அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அரசாண்ட ஆண்டி
2

ரிஷ்லு குடும்பத்துக்கு, மூன்றாம் ஹென்ரி எனும் பிரெஞ்சு மன்னன், லூகான் நகர தேவாலயத்தை இனாம் தந்திருந்தான். பிரெஞ்சு நாட்டிலே, மன்னர்கள் இப்படி ‘குரு பீடங்களை’, ‘தேவாலயங்களை’, ‘பூஜா மடங்களை’ தமது இஷ்டம்போல் இனாம் தருவது வாடிக்கை.

இன்றுமுதல், இராமேஸ்வரம் தேவஸ்தான அதிபராக இராமாச்சாரியார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் அவரது பின் சந்ததியாரும் ராமேஸ்வரம் தேவஸ்தான அதிபராக இருந்து, அதனால் கிடைக்கும் வருமானத்தை அடைந்து கொள்வர் - என்று ஒரு சர்க்கார் உத்தரவு இப்போது கிடையாது, இயலாது, ஜனநாயகம் அனுமதி அளிக்காது புரட்சிக்கு முன்பு பிரான்சிலே இது சர்வசாதாரணமான முறை. மன்னர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, நிலபுலன்களை, மாட மாளிகைகளை, பதவி பவிசுகளை, தானாமாகத் தருவதுபோலவே, குருபீடங்களையும் தேவாலயங்களையும் தருவர்! அதுமுதல் அந்த ஆலய வருமானத்தை அந்தக் குடும்பத்தார் அனுபவித்துக் கொள்வார்கள். அவர்களாகப் பார்த்து ஆலய காரியங்களைக் கவனிக்க சம்பளத்துக்குப் பூஜாரியை நியமிப்பர். இந்த அலங்கோலமான முறை அமுலில் இருந்த காலம் அது. லூகான் நகர தேவாலயத்துக்கு அந்த நகர மக்கள் செலுத்தும் காணிக்கை, அந்த நகர மக்கள் மதச்சடங்குகளுக்காகச் செலுத்தும் ‘தட்சணை’ யாவும், ரிஷ்லு குடும்பத்தாருக்குச் சொந்தம். மதச் சடங்குகளை நடத்தி வைக்கவும், ஆலயத்தில் தொழுகை பஜனை இவற்றை நடாத்தவும், ஓர் ‘அர்ச்சகர்’ வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவருக்குத் தந்த சம்பளம் போக, மீதமிருக்கும் தொகையைக் குடும்பம் எடுத்துக் கொண்டது.

லூகான் நகர தேவாலயம், அதிக வருமானம் தருவதல்ல - ஏழைகள் நிரம்பிய சிற்றூர். எனவே, சம்பளத்துக்கு அர்ச்சகரை வைப்பதைவிட, ரிஷ்லுவே, அந்த ‘வேலை’யைப் பார்த்துக் கொண்டால் இலாபகரமாக இருக்கும் என்ற எண்ணம் பிறந்தது. சாமான்யக் குடும்பம் தானே.

