அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


புதிய வரலாறு
3

அடக்க உணர்வு கொண்டது தி.மு.க.
தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதால் அதற்கு அ’க்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் விழாக்களையும் மகிழ்ச்சி தெரிவிக்கும் கூட்டங்களையும் குறைத்துக் கொண்டிருக்கிறோம். அடக்கம் அமரருள் உய்க்கும் என்று நெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்தார்கள். தமிழர் அறிந்திருந்த சான்றோர் உரைகளைத் தி.மு.கழகம் கடைப்பிடிப்பதால்தான் மகத்தான வெற்றியை அடைந்த பிறகும் நாங்கள் அமைதியாயிருக்கிறோம் தி.மு.கழக அரசு என்ன செய்தது என்பதைப் பற்றிக் கேட்கும் நண்பர்களுக்கு தி.மு.கழகம் முதலில் என்னென்ன செய்யவில்லை என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். நாங்கள் அடைந்தது போன்ற வெற்றியை காங்கிரஸ் அடைந்திருந்தால் எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கும்? அவை எங்கள் ஆட்சியில் நடைபெறவில்லை.

நாங்கள் அடைந்தது போன்ற வெற்றியைக் காங்கிரஸ் பெற்று அமைச்சரவை அமைத்திருந்தால் அந்த அமைச்சர்கள் மக்களோடு மக்களாகவா நடமாடிக் கொண்டிருப்பார்கள்? மந்திரி வருகிறார் என்றதுமே, “ஒதுக்கு ஒதுங்கு” என்ற சத்தமும் “அந்தக் கொடியை இறக்கு, இந்தக்கொடியை இறக்கு” என்ற அதிகாரமும் அல்லவா காண்போம்?

நாங்கள் எங்கள் ஆட்சியில் எதையெதைச் செய்யவில்லை என்றால்... வெறிச் செயலில் ஈடுபடவில்லை. வெற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. மந்திரிகளுக்குள்ள வசதிகளைக்கூடக் குறைத்துக் கொண்டோம். சம்பளத்தைக் கூடப் பாதியாகக் குறைத்துக் கொண்டோம்.

சம்பளத்தை ஏன் குறைத்துக் கொண்டீர்கள்? என்று சில காங்கிரஸ்காரர்களே கேட்கிறார்கள். காங்கிரஸ் கட்சி கராச்சியிலே மந்திரிகள் 500 ரூபாய் சம்பளம்தான் வாங்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது. இது பழைய காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட பழைய காங்கிரஸ்காரர்கள் இப்போது குறைவு, நம் கண்களில் அவர்கள் தட்டுப்படுவதுமில்லை.

மந்திரிகள் 500 ரூபாய் சம்பளம் வாங்கவேண்டும் என்று தீர்மானம் போட்டவர்களே ஆயிரம் ரூபாய் என்றும் இரண்டாயிரம் ரூபாய் என்றும் சம்பளம் வாங்கினாலும், காங்கிரஸ் போட்ட நல்ல தீர்மானத்திற்கு மதிப்புத் தரவேண்டும் என்பதற்காகவும், காந்தியார் காலத்தில் போட்ட தீர்மானம் ஆயிற்றே என்பதற்காகவும் நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்.

நன்றி கூறவேண்டும் காங்கிரசார்
அப்படிப்பட்ட எங்களுக்கு நன்றி கூறுவதை விட்டுவிட்டு, மந்திரி ஒருவர் 500 ரூபாய் குறைத்துக் கொண்டால் எவ்வளவு மீதமாகும் என்ற வாய்ப்பாடுக் கணக்கையும் போட்டு, “இதென்ன பிரமாதமான செயல்?” என்று கேட்கிறார்கள். பிரமாதமான செயல் இல்லைதான் அதனால்தான் நாங்கள் அதைப்பற்றிச் சுவரொட்டி போடவில்லை. விளம்பரப் படுத்தவில்லை, விளக்கங்கள் கூட அதிகம் தரவில்லை.

நான் திரும்பிக் கேட்கிறேன், இதுதான் பிரமாதமான காரியம் இல்லையே, நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஒருவன் வேகமாக ஓடி அதிக தூரம் தாண்டிக் குதிப்பதைப் பார்த்ததும் ஓடக் கூட முடியாதவன் ‘இதென்ன பிரமாதம்’ என்று கூறுவதைப்போல்தான் இவர்கள் கேட்கிறார்கள். உண்மையான காங்கிரஸ்காரர்கள், நாங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதை நிச்சயம் வரவேற்பார்கள். ஆனால் பதவியை இழந்தவர்கள் “கராச்சித்தீர்மானம் எப்போதோ போட்ட தீர்மானம், விலைவாசி ஏறி இருக்கிற நிலையில் பொருட்கள் ஒன்றுக்குப் பத்தாக விலை ஏறி விற்கும் நிலையில் எப்போதோ போட்ட தீர்மானத்தையா கடைப்பிடிப்பது?” என்று கேட்கிறார்கள்.
சம்பளம் என்றதும் எப்போதோ போட்ட தீர்மானம் என்று அலட்சியம் காட்டும் காங்கிரஸ்காரர்கள் எப்போதோ போட்ட ‘இந்தி ஆட்சி மொழியாக வேண்டும்’ என்ற தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறார்கள்! இவர்களுக்கு விருப்பமானது வந்தால் அது அப்போதே... போட்ட தீர்மானம் என்பார்கள். இவர்களுக்குப் பிடித்தமில்லை என்றால் இது அப்போது... போட்ட தீர்மானம் என்று அலட்சியம் காட்டுவார்கள். இப்படி இவர்கள் சுயநலத்திற்காகத் தொனியை மாற்றினால் அது அழகல்ல; அறமல்ல, ஒழுங்கல்ல, அரசியலுமல்ல.

