அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உணர்ச்சி வெள்ளம்!
சுதந்திரத் திருநாள்
1

இதுவரைக்கும் சுதந்திர நாள் விழாக்களில் அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த அமைச்சர்கள் 1967 தேர்தலுக்குப் பிறகு பதவி நீங்கிய காரணத்தால் இந்தச் சுதந்திர விழா அமைச்சர்கள் இல்லாமலேயே நடைபெறுமோ என்ற அச்சம் இந்த விழாவின் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது.

யார் அமைச்சர்களாக வந்தாலும்-நாட்டின் சுதந்திர நாள் கொண்டாடப்படும். அந்த விழாவில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்டத்தான் சுதந்திர நாள் விழாவில் இந்த அமைச்சரவை கலந்து கொள்கிறது. நாங்கள் ஏன் சுதந்திர நாளைக் கொண்டாடுகிறோம் என்ற ஐயப்பாட்டிற்கு நான் தரும் இந்த எளிய விளக்கமாகிலும் புரியும் என்று நம்புகிறேன்.

இப்படியொரு சுதந்திரநாள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது இருபதாண்டுகால ஆசை. 1947 ஆம் ஆண்டே அன்று நான் இருந்த கட்சித் தலைமைக்கு எதிராகச் சுதந்திர நாள் கொண்டாடப்பட வேண்டியதுதான் என்று எழுதிக் கோபதாபத்திற்கெல்லாம் ஆளாக்கப்பட்டேன். அப்போது சுதந்திர நாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணமிருந்தாலும், அப்போது கலந்து கொண்டிருந்தால் சாதாரண அண்ணாத்துரையாகத்தானே கலந்துகொள்ள வேண்டியதிருக்கும். ஆனால் இன்று முதலமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டாலும், 20 ஆண்டுகால ஆசைக் கனவு நிறைவேறுகிறது என்ற மனநிறைவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் திருநாளில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தோருக்கும் உயிர்த்தியாகம் செய்யாவிட்டாலும் பல தியாகத் தழும்புகளை ஏற்று உயிர் வாழ்ந்து கொண்டு வதைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தியாகிகளுக்கும் நமது மனம் நிறைந்த மரியாதையை-பேரம் பேசாத மரியாதையை பயன் கருதாத மரியாதையைத் தெரிவிக்கிறேன்.

தென்னை மரத்தின் அடியில் (தாளில்) சாதாரணத்தண்ணீர் ஊற்றினாலும் அதன் உச்சிச் சுவைமிக்க இளநீரைத் தருவது போல் அந்தத் தியாகிகள் எதையும் எதிர்பாராமல் பணிபுரிந்து நம்மை யெல்லாம் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார்கள். இத்தகைய தியாகிகளுக்கு மரியாதை செய்வதில் தி.மு.கழகம் என்றும் தயக்கம் காட்டியதில்லை. காட்டப் போவதுமில்லை!

நாட்டிலே ஆட்சி ஒரு கட்சியிடமிருந்து இன்னொரு கட்சியிடம் செல்லலாம். தலைமையிலே மாறுதல் வரலாம். ஆனால் சுதந்திரம் என்றென்றும் நிரந்தரமானது. சுதந்திரத்தைப் போற்றுவது பேச்சினால் மட்டுமல்ல, செயலினாலும் இருக்க வேண்டும், ஒரு நாளில் ஒரு விழாவில் மட்டுமல்ல! எல்லா நாட்களிலும் போற்றப்படுவது, விரும்பி வரவேற்கப்பட வேண்டியது.

யார் கட்டளையிட்டார்கள் சிதம்பரனாருக்கு-செக்கிழுக்கும் துன்பம் ஏற்கும் காரியத்தைச் செய்யச் சொல்லி? யாரும் கட்டளையிடவில்லை.

‘திருப்பூர் குமரனுக்கு, போலீசார் குண்டாந்தடியால் அடிப்பார்கள், ரத்தம் குபுகுபு என வரும் போ!’ என்று யார் கட்டளையிட்டார்கள்? யாரும் கட்டளையிடவில்லை!
உள்ளத்திலே ஏற்பட்ட ஓர் உணர்ச்சி-தூய உணர்ச்சி தூய ஒரு நோக்கத்திற்காக அவ்விதம் செய்யச் சொல்லிற்று! அந்தத் தூய உணர்ச்சியை-தூய நோக்கத்திற்காக நாமும் பெறுவதற்குத்தான் இந்த விழா!

