அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கடைசிக் களவு
6

ஆண்டுகள் உருண்டோடலாயின! பாவாடை தாவணி போட்டுக் கொண்டு பந்தடித்து விளையாடிய பாலா ‘பருவ கருவம்’ மிகுந்த அங்கங்களுக்குச் சொந்தக்காரியாகி விட்டாள்!

மாடசாமியின் ‘முடி’ நரைத்து விட்டது; ஊருக்கு உபகாரி, வெள்ளைவேட்டி, அவருக்கு ஒரே துணை, இந்த மாடசாமி என்று ஊரார் பேசிக் கொள்ளலாயினர்!!

“பாவம்! அனாதை போலிருக்கிறது! பிச்சைக்காரி! பைத்தியம் இருக்கும் போலிருக்கிறது’ என்று கூறிக் கொண்டே, மாடு துரத்தித் தாக்கியதால், பக்கத்திலிருந்த சேறு நிரம்பிய பள்ளத்தில் வீழ்ந்து விட்ட ஒரு மாதினைத் தூக்கி வந்து, குடிலுக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் கிடத்தி விட்டு, அடிபட்ட இடத்துக்கு மருந்திடலானான் - மாடசாமி. ஆமாம், அந்த அளவுக்கு வைத்தியம் தெரிந்து கொண்டான் - அந்த அளவுக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உள்ளவனானான்.

வெள்ளைவேட்டி, இந்தக் காட்சியைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்தான் - வேறோர் வேலையைக் கவனித்தபடி.

“மாடசாமி! யார் அது? என்ன உடம்புக்கு”

“பாபம், யாரோ ஆதரவற்றவள்... மாடு முட்டி...”

“விறகு தூக்கி வந்தவளோ...”

ஆராரோ
ஆரரிரோ
டேய், சன்னாசிப் பயல்களா என் குழந்தையை ஏதாச்சும் செய்தால் புலிக்கூண்டைத் திறந்து விட்டு விடுவேன்...

சாமுண்டி! சாமுண்டி!

இப்படி அந்த மாது கூச்சலிடக் கேட்டு, வெள்ளைவேட்டி அருகே வந்து உற்றுப் பார்த்தான் - பார்த்ததும், கல்லாய்ச் சமைந்து போனான். அவன் அங்குக் கண்ட மாது, வேறு யாருமல்ல, சாகசம் செய்யத் தொடங்கி, சர்க்கசில் சேர்ந்து கெட்டு அலைந்த இரத்தினம்!

சிரமப்பட்டு, கண்ணீரைத் தடுத்துக் கொண்டான்.

ஏதோ தாங்க முடியாத வேதனை தாக்குகிறது என்பதை மட்டும் மாடசாமியால் உணர முடிந்தது; விளக்கம் ஏற்படவில்லை.
“ஏற்கெனவே, தெரியுமோ”

“ஆமாம்...”

“உங்கள் ஊர்க்காரியோ”

“ஆமாம்...”

“சித்தம் குழம்பிவிட்ட நிலை போலிருக்கிறது...”

“ஆமாம்...”

“எதற்கும் ஆமாம்-, ஆமாம் என்றால், எனக்கு ஒன்றும் புரியவில்லையே...”

“புரியத்தான் இல்லை... எனக்கும்... மாடசாமி! நான் பண்டாரம் ஆனேன் பார்...”

“அதற்கு இந்த...”

“பரிதாபத்துக்குரிய இவளும் ஒரு காரணம்தான்... அவளுடைய அக்காவைத்தான் நான் காதலித்தேன்... அவள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள்... இவளுடைய கெடுமதியும் இழிசெயலும்தான், என் முத்துவின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. இவள், தங்கப்பதுமை போலிருந்தாள் மாடசாமி! முத்துவிடம் கம்பீரம் உண்டு, இவளிடம் கவர்ச்சி நிரம்ப! முத்து சிரித்துப் பேசமாட்டாள்! இவளுக்குச் சிரிக்காமல் பேசவே தெரியாது...”

இரத்தினம் என்றும் முத்து என்றும் பெயர்கள் கூறப் பட்டதும், படுக்கையில் இருந்தவள், கண்களை அகலமாக்கிக் கொண்டு, வெள்ளை வேட்டியைக் கூர்ந்து பார்த்தாள்.

