அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


புதிய வரலாறு
4

சிறை எனக்குப் புதிதல்ல!
“இந்தி ஒழிப்புப் பற்றிய புதிய தீர்மானம், தமிழக அரசுக்கும் டில்லி அரசுக்கும் உள்ள தொடர்புக்கு ஊறு விளைவிக்குமா? இதற்காக எந்தச் சட்டப்படி நம்மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்று அங்குள்ள நிபுணர்கள் யோசிக்கக் கூடும், ஆனால், நான் ஒரு துளியும் யோசிக்கவில்லை.
“மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விரும்பினால் அது எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் தயாராக இருக்கிறேன். அவர்கள் என்ன செய்துவிட முடியும்-சிறையில் தள்ளக்கூடும்? சிறை எனக்குப் புதிதல்ல!

“நான் எம்.ஏ.படித்த இளைஞனாக இருந்தபோதும் சிறை சென்றிருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினனாக இருந்த போதும், நாடாளுமன்ற உறுப்பினனாக இருந்த போதும் சிறை சென்றிருக்கிறேன். இப்பொழுது அமைச்சனாக இருக்கும் பொழுதும் காங்கிரஸ் நண்பர்களால் சிறைசெல்லும் வாய்ப்புக் கிடைக்குமென்றால், மிக்க மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக் கொள்வேன். அது என் வாழ்க்கை வரலாற்றிலேயே வசீகரமான அத்தியாயமாக இருக்கும், ஆகவே, ‘சிறை’ என்னை மிரட்டமுடியாது.

அவர்கள் இன்னொன்றும் செய்யக்கூடும்; ‘இந்தியைப் பள்ளிகளிலிருந்து நீக்கியது, அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதல்ல’ என்று சொல்லி, தமிழக அரசைக் கவிழ்க்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் முயன்றால், அதற்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன், வேறு ‘ஆட்சி’ அமைக்க முயலலாம்-தாராளமாக முயலட்டும், நான் மட்டுமன்றி, கழகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும், ‘மத்திய அரசு என்ன கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்வது’ என்று முழு உறுதியுடன்தான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்’ என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்.

“தமிழக அரசு கவிழ்க்கப்பட்டு விட்டால் மத்திய அரசு 100 அல்லது 150 நாட்களில் கவிழ்ந்துவிடும் நிலைமை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்போதே மத்திய அரசு வலுவில்லாமல் இருந்து கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியும். இந்த நிலையில், ‘மத்திய அரசைக் கவிழ்க்க வேண்டும்’ என்று நினைப்பவர்களுடன் நாங்களும் ஒத்துழைத்தால், நிலைமை என்னவாகும்?

“1937 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தி எதிர்ப்பு அறப்போராட்டத்தின் இறுதிக் கட்டமாகத்தான் இப்பொழுது சட்டமன்றத்தில், இருமொழித் திட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இனி, புதிய அத்தியாயம் எழுத வேண்டியவர்கள் நாம் அல்லர். என்னால் ஆனதைச் செய்துவிட்டேன். இனி, டில்லி அரசு தன்னால் ஆனதைச் செய்யட்டும்.

“நான் ஏற்கெனவே ஒருமுறை கூறியபடி ஒவ்வொருவருக்கும் ஒரு முறைதான் உயிர் போகும்-இருமுறை போகாது. அதிலும் இந்தக் காரியத்திற்காக நம்முடைய உயிர் போவதானால், நல்ல காரியத்திற்கு நம்முடைய உயிர் போகிறது’ என்று நிச்சயம் மகிழ்ச்சியடைவோம்.

“வாழ வேண்டிய வயதில், தன் பெற்றோரின் இன்பக் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் இளைஞன் இராசேந்திரன், இந்தியை எதிர்த்துத் தன் இன்னுயிரை நீத்தான். அப்படியிருக்க, அறுபது வயதை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், ஆசைகள் அடங்கி-பெறவேண்டியதைப் பெற்றுவிட்டவர்கள் இறப்பதால் நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதில் மத்திய அரசு எந்தக்காரியம் செய்தாலும் ஏற்றுக்கொள்வது என்ற உறுதியுடன் தான் நாங்கள் இருக்கிறோம்.

“இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க நாம் முடிந்த அளவு விலை தந்தோம். அதைவிட இன்று நாம் பெற்றுள்ள நிலை பெரிது. அந்த நிலையை நாம் பெறக் காரணமாக இருந்த இந“தியை எதிர்த்துப் போராடி மாண்டவர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.”

1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தியாகம் செய்த மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தங்களுடைய வீரவணக்கத்தைச் செலுத்துகின்ற வகையில்-இந்த நாளிலே இந்த வீர வணக்கத்தை இங்கே நான் செலுத்திக் கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் நம்முடைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்ற நண்பர்கள் அனைவரும் பல்வேறு நகரங்களில் வீர வணக்கத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி வீர வணக்கம் செலுத்துவது தமிழ்நாடு மரபிலே ஒன்றாகும். அந்த வகையிலே இன்றைய தினம் தமிழகம், தொடர்ந்து வீர வணக்கத்தை நடத்திக்கொண்டு வருகிறது.

வீர வணக்கம் செலுத்தும் அமைச்சர்கள்
வீர வணக்கம் செலுத்துவது தமிழ்நாட்டு மரபு என்றாலும், அந்த வீர வணக்கத்திலே அமைச்சர்கள் கலந்துகொள்வது இதுதான் முதல் தடவை என்பதை வடக்கே உள்ளவர்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று 1938 ல் இருந்து போராடி வந்தோமோ அந்தக் காரியத்தைச் சட்டமன்றத்திலேயே செய்து விட்டோம். ‘இந்தி இனி தமிழ் நாட்டில் இல்லை’ என்று தெரிவித்து விட்டோம்.

