அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அரசாண்ட ஆண்டி
3

ரோம் நகரில் மார்க்கத் துறையினரின் மந்திராலோசனை களைக் கண்டும் கேட்டும் பழகிய ரிஷ்லு, பாரிஸ் பட்டினத்துப் படாடோபத்தைக் கண்டு பழகிய ரிஷ்லு, சேறும்சகதியும், நிரம்பிய லூகான் நகரின் தோற்றத்தையும் அங்கு உலவிய மக்களின் எளிய வாழ்க்கையையும் கண்டு, எப்படி மன அமைதி கெடாமலிருக்கமுடியும்! பாரிசின் பகட்டு எங்கே, இந்தப் பட்டிக்காட்டிலே கிடக்கும் சோர்வு எங்கே! வெறுப்பும் சலிப்பும், எவருக்கும் தோன்றும். ரிஷ்லு, அதற்கு இடம் தரவில்லை. அழைப்புக் கிடைக்கு மட்டும் இந்த எளிய நிலை! இந்த எளிய நிலையிலும், உயரிய முறையைக் காட்டியாகவேண்டும் என்று எண்ணினான். அழைப்பு வந்தது! அரசாண்டு வந்த அம்மையிடமிருந்து அல்ல! அம்மையை ‘ரசித்து’ வந்த இத்தாலியனிடமிருந்துமல்ல! அரசியல் நிலைமை, அழைப்பு விடுத்தது! பிரான்சு, தன் பேரவையை, முப்பெரு மன்றத்தைக் கூட்டிட முனைந்தது. பெரியதோர் மேகம் அரசியல் வானில்! ரிஷ்லு, தன் சமயம் பிறந்தது என மகிழ்ந்தான்.

பிரபுக்கள் - அருளாளர்கள் - மக்கள் சமுதாயம், இப்படி முப்பெரும் பிரிவு கொண்டதாகக் கருதப்பட்டது, பிரான்சு அரசியல் அமைப்பில். பிரபுக்களின் பிரதிநிதிகள். மார்க்க அதிபர்களின் பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகள், எனும் முப்பெரும் பிரிவும் ஒருசேரக் கொண்டபேரவை, பிரான்சு நாட்டு அரசியல் நெருக்கடிகளின்போது, கூட்டப்படும். கரத்திலே வலிவும், கருத்திலே முறுக்கும் இருக்குமட்டும்,பேரவை பற்றிச் சட்டை செய்வதில்லை, மன்னன் - மமதை ஒன்றே போதும்; அதை ஊட்டச் சில செருக்கு மிக்க பிரபுக்கள் போதும், எதிர்ப்பை ஒழிக்க சிறுபடை போதும் என்று இருப்பான் - குழப்பம் நாட்டிலும் மனத்திலும் மூண்டுவிட்ட சமயத்தில், என்ன செய்வது என்று திகில் பிறக்கும்போதுதான் மக்களின் குரல் செவியில் சிறிதளவு விழும்; மக்களோ, “பேரவை கூடட்டும்” என்று தான் முழக்கமிடுவர்.

எல்லா உரிமைகளையும் வழங்கவும் பாதுகாக்கவும் நாட்டின் பொது நிலையைப் பாதுகாக்கவும், ஆற்றல் கொண்டது பேரவை, என்ற எண்ணம் பிரான்சு மக்களுக்கு. அவர்கள் எண்ணியபடியே, இந்தப் பேரவை கூடி, எடுத்த முடிவுகளின்படிதான், ‘பதினாலாம் லூயி மன்னன் காலத்திலே மாபெரும் புரட்சி வெற்றிகரமாகக்கப்பட்டது. அது, மன்னனின் தலையைக் கொய்த பேரவை! இது அலங்காரப் பேரவை! இந்தப் பேரவையும் கூட்டவேண்டி நேரிட்டதற்குக் காரணம், அரசாண்டு வந்த மேரி அம்மைக்கும், அரச குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்ட பிரபுக்கள் சிலருக்கும் மூண்ட பகை, பெரு நெருப்பாகிப் பிரான்சைப் பொசுக்கிவிடுமோ என்ற கிலி பிறந்ததால் தான்!

பிரான்சு நாட்டுப் பிரபுக்கள் - உலகத்துக்கே ஜனநாயகத்தை வழங்கிய வள்ளல்கள்!

