அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கடைசிக் களவு
4

முத்து, முத்து என்று எத்தனை எத்தனை இலட்சம் தடவை உச்சரித்திருக்கிறான் - எழுதியிருக்கிறான்.

“தூக்கத்திலேகூட என் பெயரைக் குளறிக் கொட்டுவீர்கள் போலிருக்கிறதே. அம்மா காதிலே விழுந்தால் கேலி செய்யமாட்டார்களா...?” என்று முத்து கூடக் கேட்பதுண்டு.

“என்னால், எப்படி என் ஜீவ மந்திரத்தை உச்சரிக்காமலிருக்க முடியும், முத்து” என்று, அப்போது ஜெபித்திருக்கிறான், வெள்ளை வேட்டி.

முத்து - இரத்தினம். இரு குமாரிகள், சிலம்பவித்தை நிபுணன் செந்திலாண்டிப் பயில்வானுக்கு. அந்த வட்டாரத்திலேயே, செந்திலாண்டியிடம் அனைவருக்கும் அச்சம். முன் கோபம் அடிக்கடி கொப்பளிக்கும் - அப்போது குறுக்கிடுபவர் யாரானாலும், ஆபத்துதான், அவ்வளவு முரட்டுத்தனம்.
செந்திலாண்டியின் முரட்டுத்தனத்தால் ஏற்பட்ட ஆபத்தை விட அதிகமான ஆபத்தைக் கிளறும் இரு குமாரிகள் முத்துவும் இரத்தினமும்! முத்து மூத்தவள், அடக்கத்திலும் வயதிலும் இரத்தினம் இளையவள், சிறிதளவு பளபளப்புக்காரி; இருவரும் கேரளத்துக் கட்டழகி தந்த கனிகள்; செந்திலாண்டி, பாண்டி மண்டலத்து வீர மரபினன்; வாழ்ந்து கெட்ட குடும்பத்தினன்.

செந்திலாண்டியின் சிலம்பக் கூடத்திலே, வெள்ளை வேட்டி, முத்து அழைத்ததால் சேர்ந்திடவில்லை. உடற்கட்டு வளமாக இருக்கிறது தம்பி, முறைப்படி பயிற்சி பெற்று, சிலம்பம் கற்றுக் கொண்டால், தென்பாண்டி மண்டலத்துக்கே நீ அதிபனாகலாம் என்று கூறிச் செந்திலாண்டிதான் அழைத்துச் சென்றான்.

இந்தப் பயலுக்கு ஏன் புத்தி இப்படிக் கெட்டுவிட்டது? இவனுக்கு இருக்கிற செல்வத்துக்கு இராஜகுமாரனைப் போலச் சொகுசாக வாழலாம்; அதை விட்டுவிட்டு மீசை முறுக்குக்காரர் களுடன் கூடிக் கொண்டு, குத்துச் சண்டைக்காரனாகிறானாமே, ஏன் இப்படிக் கோணல் புத்தி வந்ததோ தெரியவில்லையே - என்று ஊர்ப்பிரமுகர்கள் பேசினர் - எனினும் வெள்ளை வேட்டி அதனைப் பொருட்படுத்தவில்லை; மிகச் சிறந்த திறமை பெற்றான். செந்திலாண்டி தன் அனுபவம் முழுவதையும் சேமித்து வைக்கத் தகுந்தவன், என்று வெள்ளை வேட்டியைத் தேர்ந்தெடுத்தது போல மிக அக்கறையாகப் பயிற்சி அளித்து வந்தான். சிலம்ப வித்தையில் நிபுணனாக விளங்கிய செந்திலாண்டியை எதிர்த்து நிற்கக் கூடியவர்கள் அந்த வட்டாரத்திலே யாரும் கிடையாது; ஆனால் அவனை வாட்டி வதைத்திடும் ஆற்றல் கொண்டது அபின்! மதுவிலக்குக் காரணமாக, அவனுக்கு அபின் கிடைப்பது கடினமாகி விட்டது. இச்சகம் பேசும் பழக்கமோ, இளித்து நிற்கும் வழக்கமோ அற்ற செந்திலாண்டி, அபின் பெறுவதற்காக, எவனெவனையோ அண்ட வேண்டியதாயிற்று; யாராரையோ ‘அண்ணாச்சி’யாக்க வேண்டி வந்தது; படாத பாடுபட்டு, பல்லிளித்து, கைகூப்பி, அபின் பெற்று வந்தான். அதற்கு அடியோடு முட்டு ஏற்பட்டு விடவே, முடவன் போலாகி நோய் வாய்ப்பட்டு, இறந்தே போனான். சிலம்பக்கூட ‘பாரம்’ - வெள்ளை வேட்டி மீது வீழ்ந்தது; முத்து இரத்தினம் இருவரையும் காப்பாற்றித் தீர வேண்டிய பெரும் பொறுப்பும் ஏற்பட்டது.

