அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அரசாண்ட ஆண்டி
5

லூகான் நகர் சென்றதும் ரிஷ்லு, தன் புகழ் மங்கிவிடும்படி இருந்து விடவில்லை - புகழ் துருப்பிடிக்கவும் கூடாது. அரசாள் வோர் கவனத்தைக் கவரத் தவறவும் கூடாது என்பது ரிஷ்லுவுக்கு நன்றாகத் தெரியும்.

பிராடெஸ்ட்டென்ட் கொள்கைகளைக் கண்டித்தும், கத்தோலிக்கக் கோட்பாடுகளை ஆதரித்தும் அரியதோர் ஏடு தீட்டினான் - மார்க்கத் துறையினர் கண்டு பாராட்டும் வகையில் புகழ் பரவலாயிற்று! மன்றம் பல பேசலாயின ரிஷ்லுவின் நுண்ணறிவு பற்றி, கத்தோலிக்க மார்க்கத்தை உலகெங்கும் பரப்பி, எதிர்ப்புகளை ஒழித்துக்கட்டும் பேராற்றல் படைத்தவர் இந்த ரிஷ்லு என்று கொண்டாடினர். சிலர், மார்க்கத் துறையிலே ஈடுபட்டு மானிலம் புகழும் இடம் பெறுவதை விட்டு, ஏன் இவர் சிலகாலம் அரசியல் சேற்றிலே உழன்று கிடந்தார் என்று பேசினர். ரிஷ்லுவுக்கு இந்த வெற்றி களிப்பளித்தது, நாடு நம்மை மறந்துவிடவில்லை! புகழ்கிறது! கவனத்தில் வைத்திருக் கிறது - என்று எண்ணி மகிழ்ந்தான்.

கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கு பிராடெஸ்ட்டென்ட் புயலால் ஏற்பட்ட ஊறுகளைப் போக்கவேண்டும் என்பதல்ல, ரிஷ்லுவின் எண்ணம். ஆட்சிப் பொறுப்பு அளிக்கப்படவில்லை. ஆற்றலைக் காட்டியபடி இருந்தால் அந்த வாய்ப்பு அளிக்கப்படும். ஆற்றலைக் காட்ட இந்த ஏடு பயன்படட்டும் என்பதற்காகவே தீட்டினான். உண்மையாகவே, மார்க்க சம்பந்தமான பணியிலே ஈடுபட வேண்டுமானால் வாய்ப்பா இல்லை! ஏராளம்!

இந்த ஏழாண்டு ஓய்வின்போது, ரிஷ்லுவுக்கு ஜோசப் பாதிரியார் உற்ற நண்பரானார்.

ஜோசப், ரிஷ்லு போன்றவரல்ல, ஆற்றல் உண்டு நிரம்ப, அதற்கேற்ற அளவு நேர்மை உண்டு. கொள்கை உண்டு. அதற்காகச் சுயநலத்தைத் தியாகம் செய்யும் பண்பு உண்டு. கூர்மையான மதிபடைத்தவர், அதனைத் தமக்குப் புகழோ நிதியோ சேர்க்க அல்ல, தன் கொள்கையின் வெற்றிக்காகச் செலவிட்டு வந்தவர்.

கத்தோலிக்க மார்க்க வெற்றியே, ஜோசப்பின் மூலதாரக் கொள்கை.

கிருஸ்தவ மார்க்கத்தைப் பாதிக்கும் முறையில் நடத்து கொள்கிறார்கள் என்ற காரணம் காட்டி, முஸ்லீம்களுடன் புனிதப் போர் நடாத்தி வந்தவர்களுக்கு இருந்தது போலவே, ஜோசப்புக்கு, இஸ்லாமிய ஆதிக்கத்தைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற பேரவா, தீஎனக் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. புதியதோர் புனிதப்போர் தொடுக்கத் தூபமிட்டார், பலிக்க
வில்லை. பிறகு அவர், பிரான்சு நாடு, கத்தோலிக்க மார்க்கத்துக்கு ஏற்ற திரு இடம் என்று எண்ணினார், அங்கிருந்தபடி, ஐரோப்பாவில் பல்வேறு இடங்களிலே பரவிக் கொண்டிருந்த பிராடெஸ்ட்டென்ட் மார்க்கத்தை மாய்த்தொழிக்கலாம் என்று எண்ணினார். ரிஷ்லுவுக்கு இது தெரிந்து விட்டது! ரிஷ்லு, கத்தோலிக்க மார்க்கத்தைச் சிறப்பித்தும், பிராடெட்ஸ்டென்ட் கண்டனங்களைச் சின்னாபின்னமாக்கியும் தீட்டிய ஏடு, ஜோசப்புக்கு ஆர்வமூட்டிற்று. இருவரும் நண்பராயினர். ரிஷ்லுவைக் கொண்டு, கத்தோலிக்க மார்க்கத்தை ஒளிவிடச் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன், ஜோசப், தமது செல்வாக்கை, ரிஷ்லுவுக்குத் துணையாக்கினார். ஆர்வமும் ஆற்றலும், ஓயாது உழைக்கும் திறனும், ஒன்றையும் தனக்கெனத் தேடிக்கொள்ளாப் பண்பும், பல்வேறு நாடுகளிலே செல்வாக்கும் கொண்டிருந்த ஜோசப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஆதிக்கபுரி போய்ச் சேரலாம் என்று ரிஷ்லு திட்டமிட்டான். இருவருக்கும் ஏற்பட்ட கூட்டுறவு, ரிஷ்லுவுக்குப் பெரும் பயனளித்தது - ஜோசப் இறந்துபடும் வரையில், ரிஷ்லுவுக்காகவே, உழைத்தார். ரிஷ்லுவின் மனமறிந்து திறமையுடன் காரியமாற்றினார். ரிஷ்லு, அரசாளும் காலத்திலே பெற்ற பல ஆச்சரியமான வெற்றிகளுக்கு ஜோசப்பின் அறிவாற்றல், பெரியதோர் காரணமாக அமைந்தது.
ஜோசப்பின் செல்வாக்கினால், அரண்மனையில் கூற, ரிஷ்லுவிடம் இருந்த அவநம்பிக்கையும் பயமும் ஓரளவு குறைந்தது.

