அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


புதிய வரலாறு
2

அச்சிங்கத்தோடு வாழ்ந்து ஓராண்டு கழித்துத்தான் ஈன்ற மூன்று குட்டிகளோடு காட்டிலிருந்து அப்பெண் சிங்கம் தன்னை வளர்த்தவர்களது வீட்டுக்கு வந்து, தான் பெற்ற செல்வங்களைப் பெருமிதத்தோடு காண்பிக்கிறது.

புதிய சூழ்நிலைகளோடு பழகிப் போவதற்குக் காலம் பிடிக்குமென்பதைக் குறிப்பிடுவதற்கோர் அடையாளமாகவே சிங்கத்தின் கதையை இங்குக் குறிப்பிட்டேன்.

பணி புரிவதற்கே பிறவி
அந்தச் சிங்கத்தின் கதைக்கு “பார்ன் ப்ரீ” என்று பெயரிட்டார்கள். “பார்ன் சர்வ்” “பணி புரிவதற்கே பிறவி” என்பதே எங்கள் வாழ்க்கைக் கதையின் குறிக்கோளாகும். எங்களது பணியில் பலரது நல்லெண்ணம் எங்களுக்குத் துணையாக இருக்கிறது. சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியினரது நல்லாதரவும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதை எண்ணி மகிழ்கிறோம்.

நாங்கள் எத்தகைய நிலையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றோம். விவசாயம் நிலை குலைந்திருந்தது. உணவிலே நெருக்கடி, நிதி விவகாரத்திலே ரிசர்வ் வங்கியிடம் அதிகப்பற்று, இந்த நிலையில்தான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றோம்.

முதலாவது வரவு செலவுத் திட்டத்தையே, ஏற்பட்டிருந்த இந்த நிலைமைகளைச் சமாளித்திடத் தக்கதாகத் தயாரிக்க வேண்டியதாயிற்று.

புதிய அமைச்சர்களோ துடித்தனர். அவரவர் துறைகளில் செய்யப்படவேண்டிய பணிகளுக்கு அதிகப் பணம் ஒதுக்கித் தரும்படிக் கேட்டவாறு இருந்தனர்.

ஆசை ஆர்வங்களையெல்லாம் சற்றுக் கட்டுப்படுத்தி, இருப்பதைக் கொண்டு செட்டாகச் சிக்கனமாகக் காரியமாற்ற முனைவோம் என்றுதான் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய தாயிற்று.
ஒன்றைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கல்விக்காகச் சென்ற ஆண்டு செலவிட்ட ரூ.44 கோடியோடு பத்துக்கோடி கூடுதலாக 54 கோடியாக இவ்வாண்டு ஒதுக்க முடிந்துள்ளது.

சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களில் கவனம் செலுத்தினோம். செலவிடப்படுகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் உரிய பலன் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு பணியாற்றினோம்.

சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களில் தக்க கவனம் செலுத்தாமல் இருந்ததே இதற்கு முன் போடப்பட்ட உணவு உற்பத்தித் திட்டங்களெல்லாம் தோல்வியடையக் காரணமாக இருந்தது.

இதனாலேயே சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதி உதவி செய்யும்படி மத்திய அரசுடன் வாதாடினோம். அதிக அளவில் பணமேதும் அங்கிருந்து கிடைக்கவில்லையென்றாலும் அங்கிருந்து நிரம்ப நல்லெண்ணத்தைப் பெற்றேன். அதனை, பணத்தைக் காட்டிலும் பெரிதென்று நான் கருதுகிறேன்.

நாம் கேட்பதில் உள்ள நியாயத்தை-உண்மையை உணர்ந்து அவர்கள்-கொடுக்கிறோம். நீங்கள் கேட்கும் அளவு முடியாவிட்டாலும் ஓரளவு கொடுக்கிறோமென்கிறார்கள்.
தஞ்சை டெல்ட்டா எங்கும் 36 கிளை ஆறுகள் இருக்கின்றன. காலப்போக்கில் இவை வண்டல் சேர்ந்து மேடு அடைந்துவிட்டன. இவற்றையெல்லாம் பழுது பார்த்துச் செப்பனிட்டால் சிறந்த பலன் காணலாம்.

கடந்த புயலின் போது சேதமடைந்த ராமநாதபுரம் தென்னார்க்காடு ஏரி-குளங்களைச் செப்பனிட மட்டும் ரூ.2 கோடி கொடுத்துதவும்படி மத்திய அரசைக் கேட்டோம். ஏதோ கொஞ்சம் கொடுத்தார்கள். அது போதாது வீடூர் நீர்த்தேக்கத்தைச் செப்பனிட மட்டும் ரூ.5 லட்சத்துக்கு மேல் தேவைப்படும். இருப்பினும் கிடைத்ததைக் கொண்டு வேகமாக மராமத்துப் பணிகளைப் பார்த்தோம். அதன் விளைவாகவே இப்போது நல்ல பயிர் கிடைத்துள்ளது.