‘மந்திரிகள் ஆடம்பர வாழ்க்கை வாழக்கூடாது. மாளிகை வாசத்தை மறக்கவேண்டும். படகுக்கார்கள் வைத்துக் கொள்ளக்கூடாது’ என்றுகூறுவது மக்கள் தொடர்பு அறுந்து விடக்கூடாது, மந்திரிகளும் நம்மைப்போன்ற சாதாரணமானவர்கள் தான், மக்களின் வாக்கைப் பெற்றுத்தான் பதவி பெற்றிருக்கிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுத் தோழமை உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இதற்காகத் தான் ஆடம்பர வசதிகளைக் குறைத்துக் கொண்டது... நீக்கிக் கொண்டது தி.மு.கழகம்.

இந்தச் செயலைப் பற்றி நல்லவர்கள் பாராட்டுகிறார்கள், பத்திரிகைகள் போற்றுகின்றன. “தி.மு.கழகத்தின் முடிவு அடக்க உணர்ச்சியைக் காட்டுகிறது. மக்களுக்குப் பிரியமானதை மக்களுக்கு வேண்டியதைச் செய்கிறார்கள்...” என்று பலரும் பாராட்டுகிறார்கள்.

ஆனால் உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு அதுவும் பதவி பறிபோனவர்களுக்கு இது பிடிக்கவில்லை. மாலை 5 மணி எப்போது ஆகும் என்று இரண்டு... மூன்று... நான்கு மணி... ஐந்துமணி என“று எண்ணியபடியே மணி ஐந்தானதும் வயிறு குளிர மாலை நேரத்தில் திட்டுகிறார்கள். அவர்கள் இன்னொன்றும் கேட்கிறார்கள்...” இது எத்தனை நாளைக்கு? பார்க்கலாம்!” இது உலகில் சகஜமான பேச்சு.

ஒருவன் நம் பேச்சைக் கேட்கவில்லை என்ற கோபம் ஏற்படுகிறபோது இது எத்தனை நாளைக்கு என்று கேட்கத் தோன்றும். கடன் கொடுத்த கடைக்காரனிடம் மறுபடியும் கடன் கேட்க அவன் இல்லையென்று சொன்னால், “இன்னும் எத்தனை நாளைக்கு இவன் கடை!” என்றுதான் கேட்பார்கள்!

‘இன்னும் எத்தனை நாளைக்கு இது’ என்ற பேச்சு, இருந்ததை இழந்தவர்கள் நெடுங்காலமாகப் பேசி வருகிற எரிச்சல் பேச்சுத்தான்! ஆகவே இந்தப் பேச்சைப் பெரியவர்கள் பேசுவதில் ஆச்சரியமே தவிர-அந்தப் பேச்சில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இந்தத் தி.மு.க. மந்திரி சபை’ என்று கேட்பவர்களுக்கு நானே பதில் கூறுகிறேன்.

என் ஜாகத்தை நானே கணித்துக் கொள்வேன்

இந்தப் பதவியால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்பது எத்தனை நாளுக்கு என் மனத்தில் இருக்கிறதோ அத்தனை நாள்வரை இந்த மந்திரிசபை இருக்கும்.

மக்களுக்கு நன்மை செய்யமுடியாது என்று நான் கருதினால் அந்த நிமிடமே அந்தப் பதவியில் இருக்கமாட்டேன்.

இப்படி என் ஜாதகத்தை நானே கணித்துக் கொள்ளத் தயாராக இருக்கும்போது வியாபாரம் ஆகாத ஆலமரத்தடி அரசியல் ஜோதிடர்கள் என் ஜாதகம் கணிக்க வரவேண்டிய அவசியமில்லை.
ஆனால் அவர்கள் கவலைப்படுகிறார்கள். ‘ஐயோ! பதவியில் இல்லாமல் எத்தனை நாள் இருப்பது?’ என்று!

நாங்கள் இருந்தோமே 20 ஆண்டுகள் பதவியில்லாமல்! ஒரே ஒரு பதவி மேயர் பதவி! அந்த மேயர்களை உட்கார வைத்துக் கொண்டே பேசினோம். “இதை நாங்கள் விரும்பவில்லை. இருந்தும் வந்து சேர்ந்தது” என்று!

ஆனால் அவர்களோ-பதவியைத் தங்கள் வாழ்வோடு ஒட்டவைத்துக் கொண்டார்கள். பதவி போனதும் பதட்டமடைகிறார்கள். வாழ்வே கசந்து போனதுபோல் பேசுகிறார்கள்.

