அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

குமாஸ்தாவின் பெண்
1

“ஆமாம்! நானும் ஒரு குமாஸ்தாவின் மகள்தான். என் பெயர் காந்தா. குமஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடகக் கதையில் வரும் குமஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. அவள் சமுதாயக் கொடுமையால் செத்தாள், தற்கொலை செய்து கொள்கிறாள். அது நாடகத்தில் நடப்பது. நிசமாக நடந்ததல்ல. நான் தேவிதமான கொடுமையால் சாகவில்லை. ஒருவனை, என் ஆசை நாயகனை, சாகடித்தேன். நாடகத்திலே பரிதாபத்திற்குரிய சீதா தற்கெலை செய்து கொள்கிறாள். நான், பழி பாவத்துக்கு அஞ்சாதவள். கொலை செய்தேன். என்னைத் தண்டியுங்கள். ஆனால் தண்டிப்பதன் மூலம், நீங்கள் இந்த ஒரு காந்தாவை அடக்கலாம். இதே நேரத்திலும், இனியும் தோன்ற இருக்கும் காந்தாக்களைத் தடுக்க என்ன செய்வீர்? ‘பிளேக்’ வந்தவனுக்கு ஊசி போட்டு
விட்டால், ஊரிலே வேறு யாருக்கும் பிளேக் வராது என்று கூறிவிடமுடியுமா? இந்தக் காந்தாவைக் கொன்றுவிட்டால், இனி வேறு காந்தா கிளம்ப மாட்டாள் என்றா எண்ணுகிறீர்கள்?
என் இளவயதில் நான் தூக்குமேடை ஏறவேண்டுமே என்று எனக்குப் பயமுமில்லை, துக்கமுமில்லை. என்னைப் பற்றி ஊரார் ஏசுவார்களே என்று வெட்கமுமில்லை. அந்த உணர்ச்சிகள் என்னை இப்போது அண்டுவதில்லை. மரத்துப் போன மனம் என்னுடையது. உளுத்துப் போன நியதிகளை நீதியாகக் கொண்ட உலகம் இது.

ஏனய்யா, இப்படி விறைத்துப் பார்க்கிறீர், கவலையா? எனக்கு மரண தண்டனை தரவேண்டுமே, என் செய்வது? அறியாத பெண்ணாயிற்றே, இவளைச் சாகச் சொல்வதா என்று சோகமா உமக்கு? பாவம்! நான் உயிரோடு இருப்பதாகவா கருதுகிறீர்? நான் இறந்து பத்தாண்டுகள் கிட்டத்தட்ட ஆகி
விட்டன. கள்ளங் கபடமற்ற காந்தா பன்னெடு நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்டாள். இந்தக் காந்தா, பழிவாங்கும் பேர்வழி.

வழக்கை வளர்த்திக் கொண்டிருக்க வேண்டாம். சோமுவை நான்தான் கொன்றேன். கழுத்தைத் திருகினேன். அவன் இறந்தான். சாகும்போதுகூட நான் அவனை அணைத்துக் கொண்டிருந்தேன். அவனை மட்டும் நான் கொல்லாது போயிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? சோமு ஒரு கொலைகாரனாகி நின்று கொண்டிருப்பான். நான் அவனுக்குக் கடைசியாகச் செய்த உதவி, அவனைக் கொன்றேனே அதுதான். பத்தாண்டுகளுக்கு முன்பு சோமு என்னைக் கொன்றான். இப்போது நான் அவனைக் கொன்றேன்; அவனுக்கு உதவி செய்தேன்.

ஏன் விழிக்கிறீர்கள்? நான் உளறுவதாக நினைக்கிறீர்கள்? அப்படித்தான் எண்ணுவீர்கள், சகஜம். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை நானே எழுதி வைத்திக்கிறேன். அது கிடைத்தால் என் மரணத்துக்குப் பிறகு அதைப் படியுங்கள்; விஷயம் விளங்கும். போதும் நான் உலகில் வாழ்ந்தது. விடை கொடுங்கள். செல்கிறேன், முதலில் என்னைத் தண்டித்து விடுங்கள். உங்கள் வேலை முடியட்டும். பலருடைய ஆசையும் நிறைவேறட்டும்.

