அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உணர்ச்சி வெள்ளம்!
சுதந்திரத் திருநாள்
4

எதிர்நீச்சலடித்த இரட்டையர்
பெருந்தன்மையோடு கூடிய பொதுவாழ்வு வெற்றியையன்றி வேறெதையும் தந்திடாது.

அறிவுத் தெளிவுக்கும் வாழ்க்கைப் பணியில் உறுதிக்கும் இவ்விரட்டையர் முன் உதாரணமாகத் திகழ்கின்றனர்.

இவ்விரட்டையரது அறிவாழும் மிக்க புலமையிலும் இவர்களது தருக்க நியதிகளிலும் ஐயப்பாடு என்பது எவருக்குமிருக்காது. இவ்வாறிருப்பினும் அனைவரும் இவர்களை பின்பற்றுவதில்லை.

ஆற்றில் எதிர்நீச்சலடித்து சுழல்தனைச் சந்தித்து மேல்நோக்கிச் சென்றுள்ள இவர்கள் அவ்வாறு செய்தது வீரபிரதாபங்களுக்காக அல்ல. அறிவுத் தெளிவோடு தாங்கள் கொண்ட கொள்கைகளில் உறுதியோடு தாங்கள் தேர்““நதெடுத்துக் கொண்டுள்ள பாதையில் அவர்கள் திடமாகவே சென்றுள்ளனர். எனினும் அவர்கள் வெற்றியையே தழுவி இருக்கிறார்கள்.

ஆற்காடு சகோதரர்கள் என்றழைக்கப்படும் இரட்டையர் தமிழகம் தந்த உரம் மிகுந்த வல்லவர்கள் இந்தியாவின் மேதைகள் உலகறிந்த சான்றோர்-இந்த நூற்றாண்டின் உலக மேதைகளுள் சிலராக மதிக்கப்படுவர்.

இவ்வுலகிலே பெரிய மனிதர் என்ற பெயரெடுக்கத் தாம் கொண்ட கொள்கைகளிலிருந்து விலகிடுபவர் உண்டு. ஆனால் சர்.ராமசாமியோ ஓராயிரம் களம் கண்டவர்.

டாக்டர் லட்சுமணசாமி மருத்துவத்திலும், கல்வியிலும் சிறந்தவர். மருத்துவம் மனித உடலைப் பாதுகாக்க-கல்வி மனித மனத்தைப் பாதுகாக்க என்று வகையில் அவரது பணி பயன்பட்டு வருகிறது. உறுதியான உடலில் தூய்மையாதொரு மனம்-இந்த அவசியத்தை பல்லாயிரவர் உள்ளங்களில் பதிய வைத்தவர் அவர்.

அரசியற் புயலில் அவர் சிக்கிக் கொள்ளவில்லையென்றாலும், தூரத்தே நின்று அரசியலைக் கவனித்து அதை அமைதிப்படுத்துவதில் அவர் ஈடுபட்டார்.

இவ்விரட்டையர் தங்கள் அலுவல் யாவிலும் கடைப்பிடித்த பண்பாடும் நாகரிகமும் தனிச் சிறப்பானவை.

அந்நாட்களில் நடந்த அரசியல் விவாதங்கள் மிக நேர்த்தியானவை. பிரச்சினைகளும் சாதனைகளுமே விவாதிக்கப் படும். அந்த விவாதத்துக்கப்பால் தோழமை உணர்வே அங்கு மிகுந்திருக்கும்.

இந்நாட்களில் அத்தகைய விவாதங்கள் நிகழ்த்தப்படுகின்றவா? பிரச்சினைகளைப் பற்றிப் பேச எழுகின்ற நாமே பிரச்சினைகளாக மாறிவிடுகிறோம். அந்த அளவுக்கு நாம் குன்றி விட்டோம்.