“இரத்தினம் இரத்தினம்! நான் தெரியவில்லையா...”

“ஓ! தெரியுமே! நீதான் ‘பார்’ வேலை செய்யும் பண்டரி”

“சரியாகப் பார், இரத்தினம்”

“என் கண் என்ன பொட்டையா! நீ சூட்டும் ஹாட்டும் போட்டுக் கொண்டு, வந்துவிட்டதாலேயே, நான் என் சாமுண்டியை விட்டுவிட்டு உன்னோடு விளையாட வருவேனா... ஐம்பது ரூபாய்... முடியுமா... ஏது உன்னிடம்...”

“இரத்தினம்... நான்தான்... முத்து கவனமில்லையா உனக்கு...”

“முத்து அக்காவா...”

“ஆமாம், உன் அக்காதான், முத்து...”

“இவளுக்குத்தான் எழுந்து நடக்கவே முடியாதே. நொண்டியாச்சே! இனி எப்படி, அத்தான் அவளைக் கட்டிக் கொள்வார்...”

“முத்து இறந்துவிட்டாளே இரத்தினம்... கவனப்படுத்திப் பார்... நீ சர்க்கஸ் கம்பெனியில் அல்லவா சேர்ந்து விட்டாய்...”

“ஆமாம், நான் சர்க்கஸ்காரிதான்... உன்னை ஏன் சன்னிதானம் என்று அழைக்கிறார்கள்... உனக்கு ஏன் இவ்வளவு பெரிய தாடி மீசை... ஐயயோ அருவருப்பா இருக்குதே...”

“இரத்தினம்... சர்க்கஸ் கம்பெனியை விட்டு விட்டு எங்குப் போனாய்... சாமுண்டி என்ன ஆனான்? சன்னிதானம் என்பது யார்?”...

“சன்னிதானம்... ஆமாம் உன் காலிலே விழுந்து எல்லோரும் கும்பிடுவார்களாமே, நீ என் காலில் விழுகிறாயே...ஐயோ...! சாமியாராக இருக்கறே... சாராயம் கூடச் சாப்பிடுகிறயே... ச்சே! சனியனே! பல்லு என்ன இப்படி இருக்கு; - போதும் - போதும்... போய்ப்படு...”

“மெத்தவும் கெட்டலைந்து விட்டிருக்கிறாள் பாவம்...”

“என் குழந்தையைக் கொடுத்து விடு... அதை மட்டும் கொல்லாதே... நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை... பாப்பாவைக் கொடுத்து விடு... என் ராஜாவைக் கொடுத்து விடு...”
பித்தம் பிடித்துக் குளறிக் கொண்டிருந்த, இரத்தினத்திட
மிருந்து, பக்குவமாகப் பேசிப் பேசித், தகவல்களைத் தெரிந்து கொள்ளப் பத்து நாட்களாயின! உண்மை தெரிந்ததும், உள்ளம் குமறிற்று! மாடசாமி ஆத்திரமடைந்தான் - அவன் ஆதீனத்தில் இருந்தால் என்ன, அரண்மனையில் இருந்தால் என்ன, இந்த அக்கிரமத்துக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும், என்று ஆவேசத்துடன் பேசினான்.

சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வந்த இரத்தினம் குடிப் பழக்கத்துக்கு ஆளானது, அதன் காரணமாக அவள் கீழ்த்தரமான செயல்களில் எல்லாம் ஈடுபட வேண்டி நேரிட்டது; மடாதிபதியிடம் சிக்கியது - ஒரு குழந்தைக்குத் தாய் ஆனது - மடாதிபதி, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் எங்கோ விட்டுவிடச் செய்தது, ஆகியவற்றை எல்லாம் கேட்டறிந்து கலங்கினான், வெள்ளைவேட்டி.
கேட்டறிந்த பல செய்திகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்த்தபோது, உண்மை பளிச்சிட்டது. அன்றோர் நாள் எழிலூர் செல்லும்போது, தண்டவாளத்தில் கிடத்தப் பட்டுக் கிடந்த குழந்தையின் நினைவு வந்தது. மேலும் பலரிடம் பேசியதில், குழந்தை போலீசார் மூலம், அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கப்பட்ட விவரம் அறிந்தான். அனாதை ஆஸ்ரமத்தில் விளையாடிக் கொண்டிருந்த அன்புமணியைக் கண்டு பிடித்தான். அந்தச் சிறுமிக்கு தான் நெருங்கிய சொந்தக் காரன் என்று கூறித் தன் குடிலுக்கு அழைத்து வந்தான். அன்பு மணி வந்ததால், இரத்தினத்தின் சித்தம் தெளியும் என்று எண்ணியதில் ஏமாற்றமே கிடைத்தது.

