அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சூழ்நிலை
7

கேலிக்கும், கண்டனத்திற்கும், கல்லடிக்கும், சொல்லடிக்கும் கலங்கிடாது, எதிர்ப்புக்கும் ஏளனத்திற்கும் அஞ்சாது, எண்ணத் தெளிவோடு தனது சிந்தனையின் முடிவை, உலகம் தட்டையல்ல உருண்டை என்ற உண்மையை உலகினர்க்கு உணர்த்திடத் தயங்கிட வில்லை அந்தக் கலிலியோ அந்தக் காலத்திலே!

உலகம் உருண்டை என்ற உண்மை, இன்று உலகம் முழுவதும் ஒப்பிய உண்மையாக உலவிடக் காண்கிறோம்! உபயோகமும் இருக்கிறது இந்த உண்மையால், உலகிற்கே!

எந்தத் துறையிலும், எந்தவிதக் கருத்து மாறுதல்களுக்கும் ஆரம்பத்திலேயே ஆதரவு கிடைத்துவிடாது என்ற எண்ணத்தைக் கொண்டு எதிர்ப்பு, ஏளனம், தடை, தண்டனை இவற்றைக்கண்டு இவற்றுக்கெல்லாம் மனித இனம் கட்டுப்பட்டு நின்றுவிட்டால் ந நின்று விட்டிருந்தால் மனித வாழ்வில் எத்தகைய மாறுதல்களும், முன்னேற்றமும் ஏற்பட முடியாது-ஏற்பட்டு இருக்கவும் முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறேன்.

நல்ல மாந்தோப்பு அமைய-நல்ல களம்-விளை நிலம் எப்படி முக்கியமாகிறதோ-மூலமாகிறதோ அப்படியேதான் மனிதன் தரமும் பண்பும் படைத்தவனாக நல்ல வாழ்வு-நாகரிக வாழ்வு வாழவேண்டுமானால், மனிதன் வாழ்ந்திடும் களம்-நிலம், சமுதாயம், சமுதாயத்தின் நிலை, சூழ்நிலை முக்கியமாகின்றன-மூலமும் ஆகின்றன?

சமுதாயம், மனித சமுதாயம் தனது முக்கிய தேவைகளை உணவு, உடை, வீடு என்ற மூன்று முக்கிய முதற் தேவைகளை முழு அளவில் தேவையான அளவில், தேவையான நேரத்திலே பெற்றுத் திருப்தியான வாழ்வு வாழ்ந்திட, வாய்ப்பும், வசதியும் பெற்றாக வேண்டும்.
மனிதன் தனது அறிவின் துணைக்கொண்டு இயற்கை வளத்தைப் பண்படுத்தி பாகுபடுத்தி, இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்திப் பலப்பல விதங்களிலே தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி மனிதன் இயற்கை வளத்திலிருந்து, பெறும் தன்னுடைய தேவைகளை மழை, புயல், காற்று, நீர், நெருப்பு, காட்டு மிருகங்கள் இவைகளினின்று பாதுகாத்து, சேமித்து வைத்திடும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.

தட்ப வெட்பம்-வறண்ட நிலவளம்-இயற்கையின் திடீர் மாறுதல்களிந் விளைவு ஆகிய சூழ்நிலையின் காரணமாக, முதற்தேவைகள், தேவையான அளவு, தேவையான நேரத்தில் கிடைக்காத-கிடைக்க முடியாத திருப்தியற்ற நிலையில், ஏற்கனவே அறிவையும், ஆராய்ச்சியையும், சூழ்நிலையையும், தெரிந்து தெளிந்து-புரிந்து சேமித்து வைத்த மனிதனது தேவைக்கு மேற்பட்ட தேவையில்-முதற் தேவையில், முக்கிய தேவையான உணவு, உடைகளை தெரிந்தோ தெரியாமலோ தேவையான அளவு எடுத்துக் கொள்கிறான்.

இந“த நிலையில் ஏய்ப்பவனும் ஏய்க்கப்படுபவனும்-எத்தனும் ஏமாளியும், சுரண்டுபவனும், சுரண்டப்படுபவனும்-உழைப்பவனும், உழையாது பிறர் உழைப்பை உறிஞ்சி உண்டு கொழுத்திடுவோனும்-நன்மையும், தீமையும்-பொய்யும், புரட்டும் புகுந்தன மனித வாழ்வில்!

மனித வாழ்வு-இன்றைய மனித வாழ்வு எத்தனையோ மனப்போராட்டங்களிடையேயும் சுருங்கக் கூறுமிடத்து, வசதியையும், வாய்ப்பையும்-சமயத்தையும், சந்தர்ப்பத்தையும், அறிவையும், ஆற்றலையும்-அறியாமையையும், அஞ் ஞானத்தையும்- பெருமளவு விஞ்ஞானத்தையும் துணைகொண்டு நடந்திடும் நிலையில் இருக்கிறது.

