அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கடைசிக் களவு
5

ஊர் பெரியதனக்காரர் உத்தண்டிக்கு ஒரே மகள் ஒன்பது பத்து வயது, பட்டினத்தில் பாட்டி வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள் பாலா. விடுமுறைக்காக வந்த பாலாவுக்கு, ஒரு சிறு புறாக்குஞ்சு கிடைத்தது. அதை வளர்த்திட ஆவல். உத்தண்டி ஒரே அடியாகக் கூடாது என்று மறுத்து விடவே, வெள்ளை வேட்டியிடம் வந்தாள் அந்தச் சிறுமி. அந்தச் சமயம் வெள்ளை வேட்டி அங்கு இல்லை! மாடசாமி மட்டுமே இருந்தான்.

“தாத்தா! தாத்தா! இதோ புறாக் குஞ்சு - இதை எனக்காக வளர்த்துக் கொடேன். வீட்டிலே அப்பா திட்டுகிறார்” என்று கொஞ்சு மொழியில் பேசினாள் பாலா.

கொஞ்சுமொழியைக் கேட்டுப் பழக்கமே கிடையாது மாடசாமிக்கு.

எப்போதாவது ‘எதிர்ப்பட்டது’ கிடைக்கும்; அதுகள் பெற்ற குழந்தைகளின் முதுகில் அறை கொடுத்து. மூலையில் படுக்க வைத்து விட்டு வந்து, பேசும் - அவ்வளவுதான் அவன் பார்த்தது. இந்தப் பெண் பாலா, நீண்டகாலம் தன் பராமரிப்பில் இருந்தது போல அல்லவா கொஞ்சிப் பேசுகிறாள்! “புறாக் குஞ்சும் பூனைக்குட்டியும், போ! போ! தூக்கிக் கொண்டு போ!” என்று மிரட்டிப் பார்த்தான்.

“போ, தாத்தா! பாபம், இந்தப் புறாக் குஞ்சுக்குத் தாயும் இல்லை, தகப்பனும் இல்லை! இறக்கைகூடச் சரியாக முளைக்க வில்லை. பாவம். யாரும் கவனிக்காவிட்டால், செத்துப் போகும் பூனை பிடித்துத் தின்றுவிடும்.” என்று சொல்லும் போதே, சிறுமியின் கண்களில் நீர் தளும்பிற்று. மாடசாமியின் பாறை மனத்திலே ஏதோ ஓர் விதமான உணர்ச்சி புகுவது போலிருந்தது.

“தெ! பொண்ணு! எனக்கு என்ன தெரியும் புறா வளர்க்க! எல்லாம் அந்தப் பண்டாரம் வந்தபிறகு சொல்லு, அவன் புறாவையும் வளர்ப்பான் - புலிக்குட்டியையும் வளர்ப்பான்” என்று கூறினான் மாடசாமி.

“தாத்தா! நீ இவ்வளவு நாளாக இங்கேயே இருக்கிறயே, அவர்கிட்டே இருந்து, இதெல்லாம் கத்துக் கொள்ளலையா...” என்று அந்தச் சிறுமி கேட்டுவிட்டு, மீண்டும் கொஞ்சலானாள்.

புறாக்குஞ்சு, தத்தித் தத்தி மாடசாமிக்கு அருகே வந்தது.

சிறுமி, கைதட்டிச் சிரித்துக் கொண்டே, “பார், தாத்தா, பாரு! நீ வேண்டாம் என்றாலும், புறாக் குஞ்சு உன்னைத் தேடிக்கிட்டுத்தான் வருது” என்றாள். மாடசாமிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

புறாக்குஞ்சை எடுத்துத் தடவிக் கொடுத்தபடி, “ஏது, இது?” என்று கேட்டான்.

“மரத்துப் பொந்திலே இருந்து கீழே விழுந்து விட்டது தாத்தா! பாபம். பூனை பார்த்தா, தீர்ந்தது, தின்னுப் போடும். பெரிசானா, தாத்தா, புறா அழகா இருக்கும், எனக்குப் புறான்னா ரொம்ப ஆசை...” என்றாள் சிறுமி.

“சரி! சரி! நீ போ, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் மாடசாமி.

ஒரு பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற தத்துவம் அவனுக்குத் தெரியவில்லை. ஒரு தொல்லை ஒழிந்தது - என்று எண்ணிக் கொண்டுதான், சிறுமியை அனுப்பி வைத்தான்.