கட்டாய இந்தியை எதிர்த்து 20 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் போராட்டக் களம் அமைத்து ஆயிரம் பேர் சிறைசென்று, தாளமுத்து, நடராசனை இழந்தோம். அவர்களுடைய உடல்களை இடுகாட்டுக்குக் கொண்டு சென்ற ஊர்வலத்தில் சில நூறு பேர்களே கலந்து கொண்டனர்.

என்றாலும், எங்கள் உள்ளத்திலே ஓர் உறுதி இருந்தது. ‘இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கும் இந்தி எதிர்ப்பு இயக்கம் வேகமாக வளர்ந்து மக்கள் மனத்தை உலுக்கி மகத்தான வெற்றிபெறும்’ என்றுதான் அந்த உறுதி. அது இன்று வெற்றி தேடித் தந்தது என்பதை, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துவக்கம் முதல் ஈடுபட்டிருந்த என்னால்தான் உணர முடியும்.

‘ஒழிக, ஒழிக’ என்றவர்கள், இந்தியை ‘ஒழித்தே விட்டார்களே’ என்று ஊரார் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆனால், சுப்பிரமணியம் ஒரே ஒருவர் மட்டும்தான், ‘இது, சிறுபிள்ளைத்தனம்’ என்று சொல்கிறார்.

எதுக்கு சிறுபிள்ளைத் தனம்?
இப்படிப்பட்ட காரியம், ‘சிறுபிள்ளைத்தனம்’ என்றால் ‘இந்தக் காரியத்தைச் செய்யச் சிறு பிள்ளையால் தான் முடியும்’ என்று அவர் கருதினால் நான் சிறுபிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன்; இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வதிலே எந்தத் தவறும் இல்லை’ என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

1965 ல் மாணவர்கள் கிளர்ச்சி நடந்த நேரத்தில் சுப்பிரமணியமும் அழகேசனும் இராஜினாமாச் செய்ததை, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ‘பக்குவம் பெறாத செயல்’ என்று சொன்னார். ‘சிறு பிள்ளைத்தனம்’ என்பதைத்தான் அவர் அத்தனை பக்குவமாகச் சொன்னார். 1965ல் அவர் அந்தப் பெயரைப் பெற்றார் அதை நான், 1968ல் பெறுகிறேன்.

தொடர்ந்து நம்முடைய தமிழ்நாட்டில், இரண்டாண்டுகட்கு ஒருமுறை இப்படிப்பட்ட ‘சிறு பிள்ளைத்தனம்’ நடைபெற வேண்டுமென்று நான் கருதுகிறேன்.

என்னுடைய நண்பர் சுப்பிரமணியம் அறிக்கையில், ‘கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கவில்லை, சோஷலிஸ்டு ஆதரிக்கவில்லை. பிரஜா சோஷலிஸ்டுகள் ஆதரிக்கவில்லை, சுதந்தராவும், முஸ்லிம் லீக்கும்தான் ஆதரிக்கின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ்காரர்கள் இந்திரா காந்திக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர் என“னைப் பார்த்து, ‘என்ன அண்ணாதுரை, இப்படி அவசரப்பட்டுத் தீர்மானம் போட்டு வீட்டீர்களே’ என்று கேட்டால், நான் தெளிவாக அவருக்குச் சொல்வேன்- ‘நாங்கள் எது தேவை என்று கருதினோமோ-தமிழகத்து மக்கள் எதை விரும்பினார்களோ-அதைச் செய்தேன்’ என்று சொல்வேன். ஆனால் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து, ‘இந்த அக்கிரமச் சட்டத்தைக் கொண்டு வந்த நேரத்தில் ஏன் எதிர்த்து ஓட்டளிக்கவில்லை’ என்று கேட்டால் அவர்கள் என்ன பதில் அளிப்பார்கள்? அதற்காகத்தான் சுப்பிரமணியம் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார்.

‘சிறு பிள்ளைத்தனம்’ என்று கூறும் அவருடைய கட்சியினர், அதனை எதிர்த்தாவது ஓட்டுப் போட்டார்களா? இல்லையே! ‘இந்தி வேண்டாம் என்று நாங்கள் சொல்லுகிறோம். உங்கள் பதில் என்ன? என்று கேட்டோம்-சொன்னார்களா?

அவர்கள் ஒன்று கேட்கக்கூடும்- ‘நீ இன்னும் எத்தனை நாளைக்கு அமைச்சராக இருக்கப் போகிறாய்’ என“று, நான் அவர்களுக்குச் சொல்கிற பதில் இதுதான்- ‘நாங்கள் எத்தனை நாளைக்கு அமைச்சராக இருக்கவேண்டுமோ அத்தனை நாள் இருந்தாகி விட்டது’ என்று!

‘உத்தியோகம் வேண்டுமானால், இந்தி படி’ என்று சொல்லுகிறார்கள்.

‘இந்தி அல்லது ஆங்கிலம் இரண்டில் ஒன்று படித்தால் போதும்’ என்று சட்டம் போட்டுவிட்டு, ‘இந்தி படிக்காவிட்டால் வேலை கிடைக்காது’ என்று சொன்னால் யார் நம்புவார்கள்? இதைக் காமராசர் ஒருவர்தான் தெளிவாக உணர்ந்து பெங்களூரில், இந்தி, ஆங்கிலம் இரண்டில் ஒன்று படித்தால் வேலைக்குப் போகலாம் என்று சொன்னால், எவன் இந்தியைப் படிப்பான்?’ என்று கேட்டார்.