“மனிதர் உணவை மனிதர் பறித்திடும் வழக்கம் இனியுண்டோ” என்று பாடிவிட்டால் மட்டுமே போதுமா? போதாதே! மனிதன் உணவை, மனிதனே பறிக்கிறான். ஒருவன் உண்ணும் உணவை இன்னொரு மனிதன் பறிக்கிறான்! ஏன்? எந்தச் சூழ்நிலையில்?

மனிதர் உணவை மனிதர் பறிப்பது மட்டுமல்ல; மனிதனை மனிதனே மனிதனாக மதிக்காத மனப்பான்மை, மனிதனை மனிதன் பிறப்பால் உயர்த்தியும், தாழ்த்தியும்-நிறுத்தப் பார்த்திடும் நேர்மையற்ற நிலை-மதம், சாதி, ஆண்டவன் தூதன், ஆண்டான் அடிமை, பிறப்பால் உயர்ந்தோன், பிறப்பால் தாழ்ந்தோன், ஏழை, பணக்காரன் இன்னும் எத்தனை எத்தனையோ முரண்பட்ட கொள்கையினிடையே சிக்கிச் சீரழியவில்லையா, இன்றைய மனித வாழ்க்கை!

எத்தனையோ சிக்கல்களுக்கிடையே-முரண்பட்ட மூட நம்பிக்கைகளுக்கிடையே-அறிவாளி அறிவற்றவனையும்-இருப்பவன் இல்லாதவனையும்-பலமுள்ளவன் பலமற்றவனையும் சுரண்டிச் சுகபோகியாக வாழ்ந்திட வாய்ப்பும் வசதியும் அமைந்ததாகத்தானே இன்றைய சமுதாயம் இருக்கிறது!

விடுவிக்க முடியாத வாழ்வுச் சிக்கல்களும், ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளும், மூட நம்பிக்கைகளும், சுயசிந்தனையற்ற, சலிப்பான சத்தற்ற வாழ்க்கை முறையுமேதான் இன்றைய வாழ்வை-மனித வாழ்வை-மிருக நிலைக்கே மீண்டும் மீண்டும் கொண்டு செல்லுகின்றன!

வாழ்வுச் சிக்கல்களைச் சீர்படுத்தி, செப்பனிட்டு முரண்பட்ட கொள்கைகளிலே தெளிவடைந்து, மூட நம்பிக்கைகளை முறியடித்துச் சுய சிந்தனையாளனாக மனிதன் மாறிட வேண்டாமா?

ஏன் வாழவிலே சிக்கல்கள் ஏற்படுகின்றன? எத்தகைய முரண்பட்ட கொள்கைகள் நீக்கப்பட வேண்டும்? மூட நம்பிக்கையால் ஏற்படும் முட்டுக்கட்டைகள் என்னென்ன? எவையெவை? என்றெல்லாம் மனிதன் சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தனைத் தெளிவு பெற்று தெளிந்த வாழ்வு-திருப்தியான வாழ்வு மனிதனை மனிதனாக வாழ வைத்திடும் வாழ்வு-நாகரிக வாழ்வு நல்ல வாழ்வு வாழ வேண்டாமா, மக்கள்!

நாகரிக வாழ்வு-நல்ல வாழ்வு வாழ்ந்திட மக்களைத் தயார் செய்திடுவதே இன்றைய பணி-முதற்பணி முக்கிய பணி மக்கட்பணி!

மனிதாபிமானம் படைத்த எவரும் இந்த முயற்சியில் ஈடுபடத் தயங்கிடவோ-மயங்கிடவோ-மருண்டிடவோ கூடாது! கூடாது!

மக்களிடையே மத மூடநம்பிக்கைகளைப் போக்கி சாதி, சமய போதங்களையசுற்றி, சமத்துவத்தையும், சன்மார்க்கத்தையும் ஏற்படுத்தி, அஞ்ஞானத்தை நீக்கி, விஞ்ஞான உணர்வை ஊட்டித் தன்னம்பிக்கையையும், தளராத உழைப்பையும், ஊக்கத்தையும் உண்டாக்கித் தீர வேண்டும்!

இந்த மாறுதலை உண்டாக்கிட நல்லறிவும், நல்லெண்ணமும் படைத்தோர், அறிவிலும், ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் உயர்ந்தோர், ஊருக்கு உழைத்திடும் உத்தம எண்ணம் கொண்டோர் தன்மான வாழ்வில் தளராத தன்னம்பிக்கை கொண்டு தமிழை-தமிழ் மொழியை-முத்தமிழை-தமிழர் வாழ்வு தன்மான வாழ்வாக-நாகரிக வாழ்வாக-நல்ல வாழ்வாக மாற்றிடப் பயன்படுத்திட வேண்டும்.