புறாக்குஞ்சு, அவனுடைய உள்ளங்கரத்தின் கன கனப்பை மெத்த விரும்புவதுபோல, படுத்துக் கொண்டது.

உன்னிப்பாக அதைப் பார்க்கலானான்.

முட்டை... குஞ்சு ஆயிற்று... முட்டைக்குள்ளே இது இருந்திருக்கிறது... இந்தக் கால்கள் - கண்கள்... வேடிக்கை தான்! முட்டை உடைந்து போயிருந்தால்...? குழம்புதான்! குஞ்சு ஏது! இதுகூடத்தான், கவனிப்பாரற்றுப் போனால், செத்து விடும்... பிறகு! குப்பைதான்! ஈ எறும்பு மொய்த்து அரித்துத் தொலைத்து விடும்...

புறாக்குஞ்சு, கத்திற்று, பசி போலிருக்கிறது... சனியன் போல இது ஒன்று வந்து சேர்ந்தது... சரி... சரி... இரு... இரு... இது என்ன தின்னும்?... ஏதேதோ போடலாம் என்று எண்ணினான்.

புறாக்குஞ்சுடன், மாடசாமி பேசவே ஆரம்பித்துவிட்டான்!

“அடச்சே, ஏன் இப்படிக் கத்தித் தொலைக்கறே... பசியா... இருக்கும்... இருக்கும்... என்ன செய்யும் பாபம், குஞ்சுதானே... பெரிசானா, பறந்து போகும் இரை தேடித் தின்னும்... இப்ப...” என்று மாடசாமி, தான் பேசுவதை வெள்ளை வேட்டி கேட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.

வெள்ளை வேட்டியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருந்தது. கண்களிலே நம்பிக்கை ஒளி பிறந்தது.

“மாடசாமி...” என்று அழைத்தான்.

“வந்து விட்டாயா... வா, வா... இதோ பார், அந்தப் பெண், பாலா, இதைக் கொடுத்தது” என்றான்.
“புறாக்குஞ்சு... வைத்துக் கொள்...” என்றான் வெள்ளை வேட்டி.

“எனக்கு ஏன்?”

“வேண்டாமென்றால், வீசி எறிந்து விடு...”

“செச்சே! பூனை தின்று விடும்”

“தின்று விடட்டும், அதனால் என்ன...”

“ஐயோ, பாவம்... அந்தப் பெண், அழுமே...”

“அழட்டுமே...”

“அடச்சே! போ பண்டாரம்! புறாக்குஞ்சைப் பூனை தின்று விடாதபடி பார்த்துக் கொள்ளச் சொல்லி பாலா, கொஞ்சிக் கொஞ்சிச் சொல்லிவிட்டுப் போயிருக்கு.”

புறாக்குஞ்சுக்கு இரை தர முயன்றான் மாடசாமி.

“மாடசாமி! இதற்குப் பயறும் அரிசியும் கடலையும் தீனி... ஆனால், இப்போது தானாகத் தின்னாது... ஊட்ட வேண்டும்...” என்று, வெள்ளைவேட்டி கூறினான்.

“ஊட்டுவதா... எப்படி...” மாடசாமி கேட்டான்.

“நீ, கடலையை வாயில் போட்டு மென்று பிறகு, அதன் வாயில், தர வேண்டும்” என்று முறை கூறினான் வெள்ளை வேட்டி.

புறாக்குஞ்சு, பசியால் கத்திக் கொண்டே கிடந்தது. வெள்ளைவேட்டி வேறு வேலையாகப் போய் விடவே, மாடசாமி, புறாக்குஞ்சுக்குத் தீனி கொடுக்கும் வித்தையில் ஈடுபடலானான்.

நாலைந்து நாள், சிரமமாகக் கூட இருந்தது. ஆனால் ஒவ்வோர் நாளும், பாலா வந்து கேட்கும் போது மாடசாமி, புறாக்குஞ்சைக் காட்டுவதில் பெருமையே அடைந்தான்.

விடுமுறை முடிந்து பள்ளிக்கூடத்துக்காகப் பட்டினம் போகும்போது பாலா, மாடசாமியிடம் பன்னிப் பன்னிச் சொன்னாள்... “ஜாக்கிரதை... பூனை பிடித்து விடப் போவுது... நான் திரும்பி வருகிறபோது புறா பெரிசா இருக்க வேணும்... அழகா இருக்க வேணும்...” என்றெல்லாம்.