அவர், பல்கலைக் கழகத்திற்குச் செல்லாதவர், அதனால், சுப்பிரமணியத்துக்குத் தெரிந்தது காமராசருக்குத் தெரியாது! காமராசர், மக்களோடு பழகியவர்-மக்கள் இதயம் அவருக்குத் தெரியும், அதனால்தான், சுப்பிரமணியத்துக்குத் தெரியாததைக் காமராசர் சொன்னார். ‘இந்தி படிக்காவிட்டால் ஆங்கிலம் படிக்கலாம் என்று கூறினால், யார் இந்தி படிப்பார்கள்’ என்று அவர் கேட்டார். அதற்குப் பிறகுதான் நான்கூட உணர்ந்தேன்.

தேவை இல்லாமல் இந்தி எதற்கு? மாணவர்களை இந்தித் தேர்வு எழுதச் சொன்னால், அவர்கள், ஆசிரியரைப் பார்த்து ‘ஒன்றும் தெரியாது’ என்று சொல்வார்கள். ஆசிரியர், ‘பரீட்சையில் சும்மா உட்கார்ந்து எழுந்து விடுங்கள்-போதும்’ என்று சொல்வார், அவர்கள் என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைத்துவிட்டு வருவார்கள்.

இந்தக் கேலிக்கூத்தில், இந்தியை வைத்து இருக்கிறார்கள்! ‘ஓராண்டில் 40 ஆயிரம் பேர் 80 ஆயிரம் பேர் எழுதினார்கள், எட்டு இலட்சம் பேர் இதுவரை தமிழ்நாட்டில் இந்தித் தேர்வு எழுதினார்கள்’ என்ற கணக்குக் காட்டத்தான் இந்தியை வைத்துக்கொண்டு இருந்தார்கள்.

இதைச் சட்டமன்றத்தில் மூக்கையாத் தேவர் அழகாகச் சொன்னார்- ‘நீங்கள் காட்டிய பொய்க் கணக்கை அண்ணாதுரை கிழித்தெறிகிறார், அதற்குத்தான் இந்தத் தீர்மானம்’ என்று!

என்னையேகூட லால்பகதூர் சாஸ்திரி இதுபற்றிக் கேட்டிருக்கிறார். ‘தமிழ்நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் இந்தி படிக்கிறார்கள்’ என்று அவர் பெருமையாகக் கூறினார். ‘இந்தித் தேர்வு எழுதுவதாக ஒப்புக்குத் தகவல் தருகிறார்கள்’ என்று அவரிடத்தில் சொன்னேன். அதை அவர் நம்பவில்லை.

இன்று நாங்கள், ‘இந்தி வேண்டாம்’ என்று முடிவு எடுத்த பிறகு, இதுவரை அவர்களுக்குத் வந்த கணக்கு, பொய்க்கணக்கு என்று உணரப் போகிறார்கள்.

என்னாலானதைச் செய்தாகிவிட்டது. இனி மத்திய சர்க்கார் தன்னாலானதைச் செய்யட்டும். நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. தியாகத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
‘இந்தியை என்.சி.சி.யில் இருந்து எடுத்துவிட்டால், தமிழ்நாட்டுக்காரர்கள் பட்டாளத்தில் சேர முடியாதே’ என்று சி.சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

“தமிழ்நாட்டிலிருந்து இராணுவத்தில் சேருவோர் எண்ணிக்கை எவ்வளவு என்பதும், அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதும்-இராணுவ இரகசியங்கள் என்றாலும்-நாடறிந்த ஒன்று.
ஆனால், என்.சி.சி. போன்ற அமைப்பில் இந்திச் சொற்களை நீக்க மத்திய அரசு முன்ரவவில்லையென்றால், அந்தப் பெயர் இல்லாமலேயே அதே போன்ற அணிவகுப்பு அமைப்பை ஏற்படுத்தத் தமிழக அரசு தயார் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அதுவும் தவறு’ என்றால், அதைப்பற்றிக் கவலைப்படமாட்டேன்.

எங்களுக்கு, ‘நியாயம்’ என்று தோன்றியதைச் செய்வோம் அதை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டால் எடுத்துக் கொள்ளுங்கள்.

உடலில் உயிர் உள்ள வரையில்...
“ஏக இந்தியா” என்ற தத்துவம் பேசி, இந்தியைத் திணித்து ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்! ‘ஒருமைப்பாடு குலைய வேண்டும்’ என்ற எண்ணம் எனக்கு இல்லை. எப்படியாவது இந்தி ஆதிக்கத்தைப் புகுத்தவேண்டும் என்று எண்ணுவதைத் தடுத்து நிறுத்தும் வகையில்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகம், இந்தியையும் இந்தி ஆதிக்கத்தையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, இந்தப் பிரச்சினையில் நாங்கள், திட்டவட்டமாக ஒன்றும் சொல்லவில்லையென்று கூறுகிறார்கள். 1937 ஆம் ஆண்டிலிருந்தே நாங்கள் இதில் திட்டவட்டமாகவே இருக்கிறோம். உடலில் உயிர் உள்ளவரையிலும் இந்தி ஏகாதிபத்தியத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். காங்கிரஸ்காரர்கள் இந்தியைத் திணிப்பதிலேயே காலத்தைச் செவிட்டிருக்கிறார்கள்-நாங்கள், எதிர்ப்பதிலேயே காலத்தைச் செலவிட்டிருக்கிறோம்.

காங்கிரஸாரே என்னைக் கவிழ்ப்பதானால், தாராளமாகக் கவிழ்க்கலாம். ஆனால் நான் மூடிவிட்ட இந்தி வகுப்புகளைத் திறந்து நடத்தும் துணிவாளர் இத்தமிழ் நாட்டில் யாருமில்லை என்பதை உறுதியாகச் சொல்லுவேன்.

