அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உணர்ச்சி வெள்ளம்!
சுதந்திரத் திருநாள்
3

நூல்கள் இன்னும் தேவை
உலகத்தமிழர் மாநாட்டிற்கு வந்த தமிழ்ப்பற்று கொண்ட தமிழன்பர்களுக்குத் திருவாரூர் தியாகராசன் இங்கு ஒரு அரிய விருந்து கொடுத்தார்.

அதே திருவாரூரைச் சார்ந்த தம்பி கருணாநிதி எழுதிய சிலப்பதிகார நாடகக் காப்பிய வெளியீட்டு விழாவும் இங்கே நடைபெறுகிறது.

கருணாநிதி பேசும்போது நாங்கள் இருவரும் திருவாரூரைச் சார்ந்தவர்கள் என்று கூறினார்.
நம்முடைய நண்பர் பக்தவத்சலம் அவர்கள் தானும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் பெண் எடுத்தது திருவாரூர் என்று சொல்லித் தாமும் திருவாரூரைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டார்.

அவர் வேறு ஒன்று கூறுவார் என்று எதிர்பார்த்தேன். தியாகராசனும் கருணாநிதியும் திருவாரூர் என்று கூறியது போல் விழாவுக்குத் தலைமை தாங்குகின்ற அவரும் நானும் தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறுவார் என எதிர் பார்த்தேன். திருவாரூரிலும் தஞ்சையிலும் பிற பகுதிகளிலும் இருக்கும் தியாகராசன் போன்றவர்கள் தொண்டை மண்டலத்திலிருந்து சென்றவர்கள்தான். நெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் சென்றதால் பந்தங்கள் அறுபட்டிருக்கலாம். ஆனால் இப்படிப் பலரைத் தொண்டை மண்டலம் அனுப்பிக் கொடுத்திருக்கிறது என்பதும் சோழ நாடு பலரை இங்கு அனுப்பிக் கொடுத்திருக்கிறது என்பதும் தமிழ்நாட்டினுடைய வரலாறாக இருந்திருக்கிறது.

யார் எந்த நாட்டைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் தமிழர்கள் என்ற முறையில் நாமெல்லாம் பெருமைப்படவேண்டும்.

தமிழ் மொழியின் மாண்பைப் பற்றி நாம் மட்டுமல்ல அனைத்து நாட்டு அறிஞர்களும் இங்கு வந்து எடுத்துரைத் திருக்கிறார்கள்.

இத்தகைய ஏற்றமிகு தமிழ் மொழிக்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற பெருமித உணர்ச்சி நமக்கு இயற்கையாக வரத்தான் செய்யும்.

அந்த மொழியின் ஏற்றத்திற்கு ஏற்ற அளவில் நாம் ஏற்றம் பெற்றிருக்கிறோமா என்பதுதான் ஐய்பபாடே தவிர அந்த மொழியினுடைய ஏற்றம் குறித்து ஐயப்பாடு கிடையாது.

தமிழிலுள்ள காப்பியங்களும் செய்யுள் நூல்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால் உருவத்திலேயும் நாடக வடிவத்திலேயும் கட்டுரை வடிவத்திலேயும் பல நூல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன.

அந்த வகையில் தம்பி கருணாநிதி சிலப்பதிகாரத்தை நாடக உருவில் தந்திருக்கிறார். தமிழ் கற்ற அனைவரும் இதனைப் பாராட்டுவார்கள். தம்பி கருணாநிதியின் சிறந்த தமிழ்நடை அனைவரும் உணர்ந்தது.

அவர், சில விஷயங்களைப் பற்றியும் சில போக்கைக் கண்டித்தும் எழுதுகிற தமிழாக இருந்தால் கூட படிக்கும் போது கண்டிக்கப்பட்டவர்கள் கூட அதைப் படிக்கிறபோது நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நம்மைத் தவறாகப் புரிந்து கொண்டல்லவா எழுதியிருக்கிறார் என்று கருதிக் கொண்டிருப் பார்களே தவிர அவரது தமிழ் நடையிலே குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். அவரது நடையில் இலக்கிய அறிவும் கலைத்திறனும் இருக்கும். அவர் இந்த நாடகக் காப்பியத்தை எழுதுவதற்கு முற்றிலும் பொருத்தமானவர்.

கருணாநிதியின் தமிழ் நூலை ஆங்கிலத்தில் நண்பர் டி.ஜி.நாராயணசாமி நல்லமுறையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த் திருக்கிறார்கள்.

