அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கடைசிக் களவு
3

மாடசாமியை அடித்துக் கீழே விழுத்தி விட்டு, பச்சா தாபப்பட்டபடிதான் பண்டாரம் வெளியே சென்றான்.

பாவம்! பலமாகத்தான் அடித்து விட்டேன். வேறு வழி? சந்தேகமும் பயமும் அவன் மிருக உணர்ச்சியை மேலோங்கச் செய்து விட்டது. அவனிடம் பேசிப் பயன் காண முடியாத நிலை, மிருகமானான், மிருகமானேன்!! எத்தனையோ ஆண்டுகளாக, இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் இருந்து வந்தேன் - இன்று வேறு வழியில்லை!! என்ன செய்வது? பலருக்குப் பலவிதமான நியாயம் எடுத்துச் சொல்கிறேன் ? கோபம் கூடாது - ஆத்திரம் ஆகாது - பலாத்காரம் மிகக் கேவலமானது - தலை போகும் தகராறு ஆனாலும் இதமகாப் பேசிச் சமரசம் காண முடியும் - சச்சர விடுவது மனிதத் தன்மை அல்ல, என்றெல்லாம் சொல்லி வருகிறேன் - எத்தனை எத்தனையோ ‘பேர்’ திருந்தி வரவும் காண்கிறேன். ஆனால் நான் மிருகமானேன்!! நோயால் தாக்குண்டு கிடக்கிறான், பயந்து சாகிறான் அந்தப் பரிதாபத்துக்குரியவன், திருப்பித் தாக்கவோ, தடுத்துக் கொள்ளவோ, சமாளிக்கவே சக்தியற்ற நிலையில் இருக்கிறான் - அந்த நிலையில் அவனைப் பலமாகத் தாக்கி விட்டேன், மயக்க மருந்து போதும் - அது வேலை செய்யட்டும் - என்று கூடப் பொறுமையாக இருக்க முடியவில்லை. சாந்த போதனை எல்லாம், பஞ்சாகிப் பறந்து போயிற்று தவறு செய்து விட்டேன், அதுவும் நிலைமையைச் சமாளிக்கத்தான் என்று அவனிடம் பிறகு விளக்கம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பண்டாரம், தன் எதிரே வந்தோரிடம், அதிகம் பேசாமல், வேகமாக நடந்து சென்றார்; இரயிலடி மூன்று கல்தொலைவில் இருந்தது; ‘ஊருக்கு உபகாரி’யாகையால், பண்டாரத்துக்குப் பேச்சுத் துணையாகச் சென்று வரவேண்டுமென்று, சிலர், பேசிக் கொண்டே உடன் சென்றனர்; அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டு, அவசரமான வேலை, விரைவிலே முடித்துக் கொண்டு, பொழுது சாய்வதற்குள் வந்து விடுவதாகக் கூறிவிட்டு, வழக்கத்தைக் காட்டிலும் அதிக வேகமாகச் சென்றார். அவர் இரயிலடி செல்வதற்கும், வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது. டிக்கெட் பெற்றுக் கொண்டு, அவசர அவசரமாக ஏறிக் கொண்டார்; உட்கார இடம் பார்க்கும்போது,
“நமஸ்காரம்! சௌக்கியமா?” என்று கேட்டுவிட்டு, ஒரு மாது புன்னகை செய்தபடி, தன் எதிரில் இருந்த இடத்தைக் காட்டி உட்காரச் சொன்னாள். வண்டியில் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த அந்தக் கிராமத்தார் சிலர், பண்டாரத்திடம் அந்தப் பெண் பேசியது கண்டு, முகம் சுளித்துக் கொண்டனர்.
“மறந்தே போயிட்டிங்களா?”

“இல்லே! இல்லே!”

“பல வருஷமாகுதே! அதனாலே கேட்டேன். ஆமாம், எங்கே வாசம்? என்ன வேலை?”

“இதே கிராமத்திலே தான்! வைத்தியம்”

“அதை எப்ப கத்துக்கொண்டிங்க. நான், நீங்க ஏதோ கதா காலட்சேபம் செய்து கொண்டிருப்பிங்கன்னு எண்ணிக் கொண்டேன்.”

“இல்லே...”

“ஆமாம்! எத்தனையோ வருஷத்துக்குப் பிறகு சந்திக் கிறோம். ஒரு வாஞ்சனை, விசுவாசம் இல்லாமல், யாரோ அறிமுகமாகதவர்போலே அருவருப்பாப் பேசறிங்களே. ஏன்? என் மீது என்ன கோபம்?”