இன்னும் சிறிது சிரமப்படுவோமானால் தமிழ்நாட்டிலிருந்து அரிசியை வெளியில் விற்கும் அளவுக்கு முன்னேறுவோம். சன்ன ரக அரிசியை உற்பத்தி செய்வோமானால் அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

இன்னும் கொஞ்சம் நிதி உதவி கிடைக்குமானால் உணவு உற்பத்தித் துறையில் இத்துணைக் கண்ட முழுமைக்கும் தமிழ்நாடு வழி காட்ட இயலும்.

தொழில் துறையிலும் நாங்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நேரம் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருந்த நேரமாகும். இருப்பினும் இயன்றளவு தொழில் விரிவடையக் காரியங்களைச் செய்திருக்கிறோம். மிகப் பிரமாதமாகத் தொழில்களின் துவக்க விழாக்களை நடத்தி வைத்துவிட்டால் மட்டும் போதாது. ஏற்கெனவே உள்ளவை நிலைத்து, வலிவுடன் விளங்கத் தேவையான காரியங்கள் செய்யப்படவேண்டும். அதை நாங்கள் செய்திருக்கிறோம்.

தொழில்கள் பெருக, வாழ்க்கைத் தரம் உயர, ஆறு மாதம் போதாது, மக்களது நல்லெண்ணமும் நல்லாசியும் தொடர்ந்து இப்போது போல் எப்போதும் வர வேண்டும். பல பெரும் சாதனைகளை இத்துறையில் செய்து காட்ட இயலும். மத்திய-மாநில பிணக்குகள் பற்றிச் சிலர் சுட்டிக்காட்டினார்கள். நான் அமைதியை நேசிப்பவன். இரண்டுபேர் சண்டை போட்டுக் கொண்டாலே அதைக் காணக்கூட நான் சகிக்க மாட்டேன். எனது இயற்கை அப்படியிருக்கும்போது பிணக்குகள் ஏற்பட நான் எப்படிக் கருவியாக அமைவேன்?

இயற்கைக் காரணங்களால் பிணக்குகள் ஏற்படக்கூடும். ஆனால் நான் அவற்றிற்குக் காரணமாக இருக்க மாட்டேன். மத்திய அரசுக்கு நாம் விடுகிற முறையீடுகளும் வேண்டுகோள்களும் பிணக்குக்குரியவையாகக் கருதப்படக்கூடாது.

மொழி குறித்து எழுகின்ற சிக்கல்கள் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் மட்டுமில்லாமல் மாநிலத்திற்குள்ளேயும் உணர்ச்சித் தீயை எளிதில் மூட்டிடத் தக்கவையாகும். இதை உணர்ந்துதான் இம்மாநில முழுதும் ஓர் அணியென இந்திக்கு எதிராகத் திரண்டு நிற்கிறது.

ராஜாஜி, பெரியார் இராமசாமி, முன்னாள் தளபதி கரியப்பா போன்றவர்களும் ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்த்து மாநிலப் பித்துக் கொண்டவர்கள் என்றோ அரசியல் அற்பத்தனம் உடையவர்கள் என்றோ எவரும் சொல்லிட இயலாது.

ஆரம்ப காலத்திலிருந்து மொழிப் பிரச்சினையைப் பேச வேண்டியவர் பேசாது, வேறு யார் யாரோ பேசி வருகிறார்கள். மொழியியல் வல்லுநர்களும்-கல்வியாளர்களும் பேசி விவாதிடத் தக்க பிரச்சினை இது மேலும் இந்நாட்டின் வரலாற்றில் இப்போதைய கட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டிய பிரச்சினையல்ல மொழிப் பிரச்சினை.

உணவு உற்பத்தியைப் பெருக்கி-தொழில்களைப் பெருக்கி நகரங்களை அழகு நகரங்களாக ஆக்கி-கிராமங்களை வாழ்வதற்கு ஏற்றதாக ஆக்கி இருந்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் மொழி பற்றி விவாதித்துக் கொள்ளலாம்.

ஆங்கிலம் நம்மீது திணிக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஆங்கிலக் கல்வி வளர வேண்டும் என்று இந்த நாட்டில் இயக்கமே நடத்தியிருக்கிறார்கள். அப்படி நாமாகக் கேட்டுப் பெற்றதுதான் ஆங்கிலம்.

ஆங்கில மொழியின் பயனை இன்று நாம் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளும் பெற்றுள்ளன. இதையெல்லாம் மனத்திற்கொண்டு தமிழக அரசு தன்னுடைய கொள்கையை விளக்கித் தெரிவித்துள்ளது.

பொது அறிவு தேவை
நானாக இருந்தாலும்-நாவலராக இருந்தாலும்- கருணாநிதியாக இருந்தாலும்-யாராக இருந்தாலும், மந்திரிகளால் மட்டும் ஒரு நாடு முன்னேற்றம் அடைந்து விட முடியாது. மக்களது அறிவாற்றலும் நாட்டு முன்னேற்றத்துக்குத் தேவை.

‘நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு’ என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப நாட்டை வளமுடையதாகச் செய்வது மக்களது பொது அறிவே!

