அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கடைசிக் களவு
2

பண்டாரம்! பண்டாரம்! பயலுக்குக் காய்ச்சல் குறைய வில்லை.

காலிலே, முள் தைத்ததே பண்டாரம், அந்த இடம் என்ன புண்ணாகி விட்டதே, கொஞ்சம் பார்.
உன் வாய்க்குச் சர்க்கரை தான் போட வேண்டும். பண்டாரம், நீ சொன்னது போலவே, சொர்ணத்துக்குப் பெண் குழந்தைதான் பிறந்தது.

போ, பண்டாரம், நீ உலகமே தெரியாமல், ஏதேதோ பேசிக் கொண்டு திரிகிறாய். அந்த அநியாயக்காரன் என்னை ஒன்றும் செய்ய மாட்டான். கடனை, சிறுசிறு தவணையாகக் கொடுத்தால் கூட வாங்கிக் கொள்ளுவான், என்று சொன்னாயே, தெரியுமா விஷயம், அந்தப் பாவி, என் நிலத்தை ஏலம் போட ஏற்பாடு செய்து விட்டான்.

ஆமாம், என்னமோ நீ சாது, வம்பு தும்புக்கு வராத ஆசாமி, என்று நாங்கள் உன்னிடம் மரியாதையும் அன்பும் காட்டி வந்தோம். நீ ஊர் உலகத்தையே நாசமாக்கி விடுவே போலிருக்கே. தாலி அறுத்தவளுக்கு மறு கலியாணம் செய்தால் என்ன? அதிலே தவறு இல்லை என்று சாவடியிலே பேசினாயாமே, இதுதான் தர்மமா? ஏன் பண்டாரம், உனக்கு இப்படிப்பட்ட கேடுகெட்ட புத்தி?

அடே அப்பா ஆண்டி! எங்க குடும்பம், பரம்பரையா சிவன் கோயில் பூஜை செய்யறது, உன்னைப்போல நான், ஊரார் மயங்கும்படிப் பேசிண்டு இருக்க முடியறதில்லை. என்னைப் பத்திக் கேவலமாகப் பேசிண்டு திரியறயே, சரியா? உன்னோட ஜோலிக்கு நான் வாரேனா! கோயிலுக்குள்ளே நுழைந்து, ஸ்வாமி பூஜை செய்ய இந்த அய்யனுக்கு என்ன யோக்கியதை இருக்கு? குடித்து விட்டுக் கூத்தி வீட்டிலே உருண்டு கிடக்கிறவனாச்சே! என்றெல்லாம் உளறிண்டிருக்கியாமே! வேண்டாம், பிராமண தூஷணை, இலேசா விடாது. நாக்கு அழுகி, குஷ்டம் பிடித்துச் சாக நேரிடும். சொன்னேன், இதோடாவது உன்னோட கலகப் புத்தியை விட்டுத் தொலை. ஏதோ, வயத்துக்கு இல்லேன்னா, அஞ்சோ, பத்தோ கேட்டா, தராமப் போவனா? பிழைக்கத் தெரியாமப்படிக்கு, பெரிய வாளைத் தூஷிச்சிண்டு பகைச்சிண்டு பாழாகாதே - சொன்னேன், கடைசி தடவை. ஆமாம், மறுபடியும் மறுபடியும் என்ன விவகாரத்திலே குறுக்கிட்டிண்டு இருந்தா, தொலைச்சுப்புடுவேன் தொலைச்சி. உஷாரா நடந்துக்கோ, உடம்புத் தோலை உரிச்சுப் போடச் சொல்லுவேன், தெரியறதா! பஞ்சாங்கக்காரப் பார்ப்பான் தானேன்னு பரிகாசமா எண்ணிண்டு கிடக்காதே! என்னோட விரோதம் சாமான்யமா விடாது ஆமாம்.

மாடசாமி ஆச்சரியத்தால் வாய் பிளந்தபடி இருப்பான், இதுபோலெல்லாம், கிராமத்தார் பலர் பலவிதமாக வந்து பேசி விட்டுச் செல்வார்கள், பண்டாரத்திடம்.