இந்தப் பிரபுக்களின் அட்டகாசமும் ஜம்பமும் குரூரமும் மடைமையும் கொலைத் தொழிலும் சதிச்செயலும், ஏழையரை இம்சித்ததும் எளியோரை அழித்ததும், பருகிய மதுவும், பதம்பார்த்த கன்னியரின் கற்பும், இவர்களின் கோலாகலம், கிளம்பிய வெறுப்புணர்ச்சியுந்தான். பிரான்சிலே மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும், உலகிலேயே என்றும் கூறலாம், மக்களை நிமிர்ந்து நின்று ஏன் என்று கேட்டு, உள்ள உயிர் ஒன்றுதான் அது பிரிவதும் ஒரு முறைதான், சாகுமுன் உன்னைச் சாய்த்திடப் போரிட்டே தீருவேன், என்று வீர முழக்கமிட்டுப் புரட்சி நடாத்தி, மக்களாட்சியை ஏற்படுத்த உதவிற்று! இந்தப் பிரபுக்கள், தர்மம், தயை, தாட்சண்யம், அறிவு, ஆற்றல், அன்பும், நன்றி, எனும் பண்புகளுடன் நல்வழி நடந்திருந்தால், மக்களாட்சி மலர்வது மூன்று நான்கு நூற்றாண்டுகளாவது தாமதப்பட்டிருக்கும். காட்டிலிருக்கும் புலி, ஊருக்குள் நுழைந்து, ஆடுமாடுகளைக் கொன்று, மேலும் கொல்ல ஊர்க்கோடிக் கொல்லையிலே பதுங்கிக் கொள்ளும்போதுதானே ஊரார் திரண்டு சென்று, உயிருக்குத் துணிந்து நின்று, புலியைக் கொன்றுபோடுவர். பிரான்சின் பிரபுக்கள், புலிகளாயினர் - குகைக்குள்ளேயும் இல்லை - எதிர்ப்பட்ட ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சினர் - எனவேதான், மக்களாட்சி மலர முடிந்தது. ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவான உரிமைதானே. நாடு என்பது அனைவருக்கும் பொதுதானே, நாட்டு வளம் பெருகுவதும், எதிரிகளிடமிருந்து நாடு காப்பாற்றப்படுவதும், எல்லா மக்களின் ஒன்றுபட்ட திறமையாலும் உழைப்பாலும் தானே, எனவே மக்கள் அனைவருக்கும்தானே அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். என்ற தத்துவப் பேச்சு மட்டுமல்ல. மக்களாட்சியை மலரச் செய்தது! பிரபுக்களின் அக்கிரமம், புரட்சியை மூட்டிற்று, புரட்சித் தீயிலிருந்து, மக்களாட்சி மலர்ந்தது! அந்த முறையின்படி, பிரான்சின் பிரபுக்கள், உலகுக்கு ஜனநாயகத்தை வழங்கியவர்களாவர்.