செய்யுள் வடிவமாக இருக்கும் சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியமாக ஆக்கிய பிறகு அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது, அதிலும் செய்யுள் உருவில் தருவது என்பது கடின மானது. ஆனால் அச்சுவை கெடாமலும் பயன் மிகுந்தும் காணப்படுகிற அளவில் ஆங்கிலத்தில் இந்நூல் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

இன்னும் கருணாநிதி தமிழ்ப்பெருங் காப்பியங்களை நாடகங்களாக ஆக்கித் தரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதில் பெருமைப் படுகிறேன்.

இப்படிப்பட்ட தமிழின் பெருமைபற்றி மாநாடுகளில் கூடிப் பேசுவதில் மட்டும் திருப்தியடையாமல் தமிழ் இலக்கியத்தின் கருத்துக்களை எல்லா மக்களும் உணரத்தக்க விதத்தில் இனிய எளிய நூல்களாக்கி வெளியிடுவதில் முனைந்து நிற்க வேண்டும் அந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ள கருணாநிதியை மீண்டும் வாழ்த்துகிறேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைப் பெற்றுக் கொண்ட ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த நண்பர் ஜோர் தான் அணிந்திருந்த தமிழ் உடையைப் பார்த்தால் அவரும் திருவாரூரோ என்று எண்ணும் அளவில் இருந்தது.

தமிழ்நூலைப் பெற்றுக் கொண்ட இலங்கை அமைச்சர் திருச்செல்வத்தின் துணைவியார் திருமதி.திருச்செல்வம் இலங்கையைச் சார்ந்தவர் என்பதைவிட இலங்கையிலுள்ள தமிழன்பர் குடும்பத்தைச் சார்ந்தவர் எனலாம்.

தமிழர் என்று அவர்களை நான் சொல்வதுகூட அவர்கள் நாட்டு அரசியலில் அருவெறுப்பையும் அச்சத்தையும் உண்டாக்கிவிடுமோ? என்பதால் அப்படிக் கூறத் தயக்கப்பட்டேன். இலங்கை வெளிநாடு என்றாலும் நமக்கும் அவர்களுக்கு இடையே இருப்பது இருபது மைல் தொலைவுதான்!

வாடைக்காற்று கொஞ்சம் வேகமாக அடித்தால்கூட அந்தக் காற்று இந்தப் பக்கம் இந்தக் காற்று அந்தப் பக்கம் என்ற நிலையில் இருப்பவர்கள். அப்படி அடிக்கிற அந்தக் காற்றும் நல்ல காற்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது கவலை.

சிலப்பதிகார நாடகக் காப்பியத்தை ஆக்கிதந்த தம்பி கருணாநிதிக்கு மீண்டும் நமது நன்றி.

சீக்கியர் மாண்பு
குருகோவிந்த சிங்கின் 301 வது பிறந்தநாள் புனிதத் தன்மையுடைய நாளாகும்.

சமூகத்தாரிடையே தோழமையையும் உறுதியையும் வளர்த்ததோடு சீக்கிய சமூகம் பிறருக்குப் பணி செய்ய வேண்டுமென்பதையும் போதித்தது.

அமிர்தசரத்தில் உள்ள சீக்கியக் கோயிலுக்கு நான் 3-4 தடவைகள் போயிருக்கிறேன். அந்தக் கோவிலுக்குள் சென்று வரக் கூடிய எவரும் சீக்கிய மதத்திடம் மிகுந்த மரியாதையுடனே திரும்புவர். அத்தனை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் அக்கோயில் வைக்கப்பட்டுள்ளது.

அக்கோயிலுக்குச் சென்றிருந்த போது அங்கே நான் ஒரு காட்சியைக் கண்டேன். நன்றாக உடுத்தியிருந்த ஒருவர் அக்கட்டிடத்தின் தாழ்வாரங்களை எல்லாம் சுத்தம் செய்ததோடு அங்கிருந்த காலணிகளையெல்லாம் துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஏனென்று நான் அவர் அருகில் சென்று கேட்டேன். பண்புகள் எல்லாவற்றிலும் தன்னடக்கமே மிக உயர்ந்த பண்பு என்பதைச் செயலாம் உணரவே இவ்வாறு செய்கிறேன் என்று அவர் சொன்னார்.

