அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அரசாண்ட ஆண்டி
6

வெளிநாட்டு நடவடிக்கை ஒன்றின்போது, போப் விரும்பாத காரியத்தை ரிஷ்லு துணிந்து செய்தார். அவருடைய செல்வாக்கு நிரம்பிய இடத்தைப் படை கொண்டு தாக்கி, அவர் வசமிருந்து இடத்தை விடுவித்தார்! அந்தப் படையும், பிரான்சு நாட்டுடையது அல்ல, பிரடெஸ்ட்டென்டுக்காரருடையது! அந்தப் படையை ஏவியதுடன், அதற்குப் பண உதவிசெய்து, போர் மூட்டி வெற்றியும் கண்டார் - போப் வெகுண்டார், நமது ஆசியைக் கோரி நின்றவன் செயலா இது என்று பதைபதைத்தார். கார்டினல் ரிஷ்லுவா இப்படிக் கத்தோலிக்க உலகத்தின் தலைவரைத் துச்சமாக எண்ணி எதிர்ப்பது என்று கேட்டார் ரிஷ்லு, கார்டினல் என்ற முறையில் போப்பாண்டவருக்கு அடக்கம், ஆனால், முதலமைச்சர் என்ற நிலையில் போப்பாண்டவர் குறுக்கிட்டாலும், அரசுக்காக, பிரான்சுக்காக, கடமையைச் செய்தாக வேண்டும், என்று பதிலளித்தார் ரிஷ்லு.

கத்தோலிக்கர்களைக் கசப்படையச் செய்ததால், பிராடெஸ்ட்டென்டுகளிடம் கண்ணியமாக நடந்து கொண்டார் போலும் என்று எண்ணிடத் தோன்றும், அப்படி ஒன்றுமில்லை. அவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல.

ஹ்யூஜிநாட் என்றழைக்கப்படும் - பிராடெஸ்ட்டென்ட் மக்கள், பிரான்சில் ஒரு பகுதியில், மிக்க செல்வாக்குடன் வாழ்ந்து வந்தனர். அரசுக்குள் அரசுபோல், அவர்கள் தனிக்கோட்டைகள், தனிப்படைகள், தனி நகர ஆட்சிகள் அமைத்து கொண்டு வாழ்ந்தனர் ஒப்புக்கு, பிரான்சு மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர்.

இந்த நிலைமையை ரிஷ்லு எதிர்த்தார். பிராடெஸ்ட்டென்டுகளின் கோட்டை ஊரான லாரோகேல் என்னும் இடத்தை முற்றுகையிட்டுத் தாக்கி, சின்னபின்னமாக்கினார். அந்தப் போரின்போது கார்டினல் ரிஷ்லு இரத்த வெறி கொண்டலையும் இராணுவத் தலைவனாகக் காட்சி தந்தது கண்டு, இவரா, அறநூற்களைப் படித்தவர், ஐயன் அடியராக இருந்தவர், என்று எவரும் கேட்டிருப்பர்.

