அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அரசாண்ட ஆண்டி
4

பிரான்சு அரச குடும்பத்திலும், பிரபு குடும்பத்திலும் தர்மகாரியத்துக்கென்று அவரவர்களின் நிலைமைக்கு ஏற்ற அளவு தொகை ஒதுக்கித்தரப்படும் - இந்தத் தொகையைத், தக்க முறையில் பகிர்ந்தளிப்பதற்குத் ‘தர்மாதிகாரி’ நியமிக்கப்படுவதுண்டு.

ரிஷ்லுவுக்கு அந்தவேலை கிடைத்தது. சாதாரணமான வேலைதான் - அரசியல் அதிகாரம் கொண்டதல்ல - ஏழை எவர், எளியவர் யார், விதவையின் அழுகுதல் எங்குக் கேட்கிறது, எந்தத் தேவாலயத்தில் அலங்கார விளக்கு இல்லை என்பன போன்றவற்றை அறிந்து ராணி ஆன் வசம் உள்ள தர்ம பணத்தை, தரம் பார்த்துத் தருகிற வேலைதான்! உண்டிப் பெட்டிக்கு அதிகாரி, ஊராளும் வேலை அல்ல. ஆண்டுக்கு ஆறாயிரம் பவுன் சம்பளம்!

இது அல்ல. ரிஷ்லு எதிர்பார்த்தது, எனினும் “இதுவா என் திறமைக்கு ஏற்றது” என்று வெறுத்துத் தள்ளிவிடவில்லை. அரண்மனையில் நடமாடலாம் - அனைவரையும் கவனிக்கலாம், ராணி ஆன் மனமறியலாம். மன்னனையும் சந்திக்கலாம், அரசியல், அரசியல் சம்பவங்கள் சுழன்று கொண்டிருக்கும் இடத்தில் இருக்கலாம் - சமயம் கிடைக்கும் என்று எண்ணி, தர்மாதிகாரி வேலையை இசைந்து ஏற்றுக் கொண்டான்.

அரண்மனையிலோ, சூழ்ச்சியும் சதியும் நிழலுருவில் காணப்பட்டன. மேரியின் அச்சம் அதிகரித்து - லைனிசுக்கு மன்னன் மீதிருந்த பிடி, பலப்பட்டது. கண்ணீர் பொழிந்தாள் மேரி; அந்தக் கயவனை விட்டு விலகடா கண்மணீ! என்று கெஞ்சினாள் - நீ, கான்சினியை விரட்டு! என்று லூயி கூறவில்லை, ஆனால் மனத்திலே அதுதான் எண்ணம். “அன்னையே! பாசம் மறையுமா! யார் என்னுடன் தோழமை கொண்டாலும், தாயின் மனம் நோக நடந்து கொள்வேனோ” என்று பேசினானே தவிர, லைனிசை விரட்டவில்லை மன்னன். மேரியின் மனம் முறியலாயிற்று.
கிடைத்த சலுகை போதாது என்று கோபத்தால், காண்டிபிரபு-, மீண்டும் தன் கோட்டையிலே புகுந்து கொண்டு, பகை கக்கிக் கொண்டிருந்தான்.

அரசிளங்குமரி ஆன், கொஞ்சு மொழி பேசு, நானிருக்கும் போது, - பறவை உலகிலே பொழுது போக்கும் மன்னன் மரக்கட்டையா, மதியற்றவனா, அல்லது மாபாவிலைனிஸ் போடும் மாயப்பொடியில் மயக்குற்று விட்டானா, என்று எண்ணி எண்ணி ஏங்கிக்கிடந்தாள். அரண்மனையில் வாழ்ந்தாள் - இளமையும் எழிலும் கொண்டவன் - பட்டுப் பட்டாடை, அணிமணி அலங்காரம், சேடிகள், கீதமிசைப்போர், கிண்கிணி அணிந்தோர், பானமளிப்போர், பரதம் அறிந்தோர் எனும் விதவிதமான பரிவாரம் இருந்தது - கணவன் காதலிக்கவில்லை - கல்லுருவிலும் இல்லை, காமாந்த காரனாகவுமில்லை, தடிதாங்கியவனுமல்ல, இளைஞன், ஒத்த வயதினன், எனினும் அவன் தன்னை நாடுவதில்லை, காதல் ஒளி அவன் கண்களிலே தெரிவதில்லை, தனி அறையில் தோழன் லைனிசுடன், என்ன மர்மப்பேச்சோ, என்ன இன்பப் பேச்சோ, மணிக்கணக்கில் பேசுகிறான், மலர் இங்கே வாடுகிறது, மணம் மாய்கிறது அவன் அங்கே நள்ளிரவு நேரத்திலும் நண்பனுடன் பேசிக் களிக்கிறான்! என் செய்வாள் ஆன், ஏங்கினாள்! அழுதாள்.