தன்னாலான உதவியைச் செய்யத் தயங்குவததில்லை, தனக்குத் தெரிந்த யோசனைகளை அக்கறையுடன் சொல்லா மலிருப்பதில்லை, தன்னைக் கோபத்துடன் ஏசுபவரிடம் பதில் பேசுவதில்லை, பண்டாரம் ஒரு புதிராகவே காணப்பட்டான்.

மாடசாமி சிறையிலும் வெளியிலும், காவி கட்டிய சில பண்டாரங்களைக் கண்டிருக்கிறான், கள்ளன் கண்டு அஞ்சத்தக்க காரியங்களைச் செய்து விட்டுக் காவியும் கட்டிக் கொண்டு திரிபவர்களைப் பார்த்திருக்கிறான்; இந்த வெள்ளை வேட்டிப் பண்டாரம், ஆதி கால அதிசய மனிதனாக அல்லவா இருக்கிறார்!! மாடசாமிக்குத் திகில் கூடக் குறைந்து விட்டது; பண்டாரத்திடம் மதிப்பு ஏற்படலாயிற்று.

உலகிலே மூன்றே தினுசானவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் மாடசாமி அதுவரையில் எண்ணிக் கொண்டிருந் தான்.

ஊரை அடித்து உலையில் போட்டுக் கொண்டு அந்த வேலையும் ஒருவருக்கும் தெரியாமல் செய்து விட்டு, ஊர்ப் பெரிய மனிதராய் வாழ்வு நடாத்தும் நயவஞ்சகர்கள்; பிழைக்க நாணயமான வழிகள் யாவும் அடைபட்டுபோனதாலோ, ஒரு வழியும் தெரியாததாலோ, மாடசாமியாகிவிட்டவர்கள்; உழைத்துப் பிழைக்கத் தெரியாமல், உலுத்தர்களுக்கு இறையாகி இம்சைப்படும் எளியவர்கள்! இப்படி மூன்று வகைதான், தெரியும்!! இந்தப் பண்டாரம், இந்த மூன்றுக்கும் அப்பாலல்லவா இருக்கிறான்! எப்படி முடிகிறது, இதுபோல் இருக்க? ஏன் இவ்விதம் இருக்கிறான்? இவனுடைய குணம், என் கோபத்தைச் சாகடிக்கிறது கொடியவனாக இருப்பதற்காக நானே வெட்கம் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அப்படிப்பட்ட எண்ணத்தை இவனுடைய பேச்சும் என் உள்ளத்திலேயே ஏற்படுத்தி விடுகிறதே! இது போன்றவர்கள், மேலும் சிலர் இருக்கிறார்களா? இருந்தால், உலகின் போக்கேகூட அல்லவா மாறிவிடும்!! என்றுகூட மாடசாமி எண்ணிடலானான். அவன், எப்போதும் தாக்குவது, துரத்தப்படுவது, பிடிபடுவது, தப்பித்துக் கொள்வது, பறிப்பது, அனுபவிப்பது, கிடைக்காத போது அலைவது, கண்டுபிடிப்பது, இவ்விதமான முறையிலே தான் இருந்து வந்திருக்கிறானே தவிர, சிந்தித்ததில்லை, அவசியமே கூட ஏற்பட்டதில்லை.

மாடசாமியின் மனத்திலே புதிய புதிய எண்ணங்கள் கொந்தளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது பண்டாரத்துக்கு; அவனுடைய ‘கதை’யைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுகூட ஆவல் ஏற்பட்டது.

பண்டாரத்துக்கு அந்த ஆவல் ஏற்பட்டது ஆச்சரியமல்ல, மாடசாமிக்கே அவ்விதமான ஆவல் ஏற்பட்டது. பண்டாரத்தின் ‘கதை’யைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல். கேட்கக் கூச்சமாக இருந்தது, கேட்டால் சொல்லமாட்டான் மாடசாமி என்று பண்டாரம் எண்ணிக் கொண்டான்.