பதவியில்லாத வாழ்க்கை;

சர்க்கரையில்லாத பால்;

உப்பு இல்லாத குழம்பு;

சக்கரம் இல்லாத வண்டி;

வாசனை இல்லாத மலர்;

கண் இல்லாத மனிதன் என்று நினைத்து, “ஐயோ இதென்ன வாழ்க்கை” என்று புலம்புகிறார்கள்.
ஆனால், நாமோ பதவியால் மக்களுக்கு என்ன நன்மை செய்யமுடியும் என்று பார்க்கிறோம்! பதவி வெறியர்களைப் போல் பதவி நாற்காலியோடு நம்மை ‘ரிவிட்’ போட்டா அடித்து வைத்துக்கொண்டோம்?

இவர்கள் மந்திரிகளாயிருந்த போது என்ன நடந்தது? நமக்குத் தெரியாதா? மந்திரி ஊருக்கு வருகிறார் என்றால் போதும், வணிகக் கோமான்கள் தெருவுக்குத் தெரு வளைவு போடுவார்கள். உப்பு வியாபாரிகள் வளைவு, பருப்பு வியாபாரிகள் வளைவு, பட்டு வியாபாரிகள் வளைவு என்று போடுகிறார்கள்.

இத்தனைக்கும் மந்திரி அந்த ஊருக்கு வருகிறார். அவ்வளவு தான்! மந்திரி மோட்டாரில் போகிறபோதும் நம் வளைவைப் பார்க்க மாட்டாரா? அப்படிப் பார்த்த பிறகு கோட்டைக்குப் போய் மந்திரியைப் பார்க்க வேண்டும். ‘யார் நீங்கள்?’ என்பார் மந்திரி. நான்தான் மூணாவது வளைவு (ஆர்ச்) என்று கூறுவார். “என்ன விஷயம்?” என்பார் மந்திரி.

“ஒன்றுமில்லை. ஆர்க்காட்டிலிருந்து வாணியம்பாடி“ககு ஒரு பஸ் ரூட் வேண்டும்” என்று கேட்பார். இதையெல்லாம் பதவி இழந்தவர்கள் எண்ணிப் பார்க்கிறபோது ஆத்திரம் வரத்தான் செய்யும்! சென்ற வருடம் இதே நாள் இரவு 9 மணியளவில் அந்த மந்திரி வீடு எப்படியிருந்திருக்கும்?

வாசலில் ஒரு அதிகாரி திண்ணையில் இரண்டு அதிகாரி-தாழ்வாரத்தில் முதலாளிகளின் கூட்டம் இருக்கும். மந்திரி பேசிக்கொண்டிருப்பார். உள்ளேயிருந்து கனைப்புச் சத்தம் கேட்கும்! மந்திரி மனைவியார் சாப்பிட அழைப்பார்கள். “இரு! இரு!” என்பார்.

இவர்.

இன்று... வீடு காலியாயிருக்கும், மணி 9 ஆனவுடன் பழைய மந்திரி எட்டிப் பார்ப்பார்... “சோறு கிடைக்குமா” என்று! “9 மணிக்குள் என்ன அவசரம்!” என்று உள்ளேயிருந்து பதில் வரும். இதைக் கேட்டதும் அவருக்கு யார் மீது ஆத்திரம் வரும்! என் மீது ஆத்திரம் வரும்!

“அந்தப் பாவிப்பயல் இப்படிச் செய்துவிட்டானே! இருக்கட்டும்! இருக்கட்டும்! இன்று மாலை ஒரு பிடி பிடிக்கிறேன்” என்றுதான் எண்ணுவார். இதற்குக் காரணம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை இருபது ஆண்டுகாலமாகப் பதவியோடு இணைத்துப் பிணைத்துக் கொண்டார்கள்.

ஆனால் நம் வாழ்வு அப்படிப் பதவியோடு ஒட்டியதில்லை. இடையிலே வந்ததாகத்தான் கருதுகிறோம். பதவி பறிபோனதும் வாழ்க்கையே பறிபோனதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் ஆறுதல் கூற ஆசைப்படுகிறேன். எத்தனை நாளுக்குப் பதவியிலேயே இருப்பது! என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றவில்லை. “20 வருடமாகத் தோன்றாத யோசனையா-இனிமேல் நமக்குத் தோன்றி மக்களை வாழ்விக்கப் போகிறோம்?” என்றும் எண்ணுவதில்லை.

சலிப்பான மந்திரிப் பதவி

ஆனால் எனக்கு என்னவோ இந்த மந்திரிப் பதவியில் 20 நாளிலேயே சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

சந்தோஷ மில்லாத சிரிப்பு;

தொடர்பே இல்லாத சிநேகிதம்;

சுவையே இல்லாத உரையாடல்கள்;

இப்படிப்பட்ட மந்திரி வாழ்க்கையில் எப்படித்தான் அவர்கள் 20 வருடமாய் இருந்தார்களோ தெரியவில்லை! வயதானவர்கள் அதில் ஆசையை விலக்கி- “இதைச் செய்! இப்படிச் செய்!” என்று கூறாமல் “எத்தனை நாள் இந்த வாழ்வு!” என்றா கூறுவது? பள்ளிக்குச் செல்லும் பேரனை வாழ்த்தி அனுப்பவேண்டிய தாத்தா “பள்ளிக்கா போகிறாய், போ! போ! எத்தனை நாளைக்கு!” என்று கூறுவது போலிருக்கிறது அவர்கள் பேச்சு!