ரிஷ்லு அப்போதுதான் இராணுவக் கல்லூரியில் திறம்படப் பயிற்சி பெற்று வந்தான். அவன் நிலையிலிருந்த எந்த வாலிபனும் இராணுவ உடை தரித்துக்கொண்டு, குதிரை மீது சவாரி செய்துகொண்டு, உல்லாசமாக வாழலாம் போர் மூண்டால், களத்திலே, திறம்காட்டி, வீரத்தை விளக்கி, விருது பெறலாம், தளபதியாகலாம் என்றுதானே எண்ணுவான். காவி அணிந்து கமண்டலம் ஏந்தி, பாவிகளை இரட்சிக்கும்படி பரமனிடம் ‘பூஜை’ செய்யும் பண்டார வேலைக்குப் போக மனம் ஒப்புவானா? ரிஷ்லு சம்மதித்தான்! வாள் ஏந்திய கரத்தை, ஜெபமாலை ஏந்தும் கரமாக்கிக் கொள்ள இசைந்தான். வலப்புறம், இடப்புறம் எதிர்ப்புறம் என்று குதிரையைச் செலுத்தி, போர்முறை பயின்று வந்தவன், அந்திவேளைப் பூஜை, அதிகாலைப் பூஜை அருள் கூறல், பிரசாதம் வழங்கல்; ஆறுதலளித்தல், குற்றம் கடிதல் என்பன போன்ற காரியங்களில் ஈடுபட இசைந்தான். காரணம் என்ன? எந்தக் காரியம் செய்தாலும், திறமையை விளக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா, அதுதான் தேவை, ரிஷ்லுவுக்கு, அவ்வளவு தன்னம்பிக்கை! தளபதியாவதற்கான துறையை விட்டுவிட்டு, ‘சாமியார்’ வேலையை மேற்கொண்ட ரிஷ்லு, லூகான் தேவாலய நிர்வாகக் காரியத்தை ஒழுங்குபடுத்துவதிலே மும்முரமாக ஈடுபட்டான். அருள்பெறும் திருமுறையை மக்களுக்கு அறிந்துரைக்கும் பணியான ‘பூஜாரி’ வேலையை மேற்கொண்டபோது, ரிஷ்லுவுக்கு வயது பதினேழு!

லூகான் நகருக்கு வந்து வேலையை ஒப்புக் கொள்வதற்கு முன்பு, ரிஷ்லு, தன் புதிய தொழிலுக்குத் தேவையான திறமையைப் பெற, பாரிஸ் சென்று மார்க்க சம்பந்தமான படிப்புக்காக இரண்டாண்டுகள் செலவிட்டான். எவ்வளவோ பேர், பூஜாரிகளாக உள்ளனர். கிடைக்கும் வருமானத்தோடு திருப்தி அடைந்து, கிராமத்துக் கொல்லனும், உழவனும், ஜெபமாலை உருட்டும் கிழவியும், பாவமன்னிப்புக் கோரும் முதியவனும் தரும் பாராட்டுதலைக் கேட்டுக் களித்து, இதுபோதும் தமக்கு என்று. ரிஷ்லு, அப்படியல்ல! லூகான் தேவாலய அதிபர் யாராலும் பாராட்டப்பட வேண்டியவராக வேண்டும். மற்றத் தேவாலய அதிபர்களெல்லாம் இரண்டோர் ஏடுகளை மனப்பாடம் செய்து கொண்டவர்கள், ஆழ்ந்த ஆராய்ச்சி, அறிவுத் தெளிவுள்ள விளக்க உரை தரும் ஆற்றல் இல்லாதவர்கள். லூகான் நகர தேவாலய அதிபராக, அரும்பு மீசை வாலிபன் ஒருவன் அமர்ந்திருக்கிறான், அவனுடைய அறிவே அறிவு, அவன் அளிக்கும் உபதேசமே உபதேசம் என்று அனைவரும் புகழ்ந்து பேசவேண்டும்; மக்களின் கவனத்தைக் கவரவேண்டும். அந்தப் புகழொளி, பாரிஸ் நகரில் தெரிய வேண்டும்; அழைப்பு அங்கிருந்து கிடைக்கவேண்டும் - இது ரிஷ்லுவின் எண்ணம். கிடைக்கும் வாய்ப்பை, பெரியதோர் நிலைபெற உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கம். எனவேதான், பரம்பரை பாத்யத்தையாகக் கிடைத்த பூஜாரி வேலை என்றாலும், மதவாதிகள் உலகு மதிக்கும் விதமான அறிவாற்றல் பெற்று, அந்த வேலையில் ஈடுபடவேண்டும் என்று ரிஷ்லு திட்டமிட்டான். இரண்டாண்டுகள் கடுமையாக உழைத்து, மத ஏடுகளில் பெரும்புலமை பெற்றான்.