புதிய எண்ணங்கள் தன் உள்ளத்தில் கிளம்புவதை மாடசாமி விரும்பவில்லை - எனவே சற்றுச் சிரமப்பட்டேனும், அந்த எண்ணங்கள் வளர விடாமல் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்து கொண்டு மீண்டும் முகத்தைக் கடுகடுப்பாக்கிக் கொண்டான் - பண்டாரம், பத்தரைமாத்துத் தங்கமாகக்கூட இருக்கட்டும் நமக்கென்ன, எப்படியோ இங்கு வந்து சிக்கிக் கொண்டு விட்டோம். நாம் யார் என்பதும் இவனுக்குத் தெரிந்து விட்டிருக்கிறது. எந்த நேரத்திலும் காட்டித் கொடுத்து விடக்கூடும். விரைவில் தப்பித்து ஓடிவிட வேண்டும்; இவன் ஏதோ புதிராக இருக்கிறான். ஆனால் எந்தச் சமயத்தில் இவன் மனத்திலே ‘கெட்ட’ எண்ணம் ஏற்பட்டு விடுமோ, யார் கண்டார்கள், என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

5
மாடசாமி உடனடியாக மாறிவிட மாட்டான் என்பது பண்டாரம் அறியாததொன்றல்ல, ஆனால் அவன் ‘பக்குவம்’ பெறுவதற்கான வழி ஏற்படக் கூடும் என்ற நம்பிக்கை மட்டும்-, ஏற்பட்டு விட்டது. இதுவே ஒருவிதமான வெற்றிதான் என்று மகிழ்ச்சியடைந்தான் பண்டாரம்.

அன்று வந்திருந்த ‘தபாலைப்’ பார்த்தான பிறகு, பண்டாரம், மாடசாமியிடம், “மாடசாமி! ஓர் அவசர காரியமாக நான் பக்கத்து நகரம் போகவேண்டி இருக்கிறது. மாலை வந்து விடுகிறேன்” என்றான்.

மாடசாமிக்குச் சந்தேகமும், பயமும், கோபமும் கொதித்தெழுந்தது.

அடடா! ஏமாந்து போனேன் இவன் பேச்சில் மயங்கி, இவன் பலே பேர்வழி, போலீசாரிடம் நான் சுலபத்தில் சிக்க மாட்டேன் என்பதைத் தெரிந்து கொண்டு, பெரிய அதிகாரிகளையே அழைத்துக் கொண்டுவர, பட்டணம் கிளம்புகிறான். என்னிடம் இனிப்பாகப் பேசி, நம்பவைத்து விட்டுச் செல்லப் பார்க்கிறான். இவனைப் போய் நானோர் ஏமாளி, தங்கக் கம்பி என்று எண்ணிக் கொண்டேனே! - என்றெல்லாம் மாடசாமி நினைத்தான். கோபத்தால் கண்கள் சிவந்து விட்டன. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து பண்டாரத்தின் கழுத்தை நெறித்துப் போட்டு விடலாமென்று தோன்றியது.

“என்ன அவசரமான வேலை?” சற்றுக் கோபமாகவே மாடசாமி பேசலானான்.

“அவசரம் எனக்கல்ல, வேலையும் என்னுடையதல்ல.” என்று பண்டராம் கூறிக்கொண்டே இரண்டோர் துணிமணிகளை எடுத்துப் பையில் திணித்துக் கொண்டிருந்தான்.

“இதோ பார் இப்படி! மாடசாமி மன்னார்சாமி அல்ல தெரிகிறதா? பசுத் தோலில் புலி நீ. உன் சூது எனக்குத் தெரியாமலில்லை. போலீஸ் படையை அழைத்துக் கொண்டு வருவதற்குத்தான் நீ பட்டணம் போகிறாய். இன்று நீ தேனொழுகப் பேசியதைக் கேட்டு நான் ஏமாந்து கிடக்கிறேன் என்று எண்ணிக் கொண்டாய். நான் மடையனல்ல, உன் சூது என்னிடம் பலிக்காது” என்று போருக்கு இழுக்கும் முறையில் பேசலானான் மாடசாமி. பண்டாரம் சிரித்தான்; சிரித்தது மாடசாமிக்கு மேலும் கோபத்தை மூட்டிற்று.

“சிரிக்காதே! உன் பச்சைச் சிரிப்பை, இந்தப் பட்டிக் காட்டுப் பைத்தியக்காரர்கள் நம்புவார்கள். என்னிடம் செல்லாது.”