சுதந்திரம் பெறுவதுகூட எளிது, பெற்ற சுதந்திரத்தைக் காப்பது தான் பெரிது! அதற்காக நமது நினைப்பை-அறிவை-ஆற்றலை-வீர உறுதியை ஒப்படைக்க வேண்டும்.

சீனம் படையெடுத்த போது அந்த வீர உறுதியை இந்த நாடு காட்டியது. இந்த நாடு நம்முடையது, இந்த நாட்டுச் சுதந்திரம் காப்பற்றப்பட வேண்டியது சுதந்திரத்தின் முழுப் பலன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என உறுதி எடுக்கும் விழா இந்த விழா!

1947 ஆகஸ்ட் 15ஆம் நாளில் வந்த முதல் சுதந்திர நாள் கணக்குத் தீர்த்த நாள்! நமக்கும் நம்மை ஆண்ட வேற்று நாட்டவனுக்கும் நமக்கும் நம்மை அடிமையாகக் கொண்டவனுக்கு முள்ள கணக்குத் தீர்த்த நாள்!

ஆனால், 1967 ஆகஸ்ட் 15 ஆம் நாளில் வந்த இந்த சுதந்திர தின விழா கணக்குப் பார்க்கும் நாள்! பெற்ற சுதந்திரத்தால் பெற்ற பயன் என்ன? என்பது பற்றிக் கணக்குப் பார்க்கும் நாள் இந்த நாள்!

குழந்தை கருவிலிருந்து வெளியாகிக் கீழே விழுந்ததும் கருப்பா, சிவப்பா என்று பார்த்து அகமகிழ்வது முதல் கட்டம்! பிறர் எள்ளி நகையாடாதபடி துள்ளி விளையாடி மழலை மொழி பேசி அந்த மழலை குழலையும் விஞ்சக்கூடியது என்று வள்ளுவர் மொழியை மெய்ப்பித்துக் காட்டுவது அடுத்த கட்டம். இந்தக் கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம்.

இப்படிப் பெரிய கணக்குப் பார்க்கும் இந்த வேளையில் சில்லறைக் கணக்கைப் பார்க்க என் மனம் ஒப்பவில்லை. அவர்கள் செய்வதைச் சில்லறைக் கணக்கில் மட்டும் சேர்க்கவில்லை. 1967 பிப்ரவரியிலேயே பைசல் செய்யப்பட்ட கணக்கு அது! சுதந்திரம் பெற்றோம். 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

நாம் அடிமையாயிருந்த காலத்தில் வெளிநாட்டார், இந்தியா தங்கச் சுரங்கம் நிறைந்த நாடுதான். மாடு கட்டிப் போரடித்தால் போதாது என்று சொல்லி யானை கட்டிப் போரடித்த வளமிக்க நாடுதான். இருந்தாலும் அங்கே வறுமை இருக்கிறது. அறியாமை இருள் இருக்கிறது. இல்லாமை இருக்கிறது. போதாமை இருக்கிறது காரணம் வெளிநாட்டார் ஆட்சியிருக்கிறது-என்று பிற நாடுகள் எல்லாம் நம்மிடம் பரிவு காட்டின.

ஆனால் சுதந்திரம் பெற்று 20 ஆண்டுக்காலம் ஆன பிறகு நம்மை நாமே ஆளாகிறோம் என்ற நிலை ஏற்பட்ட பிறகு நான்கு பொது தேர்தல்களை நடத்தி மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைப் போட்டு ஏழ்மையும் இல்லாமையும்-தீண்டாமையும்-கல்லாமையும் இருக்கிறது என்றால் முன்பு நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடத்தானே செய்யும? ஆங்கிலேயன் தான் உன் வளர்ச்சிக்குத் தடை என்றாயே அவன் போய் 20 வருடங்களாகி விட்டனவே, இன்னும் ஏன் வறுமையும், கல்லாமையும் அகலவில்லை என்று கேட்கமாட்டார்களா?

இதை உணருவோமானால் அந்த நிலை போக்கப்பட வேண்டும் என்ற உறுதி பிறக்க-ஆண்டுக்கு ஒரு நாளாகிலும் அனைவரும் கூடிக்கொண்டாட வேண்டிய நாளாக இந்தச் சுதந்திர நாள் இருக்க வேண்டாமா?

ராஜாஜி அவர்களிடம் சிறிது நேரத்திற்கு முன்பு பேசிக் கொண்டிருந்தேன். என்னுடன் முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும் மக்களதைத் தலைவருமான சஞ்சீவரெட்டி இருந்தார்.