சீக்கிய மதமானது மக்கள் அமைதி கிடைக்காதா என்று கேட்டு வாழ்க்கையின் மீதே வெறுப்புற்று இருந்த காலத்தில் தோன்றியது.

தங்களது மக்கள் ஒரு சமுகமாகக் கூடிப்பிணைந்து வாழவும் மக்கட்சமுதாயத் தொண்டினுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவுமே சீக்கிய சமயம் தோன்றிற்று. சீக்கியர் கடின உழைப்பாளிகள். நான் இங்குமட்டுமல்லாமல் தூர கிழக்காசிய நாடுகளில் கண்டவரை சோம்பேறி என்று சொல்லிடத் தக்க ஒரு சீக்கியரையேனும் காணமுடியவில்லை.

பணி தனக்கென மட்டுமல்லாமல் சமூக முழுமையும் அதன் மூலமும் நாடு முழுமையும் பயன்படைய வேண்டும் என்ற மனோ நிலையுடனே அவர்கள் பணி செய்கின்றனர். தமிழர்களாகிய நாங்களும் அத்தகைய உயர்ந்த கோட்பாடுகள் உடையவர்களாயிருந்தோம். சமுதாயத் தொண்டே தமிழர் பண்பாட்டின் மையமாக விளங்கிற்று.

இதனால் தான் தமிழகம் சீக்கியர்களை அனைத்துச் செல்கின்றது. சீக்கியப் பிரமுகர் எங்கள் குழந்தைகளெல்லாம் இங்கேதான் பிறந்தன என்றார்! ஒன்றைச் சொல்கிறேன் குழந்தைகள் மட்டுமல்ல, பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் இங்கேயே பிறக்கட்டும். அக்குழந்தைகளெல்லாம் சுவாச்சிக்கிற முதல் காற்று தமிழ்மணங் கமழும் காற்றாக இருக்கட்டும். தமிழ் மண்ணில் அவர்கள் தவழட்டும். நிரந்தரமாக இங்கேயே இருக்கலாம். வேறு சில சமுகத்தாரைப் போல கவலைகொள்ளத் தேவையில்லை.

சீக்கியர் வீரம்:
சீக்கிய நெறி சுரண்டலை அனுமதிப்பதில்லை. பிறர் உழைப்பின் பலனைக் கொண்டு வாழுவதை அனுமதிப்பதில்லை. எனவே சீக்கிய நண்பர்களின் உறவு தமிழ் மக்களுக்கு மதிப்பளிக்கும் ஓர் உறவாகும். என்றேனும் ஒருநாள் தமிழ் சீக்கிய பண்பாடுகள் இணைந்தியங்கிட வகை காண்போம்.
சீக்கிய மக்களது வீரம் போற்றற்குரியது. நாட்டின் எல்லையிலே அவர்கள் வீரத்தோடு எதிர்த்து நின்றிரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று எண்ணவே இயலவில்லை. சீக்கியரது வரலாறு புகழுடையதாக இருந்திருப்பின் அவர்களது வருங்காலமும் மேலும் சிறந்த புகழுடன் இருக்கும்.

தமிழக அரசு அவர்களுக்கு ஏதேனும் உதவியாக இருக்க முடியுமென்றால் அதைச் செய்திட நான் தயங்க மாட்டேன். சீக்கிய சமயத்தின் மீது எனக்குள்ள உயர்மதிப்பே இதற்கு காரணம்!

அமிர்தசரஸ் கோயிலின் மாடங்களிலே உள்ள ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். சீக்கிய சமுகமானது எத்தனை துன்பங்களைத் தாங்கி இன்னல்களைக் கடந்து வந்துள்ளது என்பவற்றையெல்லாம் அந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன. அயரா உழைப்பின் மூலம் அவர்கள் இன்றைய மேம்பாடான நிலையை அடைந்தார்கள். தற்காலத் தமிழ் மக்களும் சீக்கியரைப் போன்ற நல்ல பண்புகளைப் பெற வேண்டுமென நான் விழைகிறேன்.

தமிழர் சமயம்:
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே பண்டைத் தமிழ் மக்களின் சமய நெறியாக இருந்தது. சாத்திரச் சடங்குகள் அங்கிருக்கவில்லை. மூடப்பழக்க வழக்கங்கள் இருந்ததில்லை. சீக்கியர் நெறியைப் போலவே தமிழர் நெறியிலும் விக்கிரகங்களுக்கு இடமில்லாதிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்ததாகக் கற்பனை செய்து பார்த்தால் இங்கே இருந்த சமயமும் ஒன்றாகவே இருப்பதை அறிவோம்.