இத்துணைக் கண்டம் அதன் ஜனநாயக வாழ்வின் இருபதாம் வயதினைக் கடந்து கொண்டிருக்கிறது. சர்.ராமசாமி போன்ற பெரியவர்கள் இந்த ஜனநாயக வாழ்வை முறைப்படுத்திட முன் வந்தால்தான் ஜனநாயகம் தழைத்தோங்கும். இல்லையேல் அழிவுப் பாதையை நோக்கி இட்டுச் செல்வதாகவே இருக்கும்.

ஜனநாயகம் என்பதால் சாதாணத் திறமையுடையவர்கள் அரசியலை வழி நடத்திச் சென்றால் போதுமென்று எண்ணுவதோ சொல்வதோ கூடாது. உரம் மிக்க வல்லவர்கள் தேவை. வழி நடத்தும் ஆற்றல் உள்ளவர்கள் தேவை. எனவே 81 வயதிலும் வலிமையுள்ளவர்களாக 81 வயதாகியும் உடல் உறுதியோடு 81 வயதில் 50 ஆண்டைய செறித்த அனுபவங்களையும் கொண்ட இவ்விரட்டையரது வழிகாட்டுதல் நமக்குத் தேவை. வருங்காலத் தலைமுறையினரது நன்மை கருதி தங்களது செறிந்த அனுபவங்களை அவர்கள் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் சுயசரிதையை இவர்கள் இருவரும் எழுதிட வேண்டுகிறேன். அப்படி எழுதப்பட்டால் அது இவ்விருவரது வாழ்க்கையைப் பற்றியதாக மட்டுமிராது. இவர்கள் வாழ்ந்த காலத்தைப் படம்பிடித்துக் காட்டிடும் உன்னதமானப் புகழ்மிக்க அத்தியாயமாக அது விளங்கும்.

நான் எடுத்துக் கூறும் கொள்கையில் எனக்கு நம்பிக்கை உண்டு. இதில் மற்றவர்களும் நம்பிக்கை வைக்கும் காலம் வரும்வரை நான் காத்திருக்கத் தயார். அந்தக் காலம் வரும்வரை விளைவுகளையும் ஏற்கத் தயார் என்று கென்னடி கூறியது போல அதே உறுதியுடன் சர். ராமசாமி விளங்கி வருகிறார்.

ஆங்கிலக் கல்வியின் அவசியம் பற்றிய அவரது கருத்துக்களை இப்போது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், ஏற்றுக் கொள்கிறார்கள். ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி இத்தனை அவசரக் கோலத்தில் திணிக்கப்படுவது கூடதென்று அவர்கள் சொல்கிறார்கள்.

இவ்விரட்டையரது வாழ்வு மகத்தானது. மகோன்னதமானது. சூட்டினை ஏற்படுத்தாது. ஆனால் ஒளியினை உமிழும்.

இவர்களது சேவை இன்னும் நாட்டுக்குத் தேவை. சந்தைச் சதுக்கத்தில் வந்து நின்றுதான் மக்களை இவர்கள் வழிநடத்த வேண்டுமென்பதில்லை.

தாங்கள் இருக்குமிடத்துப் பலகணியில் நின்றபடியே இவர்களால் மக்களுக்கு வழிகாட்டிட முடியும்.

இவர்கள் நிறை வாழ்வு வாழ்வார்களாக.

இனிய மனிதர்
காஞ்சி மணிமொழியாருக்கு 60 வயதாகி விட்டது என்று நண்பர்கள் கூறியபோது இவ்வளவு வயதாகிவிட்டதா என்று மலைத்துப்போய் விடுவோம். காரணம் அத்தகைய இளமைத் தோற்றத்துடன் இருப்பவர்.

இதுவரை நாட்டுக்கு அவர் எந்தவிதமான தொண்டாற்றினாரோ அதே தொண்டைத் தொடர்ந்து ஆற்றி எந்தவிதமான இலட்சிய நாட்டைக் காணவேண்டும் என்று கனவு கண்டாரோ அதைக் காணும்வரை இடைவிடாது பாடுபட வேண்டும் என்று அவரை வேண்டுவதுதான் நாம் அவருக்கு தெரிவிக்கும் பாராட்டு! அதைத்தான் அவர் எதிர்பார்ப்பார்.