வெள்ளைவேட்டியின் எண்ணமெலாம், மடாதிபதியின் மீது சென்றது, எத்தனையோ அக்கிரமங்களை, அடாத செயல்களைச் செய்திருக்கிறான் இந்தப் பாவி, இந்தக் கொடுமையைச் செய்ய இவனே கூசியிருக்க வேண்டுமே, என்றெண்ணிக் கொதிப்படைந்தான். அந்தச் சமயமாகப் பார்த்து, மடாதிபதியிடமிருந்து அன்பழைப்புக் கிடைத்தது. எழிலூர் சென்றான் வெள்ளைவேட்டி, அன்பு மணியை உடன் அழைத்துக் கொண்டு.

“வா, வா, அன்பனே! யார் இச்சிறுமி...”

“கயவனொருவனின் காம விளையாட்டின் விளைவு, ஸ்வாமிகளே! சிறுமியின் இலட்சணம் எப்படி இருக்கிறது, பார்த்தீரா?”

“அழகான சிறுமிதான்! அம்மையும் அப்பனும்...?”

“அம்மை மூளை குழம்பிக் கிடக்கிறாள்; அப்பன் பூலோகவாசிகளைத் தெய்வலோகம் அனுப்பி வைக்கும் திருத் தொண்டு புரிந்து கொண்டிருக்கிறார். இந்தச் சிறுமி, அனாதை ஆஸ்ரமத்தில் இருந்து வந்தாள் - இவள் அப்பனுக்கு, அரண்மனை இருக்கிறது, பசியின் கொடுமை இந்தச் சிறுமி அறிவாள்! இவளைப் பெற்றெடுத்த தாய் கூட இவளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பைத்தியம்...”

“பரிதாபம் - பரிதாபம்... பாரிலே அன்பனே! இது போன்ற சோகக் கதைகள் ஏராளம்...”

“ஆமாம்... இதுபோன்ற கேடுகள் ஏராளம்; அக்கிரமத்தைக் தட்டிக் கேட்டிட, ஆட்கள் கிளம்புவதில்லை. நான் இப்போது புறப்பட்டு நேரே, இங்கு வந்திருக்கிறேன்”

“இங்கு வந்து...?”

“இந்தச் சிறுமியைப் பாரடா உலுத்தனே! இதோ உன் காமச் சேட்டையின் விளைவு... என்று கேட்டு, நியாயம் பெறத் துணிந்து வந்திருக்கிறேன்...”

“யாரிடம், என்ன பேசுவது என்ற வரைமுறையை மீறலாகாது... வார்த்தைகளை எப்போதும் அளந்து பேச வேண்டும்...”

“நான் அதிகமாகப் பேசப் போவதில்லை. எனக்கு நியாயம் வேண்டும்...”

“பணம், ஏதேனும்...”

“போதாது! தேவையுமில்லை... பாதகம் புரிந்ததைப் பாருக்கு அறிவித்துவிட்டு, பீடத்தை விட்டுக் கீழே இறங்க வேண்டும்...”

“பீடத்தைவிட்டு... பித்தனே! பேசத் தெரிகிறதா, உனக்கு... இந்தச் சிறுமிக்குக் குறையேதும் வராமல் காப்பாற்றும் வழி கேள் - பெறலாம். உலகத்தை ஏதோ உன் உள்ளங்கையில் அடக்கி வைத்திருப்பதுபோல் எண்ணிக் கொண்டு பேசுகிறாயே...”

“ஆதீனத்து அரசரே! அஞ்சிக் கிடந்த காலம் அல்ல இது! அக்கிரமம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்பதற்காக என் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தப் போகிறேன்...”