அவரிடம் ராஜாஜி அவர்கள், இந்தச் சுதந்திர நாளையாகிலும் ஒரு கட்சிக்குச் சொந்தம் என்று ஆக்கிவிடாமல் நாட்டுக்கு சொந்தம் என்றாக்கி நாடே கொண்டாடும்படி இருந்திருக்கலாம் என்று சொன்னார்.

அதற்குச் சஞ்சீவரெட்டி ‘இருந்திருக்கலாம்’ என்று கூறினார். நான் அந்தக் கேள்விக்கு எதுவுமே கூறவில்லை!

சுதந்திர நாள் ஒரு கட்சிக்கு மட்டும் உரியதல்ல:
சுதந்திரநாள் என்பது கட்சி அடிப்படையில் அல்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படவேண்டியது. அப்படித்தான் பிற நாடுகளில் கொண்டாடுகிறார்கள். பாரிஸ் நகரில் அந்த நாட்டுச் சுதந்திர நாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடு கிறார்கள்! பாடத் தெரிந்தவர்கள் மட்டுமல்ல அந்த ஒரு நாளில் பாடத் தெரியாதவர்களும் நாட்டைப் பற்றிப் பாடுவார்கள்! எங்கெங்கும் விழாக் கோலம் இருக்கும்! மகிழ்ச்சி கொண்டாட்டம் இருக்கும் என்று ஏடுகளில் படித்திருக்கிறேன்.

ஆனால் இங்கு ஒரு கட்சிக்கு மட்டுமே உரியது சுதந்திர நாள் என்று ஆக்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது உலகப் போரில், அழிக்கப்பட்ட நாடுகளான ஜப்பானும் ஜெர்மனியும் பெரும் தாக்குதலுக்காளான ரஷ்யாவும் மீண்டும் தங்களை வளர்த்துக் கொண்டு பிறருக்கும் உதவ முன்வருகின்றன. இத்தனையையும் யுத்தம் நடந்து முடிந்த 15 ஆண்டுகளில் செய்து முடித்தார்கள். 15 வருடத்தில் மயானக் குழியிலிருந்து எழுந்து மாடியில் உலவுவது போன்ற உயர்நிலை அடைய முடிந்தது அந்த நாடுகளால்!

ஆனால் 20 ஆண்டுகளாகச் சுதந்திர நாடாக இருந்தோம். திட்டம் பல போட்டோம். இன்னும் வறுமையிலும் இல்லாமை இருளிலும் உழல்கிறோம். இந்த வறுமையைப் போக்குவதும், அறியாமையைப் போக்குவதும் கூடத்தான் சுதந்திரப் போராட்டத்தின் கூறுகளாகும்.

ஏழை மக்கள் உரிமை பெற தொழிலாளர் உரிமை பெற போராடுவது சுதந்திரப் போராட்டத்தில் ஒரு கூறாகும்!

எல்லோரும் இந்நாட்டு மக்கள், எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னன்-என்ற குறிக்கோளுக்காகப் பாடுபடுவதும் சுதந்திரப் போராட்டத்தின் குறிக்கோளாகும்.