முத்துவுக்கு வெள்ளை வேட்டி, தன் இதயத்தில் ஏற்கெனவே இடமளித்திருந்தான். செந்திலாண்டிக்கு இலேசாக அது தெரிந்தது; ஓரிரு தடவை, மகளைக் கண்டித்து வைத்தான். ஆனால் வழக்கமான முன்கோபத்துடன் அல்ல.

“ஆசை பொல்லாதது முத்து, ஆமாம், பெரிய இடத்துப் பிள்ளையாண்டான். தங்கமானவன்தான். ஆனால், ஊர் உலகத்துக்குப் பயந்து நடக்க வேண்டியவன். கட்டுத் திட்டத்தை மீறக் கூடாதவன். வீணாக நம்பி மோசம் போகக் கூடாது” என்று புத்திமதி சொல்லி வைத்திருந்தான். ஆனால், புத்திமதி புகக் கூடிய நிலையில் அந்தப் பூவையின் மனம் இல்லை. வெள்ளை வேட்டிதான், இதயக் கோவிலில் நிரம்பி நின்றது.

அவர் அப்படிப்பட்டவரல்ல. அந்தஸ்து பேதம், ஜாதி வித்தியாசம் என்பவை அர்த்தமற்றவை என்று எனக்கே தெரிகிறதே; எவ்வளவோ அறிவாளியான அவருக்கா அது தெரியாது - புரியாது - என்று எண்ணினாள்.

முத்து, அவனை நம்பியதிலே தவறேதுமில்லை. வெள்ளை வேட்டி, நம்பினோரை மோசம் செய்பவனுமல்ல; நாற்றமடித்துக் கிடக்கும் ஜாதி வித்தியாசத்தை மதிப்பவனுமல்ல; உண்மைக் காதல் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது; ஊரார் பழித் தாலும், உற்றார் எதிர்த்தாலும், அஞ்சி ஆமையாகி விடுபவனல்ல; பெற்ற தாயின் கண்ணீருக்கு மட்டுமே அஞ்சுபவன். தாயின் சம்மதத்தை மெல்ல மெல்லப் பெற வேண்டும் என்பதற்காகவே காத்துக் கிடந்தான்.

செந்திலாண்டி இறந்த பிறகு, ஊர்ப்பழி, வெள்ளை வேட்டி மீது அதிகமாக விழ ஆரம்பித்தது. மண்டையை உடைத்து விடுவான்; கை காலை ஒடித்து விடுவான்; மகாமுரடன்; முன் கோபக்காரன்; என்று செந்திலாண்டியைப் பற்றிய பயம் இருந்ததால் வாய்மூடிக் கிடந்த மக்கள், அவன் இறந்த பிறகு, தைரியமாகத் தூற்ற ஆரம்பித்தனர்.

“இராதா - ருக்மணிபோல, வெள்ளை வேட்டிக்கு, முத்து - இரத்தினம் கிடைத்து விட்டார்கள். ஒரே பிருந்தாவன லீலைதானாம். ஜலக்கிரீடையும் உண்டாம்” என்று பேசுவர்.

சிலம்பக் கூடத்து ஆட்களுக்கும் ஊரிலுள்ள வம்பளப்புக்காரர்களுக்கும் இதனால் பல இடங்களிலே அடிதடிச் சம்பவங்கள்.