கடவுள் பக்தி இல்லாத என்னை இங்கு அனுமதித்தது பற்றி இங்கு நாளை எவரேனும் கேட்கக்கூடும். மனிதன் மற்றெல்லா வற்றுக்கும் முதன்மையானவனாகவும் கடவுளைத் தவிர வேறு எவருக்கும் மனிதன் அடிமையாகிடத் தேவையில்லை என்றும் சமயம் கூறுமானால் நான் நூற்றுக்கு நூறு சமயவாதியே. இதைவிட்டு தனி மனிதருக்குள் கீழ்சாதி மேல் சாதி என்று ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கக்கூடியதாக சமயம் இருக்குமானால் அது நடவாது.

மனிதனைப் பாகுபாடு செய்வதிடுவதே கடவுள் நெறி என்று எவரேனும் சொல்லுவார்களானால் நான் நாத்திகனே என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். சமய நெறி என்பது புனிதமானது. உண்மையானது, மனிதாபிமானமுள்ளது. அடக்க உணர்வை சோதிப்பது என்றால் என்னை சமயத்துக்கு அப்பாற்பட்ட வனென்று எவரும் சொல்லிவிட இயலாது. என்னை நாத்திகனென்று கூறுவார்க்கு நான் கூறவிரும்புவது இதுதான்.

இந்தியா ஒன்றுபட்டிருக்க வேண்டும். அதன் வலிவு வெல்லற்கரியதாக இருக்க வேண்டும் என்று நாமெல்லாம் விரும்புகின்றோம். இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதெப்படி சட்டத்தின் மூலமோ, கட்டளையின் மூலமோ, குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலமோ ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியாது. ஒற்றுமை என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். நமது எண்ணங்கள் ஒன்றிணைந்திட செயல்பட வேண்டும். வெறும் உதட்டளவுப் பேச்சினால் ஒற்றுமை வந்துவிடாது.

ஒற்றுமையை வளரும் பசுஞ்செடிக்கு நிகராகக் கருதி ஒரு சீராகத் தண்ணீர்விட்டுப் பேணி வந்தால் மட்டுமே அது வளரும். அதைவிட்டுத் தண்ணீரும் வெந்நீரும் மாற்றி மாற்றி ஊற்றினால் செடியின் நிலை என்னவாகும்? தமிழக அரசு கொண்டுள்ள மொழிக் கொள்கையைச் சென்னைவாழ் சீக்கியர் ஆதரிப்பதாக உள்ளது சங்கத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். அது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே தமிழ்நாட்டில் பொதுவாகவே ஒரு தப்பெண்ணம் நிலவுகிறது. வடக்கேயிருந்து வருகிறவர்களெல்லாம் இந்தி தனியொரு ஆட்சி மொழியாவதை ஆதரிப்பவர்கள் என்ற எண்ணமே. அது சரியல்ல-சீக்கிய மக்கள் தங்கள் குர்முகி மொழியை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பதையும் அறிவேன். அதேபோல அசாம் மொழி எப்படி அசாமியர்களால் நேசிக்கப்படுகிறதென்பதையும் அறிவேன்.

தமிழுக்குத் தொண்டாற்றியவர்
பல்லாண்டு காலமாகப் பன்மொழிப்புலவரிடம் நெருங்கிப் பழகியவன் என்ற வகையிலும் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை அறிந்தவன் என்ற முறையிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஆசிரியராக இருந்து பணியாற்றிய காலத்தில் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்ட வரையில் இன்றைய தினம் அவர் தமிழுக்குத் தொண்டாற்றுகின்ற பலவழிகளையும் அறிந்து பாராட்டுகிறேன்.

மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால் அதை அங்கே ஏற்றுக்கொள்வதற்கு ஒருவரோடொருவர் போட்டிப் போட்டுக் கொள்வார்கள். ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஒருவரை அறிவாளியென்று சொன்னால் ‘என்ன அறிவு பெரிய அறிவு’ என்று தன் அறிவைக் காட்டுபவர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளைப் போல் எழுத்துத் துறை பேச்சுத்துறை வேறு எந்தத் துறையானாலும் உற்சாகமாக ஈடுபடுவது மிகக் கடினம்.