ஆனால் அந்தப் பெரியவர்களுக்குத் தூபம் போடுபவன் போட்டுக் கொண்டுதான் இருப்பான், அதை நம்பலாமா?

“நெடுஞ்செழியன் மந்திரியானார், நடையிலே முறுக்கு வந்துவிட்டது!” என்பான் அவன்.

“அப்படியா!” என்பார் இவர். “அண்ணாதுரையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்” என்பான் அவன்.

“கருணாநிதி எப்படி!” என்பார் அவர்; “கையிலே பிடிக்க முடியவில்லை” என்பான் தூபம் போடுபவன்.

இதைக் கேட்டதும் “அப்படியா, ஒரு பிடி பிடிக்கிறேன்” என்று கூறத்தான் தோன்றும்.

ஆனால், உள்ளபடியே இந்த அமைச்சர் பதவியின் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய அதிக அதிகாரம் இல்லையே என்பதுதான் எங்கள் வருத்தம்.

இந்தக் கணக்கைப் பார்க்காமல் வேறு கணக்கைப் பார்ப்பது என்றால் அது முடியாத காரியமா? “நாம் எதிர்க்கட்சி என்பதற்காக முன்பு நமது குப்புசாமியை அவர்கள் மூன்று நாள் சிறையில் வைத்தார்களா? சரி..! அங்கே யார் இருக்கிறார்கள், குமாரசாமியா? அவனைப் பிடித்து 6 நாள் வை!

“நமது சின்னச்சாமி மீது வழக்குப் போட்டார்களா! பெரியசாமி அங்கிருந்தால் போடு வழக்கு” என்று கூற முடியாதா?

சுலபமான காரியம்; அற்பன் தவிர வேறு யாரும் அதை அரசியல் என்று கூறமாட்டான்.

நான் பதவியேற்றதும் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். “நாங்கள் தேர்தல் நேரத்தில் நியாயமாகத்தான் நடக்க முயன்றோம்...” என்று கூறினார்கள். நான் தெளிவாகச் சொல்லி விட்டேன், கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படமால் செயலாற்றுங்கள் என்று! இன்னும் சிலர் கூறினார்கள், “அப்போதைய முதலமைச்சர் ரொம்பத் தொந்தரவு செய்தார்; அதனால்தான்” என்று ஏதோ கூற ஆரம்பித்தார்கள்.

“அந்த விஷயத்தையே கூற வேண்டாம். நீங்கள் நிரந்தரமான சர்க்கார் ஊழியர்கள். நாங்கள் மக்கள் அனுமதிக்கிற வரை அமைச்சர்கள். இரண்டு பேருக்குமுள்ள தொடர்பைத் தெரிந்திருக்கிறேன். ஒரு துளியும் கவலைப்படாமல் நல்ல பணியாற்றுங்கள்” என்று கூறினேன். இதன் மூலம் எவ்வளவு பொறுப்பு உணர்ச்சியோடு பணியாற்றுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளவே இதைக் கூறினேன்.

இந்தப் பொறுப்புணர்ச்சியை இப்போது மட்டுமல்ல 1957 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் இருந்தபோதே வெளிக்காட்டினோம். “உங்களுக்கு வாலி பாடுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. ஆட்சிப் பொறுப்பு என்றாவது எங்களிடம் வரும் என்ற நினைப்போடு பேச வந்திருக்கிறோம்” என்று கூறினேன்.

அத்தைக்கு மீசை முளைத்தது
அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர் எழுந்து, “நீங்களா ஆட்சிக்கு வரப்போகிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஏன் வரக்கூடாது? என்றேன்.

அதற்கு அந்த அம்மையார் “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா” என்றார்.

என்ன செய்யலாம்? இந்த அத்தைக்கு இப்போது மீசை முளைத்துவிட்டது!

நாங்கள் பதவிக்கு வந்தால் முன்பு திராவிடநாடு கேட்டுக் கொண்டிருந்தால் மத்திய சர்க்காருடன் மோதிக்கொள்வோம் என்று எதிர்பார்த்தார்கள், அது நடக்கவில்லை!

ஆனால் சி.சுப்பிரமணியம் மட்டும் “மறைமுக திராவிட நாடு கேட்பதைப் போல் பேசுகிறார்கள்” என்று குறைகூறிக் கொண்டிருக்கிறார்.

திராவிட நாட்டை மறைமுகமாகக் கேட்பதோ, மத்திய சர்க்காருடன் மோதிக்கொள்கிற மாதிரியோ இதுவரை நடந்து கொள்ளவில்லை. அவ்விதம் செய்யப் போவதும் இல்லை, நடந்து கொள்ளத் தயாராகவுமில்லை. ஆனால் அவர்களே வம்புக்கு வந்தால் நான் என்ன செய்வது என்பதை சுப்ரமணியம் சொல்லட்டும்!