“அவ்வளவுக்கு முற்றிவிட்டதோ, உன் அகந்தை... சரி, சரி... ஏலே! காத்தான், டேய்! முத்தான்...”
எதற்கும் அஞ்சாத முரடர்கள் நால்வர் வந்தனர், சிறுமி அலற அலற அவளைத் தூக்கிச் சென்றனர், உட்பக்கமாக; தடுத்து நின்ற வெள்ளைவேட்டிக்குப் பலமான அடி.

“பயலே, மரியாதையாக இருந்து கொள்... இல்லை யானால், மடாலயத்தை விட்டு வெளியேறியபோது உன்னை எந்தக் கோலத்தில் படம் எடுத்திருக்கிறதோ, அது பகிரங்கமாக்கப் படும். இத்தகைய நீசன் இவன்; இவன் பேசுகிறான் சன்மார்க்கம் குறித்து, இத்தகைய மாபாவி இவன்; அவன் ஏசுகிறான், மடாலய ஊழல் பற்றி, என்று நான் கூறத் தேவையில்லை ஊர் கூறும், உலகம் கூறும்...” என்று மிரட்டினார் மடாதிபதி.

கவலை தாக்கிற்று! சிறுமிக்கு என்ன நேரிடுமோ, என்ற அச்சம் பிய்த்துத் தின்றது.

“வாய் மூடிக் கிடந்தாயானால் சிறுமி பிழைப்பாள், உன் மானத்தைப் பறிக்கும் அந்தப் படமும் மறைந்து கிடக்கும். இல்லையேல், இழிவும் பழியும் உன்னைச் சுற்றிச் சுற்றித் தாக்கும். இத்தனை காலம், ஏதோ தழைகளை விற்றுப் பிழைத்துக் கிடந்தது போல, இனியும் இருந்து தொலைக்கலாம்... தெரிகிறதா...” என்று மடாதிபதி சொன்னபோதுதான், வெள்ளை வேட்டிக்கு, நிலைமை உண்மையிலேயே, மோசமாகி இருப்பது புரிந்தது. அவசரப்பட்டு விட்டேன்... ஆத்திரப்பட்டு விட்டேன், என்று தனக்குள் கூறிக் கொண்டே ஆயாசப்பட்டான்.

தள்ளாடித் தள்ளாடி குடில் வந்து சேர்ந்த வெள்ளை வேட்டியிடமிருந்து, முழுத் தகவலைத் தெரிந்து கொள்ள மாடசாமிக்கு மெத்தச் சிரமமாகி விட்டது. அப்போது ‘படம்’ என்ன என்பது விளக்கப்படவில்லை.

“மாடசாமி! படம் என்னைப் பழிப்பதாக மட்டும் இருந்து விட்டால், பரவாயில்லை; ஊர்ப்பழியை நான் தாங்கிக் கொள்வேன்! உலுத்தன் என்பார்கள்! உருத்திராட்சப் பூனை என்பார்கள்! காமச் சேட்டைக்காரன் என்று காரித் துப்புவார்கள்! இதனாலேதான், காவியைக் கழற்றிப் போட்டு விட்டு மடால யத்தை விட்டு வெளியேறும்படி, மடாதிபதி கட்டளையிட்டார் என்று பேசுவார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சவில்லை, மடாசாமி, உண்மையில் அஞ்சவில்லை. ஆனால் அந்தப் படம் வெளியிடப்பட்டால், பாபம் நம்ம பாலாவின் வாழ்வு பாழாகி விடும்... பாலாவின் தாய், மிகக் கேவலமான நடத்தைக்காரி என்பது தெரிந்துவிடும்... பத்தரை மாற்றுப் பசும்பொன் போன்ற குணவதி பாலா... உன்னையே மனிதனாக்கியவள்... அவளுக்குத் திருமண ஏற்பாடும் நடந்து வருகிறது... அந்தப் படம் வெளிவந்தால்... திருமணமும் நடவாது, அந்தத் திருவிளக்கே அணைந்து போகும்...” என்று கூறி, வெள்ளை வேட்டி சோகித்தான்.