“எனக்கென்ன கோபம்? களைப்பு, வேறொன்று மில்லை”

களைப்பு என்று சொன்னவுடன், அந்த மாது, வெள்ளிக் கூஜாவைத் திறந்து, சூடான காப்பியை டம்ளரில் ஊற்றி அவரிடம் கொடுத்தாள். மறுக்க முடியவில்லை. டம்ளரைக் கையில் வாங்கிக் கொண்டவர், சிறிதளவு சாப்பிட்டு விட்டு, வண்டியில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தைக்குத் தரப்போனார்; குழந்தையின் பாட்டனார், பண்டாரத்தைப் பார்த்து, “நீங்க சாப்பிடுங்க, பண்டாரத்தய்யா! அந்த அம்மா, பாவம் அம்மாம் ஆசையா கொடுக்குது; சாப்பிடுங்க...” என்று குறும்புத்தனமாகச் சொன்னார். அந்த அம்மை, இதைச் சட்டை செய்வதாகத் தெரியவில்லை. பண்டாரத்துக்கும் தனக்கும் நீண்ட காலப் பழக்கமும், தொடர்பும் உண்டு என்பதை அனைவரும் அறிந்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசுவது போலவே நடந்து கொள்ளத் தலைப்பட்டார்கள்; பண்டாரத்தின் பாடு, சிறிதளவு சங்கடமாகி விட்டது. வண்டியில் பலரும் தன்னைக் கூர்ந்து நோக்குவதைத் தெரிந்து, கூச்சமும் அடைந்தார்.

“எங்கே போவுது?” என்றான் கிழவன்.

“எழிலூருக்குத்தான்” பண்டாரம் கிழவனுக்குப் பதிலளித்தான் - மாது “அடெ! தெய்வ சங்கற்பத்தைப் பாருங் களேன் - நானும் அங்கேதான் போகிறேன்” என்றாள். கூறிவிட்டு “எழிலூரிலே, எங்கே? என்ன வேலை? எத்தனை நாள் தங்கப் போகிறிங்க?” என்று கேள்விகளைப் பூட்டினாள்.

“ஒரு அவசர வேலை; போய் அதைப்பார்த்துவிட்டு, மாலையே வந்துவிட வேண்டியதுதான்” என்றார் பண்டாரம். விடவில்லை அந்த மாது! பத்து வருஷத்துக்கு முன்பு இருந்திருக்க வேண்டிய, குழைவுடன், “விடுவேனா! பார்த்து எத்தனையோ வருஷமாகுது. நாளைக்கு நம்ப தங்கச்சிக்கு நிச்சயதார்த்தம்; அதுக்கு இருந்து, சுபகாரித்தை நடத்தி வைத்து விட்டுத்தான், ஊர் திரும்ப வேணும்” என்றாள்.

“பழம் நழுவிப் பாலிலே விழுந்ததுன்னு பழமொழி சொல்லுவாங்களே, பண்டாரத்தய்யா, இதுதான் அது!” என்று கிழவர் மீண்டும் கேலி பேசினார்.

“நல்லாச் சொன்னிங்க தாத்தா! இவரை நான் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போலக் கண்டேன்; என்னோட குடும்பத்திலே நடக்கிற சுபகாரியம் இவர் இருந்து நடத்திக் கொடுக்கும் ‘பாக்கியம்’ இருக்குது பாருங்கோ. என்னோட ஜாதகபலன் அப்படி” என்று கிழவர் கேட்கா விட்டால்கூட, மளமளவென்று தனக்கும் பண்டாரத்தாருக்கும் எவ்வளவு சொந்தம் என்ற ‘கதை’யையே கூறிவிடுவாள் போலிருந்தது. கிழவர் அதுவரையில் காத்துக் கொண்டிருப் பானேன் என்று தானாகவே கிளற ஆரம்பித்தார்.

“அம்மோய்! இவர் எங்க கிராமத்திலே கண் கண்ட தெய்வம் மாதிரி. இவர் இல்லாமெ ஒரு காரியமும் நடக்காது. காவி கட்டாத சாமியாருன்னு பேரு...” என்றார்.