ரிஷ்லுவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

மேரி; தன் நிலையில் திருப்தி பெற முடியுமா! அரண்மனையில் எல்லா அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த அம்மை, லைனஸ் எனும் ஊர்பேர் அறியாதான் அரசாண்டு கொண்டிருப்பது கண்டு எங்ஙனம் மனம் பொறுக்க முடியும். சூழ்ச்சிகள் மூலம் மீண்டும், இழந்த இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற ஆவல் வளர்ந்த வண்ணம் இருந்தது.
மகனுக்கும் அன்னைக்கும் இடையே இயற்கையாக இருந்து வந்த பாசம், லைனசால் கெட்டுவிட்டது.

ஆன் அரசி எப்போதும் போலவே, கண்ணீர் உகுத்துக் கொண்டுதான் இருந்தாள்.

பிரபுக்கள், இந்தப் ‘புதிய நோய்’ போக மருந்து உண்டா என்று ஏக்கத்துடன் கேட்டனர்.

“சரக்கு மாறவில்லை - விலாசம்தான் புதிது!” என்று ஒருவர், லைனசின் ஆட்சியைக் குறிப்பிட்டார்.

கான்சினி, காண்டி, இவர்களிடம் காணப்பட்ட போக்கே லைனசிடமும் இருந்தது.

உறவினர்களுக்கெல்லாம் செல்வம், செல்வாக்கு, பட்டம் பதவி! அள்ளி அள்ளி வீசினான், லைனஸ்; கேட்க நாதி இல்லை. எதிர்த்திடத் துணிந்தவர்கள் அழிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மேரி அம்மை, ப்ளாபிசில் சோம்பிக் கிடந்து பயனில்லை அங்கிருந்து வெளியேறி, பிரபுக்கள் சிலரின் உதவியைத் திரட்டிக் கொண்டு, லைனசை எதிர்த்தொழித்து, மகனை மீட்டு அவனை மன்னனாகக் கொண்டு பழையபடி தன் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும், என்று தீர்மானித்தாள்.

எபர்னான் பிரபுவுக்கு அதுபோது பிரான்சிலே நல்ல செல்வாக்கு, அவருடைய உதவியைப்பெற, மேரி திட்டமிட்டு மங்கலான நிலவொளி இருந்த ஓரிரவு, சாளர மாளிகையை விட்டு வெளியேறி, எபர்னான் மாளிகை வந்து சேர்ந்தாள்.

மேரி தப்பிச் சென்ற செய்தி பிரான்சிலே பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது. இரவில்! சாளரவழி! நூலேணி!! - மக்கள் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு வியப்படைந்தனர்.

எபர்னான் பிரபு, மேரி அம்மைக்குத் துணைபுரியச் சம்மத்தார் - லைனசிடம் வெறுப்புக் கொண்ட வேறு சீமான்களும் பக்கத்துணையாயினர்! மேரி அம்மையின் திட்டம் வெற்றி தந்துவிடும் என்ற நம்பிக்கை உதயமாயிற்று.

மன்னனும் லைனசும் கவலைப்பட்டனர் - எப்படி இந்த ஆபத்தைத் தவிர்ப்பது என்று யோசித்தனர் - ஜோசப் யோசனை கூறினார், “மேரி, படையுடன் பாரிஸ் வராதபடி தடுக்கக் கூடியவர் ஒருவர்தான் உண்டு - அவர் தான் ரிஷ்லு!” என்றார். ரிஷ்லு அழைக்கப்பட்டார்! என்னைப் பாரிசைவிட்டுத் துரத்தினீர்களே, நான் ஏன் உங்களுக்குத் துணை புரிய வேண்டும்? நான், மேரி அம்மைக்கே உதவி புரிவேன். மேரியின் தயவுதான் எனக்கு அரண்னை நுழைவுச் சீட்டாக இருந்தது. எனவே நான் பாரிஸ் வாரேன்” என்றல்லவா, ரிஷ்லு நிலையில் தள்ளப்பட்ட எவரும் கூறுவர். ரிஷ்லு பாரிஸ் சென்றான், மேரி அம்மைக்கும் மன்னனுக்கும் சமரசம் உண்டாக்கி வைக்கும் பணியைச் செய்து முடிப்பதாக வாக்களித்து, எபர்னான் சென்று, மேரியிடம் பேசி போரை நிறுத்தி வைத்ததுடன், சமரச ஏற்பாட்டையும் தாயரித்துத் தந்தான்!