“மாடசாமி! நீ உண்மையில் ஒரு கோழை...”

“நானா! கோழையா! சிறையில் உள்ள காவலாட்களே, பயப்படுவார்கள், என்னிடம்...”

“ஊரிலே பல பேர், உன்னைவிடக் கோழைகள்! அதற்கென்ன செய்யலாம். போலீசுக்குப் பிடிபடாத புலி! சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டு வந்து விட்ட சிங்கம்! ஒண்டி சண்டியாகச் சிக்கிக் கொண்டவர்களை ஓடஓட விரட்டி அடிக்கும் வீராதி வீரன் நீ, இப்போது, உன்னைப் பயம் பிய்த்துத் தின்கிறது. நான் போய், போலீசைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவேன் என்று கிலி கொண்டு விட்டாய், பைத்தியக்காரா, உன்னைப் பிடித்துக் கொடுக்க, நான் பட்டணம் போய், ஒரு படையையே கூட்டிக் கொண்டு வர வேண்டுமா? ஏன், இந்தக் கிராமத்து ஆட்களிடம் சொல்லி, உன்னைப் புளிய மரத்தில் கட்டி வைத்துச் செம்மையாக உதை கொடுத்துப் போலீசிடம் ஒப்புவிக்க முடியாதா! புத்தி இல்லையே உனக்கு! நீ, கள்ளன் சிறையிலிருந்து ஓடி வந்து விட்டவன் என்பது, நீ, எழுந்து உட்காரக் கூடச் சக்தியற்றுப் படுக்கையில் கிடந்தாயே, அப்போதே தெரியுமே, எனக்கு; பிடித்துக் கொடுத்திருக்கக் கூடாதா அப்போது.”

“பொய் பேசுகிறாய். நான் மாடசாமி என்பது உனக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது - போலீசை அழைத்துக் கொண்டு வரத்தான் பட்டணம் செல்கிறாய்.”

“சந்தேகம், உனக்குப் பயத்தை மூட்டி விட்டது. சங்கடமான நிலைமை, நானோ அவசியம் சென்றாக வேண்டும்.”

“போகக்கூடாது! போக விடமாட்டேன்.”

“போய்த் தீர வேண்டுமே.”

“முடியாது-நீ ஆயிரம் சமாதானம் சொன்னாலும் எனக்கு நம்பிக்கை ஏற்பாடது. நான் வலிவு பெற்று இந்த ஊரை விட்டுச் சென்ற பிறகுதான் நீ இந்த ஊரை விட்டுக் கிளம்ப வேண்டும். ஊரை விட்டு மட்டுமல்ல, இந்த வீட்டை விட்டுக்கூட நீ வெளியே செல்லக் கூடாது. நான் யார் என்பது தெரியும் உனக்கு; நீ வெளியே செல்ல முயன்றால், பிணமாக்கி விடுவேன்.”

“என்னடா, சங்கடம் இது. சரி, மாடசாமி! உனக்குச் சந்தேகம் குடைகிறது. நான் பட்டணம் போவதை நிறுத்திக் கொள்கிறேன், நீ பயந்து சாகாதே; ஆனால் எனக்குப் பதிலாக; நீ பட்டணம் சென்று, நான் சொல்லும் வேலையைச் செய்து விட்டு வரவேண்டும்; அதற்கென்ன சொல்லுகிறாய்.”

“வெட்டிப் பேச்சுப் பேசினால் எனக்குக் கட்டோடு பிடிக்காது.”

“வெட்டிப் பேச்சல்ல விவரமறியாதவனே! வேலை அவசரமான வேலை இருக்கிறது பட்டணத்தில், நான் போய்த் தீர வேண்டும். அல்லது நீயாவது போய் வரச் சம்மதிக்க வேண்டும். நான் ஒரு கடிதம் தருகிறேன், அதைக் கொண்டு போய் நான் குறிப்பிடும் இடத்தில் கொடுத்து விட்டு, அவர்கள் இடும் வேலையை முடித்து விட்டுத் திரும்பி வரவேண்டும்; அவர்கள் எனக்குச் சேதி ஏதேனும் சொல்லி அனுப்புவார்கள்.”