இத்தகைய கடினமான தொண்டை முப்பது முப்பத்தைந்து ஆண்டுகட்கு முன்பிருந்தே அப்பாதுரையார் அவர்கள் தொடங்கி பணியாற்றி வருகிறார்கள்.

அவர் வாழ்க்கை பூஞ்சோலையல்ல வறுமைச் சூழலிலே தன் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டிருப்பவர். அவர் நினைத்திருந“தால் பல்கலைக் கழகத் துணை வேந்தராகும் அளவுக்கு இன்று தன்னை உயர்த்தியிருக்கக் கூடும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. எந்தெந்த விதங்களில் தமிழுக்குத் தொண்டாற்றலாம் எந்தெந்த வழிகளில் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி அந்தந்த நேரங்களில் அருந்தொண்டாற்றியவர்.

இசைக் கச்சேரியில் பலவிதமான இசை வகைகளை ஏற்ற இறக்கத்துடன் பாடினாலும் சுருதிக்குள்ளே நின்று பாடுவது போல தமிழ்த் தொண்டுக்குள் நின்று பல துறைகளில் தொண்டாற்றியவர்.

மேல்நாடுகளில் ஒருவர் ஒரு புத்தகம் எழுதினால் அந்த ஒரு புத்தகத்தில் வரும் வருவாயைக் கொண்டே தன் வாழ்நாளைச் செப்பனிடும் அளவுக்கு வசதியிருக்கிறது.

ஒருவர் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக அதுவும் ஓராண்டு காலம் ஓய்விலிருந்து அதைச் செலவழிப்ப தற்காகத் தென்னமெரிக்காவில் சென்று வாழ்ந்தாராம்.

இங்கு ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டால் உடனே வேறு வீட்டிற்குக் குடிபுக வேண்டியிருக்கிறது, கடன் தொல்லையாக!

பன்மொழிப் புலவருக்கு மணிவிழா கொண்டாடுகிறோம். ஆனால் அவரது கருத்துக்கள் நம்மிடம் இருக்கிறதா என்றால் இல்லை. திரு.வி.க.வைப் பற்றிய மறைமலையடிகளாரைப் பற்றிய குறிப்புகள் இல்லை. அவர்களது குறிப்புகளை மறந்துவிட்டால் மரபு என்பது கிடைக்காது. மரபு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மறதியென்று ஆகிவிட்டது. மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் நம்மிடமில்லை.

ஏதேனும் ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியே செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறியிட்டிருப்பார்கள்.

அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். அதுவும் கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான் என்று சொல்வாரும் உண்டு-கரூரைத் தலைநகராக்கினான் என்று இயல்புவாரும் உண்டு என்று எழுதியிருக்கும்.

இப்படிப்பட்டவற்றையெல்லாம் நீக்கி வரலாற்று ஆசிரியர்களை உள்ளடக்கி கல்வெட்டு மூலமாகவும் ஏடுகள் மூலமாகவும் உள்ள கருத்துக்களை ஒன்று திரட்டி வரலாற்றை உருவாக்கி தமிழ் நாட்டாருக்கு வழங்க வேண்டும். வெளிநாட்டுக்காரர்கள் யாராவது கேட்டால் இதோ எங்கள் தமிழக வரலாறு என்று கொடுக்க நம்மால் முடியாது.

இங்கிலாந்து நாட்டில் இதேபோல் ஒரு மாநாடு நடந்தால் இதோ எங்கள் வரலாறு என்று காட்ட அவர்களால் முடியும். ஜெர்மன் நாட்டிலே நடந்தால் அவர்களால் காட்ட முடியும். அப்படிப்பட்ட வரலாற்றை நாமும் காட்ட அப்பாதுரையார் போன்றவர்களை வைத்துடச் செயல்பட வேண்டும்.
இந்தி எதிர்ப்பு என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்று இன்று இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டுவது போலவே அன்றும் தீவிரமாக ஈடுபட்டவர் அலமேலு அம“மையார் ஆவார்கள்.

இந்தி எதிர்ப்பு மறியலைத் தொண்டை மண்டலத்துளுவ வேளாளர் பள்ளிக் கூடத்திற்கு எதிரில், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க மறியலில் ஈடுபட்ட தியாகியென்று அலமேலு அம்மையாரைக் குறிப்பிட்டால் மிகையாகாது.

