அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உணர்ச்சி வெள்ளம்!
சுதந்திரத் திருநாள்
2

போதிய ஆதார வசதிகள் படைத்திராத நாடுகளுக்கு உதவி புரிந்து வழிகாட்டுவதற்காகவும், அவற்றை வளப்படுத்து வதற்காகவும் அண்டை நாடுகளும் சரி, எங்கே இருக்கும் நாடுகளும் சரி, எல்லா வாழ்க்கைத் துறைகளையும் சேர்ந்த நிபுணர் குழுக்களை அனுப்பி மனிதனின் துன்பத்தை, அது உடலை வாட்டும் துன்பமாக இருந்தாலும் சரி, மனத்தில் ஏற்படும் இன்னலாக இருந்தாலும் சரி, அதை அகற்றுவதற்கும் குறைப்பதற்கும் ஒழிப்பதற்கும் கைகொடுத்து உதவத் தயாராயிருக்கும். ஏழை மக்களுக்கு இயற்கை அன்னை அதன் செல்வங்களைக் கொடுக்கும்படிச் செய்வதற்கும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு வீரத்தைப் புகட்டுவதற்கும், நலிந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கும் எல்லோருக்கும் மனிதாபிமானத்தையும் காண்பிப்பதற்குத் தயாராயிருக்கும் ஐக்கிய நாடுகள் குழுவைக் காணலாம்.

ஐ.நா.ஸ்தாபனத்தின் சமாதானங்காணும் முயற்சியில் ஆர்வமில்லாதவர்கள் கூட மேம்பாடு குன்றிய மேம்பாட்டைத்து வரும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அது புரிந்து வருகிற பணியைப் பாராட்டத்தான் செய்கிறார்கள்.

சில சமயங்களில் ஐ.நா.வின் சாதனைகள் விஷயத்தில் நமக்குப் பூரண திருப்தி ஏற்படாவிட்டால் கூட ஐ.நா.வுக்கு அதன் எல்லா முயற்சியிலும் நாம் தொடர்ந்து ஆதரவளித்து வந்திருக்கிறோம். ஏனென்றால் ஜவஹர்லால் நேரு கூறியிருப்பது போல, ஐ.நா. ஸ்தாபனம் பலவீனமடைந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நாம் பலவீனமாயிருப்பதுதான், நாடுகள் பலவீமாயிருப்பதுதான். அவை கொள்கை பலமற்றவையாய் இருப்பதுதான். அவை நேர்மையற்றவையாய் இருப்பதுதான் என்பதை நாம் உணருகிறோம். நமது மன உறுதியும் பலமும் மட்டுமே மனித குலத்தின் இந்த நம்பிக்கைக்கு, உலக நீதியின் அரணுக்கு உயிர்நாடியாக இருக்க முடியும். இந்நாட்டிலுள்ள நாம் ஐ.நா. வைப் பலப்படுத்த உத்தேசித்திருக்கிறோம். எனவேதான் இந்தக் கொண்டாட்டம். எனவேதான் இந்த வேண்டுகோள். ஐ.நாவை நன்கு உணர்ந்து கொள்ளும்படி மக்களுக்கு உதவுங்கள். இந்த ஸ்தாபனத்தின் பின்னணி வரலாறு, அமைப்பு ஆகிய விவரங்கள், அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ளும்படி செய்து விட்டால், சமாதானத்தையும், நீதியையும், இணக்கத்தையும், மகிழ்ச்சியையும் மக்கள் மறக்க முடியாத ஒருவகை லட்சியத்தையும் பிரச்சாரம் செய்யும் துணிவுடைய ஆனால் தோல்வியடையாத இந்த ஸ்தாபனத்தையும் அதில் பொதிந்துள்ள கொள்கையையும் எல்லோரும் பின்பற்றி, அதை மனிதகுலத்துக்கான மாபெரும் அன்பளிப்பாக வாழ்த்தி வரவேற்பார்கள் என“பதில் எனக்கு ஐயமில்லை. தமிழர்களாகிய நமக்கு, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்பது நமது கவிஞர் பாடி இதைத்தான் கற்பித்தார். ஆகையால், நாம் இந்த ஸ்தாபனத்துக்கு உறுதுணையாக நின்று வழிவழியாய் வந்த லட்சியத்தை எய்துவதில் உதவி புரிவோம்.

சுருங்கிய உலகம்
முன்பெல்லாம் காசிக்குப் போகிறேன், திருப்பதிக்குப் போகிறேன் என்பார்கள். இப்படி இருந்த இந்த நாட்டில் வாரத்துக்கு வாரம், மாதத்துக்கு மாதம் அமெரிக்கா போகிறேன் ரஷ்யாவுக்குப் போகிறேன் என்று கூறப்படுவதைக் கேட்கிறோம். நம்நாடு எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

காசிக்குப் போகிறவர்களிடம் மறக்காமல் கங்கா தீர்த்தம் கொண்டு வாருங்கள் என்பார்கள். பழனியாயிருந்தால் பஞ்சாமிர்தம் கொண்டு வரும்படிச் சொல்லுவார்கள்.