மாடசாமிக்கு ஒரு வேலை - பொழுதுபோக்கு கிடைத்து விட்டது.

மாடசாமிக்கு இப்போதுதான், மனிதத் தன்மை பிறக்கப் போகிறது என்று வெள்ளை வேட்டி எண்ணி மகிழ்ந்தான்.

அதுவரையில் மாடசாமி யாரிடமும் பேசுவதில்லை. அவனிடமும் யாரும் பேசவும் மாட்டார்கள்.
புறாக் குஞ்சு கிடைத்து அதை வளர்க்க ஆரம்பித்த பிறகோ, மாடசாமியே பலரிடம் பேசலானான். தீனி என்னென்ன போடலாம், கூண்டு எப்படியிருக்க வேண்டும்! வெளியே எப்போது உலவ விடுவது... என்ற தகவல்களையெல்லாம்.

குஞ்சு, அழகான புறாவயிற்று. வெண்ணிறம் அது குபுகுபு வெனச் சத்தமிடுவதும், சிறகை விரிப்பதும் மடக்கிக் கொள்வதும், தீனியைக் கொத்திக் கொத்தித் தின்பதும், தண்ணீர்த் தட்டில் இறங்கிக் குளிப்பதும், குளித்த பிறகு, சிறகு களை உலர்த்திக் கொள்ளும் அழகும், அது கம்பீரமாக கழுத்தை வளைத்துப் பார்ப்பதும், அசைந்து அசைந்து நடந்து காட்டுவதும், கண்டு மாடசாமிக்கு, மகிழ்ச்சி ஏற்படலாயிற்று.

புறாக்கள் பற்றிய தகவல்களைப் பலர் அவனிடம் கூறினர். ‘ஜோடி’ போட வேண்டும் என்றனர்! ‘ஜோடி’ கிடைத்தது! இரண்டும் நடத்தும் ‘காதல் வாழ்க்கை’யைக் கண்டான் - களிப்புடன். முட்டைகள்! குஞ்சுகள்! புதிய புறாக்கள்! புதுப்புது தினுசான புறாக்கள்! கூண்டு பெரிதாக! மாலை வரையில் புறாக்களை, மேய விடுவது, பிறகு கூண்டுகளில் போட்டு அடைப்பது; முட்டைகள் சேதமாகாமல் பார்த்துக் கொள்வது; இப்படி மாடசாமிக்கு வேலை வளர்ந்து விட்டது.

மாடசாமி மனிதனாகிறான் என்று, வெள்ளை வேட்டி திருப்தி பெறலானான்.

சிறுவர் சிறுமியர், மாடசாமியின் புறாக்களை வேடிக்கை பார்த்து மகிழ்வர்; புறாக்களின் நேர்த்தியைக் கண்டு பலரும் பாராட்டுவர்; மாடசாமிக்கு, அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்பதில் தனியானதோர் மகிழ்ச்சி.

விதவிதமான புறாக்களாகத் தேடித் தேடிப் பெறுவதும், ‘ஜோடி’ சேர்ப்பதிலும் புறாக்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதிலும், மாடசாமிக்கு அதிக அக்கறை ஏற்பட்டு விட்டது. ஒரு முட்டை சேதப்பட்டுப் போனாலும், அன்று முழுவதும் வருத்தமாகவே இருப்பான். ஏதாவது ஒரு புறா, தீனி சரியாகத் தின்னாவிட்டால், கவலைப்படுவான்.

பூனை கண்ணில் பட்டால் போதும் பயந்தே போவான்! மாடசாமி தன் வாழ்நாளிலேயே, இந்த விதமான பொறுப்பைக் கண்டதில்லை. தன்னையுமறியாமல், புதியதோர் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அதனை நிறைவேற்றுவதிலே பெருமையும் மகிழ்ச்சியும் சுரக்க ஆரம்பித்தது; அது தனிச்சுவை தந்தது. அதுவரையில் மாடசாமிக்குக் கனிவுடன் பார்ப்பது, கவலையைப் போக்கிடப் பேசுவது என்பவை எதுவும் தெரியாது; அதற்கான அவசியமும் எழுந்ததில்லை.

இப்போது! புறாக்களின் சத்தம் அவனுக்குச் சங்கீதமாகி விட்டது. அவை, தீனி தின்பதைக் காண்பதில் ஓர் திருவிழா மகிழ்ச்சி கண்டான்.