வீடு கட்டுவதற்காகத் தேர்ந்தெடுத்த தரை சேறாக இருந்தால் கட்டிடம் எழுப்ப முடியாது! அது, பாலைவனமாக இருந்தால் பயிரை வளர்க்க முடியாது! பனிக்கட்டியாக இருந்தாலும் விதை தூவ முடியாது! அதைப்போல அறிவு இல்லையென்றால் பலனை அனுபவிக்க முடியாது.

மோரைக் கடைந்தால்தான் வெண்ணெய் கிடைக்கும், சுண்ணாம்பைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்காது. மோருக்கும் சுண்ணாம்பு நீருக்கும் வேறுபாடு இல்லாவிட்டாலும் இரண்டு சொட்டு நாவில் விட்டுப் பார்த்தால் தெரிந்துவிடும். மோரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவினை வளர்த்துக் கொண்டு பலன் பெற வேண்டும்!

அறிவு வளர்ச்சியின்றிச் சமுதாயம் வளர்ச்சிபெறும் என்றால் நாம் ஏன் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தோம்? ஏன் படிப்பகங்கள் ஆரம்பித்தோம்? நாம் ஏன் பல மன்றங்கள் ஆரம்பித்தோம்? அறிவின்றி முன்னேற்றம் காண முடியுமா?

பல்வேறு நாட்டு நிகழ்ச்சிகள் அங்கே நடைபெறும் பலவிதமான நடவடிக்கைகள் குறிப்பாகத் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகள் தமிழக அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தாங்களும் புரிந்துகொண்டு பிறருக்கும் புரியவைக்க வேண்டும். அதற்கு முயற்சிகளை இந்த அறிவு வளர்ச்சி மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடைக்குச் சென்று பண்டங்களின் விலையைக் கேட்டால் நேற்று இருந்ததைவிட இன்று அதிகம் என்பார்கள். ஏன் அதற்குள் விலையேறிவிட்டது என்றால் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் சண்டை நடக்கிறது என்பார்கள்.

சண்டை நடக்கும் இடத்திற்கும் இந்த இடத்திற்கும் நீண்ட தூரம் இருக்கிறது. இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கத் தோன்றும். இதைக் காரணம் வைத்துக் கொண்டே விலைவாசியை ஏற்றுபவர்களையும் பொருளைப் பதுக்கி வைப்பவர்களையும் கண்டு வருத்தப்படவேண்டும்.

எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் சண்டை நடக்கிறது என்றாலும் சண்டை மூன்று நாட்களாக நடைபெறுவதால் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு உணவேற்றிவரும் கப்பல்கள்-அதிலும் குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இங்கு வரும் இந்தியக் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக வர இயலாமல் ஆப்பிரிக்காக் கண்டத்தின் கடைசிக் கோடியைக் கடந்து வரவேண்டியிருக்கிறது.

10 நாட்களில் வரும் கப்பல்கள் 20 நாட்களில் வருவதால் தாமதம் மட்டுமல்லாமல் சரக்குகளின் கட்டணமும் ஏறிவிடுகிறது. எங்கோ நடக்கிற சண்டை இங்கே எப்படிப் பாதிக்கிறது என்பதை உதாரணத்திற்காகச் சொன்னேன்!

இப்படிப்பட்ட விவரங்களையெல்லாம் அரசியல் கட்சிகள் கூட்டம் போட்டுச் சொல்வதைவிட அறிவு வளர்ச்சி மன்றங்கள் எடுத்துச் சொல்லவேண்டும்.

வதந்திகளின் வாழ்வு...
ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பப் போவதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. அதைக்கண்டு நானே அதிர்ச்சியுற்றேன். ஏனென்றால் அந்த அதிகாரம் என்னிடம் இல்லை. அப்படியிருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஒருவேளை எனக்கு அந்த அதிகாரம் இருக்க வேண்டுமென்ற நினைப்பில் அவர்கள் கூறினார்களோ என்னவோ தெரியவில்லை.
இத்தகைய வதந்திகள் இப்பொழுது மட்டுமல்ல, உலகில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. இராமாயணத்தில் கூட இந்த வதந்தி இருக்கிறது. இலங்கையை எரித்துவிட்டு வானரசேனையுடன் இராமன் சீதையை மீட்டுத் திரும்பி வரும்பொழுது கிட்கிந்தையில் இடையில் தங்கி விருந்துண்டார்.

விருந்து சாப்பிடும்போது கடைசியில் இருந்த ஒரு குட்டி வானரம் கைதூக்கிக் குதித்ததாம். அதைப்பார்த்து அருகிலிருந்த வானரம் குதிக்க-அது குதிப்பதைப் பார்த்துப் பக்கத்திலுள்ளது குதிக்க-இப்படியே வரிசையாக அநுமன் வரை சென்று சுக்ரீவனுக்குப் பக்கத்திலிருந்து இலட்சுமணன் இதைக்கண்டு வில்லையெடுக்க-இவற்றையெல்லாம் பார்த்த இராமன் வில்லிலே நாண் பூட்டிவிட்டு, ஏன் எதற்காக என்று கேட்க-இதைக் கேட்ட இலக்குவன் சுக்ரீவனைப் பார்க்க அவன் அநுமனைப் பார்க்க இப்படியே பார்த்துக் கொண்டு போய் இறுதியில் குட்டி வானரத்திடம் கேட்டார்களாம்.