“இதை எல்லாம் காது கொடுத்துக் கேட்டுக்கொள்ள நான் அவ்வளவு முட்டாளல்ல. நீ வெளியே போகக் கூடாது; அவ்வளவுதான்.”

“போனால், கொன்று விடுவாய்... அப்படித்தானே”’

“அதிலே சந்தேகமே வேண்டாம். இந்த நிலையிலும் ஓர் ஆளைக் கொல்ல எனக்குச் சக்தி இருக்கிறது.”

“இதிலென்ன ஆச்சரியம்! மனிதன் வலிவு கொண்டு மிதித்தால் நசுக்குண்டு சாகக்கூடியது தான் பாம்பு - கடித்துச் சாகடித்து விடுகிறதே மனிதனை, அவன் ஏமாந்திருந்தால்!”

“ஐயா உபதேசியாரே! தலை வலிக்கிறது, உமது உபதேசம் கேட்டுக் கேட்டு, நிறுத்திக் கொள்ளும்.”
“ஊர் போகவிடப் போவதில்லை.”

“திரும்பத் திரும்ப அதையே கேட்கிறாயே”

“பரிதாபத்தால்தான் கேட்கிறேன். வேறென்ன, நீயோ நோயில் பட்டு வலிவிழந்து கிடக்கிறாய்... உன்னை அடித்துப் போட்டு விட்டுப் போக மனம் இடம் தரவில்லை.”

“என்னை... என்ன? என்ன? ஏ! பண்டாரம்! என்ன சொல்கிறாய்? என்னை அடித்துப் போட்டு விட்டுச் செல்லப் போகிறாயா... யார்? நீயா...”

“ஆமாம்! ஏன்? நீ என்ன, குத்துச் சண்டை குப்புப் பயில்வானைவிட பலசாலியோ! குப்புவே, குப்புற விழுந்தான் தெரியுமா...”

“யார், உன்னிடம் குத்துச் சண்டை போட்டா...?”,

“செச்சே! என்னிடமல்ல! குத்துச் சண்டைக் குப்புப் பயில்வானை நாலாவது ரவுண்டிலே குப்புற விழச் செய்தது, பாக்சர் பட்டு...”

“ஆமாம்... தெரியும்...”

“பாக்சர் பட்டு, என் சிஷ்யன்!”

பாக்சர் பட்டு...! என்று அச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த மாடசாமிக்கு மின்னல் வேகத்தில் நாலைந்து ‘குத்து’ விழுந்தது, அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான் - பண்டாரம், பதறாமல், அவனைக் கட்டிலில் தூக்கிப் போட்டு, அதிலேயே இறுக்கிக் கட்டி விட்டு, பிறகு வெளியே சென்றான்; குடிலைப் பூட்டி விட்டு.

ஒன்றின்மேல், ஒன்றாக அதிர்ச்சிகள் கண்ட மாடசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