“மாடசாமி அண்ணே! இந்த வெள்ளை இருக்கே... என்ன ஜாதின்னு பெயர் இதுக்கு?” என்று யாராவது கேட்டு விட வேண்டியதுதான், மளமளவென்று புறாக்கள் பற்றிய சகல சரித்திரமும் கூறத் தொடங்கி விடுவான்.

“இதுதாண்டா தம்பி, லக்கா! ஆடும் புறா, ஆடும் புறான்னு சொல்வாங்க! மயில் ரொம்ப அழகுன்னு சொல்வாங்க... நம்ம லக்காவோட காலிலே கட்டிவிட்டு அடிக்கோணும் உங்க மயிலை! பாரேன், அது தோகையை எவ்வளவு அழகா விரித்து ஆடுது! பலே! பலே! அப்படி! கழுத்து வெட்டு, பார்த்தாயா... நாட்டியமாடுறாங்களே அவங்களெல்லாம், நம்ம லக்காவிடம் வந்து ஒரு மண்டலம் பாடம் கத்துக் கொள்ள வேணும்! - என்று புகழ ஆரம்பித்து விடுவான்.

“அண்ணே! அந்தச் சாம்பல் கலர் இருக்கே, அது... பெரிசா இருக்கே...” என்று வேறொருவன் வேறோர் திசைக்குத் திருப்பி விடுகிற வரை, லக்கா பற்றிய பேச்சுத்தான்!

“படாங்கு! சதைப் படாங்குன்னு சொல்றது! அது சும்மா, ஆள் ஒழுங்கோட சரி... ஆடாது, அசையும்... கனமான சரீரம்...” என்பான் மாடசாமி.

யாரும், எதையும் கேட்காவிட்டால் தானாகவே கூடக் கூற ஆரம்பித்து விடுவான்.

“டே! தம்பி! கர்ணம் போடுவாயா, நீ! எத்தனை கர்ணம் போடுவே? எவ்வளவு வேகமாகப் போட முடியும், உன்னாலே... நல்ல லோட்டியோட போட்டி போட முடியுமா, உன்னாலே. பார் இப்ப காட்டறேன்” என்று கூறிவிட்டு, ஒரு புறாவை எடுத்து, அதன் கழுத்திலே விரலால் சுற்றி விட்டுக் கீழே உருட்டி விடுவான் - உடனே, அந்த லோட்டி கரணம் போட்டுக் கொண்டே இருக்கும். பலரும் ஆச்சரியப்படுவார்கள்; ஆச்சரியப்படாதவர்கள் மீது மாடசாமி எரிந்து விழுவான்.

“பாவம், வாடா, டேய்! போதும், போதும்! உன்னோட போட்டிய போட யாராலே முடியும்...” என்று கூறிக் கொண்டே, கர்ணம் அடித்துக் கொண்டிருக்கும் ‘லோட்டி’யைப் பிடித்து எடுத்து. அதன் வாயில் காற்று ஊதி விட்டு, அடக்குவான்.

“பார், இதோ” ...என்று கூறி, ஒரு புறாவைத் தூக்கி, பந்து எறிவது போல, சுவரின் மீது போடுவான். அது அப்படியே போய் சுவரிலே ஒட்டிக் கொள்ளும்... பிசின்போட்டது போல!
இதுதான், ‘சுவரொட்டி’ என்று துவக்கினால், அரை மணி நேரமாவது ஆகும், பேச்சு முடிக்க.
மாடசாமி, புறாக்களிடம் காட்டும் பரிவும் பாசமும் அக்கறையும், அவற்றைப் பராமரித்திட அவன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும் கண்ட வெள்ளைவேட்டி, போதனையும் - போலீசும் - வெற்றி பெற முடியவில்லை! புறாக்கள் அல்லவா, மாடசாமியை மனிதனாக்கி வருகின்றன! என்று தனக்குள் கூறி மகிழ்ந்து வந்தான்.