மக்களிடையே எத்தகைய மனமாற்றமும், எண்ணத்தெளிவும், கருத்துகளும் பரவிட, எளிதில் பரவிட, மொழி, முதற்கருவியாக விளங்குகிறது.

மொழி வழியேதான் எத்தகைய கருத்துகளும், பரவுகின்றன, பரப்பப்படுகின்றன, முதலில்.
தமிழ்மொழி மூலம், முத்தமிழ் மூலம், தமிழரது வாழ்வில் மாறுதலையுண்டாக்கிட முடியும், நிச்சயமாக.

தமிழர், தம்மின மொழியை, தமிழ் மொழியைப் பெரிதென மதித்துப் போற்றி, புகழ்ந்து, பரப்பிடும் நிலைமை, மறுமலர்ச்சி, தமிழின் மறுமலர்ச்சி பூத்துக் குலுங்கிவரும் இந்த நேரத்திலேதான் இந்தச் சூழ்நிலையிலேதான், தமிழரை, தன்மானமுள்ளோராக நாகரிக மாந்தராக நல்ல வாழ்வு நடத்திடும் மனிதராக மாற்ற முடியும்.

தமிழில் தலை சிறந்த கருத்துகள் யாவும் தரப்பட வேண்டும். தமிழில் தன்மானக் கருத்துகள், மனிதாபிமான எண்ணங்கள் கொண்ட ஏடுகள் எழுதப்பட்டு மக்களிடையே மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டும்.

இன்றைய தமிழ்மொழிப் புலமை படைத்தோர் தமிழ்வாணர்கள், தமிழ்ப் புத்தக வித்தகர்கள், தரங்கெட்டுவிடும் என்று, பழைமை விரும்பிகளாகவே விளங்கி வராது, மறுமலர்ச்சி நூல்களை இயற்றித் தர வேண்டுகிறேன்.

கால வேகத்திற்கு ஏற்ற முறையிலே, விஞ்ஞானம் வளர்ந்து முன்னேறிவரும் இந்த நாளிலே அகில உலகின் நிலையையும் விளக்கிடும் ஏடுகளைத் தமிழில், தமிழர்கட்குத் தரவேண்டும்.

மறுமலர்ச்சி என்றதும் மருண்டிடும் மனப்பண்பு படைத்தவராகாது, மனவலிமை படைத்து, மனிதாபிமானத்தைத் துணைகொண்டு மறுமலர்ச்சி நூல்களை எழுதுங்கள், எழுதுங்கள் என்று தமிழரை, தமிழ்ப் புத்தக வித்தகரைக் கேட்டுக் கொள்கிறேன்!

“புதிய மறுமலர்ச்சி ஏடுகளை எழுதுங்கள்; ஏழையின் துயரைப் பாடுங்கள் ஏன் ஏழையானான“ என்று கேளுங்கள்; ஏழையின் நிலைமை, பாட்டாளியின் துயரவாழ்வைக் காவியமாக்குங்கள், தொழிலாளியின் துயரை, துன்ப வெள்ளத்தை, நாட்டின் நானாவித நிலையை, மனித வாழ்வின் சூழ்நிலையை விளக்குங்கள்’ என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.

ஆரம்பத்திலே ஏற்படும் எதிர்ப்பைக் கண்டு மருளவேண்டாம்; தடைகள், தண்டனைகள் எதையும் பொருட்படுத்திட வேண்டாம். துணிவுடன் காரியமாற்றுங்கள்; வெற்றி நிச்சயம் கிடைத்தே தீரும் என்பது உறுதி, மிக மிக உறுதி!

தமிழ்ப் புலவர்களே! தமிழ்ப்புத்தக வித்தகரே, தமிழனின் எழுத்து, பேச்சு, எண்ணம், கருத்து, கொள்கை, கோட்பாடு யாவும் பழைய புராண, புண்ணிய இலக்கியங்களுடனேயே நின்று விடத்தான் வேண்டுமா? கூறிவிடுங்கள், மனம் விட்டு!

நம்மால் முடியாதா, புதிய இலக்கியங்களை உண்டாக்கிட? புதிய எண்ணங்களை ஏற்பாடுகளை, காலத்திற்கேற்ற கருத்துகளை, சூழ்நிலையை உணர்ந்து நடந்திடும் மன உறுதியைத் தந்திடும் ஏடுகளை எழுதிட முடியாதா? ஏன் முடியாது? முடியும் நிச்சயமாக முடியும். ஆனால்...?