காண்டி பிரபுவின் பகையைப் போக்கிச் சமரசம் உண்டாக்க, மேரி, ரிஷ்லுவை அனுப்பிவைத்தாள். ரிஷ்லு தான், முன்பே காண்டி பிரபுவுக்கு அன்பு ததும்பும் கடிதம் அனுப்பினவனாயிற்றே - எனவே, காண்டியிடம் பேசிச் சரிப்படுத்திவிட முடிந்தது. தனக்குச் சேவை செய்வதையே கொள்கையாகக் கொண்டவன் இந்த ரிஷ்லு, எனவே இவன் பேசுவதை நம்பலாம், என்று எண்ணினான். ரிஷ்லுவும், “எதிர் காலம், சிறப்புடன் விளங்கும்; தங்களின் ஆற்றலை எதிர்த்து நிற்க வல்லவர் யார்? மேரி என்ன இருந்தாலும் பெண்! கான்சினியோ, களியாட்டத்தில் மூழ்கிக் கிடப்பவன்! மன்னனோ, விளையாட்டுச் சிறுவன்!” என்று பலப்பல கூறி மயக்கக் கூடியவன்தானே! என்ன நோக்கம்? காண்டி பிரபுவுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதா! செச்சே! அதற்கா இவ்வளவு பாடு! மேரி அம்மை உணரவேண்டும், நீண்ட நாள் பகையை, பிடிவாதத்தை, முரட்டுத்தனத்தை எவ்வளவு திறம்பட ரிஷ்லு முறித்துவிட்டான், இவனன்றோ இனி நமக்குத் துணையாக இருக்கவேண்டும், இவனிருக்க நாம் கான்சினியை நம்பிக் கிடக்கிறோமே, என்றெல்லாம் எண்ணிக் கொள்ள வேண்டும்! இதற்காகவே ரிஷ்லு, சமரசம் ஏற்படுத்தி வைத்தான் - கபடம் அறியாத காண்டி பிரபு, பாரிஸ் வந்தான், அரண்மனை நுழைந்தான், அடைய வேண்டிய பெரும் பேறு கிடைத்துவிட்டது என்று எண்ணிக் களிப்புற்றான்.
காண்டியின் கோலாகலம் வேகமாகத் துவங்கி, வெறிபோல வளர்ந்தது. யாரையும் சட்டை செய்யாத போக்கு! எவரையும் எதிர்த்துத் தள்ளும் முறை! எவர் என்னை என்ன செய்யமுடியும் என்ற இறுமாப்பு! சிரித்துப் பேசுவோர், சிரம் அசைத்துக் கரம் நீட்டிடுவோர், புகழ் வீசி இலாபம் கேட்போர், இவர்கள் காண்டியின் பரிவாரம். பகலெல்லாம் விருந்து வைபவம்! இரவெல்லாம்? விவரம் கூற இயலுமா! காண்டியின் ‘காட்டுமுறை’ பாரிஸ் அரண்மனை வாசிகளைக் கூடப் பயப்படச் செய்தது.

“மன்னனா! வெறும் பொம்மை! தூக்கி எறிய எந்நேரம் பிடிக்கும்? அந்த அரியாசனத்தில் அமரத்தான் எவ்வளவு நேரம் பிடிக்கும்? நான் விரும்பினால், கான்சினி கடுகி ஓடவேண்டும், மேரி மடாலயம் சேரவேண்டும், மன்னன் சிறகொடிந்த பறவையாக வேண்டும்” என்று கொக்கரிக்கலானான். உண்மையிலேயே, உயிருக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சி கான்சினி, ஓடிவிடலாமா என்று கூட எண்ணினான். மேரி திகில் கொண்டாள். ரிஷ்லு, அவள் பக்கம் நின்றான். “அஞ்சாதீர்! அட்டகாசம் செய்கிறான் காண்டி! பலம் இல்லை! துணை நிற்போர் யாவரும், துரத்தினால் ஓடிவிடும் தொடை நடுங்கிகள்! பயம் கொள்ளாமல், விளைவு என்ன ஆகுமோ என்று யோசியாமல், உத்தரவிடும், காண்டியைக் கைது செய்ய!” என்று யோசனை கூறினான். எந்தக் காண்டி பிரபுவிடம் தயவுகோரி இருந்தானோ, எந்தப் பிரபுவை அரண்மனைக்கு அழைத்து வந்தானோ, அவனிடம் துளி பரிவு காட்டினானா? இல்லை! ரிஷ்லுவுக்குக் காரியம்தான் முக்கியம்- பண்புகளல்ல!