“மடாதிபதியின் மண்டையைப் பிளந்திட முடியும், என்னால், சிறுமி அன்புமணியை அந்தப் பாதகர்கள், சிறைப் படுத்தி இருக்கும் இடம், அலை கடலுக்கு நடுவில் இருப்பினும்; மலை உச்சியில் புலிக் குகையில் இருப்பினும், கண்டறிந்து மீட்க முடியும்... என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் எனக்குக் கூறினால்...” என்று உருக்கமாகக் கேட்டான் மாடசாமி.

“திருவிளையாடற் புராணம் கிடைத்துவிட்டால், மாடசாமி! அந்த அக்கிரமக்காரன் அடங்குவான்-படம் கொடுத்து விடுவான் -பாலாவின் வாழ்வும் பாழ்படாது - நமது அன்புமணியையும் திரும்பப் பெறலாம்.”

“திருவிளையாடற் புராணமா?”

“ஆமாம், மாடசாமி! ஆலவாயப்பன் செய்த திருவிளையாடல்களை விளக்கிடும் புராணம் அல்ல, இது. தலைப்பு அதுபோல்; உள்ளேயோ இந்த அக்கிரமக்காரன் நடத்திய ‘சேட்டைகள்’ அத்தனையும், படமாகி, காட்சிக்காக வைக்கப் பட்டுள்ள, கழிசடை ஏடு மாடசாமி, அது. நாகரீக உணர்ச்சி உள்ளவர்கள் காணக் கூசும், கோரங்கள்! நிர்வாணக் காட்சிகள்!!! ஆபாசமான செயல்களெல்லாம் படமாக்கப்பட்டுள்ளன! ஆதீன கர்த்தனாக அமர்ந்துள்ளவன், எப்படிப்பட்ட இழிசெயல் புரிபவன் என்பதை உலகுக்கே காட்டக்கூடியது...”

“அந்த ஏடு இருக்கும் இடம்...”

“எப்போதும் அந்தப் பாவிதான் தன் அந்தரங்க அறையிலே அதை வைத்திருப்பான். என் மானத்தைப் பறிக்கக் கூடிய படமும், அதிலேயே இருக்கக் கூடும்...”

“அந்த ஏடு கிடைத்து விட்டால்...”

“நாட்டை நாசப்படுகுழியிலிருந்து மீட்கலாம்...”

“நண்பரே! என்னை நல்வழிப்படுத்திய அன்பரே! அந்த ஏடு நம்மிடம் கிடைத்து விட்டது, என்றே வைத்துக் கொள்ளுங் கள். பல ஆண்டுகள் பழக்கமற்றுப் போயிற்று என்றாலும், என் கடைசிக் களவு வெற்றிகரமாகவே இருக்கும். ஐயம் வேண்டாம்.”
“களவாடப் போகிறாயா?”
‘கடைசிக் களவு! நல்லதோர் காரியத்துக்காக! பழைய மாடசாமி, ஒரே ஓர் இரவு மட்டும்...”
“நான் எப்படி இதனை அனுமதிப்பேன்... களவு முதலிய கெடு செயல்களை விட்டொழித்து, புதிய மனிதனாகி விட்ட உன்னை மீண்டும், களவாடச் சொல்வது என்றால்...”

“கடைசிக் களவு நண்பரே! கடைசிக் களவு!”

இந்த உரையாடலுக்குப் பிறகு, மாடசாமி, புதிய சுறுசுறுப் படைந்தான். ஏதேதோ கருவிகளைத் தேடித் தேடிப் பெற்றான் - நூலேணிகூடத் தயாரித்துக் கொண்டான்.

மாடசாமியின் போக்குக்கண்டு, வெள்ளைவேட்டிக்குத் திகில் ஏற்பட்டது. மீண்டும் மாடசாமி, கொள்ளைக்காரனாகி விடுவானோ என்ற அச்சம் ஏற்பட்டது.

களவு! அந்த எண்ணம் புகுந்த உடனே, மாடசாமியின் கண்களிலேயே ஓர் புதிய குரூரம் தெரியலாயிற்று - சிந்தனையில் ஏதேதோ திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.

நீண்ட காலமாக, ஒருவரையும், மாடசாமி அடித்ததில்லை. கடைசிக் களவுக்கு அவன் தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, தோட்ட வேலை செய்யும் பாட்டாளி ஒருவன் பரிகாசம் பேசியதற்காக, அவனைப் போட்டு முரட்டுத்தனமாகத் தாக்கி விட்டான் - வெள்ளைவேட்டியால், அவனைத் தடுத்து நிறுத்தக் கூட முடியவில்லை.

