இருக்கிறது! அதேபோல், தனி மனிதன் தரமும், பண்புமுடையவனாக இருந்தால், இருந்து விட்டால் மட்டுமே சமுதாயம் சீர்படும், திருந்திவிடும் என்பது எப்படி முடியும்? மனிதன் வாழும் சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வு, பழக்க வழக்கம் போன்ற பலப்பல சூழ்நிலைக்குத் தகுந்தபடிதானே மனிதனுடைய தரமும் பண்பும் அமையும்! நல்ல சூழ்நிலையில் தானே நல்ல தரமும், நற்பண்பும் வளர முடியும்; வளர்ந்து கொண்டே போக முடியும்; மேலும் பரவவும் முடியும்! சிந்தியுங்கள்!

எனவே, மனிதனது தரமும், பண்பும், குறிப்பாக, மனித வாழ்வு மனிதத் தன்மையோடு கூடிய நல்ல வாழ்வாக அமைவது மனிதனது சூழ்நிலையைப் பொறுத்தே இருக்கிறது என்பது நன்கு தெரிகிறது; மிகமிகத் தெளிவாகத் தெரிகிறது.

சூழ்நிலை மனிதனை இயக்குகிறது; மனிதன் சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டே வாழ்கிறான்; வாழவேண்டியிருக்கிறது!

மனிதன் மனவளமும், மனத்திடமும், நல்லறிவும் பெற வேண்டும், ஆராயுந்திறனை அடைந்திடவேண்டும். பகுத்தறியும் பண்பு படைத்தவனாக வாழ வேண்டும். இந்தச் சூழ்நிலையை அமைத்தாக வேண்டும். மனிதத் தன்மையோடு வாழ பகுத்தறிவைப் பரப்பும் நிலை, மனிதனை ‘மனிதன்’ என்ற எண்ணத்தோடு வாழவைக்கும் சூழ்நிலை தேவை, உடனடியாகத் தேவை என்பதை மறுமுறையும் கூற ஆசைப்படுகிறேன்.

காலத்திற்கேற்ற கருத்துக்களைப் பரப்பி, கண்மூடிப் பழக்க வழக்கங்களை நீக்கி, மனித முன்னேற்றத்தை, முன்னேற்ற எண்ணங்களை, எழுச்சியை, அறிவை, ஆராய்ச்சியைத் தடுத்திடும், விதி, குலத்துக்கொரு நீதி, மேலுலக வாழ்வு என்ற கருத்துகளை மனித உள்ளத்திலிருந்து நீக்கி, மேலும் பரவாது தடுத்து, மனிதனைத் தன்னம்பிக்கையுடையவனாக, எதையும் அலசிப்பார்த்திடும் அறிவு படைத்தவனாக தனது ஊக்கத்திலும் ஊழைப்பிலும் உறுதி கொண்டவனாக, வாழ்க்கை நடத்திடும் பகுத்தறிவாளனாக வாழவைக்கும் நிலை, சூழ்நிலை உண்டாக்கப்பட வேண்டும்.

விதி-குலத்துக்கொரு நீதி மேலுலக வாழ்வு என்ற பழைமைக் கருத்துகளைத் தடுத்து, புதுமை எண்ணங்களை அறிவுக் கொள்கைகளை, ஆராய்ச்சித்திறனை, விஞ்ஞானக்கருத்தை, மக்கள் எண்ணத்தில் எழுப்ப வேண்டும். இதற்கு இலக்கியங்களும், ஏடுகளும் மிகச்சிறந்த கருவியாகும், சாதனமாகும்.

புத்தகங்கள் மூலம் பழங்கருத்துகளை, பாசி படிந்த எண்ணங்களைப் போக்கி, நல்வாழ்வுக்கான நல்லறிவுக் கருத்துகளை புதுமை எண்ணங்களை ஏற்படுத்த முடியும், எளிதில்!

சாக்ரடீஸ், ரூஸோ, வால்டேர் போன்ற ஆசிரியர்கள் அவ்வப்போது தீட்டிய மறுமலர்ச்சி ஏடுகள் எத்தனையோ மனமாற்றங்களை, எண்ணத் தெளிவுகளை, ஏற்படுத்தின மக்களிடையே!

மக்களிடம் மங்கிக் கிடந்த சிந்தனையைத் தட்டியெழுப்பின இவர்களது புத்துணர்ச்சி ஏடுகள், மனிதன் முன்னேற, புதுமையைக் காண, புதுவாழ்வு பெற்று, நல்வாழ்வு வாழ்ந்திடப் பெருந்துணை புரிந்தன, இத்தகைய மறுமலர்ச்சி எழுத்தாளர்களது, எண்ணங்கள், எழுத்தோவியங்கள்!