காண்டி கைது செய்யப்பட்டான்; பாஸ்ட்டிலி சிறை புகுந்தான்.

காட்டுத்தீ போலக் கிளம்பிய அவனுடைய அட்டகாசம், நொடியில் அழிக்கப்பட்டுவிட்டது.

துணை நின்றோர்கள் அரண்டோடினர் - துதிபாடகர்கள், மன்னிப்புக் கோரினார்.

ரிஷ்லுவுக்கு இலாபம் உண்டா? இல்லாமற்போகுமா? ஒவ்வோர் அரசியல் குழப்பமும், ரிஷ்லுவுக்கு இலாபமாகத்தான் முடிந்தது. தர்மாதிகாரியாக அரண்மனை நுழைந்த ரிஷ்லுவுக்கு ஆட்சி மன்றச் செயலாளர் பதவி கிடைத்தது. உறுமீனல்ல, பெருமீன்! இரை கிடைத்த இன்பத்திலே மூழ்கி விடாமல், மேலும் இரை தேடலானான் ரிஷ்லு.

காண்டிபோலவே, எதிர்ப்புணர்ச்சி கொண்டிருந்த வேறு பிரபுக்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தான். வெளி நாடுகளுக்குத் தூதுவர்களை அனுப்பிப் பிரெஞ்சு நாட்டுக்கு ஆதரவு திரட்டிடச் செய்தான் - ரிஷ்லு தன் காரியத்தைத் திறம்படத் துவக்கினான்.

ஆட்சிக் குழுவிலே வேறு பலர், அமைச்சர்கள், செயலாளர்கள் உண்டு, எனினும், ரிஷ்லு தன் திறத்தாலும் முறையாலும் மற்றவர்களைச் சாமான்யர்களாக்கிவிட்டு, முன்னணி அமர்ந்தான். முதலமைச்சர் என்ற பட்டம் அளிக்கப் படவில்லை, ஆனால் எதிர்காலத்தில் ரிஷ்லுதான் அந்தப் பதவியில் அமரப்போகிறான் என்பது குறிப்பாகத் தெரியலாயிற்று. பயணம், நம்பிக்கையுடன் தொடங்கப்பட்டது; பாதையும் தெளிவாகிவிட்டது. ஆனால் இடையே ஓர் புயல் வீசி, பாதையை மறைத்தது, பயணத்தைத் தடுத்தது.