இந்தத் தொல்லை போதாதென்று, ‘முத்து’ திடீரென்று வாத நோய்க்கு ஆளாகி, எழுந்து நடமாட முடியாத நிலை பெற்றாள். வெள்ளை வேட்டி, ஆயிரமாயிரமாகச் செலவு செய்தும் பயன் ஏற்படவில்லை.

எழில் துளியும் குன்றவில்லை. இளமை மெருகு கலைய வில்லை; அந்த மோகனப் புன்னகை; குறுகுறுப்பான பார்வை, கலகலப்பான பேச்சு, எல்லாம் அப்படியே இருந்தது. ஆனால் முத்து, எழுந்து நடமாடும் சக்தியை மட்டும் இழந்து விட்டாள். என்ன செய்வான் பாபம். அவள் மீது உயிரையே வைத்திருக் கிறான். ஒருபோதும் அவளைக் கை விடமாட்டான். என்றாலும், இந்த நிலையில், எப்படித் தான் அவளைக் கலியாணம் செய்து கொள்ள முடியும் - என்று சிலம்பக் கூடத்தாரே, சிந்தை நொந்து பேசிக் கொண்டனர்.

‘முத்து’ மிகுந்த அறிவுள்ளவள்; தன் நிலையால் ஏற்பட்டு விட்ட ‘இக்கட்டை’ நன்றாகப் புரிந்து கொண்டாள்; அவளும், தன்னை மறந்து விடும்படி, எவ்வளவோ இதமாக எடுத்துரைத் தாள்.வெள்ளை வேட்டிக்கு, எதுவும் செவியில் ஏறவில்லை. எப்படியும், தகுந்தவரைப் பிடித்து குணமாக்கித் தீர வேண்டும் என்று அலைந்தபடி இருந்தான்; சிலம்பக் கூடமே சோபையும் சுறுசுறுப்பும் இழந்து விட்டது.

‘இரத்தினம்’-பளபளப்புக்காரி என்பதைச் சிலம்பக் கூடத் தவர்கள் அறிந்திருந்தனர்; அந்தப் பாவையின் மனத்திலே, ஓர் நச்சரவம் புகுந்ததை அவர்கள் முதலில் அறிந்து கொள்ள வில்லை. முத்து, பயனற்றவளாகி விட்டாள். வெள்ளை வேட்டியை வேறோர் வனிதை தன்னவனாக்கிக் கொள்ளுமுன்பு, தானே முயற்சித்தால் என்ன என்று எண்ணினாள். அந்தச் சபலம் குடி புகுந்ததும், இரத்தினம், சாகசக்காரியாகவே மாறினாள். வெள்ளை வேட்டி, வெளியே சென்று அலுத்துத் திரும்பியதும், உபசாரம் செய்யும் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டாள். முத்துவுக்கான உதவிகளைச் செய்ய வெள்ளை வேட்டியை விடுவதே இல்லை. ‘அத்தான்’ அத்தான்!’ என்று அடிக்கொரு தடவை, புதிய பாசத்துடன் கூப்பிடத் தலைப்பட் டாள். இதன் பொருளை, அவன் அறிந்து கொள்ளவில்லை! ஆனால் நோய்வாய்ப்பட்டிருந்த முத்து இதை உணர்ந்து கொண்டாள். அவள் உள்ளம் உடைந்து விட்டது. உண்மையிலேயே அவளுக்கு நோய் ஏற்பட்டு விட்டது. சந்தேகம் பலமாகி விட்டது; சச்சரவு மூண்டது சிலம்பக் கூடம் இருகட்சியாயிற்று.

“முடமான பிறகு, இவளுக்கு ஏன் வீண் ஆசை?” என்பான் ஒருவன்.

“முடமாகட்டும், குருடாகட்டும் இந்தச் சிறுக்கி எப்படியடா, அக்காவுக்குத் துரோகம் செய்யலாம்?” என்று கோபிப்பான் மற்றொருவன்.