ஏனெனில் தமிழ் மக்கள் இப்போது அந்த நிலையில் இருக்கிறார்கள். செய்யவேண்டிய காரியங்களைச் செய்து முடிக்கத் தேவையான இடமாகவே பதவியைக் கருதுகிறோம். நிரந்தரமந்திரி என்ற மனப்பான்மையில் நாங்கள் இல்லை. பக்தவத்சலனாரின் நிலையில் நாங்கள் இல்லை.

சட்டமன்றச் செயல்முறைக் குழுக் கூட்டத்தில் கருத்திருமன் என்னைக் கேட்டார். என்ன தீர்மானம் கொண்டுவரப் போகிறீர்கள் என்று! ‘நான் ராஜினாமா செய்யப்போவதாகத் தீர்மானம் கொண்டு வரப்போகிறேன்’ என்றேன்.

“பீ சீரியஸ்! சிரித்துக்கொண்டே சொல்லாதீர்கள்” என்றார். பதவியிலிருந்து விலகும் நேரம் வரும்போதும் இதே சிரிப்போடுதான் சொல்லுவேன். அழுதுகொண்டு அதைச் சொல்லமாட்டேன்.
நான் மந்திரியாகி என்ன புதிய அந்தஸ்தைப் பெற்றேன் என்ன புதிய லாபத்தைப் பெற்றேன். மந்திரியான பிறகு மக்களை விட்டு விலகியா விட்டேன்-கூச்சப்படுவதற்கு? கூச்சம் இருக்க வேண்டியவர்களுக்கெல்லாம் அது இல்லாத போது நான் ஏன் கூச்சப்படவேண்டும்?

தமிழ் மக்களுக்கு வயிறார உணவு அளிக்கவேண்டும்.

வேலையில்லாத திண்டாட்டத்தை நீக்கவேண்டும்.

எங்கு நோக்கினும் தொழிற்சாலைகள் என்ற நிலை!

இதைச் செய்கிறவரை விடுங்கள், இல்லையென்றால் உங்களோடு வந்து ‘கனம் சி.சுப்பிரமணியம், கனம் எம்.பக்தவத்சலம்’ என்று சொல்லச் சொல்கிறீர்கள்-சொல்லுங்கள்.

நான் வானில் பறந்து திரிய வேண்டிய வானம்பாடி இன்று கூண்டுக்குள் அடைபட்ட கூண்டுக்கிளியாக இருக்கிறேன். கூண்டுக்குள்ளிருந்து விடுபட கிளியே கவலைப்படாத போது அதைவிட அறிவுள்ள உயிரான நானா கவலைப்படப் போகிறேன்?

நாளை முதலே புதியதொரு கூக்குரலைக் கிளப்புவார்கள். இந்தி மொழி ஆசிரியர்களுக்கெல்லாம் வேலைபோகும்படிச் செய்துவிட்டார்கள் என்பார்கள். ஒருவருக்கும் வேலை போகாது. மாற்று வேலை தரப்படும். பள்ளிகளில் உள்ள நூல் நிலையங்களைக் கண்காணிப்பவர்களாக எழுத்தாளர்களாக அல்லது வேறு பாடங்கள் தெரிந்திருந்தால் அவற்றுக்கான ஆசிரியர்களாக எந்தப் பாடமும் தெரியவில்லையென்றால் திருக்குறள் தெரிந்திருந்தால் அதையாகிலும் சொல்லிக் கொடுக்கலாம். எல்லாருக்கும் வேலை உண்டு. ஆனால் இந்த (இந்தி) வேலை மட்டும் இல்லை. தமிழர்கள் விரும்பும் வேலை எதுவானாலும் செய்யலாம்.

இனி மும்மொழித் திட்டம் இல்லை என்று சட்டமன்றத்தில் நான் தீர்மானத்தைப் படித்தபோது என் உள்ளத்தில் பழைய நினைவுகளெல்லாம் பொங்கிக் கொந்தளித்தன.

அனாதைப் பிள்ளைகளாக நாங்கள் அலைந்த காட்சிகள் என் நினைவுக்கு வந்தன. எங்களால் மட்டுமே அந்த மகிழ்ச்சியை உணர முடியும்.

ஏனெனில் இது மலடி வயிற்று மகன்-குருடன் கையில் கிடைத்த புதையல்-இன்பக் கனவுகளெல்லாம் நனவாக மாறிய நிலை.

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தி ஆதிக்கத்துக் கெதிராகச் செய்யப்பட்ட தியாகமெல்லாம் வடிவமெடுத்து வெற்றியைத் தேடித் தந்த நிலை.

முன்பு இந்திதான் ஒரே ஒரு தேசியமொழி என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தத் தேசிய மொழியைப் படிப்பவன் தான் தேசியவாதி என்று கருதப்பட்டது. மெல்ல மெல்ல அந்தக் கருத்தை எதிர்த்து ‘இந்தி மட்டுமே தேசிய மொழி அல்ல. மற்ற மொழிகளும் அத்தகைய அந்தஸ்து படைத்தது’ என்று போராடிய பிறகு மற்ற மொழிகளும் தேசிய மொழிகள் என்ற அந்தஸ்தைப் பெற்றன.

இப்படி இந்தி எதிர்ப்பு இயக்கம் வளர்ந்த காரணத்தால் தான் நேரு கூட முன்பு இந்தி மட்டுமே தேசிய மொழி என்று பேசி வந்தவர் பிறகு இந்தி ஆட்சி மொழி என்றார். அவர் மறைவதற்குச் சில காலத்திற்கு முன்பு, இந்தி பொதுமொழி என்று கூறி வாதிட்டார்.

தேசிய மொழியிலிருந்து இந்தி-ஆட்சி மொழிக்கு இறங்கி, பொதுமொழி என்ற நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் இந்தி எதிர்ப்பு இயக்கமும்-போராட்டமுமேயாகும்.