ரஷ்யாவுக்குப் போகும் நமது நண்பர்களிடம் நாம் என்னென்ன கேட்போம். எப்படி அந்த நாட்டில் ஆட்சி அமைந்துள்ளது? அங்கு மாநகராட்சிகள் எப்படி அமைந்துள்ளன? எப்படி அந்த நாட்டுக் குழந்தைகள் எந்த அளவு மகிழ்ச்சியோடு இருக்கின்றன? இதையெல்லாம் தெரிந்து கொள்ள நாம் விரும்புவோம்.

உலகம் எப்படி நடக்கிறது என்பதைத் தெரி“ந்து கொள்ள நம்மிடம் நிரம்ப ஆர்வம் உள்ளது.

பக்கத்து வீட்டுக்காரன் எப்படி இருக்கிறான் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாதது பழைய காலப் பழக்கம் இன்று நெடுந்தூரத்து நாடுகளானாலும் அங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நேரில் தெரிந்து கொள்ள விழைகிறோம். அந்த நாட்டில் என்னென்ன விந்தைகள் உள்ளன என்பதை அறிய விரும்புகிறோம். அதனை ஆர்வம் உள்ளது.

முன்னாள் மேயர் முனுசாமி ஏற்கனவே ரஷியாவுக்கு சென்று வந்தவர். சிட்டிபாபுவும் அயல் நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். கழக அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன் தற்போது மலேசியா பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாராளுமன்றக் கழக உறுப்பினர் மனோகரன் இரண்டு முறை ஆப்பிரிக்கா நாடுகளைச் சென்று பார்த்துவிட்டு வந்துள்ளார். மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான ராஜாராமும் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்துள்ளார். நானும் ஜப்பான் வரை சென்று வந்திருக்கிறேன். அங்கு காணுகின்றவற்றை தெரிந்தவரையில் புகுத்தலாம் என்பது நம்மவர்கள் தெரிந்து சொல்ல இந்த அயல்நாட்டுப் பயணங்கள் துணையாக இருக்கும்.

உலகம் சுருங்கிவிட்டது:
உலகம் சுருங்கி வருகிறது. உலக நாடுகள் நெருங்கி வருகின்றன.

25 வருடங்களுக்கப்பால் மிஞ்சிப் போனால் 50 வருடங்களுக்கப்பால் இங்கிருந்து சந்திர மண்டலத்துக்கு ஒருவர் போகிறார். அவருக்கு வழியனுப்பு விழா என்று இதே இடத்தில் நிச்சயம் நடக்கும். நாடுகள் மட்டுமல்ல, அண்டங்கள் ஒன்றை ஒன்று நெருங்கி வரும் காலம் அது.

ரஷ்யா என்றாலே குனிந்தவன் நிமிர்ந்து நிற்பான். அழுது கொண்டிருப்பவன் முகத்தில் புன்முறுவல் பூக்கும். பாட்டாளி தனக்கொரு நாடு அமைந்ததாக நினைப்பான். உலகத்துக்கே புதிய செய்தியை புதிய நடைமுறையைக் கொடுத்த நாடு ரஷ்யா.

அப்படி இந்த நாடு புகழெய்திடக் காரணம் என்ன? கொடுங்கோன்மையை வீழ்த்திப் பயங்கரப் புரட்சிக்குப் பின் பாட்டாளிகளது அரசை அவர்கள் அமைத்தார்கள். அப்படி அரசு அமைத்தபிறகு மக்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டு தோழமை உணர்ச்சியோடு செயல்பட்டனர். வீணையொன்று நல்ல நாதம் தரவேண்டுமென்றால் அதன் நரம்புகளில் சில அறுந்தும், சில வளைந்தும் இல்லாமல் எல்லாமே ஒரு சீராக இருக்க வேண்டும் அறுந்தும் வளைந்துமிருக்குமானால் எந்தப் பெரிய வித்துவான் ஆனாலும் வாசிக்க இயலாது.

சீராக இருந்து நல்ல நாதம் எழும்பும் வீணையைப் போல ரஷியாத் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து, ஜார் கொடுங்கோன்மையை ஒழித்துப் புதிய அரசை நிறுவினர். நினைத்தாலே பொசுக்கிவிடும் கொடுங்கோன்மை அது.

சோவியத் நாட்டுக்கும் நமக்கும் நிறைந்த தோழமை நிலவுகிறது. பெரிய தொழில் திட்டத்துக்கு நிரம்ப ஒத்துழைத்து வருகிறார்கள். அவர்களது ஒத்துழைப்போடு அரக்கோணத்துக்குப் பக்கத்தில் பெரிய தொழிற்சாலை ஒன்று ஏற்பட இருக்கிறது. அவர்களிடமிருந்து நமக்கு நல்ல ஒத்துழைப்புக் கிடைத்து வருகிறது.