லாரோகேல் கோட்டை முற்றுகையின்போது, ஆங்கில அரசு பிராடெஸ்ட்டென்டுகளுக்குத் துணை புரிவதாக வாக்களித்தது - ஓரளவு உதவிபுரிந்தது - உதவிக்கு வந்த கப்பற் படையை ரிஷ்லு முறியடித்து. லாரோகேல் கோட்டையை வளைத்துக் கொண்டான். சொல்லொணாக் கஷ்டப்பட்டனர் பிராடெஸ்ட்டென்டுகள். பட்டினி, ரிஷ்லுவின் படையைவிடக் கொடுமை விளைவித்தது. புல் பூண்டுகளும் கிடைக்கவில்லை. செருப்புத் தோலைக்கூட வேக வைத்துத் தின்றார்களாம் - அந்த வீரமக்கள் எலும்புந்தோலுமாயினர் - நோய் சூறையாடிற்று - முதியவர்கள் மாண்டனர். குழந்தைகள் இறந்தன. கொடுமையின் விளைவு சொல்லுந்தரத்தன்று. பணிதவன்றி வேறு வழி இல்லை, பணிந்தனர் - ரிஷ்லு, வெற்றிப்பவனி நடத்தினான் வீழ்ந்துபட்ட மக்களின் கோட்டை ஊரில்; கோட்டை இடித்துத் தள்ளப்பட்டது. கொடி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. உரிமை பறிக்கப்பட்டது - மார்க்கம் எப்படியோ இருக்கட்டும். தொழுகை உமது இஷ்டம்போல் செய்து கொள்ளுங்கள். ஆனால், படை, கொடி, கோட்டை என்று கனவிலும் எண்ணாதீர் என்று உத்தரவிட்டான் ரிஷ்லு. லாரோகேல் கோட்டையைப் பிடிக்க நடத்தப்பட்ட போரின்போது, ரிஷ்லுவின் இதயம், எவ்வளவு கொடுமைகளையும் துணிவுடன் கக்கக்கூடியது என்பது வெளிப்பட்டது.

கத்தோலிக்கரைக் கைகழுவிட்டபோதும் சரி, பிரா டெஸ்ட்டென்டுகளைப் பதறப்பதற அடித்தழித்தபோதும் சரி, ரிஷ்லுவின் எண்ணம், மார்க்கக் கொள்கையின் பாற்பட்டதல்ல, ஆதிக்கம் ஒன்றுதான் குறிக்கோள். ரிஷ்லுவின் மொழியில் கூறுவதானால், எல்லா நடவடிக்கையும் அரசுக்காக! பிரான்சுக்காக!

பொன் வேலைப்பாடுள்ள மங்கல் நிற உடை, மார்பிலே நீல நிறக் கவசம், தலையிலே தொப்பி, தொப்பியில் பறவை இறகு, அலங்காரத்துக்கு இடையே உடைவாள், கையிலே பிரம்பு - இது ரிஷ்லு, லாரோகேல் கோட்டைப் போரின்போது. கார்டினல் உடை, களத்துக்கு ஆகாது என்று களைந்துவிட்டு, போர்வீரர்கள் மத்தியில், போர் வீரன் போலவே உலவினான். கார்டினல், கர்த்தரிடம் ஜெபம் செய்து அருள் பெற்று வெற்றியை நாடவில்லை - அது நடவாது என்பது ரிஷ்லுவுக்குத் தெரியும். களம் சென்று, இப்படித் தாக்குக, இப்புறம் பாய்க! என்று இராணுவ முறை கூறிவந்தான். வாலிப வயதில் இராணுவக் கல்லூரியில் கற்ற பாடங்களைப் பயன்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

லாரோகேல் போரிலே பெருமிதமான வெற்றி கிடைத்ததற்குக் காரணம், ரிஷ்லுவின் திட்டம் மட்டுமல்ல, பிரெஞ்சு படையினர் காட்டிய வீரமும் ஒரு முக்கிய காரணம்; அந்த வீராவேசத்துக்கு காரணம், மன்னன் ஊட்டிய உற்சாகம். மன்னனுக்கு இந்தப் போரிலே உற்சாகம் அதிகமாக இருந்த
தற்குக் காரணம், லாரோகேல் கோட்டையினருக்குத் துணைபுரிய வந்த ஆங்கிலக் கப்பற்படைக்குத் தலைமை தாங்கி, பக்கிங்காம் பிரபு வந்தது! அதற்குக் காரணம், ஓர் அரண்மனைச் சம்பவம்!
ஒயில்மிக்கவன், பக்கிங்காம் பிரபு!