தேசிய ஒருமைப்பாடு என்ற பசப்பு வார்த்தைகளின் பெயரால் இந்தி மொழி இங்கு திணிக்கப்படுமானால் இந்தத் தமிழகத்து மாந்தர் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை முழு மூச்சுடன் எதிர்ப்பார்கள்.

சுயமரியாதை உணர்வும்-ஆற்றலறிவும் மிக்க தமிழக மக்கள் தங்களது அரிய மொழியையும் பாரம்பரியத்தையும் இழக்கச் சம்மதிக்கமாட்டார்கள், இன்னொரு மொழி திணிக்கப் படுவதையும் சகிக்க மாட்டார்கள்.

ஆங்கிலம்-உலகத்தின் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ளும் இன்றியமையாத இணைப்பு மொழியாய் விளங்குகிறது. அகில உலகத்திலும் ஏற்பட்டுள்ள விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை காத்துத்தரும் சாதனமாகவும் ஆங்கிலம் விளங்குகிறது.

மூன்றாவது மகிழ்ச்சி
ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் நான் மூன்று முறை மகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ்நாடு என்று பெயரிடுவதை எல்லாக் கட்சியினரும் ஏற்கச் செய்து எல்லாருமாகச் சேர்ந்து ஒருசேர “தமிழ்நாடு வாழ்க” என்று முழக்கமிட்ட நேரத்தில் மகிழ்ச்சி அடைந்தேன். அது என்னுடைய 58 வயதில் நான் கேட்டிராத கீதம், அது பார்த்திராத காட்சி, என் செவியில் விழுந்திராத செந்தேன்.

இரண்டாவதாக நான் மகிழ்ச்சியடைந்தது சுயமரியாதைத் திருமணச்சட்டம் நிறைவேறிய போதாகும். எங்கே ஒழுக்கம் கெட்டுவிடும் என்ற பேச்செல்லாம் எழுமோ என்று அஞ்சிய நான் அந்தச் சட்டம் நிறைவேறியபோது மகிழ்ச்சி அடைந்தேன்.

மூன்றாவது நான் மகிழ்ச்சியடைந்தது இந்தி இனி இல்லை என்று சொன்னபோது அடைந்த மகிழ்ச்சியாகும்.

நான் சந்தோசமாக இருப்பதைப் பொறுக்க மாட்டாதவர்கள் சென்னையைக் காட்டி அங்குச் சாம்பலாகிக் கிடக்கும் குடிசையைக் காட்டி இப்போது அண்ணாதுரை என்ன சொல்கிறான் என்று கேட்கிறார்கள்.

பட்டணத்தில் பிழைப்பதற்காக வந்து வெய்யிலையும், மழையையும் கொஞ்சம் தாங்கக்கூடிய அளவுக்கு ஓலைக் குடிசைகளை போட்டு வாழ்பவர்களைப் பார்த்து மனம் பொறாமல் அந்த ஓலைக் குடிசைகளுக்கு நெருப்பு வைத்தார்களென்றால், அவர்களைவிட அயோக்கியர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

நல்ல உடம்பில் சிரங்கு இருப்பது போல-மாம்பழத்திலே வண்டு துளையிடுவது போல-பாலிலே உப்புக்கல் விழுந்ததுபோல, சமுதாயத்திலே தீய சக்திகளை உருவாக்குபவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவைத்தால் நாட்டுக்கே ஆபத்து!

இதை நான் சொல்லக் காரணம், சென்ற வாரம் மழையைப் பார்த்து உணவு நெருக்கடி இனி இருக்காது என்று மகிழ்ச்சியோடிருந்தேன். ஆனால் என்னைத் திடுக்கிட வைத்தது சென்னைக் குடிசையில் பற்றியெறிந்த தீ!

மூன்று நான்கு வருடங்களுக்குள் சென்னையிலுள்ள குடிசைகளெல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு, தீ மூட்டினாலும் மூளாத அளவுக்குக் கல்நார்த் தகட்டு வீடுகள் கட்ட ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

அப்படிப்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையாகப் புன்செய் வரியை நீக்கத் தீர்மானித்துள்ளேன். அதே போல் 40 ஏக்கர், 20 ஏக்கர் வைத்து இலாபம் சம்பாதிக்கும் மிராசுதாரர்களுக்கும் மேலும் கொழுக்க நினைக்கும் மிட்டாதார்களுக்கும் வரி போட்டுள்ளோம். யாருக்கு வரி போட்டால் தாங்கும் யாருக்குப் போட்டால் தாங்கும்-யாருக்குப் போட்டால் தாங்காது என்று பார்த்துச் சமநீதியோடு தி.மு.கழகம் அரசாண்டு வருகிறது.

கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு இருக்கிறது. வடக்கே உள்ள கங்கை, பிரம்மபுத்திரா போன்ற வளமான ஆறுகள் இங்கே இல்லை. இங்கே இருப்பது எல்லாம் காவிரியாறு ஒன்றுதான். வேறு ஆறுகள் இல்லாவிட்டாலும் பூமிக்கடியில் வளமான நீரோட்டங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.

தி.மு.கழகம் பொறுப்பேற்ற பிறகு அதை வெளியே கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

நான் மிகுந்த பேராசைக்காரன். உங்கள் வறுமையை, வாட்டத்தை எவ்வளவு விரைவில் ஓட்டமுடியும் என்று கனவு காணுகிறேன். இன்னும் செய்ய வேண்டியது நிரம்ப இருக்கிறது.

சேறும்-சகதியும் நிரம்பிய இடத்தில் பாட்டாளி மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாரவண்டி இழுப்பவன் சம்பாதிப்பது, பாதி வயிற்றுக்குக் கூடப் போதவில்லை. இந்த அவலநிலை மாற்றப்படவேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டு இருக்கிறேன்.