உண்மையிலேயே மார்க்கத் துறையிலே நம்பிக்கையும் அக்கறையும் பிறந்து, எந்தச் சந்தேகத்தையும் பஞ்சு பஞ்சாக்க வல்ல ஆதாரங்களை ஆய்ந்தறிந்து கொள்ளவேண்டும், மெய்ஞ் ஞானத்தின் தன்மையை உணரவேண்டும், சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வத்தை, தேஜோமாயானந்தத்தை அறிந்து மகிழவேண்டும். பாவப் பிணி அகலும், பற்றும் பாசமும் மாய்ந்தொழியும், அருள்கிட்டும், பரலோகத்தில் சீரியதோர் நிலை கிடைக்கும் என்பதற்காக, இரவு பகலாக, ஆண்டுக்கணக்கில், மத ஏடுகளைக் கற்றும், விதவிதமான ‘ஞானசிரியர்களை’ அடுத்தும், பக்குவம் பெறுவர் - சிலர் - பலர் முயல்வர். ரிஷ்லுவின் நோக்கம் அவ்விதமானதல்ல. உலகத்தின் மாய்கையை, வாழ்க்கையின் நிலையாமையை, உணர அல்ல. ஏடுகளைப் படித்தது; அவைபற்றி, கேட்போர் மெச்சும்விதமாக எடுத்துரைக்க! அதன் மூலம் தன் புகழ் பரப்ப! புகழொளியைத் துணைகொண்டு, உயரியதோர் பதவி பெற, பாரிசில் அரசோச்சும் குழுவிலே அமர, அரசாள!

லூகான் நகர தேவாலய அதிபராகி, அதிலேயே மூழ்கிவிட விரும்பவில்லை. இது ஒரு கட்டம் - முக்கியமானது - கூர்ந்த மதியுடன் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், வேறு பல கட்டங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பது ரிஷ்லுவின் திட்டம். யாரும் எதிர் பார்த்திருக்கமாட்டார்கள். அநேகருக்குத் தோன்றவே செய்யாது. ஆனால் ரிஷ்லு எல்லோரையும்போல அல்ல. அவன் மனத்திலே உறங்கிக் கொண்டல்ல, உலவியபடி இருந்த ஆசைகள் அநேகம். எல்லா ஆசைகளும் ஆதிக்கம் பெறவேண்டும், ஈடில்லை எதிர்ப்பில்லை என்ற நிலை பெறவேண்டும் என்பதுதான். வாளின் கூர்மையைப் பாராட்டும் வீரன், களத்திலே வெற்றியும் கீர்த்தியும் பெறுவதற்கு வாளைத் துணையாகக் கொள்வான் - மற்றவாள்களுடைய கூர்மையைவிட என் வாளின் கூர்மை நேர்த்தியானது என்று பேசிக்கொண்டா காலங் கடத்துவான்!

பாரிசில், மத ஏடுகளைக் கற்று, ரிஷ்லு, பல பரிட்சைகளில் தேறினான். திருப்தியில்லை. ரோமபுரி சென்று போப்பாண்டவரைக் கண்டுவர ஆவல்கொண்டான்.

கத்தோலிக்க உலகுக்கு போப்பாண்டவர் கண்கண்ட கடவுள்! அரசுகள்! போப்பாண்டவரின் ஆசிபெறத் தவங்கிடந்தன. பிராடெஸ்ட்டென்ட் புயல் வீசி, ஆதிக்கம் ஓர் அளவுக்கு அழிந்துபட்டது என்றபோதிலும், ரிஷ்லுவின் நாட்களிலே போப்பாண்டவருக்கு, பிரான்சிலேயும், கத்தோலிக்க மார்க்கத்தைக் கொண்டிருந்த வேறுபல ஐரோப்பிய நாடுகளிலேயும், அளவற்ற செல்வாக்கு. பக்திமிக்க கத்தோலிக்கர், போப்பின் தரிசனம், பாப விமோசனம் என்று எண்ணுவர் - பரமண்டலத்
திலே பிதா முன்னிலையிலே செல்வது போன்ற புனிதத்தன்மை நிரம்பியதாகவே போப்பாண்டவரைத் தரிசிப்பதைக் கருதுவர்.