ஒருபுறம் மன்னன், அவனுடன் கீழே சாயப்போகும் லைனஸ்.

மற்றோர்புறம் சூழ்ச்சித் திறமும் ஆதிக்க ஆசையும் மிகுந்த மேரி - அம்மையைச் சுற்றி அதிகார போதையைப் பருகி அட்டகாசம் செய்யவல்ல பிரபுக்கள்.

இந்த இருதரப்பிலே, மேரி தரப்பினுடைய கரம் வலுத்தால், தன் ஆதிக்க நோக்கம் ஈடேறும் வழி அடியோடு அடைபட்டுவிடும், எனவே, மேரியின் திட்டம் வெற்றி பெறக் கூடாது - வெற்றிபெற விடக்கூடாது.

மன்னன்? பரவாயில்லை! கரத்தில் சிக்குவான் லைனஸ்? அசடன்! ஆடி அழிவான்!! - எனவே மன்னர் தரப்புக்கே துணைநிற்க வேண்டும், என்று ரிஷ்லு தீர்மானித்தான்.

ரிஷ்லுவின் பேச்சுக்கு மேரி, ஏன் இணங்க வேண்டும்? மேரி, அடைந்திருந்த அவமானம் சாமான்யமானதல்ல வேட்டைக்கார வெறியன், அரண்மனையை விட்டே துரத்தினான். கீறிய கோடு தாண்டாதிருந்த மன்னனை மகனை, பிரித்து வைத்தான், பகை மூட்டி விட்டான் எபர்னான் பிரபுவின் ஆற்றல் துணை நிற்கிறது - வெற்றி எளிது! - இது மேரிக்குப் புரியக் கூடியதுதானே! ஏன் ரிஷ்லுவின் சமரசப் பேச்சுக்கு இணங்க நேரிட்டது?

ரிஷ்லு, தர்பார் தளுக்கனல்ல! பாவையரை மயக்கும் பாகு மொழி பேசியும், சொக்க வைக்கும் புன்சிரிப்பு காட்டியும், கீதமிசைத்தும் நடனமாடியும், களிப்பூட்டியும் காதலைப் பொழிந்தும், காரிகையரைக் கொல்ல உல்லாசக் கல்லூரியில் தேறியவனுமல்ல! நோயாளி பகட்டுரை அணிந்து பரிமளம் பூசிக்கொண்டு மினுக்கும் பட்டுப் பூச்சியுமல்ல! மத அதிபர் உடை! நோயும் ஓயாத உழைப்பும், தாங்கித் தாங்கி முகத்திலே, வேதனை ரேகை நன்றாகப் படர்ந்திருந்தது. எனினும், ரிஷ்லுவுக்கு யாருடைய கவனத்தையும் தன்பக்கம் இழுக்க வல்ல முக அமைப்பு இருந்தது! கவர்ச்சி அல்ல! அளவளாவலாம். தோழமை கொள்ளலாம், என்ற ஆசை எழவில்லை, எனினும், அவனைப் பார்த்ததும், மனத்திலே பதிந்து விடுகிறான், இத்தாலியச் சாணக்கியன் மாக்கியவல்லி கூறினான். “மன்னன் நேசிக்கப்படத் தக்கவனாக இருப்பதைக் காட்டிலும் அச்சமூட்டத் தக்கவனாக இருப்பது நல்லது” என்று ரிஷ்லும், அந்த ஓவியமாக விளங்கினான். நேசிக்க அல்ல, அச்சம் கொண்டிட வைத்தது, ரிஷ்லுவின் தோற்றம் அவனுடைய கண்களே, கருவூலங்கள்! ஒளி, ஆவலைக் காட்டுவதாக மட்டுமல்ல, உறுதியை, நினைத்ததைச் சாதித்தே தீருவான் என்ற உறுதியை உமிழ்ந்தது! ஆடம்பரம் இல்லை- உடையில், நடையில். ஆனால் அதிகாரத்தைத் திறம்பட நடத்தும் போக்கினன் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

இந்த ரிஷ்லுவிடம், மயக்கமா, மேரி அம்மைக்கு!

உண்டு, என்கிறார்கள் - இருக்கக் கூடும், அம்மையின் இயல்பைக் கவனித்தால்!

ரிஷ்லு, இதற்கு இணங்கினதாக ஆதாரமும் இல்லை, நடவடிக்கைகள் இவ்வகையில் ஏதும் இல்லை.