தோழர்கள் செல்லவிருக்கும் வெளிநாடு அன்னிய நாடே என்றாலும், நம் அன்பைப் பெற்ற தோழமை நாடு.

உண்மையை உணர்ந்திருந்தால் ஊர்ச் சண்டை ஏது?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஜைன நெறியை நல்ல முறையில் பாதுகாத்து அந்த நெறியிலேயே நடப்பது மட்டுமல்லாமல் மற்ற சமுதாயத்தினரும் அந்த நெறியிலே நடந்து வாழ்ந்து சிறக்க வேண்டுமென்பதிலே அக்கறை காட்டு கின்றவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மகாவீரர் போதித்த தத்துவங்கள் நல்ல மார்க்கங்களாகும் நல்ல நெறிகளாகும்.

‘ஐம்புலன்களை அடக்கு’ ‘பொருள்களின் மீது ஆசை வைக்காதே’ என்றெல்லாம் இங்கு எழுதியிருப்பதைக் காண்கிறேன். இந்த உண்மைகளையெல்லாம், உண்மையிலேயே உலகில் உள்ளோர் அறிந்து உணர்ந்திருப்பரேயானால், சண்டைச் சச்சரவு கள் ஏற்பட்டிருக்காது. ஐக்கிய நாடுகள் மன்றமும் தேவைப் பட்டிருக்காது.

மனித சமுதாயத்தை வழிநடத்தும் மார்க்கங்கள் எல்லாம் நான்கு மாடிக் கட்டிங்களாக உள்ளன என்றாலும், இரண்டு மூன்று மாடிகளுக்குத்தான் ஒழுங்கான பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. மூன்றாவது மாடியிலிருந்து அடுத்த மாடியைப் பார்த்தால், தொங்குகிற நூல் ஏணியில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

ஜைன மதத்தை அறிந்த அறிஞர்களிடமும், பெரியவர்களிடமும் எனக்கு நெருங்கிய தொடர்பும், பழக்கமும் உண்டு. ஜைன சமயம் பற்றிப் பல தடவை நாங்கள் விவாதித்திருக்கிறோம். அப்போது நான் வருத்தப்பட்டேன். நெறிகள் சரியில்லை என்பதால் அல்ல! இந்த நெறிகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் வளர்ந்து கொள்ளவில்லையே என்பதுதான் அதற்குக் காரணம். அந்த நெறிகளுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லையே என்ற குறை இருப்பதால், அந்த நெறிகளை எல்லாம் மறந்துவிட வேண்டும் என்ற நான் கூறமாட்டேன்.

வேலூரில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு வெள்ளைக்காரர் ஓய்வு பெற்ற காலத்தில் தாயகம் செல்லவிருந்த பொழுது, வழியனுப்பு விழாவுக்கு என்னையும் அழைத்திருந்தார்கள். எவ்வளவோ மைல்களுக்கு அப்பாலேயிருந்து வந்து வேற்றுநாட்டு“ககாரராக இருந்தாலும் விழுமிய தொண்டராக பிறர் பயனடையும் மருத்துவ நிலையங்களையும் கல்விக் கூடங்களையும் அரண்மனைகளையும் கட்டித் தந்து பணிபுரிந்தவர்களாயிற்றே என்ற கருத்தில், அமெரிக்காவிற்குச் செல்லவிருந்த அந்தக் கிருத்துவரை வழியனுப்பச் சென்றேன்.

அப்போது வேலூரிலிருந்து இந்து மதத்தைச் சார்ந்த ஒருவரிடமிருந்து எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது. ‘கிருத்துவரை வழியனுப்பும் விழாவிலே கலந்து கொள்ள வந்தால் நாங்கள் கறுப்புக்கொடி காட்டுவோம்!’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது. எங்கள் கட்சிக் கொடியிலே கறுப்புத்தான் இருக்கிறது என்று அப்போது வேடிக்கையாகச் சொன்னேன்.

எவ்வளவோ தூரத்திற்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்றாலும் அயலவர்கள் என்றாலும் அவர்கள் செய்த நல்ல காரியத்தைத் தமிழக மக்கள் வரவேற்க வேண்டும். அது போன்ற காரியங்கள் செய்யவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவமனைகளையும், கல்லூரிகளையும் ஏற்படுத்தி, ஈட்டிய பொருளை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் பிறந்த காஞ்சிபுரத்திலும், அதைச் சுற்றிய சிற்றூர்களிலும் ஜைன மதத்தைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் எனக்குத் தொடர்பு உண்டு.