காண்டி சிறைப்பட்டான், கான்சினியின் வெறியாட்டம் உச்சநிலை அடைந்தது. மன்னனை மதிப்பதில்லை, ஏளனம் செய்வான், அரியாசனத்தில் அமர்ந்து கொள்வான்-, அரசனுக்குச் செலவுத்தொகைதர அனுமதியேன் என்று ஆர்ப்பரிப்பான். ஒரு சாதாரண பிரபு குடும்பத்தானுக்குக் காட்டுமளவுக்குக்கூட, மன்னனுக்கு மரியாதை காட்ட மாட்டான்-, பித்தம் முற்றிவிட்டது - முடிவு நெருங்கிவிட்டது. லைனிஸ், இந்த முடிவுக்கான திட்டம் தீட்டி விட்டான். ஒருவரும் அறியாவண்ணம் தீட்டப்பட்ட திட்டத்தின்படி, மன்னன் உத்தரவு பெற்ற ஒரு பிரபு, கான்சினியைக் கைதுசெய்தான் - எதிர்த்ததைச் சாக்காகக் கொண்டு கான்சினியைச் சுட்டுக் கொன்றுவிட்டான். முகம் சுக்கு நூறாகிவிட்டது. ஆணவமும் அட்டகாசமும் அழிந்தது என்று மகிழ்ந்தனர் பலரும். கான்சினியின் கையாட்கள், இந்த எதிர்பாராத தாக்குதலாலும், விபரீதமான முடிவுகண்டதும் திகைத்துப் போயினர் - தப்பினால் போதும் என்று திக்குக்கொருவராக ஓடிவிட்டனர். ஒரு விநாடிக்கு முன்பு வரை, அவன் இட்டதுதான் சட்டம் என்ற நிலை இருந்தது, சுட்டுத் தள்ளப்பட்டான், ஏன் என்று கேட்க ஆள் எழவில்லை. வாழ்க மன்னன்! என்ற முழக்கமிட்டபடி, கான்சினியைக் கொன்ற பிரபு, மக்கள் முன், பிணத்தைப் போட்டான். மக்கள்-, தொலைந்தான் தூர்த்தன்! என்று மகிழ்ந்து கூறினர். கலக்கமடைந்தாள் மேரி - கான்சினிக்கு நேரிட்ட கதிகண்டு அல்ல, தனக்கு என்ன ஆபத்து வர இருக்கிறதோ என்று எண்ணி, ஆண்டு பலவாக அவனுடைய சொல்கேட்டு ஆடிவந்த மேரி, அரண்மனையில் அளவுகடந்த அதிகாரத்தை அவனுக்கு அளித்த மேரி, வெறி நாயைச் சுட்டுத் தள்ளுவது போல அவனைச் சுட்டுத் தள்ளியதுகேட்டு, இந்த அக்கிரமம் ஆகுமா? என்று கேட்கவில்லை - கதறக்கூட இல்லை, தன்னைக் காத்துக் கொள்வது எப்படி, கான்சினிமீது பாய்ந்த பகை, தன்னைத் தாக்கினால் எப்படித் தாங்குவது, என்றுதான் எண்ணம் சென்றது! பிரெஞ்சு அரச குடும்பத்தில் இப்படிப்பட்ட நெஞ்சினருக்கே இடம் இருந்தது!

கான்சினியின் மனைவியின் பெயர் லியனோரா. மேரிக்கு இவள் உயிர்த் தோழி. மேரியின் செவிலித்தாயின் மகள், கான்சினி இறந்துவிட்டதை எப்படி லியனோராவிடம் கூறுவது - அவள் மனம் என்ன பாடுபடும், என்று கூறிக்கரத்தைப் பிசைந்துகொண்டு கண்ணீர் உகுத்தனர், சேடியர். மேரிக்குக் கோபம் பிறந்ததாம், “அவன் எப்படிச் செத்தான் என்பதைச் சொல்லத் தெரியாவிட்டால், அதுபற்றி அவளிடம் பாடுங்கள்” என்று அலட்சியமாகக் கூறிவிட்டுத் தன் காரியத்தைக் கவனித்தார்களாம்.

எப்படிப்பட்ட உத்தமமான மனம்! எவ்வளவு உயர்ந்த பண்பு!

கான்சினி கொல்லப்பட்டதும், மன்னன், தன் தோழன் லைனசுடன் கூடிக்கொண்டு, புதிய பல ஏற்பாடுகள் செய்யலானான். புயல் வீசலாயிற்று! கான்சினியின் தயவால் பெரும் பதவிகளில் அமர்ந்திருந்தவர்கள், வேலையினின்றும் நீக்கப்பட்டனர். கான்சினியால் சிறை வைக்கப்பட்டவர்கள், விடுதலை செய்யப்பட்டு, பதவிகளில் அமர்த்தப்பட்டனர். பல துறைகளிலே திடீர் மாறுதல், லியனோரா சிறையில் தள்ளப்பட்டாள். மேரியின் அமுல் அடக்கப் பட்டுவிட்டது. எல்லாம் இப்போது லைனஸ் கரத்தில்!

மன்னனை மக்கள் பாராட்டினர். ஏதுமறியாதவர் போலிருந்தாரே, இப்போது இவ்வளவு ஆற்றலுடன் காரிய மாற்றுகிறாரே, என்று கூறி மக்கள் மகிழ்ந்தனர். கான்சினியிடம் மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு. இவனது கொட்டத்தை அடக்கும் துணிவு யாருக்குமா இல்லை, என்று மக்கள் பலகாலமாகக் கேட்டு வந்தனர். வேட்டை விளையாட்டில் ஈடுபட்டு, ஆட்சியிலே இருப்பவர்கள் எது செய்தாலும் அக்கறை காட்டாது இருந்து வந்த இந்த ஊமை மன்னன், மக்களின் மனப் போக்கை அறிந்து, மாபாவியைக் கொன்றானே, இதல்லவா ஆச்சரியம் என்று பேசினர்.