சமாதானத்துக்கு ஓர் அரங்கு
நைல்நதிக் கரையிலும் இஸ்ரேலை யடுத்துள்ள பாலைநிலத்திலும் போர்மூண்டு கொஞ்ச காலத்துக்குள்ளாகவே நாம் ஐ.நா. தினத்தைக் கொண்டாடுவது விந்தையல்ல. ஆனால் அதில் ஆழ்ந்த கருத்து இருக்கிறது. ஐ.நாவுக்குப் பக்கபலமாக இருந்து அதற்கு உறுதியும் ஆதரவும் தேடுவதில் நாம் உறுதியாகயிருப்பதை இது காட்டுகிறது. ஏனென்றால் உன்னத லட்சியமுள்ள ஒரு நிறுவனத்தை அதன் தோல்விகளைக் கொண்டு குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அந்த நிறுவனத்தின் அடிப்படை உணர்ச்சியைக் கொண்டும் அதன் மூலம் ஏற்படும் நம்பிக்கையைக் கொண்டுதான் அதை அளவிட வேண்டும், ஐக்கிய அரபுக் குடியரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் ஐ.நா. வால் தடுக்கமுடியவில்லை என்பதும், வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவர அதனால் இயலவில்லை என்பதும் உண்மையே! ஐ.நா. செயலற்றுவிட்டது என்று நிரூபிப்பதற்குச் சில சம்பவங்களை எடுத்துக்காட்ட முடியும். அத்தகைய சம்பவங்களைச் சிலர் எக்களிப்போடும் வேறு சிலர் வேதனையோடும் சுட்டிக் காட்டவும் செய்கிறார்கள். ஆனால் எங்கேயாவது மோதலோ வலுத்தாக்குதலோ துவேஷமோ இருந்தால் உலக மக்களெல்லோரும் ஐ.நா.வையே நினைத்துக் கொள்கிறார்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயமாகும். இது ஓர் அற்புத உண்மை. ஏனென்றால், பல நாடுகளைச் சேர்ந்த மக்களின் இதயத்தில் நம்பிக்கை ஒளியை ஊட்டும் ஸ்தாபனமாக ஐ.நா. விளங்குவதை இது காட்டுகிறது. உலக மக்கள் ஐ.நா.ஸ்தாபனத்தைச் சமாதானத்துக்கும் நல்லுணர்வுக்குமான ஒரே கருவியாகவும், போரையும் ஆக்கிரமிப்பையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நம் வசம் உள்ள ஒரே நிறுவனமாகவும் கருதுகிறார்கள். ஐ.நாவுக்குத் தோல்வி ஏற்படும்போது நம்மில் பலருக்கு உண்டாகும் கோபமும் வேதனையுமே அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கப்படும் மிகச் சிறந்த பாராட்டாகும். போரைத் தவிர்த்து அமைதியை நிலைநாட்டு வதற்கும், ஆக்கிரமிப்பை ஒழித்து நீதியை நிலைநிறுத்துவதற்கும், கொடுங்கோலனின் முன்னேற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் உலகத்துக்கும் ஒரு நிறுவனம் தேவை என்பதே இதன் கருத்து. நான் விரும்பும் பலன் ஐ.நா. மூலம் கிடைக்காமல் போகும் போது நமக்குக் கோபமும் வேதனையும் உண்டாவதற்கு இந்த உயர் நம்பிக்கை தான் காரணம். உலக அமைதியும் நல்லுணர்வும் மிகமிக அவசியம் என்பதில் நமக்குள்ள நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம் ஐ.நா.வை வலுவாக்க வேண்டும். இதற்காகவே ஐ.நா.தினம் கொண்டாடுகிறோம். கலைஞன் வாசிக்காவிட்டால் கூட யாழ் யாழ்தான். அது போலவே, பட்டை தீட்டாவிட்டாலும் வைரம் வைரம்தான். உன்னதக் குறிக்கோளுடன் இன்று நம் வசம் உள்ள ஒரே நிறுவனம் ஐ.நா.வாகும். அதன் தோல்விகளும் பலவீனங்களும் அந்த நிறுவனத்தின் அவசியத்தையோ, முக்கியத்தையோ குறைக்கவில்லை. குறைக்கவும் முடியாது. அதே சமயம், சுற்றிலும் விபரீத எண்ணங்களும், அணு ஆயுதங்களும், பேராசைக் கண்களும், ஆக்கிரமிப்பு நோக்கமும் கொண்ட நாடுகள் வஞ்சகப் பேச்சாலும் மிரட்டலாலும் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த நினைக்கும் நாடுகள் நிறைந்திருக்கையில் இந்த நிறுவனம் அமைதிக்காகவே திட்டமிட்டு அமைதிக்காகவே விண்ணப்பம் விடுக்கிறது என்றால் இந்தக் காட்சி எல்லோருக்கும் பெருமதிப்பைக் கொடுப்பதாகும். படைக்கலங்களும், படை அணிவகுப்புகளும், படைத் தலைவர்களும், ராஜதந்திரிகளும், அணுகுண்டுகளும், ஹைட்ரஜன் குண்டுகளும் நிறைந்த ஓர் உலகத்தில் ஐ.நா. செயலாற்றி வருகிறது. வினோதமான காட்டுமிராண்டி நாடுகளில் ஞானிகள் அவதிப்படுவது போல் ஐ.நா. அவதிக்கும், அவமானத்திற்கும், அவதூறுக்கும், தூஷணைக்கும் இலக்காகிறது. ஆயினும், காட்டு மிராண்டியை நாகரிகப்படுத்துவதற்கும் கோபக்காரர்களைச் சாந்தப் படுத்துவதற்கும், பேராசைக்காரர்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், இவர்களுக்கெல்லாம் அமைதியும் நீதியும் நிறைந்த வழியைக் காட்டுவதற்கும், ஐ.நா. விடாமல் முயன்று வருவது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். தனது முயற்சிகள் அனைத்திலும் ஐ.நா.வெற்றி அடைந்துவிடவில்லை.