‘இந்த மார்க்கம் தமிழர்குக்கே உரிய மார்க்கம்’ என்று கூட, தமிழ் ஆய்ந்த வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர். ஆகவே, இந்த மார்க்கத்தில் எனக்குத் தொடர்பும் ஈடுபாடும் உண்டு.

வழிகாட்டிகள் இருந்தும் வாழ்வில் முன்னேறவில்லை நாம்:
உலகத்திலேயே நம்முடைய நாட்டில் தான் பெரும் பெரும் மகான்கள் வழிகாட்டிகள் தோன்றி இருக்கின்றார்கள். நான் கூடச் சில சமயம் நினைத்துப் பார்ப்பேன் இப்படிப்பட்ட பெரியவர்கள் தோன்றாமல் இருந்திருக்கலாம். அவர்கள் தந்த அந்த நல்ல சிந்தனைகள் தோன்றாமல் இருந்திருக்கலாம் என்று பெருமைக் குரிய வழிகாட்டிகள் பலர் இருந்தும் கூட நாம் இந்த அளவுக்குக் கெட்டுப் போயிருக்கிறோமே உயர்ந்த நிலையில் இல்லையே என்பதால் தான், அப்படிக் கருதத் தோன்றியது.

இதுபோன்ற வழிகாட்டிகளே தோன்றாத நாடுகளில், எவ்வளவோ முன்னேறி இருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்திருக் கின்றார்கள். ஆனால், வழிகாட்டிகள் இருந்தும் அவர்கள் வழிநடத்திச் செல்பவர்களாக இருந்தும் நாம் முன்னுக்கு வரவில்லை! காரணம், நாம் சொல்பவர்களாக இருந்தோம் செய்யத் தவறி விட்டோம்! ஆகவே, இனிமேல் சொல்வதுடன் செய்து காட்டவும் வேண்டும்.

புத்தர் சொன்னார்-சித்தர் கூறினார் மகாவீரரும், முகம்மது நபியும், காந்தியடிகளும், இராமலிங்க அடிகளும் சொன்னார்கள் என்று தான் சொல்கிறோமே தவிர, அவற்றை செய்து காட்டுகின்றோமோ?

அவர் அப்படிச் சொன்னார். இவர் இப்படிச் சொன்னார் என்று கூறிவிட்டு, நீ என்ன செய்யப் போகிறாய் என்றால் விழித்து நிற்போரைத்தான் நாம் பார்க்கின்றோம்!

ஆகவே, சொல்லுவதோடு மட்டும் நில்லாமல் செய்தும் காட்ட வேண்டும். அப்போதுதான் அந்த நன்னெறிகளை உணர்ந்தவர்கள் ஆவோம்!

மகாவீரர், ஆண்ட அரசர்களையும் அண்டி உயிர் வாழ்ந்த ஆண்டிகளையும் பெரும் பணக்காரர்களையும் சிரமப்பட்டு பிழைத்த ஏழைகளையும் உயர்ந்தோர் என்று சொல்லிக் கொண்டோரையும் தாழ்ந்தவர் என்று கூறப்பட்டோரையும் தமக்குப் பின்னே வழி நடத்திய மாமனிதர் பின் செல்லவும் அவர் விட்டுச் சென்ற நல்ல காரியங்களை நாமும் கடைப்பிடித்து ஒழுகி, அதன் மூலம் நல்ல வாழ்க்கை வாழவும் வேண்டும்.

நான், நல்ல வாழ்க்கை என்று கூறியது, தாம் மட்டுமல்லாது பிறரும் உலகத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய அளவில் வாழவேண்டும் என்பதைத்தான் நல்வாழ்வு எனக்கருதி மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று குறிப்பிடுகிறேன்.

காக்கும் கரங்கள்
நமது பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவளிக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அறநிறுவனமான ‘கேர்’ அளித்து வருகிற உதவியை நான் மதித்து வரவேற்கிறேன். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்லுறவு பலமடைந்து அதன் விளைவாக பல தொழிற்கூடங்களும் மருத்துவமனைகளும் ஏற்பட்டுள்ளதைப் பார்க்கிறோம்.

கல்வித்துறைக்கும் அவர்களது உதவியால் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

இந்த நல்ல நாளும், நடக்கின்ற நிகழ்ச்சிகளும் அத்தகைய நல்ல கருத்துக்களை நம் மனதில் உண்டாக்கட்டும்.

நலிந்தோருக்கு உதவுவது என்ற பொது நலத் தத்துவத்தினடிப் படையில் அமெரிக்கர்கள் இந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். ஒரு பக்கத்திலே நலிவும் மறு பக்கத்திலே வளமும் என்ற நிலை இருக்குமானால் அது உலகம் முழுவதும் பரவும்.