ஆங்கில நாட்டுச் சீமான், அரசனுடைய ஆதரவு நிரம்பப் பெற்றவன். அழகு கண்டால், ரசிகனாகிவிடுவான் - ரசிகனானதும், ரசாபாசம் நேரிடும்! களியாட்டத்தில் விருப்பமுடையவன் - கண்டதும் காதல் கொள்பவன் மட்டுமல்ல, எந்தக் கட்டழகியும், தன் கண் தொட்டால் பணிந்து விடுவாள் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். அலங்காரமான உடை, ஆளை மயக்கும் பேச்சு அளவற்ற துணிச்சல்.

லூயி மன்னனுடைய உடன் பிறந்தாள், ஹெனி ரிட்டா, இங்கிலாந்து மன்னன் சார்லசுக்கு மனைவியானாள்.

ஹெனிரிட்டாவை, இங்கிலாந்து அழைத்துச் செல்லும் உயர் தனிக் கௌரவம், பக்கிங்காம் பிரபுவுக்குத் தரப்பட்டிருந்தது. பாரிஸ் வந்தான், அரண்மனையில் தங்கினான், மாடப்புறாவைக் கண்டான். மையல்கொண்டான் நிராகரிக்கப்பட்ட அழகி, நிம்மதியற்ற நங்கை, ஆன், அவன் கண்ணில் தட்டுப்பட்டுவிட்டாள்! போதாதா!! மன்னனோ அவளிடம் முகங்கொடுத்துப் பேசுவதில்லை மங்கையோ, வாடா மல்லிகை என மணம் வீச இருக்கிறாள். ஆரத்தழுவும் உரிமை கொண்டோன் அலட்சியப் படுத்திவிட்டான். ஆரணங்கு, படரும் கொழுகொம்பற்ற கொடியெனத் துவள்கிறாள். கண்களிலே ஏக்கம் இருப்பதும், கவர்ச்சியை அதிகப்படுத்துவதாகவே இருக்கிறது. பக்கிங்காம், தீர்மானித்து விட்டான். ஆன் அரசியை இன்பபுரி அழைத்துச் செல்வது என்று.

பச்சை மயில் பாங்குடன் உலவுகிறது - பார்த்து ரசிக்கும் நிலையிலும் மன்னன் இல்லை! வலைவீசத் துணிந்து விட்டான், பக்கிங்காம்.

தனியே ஒரு நாள், ஆன், அரண்மனைத் தோட்டத்திலே உலவிக் கொண்டிருந்தாள் - உல்லாச புருஷன் அங்குச் சென்றான் - காதலைப் பொழிந்தான் பார்வையால், திடுக்கிட்ட மங்கையை நெருங்கினான். கரம்பற்றினான், இன்ப அணைப்பு, அவளுக்கு இதயத் துடிப்பு, எதிர்பாராச் சம்பவம், எனவே இளமங்கை, அலறிவிட்டாள் - தன்னை விடுவித்துக் கொண்டபடி. ஆன் அலறிய குரல் கேட்டு அணங்குகள் ஓடிவந்தனர்.

“அரசியாரே! அலறினீர்களா.”

“யார்? நானா! அலறினேனா?”

“குரல் கேட்டதே!”

“ஆமாம் - செல்வோம்”

எப்படிச் சொல்வாள் நடந்ததை - சாகசக் கள்ளன், சமயம் சரியில்லை, பழம் நழுவிவிட்டது, என்று எண்ணிச் சென்றான்.

நாட்டுக்கு அரசி நாயகன் இளைஞன்! அரண்மனைத் தோட்டம்! அயல்நாட்டான், அணைக்க வருகிறான்! - என்ன அக்கிரமம் - எவ்வளவு துணிவு! என்கதி இதுதானா! - என்று ஆன் எண்ணாமலிருக்க முடியுமா, தனி அறை சென்றான் - மன அதிர்ச்சி குறையுமா! பயம் - பயத்தின் ஊடே கோபம் - இந்த இரு உணர்ச்சிகள் மட்டுந்தானா, இவற்றை விரட்டிய வண்ணம், ஆவல்!