“இது சகஜமப்பா. ஒரே குடும்பம். அக்கா தங்கை, நடக்க வேண்டியது முறைப்படி நடக்கிறது” என்று சமரசம் பேசுவான் வேறொருவன்.

“போடி அம்மா. படுக்கையைத் தட்டிப் போடு!” - என்று முத்து, கூறுவாள்.

“அக்கா, உன் குத்தல் பேச்சு எனக்குப் புரியாமல் இல்லை. முடியுமானால், நீயே செய்யேன், அந்தக் காரியத்தை. வாய்மட்டும் அடங்கவில்லையே உனக்கு!”

“கால் முடமானது போல, கள்ளி, என் கண் குருடாக வில்லையே”

“புத்தி இருந்தால், நீ இப்படிப் பேச மாட்டாய், அக்கா!”

“அக்காவாம், அக்கா, ஏண்டி, பசப்பிக் காட்டுகிறாய் பாவி!”

இப்படியெல்லாம் அமளிகள், வெள்ளை வேட்டிக்கு வேதனை ஏற்பட்டு விட்டது.

“முத்து! நான் என்னை உனக்குக் கொடுத்து விட்டேன். நீயும் நானும் ஓடி ஆடி விளையாடி மகிழ முடியாது போய் விட்டது; ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக வைத்துக்கொள். வேறு ஒருத்தியுடன் நான், காதலுலகில் நடமாடமாட்டேன். என் திருமணம், நிறைவேறி விட்ட சம்பவம். அதன் சுவையை நான் இழந்து தவிக்கிறேன். வேறு கனி தேடிச் சுவைத்திடும் கயவனாக மாட்டேன். உன்னுடன் இன்ப வாழ்வு நடத்த கடைசி வரையில் முயல்வேன், முடியாவிட்டால், முத்து! என் அன்பே! என் இன்பமே, காவி, காவிதான், பண்டாரமாகி விடுவேன்! பரதேசிக் கோலம்,” என்று உள்ளம் உருக உரைத்தான். முத்து, அந்த விநாடி பெற்ற ஆனந்தம் அவளை எங்கெங்கோ அழைத்துச் சென்றது.

முத்துவுக்கு நோய் வேகவேகமாகி முற்றிக் கொண்டு வந்தது. கருமேகம் விழுங்க விழுங்க பொலிவினை இழந்திடும் முழுமதிபோல, அவளுடைய பொலிவு மங்கி, மறையலாயிற்று, முதுமை அவளைப் பீடித்துக் கொண்டது. எங்கிருந்தோ ஓர் அவலட்சணம் படை எடுத்து வந்து முற்றுகையிட்டு, அவளைப் பலி கொண்டது. உள்ளத்தில் மட்டும் ஓர் ஒளிவிளக்கு சுடர் விட்ட வண்ணமிருந்தது.

காதலில் ஏமாற்றமும் திகைப்பும் கண்டவன், காவி கட்டாமலேயே, பரதேசியானான். ‘பிழைப்பதற்கில்லை, நான் தர வேண்டிய மருந்து அத்தனையும் தந்தாகி விட்டது’ என்று சோகமாகக் கூறிவிட்டு, மருந்துப் பையைச் சுற்றிக் கொண்டு மருத்துவர் கிளம்பியான பிறகு, மரணத்தின் பிடியிலிருக்கும் தன் மதலையை எப்படித் தாய், வேதனை விம்மிடும் நிலையில், காண்பாளோ, அந்த விநாடியிலும் பிழைத்திட மார்க்கம் கிடைக்காதா என்று ஏங்கித் தவிப்பாளோ, அதுபோல வெள்ளை வேட்டி, முத்துவைப் பார்த்தான்.
“கொடுநோயே, என்னைத்தான் கொல்ல முடிகிறது உன்னால்! ஆனால், இதோ பார், என்மீது அவர் கொண்ட அன்பினை, தூய காதலைத் தொடக் கூட உனக்குச் சக்தி இல்லை” என்று எண்ணிப் பெருமைகூட பட்டாள் முத்து, சில வேளைகளில்.