அதற்கு அந்த வானரம், “எனக்கு ஊற்றிய குழம்பில் ஒரே யொரு மொச்சைக் கொட்டைதான் விழுந்தது. அதன் தோலைப் பிதுக்கி விழுங்கப் பார்த்தேன். கொட்டை மேலே போய்விட்டது. அதைப்பிடிக்கத்தான் கையை உயர்த்தி எவ்விக் குதித்தேன்” என்றதாம். இராமாயண காலத்திலேயே இப்படிப்பட்ட வதந்திகள் உலவினால் இப்பொழுது உலவுவதற்குக் கேட்கவா வேண்டும்?

இதுபோலத்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விஷயத்திலும் வதந்தி பரவுகிறது. பொது அறிவு இருக்குமானால் இப்படிப்பட்ட செய்திகள் வெளிவராது.

பொது அறிவு என்றால் நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து நல்லவற்றைக் கொண்டு அல்லாதவற்றைத் தள்ளிவிட வேண்டும்.

இதை நம“மவர்களுக்கு மட்டும் சொல்லவில்லை. நேற்று வரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் நண்பர்களுக்கும் சொல்லுகிறேன். விவரம் தெரிந்து சொல்லுங்கள் “எனக்குத் தெரியாது, இவர்தான் இப்படிச் சொன்னார்-அவர்தான் அப்படிச் சொன்னார்” என்று சொல்லி அவரைக் கேட்கும் போது அவருக்கு அவர்தான் சொன்னார் என்று சொல்ல, கடைசியில் அவர் எங்கே என்றால் திண்டிவனம் போயிருக்கிறார் என்று சொல்ல திண்டிவனம் எங்கே என்று கேட்டால், அது இங்கேதான் எங்கோ இருக்கிறது என்று சொல்லுவதில் அர்த்தமில்லை.

நான் முதலிலிருந்தே சொல்லி வருகிறேன். தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால் தான் நம்மீது எரிச்சல் கொண்டு பேசி வருகிறது.

நம்மீதுள்ள சிரங்கை ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொரிந்தாலே எரிச்சல் கண்டுவிடுகிறதே. இருபது வருடங்களாக இருந்துவிட்டு இப்போது தூக்கியெறியப்பட்டால் அவர்களுக்கு எப்படி எரிச்சல் வராமல் இருக்கும்? பறிபோன அந்த உணர்ச்சியில்தான் அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள். அதற்கு நானா காரணம்?

முன்பு ஒருமுறை நான் இந்தப் பகுதிக்கு வந்தபோது கன்னிகாபுரத்தின் குடிசைகள் வெள்ளத்திலே மூழ்கியிருந்ததைக் கண்டேன். இப்பொழுது கூட நான் வரும்பொழுது இது அந்தப் பள்ளமா இதுதான் அந்த இடமா என்று கேட்டுக்கொண்டே வந்தேன்.

அவர்களைப் போல் இதுதான் ஆக்ராவுக்குப் பக்கத்திலுள்ள மாளிகையா-இதுதான் அஜந்தாவுக்கு அருகிலுள்ள கட்டடமா என்று கேட்கவில்லை. நமக்குத் தெரிவதெல்லாம் பள்ளமும்-மேடும் வறுமையும் இருளும்தான்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த குடிசைகளையெல்லாம் பழுது பார்த்திருந்தால் அவர்களுக்கு இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்குமா? அப்படியே பார்த்தாலும் இங்கு மட்டும் தானா அவர்களுக்குத் தோல்வி? எட்டு மாநிலங்களிலும் தோல்வி அவல்களை ஆரத் தழுவியிருக்கிறதே.

இந்தியா என்றால் பாரதம்-பாரதம் என்றால் உத்திரப்பிரதேசம் என்பார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த இடம் சவகர்லால் நேரு பிறந்த சரித்திரச் சிறப்பு வாய்ந்த இடம் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த இடம் இந்திரா காந்தி அம்மையார் பிறந்த இடம்-காங்கிரசின் மூலஸ்தானம் என்றும் காங்கிரசின் இருதயம் என்றும் சொல்லப்படுகின்ற உ.பி.யிலே காங்கிரஸ் தோற்றிருக்கின்றது.
வெள்ளைக்காரன் துப்பாக்கிக்கு மார்பைக் காட்டிய பாஞ்சாலச் சிங்கம் என்று பெயர்பெற்ற லாலா லஜபதி ராய் பிறந்த பஞ்சாபிலே காங்கிரஸ் தோற்றது.

இராசேந்திர பிரசாத் பிறந்த பீகார் மாநிலத்திலே காங்கிரஸ் தோற்றது!