இத்தனை வயதாகிவிட்ட பிறகு நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது எதுவும் இருக்காது. ஏனெனில் இளமையிலேயே அவர் எதிர்பார்க்கவில்லை. கழகம் எந்தவிதமான கட்டளையிட்டாலும் அதை நிறைவேற்றியவர் மணிமொழியார். தடியடி படுவதுதான் தமிழ்காக்கும் முறை என்றால்-தடியடி படத் தயாரானார்! சிறை செல்வது தான் செந்தமிழ் காக்கும் வழி என்றால் சிறை செல்லத “தயாரானார்! காடு மேடு சுற்றிப் பிரச்சாரம் செய்வதுதான் தமிழின் பெருமையை உணரச் செய்யும் வழி என்றால் அப்படிக் கடுமையான பிரச்சாரத்தைச் செய்யத் தயாரானார். ஏடுகளை வெளியிடுவது தான் இன்தமிழை வளர்க்கும் பணி என்றால்-அவர் ஏடுகளை நடத்தியிருக்கிறார். இதழ்களை வெளியிட்டிருக் கிறார். மாநாடுகளைக் கூட்டியிருக்கிறார். தமிழ் ஆர்வத்தைக் காட்டியிருக்கிறார்.

இப்படிப்பட்டவர்களால் தான் மிகச் சாதாரணமானவர்களால் துவக்கப்பட்ட தி.மு.கழகம் அரசாளும் பொறுப் பேற்றிருக்கிறார்.

முஸ்லிம் பெருங்கவிஞர் இக்பால் ஒரு கவிதை மூலம் கூறினார்.

சிட்டுக் குருவிகள் வல்லூறைப் போல் கொத்தும் திறனற்றவை. கூர்மையான நகமற்றவை. வல்லூறை விட பலத்தில் குறைந்தவை.

ஆனால் ஒரு காலம் வரும். சிட்டுக்குருவிகள் வல்லூறை வெல்லும் காலம் வரும்! பாமர மக்கள் பாராளும் காலம் வரும்!

என 25 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பாடினார்.

சிட்டுக்குருவிகள் வல்லூறை வென்றதுபோல் பாமரர்கள் இப்போது பாராள்கிறார்கள்.

சிட்டு“குருவிகள் வல்லூறை வென்றது மட்டுமல்ல சிட்டுக் குருவிகள் ஆட்சியை எப்படிக் கவிழ்ப்பது என்று வல்லூறுகள் யோசித்துக் கொண்டிருக்கின்றன இப்போது!

இந்தச் சிடடுக் குருவிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் ஆற்றலே கூட வல்லூறுக்கு இல்லாத போது அதைக் கவிழ்ப்பது எப்படி?

கவிழ்ப்பேன் எனப் பேசுவது ஆசையின் விளைவே தவிர ஆகக் கூடிய காரியமல்ல! நாங்கள் ஆட்சிப் பெறுப்பேற்ற பிறகும் நாம் சிட்டுக் குருவிகள் தான் என்பதை மறக்கவில்லை! அதை மறந்தால் நாங்கள் கவிழ்ந்தோம்! அதை மறக்காதவரை நாங்கள் கவிழ மாட்டோம்.

மந்திரிப் பதவியில் நாங்கள் இருப்பதால் ஏதோ மகிழ்ச்சி யோடிருக்கிறோம் என்று காங்கிரஸ்காரர்கள் நினைக்க வேண்டாம்!

தேர்தலுக்கு முன்பே கூட நான் கூறியிருந்தேன், நாங்கள் ஆட்சிப்பீடம் ஏறவேண்டும் என்பதில் எங்களுக்கு அவசரமில்லை. மக்கள் ஆணையிட்டால் வருகிறோம். பொறுத்திரு, இன்னும் ஐந்தாண்டு காலம் என்றாலும் பொறுத்திருக்கத் தயார் என்றுதான் கூறினேன்.