எவ்வளவு துணிவு! என்ன அக்கிரமம்... என்று குமுறிய நெஞ்சம், மெல்ல மெல்ல, எவ்வளவு ஆவல்! என்ன காதல்!! என்று எண்ணலாயிற்று.

தலைபோகும் காரியமாயிற்றே, என்பது தெரியாதா - தகாத காரியம் என்பதும் தெரியாதா - தெரிந்தும், ஏன், அவன் என்னைக் கரம்பிடித்திழுத்தான்! அவ்வளவு காதல்!! துணிந்து செய்தான்! அணைத்துக் கொண்டானே, என்னை - நான் விடுவித்துக் கொள்ளாதிருந்தால்?... செச்சே! கெட்டவன், போக்கிரி, எதுவும் செய்வான் அவன். ஆமாம்! காதலால் தாக்கப் பட்டவர்களுக்குத்தான் கண் தெரியாதாமே!... அவன் அணைத்துக் கொண்டபோது என் உள்ளம் எவ்வளவு பதறிற்று - உடல் மட்டும் ஏனோ பதறவில்லை - ஏனோவா? - அவன்தான் ஆரத்தழுவிக் கொண்டானே! ஆன் அரசியின் உள்ளம் எதைத் தான் தள்ளும். கண்ணைத் திறந்தபடி இருந்தாலும் மூடினாலும், தனி அறையில் இருந்தாலும், சேடியருடன் இருந்தாலும், இசை கேட்டுப் பொழுது போக்கினாலும், வானத்தைக் கண்டு மகிழ முயன்றாலும், அவனல்லவா வந்துவிடுகிறான்! ஆரத் தழுவுகிறான்!! ஆரூயிரே!! என்கிறான். இது நாள்வரை கேட்டறியாத கீதம் உணர்ந்தறியாத இன்பம்! பொல்லாதவன், நல்ல உள்ளத்தைக் கெடுத்தே விடுவான் போலிருக்கிறதே - எங்கே அவன் இப்போது - என்ன செய்கிறான் - மறுத்தேன் என்பதால் மருண்டோடி விட்டானா - அதே மலர்த்தோட்டத்திலே உலவுகிறானா - நான் வருவேன் என்றா - பேதை உள்ளம் என்னவெல்லாமோ எண்ணிற்று. அவன் வென்று விட்டான் - அவள் பணிந்து விட்டாள். உள்ளம் பணிந்து விட்டது. உடனிருந்த தோழி, அவள் உள்ளமறிந்து, பக்குவமாகப் பாகுமொழி பேசினாள். பிரபு அழைக்கப்பட்டான் - மஞ்சத்துக்கு! கொஞ்சு மொழி பேசினான்! அவள் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்கிறாள் - அவள் கீழே முழங்காற்படியிட்டபடி, மயக்க மொழி பேசுகிறான்! அவன் இருக்கும் இடத்தில், நிலையில் மன்னன் மட்டும் இருந்தால்! மன்னனா! அவனா என் மணாளன்? ரிஷ்லுவின் அடிமைக்கு ஒரு மங்கையின் உள்ளத்துக்கு இன்பமூட்டும் பண்புமா இருக்கும். என்னைப் பட்டினி போட அல்லவா, இந்த அரண்மனையில் சிறை வைத்தான் - இதோ வந்திருக்கிறான் வீரன், விடுதலை கிடைக்கும், வாழ்வு கிடைக்கும்! ஆன் எண்ணாத எண்ணமில்லை.

விருந்து கிடைத்தது பிரபுவுக்கு! என்கிறார்கள் - இல்லை என்றும் கூறுகிறார்கள். பக்கிங்காம் - ஆன் காதலாட்டம் பற்றிய பேச்சு, அரண்மனையில் மட்டுமல்ல, மாளிகைகளிலே, கடை வீதிகளிலே, பிரான்சிலே மட்டுமல்ல, இங்கிலாந்திலே உல்லாச உலகெங்கும் கிளம்பிற்று.