அதைப் போலவே, இங்கும் இத் தமிழ்த்திரு நாட்டிலும் மறுமலர்ச்சி நூல்கள் ஏராளமாகத் தேவை!

மகேஸ்வரனைப் பற்றிய இலக்கியங்கள், ஏடுகள் நீங்கி, நீக்கப்பட்டு மனிதப் பண்பைப் பரப்பிடும் நூல்கள் எழுதப்பட வேண்டும். பழைமையின் பிடியிலிருந்து நீங்க, விதியின் சுழலினின்று விடுபட மேலுலக வாழ்வுப் போதையிலிருந்து தெளிந்திட! உலகியல் அறிவுச் சுடர்கள், பகுத்தறிவுப் புத்தகங்கள், ஏராளமாகப் பரப்பப்பட வேண்டும், மக்களிடையே;

சிந்தி! யோசித்துப்பார்! ஆராய்ச்சி செய்! சூழ்நிலையைத் தெரிந்து நட! நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள். “விதியல்ல, உன் வேதனைக்குக் காரணம். மதியின் துணைக்கொண்டு நட” என்று எடுத்துக்காட்ட வேண்டும். ஏடுகளெல்லாம்.

தமிழில் எல்லாவகைக் கருத்துகளும், வாழ்வை வளப்படு“த்தும் எல்லா முறைகளும் எழுதப்பட வேண்டும்!

தமிழ்ப்புலவர்கள், தமிழ்மொழி வல்லுநர்கள், தமிழ்ப் புத்தக வித்தகர்கள் இந்தத் துறையிலே, அறிவுத் துறையிலே பெரிதும் கவனம் செலுத்தி, முத்தமிழை-முக்கியமாகப் பகுத்தறிவுப் பாதைக்கே பயன்படுத்திட வேண்டுமென்று, ஆசைப்படுகிறேன்.

சாதாரண மக்கள், பாமர மக்கள் தெளிவுபெறும் வழியிலே, இலக்கியங்களை இயற்றுங்கள். சூழ்நிலையால் மனிதன் படும்பாட்டை விளக்குங்கள்.

‘சூழ்நிலை’ விளக்க ஏடுகளாகவே, இலக்கியங்கள் திகழட்டும். இசை நூல்கள் பரவட்டும், நாடகங்கள் நடக்கட்டும். இதுவே, எனது எண்ணம் ஆவல் ஆசை!

இந்த எண்ணம், இந்த ஆவல், இந்த ஆசை, மேதாவித்தனத்தின் விளைவல்ல, மனித உள்ளத்தின் விளைவு, விருப்பம், வேண்டுகோள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதன் தன்னைச் சுற்றிலும் ஆராய்ந்து, சூழ்நிலையைத் தெளிந்து தெரிந்து நடத்திடத் தூண்டிடும் ஏடுகளை எழுதியாக வேண்டும் தமிழில்!

இத்தகைய ஏடுகளை, மனித சமுதாயத்தின் நிலையை, வளர்ச்சியை நல்வாழ்வுக்கான வளர்ச்சியை, வளர்ச்சிக்கான வழிகளை, முறைகளை, முற்போக்கு எண்ணங்களை, ஏற்பாடுகளை, அறிவுக் கருத்துக்களை அனைவரும் படித்தும், படிக்கப் பக்கம் நின்று கேட்டும், பாவாணர்கள் பாகு மொழியிலே பாடிடக் கேட்டும், நடிகமணிகள் நடித்திடும் காட்சிகளைக் கண்டும், களித்தும், நாட்டு மக்கள் அனைவரும் நல்வாழ்வுப் பாதையை, நன்னெறியை, நன்கு உணர்ந்து நடந்திட வேண்டும்.

முத்தமிழின் ‘தரங் கெட்டுவிடும், தரங் கெட்டுவிடும்’ என்ற பழம் பல்லவியையே பாடிக்கொண்டு சிலர் ஒருபுறம், இருந்து வரும் இந்த நேரத்திலும், மறுமலர்ச்சி, முத்தமிழின் மறுமலர்ச்சி, மாறுதலுக்கான அறிகுறி இல்லாமலில்லை, இருக்கத்தான் இருக்கிறது.

நல்ல வாழ்வை, வாழ்வை வளப்படுத்திடும், வாழ்வை உண்டாக்கிடும் எண்ணங்களை எடுத்துக் காட்டிடும் ஏடுகள் சில நாட்டிலே நடமாடிடுவதைக் காண்கிறோம்.