ஐ.நா.வைக் கேவலமாக நடத்தும் தென்னாப்பிரிக்கா, ரொஷீயா, போர்ச்சுகல் போன்ற நாடுகள் சிலவும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஐ.நா.பின் வாங்க மறுக்கிறது. மனித மனத்தில் இயல்பாக உள்ள கண்ணியத்தைத் தூண்டுவதற்கு அது நம்பிக்கையோடு முயன்று வருகிறது. அரியதொரு சேவை ஆர்வத்துடன் இந்த நிறுவனம் சென்ற 22 ஆண்டுகளாக உலக சமாதானக் கொடியைத் தூக்கிப் பிடித்து வந்திருக்கிறது.

ஐ.நா. முதன் முதலில் நிறுவப்பட்டபோது நெடிய நோக்கில்லா மக்கள் உலக சமாதானத்துக்கு ஒரு நிறுவனம் ஏற்படுவது என்ற கருத்தையே ஏளனம் செய்திருக்கக்கூடும். பழைய சர்வதேசச் சங்கம் தோன்றி மறைந்த வேதனைமிக்க கதையின் நினைவுகள் அப்போது நிழலாடிக் கொண்டிருந்தன. சர்வதேசச் சங்கம் தோல்வியடைந்திருந்துங்கூட நிதானமும், ஆத்மீக உணர்வும் கொண்டு பெரியோர்கள் இரண்டாவது உலகப் போரால் சீர்குலைந்திருந்த ஓர் உலகத்தில் ஐ.நா.ஸ்தாபனத்தை நிறுவுவதற்குக் கூடினார்கள் என்றால் அது வியப்புத்தரும் விஷயம்தான். உண்மையில் ஐ.நா. பல நாடுகளின் தலைநகரங்களுடைய சிதைவுகளின் மேல் நிறுவப்பட்டதாகக் கூடச் சொல்லலாம். பிணங்களும், நடைப் பிணங்களும், ஊனமுற்றோரும், அங்கஹீன முற்றோரும், பார்வை இழந்தவர்களும், அனாதைகளும் இத்தகையதொரு சூழ்நிலையிலேயே இது உருப்பெற்றது. நீதியின் இறுதி வெற்றியிலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் இந்தத் திட்டத்தைத் துவக்குவதற்காகத் தைரியத்தையும், விவேகத்தையும் கொடுத்திருக்க முடியாது. புயலால் கொந்தளிக்கும் கடலிலே அபாயம் நிறைந்த ஒரு பிரயாணத்தை மேற்கொள்வது போலிருந்தது அது. கப்பல் சிதைவதைத் தவிர வேறு வழியேதும் இல்லாத நிலை. ஆம், பொங்கும் அலைகளையும் கடல் நீரின் பலமான போக்கையும் தைரியத்துடன் எதிர்த்து நின்று, உதவி தேவைப்படுவோருக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் கொடுத்து இந்தக் கப்பல் இருபத்திரண்டு ஆண்டுகளாகக் கடலிலே பிரயாணம் செய்து வருகிறது. இந்த ஸ்தாபனத்திற்குப் பாதகமான அம்சங்களையும், அதைச் சூழ்ந்து இருக்கும் அக்கறையின்மையையும் கருத்தில் கொண்டுதான் இந்த மதிப்பிட வேண்டும். இப்படி செய்தால்தான் சரியாக மதிப்பிட முடியும்.