1,40,000 பிரபுக்கள் இருந்தனர். பிரான்சில்! எல்லோரும் செல்வச் சீமான்களல்ல, பலர் ஆடி அழிந்ததால் கடன்பட்டுச் சொத்தை இழந்துவிட்டு, விருது மட்டும் வைத்துக்கொண்டு வெட்டிகளாகத் திரிந்தனர். இருபது முப்பது குடும்பம், செல்வமும் செல்வாக்கும் நிரம்பப் பெற்று, அரசு செலுத்துப வரும் அச்சம் கொள்ளத்தக்க ஆர்ப்பரிப்புடன் இருந்து வந்தது. அவர்களுக்குத் தனிக் கோட்டைகள், கொடி மரங்கள், படைகள், பாசறைகள் - ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வர். அரசனால் தடுக்க முடியாது, அரசனையே எதிர்ப்பர், அரசன் அவர்களை அடியோடு அழிக்கமுடியாது. அவர்களுக்குத் தனி விசாரணை மன்றங்கள்! தனிச் சட்ட திட்டங்கள்! அரசுக்குள் ஓர் அரசு! பாரிசில் ஒரு பட்டத்தரசன் என்றால், பிரான்சிலே பகுதிக்குப் பகுதி, பட்டத்தரசர்களைவிடக் கொட்டமடித்துக் கொண்டு பிரபுக்கள் கோலோச்சி வந்தனர், வரி செலுத்த மாட்டார்கள், அரசனுக்கு. தமது ‘பிரஜைகளிடம்’ வரி வசூலிப் பார்கள் கண்டிப்புடன், மன்னன், சலுகைகள் காட்டுகிற வரையில் சல்லாபம் செய்வர், சலுகை குறைந்தால், சதியோ, சமரோ கிளம்பும்! அரச விருந்துகளிலே முதலிடம்! கேளிக்கைக் கூடங் களுக்கு அழைப்பு! உல்லாசப் பயணத்துக்கு வருவர்! நாட்டுக்குப் பேராபத்து எனில், வரிந்து கட்டிக்கொண்டு எதிரியைத் தாக்குவரோ இஷ்டமிருந்தால்! எதற்கும் கட்டுப்பட மாட்டார்கள் ஒரு சில கண்வெட்டுக்காரிகளுக்கு மட்டுமே கட்டப் படுவர்! உட்பகை நெளியும்? ஒரு மாளிகை பற்றி மற்றோர் மாளிகையிலே வம்புப் பேச்சுத் தாராளமாக நடைபெறும் அவள், எனக்கா, உனக்கா? என்று அமளி கிளம்பும், சிறை எடுத்தல், சிரம் அறுத்தல். இவை அன்றாட நடவடிக்கைகள். “என் பரம்பரையை இழிவாகப் பேசினாயா? நாளை காலை 8 மணிக்கு, வாட்போர் தயார் - திராட்சைத் தோட்டத்தருகே - 8 மணி” என்று அறைகூவல் கிளம்பும், இரு பிரபுக்கள் வாட்போரிடுவர், ஒரு தலை உருளும், மற்றொரு மண்டை கனம் கொள்ளும்! பிரபுக்களின் பொதுநிலை இது. ஒரு சில பிரபுக்கள், அரசியல் அதிகாரம் தேடுவர் - திறமை இருப்பதால் அல்ல ஆசை பிறப்பதால்! கிடைக்காவிட்டால், கலகம், குழப்பம்!! இப்படிப் பட்ட பிரபுக்களிடையே, மேரி சிக்கிக் கொள்ள நேரிட்டது.

இத்தாலி நாட்டு கான்சினியும் மேரியும் அவரின் ஆதரவாளர்களும் ஒருபுறம்.

காண்டி எனும் பிரபுவும் அவனை ஆதரிக்கும் சீமான்களும் மற்றோர்புறம்.

காண்டி சீமானுக்கு, எவ்வளவு சலுகை காட்டினாலும் திருப்தி கிடையாது - கான்சினி தொலையவேண்டும். மேரி அம்மைக்குத் துணைபுரியும் வாய்ப்பு தனக்கே அளிக்கப் படவேண்டும், என்பது காண்டியின் கட்டளை! மரியாதைக்காக, வேண்டுகோள் என்றனர், காண்டி, கட்டளை தான் பிறப்பித்தான்.

குழப்பம் வலுத்தது - எனவே பேரவை கூட்டப்பட்டது.

பேரவை கூடுவது பெரிய திருவிழாவாயிற்று. எல்லாச் சிக்கல்களும் தொல்லைகளும் தீர்ந்துவிடும் என்பது, பாமரமக்களின் எண்ணம். எனவே அவர்கள் பேரவை கூடுவதை வரவேற்றனர்! மதத்துறையினருக்கும் மகிழ்ச்சி, தமது உரிமைகளை வலியுறுத்தவும் தமது ஆலோசனைகளை அரசினர் கேட்பதுதான் அறமுறை என்று எடுத்துரைக்கவும் வாய்ப்பு, என்ற எண்ணத்தால். பிரபுக்களுக்குப் பூரிப்பு, தமது அந்தஸ்தையும் அதிகாரத்தையும் அரசாளும் அம்மை அறிய இது பொன்னான வாய்ப்பு என்று மக்கள் மன்றத்தினருக்கும் நம்பிக்கை, தங்கள் நலன் பற்றி நல்லவர்களெல்லாம் கூடிக் கலந்துபேசி, திட்டம் தீட்டுவர் என்று. ரிஷ்லுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, நுழைய இடம் கிடைத்தது என்று. பேரவைக்கு மதத்துறைப் பிரதிநிதியாகச் சென்று தன் திறமையைப் பிரான்சு உணரும் வண்ணம் நடந்து கொள்வது என்று தீர்மானித்தான். தான் வசித்துவந்த வட்டாரத்திற்கு, மத அலுவலர்களின் பிரதிநிதியாக, ரிஷ்லு தேர்ந்தெடுக்கப்பட்டான்! தேர்ந்தெடுக்கும் படி ரிஷ்லு நிலைமையைச் சிரமப்பட்டு உண்டாக்கி, வெற்றி பெற்றான். அழைப்புக் கிடைத்து விட்டது. அழைப்பு, தயாரித்துக் கொண்டான்! பாரிஸ் புகலானான்!