திராவிடநாடு கோரிக்கைக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதைத் திரட்டிக் காட்டிய நான் அதை மறந்து விட்டு இந்தியாவுடன் இணைந்தே வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும்போது,

எனது நாட்டு மக்களுக்கு உணவு வழங்கும் (ரூபாய்க்கு ஒரு படி அரிசி) திட்டத்தினால் ஏற்படும் கஷ்டத்தில் ஒரு துளியைக்கூட மத்திய அரசு ஏற்க மறுக்கிறது என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

“பிரிவினை எண்ணம் தவறு. நாம் கஷ்டத்தில் தவிக்கும்போது டில்லி கை கொடுக்கிறது. ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டத்தால் எட்டுக் கோடி நஷ்டமா, இந்தா 4 கோடி இனாமாக அல்ல கடனாக! பத்து வருடத்தில் திருப்பிக் கொடு!” என்று டில்லி கை கொடுத்தால்-

விட்ட குறை தொட்ட குறையாக உள்ள பிரிவினை உணர்ச்சிகூட அடியோடு நீங்கிவிடும்.

“பிரிவினை உணர்ச்சியைப் போக்கிட-தமிழக அரசு தத்தளிக்காமல் கைகொடுத்து அதை அரசியல் பந்தமாக்கி பாசமாக்கி-உறவாக்கிக் கொள்வீர்” என்று சுப்பிரமணியம் டில்லிக்கு எடுத்துச் சொன்னால் அவர் உள்ளபடியே பாரத புத்திரர். அதை விட்டுவிட்டுப் பிரிவினை உணர்ச்சி தென்படுகிறதே என்கிறார். நிச்சயமாக, பிரிவினை உணர்ச்சி எங்களுக்கு இல்லை.

ஆனால் தமிழ்நாடு கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்காது! டில்லி, காதே கொடுத்துக் கேட்காது. கைகொடுக்காது என்ற நிலை ஏற்படுமானால் நாம் தனியாகவே இருப்போம். எங்களிடமல்ல ஆனால் நாட்டில் ஆங்காங்கு எண்ணங்கள் தோன்றுவதை எப்படித் தடுக்க முடியும்?

பிரிவினை உணர்ச்சி இல்லை
எங்களைப் பொறுத்தவரை பிரிவினை உணர்ச்சி துளியும் இல்லை! அது ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்! ஆனால் தமிழகத்தின் குறைகளை நீக்க டில்லி அரசு முன“வர வேண்டும்.
இதற்குள் பதவி இழந்த பெரியவர் மிகவும் ஆத்திரப்படுகிறார். ‘ரூபாய்க்கு ஒரு படி அரிசியா? ஏன்?’ என்கிறார்.

“இவனுக்கு மட்டும் போடாயே! அவனுக்கு ஏன் இல்லை” என்று கேட்கிறார்.

“சென்னை, கோவையில் போடுவதற்கே 10 கோடி ரூபாய் நஷ்டமாகும். பயல் எல்லா இடத்திலும் போடட்டும்! 50 கோடி நஷ்டமாகும். திண்டாட்டடும். சர்க்காரே திவாலாகட்டும்” என்ற நினைப்பில், ஒரு படி அரிசி எல்லா இடத்திலும் போடு என்கிறார்கள்.

அவர்களுக்குக் கூறிக்கொள்கிறேன். உளமார ஒத்துழைப்பைத் தாருங்கள். எல்லா இடத்திலும் ஒரு படி அரிசி போடுகிறோம்.

ஆனால் ஒத்துழைப்பையா நீங்கள் தந்தீர்கள்? இடையூறுகளைத்தான் கொடுத்தீர்கள்.

ஏழை மக்களுக்காக நெல் கொள்முதலுக்குச் சென்றால் பணக்கார நிலச்சுவான்தாரர்களைத் தூண்டிவிட்டு “நெல் போடாதே, கரும்பு போடு! புகையிலே போடு” என்று கூறுகிறீர்கள்.

கொள்முதலுக்கு எவ்வளவு இடையூறு விளைவிக்க வேண்டுமோ-அவ்வளவு இடையூறு விளைவித்திருக்கிறீர்கள்.

‘கொள்முதல் அதிகாரிகள் கொடுமைப்படுத்துகிறார்கள்’ என்று காங்கிரஸ்காரர்கள் கூச்சலிடுகிறார்கள். அப்படி ஏதாவது கொடுமைப்படுத்தும் சுபாவம் இருந்தால் அந்த சுபாவம் 20 வருடமாக நீங்கள் வளர்த்த சுபாவம்தானே!

20 ஆண்டுப் பழக்கத்தை நான் 20 நாளில் போக்கிவிட முடியுமா? தமிழ்நாட்டிலேயே நெல் கொள்முதலில் எதிர்பார்த்தது கிடைக்காத மாவட்டம் செங்கல்பட்டுதான். அதற்குக் காரணம் பதவி இழந்த பெரியவரும் அவரது நண்பர்களும் கூட்டம் கூட்டிக் ‘கொள்முதலுக்கு நெல் தராதே’ என்று கூறியதுதான். இது மட்டுமா? நெல் போடாதே, கரும்பு போடு என்று கூறியதற்குப் பதிலளித்த கருணாநிதி “நெல் போடாமல் கரும்பு போட்டால் ஏரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம்” என்று பேசினார். அதற்கு ஒரு பெரிய காங்கிரஸ் பேச்சாளர் “தண்ணீர் விடவில்லையென்றால் ஏரியை உடைப்போம்” என்று கூறியிருக்கிறார்.