ஆனால் நாட்டு மக்களுக்குத்தான் அவசரம்! ஆகாத ஆட்சியை எத்தனை நாளைக்குத்தாங்கிக் கொள்வது? இருளில் எத்தனை நாள் தவிப்பது? உதய சூரியன் ஒளி என்று கிடைக்கும்? என்று ஏங்கிய மக்கள்தான் எங்களுக்கு ஆணையிட்டார்கள். ஆளுகிறோம்!

முன்பு (1938-ல்) நடந்த இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களைப் பற்றிச் சொன்னால் உங்களுக்கே கூச்சமாக இருக்கும்.

சென்னை நகரின் மத்தியப் பகுதியில் மயிலை சிவமுத்து என்ற ஒரு பெரியவர். அவரது தமக்கையார் அவருக்குத் துணையாக டாக்டர் தருமாம்பாள் ஆகியோர் இன்னும் சிலர்!
இப்படிப் பல்போன பெரியவர்கள் பத்துப்பேர். மீசை முளைக்காத எங்களைப் போன்றவர்கள் ஐந்து பேர். மீசை முளைத்த வாலிபப் பருவமுடைய மணிமொழியார் போன்றவர்கள் ஐந்து பேர், ஆக 20 பேருடன் மெல்லிய குரலில் இந்தி ஒழிக! இந்தி ஒழிக! என்று ஒலியெழுப்பிச் செல்வோம்.
எங்கள் ஊர்வல ஒலியைக் கேட்டு, வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வந்து பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் நாங்கள் கொடுக்கும் குரல் வீட்டைக் கடந்து, வீட்டுக்கூடத்திற்குக் கூடச் செல்லாது!

அப்படி எங்களுக்குள் பேசிக்கொள்வது போல் இந்தி வேண்டாம் என்று குரல் கொடுப்போம்! இந்தி ஒழிக, என்று உரத்த குரலில் கூறினால் ஆயிரம் பேர் சேர்ந்து கொண்டு ஏன் இந்தி ஒழிய வேண்டும் என்று மிரட்டினாலும் மிரட்டுவார்கள்.

ஆனால் இன்றுள்ள நிலைமை வேறு. இந்தி வாழ்க-என்று கூறுவதற்கு இந்திக்காரரே கூச்சப்படுகிறார்.

பிறந்த பொன்னாட்டை மறக்கக் கூடாது
எவரும் தான் பிறந்த மண்ணை மறப்பது கூடாது. வெங்கட்ராமனும் மறக்கமாட்டார் என்றே நம்புகிறேன். இந்த மண்ணோடுள்ள உறவுதான் நின்று நிலைத்திருக்கக் கூடியதாக இருக்கும். தமிழ்நாட்டின் தேவைகளையும், அவசியங்களையும் உணர்ந்துள்ள அவர் இதுகாறும் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்து தமிழகத்துக்கு நீதி கிடைத்திடச் செய்யவேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த நாம் கொடுத்து புகழெய்தியவர்கள். வாங்கிப் பழகியவர்கள் அல்ல. நாம் கேட்பது பொருளாதார நியாயமே-அரசியல் நியாயம் கோரவில்லை.

இயற்கைக் கனிப் பொருள்கள் கிடைக்குமிடத்தில் தொழில்கள் துவக்கப்பட வேண்டுமென்ற கோட்பாடே கல்லூரிப் பொருளாதார வகுப்பில் படித்திடும் ஆரம்பப் பாடம். இந்த வகையில் தான் சேலம் உருக்காலை திட்டத்தை வலியுறுத்துகிறோம்.

ஒருவர் புகழெய்திவிடுகிறார் என்பதால் இந்த ஆரம்பப் பொருளாதாரப் பாடத்தை மறந்து விட இயலுமா?