ஊர் மக்கள் இரு மருங்கும் திரண்டு நின்றனர். காட்சியைக் காண, போர் வீரர்கள் அணிவகுத்து நின்றனர் - பாதுகாப்புக்கும் பகட்டுத் துலங்கவும். பேரவை ஊர்வலம் அழகுறக் கிளம்பிற்று. முப்பெரும் பிரிவினரும் கலந்து கொண்டனர்.

அன்பை அடிப்படையாகக் கொண்டல்லவா அரசாள வேண்டும்? அந்த அன்பு சுரக்கவேண்டும், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், ஆட்சிமுறை வகுப்பவர்களுக்கும், இதற்காக ஒரு விசித்திரமான ஏற்பாடு!

குருடன், காலிழந்தோன், முடமானோன், தொழுநோயாளன், பஞ்சைப் பராரி ஆகியவர்கள், முதலில் ஊர்வலம் சென்றனர். கந்தலணிந்த அந்தக் கதியற்றவரின் நிலையைக் கண்டதும் கண்களிலும் நீர் சுரக்கும், கருணையும் மனத்தில் பிறக்கும், என்று இந்த ஏற்பாடாம்! இது நெடுங்கால வழக்கமுங்கூட!

இந்தத் ‘தரித்திரர்’ ஊர்வலம் முதலில் - பிறகு, பேரவை கிளம்பிற்று, தேவாலயத்திலே பூஜையை முடித்துக் கொண்டு!

கரங்களில் மெழுகுவர்த்தி விளக்குகளுடன், மக்கள் மன்ற உறுப்பினர்கள்!

இடையில் வாளும், மேலே பட்டுப் பட்டாடையும் கண்களில் செருக்கும் மிகுந்திட, பிரபுக்களின் உறுப்பினர்கள்.

விதவிதமான ஆடைகளும் அங்கிகளும் அணிந்து, மத அலுவலரின் பிரதிநிதிகள்.

மன்னன், தாயும் பரிவாரமும் புடைசூழ!

1614ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26ஆம் நாள் காலை! இந்த நாள் முழுவதும், ஊர்வலமே, பெரிய நிகழ்ச்சியாக இருந்தது. ஊர் மக்களின் உள்ளத்தில் பல புதிய நம்பிக்கை - மகிழ்ச்சி.

மறுநாள், ‘போர்போன்’ மாளிகையில், பேரவை கூடிற்று.

அலங்கார மேடைமீது, சிங்காதனம் - அதன் மீது வெண் பட்டாடை அணிந்து மன்னன் வீற்றிருந்தான். மேரி அம்மையும். தர்பார் பெண்களும், பரிவாரமும் மன்னருக் கருகில். மன்னன் முகத்திலே தெளிவோ, திருப்தியோ, இல்லை! இளைத்துக் களைத்து, ஏதும் புரியாத நிலையில் மன்னன் வீற்றிருந்தான்! என் செய்வான் மன்னன்! வயது பதின்மூன்று.!!

ரிஷ்லுவின் கூர்மையான கண்கள், நிலைமையைப் படம் பிடித்து விட்டன.

அறியாச் சிறுவன் அரியாசனத்தில் - அவனைக் காட்டி அரசாளும் அம்மை, ஆழ்ந்த அறிவற்றவள், ஆனால் அதிகார மோகமிக்கவள். உல்லாசத்திற்கு அரண்மனை ஏற்ற இடம் என்பதை மட்டுமே உணர்ந்த கான்சினி. அந்த இடம் தங்களுக்கு என்று கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்த பிரபுக்கள், கருணை பிறக்கும் கஷ்டம் தீரும் என்று நம்பிக் கிடக்கும் மக்கள் மன்றத்தினர் - இது பிரான்சு - ரிஷ்லுவுக்குப் புரிந்து விட்டது.