20 நாளிலேயே காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாக இருக்க முடியவில்லை. உடைக்கலாமா, கிழிக்கலாமா, என்பதிலேயே புத்தி போகிறது.

20 வருடம்... நாங்கள் தாங்கினோம், 20 நாள் கூட அவர்களினால் தாங்க முடியவில்லையே!
‘நம்முடன் சுற்றிய கலெக்டரும், அதிகாரியும் அவருடன் செல்கிறார்களே’ என்றதும் சினம் பொங்கத் தான் செய்யும்.

சினம் பொங்கிய நிலையிலுள்ள பெரியவருக்குக் கூறிக்கொள்வேன். ஆறுவது சினம்! ஆம் சினமே ஆறும் தகையது. ஆகவே, உங்கள் சிந்தையை ஆற்றிக்கொண்டு நாட்டுக்கு நலம் கிடைக்க உழைக்க வேண்டும்.

தி.மு.கழகம் வசதியில்லாத கழகம்; உண்டியல் தூக்கியே கூட்டங்கள் நடத்துகின்ற கழகம். சைக்கிளில் வந்து கொள்கை பரப்பியவர்கள்-கொடியைப் பிடித்துக் கொண்டே நடந்து வந்து கருத்துக்களைச் சொன்னவர்கள் அல்லும் பகலும் கழக வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள் அத்தகையவர்கள் தான் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

தி.மு.கழகம் கோட்டையிலே கொலுவிருக்கும் அளவுக்கு அமர்ந்துள்ளதென்றால், வஞ்சகம் அறியாமல் நேர்மையே உருக்கொண்ட கிராமப்புறத்து மக்களால் தான் இந்தப் பெரு வெற்றி கிடைத்துள்ளது.

இன்று கோட்டையிலே அமர்ந்திருக்கும் அமைச்சர்களாயினும் சரி சட்டமன்ற உறுப்பினர்களாயினும் சரி, அவர்களெல்லாம் ஏழை எளியவர்களுக்காக-அவர் தம் வாழ்வில் இன்பம் பூத்துக் குலுங்குவதற்காக அவர்தம் முகத்தில் மலர்ச்சி காண்பதற்காகத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

துன்ப துயரங்களை அறிந்தவர்கள்
இன்று சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் துன்ப துயரங்களை அறிந்தவர்கள். பசியோடு போராடி, பசிக்கொடுமையென்றால் என்னவென்று புரிந்தவர்கள். விலை வாசி ஏற்றத்தால் விளைந்த தொல்லைகளை அனுபவித்தவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான் இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் வாழ்விலே மறுமலர்ச்சியை உண்டாக்க!

இந்தியாவிலேயே தமிழக அரசியல் புதுமையாக விந்தையாக இருக்கிறது என்று வெளிநாட்டினரெல்லாம் வியக்கின்றனர். இதுவரை ஏழை எ‘யவர்களாக இருந்தார்களே இவர்களால் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று அதிசயத்துடன் எதிர்பார்த்தார்கள்.
இதுவரை கூட்டங்கள் கூட்டி மேடையிலேறிப் பேசிக்கொண்டு தானே இருந்தார்கள்-கோட்டைக்குள் சென்றால் என்ன செய்வார்கள் என்று அலட்சியமாகப் பார்த்தார்கள்.

அமெரிக்க நாட்டிலிருந்து வருபவர்களும் ரஷ்யாவிலிருந்து வருபவர்களும் தமிழகத்தைத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் அளவுக்கு இங்குதான் நிலைமை மாறியிருக்கிறது.

கடந்த தேர்தலில் “எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்றபோது, ‘இவர்களுக்கு என்ன தெரியும் இவர்களால் என்ன முடியும்’ என்று ஏசிப் பேசி இறுமாப்புக் காட்டினர்.

ஒன்றுமே தெரியாது என்று யார் கேலி பேசினார்களோ அவர்கள் சட்டமன்றத்தில் இருக்கின்ற நிலையும் பரிதாபமாகப் பார்க்கப்பட்டவர்களாகிய நாம் பாராளுகின்ற முறையும் பார்த்து இங்கிலாந்து தேசம் வியக்கிறது. அமெரிக்காக் கண்டமே அதிசயித்திருக்கிறது. நம்முடைய ஆற்றல் கண்டு, அமெரிக்கப் பத்திரிகை நிருபர் ஒருவர் என்னிடம் கேட்டார், ‘நீங்கள் எப்படி ஜெயித்தீர்’களென்று.

கிராமப்புறங்களில் சென்று பாருங்கள்-தெரியும் என்றேன். அதற்கு, அவர் “அங்கு போகமுடியவில்லை. என் கார் போகும் அளவுக்கு அங்கு ரோடு வசதிகள் இல்லை. அப்படிச் சென்றாலும் மேடும் பள்ளமும் கல்லும் முள்ளுமாக இருக்கிறது” என்றார்.

அதனால் தான் நாங்கள் ஜெயித்தோம் என்றேன். பிறகு அவர் புரிந்து கொண்டார்.

அமெரிக்க நாட்டிலிருப்பவர்கள்-சோவியத் நாடுகளில் இருப்பவர்கள் இங்கிலாந்தில் இருப்பவர்கள் கடல் கடந்து வரும் வெளிநாட்டார்களெல்லாம் புரிந்துகொள்ளுகின்றனர். ஆனால் இங்கு இருப்பவர்களுக்குப் புரியவில்லை.