பொதுவாகவே ரிஷ்லுவுக்கு அந்தச் ‘சபலம்’ கிடையாது. நோயும், நோயைவிடக் கடுமையாக மனத்தைப் பிடித்துக் கொண்டிருந்த ஆதிக்க ரிஷ்லுவுக்கு அந்தச் சபலத்தைத் தந்திராது - மேலும் வாலிப வயது முதல் தேவாலயத்திலே அல்லவா, வேலை!! எனவே, ரிஷ்லு, விருந்து தேடிடும் வீணனாக இல்லை. ஆனால், மேரி, அம்மைக்கு ஏதோ ஒரு வகையான மயக்கம் இருப்பது மட்டும் ரிஷ்லுவுக்குத் தெரிந்தது - அந்தப் பொல்லாத குணம் கூடாது என்று ரிஷ்லு உபதேசம் செய்யவில்லை. ஒதுங்கிக் கொள்ளவில்லை. அரண்மனை ஆயிரத்தெட்டுக் கேடுகள் நடமாடும் இடம் என்று மிரண்டு ஓடிவிட வில்லை. அம்மைக்கு அவ்விதமான மயக்கம் இருப்பதும் நல்லது தான், அதனை எப்படி, ஆதிக்கம் பெறப் பயன்படுத்திக் கொள்வது, என்று மட்டுமே எண்ணினான்.

“நான் இருக்கிறேன்! இதோ! உன் எதிரில் எப்போதும்” என்று தன்னைக் காட்டிக் கொள்வது மட்டும் போதும், இணங்கிவிடுவது கூடாது, பெறவேண்டும் என்ற ஆவல் தரும் சுவையைவிட, பெற்றுவிட்டால் கிடைக்கும் சுவை குறைந்த தரமாகிவிடும், எனவே ஆவல் மட்டும் இருக்கட்டும், அது அணையாத் தீபமாக இருக்கட்டும், என்று எண்ணி ரிஷ்லு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ரிஷ்லுவின் போக்கைக் கவனிக்கும்போது, இது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று தள்ளிவிடுவதற்கில்லை.

இப்படி ஒரு மயக்கம் இருந்தாலொழிய, மேரி அம்மை, நெருக்கடியான நேரத்தில் எல்லாம், ரிஷ்லுவின் பேச்சுக்கு ஏற்றபடி தன் திட்டத்தைத் திருத்திக் கொள்வதற்குக் காரணம் வேறும் காணக்கிடைக்கவில்லை.

எப்படியோ ஒன்று, சமரசம் ஏற்பட்டுவிட்டது - தாயும் மகனும் அளவளாவினர் - நாடு ஓரளவு நிம்மதி கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தது.

ரிஷ்லுவுக்கு இதனால் என்ன இலாபம் இல்லாமற் போகுமா? கார்டில் எனும், உயர்தர மத அதிபர் பதவியை ரிஷ்லுவுக்குப் போப்பாண்டவர் அளித்தார். இந்தப் பதவியில் ரிஷ்லுவை அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

கார்டினல் எனும் நிலைபெற, மார்க்கத் துறையிலேயே பன்னெடுங்காலம் ஈடுபட்டுக் காத்துக் கிடப்பவர் பலர். ஆனால், ரிஷ்லுவுக்கோ! ஓர் அரசியல் குழப்பம்! - சமரச முயற்சி - கார்டினல் பதவி!
எபர்னான் பிரபுவின் பேருதவியை நம்பித்தான் மேரி, மன்னனை எதிர்க்கத் துணிந்தது. ரிஷ்லு எப்படியோ அம்மையின் மனத்தை மாற்றி, மன்னனிடம் சமரசமாகிவிடும்படிச் செய்துவிட்டான். இந்தச் சமரசம் நிலைக்கவில்லை என்றபோதிலும், இந்தச் சம்பவம், அரண்மனையில் ரிஷ்லுவின் செல்வாக்கை வளமாக்கிவிட்டது. ஒருநாள் எபர்னான் பிரபு, மாளிகை மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கும்போது ரிஷ்லுவின் ஆதரவாளர் ஒருவர், படிக்கட்டில் அவரைக் கண்டு, “பிரபுவே! என்ன ஏதேனும் விசேஷம் உண்டா,” என்று கேட்க, எபர்னான், “ஏன் இல்லை! நீங்கள் உயரப்போகிறீர்கள், நான் கீழே இறங்குகிறேன்!” என்று பதிலளித்தாராம்! யூகம் நிரம்பிய பதில். எபர்னானுக்கு மேரி அரசி ஏதும் உதவி செய்யவில்லை; ரிஷ்லு வுக்கோ, அன்னையும் ஆதரவு தந்தார், அரியாசனத்திலிருந்த மகனும் தந்தான்!!

இது எனக்கு எம்மாத்திரம், என்றுதான் ரிஷ்லு எண்ணினான். ஆனால் பயனற்றது என்று கூறவில்லை. பயன் படுத்திக் கொள்ளமுடியும்.