எதைக்கொண்டு இதைச் செய்வது? இருளில் சிக்கிக் கொண்டு இருந்தால் வெளிச்சம் வேண்டும் என்று தோன்றும். முதலில் தீப்பெட்டியைத் தேடுவோம். மாடத்திலே கை வைத்தால் வண்டு கடிக்கிறது. தீப்பெட்டி இல்லை. எரவாணத்திலே கை வைத்துப் பார்த்தால் பழைய தீப்பெட்டி கிடைக்கிறது. எடுத்து ஒரு குச்சியைக் கொளுத்தி விளக்கைப் பார்ப்பதற்குள் குச்சி அணைந்து விடுகிறது. இன்னொரு குச்சியைக் கொளுத்தி விளக்கருகே போனதும் அதுவும் அணைந்து விடுகிறது. மூன்றாவது குச்சியைக் கொளுத்திக் கையை அண்டைக் கட்டி விளக்கைக் கொளுத்தினால் திரி எரியவில்லை. விளக்கை எடுத்து ஆட்டிப் பார்த்தால் அதில் எண்ணெய் இல்லை. இருக்கிற நிலைமையை மக்களிடத்தில் சொல்லவேண்டும். அதுதான் இந்த சர்க்கார் நோக்கம். விளக்கிலே எண்ணெய் இல்லாததால் மக்கள் இருளிலேயே இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை.

எண்ணெய்யைத் தேடலாம். கடைக்குப் போய் வாங்கலாம். திரியைச் சரிப்படுத்தலாம் என்றால் எதிரில் இருக்கிற காங்கிரஸ்காரர்கள் இப்போதே விளக்கை ஏற்று என்கிறார்கள்.

எண்ணெய் வாங்க டில்லிக்குப் போனால் ‘கொடுக்காதே’ என்று டில்லிக்கும்- ‘கேட்காதே’ என்று என்னிடத்திலும் ‘விளக்கில்லையே’ என்று மக்களிடத்திலும் மூன்று விதமாகப் பேசுகிறார்கள்.

சர்க்கார் ந‘திநிலைமை சரியில்லை என்றால் குற்றத்துக்கு யார் பொறுப்பு? யாருடைய ஆட்சியால் பற்றாக்குறை வந்தது? யாருடைய ஆட்சியில் பஞ்சம் வந்தது? இதை யோசித்தால் அடக்கமாக அரசியலை நடத்துவார்கள். இருந்ததை இழந்து விட்டதால் இருப்புக்கொள்ளவில்லை-எரிச்சல் எரிச்சலாக வருகிறது.

மக்கள் கோட்டையை-கொலு மண்டபத்தை-சுகபோகத்தை ஆட்சியைப் பறித்துக்கொண்டார்கள். இதனால் தாக்குகிறார்கள். நாம் செய்த காரியங்களைப் பார்த்து ‘உங்களைப் பாராட்டுகிறோம்’ என்று சொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை.

போதுமான காலம் கொடுக்காமல் ‘இதைச் செய்தாயா-அதைச் செய்தாயா’ என்று கேட்கிறார்கள். காங்கிரஸ், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடந்துகொள்ளவில்லை என்று சொல்ல நான் வருத்தப்படுகிறேன்.

தி.மு.கழகத்திற்குச் சரிவர ஆட்சி செய்யத் தெரியவில்லை என்று காமராசர் பேசி இருக்கிறார்.

ஏதோ தேர்தலின்போது தி.மு.கழகம் நல்லபடியாக ஆளும் என்று நினைத்து பொது மேடையிலும் பேசி-மாலை மரியாதையிட்டு எங்களுக்காகத் தேர்தலில் ஓடியாடி வேலை செய்து, ஓட்டுகள் சேகரித்துத் தந்தவர் போலவும்-இப்போது தி.மு.க. ஆட்சி அவருக்கு ஏமாற்றம் அளித்துவிட்டது போலவும் பேசி வருகிறார்.

என்றைய தினம் அவர் நம்மை ஒப்புக்கொண்டார்?

ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல, ‘இவர்களால் எப்படி ஆளமுடியும்?’ என்று கேட்டார் காமராசர்.

இன்னும் ஒருபடி மேலே சென்று ‘ஆளப்போகிற மூஞ்சியைப் பார்-மூஞ்சியை!’ என்று கேட்டவர்தான் காமராசர். அவ்வளவு நல்லவர், அவ்வளவு நண்பர்!

ஆனால் எங்கள் ஆட்சியைப் பற்றித் தீர்ப்பு வழங்கே வேண்டியது-கணக்குப் பார்க்க வேண்டியது நல்ல வார்த்தை கூறவேண்டியது-வாக்காளர்கள்.

காமராசருக்கு எங்கள் ஆட்சி பற்றிக் கூற உரிமையில்லை, திறமையில்லை என்று கூறவில்லை!
எங்களைப் பற்றி அக்கறையற்றவர் அவர்! ஆட்சிக்கே வரமுடியாது, வரவிட மாட்டோம், வந்தாலும் ஆளவிடமாட்டோம் என்று கூறியவர்தான் அவர்.

தி.மு.கழகம் பற்றி 15 வருடமாகக் காமராசர் போட்ட எந்தக் கணக்கும்-சோதிடமும் பலிக்கவில்லை. எல்லா வலிவையும் சேர்த்து எங்களை எதிர்த்தார்கள், அவர்கள் எதிர்க்க எதிர்க்க நாங்கள் வளர்ந்தோமே அல்லாமல் வீழவில்லை.