எங்களால் ஏழைகள் ஏற்றம் பெற்றிருக்கின்றனர். எளியவர்கள் முகத்தில் மலர்ச்சி நிழல் படர்ந்திருக்கின்றது. அன்றாடங் காய்ச்சிகளும் அயராது பாடுபடுபவர்களும் நல்வாழ்வு பெறுவோம் என்று நம்பியிருக்கின்றனர்.

சம்பளம் பெறுவது பற்றி...
நாங்கள் சம்பளத்தைக் குறைத்ததற்குக் காரணம் மக்கள் எப்படி எளிமையாக இருக்கிறார்களோ, அப்படியே நாங்களும் இருக்க விரும்புகிறோம்.

உங்களில் ஒருவராக உங்கள் குடும்பத்தில் ஒருவராக உங்கள் மத்தியிலே உலவ விரும்புகிறோம்.
இதனால் காங்கிரஸ் நண்பர்களுக்கு கிலி பிடித்துவிட்டது. அவர்கள் என்ன நினைத்தார்களென்றால் புதிதாக வந்தவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலையில்தான் இருப்பார்கள். அதிகாரம் புதிதாகையால் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் பசியோடிருப்பவன் அறுசுவை உணவை அள்ளி உண்பது போலப் பதவி கிடைத்ததால் வீண் ஆடம்பரங்கள் செய்வார்கள் என்று நினைத்தார்கள், தங்களைப் போல.

ஆனால் நமது அடக்க உணர்வையும்-ஆட்சி நெறியையும் அதிகார முறையையும் பார்த்து அவர்களுக்குக் கிலி பிடித்துவிட்டது. எங்கே இருபது ஆண்டுகள் இவர்களும் இருப்பார்களோ என்று!

கிராமப்புறங்களில்தான் ஏழைகள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். நம் நாட்டில் நூற்றுக்குப் பதினைந்து பேர்தான் பிற தொழில்கள் பார்க்கின்றனர். ஐந்து பேர் வேலை தேடி அலைகின்றனர். ஆனால் நூற்றுக்கு எண்பது பேர் விவசாயம் செய்கின்றனர்.

இவர்கள் காலை முதல் நடுப்பகல்வரை கூதலிலும் கொடு வெய்யிலிலும் கழனி வெளிகளிலே உழன்று-உடலிலிருந்து வேர்வை ஆறாகப் பெருகியோட இயந்திரம் போல உழைத்து, மாலையில் வீடு திரும்பும் பொழுது சாறு பிழிந்த சக்கைகளாகவே வருகின்றனர்.

அவர்கள் வாழ்வில் நிம்மதி இருக்க வேண்டாமா? அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டாமா?

கையிலே மட்டும் நெய்யை வைத்துக்கொண்டு சோற்றிலே ஊற்றாவிட்டால் சோறு மணக்குமா?
இதுவரை காங்கிரஸ்காரர்கள் பன்னீரை அங்குமிங்கும் தெளித்துவிட்டு “எங்கும் மணக்கிறது! இந்த மணம் இந்திர லோகத்தில்கூட இருக்காது!” என்றார்கள்.

ஆனால் நாம் உடலிலுள்ள அழுக்கை நீக்கி-தூய்மை பெறச் செய்து உழைக்கவும் வழிவகை செய்யவேண்டும்.

வாழ்த்துப் பத்திரம் வாசித்துக் கொடுத்தால் மட்டும் காரியம் நடைபெறாது.

ஏற்றிவிட்ட விளக்கைக் கூடத் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தால்தான் அது அணையாமல் இருக்கும்!

மக்களும் எங்களைப் பதவியில் அமர்த்தியதோடு விட்டுவிடாது எங்களுக்கு உறுதுணையாயிருக்க வேண்டும். ஆட்சியென்ற தீபம் மேலும் பிரகாசிக்க வேண்டுமானால் மக்களது ஒத்துழைப்பு எனும் தூண்டுதல் இருக்கவேண்டும்.

என்னிடம் வந்த மனுக்களெல்லாம் மனுக் கொடுத்தவர்கள் ஆதிதிராவிடர்களாக இருந“தால் குடிக்க நீர் வேண்டும்-இருக்க இடம் வேண்டும் என்று இருக்கிறது. சில கிராமங்களில் பள்ளிக்கூடம் கட்டித் தரவேண்டுமென்று மனுக்கள் வருகின்றன. இன்னும் சில கிராமங்களில் பாதைகள் போட்டுத் தரவேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கிறது.

சோறுதான் காங்கிரஸ்காரர்களால் போட முடியவில்லை யென்றால் இதைக்கூடவா செய்யக்கூடாது? கிணறுகளெல்லாம் தூர்ந்து போகவிட்டு குளங்களைப் பழுது பார்க்காது-வயலிலே பசுமையைக் கண்டு வாழ்விலும் பசுமையைக் காண நீர்ப்பாசன வசதி செய்யாது இருபது ஆண்டுகள் என்ன செய்தார்களென்றே தெரியவில்லை.

மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு மருந்தில்லாத மருத்துவமனைகள் புத்தகமில்லாத பள்ளிக்கூடங்கள்-அரிசி இல்லாத ரேஷன் கடைகள் இவைகளைத் தானே ஆக்கி வைத்தீர்களென்றால் “நாங்கள் தொழிற்சாலை கட்டினோம், அணையைக் கட்டினோம்” என்று கூறுகிறார்கள்.

பசித்தவன் என்ன நினைப்பான்?
பசியோடு இருக்கும் ஒருவனை அழைத்துக்கொண்டு போய் வாழைத் தோட்டத்தைக் காட்டி-வாழைத் தோட்டத்திலுள்ள வாழை மரங்களை ஒவ்வொன்றாகக் காட்டி “அதோ தெரிகிறது பார்! குழந்தைப் பருவத்துக்குருத்து இலை! அதிலே விருந்துண்டால் எப்படியிருக்கும்?” என்று கேட்டால், பசித்தவன் என்ன நினைப்பான்? ‘பசியை அடக்காது மேலும் மேலும் பசியைத் தூண்டிவிடும் அளவுக்குப் பேசுகிறானே நாலு அறை கொடுப்போமா” என்று நினைப்பான்.
சோழவரம் ஏரி தூர்வாரவில்லையே என்றால், பக்ராநங்கலைப் பாருங்கள் என்கிறார் ஒரு பெரியவர்.

கிணறுகளை ஆழப் படுத்தவில்லையே என்றால், தாமோ தாரப் பள்ளத்தாக்குத் தெரியுமா என்கிறார்.

நம்நாட்டில் பதின்மூவாயிரத்து ஐநூறு குளங்கள் இருக்கின்றன. மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்ட பிறகு எத்தனை குளங்கள் பழுதுபார்க்கப்பட்டிருக்கின்றன என்றால் ஆயிரத்து முந்நூறு குளங்கள்தான். மீதிக்குளங்களைப் பழுது பார்த்து முடிப்பதை நமது பேரப்பிள்ளைகள் தான் பார்க்கவேண்டும், காங்கிரஸ் இன்னும் இருந்திருந்தால், அதற்குள் கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற குளங்கள் கூடக் கெட்டுவிடும்.

எங்களிடம் உள்ள பணத்தில் இப்பொழுது 11 கோடி ரூபாய் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கியுள்ளோம். இந்த 11 கோடி ரூபாய் போதாது.

இன்னும் பலகோடி வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் 20 கோடி கேட்டிருக்கிறோம்.
இப்படி முதன் முதல் இவ்வருடத்தில் நாங்கள் செய்ய வேண்டுமென்று எண்ணியுள்ள காரியம் நீர்ப்பாசன வசதி செய்வது நல்ல விதை கொடுப்பது எங்கு பார்த்தாலும் நெல் கிடைக்கிறது, அரிசி கிடைக்கிறது என்னும் நிலையை அக்டோபர் மாதத்திற்குள் உருவாக்க வேண்டும் என்பதுதான்.

பதவியேற்பதற்கு முதல் நாள் மேட்டூர் அணைக்கட்டில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று கணக்குப் பார்த்தேன். ராஜ்யத்தை ஒப்புக்கொள்ளப் போகும்போது தண்ணீராவது இருக்கிறதா என்று பார்த்தேன். 35 கன அடித் தண்ணீர் தான் இருந்தது. 60 கன அடித் தண்ணீர் இருந்தால் தான் மேட்டூர் அணையைத் திறக்க முடியும்.

அதைத் திறந்துதான் தஞ்சைக்கு நீர் விடவேண்டும்.

தஞ்சைக்கு நீர் சென்றால்தான் பஞ்சம் இருக்காது.

மேட்டூருக்குத் தண்ணீர் வருவதென்றால் குடகுமலையில் மழை பெய்யவேண்டும். குடகுமலையைச் சார்ந்திருக்கும் பச்சைமலை, பவளமலை எவ்வளவு வளமுடையது என்று பாட்டுக்காவியம் படித்தவர்களுக்குத் தெரியும்.

சென்னைக்கும் கோவைக்கும் படி அரிசித் திட்டம் கொண்டு வரும்போது “அது எப்படி முடியும்!” என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டது பிறகுதான் புரிந்தது. அரிசி விளைய நீர் வேண்டும் அந்த நீர்தான் மேட்டூரில் இல்லையே, இவள் எப்படிச் செய்வான் என்று நினைத்தார்கள்.

நேற்று 69 கன அடிவரை தண்ணீர் வந்துவிட்டது. மனிதப் பூச்சிகள் அழிந்து விடாமலிருந்தால் வயல் வெளிகளிலே பயிர் விளைந்து பசியைப் போக்கும் என்பது உறுதி.

யாருக்கு வரிபோட்டால் தாங்கும்-யாருக்குப் போட்டால் தாங்காது என்று பார்த்து, சமநீதியோடு தி.மு.கழகம் அரசாண்டு வருகிறது.

இந்த அரசு வெறும் அதிகார அரசல்ல! ஆணவ அரசல்ல! உழவர்கள் அரசு! உழைத்துப் பிழைக்கும் உழைப்பாளர் கூட்டங்களின் அரசு! மக்கள் அரசு! இந்த அரசுக்கு மக்கள் ஒத்துழைப்புத் தேவை.