சமரசம் முறிந்ததும், மீண்டும் சமர் கிளம்பிற்று - மீண்டும் சமரசம் - இப்படி நிகழ்ச்சிகள் ஊஞ்சலாடின - இந்நிலையில், லைனஸ் இறந்துபட்டான் - மன்னன், யாராருடைய துணை கொண்டோ துரைத்தனம் நடத்திப் பார்த்துச் சலிப்புற்று, ரிஷ்லுவுக்கு அழைப்பு அனுப்பினான், 1624-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள், ரிஷ்லு மீண்டும் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றான் - நாலு திங்களில், உடனிருந்த அமைச்சர்களை மூலையில் அமரச் செய்துவிட்டு, முதலமைச்சரானான் - முடிதரித்தவன் லூயி ஆட்சி, கார்டினல் ரிஷ்லுவிடம் நீண்டகாலத் திட்டம் பலித்துவிட்டது! பிரான்சு, ரிஷ்லு கரத்தில் சிக்கிவிட்டது. லூகான் தேவாலயத்திலோ பூஜாரி வேலையா பார்க்கச் சொன்னார்கள், பிரான்சை ஆளும் பெரும் பதவிக்கு, ஏற்ற என்னை! என்று எண்ணினான். பெற்றதைப் பலப்படுத்தும் பெரும் பணியைத் துவக்கினான். மன்னனை மெல்ல மெல்ல வசப்படுத்திக் கொண்ட ரிஷ்லு, பிரபுக்களின் கொட்டத்தை அடக்குவது ஹீயூஜீநாட்ஸ் எனும் பெயர் படைத்த பிராடெஸட்டென்ட் மக்களை ஒடுக்குவது, வெளி நாடுகளில் பிரான்சின் கீர்த்தியை நிலைநாட்டுவது எனும் மூன்று திட்டங்களை மேற்கொண்டு ஒவ்வொன்றிலும் வெற்றி கண்டான். இந்த வெற்றிகளை வரலாற்று ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இந்த வெற்றிகளுக்கு ரிஷ்லு கையாண்ட முறைகளோ மிகக் கொடுமையானவை.

ரிஷ்லுவின் ‘ஒற்றர்கள்’ நாடெங்கும் பூனைபோலுலவி, ‘சேதிகளை’க் கொண்டு வந்து தருவர், தனக்குப் பிடிக்காதவர்கள், ஆற்றலை வெளிப்படுத்துபவர், அரண்மனையில் புகும் உரிமை கொண்டவர்கள் ஆகியோரை, சதிவழக்குகளில் சிக்கவைக்க, இந்தச் சேதிகள் மெத்தப் பயன்பட்டன. மாளிகைகளிலே மருட்சி! ஒவ்வொரு பிரபுவும் தனக்கு எப்போது ஆபத்து வருமோ என்ற திகிலுடனேயே உலவிட நேரிட்டது. சதி வழக்குகள் தொடுத்தால், தக்க ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கடும் தண்டனை தரப்படும் - காரணம் கேட்டவருக்கு ரிஷ்லு சொன்னான் : “சதி வழக்குகளுக்கு ஆதாரங்கள் அப்பழுக்கின்றிக் கிடைக்குமா! யூகித்தறிந்த விஷயமே போதும் தண்டனை தர” என்று. இப்படிப்பட்ட விபரீத நியாயம் - முறையாகிவிட்டது.

மன்னனிடம், “என் கடன் தங்கள் ஆட்சியைப் பலப்படுத்துவதுதான். தங்களை எதிர்க்கத் துணிவு காட்டும் பிரபுக்களை அழித்து, அரச பலத்தை அதிகரிக்கச் செய்வதுதான்; தங்கள் ஆட்சியின்போது பிரான்சு நாடு பிற நாடுகளால் பெரிதும் மதிக்கப்பட்டது என்ற நிலை இருக்க வேண்டும்; அதற்கான முறையிலே பணிபுரிகிறேன்” என்று சொல்லி, காட்டிய இடத்தில் கையொப்பமிடும் கருவியாக மன்னனை ஆக்கிக் கொண்டான்.

பல பிரபுக்கள், ரிஷ்லுவின் பகைக்கு ஆளாகி ஈவு இரக்கமின்றி அழிக்கப்பட்டனர் - ஒரு பிரபுவாவது மக்களுக்குக் கேடுசெய்தான் என்பதற்காக அல்ல, மன்னனுக்க நிகராகத் தன்னை எண்ணிக் கொண்டான் என்பதற்காகவே!

அரசனுக்காக! பிரான்சுக்காக! என்றுதான் ரிஷ்லு, தன் நடவடிக்கைகளுக்கெல்லாம், விளக்கம் தந்தானே தவிர, மக்களுக்காக என்று ஒரு செயலையும் மேற்கொள்ளவில்லை.
மக்கள், எப்போதும் போல ஏக்கமிகுந்து இருந்தனர் - பசி தீரவில்லை, வாழ்க்கை சிறக்கவில்லை - தொழில் வளம்பெருக வில்லை, உரிமைக் குரலுக்கு இடமே இல்லை. பிரபுக்கள் ஒரு புறத்தில் அவர்களைக் சுரண்டினர். மத அதிபர்கள் மற்றோர் புறம் அரித்தனர். இந்தக் கொடுமைகளைக் களைய ரிஷ்லுவின் ஆற்றல் பயன்படவில்லை - அடிப்படையில் வெடிப்புக் கிடந்தது. ரிஷ்லுவோ, கலசத்துக்குப் பொன்முலாம் பூசிக் கொண்டிருந்தான்.

ரிஷ்லுவை எதிர்த்து, மன்னனுடைய தம்பி, காஸ்ட்டன் பன்முறை கிளம்பினான் - ஒவ்வோர் முறையும் பரிதாபகரமான தோல்வியே கண்டான்.

மன்னன் தம்பி என்றால் அவன் தலை தப்பிற்று - உடன் இருந்தோரின் தலைகள் உருண்டன.