செச்சே கடைசிக் களவு என்று இதற்கு அனுமதி கொடுத்து விட்டால், இவனை மீண்டும் இழந்துவிடவேண்டிவரும். எவ்வளவோ சிரமப்பட்டு மாடசாமி, மனிதனானான். மீண்டும் அவனை மிருகமாக்க, பாலா உடந்தையாக இருப்பது. வேண்டாம், வேண்டவே வேண்டாம். மடாதிபதி, என் மானத்தை வாங்கட்டும், சகித்துக் கொள்வேன். பாலாவின் தாயார் மீது இழிவு படரும் - படரட்டும், பாலாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் வாலிபனிடம் உண்மையை விளக்கி விடுவோம்” என்று கூட வெள்ளை வேட்டி எண்ணிக் கொண்டான்.

வேட்டைக்காக, மோப்பப் பிடித்தபடி, குகையை விட்டு, வெளியே புலி கிளம்புகிறது; குழல் ஊதி உள்ளே வந்து படுத்து உறங்கச் செய்யவா முடியும்! பழைய மாடசாமி புறப்பட்டு விட்டான், போதனை புக முடியாத நிலை, பழி தீர்த்தாக வேண்டும் என்ற ஆவேசம்.

மாடசாமி, சொல்லிக்கொள்ளக்கூட இல்லை - குடிலை விட்டுக் கிளம்பி விட்டான்.

புதிய தோட்டக்காரனுடைய சுறுசுறுப்பு கண்டு மடாதிபதியே பாராட்டினார்; அவ்வளவு பக்குவமாக, மாடசாமி பணிபுரிந்து வந்தான். மடாலயச் சூழ்நிலைகளை நன்கு கண்டறிந்தான் பிறகு, தக்கபடி திட்டமிட்டு, மாடசாமி தன் கடைசிக் களவை நிறைவேற்றிக் கொண்டான். கட்கத்தில் அடங்கக் கூடிய அளவுதான் அந்த ஏடு, ஆனால் உலகெலாம் தேடித் தேடித் திரட்டினாலும், இத்தனை ஆபாசங்கள் ஒன்றாகக் கிடைத்திடாது. வழியில் இருந்த மினுக்கு விளக்கொளில் பார்த்த போது மாடசாமிக்குக் குமட்டல்கூட வந்தது; அத்தனை ஆபாசமான போக்குகள் படமாக்கப்பட்டிருந்தன.

பாலாவின் தாயார் நிர்வாணக் கோலத்தில்! அவளை அணைத்தபடி, வெள்ளை வேட்டி, பிறந்தமேனியில்! வெள்ளை வேட்டியின் முகத்திலே வேதனைக் கோடுகள் கூட இருந்தன. மடாதிபதியின் பல திருவிளையாடற் காட்சிகளும் படமாக்கப்பட்டிருந்தன - எல்லவாற்றிலும், அவர், ‘ஆனந்த சொரூபி’ யாகவே காணப்பட்டார். - அமிர்த கலசம் பக்கத்திலேயே இருந்தது. இந்தக் கன்றாவிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டி
ருந்தபோது பாம்பொன்று ஓசைப்படாமல் வந்து மாடசாமியைத் தீண்டிவிட்டது. பதைத்தான்; வலியும் மயக்கமும் வேகமாயின, பிணமாவதற்குள் குடில் சென்றாக வேண்டும். போலீஸ் துரத்தும்போதுகூட இத்தனை வேகமாக ஓடினதில்லை. சாவு துரத்துகிறது! துரத்துகிறது! துளைக்கிறது மரணம், வெற்றி பெறுவதற்குள் குடில் சென்றாக வேண்டும்! ஓடினான், ஓடினான் மாடசாமி, வாயில் நொப்பும் நுரையும் தள்ளத் தள்ள ஓடினான்.