கான்சினியின் பிணம் பிய்த்தெறியப்பட்டது. ஆளுக்கொரு துண்டு எடுத்து அங்கும் இங்கும் போட்டுக் கொளுத்தினர் - சாம்பலை, காற்றோடு கலந்தனர், களிநடனம் புரிந்தனர். கான்சினி ஒழிந்தான், மன்னன் வாழ்க இத்தாலிய எத்தன் ஒழிந்தான், வீர இளைஞன் வாழ்க என்று வாழ்த்தினர்!

கான்சினியுடன் தொடர்பு கொண்டோர், மேரியின் தயவுக்குப் பாத்திரமானோர், இவர்களுக்குப் பேராபத்து தாக்கிய போது, தப்பிப்பிழைத்தது, ரிஷ்லு மட்டுந்தான் எப்படி?

கான்சினியின் தயவைப் பெற ரிஷ்லு தவறவில்லை - மேரியின் ஆதரவால்தான். ஆட்சிக்குழுச் செயலாளராக அமர்ந்திருந்தான். எனவே மன்னனுக்கும் லைனசுக்கும் மாற்றும் குழுவிலே இருந்த ரிஷ்லு, ஒழித்துக் கட்டப்பட வேண்டிய புள்ளிதான், எனினும், லைனஸ், மன்னனிடம் “ரிஷ்லு யோக்யர்! தங்களிடம் நிரம்பப் பற்று உள்ளவர்” என்று வாதாடினான். ஏன்? அவன் அவ்விதம் நம்பும்படி ரிஷ்லு, சிலகாலமாக, நடந்து கொண்டு வந்தான்.

கான்சினியின் நிலை, திடீரென்று சாயும் என்பதையும் லைனஸ் மன்னனைப் பயன்படுத்தி, சூத்திரக் கயிற்றினைப் பிடித்துக் கொள்ளப் போகிறான் என்பதையும், உணர்ந்த ரிஷ்லு, “கான்சினியின் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை, எனக்கு அவன் தயவில் பதவியில் இருக்கவே கஷ்டமாக இருக்கிறது, மேரி அம்மையின் இயல்பும் எனக்குப் பிடிக்கவில்லை, என் உள்ளம் மன்னன் சார்பாகத்தான், மன்னனிடம்தான் அதிகாரம் இருக்க வேண்டும் என்பது என் நோக்கம்” என்றெல்லாம், லைனசிடம், அவன் நம்பும்படி பேசி வந்திருக்கிறான். எனவே தான், பலருக்குத் தலைபோன அந்த நேரத்திலும், ரிஷ்லு சேதமின்றி இருக்க முடிந்தது.

மேரியும் கான்சினியும் அல்லவா, நமது இன்றைய உயர்வுக்குக் காரணம், அவர்களிடம் உள்ளன்பு கொள்வதும், நன்றியறிதல் காட்டுவதுந்தானே, நமது கடமை, அவர்களில் கான்சினி கொல்லப்பட்டுவிட்டான். மேரியோ தாழ் நிலைக்குத் தள்ளப்படுகிறாள், அவர்கள் சார்பிலே நின்று, லைனசின் அக்கிரமத்தைக் கண்டிப்பதல்லவா அறம், என்றெல்லாம் ரிஷ்லு எண்ணவில்லை! மூவர் இருந்தனர், முட்டுக் கட்டைகள் - ஒருவன் காண்டி; சிறை சென்றான்; மற்றொருவன், கான்சினி, சுட்டுச் சாம்பலாக்கி விட்டனர் - மூன்றாமவன் இந்த லைனஸ், இவன் தொலையு மட்டும், துதிபாடித் தப்பித்திருக்கத்தான் வேண்டும் - இவனும் தொலைவான், பிறகு, நான்தானே மன்னன் பக்கத்திலே, என் கரத்தில்தானே பிரான்சு! - என்று இப்படி எண்ணினான் ரிஷ்லு. அவன் படித்த மார்க்க ஏடுகளும் அற நூல்களும் இத்தகைய சுயநலத்தைத்தானா தந்தன, என்று கேட்கத் தோன்றும். அந்த ஏடுகளிலே இருந்து ரிஷ்லு இந்தக் குணத்தைப் பெற்றானோ இல்லையோ, நாமறியோம். ஆனால் ஒன்று அறிவே அவன் அந்த ஏடுகளைப் படித்ததே கூட, சொந்த ஆக்கத்தைப் பெற அவை தரும் அறிவு பயன்படட்டும் என்ற நோக்குடன்தான்! அறநூல் படித்தவன்! அபாரமான திறமைசாலி! - என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகக் கற்றானே தவிர, அறத்தைப் பரப்ப வேண்டும் – காக்க வேண்டும் என்பதற்காக அல்ல! அந்த வேலையைப் புத்தகப் பூச்சிகளுக்கும் வித்தகப் பேச்சாளருக்கும் விட்டுவிட்டான்!