“அவருக்கு என்னங்க! எங்கே இருந்தாலும், தங்கம் தங்கம்தானே. உங்க கிராமத்திலே அவருக்கு இருக்கிற மதிப்புத்தானா பிரமாதம்” என்று பீடிகை போடலானாள்.

ஓடிக் கொண்டிருந்த இரயில், ஒரு குலுக்கு உலுக்குடன் திடீரென்று நின்றது; வண்டியிலிருந்தோர், பதறிப் போயினர். என்ன? என்ன? ஏன் வண்டியை நிறுத்தி விட்டான் என்று கேட்டபடி, பலரும் வெளியே பார்த்தனர், வண்டியிலிருந்து ஒரு கும்பல் அதற்குள் கீழே இறங்கி, ‘சேதி’ விசாரிக்கலாயிற்று.

சின்னஞ்சிறு சிசு!

தங்க விக்கிரகம் போலக் குழந்தை!

எந்தப் பாவியோ!

திருட்டுக் குழந்தை!

டிரைவர் ரொம்பக் கெட்டிக்காரன்; வண்டியை, வேறே ஒருத்தனாலே இப்படி நிறுத்தியிருக்க முடியாது.

ஆமாம், குழந்தை இந்நேரம் கூழாகிப் போயிருக்கும்.

பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டனர். சிறிது நேரத்திற் கெல்லாம், வண்டி புறப்பட்டது.

“கேட்டிங்களா, முன்னே ஒரு ஆறு மாசத்துக்கு முந்தி...” என்று பேச்சுத் துவங்கிய, அந்த மாது, எதிரே இருந்த பண்டாரத்தைக் காணாமல், கிழவரைப் பார்த்து “எங்கே அவரு?” என்று கேட்டாள். கிழவரும் அப்போது தான், பண்டாரம் இல்லாததைத் தெரிந்து கொண்டார். ‘ஆமாம், அடெ, காணோமே, கீழே இறங்கிப் போச்சி, திரும்பி வரவில்லை” என்றான்.

“அவசரத்திலே வேறே வண்டியிலே ஏறிவிட்டிருக்கும்” என்றாள் மாது.

“அது ஞானப்பைத்தியம், வேறே வண்டியிலே ஏறி இருந்தாலும் இருக்கும், கீழேயே நின்று விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை” என்று கூறினான்.

அடுத்த நிற்குமிடத்தில், பண்டாரம், வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்த மாது, ஏமாற்றமடைந்தாள்.

பண்டாரம் இல்லாவிட்டாலென்ன, நம்மிடம் வம்பளந்து கொண்டு வருவாள், என்று கிழவன் எண்ணி ஏமாந்தான்; அந்த மாது, பக்கத்தில் இருந்தவர்களை இடம் ஒதுக்கச் சொல்லி, படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்!

பிச்சைக்காரச் சிறுமி ஒருத்தி,

காணக் கண் காட்சியே
காஞ்சி கருடசேர்வை
காணக் கண் காட்சியே

என்று பாடிக் கொண்டிருந்தாள்.

7
“தப்பினேன்! என் மானத்தையே வாங்கி விட்டிருப்பாள், அந்த வம்பளப்புக்காரி -இரயில் நின்றது நல்லதாகி விட்டது.” என்று எண்ணியபடி வெள்ளை வேட்டிப் பண்டாரம் சாலையோர
மாக நடந்து கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்றதும் ஒரு
போக்கு வண்டி கிடைத்தது. அதிலேறிக் கொண்டு எழிலூர் சென்றான்.

எழிலூர் அன்று எழிலுடன் விளங்கிற்று. எங்கும் தோரணங்கள், வளைவுகள், விழாக்கோலம்!

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
நீறில்லா நெற்றிபாழ்!
அன்பே சிவம் சிவமே அன்பு!
அருளுடையார் எல்லாம் உடையார்
அஃதிலார் என்னுடையரேனும் பயனிலார்
வெள்ளி அம்பலத்து வேந்தே வருக!
திரிபுரதகனன் திருப்பாதம் போற்றுவம்!
மக்கள் புகலிடம் மடாலயம் அறிவீர்!

ஊரெங்கும் இதுபோன்ற அலங்கார வளைவுகள்!