இதே வகையில் தான் தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகத் திட்டம் பற்றியும் வலியுறுத்துகிறோம்.
நாட்டின் வரலாற்றில் பரபரப்பானதொரு காலம் இது. இந்தியாவின் கூட்டமைப்பு அரசியல், பல்வேறுபட்ட கட்சிகளில் ஆட்சிகள் ஆங்காங்கு அமைந்துள்ளதால் இயங்க முனைந்துள்ள காலம் இது. இத்தகைய நேரத்திலே வெங்கட்ராமன் டில்லி செல்கிறார்.

பல்வேறு கட்சிகளிடையேயும் ஒன்றுபட்ட உணர்வையும், தோழமையையும் உருவாக்குவதில் அவர் பணி அவசியப்படும். இத்தகையதொரு தோழமை உணர்வை ஏற்படுத்துவதில் தமிழகம் வெற்றி கண்டுள்ளது. இன்றைய விழாவே அதற்கொரு சான்று.

ஒரு கட்சியை மற்ற கட்சி தாழ்வாய்ப் பேசுவது ஜனநாயகம் அல்ல. இத்தனை நாள் ஆட்சி செலுத்தினீர்கள். இதுவரை போதும். எங்களிடம் ஆட்சியை விடுங்கள். இன்னும் வேகமாகக் காரியங்களை நிறைவேற்றுகிறோம் என்று கூறுவதே ஜனநாயகமாக விளங்கும் தத்துவம்.

தமிழகத்திலே நாம் இவ்விஷயங்களில் உறுதியாக இருக்கிறோம்.

டாக்டர் லட்சுமணசாமியின் வாழ்க்கையே சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. அவரது வாழ்நாளில் எத்தனைவிதமான அரசியல் லாபங்கள் அவரைத் தேடி வந்திருக்கும். அதற்கெல்லாம் அசைந்து கொடாமல் என்வழி நான் செல்கிறேன் என்று இருந்துவிட்டார். அலைபாயும் கடலில் திசை காட்டும் கருவியில் பார்வையைச் செலுத்தியபடி கலம் செலுத்தும் தேர்ந்த மாலுமிபோல் டாக்டர் லட்சுமணிசாமி இருந்துள்ளார்.

நாம் நமது குறிக்கோள்களில், நமது அரசியலில் உறுதியுடையவர்களாக இருக்கிறோம். அரசியல் ஸ்திரத்தன்மையும், உண்மை உணர்வும் இங்கு மிகுந்துள்ளது. மற்றவர்கள் நம்மிட மிருந்து பெறவேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று.

இதையெல்லாம் நான் கூறக் காரணம், நண்பர் வெங்கட்ராமனிடம் இந்தக் குணங்கள் நிரம்ப உண்டு என்பதாலேயாகும். இந்தக் குணங்கள் எங்கு தேவைப்படுகிறதோ அந்த இடத்துக்கு வழங்குகிறோம், வெட்கட்ராமனை அங்கு அனுப்புவதன் மூலம்.

அவர்களிடமிருந்து நாம் பெறுவதெல்லாம் இங்கிருந்து அவர்கள் வரியாக எடுத்துச் சென்றதில் ஒரு பகுதியே.

நான் இனி ஒவ்வொரு மாதமும் கையில் ஒரு பட்டியலோடு டில்லியில் வெங்கட்ராமன் அறைக் கதவைத் தட்டுவதாக இருக்கிறேன்.

அப்படித் தட்டத் தேவையில்லை. கதவுத் திறந்தேயிருக்கு மென்கிறார் வெங்கட்ராமன். கதவு திறந்தேயிருந்தாலும் தட்டி விட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டுமென்பது ஆங்கிலேய முறை.
நாம் கொடுக்கும் திட்டங்களைத் திட்டக்குழுவின் சக உறுப்பினர் முன்வைத்து நமக்கு நியாயம் கிடைக்கச் செய்வார்கள் என்று நம்புவோமாக!

வெங்கட்ராமன் தமது பதவியில் சிறப்பாகச் செயலாற்றும் பரிவு செலுத்துவோம் தமிழ் மக்களின் நல்லெண்ணமே அவருக்குச் சிறந்த பக்கப்பலமாக இருக்கும்.