நாம் இங்கே திரைப்படங்களுக்கும் காக்கும் கரங்கள் என்று பெயரிடுகிறோம். அமெரிக்க மக்கள் தங்களது கரங்களை காக்கும் கரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குமுன்னதாக தங்கள் கரங்களை வலிவுள்ள கரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வலிவுள்ள கரங்களால்தான் பிறரைக் காக்கவும் முடியும். எனவே நாம் முதலில் நமது கரங்களை வலிவுள்ள கரங்களாக ஆக்கிக் கொள்வோம். அப்போது பிறரை நாமும் காக்க முடியும்.

கரங்கள் எந்த அளவு வலிவுள்ளவையாக இருக்கின்றனவோ அந்த அளவு உள்ளம் மென்மையானதாக இருக்க வேண்டும்.

நானும் திரைப்படத்திலே, ஈஸ்வரன் இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் சம்பந்தம் வைப்பதில்லை என்று எழுதினேன்.

நம்முடைய நாடு ஈஸ்வரன் ஒருவேளை அப்படியிருக்கலாம். ஆனால் அமெரிக்க மக்களுடைய பணத்துக்கும் அவர்களது இதயங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதைப் பார்க்கிறோம்.
அமெரிக்க மக்களும் ஆரம்ப காலத்திலே நம்மைப் போலத்தான் இருந்தார்கள். இப்போது உள்ள வலிவு ஆப்ரகாம் லிங்கன் காலத்தில் இருந்ததில்லை. காடுகளாகவும், பள்ளத்தாக்குகளாகவும், சதுப்பு நிலமாகவும் தானிருந்தது. ஆதிநாள் அமெரிக்கா.

இன்று அந்நாடு பொன் கொழிக்கும் பூமியாக உள்ளது. தாங்கள் தேடிப் பெற்ற செல்வத்தைத் தேக்கி வைத்து உலகில் பரவிடச் செய்கிறார்கள்.

எவ்வளவு விரைவாக நாம் அந்த வலிவைப் பெறுகிறோமோ அந்த அளவு நமது தன்மானம் தரணியில் உயரும்.

அந்த வலிவினைத் தேடிக் கொண்டு நம் கரங்களைக் காக்குங் கரங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இன்று நம் கரங்கள் கேட்கும் கரங்களாக இருக்கின்றன. நாம் அரிசி, நிதி கடன் கேட்பவர்களாக இருக்கிறோம்.

இந்த உண்மையை உணர்ந்து, இந்தச் சவாலை ஏற்று தன்னிறைவுப் பாதையில்-தன்மானப் பாதையில் நாம் வேமகாக நடைபோட வேண்டும். அந்தப் பாதை நீண்ட நெடியது. அதில் நடக்க நம்மை நாம் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.

நல்ல மனிதர்களாய், நற்குணமுடையோராய், புகழ் ஓங்கி எல்லா வகை ஏற்றமும் பெற்றத்தக்கவர்களாய் நமது சிறார்கள் வளர வேண்டும்.

சீர்திருந்தும் கூவம்
வெகுகாலமாகவே துர்நாற்றம் பிடித்த ஆறு என்று ஏசப் பட்டுவந்துள்ள இந்த ஆறு இன்று மிகுந்த பாக்கியம் செய்துள்ளது. எந்த ஒரு ஆற்றுக்கும் இப்படி ஒரு சேர ஐந்து மந்திரிகள் சென்றதில்லை. அழுக்காற்றை நல்ல நீரோடும் ஆறாக ஆக்கும் திட்டத் துவக்கத்துக்கும் ஐந்து மந்திரிகளும் வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் இங்கு புதிதாக வந்து போகக் கூடியவர்கள் அவரவர் ஊர் சென்றதும் இந்த ஆற்றின் துர்நாற்றம் பற்றியே பேசுவார்கள். 10-15 ஆண்டுகளுக்கு முன் இதுதான் அன்றாடப் பேச்சுக்களில் ஒன்றாக இருந்திருக்கும்.

புறப்படுகிற இடத்தில் தூய்மையாகவே புறப்படுகிற இந்த ஆறு அலைந்து வளைந்து அழுக்கைச் சேர்த்துக் கொள்ளுகின்றது.

கடலோடு போ என்று நகர மக்கள் அதைவிரட்டுகிறார்கள். கடல் அலைகளோ நீ இங்கே வராதே என்று விரட்டுகின்றன. ஆக இந்த பலமான போராட்டம் பலகாலமாகவே நடைபெற்று வருகின்றது.

இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒரு திட்டத்தை பொறியியல் வல்லுநர்கள் தந்திருக்கிறார்கள்.

அதன்படி இத்திட்டம் நிறைவேறியதும் அது தரக்கூடிய எழில் தோற்றத்தைத் தான் வரைபடமாக்கி இங்கே வைத்திருக்கிறார்கள். கிடைப்பதற்கரிய கற்பனை அல்ல. உண்மை நிலையாக இது உருவாகும். இந்தத் திட்டம் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்.