சாகசம் குடிபுகுந்த மனத்தினாளான இரத்தினம், மின்சார வேகத்தில், மயக்குக்காரியானாள்.

சுத்த வெகுளி, ஏமாளி, அதுக்க ஏத்தது இது - என்று கேலி பேசி, வெள்ளை வேட்டியை இகழ்ந்தாள். வேறு இரை தேடினாள். கிடைத்தது. சிலம்பக்கூடம், தன் இராஜ்யபாரத்துக்குச் சரியாக இல்லை என்று எண்ணினாள் - சர்க்கஸ் கம்பெனிக்கு அவளை நடன மாதாக அழைத்துச் சென்றான் சாமுண்டி.
முத்து கதறினாள். ஊர் கேலி பேசிற்று. சிலம்பக்கூடம் கலைக்கப்பட்டது. வேதனை வேகமாக உருவெடுத்து முடிவினை அறிவித்துவிட்டது. முத்துவின் கல்லறையைத் தன் கண்ணீரால் அபிஷேகித்துவிட்டு, காவி கட்டினான், காதல் கைகூடாதவன்.

இந்தப் பழைய நினைவுகள் குடையக் குடைய, வெள்ளை வேட்டி வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

9
மயக்கம் தெளிந்த மாடசாமி, வெள்ளை வேட்டியின் வரவுக்காகக் காத்துக் கிடந்தான், கழுத்தை நெறித்தே கொன்று போடுவது என்ற எண்ணத்துடன்.

பழைய சம்பவங்களை எண்ணியதால், வேதனையைத் தாங்கிட வேண்டி ஏற்பட்டதால், சோக முகத்துடன், வெள்ளை வேட்டி வந்து சேரக் கண்ட மாடசாமி செயலற்றவனானான்.

“என்னை மன்னித்து விடு மாடசாமி! நான் ஒரு கணம் மிருகமாக வேண்டி நேரிட்டது” என்று கூறிக்கொண்டே, கீழே சிதறிக் கிடந்த பத்திரிகைகளை ஒழுங்குபடுத்தலானான், வெள்ளை வேட்டி.
மாடசாமி மாண்டு போனான் கொள்ளைக்காரனின் கோர முடிவு, என்ற தலைப்புகளுடன், ஒரு பத்திரிகையில் சிறையி லிருந்து தப்பி ஓடிய மாடசாமி இரயில் விபத்திலே மாண்டு போனதாகவும், கூழாகிப் போன நிலையிலும் போலீசார் மிக்க சாமார்த்தியத்துடன் மாடசாமியை அடையாளம் கண்டறிய முடிந்தது என்றும், செய்தித் தெரிவித்தது. வெள்ளை வேட்டி உரத்த குரலில் சிரித்தபடி, மாடசாமியின் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டே, “அதிர்ஷ்டக்காரனப்பா நீ! ஆமாம், நல்ல காலம் உனக்கு மாடசாமி, இனி உனக்கு ஒரு தொல்லையும் ஏற்படாது. ஒரு பயலும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறினான்.

“ஏ! பைத்தியம்! உளறியது போதும், முதலிலே, என்னை அடித்ததற்கும், கட்டிப் போட்டதற்கும் தகுந்த சமாதானம் சொல்லு, இல்லையானால், உன்னை உயிரோடு விடப் போவதில்லை” என்று மாடசாமி உறுமினான்.

“உன்னை மட்டும் உயிரோடு விட்டு வைப்பார்களா! உன்னைத்தான் சாகடித்து விட்டார்களே! நல்ல அதிர்ஷ்டக் காரனப்பா நீ! செத்து போய் விட்டாயே!! போலீசில் பிடிபடாமல், இனி நீ நிம்மதியாக இருக்கலாம்!” என்று வெள்ளை வேட்டி பேசக் கேட்ட மாடசாமிக்குக் கோபத்தையும் பிளந்து கொண்டு சிரிப்பு வந்தது.