இராச தந்திரி என்று பெயர்பெற்ற பட்நாயக் பிறந்த தண்டகாரண்யத்திலே (ஒரிசா) காங்கிரஸ் தோற்றது!

அதைவிட்டுவிட்டு திருவல்லிக்கேணியிலும் மைலாப்பூரிலும் கூட்டம் போட்டு என்னைத் தூற்றுவதால் வெற்றி பெற்றுவிடுமா?

ஏன் இப்படிப் பேசுகிறார்கள்-அவர்கள் அப்படிப் பேசாதவாறு அறிவுத் தெளிவான கருத்துக்களை எங்களைப் போன்றவர்களைத் தவிர அறிவு வளர்ச்சி மன்றங்கள் போன்றவை அவர்களுக்கு எடுத்துரைக்காததால்!

அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து நாம் அரசுப் பொறுப்பை ஏற்றது மார்ச் 6ஆம் நாளில்தான். நீங்கள் நம்பினீர்களோ என்னவோ அப்பொழுது நான் அதாவது மார்ச் மாதம் ஆறாம் நாளுக்கு முந்திய நாள் வரை, நான் பதவி ஏற்பதாக இல்லை. அமைச்சர் சத்தியவாணிமுத்து அம்மையார் கூட ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார்கள்.

எப்படியம்மா முடியும்? இவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்துவிட்டுப் போய்விட்டார்களே! அது எனக்குக் கவலையாக இருக்கிறது. எப்படி இதையெல்லாம் நிவர்த்தி செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு வீடு சென்றுவிட்டேன். மார்ச் 5 ஆம் நாள் இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. விடியும் வரை கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டே இருந்தேன். அப்பொழுது என் கண்களுக்கு குடிசைப் பகுதிகளே தென்பட்டன. சோற்றுக்காக அலைபவரின் முகங்களும்-ரேசன் கடையிலே கால்கடுக்க நிற்பவர்களின் முகங்களுமே என் கண்களுக்குத் தென்பட்டன. இவற்றிற்கெல்லாம் பரிகாரம் எப்படித் தேட முடியும்! என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை!

அதுவரை வானம்பாடியைப் போலவே சுற்றிக் கொண்டே பாடிக்கொண்டு இருந்தேன். என் இசை பிடிக்கிறதோ இல்லையோ என்று கவலைப்படாமல், நான் சுற்றிக் கொண்டே வந்தேன். 6ந் தேதிக்குப் பிறகு கூட்டுப் பறவைகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.

நல்லாட்சி ஏற்பட...
ஒருவரை ஒருவர் கெடுக்காமல் வாழ முடியும். ஒருவரை ஒருவர் பகைக்காமல் வளர முடியும் என்ற முறை, நிலைநாட்டப் படுவதைத்தான் விரும்புகிறேன். அந்த நல்லாட்சி ஏற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

விவசாயம், கல்வி ஆகிய துறைகல் சீராக அமைய, கிராம நலிவுகள் நீக்கப்பட உணவு நெருக்கடி போக்கப் படவேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூறுவதோடு மக்கள் ஒத்துழைப்பையும் தரவேண்டும். அவ்வகையில் மக்கள் ஒத்துழைத்துப் பாடுபடுவார்களானால் மக்கள் முயற்சி வெற்றிபெற எங்களால் ஆன முயற்சிகளைச் செய்வோம் கோட்டையில் நானும் மற்ற அமைச்சர்களும் இருந்து விடுவதால்-அமர்ந்து விட்டதால் எல்லாம் நடந்து விடும் என நினைக்கக் கூடாது. உங்கள் அறிவு எங்களுக்குத் துணை நிற்க வேண்டும். மக்களின் அனுபவம் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். உங்கள் தோழமை எங்கள் தோழமையோடு சேர வேண்டும். ஏர் பிடித்து உழும் உழவர்கள் அதிகாலையில் சென்று மாலை வரையில் வயலில் ஈடுபடும் உழவர் பெருங்குடி மக்கள் தந்த ஒத்துழைப்புத்தான் அதற்குக் காரணம். அதனால்தான் இன்று உணவு நெருக்கடி ஓரளவு நீக்கப்பட்டுள்ளது. ஓரளவு என்றுதான் சொன்னேன், முழு அளவு அல்ல.
நம் நாட்டு மக்களுக்காக நாம் வேறெந்த நாட்டிடமும் உணவுக்காகக் கையேந்தக் கூடாது. இன்று நம் நாடு விவசாய நாடு. இங்கு நூற்றுக்கு எண்பது பேர் விவசாயிகள். சென்னை, கோவை, மதுரை போன்ற சில பட்டணங்கள் பளபளப்பாக இருக்கின்ற போதிலும், கிராமத்தில்தான் பெரும“பாலான விவசாயிகள் உள்ளனர். அவர்கள் ஒத்துழைப்புத்தான் உழைப்புத்தான், நாட்டின் அச்சாணி! நகரங்களுக்குப் பளபளப்பு ஏற்படக் காரணம். நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்ட உழைக்கும் விவசாயிதான்!