வேண்டுகோள், அழுகுரல், கருணைமனு, எதனையும் பொருட்படுத்துவதில்லை, பாதையிலே குறுக்கிட்டால் தீர்ந்தது, பயங்கர மரணம்தான் பரிசு!

தன்னைச் சுற்றிலும் வேவு பார்ப்போர், தகவல் திரட்டுவோர், ஆகியவர்களை அமர்த்திக் கொண்டு, ரிஷ்லு நடத்தி வந்த ஆட்சி முறையின் கடுமை கண்டு, பலரும் கலங்கினர்.

மன்னனின் தம்பி, காஸ்டன், காமக்களியாட்டத்திலே காலந்தள்ளி வந்த பதினெட்டாண்டு வாலிபன். அவனை ஆதரவாக நம்பி, ஒரு பிரபுக்கள் எதிர்ப்பு மூட்டினர் - ரிஷ்லுவுக்கு, சதி, கருவிலிருக்கும்போதே தெரிந்து விட்டது - பிரபுக்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது - காஸ்டன், அண்ணனிடம் மன்றாடி உயிர் தப்பினான். ஒரு பிரபு சிறையில் தள்ளப்பட்டு மாண்டான் - காய்ச்சல் என்று கூறப்பட்டது. மற்றோர் பிரபுவுக்கு நேரிட்ட கதி, பிரான்சையே நடுங்க வைத்தது. காலே எனும் அந்தப் பிரபுவின் தலை சீவப்பட்டு, கோலில் செருகப்பட்டு, சதுக்கத்தில் காட்சியாக வைக்கப்பட்டது. உடல் நாலு கூறாக்கப்பட்டு, ஊரின் நான்கு நுழைவு வாயில்களிலும் தொங்க விடப்பட்டன!

தேவலாய அதிபராக வாழ்க்கையைத் துவக்கியவரின் கருணை நிரம்பிய உள்ளம் இது! இப்படியா, என்று கேட்டால், அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற ஒரே பதில்!

காலே என்பவனுடைய தலை சீவப்பட்டது என்றால், எவ்வளவு காட்டுமிராண்டித் தனமான முறையில் - தலைவெட்டு வதற்குத் தக்க ஆள்கிடைக்கவில்லையாம், எனவே இரு கைதிகள் இந்தக் காரியத்துக்கு அமர்த்தப்பட்டனர். ஊதியம், விடுதலை! கோடரி கொண்டு இருபத்து ஒன்பது தடவை வெட்டிய பிறகே கழுத்துத் துண்டிக்கப்பட்டதாம். எல்லாம் அரசுக்காக! என்றான் ரிஷ்லு, ‘ஆமென்’ என்றான் மன்னன்.

பயங்கரமும் கொடுமையும் நிரம்பிய முறையிலே நடைபெற்ற நடவடிக்கைகள் பலப்பல.

மக்களை வாட்டி வதைப்பவன், ஏழைகளை ஏய்த்தவன், சர்க்கார் பொருளைச் சூறையாடினவன், ஆலயச் சொத்தை அபகரித்தவன், போன்ற ஒரு ‘குற்றவாளி’ கூட ரிஷ்லுவின் கண்ணுக்குத் தெரியவில்லை! அப்படிப்பட்டவர்களை, குற்றவாளிகள் என்று கருதினால்தானே! ரிஷ்லுவின் கண்களுக்கு ஒரே ஒருவகையான குற்றவாளி மட்டுமே தெரியும் - தன் ஆதிக்கத்துக்குக் குறுக்கே நிற்பவன்! அதுதான், பெருங்குற்றம் - மற்றவை, ரிஷ்லுவின் கவனத்துக்கு உரியன அல்ல!
லைனஸ் இறந்துபட்ட பிறகு, மன்னன் பொழுது போக்குக்காகவேனும், தன் இல்லக்கிழத்தி ஆன் ராணியை நாடினானா! இல்லை! தன்னைச் சுற்றிலும், அழகு மங்கையரை உலவச் செய்து, ஒருவிதமான திருப்தி பெறுவான். களியாட்டம் மன்னனுக்குப் பிடிக்காது. அணங்குகள் அங்கும் இங்கும், ஆடியும் அசைந்தும், சிரித்தும் உபசரித்துக் கொண்டும் இருப்பர், இடையே மன்னன் இருப்பான்.

மன்னனுடைய பிரத்யேகமான ‘அன்பு’ ஓர் அழகிக்குக் கிடைக்கும், பிறகு வேறோர் வனிதைக்கு மாறும், ஆனால் எந்த அணங்கையும், மன்னன் காமக் கருவியாக்கிக் கொள்வதில்லை, வெறும் பொழுதுபோக்கு!

கணவனிருந்தும் விதவையாக இருந்த ஆன், தன் அழகையும் இளமையையும் வெறுத்தபடி, ஒதுங்கியே வாழ்ந்து வந்தாள்.