அவர்கள் தூற்றத் தூற்ற மக்கள் எங்களைப் போற்றினார்கள். அவர்கள் பழியை மூட்ட மூட்ட மக்கள் எங்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதி ஆளும் பொறுப்பையே தந்தார்கள்.

ஆகவே இப்போது புதிதாகக் கிளப்பப்படும் பழியோ-தூற்றுதலோ எங்களை ஒன்றும் செய்து விடாது.

‘காமராசர் பேசியிருக்கிறார் தி.மு.க.ஆட்சி படி அரிசி போட்டாலும் மற்ற பொருள்களின் விலை குறையவில்லையே” என்று.

படி அரிசி போட்டாலும்... என்கிறாரே அந்த அரிசியை ஏன் அவர்கள் போடவில்லை?

1967 ஆம் ஆண்டுக்கு முன்பு அரிசிக்கு அலைந்ததை மக்கள் மறந்து விடுவார்களா? ஆடவர் மறந்தாலும்-பெண்கள் மறந்து விடுவார்களா?

அரிசி பற்றிய அவல நிலையை நீக்கிய ஆட்சியை மறப்பார்களா மக்கள்?

போன வருடம் அரிசி ஸ்டாக் இல்லை என்ற போர்டு எங்கும் இருந்ததே, அது மறைந்தது எப்படி?

காங்கிரஸ் கட்சி ஆளுகிற மாநிலங்கள் எல்லாம் இப்போது கையேந்தி நம்மை அரிசி கேட்கிறதே. இது ஆளத் திறமையில்லை என்பதற்கு அடையாளமா?

சில நாட்களாகக் காமராசர் என்ன பேசியிருக்கிறார் என்று மிகுந்த அக்கறையோடு பத்திரிகைகளைப் படித்தேன். பெரிய தலைவராயிற்றே-பொறுப்பு உணர்ச்சியோடு பேசியிருப்பார் என்று நினைத்தேன். வழக்கம்போல்-எந்த இழிமொழிகளைக் கூறினாரோ அவற்றைத் திருப்பித் திருப்பிப் பேசியிருக்கிறார்.

அன்று அவர்களுக்கிருந்த பலத்தையெல்லாம் திரட்டி மிரட்டிப் பார்த்தார்கள். இருந்தும் மக்கள் தீர்ப்பு எங்கள் பக்கம் வந்துள்ளது.

அன்று மக்கள் செய்தது நியாயமான முடிவா? அரசியல் பொறுப்புணர்ச்சியோடு செய்த முடிவா? அல்லது பொறுப்புணர்ச்சியில்லாமல் (பக்தவச்சலம் சொல்வது போல்) போதையில் செய்ததாகச் சொல்கிறார்களே! அப்படியா செய்தார்கள்?

நாங்கள் நினைக்கிறோம் நம் மக்கள் விவரம் தெரிந்தவர்கள் என்று. அதனால் பக்தவச்சலமோ மக்கள் அன்று போதையில் இருந்தார்கள். அதாவது குடிகாரர்களாக இருந்தார்கள் என்று சிறு துளி அச்சமில்லாமல் பேசியிருக்கிறார்.

அரிசி விலையைக் குறைத்தால் போதுமா? மற்றப் பொருள்களின் விலை குறையவில்லையே என்கிறார்கள்.

சீரகத்தின் விலை ஏறி விட்டதாகப் பட்டியல் போடுகிறார்கள். சீரகம் எதற்கு? ஜீரணிக்க முடியாத அளவுக்குச் சாப்பிட்டுவிட்டால் அப்போது பயன்படுவது சீரகம்! எந்த வீட்டுப் பெண்மணியைக் கேட்டாலும் சொல்லுவார். அந்த அளவுக்கு இந்தச் சமுதாயத்தின் நிலை ஆகட்டும், அப்போது, படி சீரகம், பத்துக் காசுக்கு விற்கச் செய்கிறேன்.

திருமணத்துக்காகக் கடன் வாங்குகிறவன் கூட முதலில் அரிசிக்காகப் பணம் ஒதுக்கி வைக்கிறான். அதற்குப் பிறகு தான் பலசரக்குக்கு, என்கிறான்.

ஏழாம் தேதி திருமணம்-அண்டா நிறையச் சந்தனம் என்று வருகின்றவர்கள் எல்லாம் மார்பில் சந்தனத்தைப் பூசிக்கொண்டு வழியோடு போங்கள்-வழியில் எந்த சத்திரமோ சாவடியோ இருந்தால் சாப்பாடு போடுவார்கள் என்றால், ‘அதற்குத் திருமணம் எதற்கு?’ என்று கேட்க மாட்டார்களா?

திராட்சை, முந்திரிப்பருப்பு என்று இவற்றின் விலையை குறைத்த பிறகா மற்றவற்றுக்குப் போவது? அரிசி, எண்ணெய், மிளகாய், பருப்பு, முந்திரி, சீரகம், பெருங்காயம் என்றல்லவா குறைத்துக் கொண்டு வரவேண்டும்? குடும்பம் நடத்தும் யாரும் இதைத்தான் சொல்லுவார்கள்.
நாங்கள் குடும்பத்தோடு இருக்கிறோம். ஏழைகளின் கஷ்டம் புரிகிறது. ஆகவே முதலில் அரிசியின் விலை குறையப் பாடுபட்டோம்.

‘இங்கே என்ன சாதிக்கிறீர்கள் என்று கேட்கிற அவர்களைப் பார்த்து, உங்கள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறதே, ஆந்திரத்தில், மைசூரில், மகாராஷ்டிரத்தில் என்ன செய்தார்கள்?” என்று கேட்க வேண்டும்.

“அங்கே ரூபாய்க்கு 2 படி போட்டிருக்கிறோம்! உன்னால் முடிந்ததா?” என்று கேட்டால் நான் வெட்கத்தால் தலை கவிழ்வேன்.