தேம்ஸ் நதிக் கரையினிலே:
மற்ற மாநகரங்களிளெல்லாம் இத்தகைய இயற்கை வசதி அதாவது நகருக்கு மத்தியில் ஆறு ஓடுவதை பெரும் வாய்ப்பாக கருதுகிறார்கள்.

தேம்ஸ் நதிக்கு லண்டன் மாநகர மக்கள் அளித்துள்ள முக்கியத்துவம் பற்றி அங்கு போய்வந்தவர்கள் சொல்லவும் படித்தும் அறிந்திருக்கிறேன்.

உல்லாசமாக உலாரத்தக்க பூங்காற்று வீசுகின்ற பூங்காக்கள் நிரம்பிய கரைகளை அந்த ஆறுகள் பெற்றிருக்கின்றன.

அப்படிப்பட்ட இயற்கை அழகைக் கொண்ட இந்த நதி சென்னை நகரினுள் ஊடுருவிப் பாய்கிறது. மக்கட்தொகை நிரம்பிய பகுதிகளின் வழியே இந்நதி ஊடுருவி வருவதை இந்த வரைபடத்தை உற்றுநோக்கினால் தெரியும்.

சிலகாலம் வெள்ளக்காடாகவும், சிலகாலும் சேறும் சகதியும் மிகுந்ததாகவும் ஒழுங்கின்றி இருக்கும்.

சில காலமாகவே இதைச் சீரமைப்பது பற்றிப் பேசப்பட்டு நிபுணர்களால் திட்டங்கள் தீட்டப்பட்டு வந்துள்ளது.

கூவம் சீரமைப்பு பற்றி விவாதிக்கக் கூடிய கூட்டமொன்றில் நானும் பங்கேற்றதாக எனக்கு நினைவு.

வேறு காரியங்களில் அரசு ஈடுபட வேண்டியிருந்ததால் இதனைக் கவனிக்க இயலாமற் போனது. மேலும் இதை புறாக்கூட்டிலேயே போட வேண்டாம் என்றே நாங்கள் வந்ததும் இதை நிறைவேற்றத் தீர்மானித்தோம்.

கருணாநிதியின் ஆர்வம்:
முதல் பட்ஜெட் தயாரிக்கும் போதே இந்தத் திட்டத்துக்குப் பணம் ஒதுக்கும்படி என்னுடைய தம்பி கருணாநிதி என்னைத் துளைத்துக் கொட்டி விட்டார். ஒதுக்கியிருக்கிறேன் என்று சொல்லியும் திருப்தியடையாமல் அது பட்ஜெட்டில் இருக்கிறதா என்று பார்த்தபின்னரே திருப்தி அடைந்தார்.
இவ்வாறாக இப்போது ரூபாய் 2 கோடி அளவுக்கு செலவிடத்தக்கதாக ஒரு திட்டம் வகுக்கப்பட்டு இன்று அதன் கால்கோள் விழாவும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மிகச்சிறந்த திறம் படைத்த நிபுணர்கள் இருக்கிறார்கள். குறைந்த செலவில் இத்திட்டத்தை நிறைவேற்றித்தர அவர்கள் முயலவேண்டும். தொகைதான் ஒதுக்கியாகிவிட்டதே என்று இருந்திடாமல் குறிப்பிட்டத் தொகையைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவேற்றித் தர வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு நிறைந்த புகழ் வந்தடையும்

இப்படியும் ஒருஆறா?
பார்க்கிற வெளிநாட்டாரெல்லாம் இப்படி ஒரு ஆறு இந்த ஊரில் இருந்ததா? என்று கேட்கும்படியாக அமைய வேண்டும்.

இதற்குமுன் இந்த ஆறு இப்படி இருக்கவில்லை. நாங்கள் இதனை இப்படி திருத்தி அமைத்திருக்கிறோம் என்று பெருமிதத்துடன் கூறுகிற நிலைமை இருக்க வேண்டும்.

நம்முடைய நாட்டில் இயற்கையின் எழிலை அழிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் உண்டு. நல்ல பூங்காவை இருக்க விடமாட்டார்கள். அதை அழிப்பதிலே அவர்களுக்கொரு தனி இன்பம்.

நல்ல கட்டிடம் இருந்தால் கரியால் அதன் சுவர்களில் கிறுக்கி வைப்பார்கள். நல்ல வாய்க்கால் ஓடினால் கல்லையும், மண்ணையும் அதில் தள்ளி நீர் ஓடாதபடிச் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட விந்தை மனிதரை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

எழிலும் பயனும் ஒரு சேர அமைந்த சீரிய திட்டம் இது. இதனோடு இணைந்த பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புத் திட்டம் வாணிபத் துறையில் ஆந்திரத்துக்கும் தமிழகத்துக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்த உதவும். அந்த கால்வாயும் பலவருடங்களாகத் தூர்வாராமல் விடப்பட்டதால் படகுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்திலேயே நாவாய் போக்கு வரத்தே செலவு குறைந்தது. பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புத் திட்டம் பற்றியும் பொதுப்பணி அமைச்சர் கோடிட்டுக் காட்டினார்.