பண்டாரம், இவ்வளவு திறமையான குத்துச் சண்டை வீரனாக இருக்க முடியும் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும். பரம சாதுவாக இருக்கிறான் தோற்றத்தில், பல்லே ஆடி விட்டது, அவன் தந்த குத்து அவ்வளவு பலமாக இருந்தது. பாக்சர் பட்டுவுக்கு இவன் நிச்சயம் குருதான்! இவன் பண்டாரக் கோலத்தில் இருக்கிறானே தவிர, பலே பக்கா பேர் வழியாகத் தான் இருக்க வேண்டும். பெரிய காலிக் கூட்டத்தின் தலைவன்! இவன் கிராமத்தில், பெரிய சாது போல இருந்து கொண்டு, தன் ஆட்களை வெளியே வேட்டை நடத்திக் கொண்டிருக்க ஏற்பாடு செய்திருக்கிறான். பூ பறிப்பதும், மூலிகை தேடுவதும், தைலம் காய்ச்சுவதும், கிராமத்துத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதுமாக இருந்து கொண்டிருக்கிறான் - அது ஊரார் கண்களிலே மண் தூவிட - வெளியே இவனுடைய கும்பல்” கொள்ளை, கொலை நடத்திக் கொண்டு இருக்கிறது. இவன் இப்படிப் பட்டவனாக இருப்பதனால் தான், நான் யார் என்பது கூட இவனுக்குத் தெரிந்திருக்கிறது. இவன் இதுவரையில் போலீசில் பிடித்துக் கொடுக்காததற்குக் காரணம் கூட இப்போதல்லவா தெரிகிறது! போலீசை அழைத்து வந்தால், தன் புரட்டும் எங்கே வெளியாகி விடுகிறதோ என்று இவனுக்குத் திகில். அடா! அடா! நான் தான் ஊர் மிரட்டும் போக்கிரி என்று இறுமாந்து கிடந்தேன், இவன் என்னைப் போன்ற ஆட்கள் ஆயிரம் பேரை எடுத்து விழுங் கியே விடுவான்! அசகாய சூரன்! கண்களே கீழே தெறித்து விழுந்து விடுவது போலல்லவா இருந்தது, பாவிப்பயல், கொடுத்த ‘குத்துகள் - எங்கே, ஒரு குத்துக் கூட என்மீது விழாமல் தடுத்துக் கொள்ள முடியவில்லையே!

இவன், பெரிய திட்டம் ஏதோ போடுகிறான், நிச்சயமாக.

போலீசில் என்னைப் பிடித்துத் தரமாட்டான் - நான் அப்படி முன்பு எண்ணிக் கொண்டது தப்பு, இவன், ஏதோ ஒரு பெரிய கொள்ளை நடத்த, என்னை ஏவப் போகிறான்! சிக்கிக் கொண்டால் தொலையட்டும், வெற்றி பெற்றால் இலாபம் நமக்கு என்று திட்டம் போட்டு அதற்காகவே என்னைக் காப்பாற்றி வருகிறான்!!

செச்சே! உலகம் என்னென்ன விசித்திரம் நிரம்பியதாக இருக்கிறது. ஒரு கிராமமே இந்தக் கபடனிடம் ஏமாந்து போய் இருக்கிறதே!! என்னதான், இனிக்க இனிக்கப் பேசினாலும், இவன் ஒரு பக்காப் பேர் வழி என்பதைக் கண்டு கொள்ளவா ‘இதுகளால்’ முடியாமற் போய்விட்டது!

கிராமத்து மக்கள் மீது தவறில்லை. குத்து விழுவதற்கு ஒரு வினாடிக்கு முன்பு வரையில், இவன் ஒரு வெகுளி, ஏமாளி, விசித்திரமானவன் என்றுதானே நம்பிக் கொண்டிருந்தேன். எத்தனை விதமான எத்தர்களைப் பார்த்திருக்கிறேன்; இவ்வளவு அனுபவம் இருந்தும் - நானே இவனுடைய பேச்சாலும் போக்காலும் ஏமாந்து போனேன் என்றால், பாவம், சூதுவாதறியாத இந்தப் பட்டிக்காட்டுப் பூச்சிகள் எப்படி ஏமாறாமல் இருக்கும்!!

மாடசாமி இவ்விதமாக வெல்லாம் எண்ணிக் கொண்டான், வலியும் களைப்பும் அவனைச் செயலற்றவனாக்கி விட்டது; கண்கள் வேறு ‘சொக்க’த் தொடங்கிற்று. என்ன இது? மயக்கமாக வேறு இருக்கிறதே!! ஐயோ! அவனுடன் பேசிக் கொண்டே அவன் தந்த ‘காபியை’ வாங்கிக் குடித்தேன் - அதில் ஏதாவது மயக்க மருந்து இருக்குமோ... என்ன கர்மமடா இது... புலிக் குகையிலே வந்து சிக்கிக் கொண்டு விட்டோம்... ஒரே இருட்டாகிக் கொண்டு வருகிறது... என்னமோ போலிருக்கிறது... ஐயோ! பாவி, என்னமோ செய்து விட்டுப் போய் விட்டானே...
மாடசாமி பிணம் போலானான் - மயக்கம் அவனைப் பலமாகப் பிடித்துக் கொண்டு விட்டது.