எவ்வளவு அலைவீசினாலும் மேல் தளத்திலே நிற்கும் கப்பல் தலைவன் போல அவர் கொளுத்தும் வெயிலையும் பாராது எரிக்கும் சூட்டிலே நின்று கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அவர்கள் இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொண்டாற்ற வேண்டும்.

அழுத்தக்கார மனிதர்
பக்தவத்சலனார் அவர்கள் இந்திய அரசியலிலும் குறிப்பாகத் தமிழக அரசியலிலும் தம்முடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். நாட்டில் 50 வருட வரலாற்றில் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவருடைய தனிப்பட்ட பண்பைப் பாராட்டுவதை விட அவர் வாழ்ந்த காலத்தில் உள்ள நிலைமையைப் பாராட்டினால் அவரை நாம் உணர்ந்து இருக்கிறோம் என்று பொருள்.
அவரோடு ஒத்த கருத்துள்ளவர்கள் பாராட்டுவதைவிட ஒத்துக் கொள்ளாதவர்கள் பாராட்டுவதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு ஆகும்.

அவர் ஒரு கட்சியை சேர்ந்தவர். நான் ஒரு கட்சியைச் சேர்ந்தவன். இருவரும் தனித்தனி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெரியார் காங்கிரசிலிருந்து பிரிந்தார். பெரியாரிடமிருந்து நாங்கள் பிரிந்தோம். காங்கிரசில் இருந்து பிரிந்த இயக்கம்தான் மற்ற இயக்கங்கள். மூலத்தில் எல்லோரும் ஒன்றுதான்.

பழைய காலத்தை நினைவு படுத்தக்கூடிய பெரியவர்களில் ஒருவராக நம்மிடம் பக்தவத்சலம் இருக்கிறார் என்பது பெருமைக்குரியது ஆகும்.

அப்படிப்பட்ட பெரியவர்கள் என்று ராஜாஜி பெரியார் காமராஜர், பக்தவத்சலம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் மறைந்தால் பல விஷயங்கள் வெளியே வராமலே போய்விடும். இவர்கள் எல்லோருக்கும் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை இருப்பது பாராட்டுக்குரியது ஆகும். இந்தப் பெரியவர்கள் எல்லாம் இன்னும் பல ஆண்டுகள் நம்மிடத்திலே இருந்து பல நல்ல கருத்துக்களைச் சொல்லி தமிழ் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க உதவ வேண்டும். பக்தவத்சலம் அவர்களுடைய குடும்பம் நிலச்சுவான்தார் குடும்பம்.

சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பு என்று ஒப்புக்கொள்ளப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தார். மேட்டுக்குடியில் பிறந்தவர் என்றாலும் அவருடைய முன்னோர்கள் தேசியத்தில் பற்றுள்ளவர் களாக இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

எங்கள் ஊருக்கு பக்தவத்சலம் அவர்கள் தன்னுடைய தந்தையோடு வரும்போது தான் பார்த்து இருக்கிறேன். அப்போ தெல்லாம் வெகு அடக்கத்தோடு வருவார். எனக்கும் அவருக்கும் பத்தாண்டு காலமாக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் பத்திரிகையில் வரும் விஷயங்களைப் பார்த்து எடைபோடுகிறார் களே தவிர எங்களுக்குள்ள நட்பைச் சிலர் புரிந்து கொண்டது இல்லை. சட்டமன்றத்தில் பணியாற்றியபோது நான் கூறிய பலவற்றை அவர் மறுத்திருக்கிறார். அவர் கூறியவற்றை நான் மறுத்து இருக்கிறேன்.

எந்தப் பண்டத்தை எடுத்தாலும் தூற்றி நல்லதை எடுக்கிறார்கள்.

õம் கூட தூற்றுகிறோம். மாலை நேரத்தில் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்கிற நேரத்தில் தேவையற்றதைத் தள்ளிவிட்டு நல்லதை எடுத்துக் கொள்ள முயற்சித்தால் பலன் உள்ளதாக இருக்கும்.

யார் மீதும் எனக்கு எந்த நேரத்திலும் வெறுப்பு இருந்தது இல்லை.