மன்னன், துவக்க உரையாற்றினான் - ஆர்வமற்று.

பிறகு, இடிமுழக்கம் எழும்பின, பலரிடமிருந்து.

பிரபுக்கள் சீறினர் - பாதிரிகள் பதறினர் - மக்கள் மன்றத்தினர் மன்றாடினர் - எவரும், இன்னது தேவை. இப்படி இதனை இன்னார் செய்ய வேண்டும் என்று தெளிவு பட எடுத்துக் கூறினாரில்லை. பிரபுக்களின் பேச்சிலே பதற்றம்! பூஜாரிகள் பேச்சிலே மிரட்டல்! மக்கள் குரல், தெளிவும் உறுதியும் பெறவில்லை.

முப்பெரும் பிரிவினர் ஒருவருக்கொருவர், கலந்து பேசும் நிலையிலோ ஒன்றுபட்டுத் திட்டம் தரும் திறத்திலோ இல்லை. ஒருபுறம் முரசும், மற்றோர்புறம் சங்கநாதம், இன்னோர் புறம் முழவு! ரிஷ்லுவுக்கு நம்பிக்கை பலப்பட்டது. இதுதானே பிரான்ஸ், இவர்கள்தானே இதன் நடுநாயகங்கள், ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை.

மன்னனைக் கூர்ந்து நோக்கினான் - கண்களிலே அறிவு ஒளியின் குறியே காணோம். எங்கேயோ நினைப்பு! மன்னனுக்கு எந்தத் துறையிலே விருப்பம் அதிகம் என்று உசாவினான். வேட்டை ஆடுவதில் என்றனர்.

காண்டி பிரபுவுக்குச் சப்பிட்டுவிட்டது. பேரவை கூடியதும், பலரும் கான்சினியைக் கண்டித்துவிட்டு, அதிகாரப் பொறுப்பைக் காண்டிபிரபுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவர், என்று எதிர்பார்த்தான் - யாரும் அது குறித்துப் பேசவில்லை. அவரவர்களுக்கு அவரவர்களின் பிரச்சனைதான் பெரிதாகத் தென்பட்டது, பொதுப் பிரச்சனை எது என்பதும் புரியவில்லை. நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் ஆற்றலும் காண்டி பிரபுவுக்கு இல்லை. ஓரிருவர் மேரி அம்மையின் ஆட்சிப் போக்கைக் கண்டித்தனர் - பரிகாரம் கூறவில்லை. ரிஷ்லு மேரி அம்மையைக் கண்டித்தவருக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்து, மேரி அம்மையின் பார்வையைப் பரிசாகப் பெற்றான்.

பொருளற்ற பேச்சுகள் ஒன்றை ஒன்று துரத்தின - பேரவை வீண் ஆரவாரமே என்பது புரியத் தொடங்கி விட்டது. நாட்கள் உருண்டோடின. திங்கள் சிலவும் சென்றன. ரிஷ்லு மத அலுவலர்களின் சார்பிலே பேச அழைக்கப்பட்டார். மேரி அம்மையின் தயவே அதற்குக் காரணம், ஜனவரி 24ஆம் நாள், ரிஷ்லு பேரவையில் ஆழ்ந்த பொருள் நிரம்பிய சொற்பொழிவு நிகழ்த்தி அனைவருடைய கவனத்தையும் தன்பால் திருப்பிக் கொண்டன். ஒரு மணி நேரச் சொற்பொழிவு - ஒரு துளியும் மார்க்க சம்பந்தமானதல்ல - முழுவதும் அரசாளும முறைபற்றியது, ரிஷ்லு அந்தப் பேச்சின் மூலம், மேரி அம்மைக்குத் தன்னையும் தன் ஆற்றலையும், நோக்கத்தையும், திட்டத்தையும் விளக்கிக் காட்டினான்.

ஆண்டவன் அளித்த பிரசாதம், அரசாளும் உரிமை.

எனவே அரசாள்வோருக்கு அன்பும் மரியாதையும் அப்பழுக்கின்றித் தரப்பட வேண்டும்.

ஆண்டவன் சார்பிலேயே அரசாள்வோர், பணிபுரிகின்றனர். எனவே, அரசாள்வோரின் அதிகாரம், பலம், தலைசிறந்து விளங்கவேண்டும் - அதைக் குலைப்பதோ, எதிர்ப்பதோ பாபம், கேடு, நாட்டுக்கு நாசம்.