சுழல் கண்ணழகியும், கீத மொழியினளும், மன்னனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருப்பதும், ஆன் அரசியை மன்னன் அநியாயமாக ஒதுக்கிவைத்திருப்பதும் ரிஷ்லுவுக்குத் தெரியும்; தெரிந்தது! அந்த நிலை நல்லதுதான் என்று எண்ணிக் கொண்டான். ஆன் அரசியுடன் காதல் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தால்! மன்னன் அவள் வசமாகிவிட்டால்! தன் நிலைக்கு என்ன ஆபத்து நேரிடுமோ, யார் கண்டார்கள்! ஆன் அரசி, மேரிபோலாகி விட்டால்? ஆன் அரசிக்கு வேண்டியவர்களுக்கு ஆட்சிப் பொறுப்புத் தரப்பட்டுவிட்டால்? இப்படி எல்லாம் எண்ணிய ரிஷ்லு, மன்னனின் மணவாழ்க்கை மலருவது கூடாது என்று விரும்பினான்.

கணவன் மனைவிக்கு இடையே கலகமூட்டி, பிரித்து வைத்துப் பெருங்கேடு செய்கிறான் ஆதிக்க வெறியன் என்று சிலர் குற்றமே சாட்டினார்கள்.

அணங்குகளுடன் கொஞ்சிக் குலவட்டும், மனத்துக்கு மகிழ்ச்சி தேடிக் கொள்ளட்டும், ஆனால் எந்த மைவிழியாளிடமும் மன்னன் மனத்தைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்பது ரிஷ்லுவின் எண்ணம். மனத்துக்கு மகிழ்ச்சியே கிடைக்காவிட்டால் மன்னன், காரணமற்ற கோபம், சிரிப்பு, சோகம் ஆகியவற்றுக்கு ஆட்பட்டுவிடுவான். - அதுவும் தொல்லையாகிவிடும். ஒருவேளை, பொழுது போக்கே இல்லாத நிலையில் ஆட்சிக் காரியங்களையே கவனிக்கத் தொடங்கிவிடக் கூடும் - அது தொல்லை மட்டுமல்ல. ஆபத்துங்கூட! எனவே மன்னன், ஆடிப்பாடி மகிழவேண்டும், அதற்கு ஏற்ற அழகு மங்கையர் அவன் அருகில் இருக்க வேண்டும் - இந்த ஏற்பாடும் ரிஷ்லு கவனித்துக் கொள்ள வேண்டும், வேறு எவனாவது இந்தத் துறையில் ஈடுபட்டு, மன்னனிடம் தோழமையைப் பெற்றுவிடு வதும், பேராபத்தாகுமல்லவா!’
ரிஷ்லு, மன்னனுக்கு இந்த ஏற்பாடு செய்துதரக் கூடியவன் என்ற எண்ணம் பலமாக ஊரில் பரவி இருந்ததால், கதைகள் பல, அவன் காலத்திலும், பிற்காலத்திலும் கட்டிவிடப்பட்டன. நடிகை ஒருவத்தியைச் சீமாட்டி வேடமிட்டு மன்னனைச் சொக்கச் செய்யும் ஏற்பாடு செய்தான் ரிஷ்லு, என்ற கதைபோல் பலப்பல, இதனினும் மோசமான கதைகள் கட்டிவிடப்பட்டன - மக்கள் அவற்றை விரும்பிக் கேட்டனர். சந்தேகமின்றி ஏற்றுக் கொண்டனர். டுமாஸ், ஹ்யூகோ எனும் கதாசிரியர்கள், ரிஷ்லுவைக் குறித்தும் அவன் கால நிகழ்ச்சிகளைப் பின்னியும் வகை வகையான கதைகள் தீட்டினர். அவற்றை வரலாற்றுச் சம்பவங்களுக்கு ஒப்ப மதிப்பளித்து மக்கள் வரவேற்றனர். ரிஷ்லுமீது மக்களின் வெறுப்புணர்ச்சி ஏறியவண்ணம் இருந்தது.

மேரியை ரிஷ்லு அடியோடு மறந்தே விட்டான் - அலட்சியப்படுத்தினான். அவள் சகாப்தம் முடிந்துவிட்டது என்று தீர்மானித்தான். மன்னன், தன் சொற்கேட்டு ஆடும் போது, மேரியின் ஆதரவு ஏன்! மேரியோ, மன்னனைப் போல, ஒதுங்கி இருப்பவளல்ல, அதிகாரத்தில் ஆவல் உள்ளவள். எனவே அவளை அருகே இருக்க விடலாகாது.

பிரபுக்கள் பீதிகொண்டு ஒதுங்கிக் கொண்டனர். மேரி விரட்டப்பட்டுவிட்டாள்; மன்னனின் இளவல் தலையில் தட்டி உட்காரவைக்கப்பட்டான்; ஆன் காதலறியாது கண்ணீர் பொழிந்தபடி கிடந்தாள்!
அரச குடும்பத்தை இந்த நிலையில் வைத்துவிட்டு, ரிஷ்லு, தன் ஆதிக்கத்தை உச்சநிலைக்குக் கொண்டு சேர்த்தான்.

கத்தோலிக்கர்கள் ரிஷ்லுவின் உயர்வுகேட்டு, மகிழ்ந்தனர், இனிப் பிரான்சில், ஐரோப்பா முழுவதும் கத்தோலிக்க மார்க்கம் நல்ல நிலைமை பெறும் என்று நம்பினர். பேரவையில் ரிஷ்லு இடம் பெற்றதே கத்தோலிக்கரின் ஆதரவினால்தான். எனவே, ரிஷ்லு தங்கள் மார்க்கத்துக்கு அரண் அமைப்பான் என்று எண்ணினர்.