அந்தப் பக்கிங்காம், நூறு கப்பல்களுக்குத் தலைவனாக வருகிறான். லாரோகேல் கோட்டையினருக்குத் துணை புரிய! பிரெஞ்சு மன்னன், அவனுடைய முயற்சியை முறியடிக்க வேண்டுமென்பதிலே அளவற்ற ஆர்வம் கொண்டதிலே ஆச்சரியம் என்ன!

பக்கிங்காம், காதலில் பெற்றிருந்த திறமையின் அளவுக்குப் போரிலே பெற்றிருந்து, லாரோகேல் கோட்டைப் போரில், பிரெஞ்சு மன்னனை முறியடித்திருந்தால்? ஏதேதோ நடைபெற்றிருக்கும். அலங்காரக் கப்பலொன்றிலே, அணங்குகள் ஆடிப்பட, மகிழ்வோடு அவர் நடுவே ஆன் வீற்றிருக்க, பக்கிங்காம் காதல் பொழியும் கண்களுடன் அவளைக் கண்டவண்ணம், இங்கிலாந்துக்குப் பயணமே செய்திருக்கக் கூடும். அந்நாள், அரச குடும்பங்களிலும், பிரபு குடும்பங்
களிலும், இத்தகைய சுவைக்கு, அளவும், வகையுமா இருந்தது! கணக்கில்லை!!

பிராடெஸ்டென்டுகளை எதிர்த்து நடத்தப்படும் போர் இது; புனிதப்போர்! - என்று பேசி, கத்தோலிக்கர் மனத்தில் கனலை மூட்டிவிட முடிந்தது ரிஷ்லுவால்! கத்தோலிக்கருக்கு நீ செய்த நன்மை என்ன? காட்டிய சலுகை யாது? என்று யாரும் கேட்கவில்லை. அவர்கள் பிராடஸ்டெண்டுகளை அழித்திடப் போரிடுவது ஐயன் அருளுக்குப் பாத்திரமாகும்வழி என்று கருதினர்; மடாலயங்கள் போர்ச் செலவுக்குப் பொருளை அள்ளிக் கொடுத்தன; இந்தப் புனிதப் போரிலே ஈடுபடுவோரின் பாவங்கள் துடைக்கப்பட்டுவிடும் என்று போப்பாண்டவரின் ஸ்ரீமுகம் பிறந்தது; ரிஷ்லு, களிப்புடன் களம் புகுந்து காரியத்தைக் கவனிக்கலானார், போர் வீரன் உடையில்!

கத்தோலிக்க மார்க்கப் போதகர், பிராடெஸ்டெண்டு தத்துவத்தைக் கண்டதுண்டமாக்கியவர், ரிஷ்லு, இவர் தொடுக்கும் இந்தப் புனிதப் போர், முதல் கட்டம், இதிலே கிடைக்கும் வெற்றி, வேறு பல வெற்றிகளுக்கு வழி செய்யும். ஐரோப்பாவில், பிராடெஸ்டெண்டு பூண்டே இல்லாது ஒழித்துக் கட்டப் போகிறார் என்று கத்தோலிக்கர் எண்ணிக்கொண்டனர்; ரிஷ்லு இதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டார்; மந்த மதியினர் அவருடைய உண்மையான நோக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை; கத்தோலிக்க மார்க்க ரட்சகர், என்று அவர்கள் ரிஷ்லுவைக் கொண்டாடினர். அவருடைய நோக்கம், கத்தோலிக்கரின் செல்வாக்கை வளர்த்திட பிராடெஸ்டென்டுகளை ஒழித்திடவேண்டும் என்பதல்ல, ஆட்சியைத் தன் முன்னின்று நடத்திச் செல்லும்போது, பிரான்சிலே ஒரு பகுதியினர், அடங்க மறுப்பதா! என்ன துணிவு! இவர்களை ஒழித்துக் கட்டாவிட்டால், நம் மதிப்பு என்ன ஆவது! - இது ரிஷ்லுவின் எண்ணம்.