‘வெள்ளை வேட்டி’ புன்னகையுடன், இவற்றைப் பார்த்திடக் கண்ட போக்கு வண்டிக்காரன்,

“இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லீங்க, தம்பிரான் வருகிறார், தரிசிக்க வாங்க, தட்சிணை கொடுங்க என்று தம்பட்டம் அடிக்கிறாங்க பலமா! ஊரிலே ஊர்க்குடி கெடுப்பவனுடைய கொட்டம் அடங்கலிங்க. அடக்க எவனும் இல்லே!” என்று முணுமுணுத்தான். அவன் பேச்சு தனக்குப் பிடிக்காததுபோலப் பாவனை செய்து, வாதாடி, அவனுடைய மனத்திலே குமுறிக் கொண்டிருந்த எண்ணங்களை எல்லாம் வெளியே வரச் செய்து வெள்ளை வேட்டி மகிழ்ச்சியுற்றான்.

“இப்படி எல்லாம் பேசுவது பாபம் தோஷம்.”

“இந்தப் பூச்சாண்டி காட்டிக்காட்டித்தானே, எங்களை எல்லாம் வாயில்லாத பூச்சிகளாக்கி விட்டாங்க.”

“பெரியவர்கள் ஏற்பாடப்பா, இதை எல்லாம் குறை கூறினா...”

“நாக்கு அழுகிப் போகும்! தலையிலே இடி விழும் என்று சொல்லப் போறிங்க, வழக்கமாகச் சொல்லுகிற பேச்சுத்தானே! சும்மா சொல்லுங்க! நித்த நித்தம் செத்துச் செத்துப் பிழைப் பதைக் காட்டிலும், தலையிலே இடி விழுந்து, பிராணன் ‘பட்டு’ன்னு போயிட்டா நல்லதுதான்.”

“மேல் உலகத்திலே...”

“மேலாவது கீழாவது! நீ சுத்தக் கர்நாடகம் போல இருக்கு, ஒரு இழவும் உனக்குப் புரியமாட்டேனென்குது. அதெல்லாம், இட்டுக்கட்டி விட்டது. யாருக்கு இப்ப அதெல்லாம் நம்ப முடியுது.”

இப்படி உரையாடல் வளர்ந்து, இறுதியில், வண்டிக்காரன், வெள்ளை வேட்டிக்க ‘ஆசிரியன்’ வேலையே பார்க்க ஆரம்பித்து விட்டான்.

எவ்வளவோ முற்போக்கு மலர்ந்து விட்டது! பழைமை வேகமாக மடிகிறது! புதுமைக் கருத்துகள் அழகழகாகப் பூக்கின்றன! அடுத்த தலைமுறை நிச்சயமாக அறிவொளி பெற்றதாக இருக்கும் என்றெண்ணி வெள்ளை வேட்டி மகிழ்ந்தான்.

ஒரு பெரிய மாளிகையில் மடாதிபதி வந்து தங்கி இருக்கிறார் என்றும், நாலு நாட்கள், சமயப் பிரசாரமும், தரிசனமும் நடைபெற ஏற்பாடாகி வருவதாகவும், வண்டிக் காரன் கூறினான்.

“இந்தப் பக்கத்திலேயுள்ள மிட்டா மிராசுகள் அத்தனையும், பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டு பக்திக் கோலத்திலே, மடாதிபதியைத் தரிசிக்க வந்திருக்கிறார்கள்” என்ற செய்தியையும், வெள்ளை வேட்டிக்குக் கூறினான், தானும், மடாதிபதியைக் காணவே செல்வதாகக் கூறி இருந்தால் போதும், வண்டியிலிருந்து கீழே இறக்கியே விட்டுவிட்டிருப்பான் போலிருந்தது! அவ்வளவு வெறுப்புடன் இருந்தான், வண்டிக் காரன்.

வெள்ளை வேட்டி, மடாதிபதியிடமிருந்து வந்த அவசரக் கடிதம் கண்டே எழிலூர் வந்தது.

எல்லோரும் சென்று மடாதிபதியைத் தரிசித்து வந்த மாளிகைக்குச் செல்லவில்லை - வேறோர் பிரத்யேகமான விடுதியைக் குறிப்பிட்டிருந்தார், அங்குதான் வெள்ளை வேட்டி சென்று இறங்கிக் கொண்டான்.

வெள்ளி அம்பலத்தாரைக் காண வந்த சீமான்களும், பூமான்களும், காணிக்கையாகக் கொடுத்து விட்டுத் திருவிளையாடற்புராணப் பெரும்பொருள் விளக்கலானார், திரு. தில்லைச் சபேசன் அடிகளாரின் சொற்பொழிவினைக் கேட்டு, மகிழ்ந்ததாகப் பாவனை காட்டிக் கொண்டிருந்தனர். வெள்ளை வேட்டி சென்ற விடுதியில், மடாதிபதி வேறோர் பிரத்யேகப் பொருள் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

“எப்படி ஸ்வாமீ! நம் தங்கபஸ்பம்?”