நகருக்கு எழில் தோற்றத்தையும் வாணிபப் பெருக்கையும் அளித்திடக் கூடியது இந்தத் திட்டம்.

இத்திட்டத்தை நிறைவேற்றி சென்னையைச் சிங்கார திருநகராக்குவது நமது கடமை!

சீர்மிகு சீரணி
வீட்டுக் கிணற்றிலே நீர் இறைத்துக் கொடுக்க முடியாதவர்களும் கூட தேர் இழுக்கச் செல்வார்கள்.
தேர் இழுக்க முடியாதவர்கள் தங்கள் கைகளில் பெரிய விசிறிகளைப் பிடித்துக் கொண்டு தேர்வடத்தைப் பிடித்து இழுப்பவர்களுக்கு விசிறுவார்கள். காற்றுவராது. சில நேரங்களில் விசிறி தேர் இழுப்பவரின் முதுகைத் தாக்கும். விசிறியது போதும் நிறுத்து என்று சொல்லுவார்கள்.

ஊருக்குழைப்பது என்ற இயற்கைப் பண்பை ஒன்றுபடுத்த வேண்டும். இ
ன்னின்ன பணிகளை மேற்கொண்டால் நல்ல பலன்களைக் காணலாம் என்ற உணர்வை ஊட்ட வேண்டும். தேவையான கருவிகளைக் கொடுக்க வேண்டும். சரளைக் கற்கள் உருளைகள் கிடைக்கவில்லையென்றால் அவை கிடைக்கச் செய்ய வேண்டும். இவைகளுக்கெல்லாம் சர்க்கார் அதிகாரிகள் ஒத்துழைக்க முன்வரவேண்டுமென நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நேரு இத்தகைய பொதுநலத் தொண்டு குறித்துக் கனவு கண்டார். 20 வருடமாக மக்கள்தான் உழைத்திருக்கிறார்கள். காரணம் தெரியாமலே உழைத்திருக்கிறார்கள். யாருக்காக உழைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே உழைத்திருக்கிறார்கள். பலனென்ன என்று தெரியாமலே உழைத்திருக்கிறார்கள்.

நமக்காக நம் குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். மீதமிருக்கும் நேரத்தில் ஊர் நன்மைக்காக உழைக்க வேண்டும்.

இருவண்ணக் கொடியைக் கையில் பிடித்து ‘திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க! திராவிட முன்னேற்றக் கழகம் வளர்க’ என்று குரலெழுப்பிச் செல்வதற்காகச் சீரணிப் படை அமைய வில்லை. இப்படையைக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் தி.மு.கழகம் இல்லை. அப்படியென்றால் 1966 ல் அல்லவா இதனை ஆரம்பித்திருக்க வேண்டும்.

ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பின்னர் இதைச் செய்திருப்பதற்குக் காரணம் மக்கள் நலப் பணிக்காகத்தான்.

எந்தச் சாரார் ஆயினும் சரி, எந்த மக்களாயினும், என்ன குறையாயினும் என்னிடத்திலோ என் நண்பர்களிடத்திலோ தாராமாக வந்து சொல்லலாம். நாங்கள் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

நான் இங்கே உட்கார்ந்திருக்கும் போது உங்கள் சட்டையிலே பூச்சி இருக்கிறது-தட்டி விடுங்கள் என்று பக்கத்தில் இருப்பவர்கள் சொல்வாரானால், இது எனக்குத் தெரியாதா? என்றா கேட்பேன்? சில நேரங்களில் சிறிய விஷயங்கள் கூடத் தெரியாமல் போகலாம்.

கோட்டையிலே வீற்றிருக்கும் எங்களுக்கு மக்களின் குறைகள் என்னென்ன என்று தெரிந்துவிடும் என்று எண்ணியிருந்து விடாமல் அப்போதைக்கப்போது உள்ள குறைகளை எடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அப்படிக் கூறும்போது ஒவ்வொரு நாணயத்துக்கு உபகரணங்கள் இருப்பது போல ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டென்பதை மனதிற் கொண்டு கூற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
குடிநீர்த் தட்டுப்பாடு இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாகும். ஐந்தாறு லட்சம் பேர் வாழ்ந்த சென்னைக்கென்று வகுக்கப்பட்டது. இப்போதுள்ள தண்ணீர்த் திட்டம் இப்போது 22 லட்சம் பேர் இந்நகரில் வாழ்கிறார்கள்.

நாகரிகமான ஓரளவு வசதியோடு கூடிய வீடுகளில் வாழக்கூடும், மாளிகைகளில் மற்றொரு லட்சம் பேர் இருக்கக்கூடும். நாலு குடித்தனம் ஐந்து குடித்தனம் என்றுள்ள வீடுகளில் ஐந்தாறு லட்சம் பேர் இருப்பார்கள். மற்றுமுள்ளோர் எங்கெல்லாமோ வாழுகிறார்கள்.