ஏழைகளின் இதயத்தலைவர் ஜீவா

அருமைத் தலைவர் ஜீவாவின் புதல்வி உஷாதேவியின் இந்த மணவிழாச் செய்தி பத்திரிகைகளிலே வெளிவரும் போது அந்தச் செய்தியைப் படிக்கின்ற அனைவரும் மணமக்களை வாழ்த்து வார்கள். இந்த மணவிழா தமிழகம் முழுமைக்கும் மகிழ்ச்சி அளிக்கும் மணவிழாவாகும். காரணம், தமிழகத்திலுள்ள எல்லா மக்களின் நன்மதிப்பைப் பெற்று, குறிப்பாக ஏழை எளியமக்களின் இதயங்களில் இடம் பெற்றவர் ஜீவாவாகும். அத்தகைய ஒப்பற்ற தலைவரின் புதல்வியின் திருமணத்தைத் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் இல்லத்தில் நடைபெற்ற மணவிழாவாகக் கருதி மகிழ்வார்கள்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பெறாத பேற்றை இந்த மணமக்கள் பெற்றிருக்கிறார்கள். காரணம், இந்த விழாவை பெரியார் அவர்களே முன்னின்று நடத்துகிறார்கள்.

ஒரு பெரிய குடும்பத் தலைவர் தனது இல்லத்தில் நடைபெறும் விழா நிகழ்ச்சியின் போது அமர்ந்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பார். அதோ அவன் என் மூத்தமகன் டாக்டர்! இவன் இரண்டாவது பையன் வக்கீல். அவன் மூன்றாவது பையன் என்ஜினியர் என்று அவர்கள் ஓடியாடி வேலை செய்யும் போது பக்கத்திலிருப்பவர்களிடம் கூறிப் பூரிப்பார்.

அதே போலத்தான் பெரியார் அவர்கள் இங்கே பூரித்த நிலையிலிருக்கிறார்கள். இந்த மணவிழாவில் பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் ஓடியாடி வேலை செய்ததைப் பார்த்து எல்லோரும் என் மக்கள்தான். நம்மாலே பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்தான் என்று பெரியார் பெருமைப்படுவார்.

இந்தப் பெருமை உலகில் வேறு எந்தத் தலைவருக்கும் கிடைத்ததில்லை. பெரியார் அவர்கள் தமிழ் போல என்றும், இளமையோடு இருந்து எந்தக் குழந்தையும் தப்பிப் போகாமல் அவர்கள் எந“தக் கட்சியில் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்கள் சார்ந்திருக்கின்ற கட்சிக்கு மெய்யாகத் தொண்டாற்றும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். பார்த்துக் கொள்வார்.

என் பொதுவாழ்வில் நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் பெரியார். நான் அவரிடமிருந்து பிரிந்து சென்றபோது ஒன்றைக் குறிப்பிட்டேன்.

நான் புதிய தலைவரைத் தேடி அய்யா அவர்களிடமிருந்து பிரிந்து செல்லவில்லை என்று குறிப்பிட்டேன். அதே நிலையில் தான் இன்றும் இருக்கிறேன்.

குன்றக்குடி அடிகளார் இங்குப் பேசினார். அவர் எத்தனையோ மணமக்களை வாழ்த்திப் பேசியிருப்பார். ஆனால் அவருக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எண்ணம் ஏற்பட்டிருக்காது.

அதேபோல அடிகளார் கம்பீரமாகக் காட்சியளிப்பதைப் பார்த்து எந்த வாலிபருக்கும் அவரைப் போல் துறவியாக வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டிருக்காது. அவரவர்கள் உள்ள கொள்கைப்படி நடப்பதும் என்ன நெறிமுறைகள் இருக்கின்றவோ அவற்றை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கொண்டு நடத்துதலும் வேண்டும். நாம் வெவ்வேறு இலட்சியத்தில் சென்றாலும் ஒரு இலட்சியத்திற்கு வருபவர்கள்.