தாக்குவதற்கோ, தாக்குதல்களை எதிர்ப்பதற்கோ எப்போதுமே நாடுகள் ஆயத்தமாக இருக்கக்கூடிய நிலையிலே தூதுவர்களுடன் உளவாளிகளையும் அனுப்பத் தயாராக இருக்கும் நிலையிலே எல்லைகளைத் தகர்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தலைநகரங்களில் ஆடம்பரமான வரவேற்புகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் நிலையிலும், உலகம் இன்று இருக்கிறது. இந்த நிலையிலும் அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேசியக் கொடிகள் பறந்து கொண்டிருக் கின்றன. சம கௌரவத்தோடு பறக்கின்றன. பல்வேறு நாடுகளாக இருப்பினும் ஒரே உலகத்தைச் சேர்ந்தவை, தனித்தனியாக வாழ்கின்ற போதிலும், பொதுமான குறிக்கோளைக் கொண்டவை, பொதுநலனுக்காகத் திரட்டுவதற்கென வளமும் வலிமையும் கொண்டவை. மனிதனை மேலும் மகிழ்ச்சியுள்ள நிறைவாழ்வு வாழச் செய்யும் அச்சத்திலிருந்தும், பஞ்சத்திலிருந்தும், நோயிலிருந்தும், அறியாமையிலிருந்தும், வன்முறையிலிருந்தும், காட்டுமிராண்டித் தனத்திலிருந்தும் விடுபடச் செய்யவும் சுருங்கச் சொன்னால் மனிதனுக்கு உரியது எதுவோ அதைக் கொடுக்க ஒரு மனிதன் என்ற கௌரவத்தைக் கொடுக்கும் பொதுவான சிறப்பான பணிக்காகப் பல்வேறு நாடுகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒன்று சேர்க்கும் பொருட்டும் போரை ஒழித்து அமைதியை நிலைநாட்டி, நட்பையும் தோழமையையும் உருவாக்கி வளர்த்து ஒருவருக்கொருவர் உணர்ந்து மதித்து, நடக்கக்கூடிய வகையில் உலகையே மேலும் சிறப்புறச் செய்யும் புனிதமான பணியில் பங்கு வகிப்பவை என்று உலகுக்குப் பறைசாற்றுகின்றன. மனிதனை மிருகமமாக்குவதும், சோலைவளங்களைப் பாலைவனங்களாக்கு வதும், நகரங்களைச் சிதைவுகளாக்குவதும், சுபிட்சத்தை வறுமையாக்குவதும் ஆக்கிரமிப்பாளரைத் தவிர வேறு யாராகத்தான் இருக்க முடியும்? இத்தகையதொரு ஆக்கிரமிப்பாளரைக் கண்டுபிடிப்பதுதான் ஐ.நா.வின் நோக்கம் ஏனென்றால், அவன் தனது உருவத்தையும், சொல்லையும் மாற்றக்கூடிய கபடமானவன். அவனைக் கண்டு பிடித்து, வெளிக் கொணர்ந்து மற்றவர்களின் நல்லெண்ணத்தால் கிடைக்கும் ஆற்றலைச் சேர்த்து அவனை இந்த முயற்சியிலிருந்து தடுக்கும் பொருட்டு ஐ.நா.விழிப்புடன் இருக்க வேண்டும். இது எளிதான காரியமல்ல. அபாயங்கள் பல நிறைந்த ஒரு வேலை. ஆற்றலும் தியாகமும் தேவைப்படும் ஒருவேலை இது. தோல்விகளும், கண்டனமும், குற்றச்சாட்டுகளும் இருந்தும் கூட இந்தப் போராட்டத்தை ஏற்று நடத்த படைவீரர்கள் இருக்கிறார்கள் என்பதை இதன் 22 ஆண்டுக்கால வாழ்க்கை தெளிவாக்குகிறது. நல்லுள்ளங்களுக்கு இது நம்பிக்கை அளித்திருக்கிறது. காலஞ்சென்ற போப் ஜான், உள்ளத்தில் உவகையுடன் கூறியிருக்கிறார். ஐ.நா. ஸ்தாபனத்தின் பணிகளில் பிரம்மாண்டமான அளவுக்கும் அவற்றின் புனிதத் தன்மைக்கும் ஏற்ப இந்த ஸ்தாபனத்தின் அமைப்பும் அது பின்பற்றும் வழிமுறைகளும் வளர வேண்டும் என்பது தான் நமது மனப்பூர்வமான விருப்பம். ஒவ்வொரு மனிதனும் மனிதன் என்ற முறையில் தனக்குள்ள கௌரவத்திலிருந்து உருவாகும் உரிமைகளைப் பயனுள்ள விதத்தி“ல பாதுகாக்கும் தன்மையை இந்த ஸ்தாபனத்தில் காணக்கூடிய நாள் வரக்கூடும்.

மனிதனின் நன்னெறிகளை மறுக்கிறது போர். அறிஞர்களும் ராஜதந்திரிகளும், கவிஞர்களும், மதக்குருக்களும், எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றி நடை போட்டு வரும் படைத் தளபதிகளும் போரைக் கண்டிக்கிறார்கள். போர் கொடியது என்றும், மனித கௌரவத்தை மறுக்கிறது என்றும் அவர்கள் கண்டனம் செய்கிறார்கள். இருப்பினும் போருக்குப் பின் போர் ஏற்பட்டது. ஏனென்றால், போர்க் களத்தைவிடச் சிறந்ததொரு அரங்கு இருக்கவில்லை. தகராறைத் தீர்ப்பதற்கு வேட்டுச் சத்தத்தைவிடச் சிறந்ததொரு வாக்குவாதம் இருக்கவில்லை. தகராறைத் தீர்த்து உரிமையை நிலைநாட்ட வேறு வழி பிறக்கவில்லை.