இதைத் தமிழக அரசு உணர்ந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் உழவர் பெருங்குடி மக்களுக்கும் தமிழக அரசின் சார்பில் நன்றி செலுத்துகிறேன். தஞ்சைத் தரணி மட்டுமின்றி வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களிலும் அதிக ஆர்வத்தோடு விவசாயிகள் பாடுபட்டு இருக்கிறார்கள். அந்தக் காரணத்தால் உணவு நெருக்கடி இல்லை என்று சொல்லத்தக்க அளவில் இன்று உணவு நிலையை அடைந்திருக்கிறோம். இது பெருமையல்ல. தமிழகம் தன்னிறைவு அடைந்து மற்ற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை இல்லை என்றானால் மட்டும் போதாது. நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து மீதமுள்ளவற்றைக் கேரளம் போன்ற அண்டை மாநிலங்களுக்குக் கொடுக்கத்தக்க அளவில் நம் களஞ்சியங்கள் நிரம்பி வழிய வேண்டும். 1957-58 ல் பண்டித நேரு, “இந்தியா உணவுத் துறையில் தன்னிறைவு பெற்று இன்னும் சில ஆண்டுகளில் மற்ற நாடுகளுக்கு உணவு அனுப்பவேண்டும்” என்று சொன்னார். அப்படிச் சொன்னது கனவு அல்ல. அதை நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டமாக நினைக்க வேண்டும். கனவாகக் கருதக்கூடாது.

இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் இருக்கிறது. மழை, வெய்யில் என்று பாராமல் இரவு பகல் பாராமல் உழவர்கள் அரும்பாடுபடுகிறார்கள். தங்கள் ஓட்டைக் குடிசையை வைத்துக் கொண்டு அவர்கள் அப்பாடு படுவதால் தான் நகரத்திலிருப்பவர்களுக்குச் சந்தனம் கிடைக்கிறது, கள்ளி, காளான் செடிகளை அவர்கள் கவனிப்பதால் நகர வாசிகளுக்குப் பூச்செண்டு கிடைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள், ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் 5 சென்ட் நிலம் கூடப் பெறவில்லை என்றால் அந்த நாட்டை நாகரிக நாடு என்று யாரும் மதிக்க மாட்டார்கள். அந்தக் குறையும் நீங்கும் வகையில் இன்று இங்கு அரிசன நல அமைச்சர் உழவர்களுக்கு ஏழைகளுக்கு பட்டா வழங்கினார். ஏழை உழவனுக்கு உழ நிலம் வேண்டும். அதைப் பண்படுத்த கிணறு தோண்ட விவசாயம் செய்ய அவனுக்குப் பணமும் தேவை. இதை உணர்ந்து விவசாய அமைச்சர் அவர்கள் நிலங்களை உழவர்களுக்கு நீண்டகாலக் குத்தகையில் கொடுப்பதன் மூலம், கடன் வசதி செய்து கொடுப்பதன் மூலம், உற்பத்தி பெருகும். இப்படி நிலம் கொடுத்தால் நிலமும் பாதுகாப்பாக இருக்கும்.

உழவர்கட்கு வசதி கொடுக்கப் பெரும் பொருள் தேவை. பொருளுக்காக இந்நாட்டு மக்களை வரிபோட்டுத் துன்புறுத்த மனம் இல்லை. அது அறமும் அல்ல, பொருளை ஈட்ட வேண்டும். இதற்கு மத்திய சர்க்காரைக் கேட்கிறோம். பண உதவி! ஆனால் இங்குள்ள ஒரு சிலர் டெல்லி மீது பழி போடுகிறார்கள், டெல்லி மீது இவர்களுக்குக் கோபம் என்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.

ஒலிபெருக்கி ‘ரிப்பேர்’ ஆகிவிட்டது என்றால் உடனே நான் போட்டோகிராபரைக் கூப்பிட்டு இதைச் சரிபார் என்பதா, அல்லது இங்கு கூடியுள்ள மக்களைப் பார்த்து ரிப்பேர் பார்க்கச் சொல்வதா, அப்படி நான் சொன்னால் யார் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரன் என்பதுகூட இவனுக்குத் தெரியவில்லையே என்றுதான் என்னைச் சொல்வார்கள். ஆகையால் எப்படி ஒலிபெருக்கிக்காரரைக் கூப்பிட்டு ஒலிபெருகியை ரிப்பேர் செய்யும்படிச் சொல்ல வேண்டுமோ, அதேபோல நான் கேட்க வேண்டிய டெல்லியிடம் கேட்கிறேன். டெல்லியிடம் கேட்காமல் லண்டனிடம் போயா கேட்பது? வாஷிங்டனில் போயா கேட்பது? தமிழக அரசு, இந்தியப் பேரரசு ஆட்சி நடத்தும் பல மாநிலங்களில் ஒன்று. டெல்லிப் பேரரசில் எக்கட்சி இருந்தாலும் சரி, அங்குள்ளவர்கள் எந்தச் சட்டையை அணிந்திருந்தாலும் எனக்கு கவலை இல்லை.