‘தரங் கெட்டுவிடும், தரங் கெட்டுவிடும்’ என்ற பல்லவியையே பாடிப் பாடி பழைமையைப் போற்றிப் புகழ்ந்திடும் மனம் படைத்தோர், மாறுதலை எதிர்ப்போர், வெறுப்போர், மறுப்போர், இத்துறையிலே ஈடுபட மறுக்கலாம்; ஈடுபடுவோரைத் தடுத்து நிறுத்தவும் முனையலாம்; தடைகள் பல ஏற்படுத்தி துன்புறுத்தலாம்; தயவு தாட்சண்யம், பக்தி, முக்தி, மோட்சம், நரகம், சாதிமதம் என்ற பலப்பல முறைகளின் துணைகொண்டு.

எந்த முறைகளின் துணைகொண்டு, தமிழகத்தில் ஏற்பட்டு விட்ட மாறுதலை, தமிழின் மறுமலர்ச்சியைத் தடுத்திடவோ, தடை செய்து நிறுத்திடவோ முடியாது; ஆம், நிச்சயமாக முடியாது; முடியவே முடியாது!

கடந்த பத்தாண்டு காலத்திலே தமிழின் வளர்ச்சி மகத்தானது; மகிழ்ச்சி தரும் வகையில் மாறுதல் அடைந்துள்ளது.

நாட்டிலே நடமாடும் நானாவித நிகழ்ச்சிகளும், ஏட்டிலே படம் பிடித்துக் காட்டப்படுகின்றன. அறிவு நூல்கள் நாட்டில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகின்றன.
தமிழ் இசை உணர்ச்சி பெருகி, வளர்ச்சியடைந்து வருகிறது. தன்மதிப்புப் பாடல்கள் தமிழகத்தில் பாடப்பட்டு, பரவி வருகின்றன.

நாடகத்துறையிலேயும், நல்லதொரு மாறுதல், மறுமலர்ச்சி தோன்றிவிட்டன. நல்லறிவுப் பாதைக்கான நாடகங்கள் சூழ்நிலையால் பரிதவித்திடும் மனிதரைப் பற்றிய நாடகங்கள் நடிக்கப்படுகின்றன.

முத்தமிழ் நாடெங்கும் முழக்கப்படுகிறது. முத்தமிழ், தமிழர் வாழ்வும் வளமும் பற்றிய அக்கறை கொண்ட முறையிலும், துறையிலும், நல்லவாழ்வுக்கான கருத்துக்களைப் பரப்பிடும் பணியில் பயன்படுத்தப்படுகின்றது என்ற செய்திகள் ஓரளவுக்கு மன மகிழ்ச்சியைத் தருகின்றன.

முத்தமிழில் புலமைபெற்று முன்னேற்றமடைந்துள்ளோர், இந்த மறுமலர்ச்சிக்கான ஆக்க வேலையிலே ஊக்கமேதுமின்றி, ஒதுங்கி நின்று விடுவது முறையல்ல. முன் வந்து இந்த மறுமலர்ச்சியை மொழிவழி ஏற்பட்டுள்ள விழிப்பை வகைப்படுத்திட வேண்டும்.

இப்படிச் செய்யாது, ‘தரம், தரம்’ என்று கூறிக்கொண்டே யிருந்தால் ஒரு பயனும் ஏற்படாது.

இதனால் மறுமலர்ச்சி, மங்கிவிடாது; மறைந்தும் விடாது.

மறுமலர்ச்சி நூல்களிலே ‘தரம்’ குறைந்ததென்ற குற்றத்தைக் கூறிக்கொண்டேயிருந்தாலும், அவற்றின் மூலம் நாட்டுக்கு கிடைத்திடும் நற்பயனை, நற்பயன் கருதிச் செய்யப்படும் முயற்சியைப் பாராட்டமலிருக்க முடியாது, யாராயிருந்தாலும்!

பயன் தரும் எந்தக் காரியமும் தரமுள்ளவையாகத்தான் இருந்திட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

தொடக்கத்திலே, பயன் பெரிதாகவும், தரம் சிறிதாகவும் இருக்கலாம். பயன் பெருகப் பெருக, தரத்தைத்தானே உயர்த்திப் பண்படத்திட முடியுமே!

தேசீய கவி பாரதியின் பாடல்கள் தான் மக்களிடையே எந்த விதத்தில் நடமாட ஆரம்பித்தன? தரம் கருதியா, முதலில் மக்கள் மனதில் பதிந்தன? இல்லையா?

பாரதியின் பாட்டும் ஒரு பாட்டா? என்று எத்தனை புலவர்கள் பரிகசித்தனர் பாரதியின் பாட்டை, ஆரம்பத்தில், ஆனால்...?

பயன், வெள்ளையனை விரட்டிட, மக்களிடையே வீராவேச உணர்ச்சியைத் தட்டி எழுப்பின பாரதியின் பாடல்கள்; அந்தக் காலத்தில்.