ஐ.நா.ஸ்தாபனம் இன்றைய அரங்காக விளங்குகிறது. இது முற்றிலும் போதுமானது என்று சொல்ல முடியாது. ஆனால் பேச்சுக்களினாலும் அதன்படி நடந்து செயல்புரிவதனாலும் போரைத் தவிர்த்துத் தகராறைத் தீர்ப்பதற்கான ஒரே அரங்காக இருக்கிறது. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தங்களைப் பிரிக்கும் பிரச்சினைகளை ஆராய்கிறார்கள். உலக மக்கள் முன் தங்கள் நிலையை எடுத்துக் கூறுகிறார்கள். மனிதர்களைக் கொலை செய்வதற்குப் பதிலாகத் தங்கள் நிலைக்காக வாதாடுகிறார்கள்.

உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே உண்டான உறவு முறைகளில் பின்பற்ற வேண்டிய நெறியை ஐ.நா.வகுக்கிறது.

தகராறுகளைத் தீர்ப்பதற்காக ஐ.நா.ஸ்தாபனம் சமாதானத் தூதுவர்களை அனுப்புகிறது. உறுப்பு நாடுகள் தகராறுகளைத் தீர்ப்பதற்காக இந்த முறையை ஏற்றுக்கொண்டுள்ள என்பதே வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால், போரை ஒழிக்க வேண்டும் என்பதைக் கொள்கையளிவிலாவது ஏற்றுக் கொள்ள உறுப்பு நாடுகள் ஆயத்தமாக இருப்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது.

மனப்பூர்வமாக உணர்வு இல்லாமை, வல்லரசு மண்டலங்களின் செல்வாக்கு, உறுதியின்மை, உறுதி கொள்வதில் காலதாமதம் ஆகியவை இந்த முறையைக் குலைத்துப் போன மூளச் செய்கின்றன. ஆனால், ஐ.நா.வலுப்படுத்தப்படுமேயானால் உலக மக்கள் அனைவரும் அதன் நன்னெறிகளுக்குப் பக்கபலமாக நிற்பார்களேயானால் அமைதிக்காகப் போராடுமாறு தங்கள் நாடுகளை வற்புறுத்துவார்களேயானால், இதனால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளைப் பெருமளவு குறைக்க முடியும்.

ஐ.நா.வை வலுப்படுத்தி அதற்குப் பக்கபலமாக நிற்குமாறு ஒவ்வொருவருக்கும் வேண்டுகோள் விடுப்பதற்காகவே இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறோம். மதிப்புக்குரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் சுட்டிக் காட்டியிருப்பதைப் போல புதிதாய் உருவாகிவரும் உலக சமுதாயத்திற்கு ஆத்மாவை, மனச்சாட்சியைக் கொடுக்க முடியும் என்று ஐ.நா.நம்புகிறது.

ஆனால், ஐ.நா.ஸ்தாபனம் போரைத் தடுத்து அநீதியை ஒழிக்கும் திறமையுள்ள ஸ்தாபனமாக மாறவேண்டுமென்றால், ஒரு தடவை உட்ரோ வில்சன் குறிப்பிட்டுள்ளது போல அது இமைப்பொழுதும் உறங்காத கண்ணாக இருக்க வேண்டும். எங்கும் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்கும் கண்ணாகத் திகழ வேண்டும்.

ஐ.நா. ஸ்தாபனம் வலிமையற்றது. ஆதலால் அதைப் பராமரிக்க வேண்டாம் என்று வாதாடுவது, அந்தக் கண்ணையும் குருடாக்குவதற்கு ஒப்பாகும். பிறகு இருளில் அலைந்து திரிந்து அழிவைத்தான் வரவேற்க வேண்டியிருக்கும். ஐ.நாவின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஸ்ரீ ஜஸன்ஹோவர் கூறியதைவிட வேறு எதைத்தான் ஆதாரமாகக் காட்ட முடியும்? வெற்றிக்கொடி நாட்டிய வீரரான அவர் கூறுகிறார். படை பலத்தைப் பயன்படுத்தித் தேசத் தகராறுகளைத் தீர்க்கலாம் என்று ஐ.நா.ஸ்தாபனம் எப்போதாவது ஒப்புக்கொண்டுவிட்டால் அப்போது அந்த ஸ்தாபனத்தின் அடிப்படையையும், உலக முறைமை ஒன்றை உருவாக்குவதற்கான நமது சிறந்த நம்பிக்கையையும் அழித்திருப்போம் அது எல்லோருக்குமே அழிவாகத்தான் இருக்கும்.