“செச்சே! மிகப் பொல்லாததப்பா...”

“இந்த வயதிலே, சந்தானம் ஏற்படாது என்றல்லவா சன்னிதானம் எண்ணிக் கொண்டது.”

“ஆமாம், அந்தத் தைரியத்திலேதான்...”

“குழந்தை தங்கவிக்கிரகம் போல, ஸ்வாமீ.”

“தங்கமாவது, வெள்ளியாவது, வெளியே தெரிந்தால், தலைபோகும்...”

“தெரிந்தால்தானே...”

“காலம், வரவர ரொம்ப மோசமாகிக் கொண்டு வருகிற தய்யா, வைத்தியரே, இந்த விஷயம் வெளியே வந்து தொலைத் தால், தீர்ந்தது; தொலைத்து விடுவார்கள் என்னை. என்னை மட்டுமல்ல, மடாலயத்தையே இடித்துத் தரை மட்டமாக்கி விடுவார்கள்.”

“பயமே வேண்டாம், ஸ்வாமிகளே, சேதி நமக்குக் கிடைத்து விட்டது. குழந்தையைப் போலீசார் கண்டெடுத்து, அனாதை விடுதியில் சேர்த்து விட்டனர்.”

“அந்தச் சனியன்...?”

“நம்ம வீட்டில்! ஆரோக்கியம் பெற ஆனதெல்லாம் செய்து கொண்டு வருகிறேன். ஆனால்...”
“ஆனால் என்னய்யா...?”

“மூளை குழம்பிப் போயிருக்கும் போலிருக்கிறது... எதேதோ உளறிக் கொண்டு...”

“மடத்தைப் பற்றி ஏதாகிலும்...”

“மற்ற எதைப் பற்றியுமே பேசுவதில்லை... பயம் இல்லை... நான் கூடுமான வரையில் முயற்சிக்கிறேன் குணப் படுத்த... முடியவே முடியாது என்று தெரிந்தால், பிறகு...”

“சிவ, சிவ! எல்லாப் பாபமுமா செய்து?...”

“பாபம் என்று ஏன் பெயர் கொள்கிறீர், ஸ்வாமி! பரிகாரம் என்று கூறுமே.”

பண முடிப்புப் பெற்றுக் கொண்டு, வைத்தியர் சென்றார்; ஆபத்து வராது தப்பினோம் என்பதாலே ஓரளவு ஆனந்த மடைந்த மடாதிபரிடம், பணியாள் வந்து, வெள்ளை வேட்டி வந்திருப்பதாகத் தெரிவித்தான்-, உடனே, அறையில், மறைக்க வேண்டிய சாமான்களை மறைக்கச் சொல்லி விட்டு, மடாதிபதி, ‘தரிசனம்’ தரச் சித்தமானார்.

உள்ளே நுழைந்ததும், வெள்ளை வேட்டி, சம்பிரதாய முறைப்படி, கீழே வீழ்ந்து வணங்குவான் என்று மடாதிபதி எண்ணிக் கொண்டார்; வெள்ளை வேட்டியோ, ‘வணக்கம்’ கூறிவிட்டு, கீழே அமர்ந்தான். இவ்வளவுக்கு மேல் இவனிடம் எதிர்பார்த்ததே தவறு என்பதை உணர்ந்துகொண்ட தம்பிரான் கனிவினை வரவழைத்துக் கொண்டு பேசலானார்.

“பார்க்க வேண்டும் என்ற ஆவல், தம்பி, அதனாலே தான் சொல்லி அனுப்பினேன்...”

“எனக்கு மெத்த ஆச்சரியமாகி விட்டது... என்னை வெறுத்துத் தள்ளிவிட்டிருப்பீர்கள், அல்லது அடியோடு மறந்து போயிருப்பீர்கள் என்று எண்ணிக் கொண்டேன்...”