ஆண்டவன் அளித்த உரிமையைக் கொண்டு அரசாள்கின்றனர். எனவே அரசாள்வோர், ஆண்டவனுடைய அருளைப் பெற்று வழங்கும் மத அதிபர்களின் துணையை நாட்டில் பெற்று, ஆட்சி முறையைச் சிறப்படையச் செய்தல் வேண்டும்.
ரிஷ்லுவின் பேச்சிலே காணக்கிடக்கும் முக்கியமான கருத்து இது! ஆள்வோரின் உரிமை, அதிகாரம் - அதை அருளாளர்களின் துணைகொண்டு அரண்செயல் வேண்டும் என்பதுதான் தத்துவம். நான் இருக்கப் பயமேன்! என்று கேட்பதாக அமைந்தது, அந்தப் பேச்சு, பேரவையினர், முதலில் மகிழ்ந்தனர், பேச்சின் தெளிவும் நிறமும் கண்டு; பிறகோ மருண்டனர், உட்பொருள் புரிந்தவர்கள். மேரி அம்மையின் மனத்திலே, ரிஷ்லு நமக்குற்ற நண்பன் என்பது பதிந்துவிட்டது - ரிஷ்லுவுக்கு அது புரிந்து விட்டது. பேரவை பயனற்றுப் போயிற்று என்று பலர் மனம் வாடினர். குறிப்பாகப் பேரவையைக் கூட்ட பெருமுயற்சி எடுத்துக் கொண்ட காண்டி பிரபுவுக்கு, சகிக்க முடியாத சலிப்பு. பேரவை, பெரியதோர் வெற்றி - ஆண்டு பலவாக நான் உழைத்தது வெற்றி தருகிறது. என் குரல் கேட்டுவிட்டது - மேரி அம்மையாரின் மனத்திலே என் பேச்சுப் பதிந்துவிட்டது - இனி அம்மைக்கு அரசியல் ஆபத்து நேரிட்டது என்ற உடன், எனக்குத்தான் அழைப்புவரும். இனி, என் அரசியல் நுழைவு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது - என்று ரிஷ்லுவுக்குக் கூறிக் கொள்ள முடிந்தது. யாராலோ எதற்கோ கூட்டப்பட்ட பேரவை, ரிஷ்லுவுக்குத்தான் பெரிதும் பயன்பட்டது. பிரான்சும் புரிந்துவிட்டது. அதை ஆளும் முறையும் ரிஷ்லுவுக்குப் புரிந்து விட்டது.
தன் சொற்பொழிவை, ஏராளமான பிரதிகள் அச்சிட்டு வழங்கினான் ரிஷ்லு, பாராட்டினர் பலர், பூரித்தான். பயணம் சொல்லிக் கொண்டு. பாரிசை விட்டுப் புறப்பட்டு, லூகான் வந்து சேர்ந்தான் - தன் தேவாலயத்தைக் கவனிக்க!!

பேரவையால் ஆபத்து உடனடியாக ஏற்படாது எனினும் பேரவையில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் தத்தமது ஊர் திரும்பியதும், தீமூட்டிவிடுவர் - எனவே பேரவையைக் கூட்டாமலிருப்பதே நல்லது என்றுமே தேவிக்கு நண்பர் ஒருவர் கூறினார்.

அவர் எச்சரித்தது உண்மையாயிற்று. பிராசன் முழுவதிலும், கலகவாடை வீசலாயிற்று. கூடிப்பேசி காரியமேதும் ஆற்றாது கலைந்த பேரவையினர், தத்மது மனம் போன போக்கில் ஆட்சிமுறைப்றிறக் குறைகூறியும் எதிர்ப்பு மூட்டியும் வரலாயினர்.

காண்டி பிரபு நெரித்த புருவத்துடனேயே காணப்பட்டான். அவனுக்குத் தூபமிட்டுக் கொண்டும், துதிபாடிக் கொண்டும் சீமான்கள் சிலர் இருந்தனர்.

கான்சினியோ, பேரவை கூடியும் தன்னை அசைக்கவும் முடியாமற் போனதை எண்ணிப் பெருமிதமடைந்தான்.