பெரியாரவர்களோடும் மற்றவர்களோடும் தம்முடைய லட்சியத்தை விட்டுக் கொடுக்காது பழகினாலும் தம்மைச் சந்தேகப்படுவதாக அடிகளார் குறிப்பிட்டார்கள். அதை அவர் குறிப்பிட்டபோது பெரியார் அவர்களுடன் அரித்துவாரத்திற்குச் சென்றது நினைவுக்கு வந்தது.

மாலை நேரங்களில் பெரியார் கங்கை நதி தீரத்தில் உலாவச் செல்வார். வெண்தாடிப் பளபளக்க மஞ்சள் நிற சால்வை போர்த்திக் கொண்டுபெரியார் முன்னே செல்வார். அவர் எனக்குக் கம்பளிக் கோட்டு வாங்கித் தராததால் குளிர் தாங்காமல் நான் கைகளை இறுக்கக் கட்டிக் கொண்டு அவர் பின்னாலேயே போவேன்.
இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பெரியார் அவர்களைப் பெரிய சாமியார் என்றும், என்னைச் சின்னச்சாமியார் என்றும் கருதிவிட்டார்கள். பெரிய சாமியாருக்கு இருக்கின்ற சக்தியில் சீடருக்குக் கொஞ்சமாவது இருக்காதா என்று கருதி என் காலிலும் பலர் விழுந்து கும்பிட்டார்கள்.
இங்கே நாங்கள் வேறு விதமாக கருதப்பட்டாலும் அரித்துவாரத்திலிருந்தவர்கள் எங்களைச் சாமியார்களாகவே கருதிவிட்டார்கள். அதேபோல் சிலர் சந்தேகப்படுவது இயல்பு.

நெடுந்தொலைவு போன மகன் திரும்பத் தந்தையைப் பார்க்க வரும்போது கையில் கிடைத்ததை வாங்கி வந்து தருவான். அதேபோல் இன்று பெரியாரைப் பார்க்க வந்த நானும் ஒரு அன்புப் பரிசை கனியை ஏதோ என்னால் இயன்றதைக் கொண்டு வந்திருக்கிறேன்.

சுயமரியாதை இயக்கத் திருமணங்களை நடத்திச் சாதி ஒழிப்புக்காகப் பெரியார் பாடுபட்டு வருகிறார். பகுத்தறிவுத் திருமணங்களும் கலப்புத் திருமணங்களும் நாட்டில் ஏராளமாக நடைபெற்றிருக்கின்றன. இந்தத் திருமணங்களைச் செல்லும்படி யாக்கச் சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டுவரப் போகிறோம் என்ற நல்ல செய்தியை அன்புப் பரிசை கனியைப் பெரியாரிடம் அளிக்கிறேன்.

மனித இனத்தின் ஊதியம்
உலகில் புகழ் வேண்டாம் என்று கூறுபவர்கள் மூன்று வகைப்படுவர், ஒன்று புகழ் நமக்கு வராது என்று தெரிந்து கொண்டிருப்பவர்கள். இரண்டு தேவைக்கு மேல் புகழைச் சேர்த்து வைத்திருப்பவர்கள். மூன்று-புகழின் பயனை அறியாதவர்கள்.

ஆனால், ஈதல், இசைபட வாழ்தல் (புகழுடன் வாழ்தல்) ஆகியவைதான் மனித உயிருக்கு ஊதியம் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப் பெருந்தகை கட்டளையிட்டிருக்கிறார்.

அத்தகைய புகழ்வாழ்வை மேற்கொண்டவர் ராசா சர்முத்தையாச் செட்டியார் அவர்கள். நான் அவருடன் பலதுறைகளில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன், வணிகத் துறை ஒன்றைத் தவிர, ஒரு அரசியல் கட்சியில் (ஜஸ்டிஸ் கட்சியில்) நாங்கள் அங்கம் வகித்திருக்கிறோம். என்னை அந்தக் கட்சியின் சார்பில் சென்னை கார்ப்பரேஷனுக்கு நிறுத்தி வைக்க கட்சியின் மேலிடத் தலைவர்கள் கூடிப் பேசினர்.