“நானா, உன்னை மறப்பதா, உமையொருபாகன் மீது ஆணை; தம்பி, உன்னை நான் ஒவ்வொரு கணமும் எண்ணிக் கொள்ளுவேன். என்றும் மறக்க முடியாத மாபெரும் சேவை புரிந்தவனல்லவோ நீ. உன்னை எப்படி மறக்க முடியும். தம்பி, சகல சுகபோகங்கள் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தும், காவியைக் களைந்தெறிந்துவிட்டு, மடாலயத்தை விட்டு வெளி
யேறத் தீர்மானித்தாயே, அன்று என் உள்ளம் எரிமலையாகத்தான் இருந்தது. தீப்பொறி பறக்கப் பேசினேன்; உன்னைத் தீர்த்துக் கட்டி விடக் கூட எண்ணினேன், ஆனால், என்னென்பேன் இறைவன் திருவருளை, நீ மடாலயத்தைவிட்டு வெளியேறிய பிறகு, நான் புதிய மனிதனே ஆகி விட்டேன். எல்லா, இழிசெயல்களையும் அறவே ஒதுக்கி விட்டேன். கெட்டது எல்லாம் பட்டொழிந்தன. திரு அருள் பெறுதலன்றி, பழைய திருவிளையாடல்கள் அனைத்தையும் அடியோடு விட்டொழித்தேன். பரிசுத்தமாகி விட்டேன். பானம் கண்டால் இப்போதெல்லாம் குமட்டல். ஆமாம், நீ நம்பமாட்டாய் - பாவையர் அனைவரையும் நான் சாட்சாத் பார்வதியாகவே மதிக்கிறேன். பாவக் கடலிலிருந்து வெளியேறி விட்டேன். இதை உனக்குக் கூறி, உன் மனத்தைக் களிப்பிக்கவே உன்னை வரச் சொன்னேன்.”

“மெத்த மகிழ்ச்சி, உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.”

“மடாலயத்திலிருந்து வெளியேறிய பிறகு, உன்னால் என் பெயருக்கு இழுக்கு வரும், மடாலயத்துக்கு எதிர்ப்பு ஏற்படும் என்றெல்லாம் கூட எண்ணினதுண்டு.”

“நான்தான், உறுதி அளித்தேனே, உலகிலே காணக் கிடக்கும் அக்கிரமங்கள் கணக்கிலடங்கா. நான் யார், அவை குறித்துத் தனிப்பட்டவர்களைத் தூற்ற, திருத்த முயல்கிறேன்.”

“திருவருளின் துணை உன் பக்கம் இருக்கிறது. நான் திருந்தி விட்டேன். உலகைத் திருத்த உன் ஒத்துழைப்பைக் கேட்டுப் பெறவே, அழைத்தேன்.”

“நான் இருக்குமிடத்திலே அதே தொண்டுதான் செய்து கொண்டு வருகிறேன்...”

“நான் இருக்குமிடத்திலே அதே தொண்டுதான் செய்து கொண்டு வருகிறேன்...”

“அதை, என் உதவியையும் பெற்றுச் செய்யலாகாதா?”

“மக்கள், போதுமான உதவி அளிக்கிறார்கள்...”

“நானும், என்னாலானதைச் செய்ய எப்போதும் சித்தமாக இருக்கிறேன். இங்கு, என்னைத் தரிசிக்கப் பக்தர்கள் வருகிறார்கள்; நானோ உன்னைப் பார்ப்பதிலே பரமானந்தம் அடைகின்றேன். என்னுடன் நீ ஒத்துழைத்தால், மக்களிடம், குறிப்பாக ஏழை மக்களிடம் பக்தி, ஒழுக்கம், அறநெறி, அன்பு மார்க்கம் ஆகியவற்றைப் பரப்பலாம்... என் ஆசை அது...”

வெள்ளை வேட்டிக்கு விஷயம் விளங்கி விட்டது. மடாதிபதி வலை வீசுகிறார் என்பது புரிந்தது; ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அவசியம் ஏன் வந்தது என்பது மட்டும் தெரியவில்லை.

சமூகத்திலே சன்மார்க்கம் பரப்பப்படவேண்டும் என்பதிலே, மடாதிபதி அக்கறை காட்ட முற்பட்டிருப்பது உண்மை யென்றே வைத்துக் கொண்டால் கூட, அதற்குத் தன்னை அழைப்பானேன் என்பது, வெள்ளை வேட்டிக்குப் பெருத்த ஆச்சரியமாகவே இருந்தது. சிந்தனையுடன் போராடிக் கொண்டிருந்த இந்த நிலையினை, சம்மதத்தின் அறிகுறி என்று மடாதிபதி தவறாகக் கணக்கிட்டுக் கொண்டு, நம்பிக்கையுடன் மீண்டும் பேசலானார்.