மேரியோ பூசலும் சிக்கலும் தீராததுடன், மேலும் வளருவது கண்டு திகைத்துக் கிடக்க நேரிட்டது.

மன்னனோ, பேரவை கலைந்ததும் தொல்லை விட்டது என்று எணிணத் தனக்குப் பிரியமான வேட்டையில் ஈடுபடலானான். நாலு நாள், ஐந்து நாள் தொடர்ந்து வேட்டையாடி வருவதிலே மன்னனுக்கு விருப்பம். அந்த ஒரு பொழுது போக்கிலேதான் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பல வண்ணப் பறவைகளைத் துரத்தித் துரத்திப் பிடிப்பதிலும், வேட்டையாடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்ட பெரும் பறவைகளைக் கொண்டு வேறு பறவைகளை வளைத்துப் பிடித்தும், அழகான பறவைகளைக் கொண்டு வந்து அரண்மனையிலே வளர்ப்பதும் மன்னனுக்கு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டு. மன்னனுடைய தனி அறையே, பறவைக் காட்சிச் சாலையாக இருந்ததாம்! அங்கு முற்றத்திலும் தாழ்வாரங்களிலும், மன்னனுடைய பறவைகள் ஒன்றோடொன்று ஆடியும், கூடிப் பாடியும், வேட்டையாடியும் பொழுது போக்கும், மன்னன் இந்தக் காட்சியில் சொக்கிக் கிடப்பான்.

மாடப்புறா போன்றதோர் மங்கை நல்லாளை மணந்த பிறகும், மன்னன், பறவைகளுடன் விளையாடிப் பொழுது போக்குவதையே பெரிதும் விரும்பினான். ஆண்டு பதினைந்தே நிரம்பிய ஆன் அழகி, அரசிளங் குமரி - காதலின்பத்தைத் தரவல்ல அந்தக் காரிகை, தனிமையில் வாடுவாள், மஞ்சத்தில் சோர்ந்து சோர்ந்து படுத்துக் கிடப்பாள்; மன்னனோ, தன் நண்பனுடன், பறவைகளின் சிறகொலி கிளப்பும் இசையின் நேர்த்தி பற்றியும், வேட்டையாடும் திறம்பற்றியும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பான். அந்த நண்பன், பறவைகளின் சம்பந்தமான நுண்கலை நிபுணன் - வேட்டைக் கலையில் புலமை மிக்கவன்! ஊர் அங்ஙனம் கருதிற்றோ இல்லையோ, மன்னன் நம்பினான்; அதற்காக லைனிஸ் எனும் அந்த நண்பனிடம், மன்னன் அளவற்ற மதிப்பு வைத்திருந்தான். மன்னனுக்கு லைனிஸ் உயிர்த் தோழனானான். மன்னன் அவன் சொற்படி ஆடத் தொடங்கியது, மேரிக்கு மன எரிச்சலைத் தந்தது. இந்தப் ‘பாதகன்’ மகனைத் தனக்கு எதிராகக் கிளப்பிவிடுவானோ என்று அஞ்சினாள். அரண்மனை வட்டாரமோ, மேரியை ஆட்டிப் படைக்க ஒரு கான்சினி - அரசனை ஆட்டிப்படைக்க ஒரு லைனிஸ் - நல்ல நிலைமை, நல்ல அரசு முறை என்று வெறுப்புடன் பேசிக்கொண்டனர்.

கான்சினி, செருக்குமிக்கவன், லைனீஸ் சூதுக்காரன்! ஏது மறியாதவன்போல நடித்து வந்தான் - அழகிய பறவைகளுடன் பழகத் தெரியுமே தவிர, அரசியல் சூட்சமம் தெரியாது என்று எவரும் எண்ணும்படி நடந்து வந்தான். ஆனால் மெல்ல மெல்ல, மன்னனைத் தன் வலைக்குள் போட்டுக் கொண்டான். கான்சினியிடம் மன்னனுக்கு இருந்துவந்த வெறுப்பை அதிகமாக்கிவிட்டான். ஆளும் பொறுப்பை இனி இத்தாலிய கான்சினியிடமும் மேரியிடமும் விட்டுவைப்பது கூடாது, நாமே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தவேண்டும், நமக்கு, லைனிஸ் துணை நிற்பான் என்ற எண்ணம், மெல்ல மெல்ல மன்னன் மனத்திலே உருவெடுக்கலாயிற்று.