அப்போது சிலர், அண்ணாதுரை தேர்தலில் ஈடுபடும் அளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை என்ற ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால் முத்தையா செட்டியார் அவர்கள்தான் இதுபோன்ற கண்ணோட்டம் இனிக்கூடாது. வாலிப வயதில் பொதுத் தொண்டில் ஆர்வம் இருப்பவர்கள்தான் இனித் தேர்தலில் நிற்க வேண்டும். ஆகவே அண்ணாதுரையை நிறுத்தலாம் என்று வாதாடினார். எதிர்கால அரசியல் எப்படி உருவெடுக்கும் என்பதை அப்போதே அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

அதுமட்டுமல்ல! இந்தி புகுத்தப்பட்ட நேரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சென்னையிலுள்ள தங்கச்சாலையி லிருந்து ஜலண்டு மைதானம் வரை தமிழ்க் கொடியைத் தோளில் சுமந்து கொண்டு நடந்தார்.

இந்தத் தமிழ் இயக்கம் படிப்படியாக வளர்ந்து நாட்டை ஆள்கிற கட்சியாக வளர்ந்திருக்கிறது.

அன்று கொடி துவக்கியவர் என்ற முறையில் இப்போது பங்கு கேட்காத பண்பை-பெருந்தன்மையை நான் நினைத்து நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

தமிழ் ஆர்வம்-இந்திக்கு எதிர்ப்பு-மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் ஆகியவற்றை அவரது புதிய நண்பர்கள் எதிர்பார்த்தார்கள். பழைய நண்பர்கள் பயந்தார்கள். ஆனால் அந்தக் கொள்கைகளை அவர் கைவிடவில்லை.

இதைப்பற்றி ஒருமுறை காங்கிரஸ் அமைச்சர் என்னிடம் அவரை எங்கள் கட்சிக்கு அனுப்பினீர்களே தவிர-உங்கள் கொள்கைகளுடன்தான் அனுப்பினீர்கள் என்று கூறினார்.

ஜனநாயகத்தில்தான் இப்படிப்பட்ட கருத்துவேற்றுமை இருந்தாலும், ஒத்துப்போகும் பண்பு இருக்கும். எல்லோரும் ஒரே கருத்துடன் இருப்பதல்ல சமத்துவம்.

ஒரே செடியில் பூத்தாலும் மலர்கள் அளவில் பெரியதும் சிறியதுமாகத்தானே இருக்கும்.

ஒரே மதத்தில் காய்த்தாலும் கனிகள் அளவில் பெரியதும் சிறியதுமாகத்தானே இருக்கும்.

ஒரே பழத்தில் ஒரு பக்கம் புளிப்பும்-மறுபக்கம் இனிப்பும் இருப்பதுண்டு.

இதைப் பற்றிக் கூறவந்த பேரறிஞர் வாங்கி சமத்துவம் என்பது ஒரே தன்மையுடன் இருப்பது அல்ல! என்றார்.

பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும்- ஒத்துப் போகும் பண்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஜனநாயகம் இயங்குகிறது.

என் கருத்துக்கு நான் எவ்வளவு மதிப்புத் தருகிறேனோ அவ்வளவு மதிப்பு, பிறருடைய கருத்துக்கும் தரவேண்டும்! என் கருத்தை வலிவுபடுத்தும் வாதங்களை பிறர் எவ்வளவு தூரம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வளவு தூரம் அவர்களது வாதத்தையும் கேட்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் பல நாடுகளில் அரசியல் முறை நடைபெறுகிறது. அந்த முறை இங்கே வரவேண்டும்.

-முதல் பதிப்பு: 1972, வெளியீடு: அறிவுப்பண்மை.