அரண்மனை ஆச்சரியப்பட்டது பலரை வீழ்த்த பெரும் புயலால், ரிஷ்லு சாய்ந்திடாதது கண்டு.

மேரியிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டதுடன் அம்மையைப் பாரிசை விட்டே பயணப்படும்படி மன்னன் உத்தரவிட்டான் - உத்தரவு பிறப்பிக்கும்படி லைனா கட்டளையிட்டான்!

ப்ளாயிஸ் என்ற ஊர் சென்று தங்க ஏற்பாடு செய்பட்டு மேரி புறப்பட்டபோது, மன்னனுடைய அனுமதியுடன் ரிஷ்லு, மேரியின் ஆலோசகர் குழுத் தலைவராகச் சென்றான்.

மேரி, சுகத்திலும் துக்கத்திலும் வாழ்விலும் தாழ்விலும் தன்னுடன் இணைந்து இருக்க இசையும் ரிஷ்லுவின் பெருங் குணத்தைப் பாராட்டி இருக்கக்கூடும். ஆனால் ரிஷ்லு சென்றது, மேரி அம்மையுடன் இருந்து கொண்டு மன்னனுக்கு அவ்வப் போது ‘சேதி’ அனுப்ப! லைனசின் ஏற்பாட்டின்படி ஆட்சிப் பொறுப்பை மன்னன் ஏற்றுக் கொண்ட கணமே, ரிஷ்லு, மன்னனின் ‘ஆள்’ ஆகிவிட்டான். மேரி இனி ஒரு கருவி - அதிலும் கூர் மழுங்கிவிட்டது! உயர வழி, முன்னேற மார்க்கம் மீண்டும் உயர பதவி பெற வழி, மன்னனுக்குத்தொண்டு புரிவதுதான் என்ற முடிவுக்கு ரிஷ்லு வந்தாகிவிட்டது. மன்னனால் நியமிக்கப்பட்ட ‘ஒற்றன்’ இந்த ரிஷ்லு என்பதறியாமல், இழந்ததைத் திருப்பிப் பெறத் திட்டம் என்ன வகுக்கலாம் என்று எண்ணியபடி, ரிஷ்லுவை அழைத்துக் கொண்டு, மேரி, ப்ளாயிஸ் சென்று புதுமுகாம் அமைத்துக் கொண்டாள்.

மேரியுடன் ரிஷ்லு இருந்து வந்தது லைனசுக்குப் பிடிக்க வில்லை. எனவே ரிஷ்லு, பழையபடி லூகான் நகர் அனுப்பப் பட்டான். ஏழாண்டுகள் இதுபோல, ‘வனவாசம்’ செய்ய நேரிட்டது. பலர் ரிஷ்லுவின் அரசியல் வாழ்வு இனித் துலங்காது என்று எண்ணினர். ஆனால் ரிஷ்லுவுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது, மீண்டும் பதவிகிடைத்தே தீரும். முன்னிலும் மேலான நிலை பிறக்கும் என்று.

‘நான் உண்டு என் ஏடு உண்டு’ என்று ரிஷ்லு கூறிக் கொண்டபோதிலும், நாட்டு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த வண்ணம்தான் இருந்தான். இடையிடையே, எந்த மன்னனால் துரத்தப்பட்டானோ, அதே லூயிமன்னனுக்கு, ரிஷ்லு தன் ஆற்றலை விளக்கிக் காட்டும் வாய்ப்பும் கிடைத்தது.