“ஏழை எளியோர்க்கு இதம் செய்யும் ஏற்பாடுகள், நிரம்பப் பொருட்செலவு தருவது. அதற்கு எத்தனை கோடி செலவிட்டாலும் தகும். ஏழை மக்களிடம், பக்தி, ஒழுக்கம், வளரச் செய்ய வேண்டும்...”

“அங்கே, அது நிரம்ப இருக்கிறது. பக்தியும் ஒழுக்கமும் ததும்பும் மனம் கொண்டவர்கள்தாம் ஏழை எளியவர்கள். பாடுபடும்போதெல்லாம் பரமனை எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பார வண்டியை மாடுபோல இழுத்துச் செல்லும் போதும் அவர்கள் பகவானை மறப்பதில்லை. அடிபட்டால்கூட, இராமா என்று துதிக்கிறார்கள். சும்மா இருக்கும் போதுகூட, அவர்கள் கடவுளை மறப்பதில்லை. சிவனே என்று சும்மா இருக்கிறேன் என்றல்லவா பேசுகிறார்கள். பக்தியும் ஒழுக்கமும் தேவைப்படுவது பணக்கார உலகுக்குத்தான். அங்கு அந்தச் சரக்குக்கு மதிப்பில்லை. என் போன்றோரிடமிருந்து அவர்கள் அதனை வாங்கவே மாட்டார்கள்.”

“நகைச்சுவையுடன் பேசுகிறாய்; சுவடிகளைப் படித்துப் படித்து நெட்டுருப் போடுகிறார்கள், மடாலயத்திலே, மடச் சாம்பிராணிகள் சுவைபடப் பேசத் தெரிவதே இல்லை. சரி, உன் மனம் எப்போது இடம் கொடுக்கிறதோ, அப்போது தாராளமாக வரலாம். என் உதவி எப்போதும் உண்டு. எந்த அளவுக்கு வேண்டுமாயினும் உண்டு...”

“மிக்க நன்றி, மிக்க நன்றி.”

“உன் பெருங்குணத்தாலேதான், நான் இந்தப் புதிய எண்ணம் கொண்டேன்.”

“என்னை மிகவும் புகழ்கிறீர். நான் அதற்கெல்லாம், பாத்திரனாக ஏற்றவனல்ல.”

“சிப்பி அறியுமா, தன்னிடம் உள்ள முத்து எவ்வளவு விலையுயர்ந்தது என்பதை?”

முத்து என்ற சொல், வெள்ளை வேட்டிக்கு ஓர் அதிர்ச்சியே கொடுத்தது போலாகி விட்டது. அதைக் கண்டு கொண்டார் மடாதிபதி, சிறிது கேலி தொனிக்கும்படி பேசலானார்.

“எடுக்கவே முடியாத ஆழ்கடலுக்குள்ளே வீழ்ந்து விட்டாலும், விலையுயர்ந்த ‘முத்து’ என்றால் மனம் சாந்தி அடைவதில்லை. அப்படித்தானே. முத்து... அழகான பொருள். எவ்வளவு விலை கொடுத்தேனும் வாங்கிட வேண்டும் என்று, அதன் அருமை தெரிந்தோர் கூறுகிறார்கள்.”

“ஆமாம்...”

“புலவர்கள், ஏனோ தெரியவில்லை, ஆழ்கடல் மூழ்கி அரும் பாடுபட்டு, எடுத்திட வேண்டிய, விலையுயர்ந்த ‘முத்து’ எனும் பொருளுக்கு ஒப்ப, முத்தம்தனைக் குறிப்பிடுகிறார்கள்.”

“தெரியவில்லை”

“ஏதோ பொருள் இருக்க வேண்டும். நிச்சயமாக இருக்க வேண்டும்...”

“நமது தமிழ் மக்கள், தம் மக்களுக்கு, இந்த அரிய பொருளின் பெயர்களை எல்லாம் சூட்டி மகிழ்ந்திடும் திறமை இருக்கிறதே, அது பிற எந்த நாட்டாருக்கும் கிடையாது அல்லவா, பொன்னன் - பொன்னி - தங்கம் - தங்கப்பன் - முத்து - மரகதம் - இரத்தினம் - மாணிக்கம் - இப்படி எல்லாம் பெயரிடுகிறார்கள்.”