மதத்துறை அலுவலர்களே இனி, ஆட்சியிலே தங்களுக்கு ஆதிக்கம் சிறக்கும், செல்வாக்கு வளரும் என்று நம்பினர். ரிஷ்லுவின் மார்க்க ஏடு அவர்களை மகிழ்வடையச் செய்தது. ஆட்சியிலே இடம் கிடைத்துவிட்டால் இனி ரிஷ்லு, அந்த வாய்ப்பைக் கொண்டு, மார்க்கத்தை மேம்பாட்டையச் செய்யவும், மதத் துறையினருக்கு, செல்வாக்கு மிகுந்திடச் செய்யவும் பாடுபடுவார் என்று எண்ணினர்.

அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. ரிஷ்லு பொதுவாக மார்க்கத்தை, சிறப்பாகக் கத்தோலிக்க மார்க்கத்தை மேன்மை அடையச் செய்யவேண்டும், என்பதை நோக்கமாகக் கொண்டில்லை, ஜோசப் பாதிரியாருக்கு, ரிஷ்லுவுக்குக் கிடைத்த வாய்ப்புத் தரப்பட்டிருந்தால், முடிகிறதோ இல்லையோ, அந்த நோக்குடன் பணியாற்றி இருப்பார். ரிஷ்லு அப்படிப்பட்ட எண்ணம் படைத்தவனல்ல.

மார்க்கத் துறையில் இடம்பெற்று, புகழ்பெற்று, அதன் மூலம் ஆட்சித் துறையிலே ஆதிக்கம் பெற வேண்டும் என்பது தான் ரிஷ்லுவின் திட்டம். ஒவ்வொரு சம்பவமும், ஆதிக்கம் பெற வழிகோலவேண்டும் என்பது ரிஷ்லுவின் எண்ணம். கலம் ஏறிச் செல்வது கடற்காட்சி காணவா! வேறு பொருள் நாடியோ, வேறு இடம் தேடியோ தானே! அதே போலத்தான், ரிஷ்லுவுக்கு, மார்க்கம் ஒரு கலம் - கருவி.

முதல் பேரவைக் கூட்டத்திலே ரிஷ்லு, மதத்துறையினர் சார்பில் முழக்கமிட்டார். உண்மை! ஆட்சியாளர்கள், மதத்துறை யினருக்குத் தக்க இடமளிக்க வேண்டும், அவர்தம் துணையை நாடிப்பெற்று, ஆட்சியைப் புனிதப் படுத்த வேண்டும், என்றெல்லாம் பேசினார். மார்க்கத்துறையினர் மகிழ்ந்தனர், நிமிர்ந்து நடந்தனர்! அப்போது ரிஷ்லு, லூகான் நகர தேவாலய அதிபர்! இப்போது? ஈடு எதிர்ப்பற்ற முதலமைச்சர்!! இந்த வித்தியாசத்தை மற்றவர்கள் உணரவில்லை! ரிஷ்லு இதனை மறக்கவில்லை. ஜெபமாலை தாங்கும் கரம் இப்போது பிரான்சை ஆட்டிப் படைக்கும் கரமாகிவிட்டது! ரிஷ்லுவின் கோபம், எவரையும் பிணமாக்கும், நேசம், செல்வத்தை, செல்வாக்கை பொழியச் செய்யும்! அன்று பேரவையிலே பண்டார ரிஷ்லு பேசியதை, இன்று பட்டத்தரசனைப் பதுமையாக்கி, அரசியல் ஆதிக்கம் நடாத்தும் முதலமைச்சர் ரிஷ்லுவுக்குக் கவனப்படுத்துவதா? என்ன மந்தமதி! அவர்கள் கண்டார்களா, ரிஷ்லுவின் இத்தகைய மனப்போக்கை. அவர்கள் எண்ணிக் கொண்டது. ஒரு சிறந்த கொள்கைக்காக, உத்தம நோக்கத்துக்காக, ஏசுவுக்காக, அரசியல் ஆதிக்கத்தை ரிஷ்லு பயன்படுத்துவார் என்று!

ரிஷ்லு, கொள்கையை முன்னால் வைத்து, கோட்டையைப் பிடிக்கவில்லை. ஒரு முதலமைச்சரின் கொள்கை ‘காவி கமண்டலங்களை’க் கொலுமண்டபத்துக்குக் கொண்டு வந்து, பாதபூஜை செய்வதாகவா இருக்க முடியும்! மற்ற அமைச்சர்கள், கைகட்டி வாய்பொத்தி நிற்க, அதிகாரிகள் குற்றேவல் புரிய, நீதி மன்றங்கள் குறிப்பறிந்து தீர்ப்பளிக்க, படைவீரர்கள் பகைவர் மீது பாய, ஆட்சிபுரிவது! ஏன் இந்தப் பூஜாரிகளுக்கு இது புரியவில்லை - என்று எண்ணினான் ரிஷ்லு! அவர்களின் கோபத்தை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை.

அவர்களின் கோபத்தை மட்டுமா, அவர்களின் ‘கண் கண்ட தெய்வம்’ போப்பாண்டவரின், கோபத்தையே பொருட் படுத்தவில்லை.