ஐ.நா.வின் உடன் பிறந்த குறைகளையும், பிறகு சேர்ந்த குறைகையும் நன்கு உணர்ந்திருந்த பண்டித ஜவஹர்லால் நேரு, ஐ.நா.வுக்காக மிகப் பலமாக வாதாடினார். ஐ.நா.வின் இயல்பை மாற்ற முயன்றால் அமைதிக்காகப் பாடுபடும் மேலும் வலுவான ஒரு அமைப்பை இதனால் உருவாக்க முடியாது. ஏற்கனவே இருக்கும் சிறந்த அமைப்பைக் குலைப்பதாகத்தான் அதற்குப் பொருள். இதற்குப் பதிலாக வேறு எதையும் உருவாக்க முடியாது.

ஆதலால்தான் இந்த ஸ்தாபனத்தை வலுப்படுத்தி உள்ள விவகாரங்களில் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பாக மாற்ற வேண்டுமே ஒழியப் போர் வெறியர்களின் வெறியாட்டத்தை அழிக்கக்கூடிய நிலையில் உலகை விட்டுவிடவேண்டாம் என்று சிந“தனையாளர்கள் அனைவரும் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறார்கள். ஐ.நா.தலைமைக் காரியதரிசி ஊதாண்ட் கூறியிருப்பதைப் போல எவ்வளவு வலிமை இருப்பினும், எவ்வளவு செல்வம் கொழிப்பினும் எந்த ஒரு நாடும் இன்று தன்னிறைவு பெற்றதாக இருக்க முடியாது.

தனித்து வாழ்வதோ, மற்ற நாடுகளின் சிதைவுகளுக்கு மேல் இருப்பதோ சாத்தியமல்ல என்பதைப் பல நாடுகளும் இப்போது உணர்ந்துள்ளன. மற்ற நாடுகளுடன்தான் வாழ முடியும். மனித சகோதர உணர்வு என்னும் நன்னெறியை ஏற்று அதன்படி நடந்தால்தான் இது சாத்தியமாகும்.

ஐ.நா.ஸ்தாபனம் பலவீனமாக இருந்துங்கூடப் பல பகுதிகளில் போரைத் தடுத்திருக்கிறது. தகராறுகளைப் பரவ விடாமல் தடுத்திருக்கிறது. அமைதியைத் துரிதமாக நிலைநாட்டியிருக்கிறது. ஆத்திரமடைந்த நாடுகளுக்கு ஆறுதல் சொல்லி அமைதியூட்டுவதற்காகக் காவல் நிலைகளையும் திட்டங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயும், ஸிரியாவுக்கும் ஜோர்டனுக்கும் இடையேயும் ஐ.நா. அமைதிக் கண்காணிப்பு ஸ்தாபனம் 1949 ஆம் ஆண்டிலிருந்து கண்காணித்து வருகிறது. சைப்ரஸ் வாழ் கிரேக்கர்களுக்கும், சைப்ரஸ் வாழ் துருக்கியர்களுக்கும் இடையே 1964 ஆம் ஆண்டிலிருந்தே 4,000 பேர் கொண்ட அமைதிப் பராமரிப்புப் படை சமாதானத்தை நிலைநாட்டி வருகிறது. காஷ்மீரில் போர் நிறுத்தத்தோடு நெடுகிலும் ராணுவப் பார்வையாளர் குழு இருக்கிறது.

இவ்வாறாக இந்த ஸ்தாபனம் படிப்படியாகத் தனது மதிப்பை நிரூபித்து வருவதையும், விவேகமுள்ள எல்லாருடைய விசுவாசத்தை ஈர்த்து வருவதையும் காணலாம். உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் இயங்கிவரும் ஐ.நா.ஸ்தாபனம் சமாதான லட்சியத்துக்காகத் தனது அளவற்ற திறமைகளையும் ஆதார வசதிகளையும் பயன்படுத்துவதற்கு மனிதன் வகுத்துள்ள மிகச்சிறந்த சர்வ தேச ஒத்துழைப்பு ஸ்தாபனமாகும் என்பதைக் காலம் எடுத்துக் காட்டியிருக்கிறது.

இந்த ஸ்தாபனத்தின் தடுப்புச் சக்தியானது நமது ஆதரவைப் பெற்றுவிட்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி, மனித உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றுக்கான பல்வேறு பிரிவுகள் மூலம் இந்த ஸ்தாபனத்துக்குள்ள குணப்படுத்தும் சக்தியானது நமது அன்புக்குப் பாத்திரமாகி விட்டிருக்கிறது.