மாநிலத்தின் நிலை
பேரரசை அவர்கள் நடத்துவதால் அந்த அரசை நான் கேட்பது என் அரசியல் உரிமை, அரசியல் கடமை. அதை உணராதவர்கள், டெல்லி மீது பழி போடுகிறீர்கள் எனக்குற்றம் சாட்டினால் அதற்குச் சரியான பொருள் இல்லை. இங்கிருந்து வரிப்பணத்தில் பெரும் பணம் டெல்லியிடம் கொடுக்கிறோம். வருமான வரி கட்டுபவர்கள் கொடுக்கும் பணம் டெல்லிக்குப் போகும். பிறகு ‘ஐயா! அப்பா! கொஞ்சம் கொடு!’ என்று கேட்டு வாங்கி வரவேண்டிய நிலைமையில் நாம் இருக்கிறோம்.

மக்கள் வாங்கும் காப்பிக்கொட்டை, தேயிலை, தீக்குச்சி, மிளகு ஆகியவைகளுக்குப் போடப்படும் வரி எல்லாம் டெல்லிக்குப் போகிறது. எங்களுக்கு அதில் கொஞ்சம் தருகிறது. அப்படியே தருவதில்லை. குளத்திலுள்ள மீனை நாரை எடுத்துத் தின்றபோது அதன் வாயைத் திறந்து ஒரு குச்சியை விட்டு அது தின்றது போக மீதமிருப்பதை வெளியே எடுத்து பின்பு அதை குழம்பு வைக்க வேண்டுமென்றால் என்ன நடக்கும்.

சென்னையில் 14 மாடிக் கட்டிடத்திலிருக்கும் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் சார் பலபேர் தங்கள் ஆயுளைப் பாதுகாக்கக் கொடுக்கும் பணத்தை வசூலிக்கிறார்கள். இதன் பொறுப்பு தமிழக அரசிடம் இல்லை. இந்தப் பொறுப்பு தமிழகத்துக்கு அளிக்கப்படுமானால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தைத் தொழில் மயமாக்க முடியும். இந்த இன்ஸ்யூரன்ஸ் நடத்தும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்குக் கொடுத்தால் ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை தமிழகத்துக்கு வந்து சேரும். அந்த அதிகாரத்தை டெல்லி தருமா?

கோயிலில் உள்ள அர்ச்சகரிடம் ஊரார் பணம் கொடுப்பர். அவர் நம்மை வெளியே நிற்கவைத்து பூஜை செய்து திருநீற்றைத் தருவார். அவர் நல்லபடியாக இருந்தால் அருகில் வந்து தருவார். இல்லையெனில் தூக்கி வீசுவார். அம்மாதிரித்தான் இதுவும் இருக்கிறது. டெல்லியின் மீது எங்களுக்கு கோபம் இல்லை. டெல்லி பதறிப் பேசுவது வெறுப்புணர்ச்சியை உண்டாக்க அல்ல. ‘புதிய அரசு பதவி பெற்று விட்டது. நம் கஷ்டங்கள் தீராதா?’ என்று ஒவ்வொருவருக்கும் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் காரர்களுக்கும் இருக்கலாம். காங்கிரஸ் தலைவர் உட்பட, அண்ணா அரசு அரிசி விலையைத்தானே குறைத்தது, பருப்பு விலையைக் குறைக்க வில்லையே என்கிறார்கள்.

அரிசி விலையைக் குறைக்கும் ஆற்றல் எனக்கு இருக்கும் போது பருப்பு விலை குறையக்கூடாது என்றா நான் சொல்லுவேன்? பருப்புக்கும் எனக்கும் என்ன கோபம்? அல்லது பருப்புக்கும் எனக்கும் ஏதாவது ரகசிய ஒப்பந்தமா? பருப்பின் விலைவாசி ஏறட்டும் என்றா சொல்லுவேன்? நெல் விளைகிறது இங்கே-ஆனால் பருப்பு விளையவில்லை. பருப்பு உற்பத்தியை அதிகப்படுத்தலாம் என்றால் அதற்கான மண்வளம் இல்லை. வடஆர்க்காட்டில் திருப்பத்தூர், ராமநாதபுரம் பகுதியில் சில இடங்களில்தான் பருப்பு விளைவிக்க முடியும். பருப்பு பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து நமக்கு வந்து கொண்டிருந்தது.

இப்போது நமக்குப் பருப்பு அளவு குறைக்கப்பட்டதால் விலை ஏறியது. பருப்பு அளவு குறைந்தது பற்றி உணவமைச்சர் தந்திமேல் தந்தி கொடுத்தார். டெல்லியில் நடந்த மாநாட்டிலும் சொன்னார். ஆனால் டெல்லி சர்க்கார் கோரிக்கையைக் கவனிக்கவில்லை. இதனால் விலை ஏறியிருக்கிறது.