பகை உணர்ச்சி கூடாது:
அவரவர்கள் தங்கள் கொள்கைகளை வலியுறுத்துவதில் ஈடுபட்டாலும் அதிலே பகை உணர்ச்சி தேவை இல்லை. பக்தவத்சலம் சட்டமன்றத்தில் இருந்த காலத்திலேயே எங்களோடு இருந்த காலத்தில்தான் அதிகமாக மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார். அவருக்குள்ள பெரிய குணம் அவர் ரொம்ப அழுத்தக்காரர் என்று சொல்வார்கள். சட்டமன்றத்தில் நாங்கள் மணிக்கணக்கில் பேசுவோம். அதிலே சில இடங்களில் கோபத்தை வெளிப்படுத்து வோம். வேண்டுகோளைத் தெரிவிப்போம். எல்லாம் முடிந்த பிறகு பக்தவத்சலம் அவர்கள் என் நண்பர்கள் சொல்லியன ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்று ஒருவரியில் சொல்லி விடுவார். அப்போதும் அவர் கசப்பு உணர்ச்சியை காட்டியது இல்லை.

மேடையில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த பொழுது கைத்தட்டலும் சிரிப்பொலியும் எழுந்தது. எதையோ காணக்கூடாத காட்சியை கண்டது போல ஜனநாயகத்தில் பல கட்சிகள் இருக்கும். இருக்க வேண்டும்.

சர்ச்சில் பிரதமராக இருந்து ஒருமுறை தேர்தலில் தோற்றபோது அட்லி பிரதமராக வந்தார். வழக்கப்படி பிரதமர் பத்தாம் எண்ணுள்ள வீட்டுக்கு குடிபோனபோது, பழைய பிரதமர் சர்ச்சிலின் மனைவி அந்த வீட்டின் அமைப்புகளை எது எது எங்கெங்கு இருக்கும் என்று விளக்கிக் கூறுகிறார். அந்த மனப்பான்மை நமக்கு வராது என்று கருதினால் நாம் ஜனநாயத் திற்கு லாயக்கில்லாதவர்கள் என்றாகிவிடும்.

அட்லியும்-சர்ச்சிலும் ஒரே மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபொழுது மற்றவர்களுக்கு விவாதத்துக்கு உரியதாக இருந்தது. இருவரும் செல்வதை முறியடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தடுக்கப்பட்டு இருவருமே அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். ஜனநாயகத்தில் அந்த நாடு எவ்வளவு சிறந்து இருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

இதுபோன்ற விழா மட்டுமல்லாமல் பொதுவாக முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ஒருவரை ஒருவர் மதிக்கும் ஜனநாயகப் பண்பு வளர்வதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உதவ வேண்டும்.

சைவர்களும்-வைணவர்களும் சண்டையிட்டுக் கொண்ட நிலை போய் இப்போது இருவரும் ஒரே வீட்டில் குடி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட உணர்வை உருவாக்க முன்நிற்க வேண்டும். பக்தவச்சலம் தம்முடைய கட்சிக்கு மட்டும் அல்லாமல் எல்லாக் கட்சிக்கும் கருத்துக் கூறும் ஆற்றல் பெற்றவராவார்.

பைபிளைப் படித்து விடுவதாலே நாம் கிறிஸ்தவர்களாகி விடுவது இல்லை. காங்கிரஸ் தலைவர்களாக இருப்பவர்கள் தான் காங்கிரஸ் வரலாற்றை படிக்கவேண்டும் என்பதில்லை. எனக்குத் தெரிந்த வரை காங்கிரசிலே இருப்பவர்களை விட, நாங்கள் அதிகமாக அறிந்து இருக்கிறோம். ஏன் என்றால் எந்த இடத்தில் ஓட்டை இருக்கிறது என்பது அப்போதுதான் தெரியும்.
நான் பொறுப்பு ஏற்றதும் தனித் தனியாக டைரி எழுத ஆரம்பித்தேன். இப்போது ஒரு டைரிதான் மிஞ்சி இருக்கிறது. ஐந்து டைரி எங்கே என்று தெரியவில்லை. டைரி எழுதி எனக்குப் பழக்கம் இல்லை. அந்தப் பழக்கம் இல்லாததால் தான் தமிழ்நாட்டின் முழு வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. திருவள்ளுவர் எந்த ஊர் என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

டாக்டர் வரதராஜலு-திரு.வி.க போன்றவர்கள் வரலாறு சரியாக எழுதப்படவில்லை. பக்தவத்சலம் அவர்களின் நாற்பது-ஐம்பது வருட காலமாக தொடர்பு கொண்டிருந்த அரசியல் வரலாற்றை உருவாக்கினால் படிப்பகத்திற்கு சிறந்த நூல் கிடைக்கும்.