மாடசாமிக்கு, அதுவரையில் ஏற்படாதிருந்த பரிவு, பாசம், போன்ற உணர்ச்சிகள் உள்ளத்தில் குடியேறின. எவரிடமும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதையே வீரம் என்று எண்ணிக் கொண்டிருந்தவன், புறாக்கள் விஷயமாகப் பலரிடமும் ‘தன்மை’யாகப் பேசலானான். அதுமட்டுமல்ல! புறாக்களின் கூட்டம் வளர வளர, தீனிப் பிரச்சனையும் வளர்ந்தது - தனக்கும் உணவளித்து, தன் புறாக்களுக்கும் உணவளித்திடச் செலவு செய்யும் வெள்ளைவேட்டிக்குத்தான் ஒரு ‘பாரமாக’ இருப்பது பற்றி எண்ணிச் சிறிதளவு வெட்கமடையலானான்.

இவ்வளவு உதவி அளித்து வரும் வெள்ளைவேட்டிக்குத் தானும் ஏதாவது ஒரு வகையிலே உதவி செய்வதுதான் முறை என்று எண்ணினான். அவருக்கான பச்சிலைகளை அரைத்துக் கொடுப்பது, மூலிகைகளைப் பதமாக்குவது போன்றவை
களிலும் ஈடுபடலானான். இரவு படுக்கும்போது, லோட்டி இன்று சரியாகத் தீனி தின்னவில்லை, லக்கா முட்டையிட்டிருக் கிறது, இன்னும் ஒரு மூன்று நாளில் குஞ்சு பொரிக்கும் காலை
யிலே, புறாக்கள் குளித்திட வைத்திருக்கும் தண்ணீர்த் தட்டைக் கழுவ வேண்டும்; இப்படிப்பட்ட நினைவுகள்தான்! கன்னம் வைப்பது, நூலேணி போட்டு உள்ளே நுழைவது, என்பன போன்றவற்றிலே நாட்டம் செல்லவில்லை.

களவாடினோம் - கை நிறையப் பொருள் இருக்கும் போதும், குடித்துக் குளறிக் கிடந்தோமே தவிர, இதோ இந்தப் புறாக்கள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஏற்படுகிறதே ஆனந்தம், அதுபோல ஒருநாள் கூட நமக்கு ஏற்பட்டதில்லையே! இப்போது எவ்வளவு நிம்மதி! அன்பு செலுத்துகிறோம் - அதுவே நமக்கோர் ஆனந்தம் தருகிறதே! இஃதல்லவா, மனிதன் அடைய வேண்டிய வாழ்க்கை, முன்பெல்லாம் என்னைக் கண்டால் பலருக்கு அச்சம்; யாரைக் கண்டாலும் எனக்கு அருவருப்பு! இப்போது கூடு திறக்கப்பட்டதும், சிறகுகளை அடித்துக் கொண்டு புறாக்கள் வெளியே வருகிற காட்சியைக் காணும்போதே அல்லவா, மகிழ்ச்சி பிறக்கிறது! குழந்தையுடன் கொஞ்சும் தாய்க்கு, மழலை கேட்டு இன்புறும் தகப்பனுக்கு, இதைவிடக் களிப்பு அதிகமாக அல்லவா இருக்கும்! அதுபோன்ற உணர்ச்சியையே கண்டதில்லையே! புறாக்களே இவ்வளவு மகிழ்ச்சி அளிக்கும் போது, பெற்றெடுத்த மக்கள்! புறாக்களை வளர்ப்பதிலேயே இவ்வளவு மகிழ்ச்சி பிறந்திடுதே, குடும்பத்தைக் காப்பாறிடும் போது, குதூகலம் அதிகமாக அல்லவா இருக்கும்!

இவ்விதமெல்லாம் எண்ணிக் கொள்வான், மாடசாமி, வெள்ளை வேட்டி, இந்த மாறுதலைக் கூர்ந்து கவனித்து வந்தான். புறாக்களிடம் பாடம் பெறுகிறான்! பிரிவு, பாசம், அக்கறை, அன்பு, பொறுப்பு, கவலை, அச்சம், மகிழ்ச்சி எனும் பல்வேறு உணர்ச்சிகள் அரும்புகின்றன, மலருகின்றன. மக்களிடம் வாழ்வதற்கேற்ற பக்குவம் மெல்ல மெல்ல, ஆனால் நிச்சயமாக இவனுக்கு ஏற்பட்டு விட்டிருக்கிறது. இன்னும் ஒரு சிறு முயற்சி - பயணத்தில் மேலும் ஒரு கட்டம், மாடசாமி நல்லவனாகி விடுவான்!! - என்று வெள்ளை வேட்டி எண்ணி மகிழ்ந்து வந்தான்.