நல்லறிவுக் கருத்துகளைப் போதித்திடும் நானாவித ஏடுகளும், இசை நிகழ்ச்சிகளும், நாடகங்களும், மக்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றிடத் தவறக் காணோம்!

தமிழ், தமிழ்ப் பேச்சு, தமிழ் எழுத்து, தமிழ்ப் புலவர், தமிழ்ப் புத்தகங்கள் என்றால் ஏதோ வேறு வழியற்றவன், விதியற்றவன், தமிழைக் கட்டியழுகிறான் என்றிருந்த காலம் மாறி, இன்று தமிழன், தமிழ்மொழி, தமிழினம், தமிழகம், தமிழ்த்திருநாடு என்றெல்லாம் பேசப்படும் நிலை, தமிழினம் தமிழ் மொழியைப் போற்றிடும் நிலை, தன்மானங் கொண்டுள்ள நிலை, உண்டாகித்தானே இருக்கிறது!

முத்தமிழின் முன்னேற்றம், கருத்து முன்னேற்றம், கால வேகத்தோடு ஓட்டி, சூழ்நிலைக்கேற்ப, நல்ல வாழ்வை நோக்கி, நல்லறிவுப் பாதையில் சென்று கொண்டேதான் இருக்கிறது, நிச்சயமாக.
தமிழின் மறுமலர்ச்சிக்கு, முத்தமிழின் மறுமலர்ச்சிக்கு முட்டுக் கட்டைகள், தடைகள் பலப்பல விதங்களிலே உண்டாகியே தீரும், உண்டாகியும் வருகிறது.

மத, மூட நம்பிக்கைகளின் பேரால், ஆண்டவன் பக்தி, பாராயணம், பழங்கருத்து, பராசரர் வாக்கு இதிகாசம், எம்பெருமான் திருவாக்கு, அருள்வாக்கு, விதி, மோட்சம், நரகம் என்பதன் மேலுள்ள பற்று, பாசம், பயம் முதலான பலப்பல வழிகளிலே முட்டுக்கட்டைகள் முத்தமிழ் குறித்து மட்டுமல்ல, எங்கும், எதற்கும், எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் ஏற்பட்டேதான் இருக்கின்றன.

வரலாற்றைக் கவனித்துப் பாருங்கள், உலகின் பற்பல நாடுகளிலும், பலப்பல நூற்றாண்டுகளாக மனித வாழ்வின், வாழ்க்கை முறைகளும் மன மாறுதல்களும் சுலபத்தில் ஏற்படவில்லை.

சிறு சிறு மாறுதல்களும், ஏன்? மிகமிகச் சாதாரண மாறுதல்களுங்கூட, மகத்தான எதிர்ப்புக்கும், ஏளனத்திற்கும் ஆளான பின்னரே, ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்ட பின்னரேதான் மக்கள் மனதில் தோன்ற ஆரம்பித்தன. மேலும் எண்ணத் தெளிவை ஏற்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்ற எண்ணத்தை, எண்ண மாறுதலை, எண்ண முன“னேற்றத்தை ஏற்படுத்திடும் நிலை, சூழ்நிலை ஏற்பட்டது.

மாறுதலைக் கண்டு மக்கள் மருண்டனர். மாறுதலே தேவையில்லை என்றுங்கூட எண்ணினர். மனித வாழ்வில் மாறுதலுக்கான அறிகுறி, ஆரம்பம் ஆரம்பித்த நேரத்திலே!

உலகம் தட்டை என்று உலகமே எண்ணியிருந்த நேரத்திலே நம்பியும் இருந்த காலத்திலே, கடவுள் கதைகள் எல்லாம் இதே கருத்தை வலியுறுத்தி வலியுறுத்தி வழங்கி வந்த வழிவழி எண்ணத்தை சாதாரணமாகவா மாற்ற முடிந்தது?

உலகம் தட்டையல்ல! நீண்ட சதுர வடிவமானதல்ல! தட்டை போலத்தான் கண்ணுக்கு தோன்றுகிறது. ஆனால் கருத்தூன்றிக் கவனித்தால் உலகம் ஒரு உருண்டை. உருண்டை வடிவமானது என்று முதன் முதலில் கூறிய கலிலியோ கல்லடிப்பட்டார். கசடன்-கடவுள் தன்மைக்க விரோதி என்ற தூற்றுதல் மொழிகளுக்கெல்லாம் ஆளானான்.