வெற்றி! வெற்றி! என் கடைசிக் களவு மகத்தான வெற்றி! உலகுக்கு நன்மை தேடும் செயல் ஒன்று என்னால் செய்ய முடிந்தது - என்னால்! நச்சரவம் நான் நல்லவனாவதைப் பொறுத்துக் கொள்ள மறுத்தது போலும். தீண்டி விட்டது! தீர்ந்து விட்டது! என்று கூறியபடி, திருவிளையாடற்பு ராண ஏட்டினை, வெள்ளைவேட்டியிடம் நீட்டிக் கொண்டே, சுருண்டு கீழே வீழ்ந்தான் - மாடசாமியின் உயிர் பிரிந்தது. ‘கோ’வெனக் கதறினான் வெள்ளைவேட்டி! பாம்பே! பாழும் பாம்பே! பாதகம் புரிவோரைப் பட்டு மெத்தையில் புரளவிட்டு, இந்த நல்லவனைச் சாகடித்தனையே! உலகம்தான் இவனைக் கொடுமைக் குழியில் தள்ளிவிட்டது. மெத்தக் கஷ்டப்பட்டு மீண்டும் மனிதனானான்! மாண்பு அவன் மனத்திலே இடம் பெற்றது; மக்கள் பணியிலே நாட்டம் பிறந்தது; உலகுக்கு ஒரு நல்லவன் கிடைத்தான் என்று நான் உளம் மகிழ்ந்தேன். ஊர்ந்து வந்த சாவே! நல்லவனைச் சாகடித்து விட்டாயே; அந்தோ! கள்ளனாகக் காலந்தள்ளியவன், திருந்தினான், நல்லவனானான், நான்தான் மீண்டும் அவன் கள்ளனாக காரணமாக இருந்தேன். என்னாலும் அவனை இனித் தடுத்திட முடியாது, மாடசாமி மீண்டும் கள்ளனாகி விடுவான் என்று எண்ணியோ அவனைச் சாகடித்தாய் என்றெல்லாம் கூறிக்கூறிப் புலம்பினான்.

காத்தா,
முத்தா,
முனியா,
தோட்டக்காரன் எங்கேயடா பாவிகளா! என் உயிருக்கே வேட்டு வைத்துவிட்டானே, என்று மடாதிபதி அலறிப் புடைத்தார். களவு போன பொருளின் ‘மகத்துவம்’ தெரியாததால் மடத்து ஆட்கள், இதற்கு ஏன் இவ்வளவு கூச்சலிடுகிறார் என்றெண்ணிக் கொண்டனர்.

மடாதிபதி, சிறுமி அன்புமணியை அனுப்பி வைத்தார் குடிலுக்கு.

“இன்னும் பதினைந்து நாட்கள் தவணை. அதற்குள் ஆதீனப் பதவியிலிருந்து விலகாவிட்டால், திருவிளையாடற் புராணம் உலகுக்குத் தரப்படும்” என்று சுருக்கமான ஓலை அனுப்பி வைத்தான் வெள்ளைவேட்டி.

பத்து நாட்களில், அன்புமணிக்கு அரை இலட்சம் அளிக்கப்படும் என்ற பதிலோலை கிடைத்தது.

எதிர் பாருங்கள்
திருவிளையாடற்புராணம்!
புதிய ஏடு!
வெள்ளைவேட்டியின்
விளக்க உரையுடன்

என்றோர் விளம்பரம், தினத்தாட்களில் வெளிவந்தது.

மறுநாள், மடாதிபதி தம் ஆதீனப்பதவியைத் துறந்தார் என்ற செய்தி வெளிவந்ததுடன் - அடுத்த மடாதிபதியாக வருவதற்கு யாருக்கு உரிமை என்பது தீர்மானிக்கப்பட முடியாத நிலையில், சர்க்கார், மடாலயத்துச் சொத்துக்களைத் தன் வசமாக்கிக் கொண்டது என்ற குறிப்பும், பத்திரிகைகளில் வெளிவந்தது.

லக்கா அழகாக ஆடிற்று! லோட்டியின் கர்ண வித்தை கண்டு, சிறுமி அன்புமணி மகிழ்ந்து கொண்டிருந்தாள். அவளையே உற்றுப் பார்த்தபடி இருந்த இரத்தினத்தின் முகத்திலே இலேசாக ஏதோ ஓர் தெளிவு தெரிந்தது. வெள்ளை வேட்டி புதிய நம்பிக்கை கொண்டான்.

(திராவிட நாடு - 1957)