“உன்னுடைய பைத்தியக்காரத்தனத்துக்கு ஓர் அளவே கிடையாதா! என்னைச் சாகடித்து விட்டார்கள் என்கிறாய்! இனி நான் நிம்மதியாக வாழலாம் என்கிறாய்! உளறிக் கொட்டிக் கொண்டு கிடக்கிறாய், உன்னைப்போய் இந்த ஊர் ஏமாளிகள், ஞானவான் என்கிறார்கள்!” என்று கூறினான். வெள்ளை வேட்டி பத்திரிகையில் வெளிவந்த செய்தியைப் படித்துக் காட்டி விளக்கிய பிறகுதான், மாடசாமி சிந்திக்கலானான்.

“உன்னைப் பற்றி நான் ஒவ்வொரு முறை போடுகிற கணக்கும் தப்பாகவே இருக்கிறது. என்னால் உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. போக்கிரிகளிடம் காணப்படும் வலிவு இருக்கிறது - அதேபோது பரதேசிகள் கொள்ள வேண்டிய போக்கும் இருக்கிறது! ஒரு கணம் உன்னை நான், ஊரைக் கொள்ளையடிக்கும் பேர்வழி என்று எண்ணவேண்டி வருகிறது, மறுகணமோ நீ ஊருக்கு உபகாரியாக இருப்பதையும் காணவேண்டி இருக்கிறது. என்னைப் போலீசில் பிடித்துக் கொடுக்கவே, என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போனாய் என்று எண்ணி, உன்னைக் கொன்று போடுவது என்றே முடிவுக்கு வந்தேன். நீயோ, நான், இனி பயமின்றி உலவ முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாய். என்னதான் உன் உண்மையான குணம்! ஒன்றும் புரியவில்லையே...” என்றான்.

“உன்னை எனக்குப் புரிகிறது... நன்றாக...” என்றுரைத்தான் வெள்ளை வேட்டி.

மாடசாமி பதில் பேசவில்லை; சிந்தனையிலாழ்ந்தான்; வெள்ளை வேட்டி வேலைகளில் ஈடுபட்டான். வழக்கமாக, உதவி தேடி வருபவர்கள், வந்தனர். அவர்களின் வாட்ட வருத்தத்தைப் போக்கும் காரியத்தில் ஈடுபட்டு மகிழ்ந்தான்.

நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன; நடமாடும் சக்தியை மாடசாமி பெற்றான்.

இங்கேயே இருக்கிறாயா, வேறு எங்கேயாவது போகப் போகிறாயா, என்று கேட்பதைக் கூட வெள்ளை வேட்டி விட்டு விட்டது கண்டு மாடசாமிக்கு ஆச்சரியமாக இருந்தது. மாடசாமி புதியவனாக முடியுமா என்ற ஆராய்ச்சியை மட்டும் வெள்ளை வேட்டி விட்டு விட்டதாகத் தெரியவில்லை. மாடசாமிக்கோ, அங்கு வருபவர்களிடம் பற்றோ பாசமோ ஏற்படவில்லை; வெறுப்புடன் பேசுவான்.

“மாடசாமி! அந்தக் கிழத்தால், பாபம், வழி அறிந்து நடக்க முடியாது, பார்வை பழுதாகி விட்டது பச்சிலை கட்டி வைத்திருக்கிறேன், வீடு வரையில் போய்விட்டு வா!” என்று வெள்ளை வேட்டி கூறி உதவிக்கு அனுப்பும்போது கூட கிழவனிடம் அனுதாபம் கொண்டு போக மாட்டான் - வெள்ளை வேட்டி சொல்லும் வார்த்தையைத் தட்டி நடந்திடக் கூடாது என்பதற்காகத்தான் செல்வான். வழியிலே கூட, கிழவனிடம் வாஞ்சனையுடன் பேச மாட்டான். மனம், பாறையாகவே இருந்தது! பாறை மீது உட்கார்ந்து விட்டு மீண்டும் பறந்து சென்று விடும் பறவைகள் போல, சிற்சில வேளைகளிலே வெள்ளைவேட்டி புகுத்தும் எண்ணம், மனத்திலே தங்கும், மறுகணமே, பறந்தோடிப் போகும்!