நான் யாரையாவது அழைத்து அந்தக் கூவம் நதியோரம் போய் குடியிரு என்றால் என் கன்னத்தில் அறைவான். ஆனால் யாரும் சொல்லாமலே அங்கே அவர்களாகவே வாழுகிறார்கள். நாற்றமாயிற்றே என்றால் ஏதோ ஒருநாளில் அரை மணி கால் மணி அப்படியிருக்கும் என்கிறார்கள். இவர்கள் இப்படி குடியிருப்புக்காக வேண்டி இருக்கும் நாற்றத்தையும் இல்லை என்கிறார்கள்.

இவர்களது குடிசைகளை வெளிநாட்டார் பார்த்தால் நம்மைப் பற்றி மிகத் தாழ்வான கருத்தைக் கொள்வார்கள். ஆகையினால் தான் கூவத்தின் நாற்றத்தைப் போக்கி சேற்றை வாரி கூவத்தை எழிலுடையதாகச் செய்திட திட்டமிட்டுள்ளோம்.

லண்டனுக்கு நான் போனதில்லை. போய் வந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். லண்டன் நகருக்கு அழகைக் கூட்டுவது அந்நகரின் பெரும் பகுதியில் ஊடுருவிச் செல்கிற தேம்ஸ் நதி என்பதாகும். அது போல கூவம் சென்னை நகரின் மையப்பகுதியில் இருக்கிறது. ஏனோ இந்த எளிய திட்டம் என்னைவிடப் பெரியவர்கள் வல்லவர்கள் ஆண்ட நாட்களிலே செய்யப்படாமலே இருந்தது. எளிய காரியம் தானே என்று இருந்துவிட்டார்கள் போலும். நாங்கள் சின்னவர்களென்பதால் சிறிய விஷயங்களெல்லாம் என் கண்ணுக்குப் படுகிறது. கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தும் அப்பணியின் மூலம் நோய் நொடிகள் நீங்கும். சுகாதாரம் ஓங்கும்.

இதைப் போலவே காவிரி நீர்த் திட்டம் நீண்ட நாட்களாகப் பேசிப் பேசி நிறுத்தப்பட்டதே தவிர நடைமுறைக்கு வரவில்லை.

நண்பர் முனுசாமி அதைச் சொன்னார். அதையும் அவர் காமராஜரிடம் தான் முதலில் சொன்னார். காவிரித் திட்டத்தின் பயன்கள் பற்றி முனுசாமி பேசியதைக் கேட்ட காமராஜர் ‘நீ என்ன வக்கீலா?’ என்று அவரைப் பார்த்துக் கேட்டார்.

காவிரி தண்ணீர்த் திட்டம் நிறைவேற்றப்படயிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

காவிரித் தண்ணீர் இங்கே வருவதில் ஒரு பொருத்தம் இருக்கின்றது. காவிரிக் கரையில் காவிரித் தண்ணீரைக் குடித்து வாழ்ந்தவர்கள் தான் இப்போது இப்பகுதியில் குடியேறியிருக் கிறார்கள்.
அவர்களைத் தேடி வருகிறது காவிரி நீர்.

தண்ணீர் இந்நகரில் நிரம்பத் தேவையிருக்கிறது. பல புதிய தொழில்களுக்கும் தேவையான தண்ணீரும் கிடைக்கும்.

எங்கள் தொழிற்சாலைக்கு 2 லட்சம் காலன் தண்ணீர் கொடுக்க இயலுமா என்று கேட்கிறார்கள். நம்மால் முடியவில்லை யென்றால் வேறு எந்த மாநிலத்தில் தங்கள் தொழிலை துவக்கலாமென்று பார்க்கிறார்கள். தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் கொடுக்கிறோமென்றால் பணம் வாங்கிக் கொண்டுதான் கொடுக்கிறோம்.

இதுபோல சென்னைத் துரைமுகத்துக்கு வருகிற கப்பல்களுக்கும் தண்ணீர் நிரம்பத் தேவைப்படுகின்றது. போதுமான தண்ணீர் இருந்தால் நாமும் கொடுக்கலாம். இப்படி விலைக்கு விற்பதன் மூலம் மட்டும் வருடத்துக்கு ரூபாய் ஒரு கோடி வரை வருமானம் கிடைக்கும். இப்போது பணத்தைச் செலவிட்டு நாம் செய்தாலும் கிடைக்கிற வருவாயைக் கொண்டு அதைச் சரிக்கட்டலாம் என்பதோடு இந்தக் காவிரி நீர்த் திட்டம் இன்னும் பத்தாண்டுகளில் லாபகரமானதாகவும் ஆகிடும்.