ரிஷ்லு, போப்பாண்டவரைக் காண விரும்பியது, இந்த நோக்குடன் அல்ல! இதோ ஒரு புதிய நட்சத்திரம், இதன் ஒளியின் அழகுதனைக் காணீர்! என்று போப்புக்கு எடுத்துக் காட்டவே, ரிஷ்லு ரோம் சென்றான். அங்குப் புகழ் பெறவேண்டும் என்பது நோக்கம். அதற்கோர் வாய்ப்பும் கிடைத்தது. தேவாலய அதிபர் பதவிக்கு ஏற்ற வயது இல்லை. ரிஷ்லுவுக்கு. எனவே, போப்பாண்டவரிடம் மனு செய்துகொண்டு, அவர் ஆசியும் அனுமதியும் பெற்ற, வயதில் சிறியவனாயினும் வல்லமைமிக்கோன், எனவே இவன் ஆலய அதிபனாகலாம் என்று அவர் கூறவேண்டும் - இதனைச் சாதிக்க, சிபாரிசு தேவை இல்லை; நானே செல்வேன். மார்க்க சம்பந்தமான துறையிலே எனக்குள்ள புலமையையும் திறமையையும் அவரே காணட்டும். அனுமதி எளிதில் அளிப்பார், என்று கூறிவிட்டு ரிஷ்லு ரோம் சென்றான் - அனுமதியும் பெற்றான்.

ஐந்தாம்பால் என்பவர் அப்போது போப்பாண்டவர். அவர் அவையிலே, மார்க்கத்துறைத் தலைவர்களும் அரசியல் துறைத் தலைவர்களும் நிரம்பி இருந்தனர். ரிஷ்லு, அந்த அவையினர் மகிழத்தக்க மதி நுட்பத்தைக் காட்டி வெற்றிபெற்றார். ஒரேமுறை, ஓர் உபதேசியார் அருளிய உபதேசத்தைக் கேட்ட ரிஷ்லு, உடனே அப்படியே அதை, தவறு துளியுமின்றி ஒப்புவித்தாராம் - அதிசயமடைந்த போப்பாண்டவர் ரிஷ்லுவை அழைத்து, ஒப்புவிக்கச் சொல்லிக் கேட்டு இன்புற்றாராம். அதேபோது ரிஷ்லு, உபதேசம் எப்பொருள்பற்றியதோ அதே பொருள் குறித்துத் தானே புதியதோர் உபதேசம் தயாரித்துச் சொற்பொழி வாற்றினாராம்; போப் மிகவும் பாராட்டினாராம்.

“ஆசாமி பெரிய எத்தனாவான்” - என்ற பொருள்பட போப் ரிஷ்லுவைப் பற்றிக் கூறினாராம்.

போப்பாண்டவரிடம், ரிஷ்லு, தன் உண்மை வயதை மறைத்துத் தவறான சீட்டுக் காட்டி ஏய்த்தார் என்றும் வதந்தி உண்டு. ரிஷ்லுவுக்கு இது தெரியாத வித்தையல்ல!

ரோம் நகரிலே புகழ் ஈட்டிக் கொண்டு பதவிக்கான அனுமதியும் பெற்றுக்கொண்டு, ரிஷ்லு, பாரிஸ் திரும்பினார்.

ரோம், மார்க்கத்துறைக்குத் தலைநகரம்!

பாரிஸ், அரசியல் உலகுக்குத் தலைநகரம்!

முன்னதில் ஜெபமாலை ஏந்திய கரத்தினர், வாளேந்திய மன்னரைச் சீடர்களாகக் கொள்ளும் முறைபற்றிய விளக்கம் கிடைத்தது. ரிஷ்லுவுக்கு.

பாரிசில், அரசோச்சும் அதிபர்கள், ஜெபமாலையையும் தமது சுயநலத்துக்காக எப்படிப் பயன்படுத்துகின்றனர், என்ற தெளிவு கிடைத்தது.