“ஆமாமாம்...”

“முத்து - இரத்தினம்... அழகான பெயர்கள்”

மடாதிபதி பொருளற்று இப்படிப் பேசவில்லை என்பது வெள்ளை வேட்டிக்குப் புரியாமலில்லை, “முத்து - இரத்தினம்”

பல பெயர்களைக் கூறுவது போலத் துவக்கி, எந்த இரு பெயர்கள், தன் வாழ்க்கையிலே ஓர் அதிர்ச்சியைக் கொடுத் தனவோ, அந்த இரு பெயர்களைப் பொறுக்கி எடுத்து, முத்து... இரத்தினம் என்று நிதானமாகக் கூறிக் கொண்டே மடாதிபதி தன்னை உற்று நோக்குவதிலே, ஏதோ உட்பொருள் இருக்கிறது என்பதை வெள்ளை வேட்டி உணர்ந்து கொண்டான்.

“முத்து... இரத்தினம்...” என்று மீண்டும், மடாதிபதி, தனக்குள் கூறிக் கொள்பவர்போலக் கூறினார்.

வெள்ளை வேட்டி, இனி இதைத் தடுக்காமலிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், “அழகான பெயரிடுவதிலே நமது மக்களுக்கு அலாதியான ஆசைதான்! மலர்களின் பெயரைச் சூட்டியும் மகிழ்கிறார்களல்லவா...

“ஆமாம்...” என்றார் மடாதிபதி ஆலோசித்தபடி.

“மனோரஞ்சிதம், பங்கஜம்! என்பவை, அழகான பெயர்களல்லவா...”

“ஆமாம்... அழகான...”

“பெயர்கள்! உச்சரிக்கும் போதே, பெற்றோரும் பெற்றோரும் மகிழ்கிறார்கள்.”

“ஆமாம்... அதென்ன, பெற்றோரும், பெற்றோரும் என்று...”

“காரணமின்றி அடுக்கினேன் என்கிறீரா... அப்படி நான் செய்யும் பழக்கமே கிடையாது. பெற்றோர் என்று தாய் தந்தையரைக் குறிப்பிட்டேன், மனோரஞ்சிதத்தையும் பஞ்கஜத்தையும், அடையப் பெற்றோர் - உண்டல்லவா, அவர்களைக் குறிப்பிட மற்றோர் பெற்றோர்.”

“சொற் சிலம்பத்திலும் வல்லவனாக இருக்கிறாய்”

“தேவைக்கு ஏற்றபடி பலவற்றைப் பெறவேண்டி வருகிறது. நேரமாகிறது, நான் வருகிறேன்”

வெள்ளை வேட்டி, விடை பெற்றுக் கொண்டு, வெளியே புறப்பட்டான் - சிறிதளவு கோபத்துடன்தான்.

ஏதோ தலைபோகிற காரியம் இருப்பது போலத் தன்னை வரவழைத்து வெட்டிப் பேச்சுப் பேசி வீண் பொழுது ஓட்டினானே மடாதிபதி என்ற கோபம், பேச்சோடு பேச்சாக, முத்து - இரத்தினம், என்று குத்தல் பேச்சுப் பேசியதனால் மேலும் கோபம்.

முத்து, இரத்தினம் - வெள்ளை வேட்டி எவ்வளவோ முயன்றான் அந்த இரு பெயர்களை மறந்திட முடியவில்லை.

மடாதிபதிமீது வந்த கோபம்கூட ஓடிவிடுகிறது - முத்து - இரத்தினம் என்ற பெயர்கள் மனத்தைக் குடைகின்றன.

மனோரஞ்சிதம் - பஞ்கஜம் மடாதிபதியின் காமச் சேட்டைக்குப் பலியாகிப் பாழான பலரில் இருவர், வெள்ளை வேட்டி, ‘பக்குவம்’ பெறத் தங்கி இருந்தபோது, இந்த இரு மயக்குவிழி மாதர்களையும் சந்தித்திருக்கிறான். மடாதிபதி, தன்னைக் கேலி பேச முற்படுவது உண்டு, அவர் போக்கைத் தடுக்க, பழைய சம்பவம் எனக்கும் தெரியும் என்பதைக் குறிப்பிட, அந்தப் பெயர்களைக் கூறினான், ஆனால், முத்து -இரத்தினம என்ற பெயர்களோ...!