போன வருடம் இதே நாளில் அரிசிக்காக மக்கள் அல்லற்பட்டார்கள் என்பதைக் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.

அந்த நிலையில் இந்தத் தமிழ்நாட்டில் மார்ச்சு மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.கழகம் அடுத்த மாதத்திலேயே, அரிசி இல்லை’ என்ற நிலையை மாற்றியது. ரூபாய்க்கு படி அரிசி போட்டோமென்றதோடு எங்கு பார்த்தாலும் அரிசி கிடைக்கும்படிச் செய்தோம்.

‘எனக்கு நிர்வாகத் திறமையில்லை’ என்கிறார் காமராசர், எனக்கு நிர்வாகத்திறமை உண்டா, இல்லையா என்பதற்குக் காலம் பதில் சொல்லட்டும்.

சில காங்கிரஸ்காரர்கள் ‘நாங்கள் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்த்து விடுவோம்’ என்று கூறுகிறார்கள். உள்ளபடியே கவிழ்ப்பதில் கஷ்டமில்லை! நடப்பது தான் கஷ்டம். கேரளத்தில் தோற்றுப்போன பாடத்தை உணராமல் பேசுகிறார்கள்! கேரளத்தில் கவிழ்த்துப் பார்த்தார்களே என்ன நடந்தது? நம்பூதிரிபாடு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சிகள்-மறியல்-தடியடிப் பிரயோகம் துப்பாக்கிக் குண்டு ஆகியவை நடைபெற வழி செய்யப்பட்டது.

ஆனால் பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தலில் என்ன நடந்தது? காங்கிரஸ்காரர்கள் வெற்றிபெற முடிந்ததா? அதற்குப் பின்னர் கவர்னர் ஆட்சியைக் கொண்டு வந்தார்கள். கவர்னர் ஆட்சியால் எதிர்க்கட்சிகள் சிதறிப்போகும் என்று கருதினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

இடைத்தேர்தலில் கவிழ்க்கத்தான் முடிந்ததே தவிர-மீண்டும் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற இருந்ததா? இல்லையே! கவிழ்க்கப்பட்டவர்கள் நிமிர்ந்துவிட்டார்கள்-நிமிர்ந்து நின்றவர்கள் கவிழ்ந்து போனார்கள்.

அப்படி என்னிடம் செய்ய வந்தால், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். கவிழ்த்து விட்டால் மறுபடியும் எழாது என்று நினைக்காதீர்கள்!

கேரளத்தில் செய்து தோற்றுப் போனவர்களே தவிர வெற்றி பெற்றவர்களல்ல காங்கிரசார்!

முஸ்லீம்லீக்கிற்கும் எங்களுக்குமுள்ள உறவு ஏதோ பதவிக்கா ஏற்பட்டதல்ல! நாங்கள் அமைச்சர்கள் என்பதற்காக எங்களிடம் அவர்கள் உறவு கொண்டாடவில்லை. எங்களுக்குள் ஏற்பட்ட உறவு, கொள்கை அடிப்படையில் ஏற்பட்ட உறவாகும்.

அந்த உறவு நெருங்கிய உறவு! நெடுங்காலமாக இருந்து வரும் உறவு; நெடுங்காலத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும் உறவாகும்! இங்கொரு மருத்துவமனை கட்டுதல்-அங்கொரு பாலம் கட்டுதல் இவருக்கு ஒரு வேலை! அவருக்கு ஒரு வேலை மாற்றம்! இதுதான் ஆட்சி என்றால் எந்தச் சர்க்காரும் செய்துவிடும்.

அவர்கள் ஒவ்வொருவரும் அரும்பணியாற்றும் சிறப்பு பெற்றவர்கள்.

அதிலும் குறிப்பாக காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமிய சமுதாயம் நெடுங்காலத்திற்குப் பிறகு பெற்ற பெரும் பரிசு ஆவார்.

தி.மு.கழகத்திற்கு உற்ற துணைவனாக ஜனநாயகத்திற்குக் கிடைத்த அறப்போர் வாளாக அவர் இருந்து வந்திருக்கிறார், தொடர்ந்து இருந்து வருவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் நல்லாட்சி நடத்தத் துணிந்திருக்கிறோம்.

ஆனால் இந்தச் சர்க்கார்- ‘நீதி நிலைக்க வேண்டும்-அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு வகுப்பை அழுத்தி இன்னொரு வகுப்பு முன்னேறும் என்ற காட்டுமுறை அழிக்கப்பட வேண்டும்’ என்று நினைக்கிறது. எந்த அளவுக்கு இதில் வெற்றி பெறுகிறோமோ அந்த அளவுதான் அரசின் வெற்றி என்று கருதுகிறேன்.

4 ஆயிரம் மருத்துவமனைகளைக் கட்டினேன். முந்நூறு பாலங்களைக் கட்டினேன். நூறு ரேஷன் கடைகளைத் திறந்தேன் என்று கூறிக் கொள்வதில் அதிகப் பெருமையடையவில்லை.
என்றைய தினம் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ளவன் சமநிலைக்குக் கொண்டு வரப்படுகிறானோ-அன்று தான் சமூக நீதி ஏற்படும். அந்தச் சமூகநீதி இந்த அரசாங்கத்தில் நாட்டப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன்.

ஒருவரை ஒருவர் கெடுக்காமல் வாழமுடியும்-ஒருவரை ஒருவர் பகைக்காமல் வளர முடியும் என்ற முறை, நிலைநாட்டப் படுவதைத்தான் விரும்புகிறேன்.

அந்த நல்லாட்சி ஏற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

(வெளியீடு:அறிவுப்பண்ணை, 11.1.1969)