மன்னனுடைய திருமண ஏற்பாடு மேரியின் வெற்றிகளில் ஒன்று என்று கருதப்படுகிறது.

மேரி, மெடிசி குடும்ப முறைப்படி தன் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதிலும், மருமகளைத் தேடிக் கொள்வதிலும், திறமையைக் காட்டினாள்.

ஒரு மகள், ஸ்பெயின் நாட்டு இளவரசனை மணந்தாள்.

மற்றோர் மகள், இங்கிலாந்து நாட்டு மன்னன் மனைவியானாள்.

மூன்றாம் மகளைச் சவாய் அரச பரம்பரையில் திருமணம் முடித்தாள். ஆஸ்திரிய அரசிளங்குமரி ஆன், லூயி மன்னனுக்கு மனைவியாக வாய்த்தாள். இந்தத் திருமணக் காரியத்துக்கு, உடன் வரும்படி காண்டி பிரபுவுக்குக் கட்டளை பிறந்தது. பிரபு மறுத்துவிட்டான். அழைத்ததும் உபசாரத்துக்காக அல்ல, மறுத்ததும் அரசியல் நோக்கு அற்று அல்ல! வெளிநாடு சென்று வருவதற்குள், காண்டி, பாரிஸ் புகுந்து கலகம் விளைவித்தால் என்ன செய்வது என்ற எண்ணிய மேரி, காண்டிபிரபுவை, தன் பரிவாரத்துடன் அழைத்துச் சென்றால், பயமற்றிருக்கலாம் என்ற எண்ணத்தால், அழைப்பு அனுப்பினாள் - பிரபுவும் இந்தச் சூட்சமம் அறிந்தே உடன்வர மறுத்தான். இதனால் இரு தரப்பினருக்கும் சிறு சமர் மூண்டது - வெற்றி தோல்வியின்றி, சமர் சாய்ந்தது.

இந்நிலையில் பாரிஸ் இருந்தது வந்தது - ரிஷ்லுவின் எதிர்பார்த்த நேரம் வரவில்லை.

காண்டி பிரபுவுக்குப் பல சலுகைகள் காட்டி, மேரி, சமரசம் உண்டாக்கினாள் - பிரபுவும், அரச காரியத்தை உடனிருந்து கவனிக்க அரண்மனை சென்றான்.

மேரி அம்மையின் தயவு பெற ஒருபுறம் பலமான முயற்சி, ‘கான்சினியின் ஆதரவு தேடி வேறோர்புறம் முயற்சி, இரண்டும் போதாதோவென்று, புதிதாகச் செல்வாக்குப் பெற்றுவரும் காண்டி பிரபுவிடம் ஆதரவு நாடி, ரிஷ்லு கடிதம் தீட்டினான். எவரிடமும் உள்ளன்போ, மதிப்போ, எவர் கொள்கையிலும் திட்டத்திலும் பற்றோ நம்பிக்கையோ அல்ல; யாரைப் பிடித்தால் தனக்குச் சரியான இடம் கிடைக்கும், யாரிடம் திறவுகோல் இருக்கிறது, யாருடைய புன்சிரிப்பு, அரசியல் வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கிறது என்ற இதுவே ரிஷ்லுவின் உள்நோக்கம். எனவேதான், மேரி, கான்சினி, காண்டிஎனும் எவர் நிலை எப்போது உயர்ந்து காணப்பட்டாலும், அவர்களிடம் குழைந்து கும்பிட்டுக் குறுநகை கோரி நிற்க ரிஷ்லு முனைந்தான். சொந்தக் கௌரவம், முன்பின் நடவடிக்கைகளைக் கணக்கிடும் பண்பு, என்பதுபற்றி ரிஷ்லுவுக்குக் கவலை கிடையாது. எதைச் செய்தாலும், கோரிய இடத்தைப் பிடிக்கவேண்டும் - கணைவீசிப் பிடிக்கலாம்; வலை வீசியும் பிடிக்கலாம், மறை எதுவாகவேனும் இருக்கலாம்; பலன் கிட்டவேண்டும் என்பதுதான் ரிஷ்லுவின் எண்ணம்.

இந்தச் சந்தர்ப்பத்தில், மேரி, ரிஷ்லுவை, ராணி ஆனுடைய; தர்மாதிகாரியாக நியமித்தார்.