பதினைந்து திங்கள் முற்றுகை! உள்ளே ஒரு பொருளும் போக முடியாது! பட்டினி போட்டுச் சாகடிக்கும் முறையிலே. போர் இருந்தது! சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டனர்! தன்மானம், நிமிர்ந்து நிற்கச் சொல்கிறது, பசியோ, பணிந்துவிடு! என்று தூண்டுகிறது! உள்ளே இப்படி அடைபட்டுச் சாவதைவிட, போரிலே, தாக்கி, தாக்குண்டு இறந்துபடுவது எவ்வளவோ மேலாக இருக்குமே என்று எண்ணினர் அந்த மக்கள். பழைய செருப்புத் தோலைக்கூட வேகவைத்துத் தின்றனராம், எலும்புத் தோலுமாகிப் போன நிலையில்! இந்த அவதி பற்றி, லூகான் ஆலய அதிகாரியாக இருந்த ரிஷ்லுவுக்குத் துளியேனும் இரக்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை! உள்ளே அல்லல் அதிகமாகி
விட்டது. அவதிப்படுகிறார்கள் என்று சேதி கிடைத்ததும், அவருடைய உள்ளம், சரி! பயல்கள் இன்னும் சில நாட்களில் பணிந்துவிடுவார்கள்! நாம் மேலும் ஓர் வெற்றி பெறுவோம், நமது புகழொளி பரவும் என்று எண்ணி மகிழ்ந்தார்.

ஆஸ்திரிய அரச குடும்பத்தின் செல்வாக்கைக் குலைக்கும் திட்டம் ரிஷ்லுவுக்கு உண்டு. இதற்காகச் சமர் நடத்தினான், வெற்றி கிடைத்தது. சவாய் பரம்பரைக்கும், ரிஷ்லுவின் போக்கினால் கஷ்டம், நஷ்டம். இவற்றின் பயனாகப் பிரெஞ்சு மக்களுக்கு ஏதேனும் நலன் கிடைத்தா என்றால், இல்லை; ரிஷ்லுவின் கண்களுக்கு மக்கள் தெரியவுமில்லை.
ரிஷ்லுவின் நிலை உயர உயர, பகையும் வளரத்தான் செய்தது - ஒவ்வொரு பகையையும் பயங்கரமான முறையிலே முறியடித்து வந்தான். ஒற்றர்கள், அவனுக்குக் கண்கள், காதுகள்! எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்ற அச்சம்; எனவே ரிஷ்லு. ஆயுதம் தரித்த காவலாட்களினின்றி வெளியே செல்வதில்லை. எந்த மாளிகையிலே பேசப்படும் விஷயமும், ரிஷ்லுவுக்கு எட்டிவிடும். எனவே, முன்னேற்பாடுகள் செய்வது எளிதாகவும் வெற்றிகரமாகவும் முடிந்தது, இவற்றுக்காகப் பெரும் செலவு - அரசாங்கப் பணத்திலிருந்து, அரசுக்காக பிரான்சுக்காக! என்ற மந்திரச் சொல்லைக் கூறியபடி, மட்டற்ற கொடுமைகளைச் செய்துவந்த ரிஷ்லு, அரசனையும் மிஞ்சக் கூடிய செல்வம் சேகரித்துக் கொண்டான். ஏழைக் கோவிலுக்குப் பூஜாரியாக இருந்துவந்த ரிஷ்லுவிடம் ஏராளமான செல்வம், இணையற்ற மாளிகை. ஆடம்பரமான வண்டி வாகனங்கள், காலாட்படை, குதிரைப் படை! பாடகர்கள்! பணியாட்கள்! உறவினர்களுக்கு உயர் பதவி தரக் கூசவில்லை. ஊரார் பார்த்து, இவ்வளவு செல்வம் எப்படிக் கிடைத்தது. என்று கேட்பார்களே என்று எண்ணவுமில்லை. பொன் அவன் காலடியிலே வந்து வீழ்ந்தது! நாடோ, ஏழ்மைப் படுகையிலேயே இருந்தது.