பாரிசில், அரசியல் சம்பவங்கள் மின்னல் வேகத்தில்! ரிஷ்லு, அவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்தார்.

லூகான் நகர தேவாலய அதிபர் - போப்பாண்டவரின் ஆசியும் பெற்றவர் - இவருக்கு எதற்காகப் பாரிஸ் பட்டணத்துப் பகட்டுடைக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிய அக்கறை என்று எண்ணுவீர்கள் - உடைமட்டும்தானே காவி! உள்ளமோ அரசியலில் ஆதிக்கம் பெறவேண்டும் என்பதல்லவா!

“ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” - இது ஏமாளிக் கொக்கு அல்ல. உறுமீன் வருமளவும் ஓடுமீன் உண்டு, காத்துக் கொண்டிருந்தது!

லூகான் நகர தேவாலயம் ஆண்டுக்கு 13,000 லிவர்ஸ் (பிரான்சு பவுண்டு) வருமானமே உடையது. இந்த அற்பத் தொகைக்காக அல்ல, ரிஷ்லு ஆசைப்பட்டது! அவன் மனத்திலே உதவிய எண்ணத்தில் முன்பு, இந்தத் தொகை வெறும் தூசு. பலருடைய கவனத்தைக் கவருவதற்கு இந்த இடம் ஒரு வாய்ப்பாக இருக்கட்டுமே என்பதற்காகவே, லூகான் தேவாலயம் வேலையை ஏற்றுக்கொண்டான்.

பழைய கட்டடம் - படாடோபம் கிடையாது - அதிகமான பணப் புழக்கம் இல்லை - தங்க வெள்ளி தட்டுகள் இல்லை - பட்டு விரிப்புகள் கிடையாது - சாமான்யமான நிலை, லூகான் நகர தேவாலயம். இதிலே உலவியபோது ரிஷ்லுவின் உள்ளம், அடைபட்டுக் கிடந்த சிங்கம் போன்றிருந்தது. கூண்டுக்குள் உலவிடும்போதும், சிங்கத்தின் நடையிலே ஒரு கம்பீரம் இருப்பதுபோல, இந்தச் சாமான்யமான தேவாலய அதிபர் எனும் சிறையிலும், ரிஷ்லு, தன் திறம் பிறர்க்கு விளங்கும் வகையிலே நடந்து கொண்டான்.

“என் வீடு சிறை போன்றது! பூந்தோட்டம் இல்லை - உலவும் இடம் கிடையாது - எங்கும் புகை மயம் - வெள்ளித் தட்டுகள் இருந்தாலாவது பரவாயில்லை, கிடையாது...” என்று ரிஷ்லு, குறைபட்டு, நண்பருக்குக் கடிதம் எழுதினான்.

அதே ரிஷ்லு, கார்டினல் ரிஷ்லுவாகி, பிரான்சை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பெற்ற பிறகு, புதிதாகக் கட்டிய ‘கார்டினல் மாளிகை’க்கு, நிலத்தைப் பண்படுத்தவும், மாடிகள் அமைக்கவும் மட்டும் 3,36,000 லிவர்ஸ் செலவிட்டான். கட்டடச் செலவு 4,10,000! அலங்கார அமைப்புகள், நீர் ஊற்றுகள், பூச்செடிக்கான தொட்டிகள் இவற்றுக்காக மட்டும், 60,000!

உலவ இடமில்லை என்று வாட்டம் - பிறகு, உலவ நேரமில்லை என்ற வருத்தம். மன்னன் கண்டு அதிசயிக்கத்தக்கதும், பிரபுக்கள் கண்டு பொறாமைப்படத்தக்கதுமான மாளிகை இரண்டு அமைத்திட முடிந்தது. புகை கப்பிக்கொண்டு, ஓதம் நிறைந்து, சோகமூட்டும் நிலையிலிருந்து தேவாலய அதிபராக வாழ்க்கையைத் துவக்கிய இந்தக் காரியவாதியால்!