சர்க்கரையை எடுத்துக்கொண்டால் செங்கற்பட்டு மாவட்டத்தில் படாளத்தில் கிடைக்கிறது. திருச்சி பேட்டை வாய்தலையில் கிடைக்கிறது. நிரம்ப உற்பத்தி செய்யப்படுகிறது. நமக்குத் தேவையானதை நாம் எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை டெல்லி எடுத்துக்கொண்டால் பரவாயில்லை. சொன்னால் டெல்லி கேட்கத் தயாராயில்லை. அதைவிட்டு எல்லா சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு இங்கு வர வேண்டிய சர்க்கரையின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்க்கிறார்கள்.

நாம் 1 லட்சம் டன் வேண்டுமென்றால் “ஒரு லட்சம் டன் கொடுக்கமுடியாது. 40 ஆயிரம் டன் எடுத்துக்கொள்” என்கிறார்கள்.

சரி என ஒப்புக்கொண்டு 40 ஆயிரம் டன்னாவது அனுப்புகிறார்களா என்றால் முதலில் 7 ஆயிரம் பிறகு 8 ஆயிரம்! நேரே டெல்லிக்குச் சென்றுவிட்டு வந்தால் பத்தாயிரம் டன் என்று அனுப்புகிறார்கள்! மிச்சத்தை அனுப்ப மறுக்கிறார்கள்.!

மக்களிடத்தில் சொல்கிறோம்
இதைப் பற்றியெல்லாம் நாங்கள் மக்களிடத்தில் சொல்கிறோம். மக்களிடத்தி“ல் சொல்லாமல“ மனத்தில் போட்டழுத்திக் கொள்ள வேண்டுமா? அதற்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்கள் செய்தார்கள். மக்கள் எங்களை அனுப்பியவர்கள் நாங்கள் மக்களிடம் வந்து பகிரங்கமாகச் சொல்கிறோம். அதைச் சொல்லாமல் மறைத்துக் கோட்டையை அலங்கரிக்க நாங்கள் செல்லவில்லை. அல்லது அமைச்சர்களாகி அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளச் சொல்லவில்லை.
இங்குள்ள வெல்லத்தை மராட்டித்திற்கு அனுப்புவதால் அங்கு அவர்கள் ஏதேதோ செய்யப் பயன்படுகிறது. இங்கு விளையும் வெல்லம் அங்கு பயன்பட்டால் நமக்கு-சர்க்கரை கிடைக்காமல் விலை ஏறாமல் என்ன செய்யும்?

ஆதலால்தான் நாங்கள் இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு வெல்லம் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும். அப்படித் தடை விதித்தால் வெல்லம் தாராளமாகக் கிடைக்கும் சர்க்கரை விலை குறையும் என்றோம். இதற்காக வாதாடுகிறோம்.

எங்களுக்குப் பருப்பு வகைகளை அனுப்ப மற்ற மாநிலங்கள் தடை போடுகின்றன. அதைப்போல இங்கிருந்து செல்லும் வெல்ல ஏற்றுமதிக்கும் தடைபோட வேண்டுமெனக் கேட்டதற்கு மத்திய உணவு அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்கள் மராட்டியர் கஷ்டப்படுவரே என்கிறார்.

எனவே இன்று நானும் உணவமைச்சர் மதியழகனும் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அதாவது இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வெல்லத்திற்குத் தடை போடலாம் என்று, இது எவ்வளவு பெரிய தப்பு என நினைப்பார்களோ தெரியாது. கேட்டுக் கேட்டுப் பார்த்தோம். ஒப்புக்கொள்ளவில்லை! நாங்கள் முடிவு எடுத்தோம். இதன் விளைவு இரண்டாக ஏற்படும். ஒன்று வெல்லத்திற்குத் தடை போடாதே! நாங்கள் பருப்பு அனுப்புகிறோம்’ என்று சொல்வார்கள். இல்லையானால் “பருப்பு அனுப்பமாட்டார்கள் வெல்லத்திற்கு வேண்டுமானால் தடை போட்டுக்கொள்!” என்பார்கள்.

அப்படித் தடைசெய்தால் பருப்புக்குழம்பு இல்லாவிட்டாலும் காரக்குழம்பு வைத்து-கடிக்கக் கொஞ்சம் வெல்லம் வைத்துக் கொள்ளலாம். சர்க்கரை விலையும் குறையும்.

ஆக, இப்படி அதிகாரம் டெல்லியிடம் குவிந்திருப்பதால் தான் நாங்கள் டெல்லியைப் பற்றிப் பேசும்படியாகிறது. அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதைக் குறைத்து, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்ற கூறுகிறோம். ஒருபுறம் விவசாயம் வளர வேண்டும். மறுபுறம் கல்வி செழிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஊராட்சி ஒன்றியங்கள் இந்த நோக்கங்களுடன் செயல்பட வேண்டும்.

ஒன்று உணவு உற்பத்தியைப் பெருக்கவேண்டும். மற்றொன்று குடும்பத்தைச் சுருக்கவேண்டும். கட்டுக்கு அடங்கியதாகக் குடும்பத்தை உருவாக்கினால் மேலும் பல நன்மைகளைப் பெறலாம்.