மன்னன் சிரித்தால், உடன் சிரிக்க வேண்டும், சோகமாக இருந்தால் சோகமடையவேண்டும். பேசுவதை கேட்டுக் கொள்ளவேண்டும். ஆர்வம் அதிகம் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவேண்டும் - இவ்வளவுதான் மன்னன் தன்னுடன் பழகிய பாவையிடம் விரும்பியது.

பாரிஸ் நகரிலேயே நிகரற்ற அழகி என்று புகழப் பட்ட ஹாடிபோர்ட் என்பாளிடமானாலும் அவளிடம் மனத்தாங்கல் கொண்டபோது கிடைத்த பாயேடி என்பவளானாலும், எந்த மங்கையிடமும், மன்னன் பழகியது இந்த முறையிலேதான். ரிஷ்லுவுக்கு இதிலே மிகுந்த திருப்தி. கெண்டை விழி மாதரிடம் மன்னன் மற்றவர்கள் போலப் பழகிவிட்டால், ஆபத்தல்லவா!
இந்த ஹடிபோர்ட், பாயேடி, எனும் இருவருமே, ரிஷ்லுவின் போக்கை உணர்ந்தனர் - வெறுத்தனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே, ரிஷ்லுதான் வெறுப்பை மூட்டிவிட்டான் என்று கண்டித்தனர். தங்களிடம் பழகுவதால், தாங்களே மன்னனிடம் மெல்ல மெல்ல உண்மையைச் சொல்லலாம், ஆன் நல்ல நிலைமைக்கு வர உதவி புரியலாம் என்று முயன்றனர், முடியவில்லை.

ஹாடிபோர்ட், ஆன் சார்பாக மன்னனிடம் பேசத் தொடங்கியதும், மன்னன் கோபங்கொண்டு, அவளை விட்டு விலகினான். பிறகு, ஜோசப் பாதிரியின் உறவினளான, அந்த மங்கை, ரிஷ்லுவுக்கு விரோதமாக மன்னனைத் திருப்ப முயன்றாள். பலிக்கவில்லை. அந்த மங்கையைக் கொண்டு மன்னனைத் தங்கள் வலைக்குள் போடலாம் என்று சிலர் முயன்றபோது, அவள் அதற்குள் இடம் தராமல், கன்னி மாடம் சேர்ந்துவிட்டாள். அவள் கன்னிமாடம் சேர்ந்தபிறகு கூட, மன்னன் அங்குச் சென்று, மணிக்கணக்காக அவளிடம் பேசிக் கொண்டிருப்பானாம். அப்போதும் அந்தப்பாவை, ரிஷ்லுவின் பிடியிலிருந்து மன்னன் விடுபடவேண்டும் என்பதையே வலியுறுத்தி வந்தாளாம் - இதனால் வெறுப்படைந்த மன்னன், கன்னிமாடம் செல்வதையே நிறுத்திக் கொண்டானாம். ரிஷ்லுவுக்கு எதிராக எவரேனும் ஏதேனும் சொன்னாலும், கேட்பதற்கு மன்னன் விரும்புவதில்லை. அவ்வளவு பற்று ஏற்பட்டுவிட்டது. ரிஷ்லுவுக்கு இந்தத் துணை இருக்குமட்டும் மற்றவர்களைப் பற்றிக் கவலை என்ன! மேரி அம்மையை அறவே புறக்கணித்தான் - அம்மையின் மனத்திலேயோ, பகை முழு வடிவெடுத்தது. சமயம் வரவில்லை.