சோமு என்ற தனது ‘ஆசை நாயகனை’க் கொன்றதாக, காந்தா என்ற மாது குற்றஞ் சாட்டப்பட்டு, சென்னைக் கோர்ட்டிலே விசாரணை நடந்தது. காந்தாவுக்கு வயது இருபத்தைந்து அல்லது இருபத்தாறு இருக்கும். அழகி. ஆனால் கொலைகாரி! அதற்கு ஏராளமான ருசு கிடைத்துவிட்டது. தண்டனை நிச்சயம், என்று இந்த வழக்கைக் காண வந்திருப்பவர்கள் பேசிக் கொண்டனர். கோர்ட்டிலே காந்தா, பயமோ, பதைப்போ, துக்கமோ, துடிப்போ, இல்லாமல் மிக அமைதியாக இருந்ததைக் கண்ட நீதிபதி வக்கீல் முதலானவர்கள், தூக்கு மேடைக்குப் போவோம் என்று தெரிந்தும், இவளுக்கு இவ்வளவு தைரியம் எப்படிப் பிறந்தது என்று எண்ணி ஆச்சரியமடைந்தனர். பல சாட்சிகள் விசாரணை செய்யப்பட்ட பிறகு, குற்றவாளி ஏதாகிலும் கூறவேண்டியது இருக்கிறதோ என்று நீதிபதி கேட்டார். அப்போது காந்தா பேசியது, மேலே நாம் விவரித்தது. கோர்ட்டாருக்கோ, வேடிக்கை காண வந்தவர்களுக்கோ, காந்தா பேசியதன் பொருள் விளங்கவில்லை. தூக்குத் தண்டனை விதிப்பார்கள் என்று கிலி பிடித்துக் கொண்டதால், காந்தாவின் மூளை குழம்பி விட்டதென்றும், பைத்தியம் பிடித்ததாலேயே, ஏதேதோ உளறினாளென்றும், கோர்ட்டில் பேசிக் கொண்டனர். ஆனால் உண்மையில் காந்தாவுக்குப் பைத்தியமுமில்லை, மனக் குழப்பமுமில்லை. மிகத் தெளிவாகவே இருந்தாள். காந்தாவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கமான சடங்குகளுக்குப் பிறகு காந்தா தூக்கிலிடப்பட்டாள்.
காந்தாவின் கதி கண்டு வருந்தினவர்கள் யார்? அவளது தங்கை சாந்தாவும், அவளது காதலன் சங்கரனும் தவிர வேறு யாரும் வருந்தவில்லை.

விபசாரி! கொலைகாரி! குலத்தைக் கெடுத்தவள்! மிராசுக் குடும்பத்தை அழித்தவள்! சோமுவைக் கொலை செய்தவள்! – என்று பலர் பலவிதமாகத் தூற்றினார்கள். காமத்துக்குப் பலியான சோமுவின் ‘பரிதாபச் சிந்து காலணா’ என்றும், ‘கொலைகாரக் காந்தாவின் கோர மரணம்’ என்றும் பாட்டுப் புத்தகங்கள் விற்கப்பட்டன. பத்திரிகாசிரியர்கள் ‘விபசாரத்தால் வந்த வினை’ என்று தலையங்கங்கள் எழுதித் தீர்த்தனர்.

வழக்கும் தூக்கும் வம்பளப்பும் முடிந்து சில நாட்கள் சென்றபிறகு, சாந்தாவும் சங்கரனும் சென்னையை விட்டு வெளியேறி, கலியாணம் செய்து கொண்டு, ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களிருவருக்கு மட்டுமே காந்தாவின் பரிதாப வரலாறு முழுவதும் தெரியும். ‘காந்தாவின் டைரி’ அவர்களிடந்தான் இருந்தது.

சங்கரன் காந்தாவின் டைரியைப் புத்தகமாகப் பிரசுரிக்கத் தீர்மானித்தான். உலகில் மறுபடியும் காந்தாவைப் பற்றித் தாறுமாறாகப் பேசுவார்களே! எதற்காக அத்தகைய வம்பளப்புக்கு இடமளிக்க வேண்டும்; ‘புத்தகம் போடக் கூடாது’ என்று சாந்தா கூறினாள். “சாந்தா! உலகத்தார் காந்தாவைத் தூற்றினாலும் கவலையில்லை. அவளது வாழ்க்கை வரலாற்றைப் படித்து ஓரிருவராவது பாடம் கற்றுக் கொண்டால் போதும். மேலும், விஷயத்தைப் பகுத்தறியக் கூடியவர்கள் காந்தாவைப் பற்றிப் பரிதாபப்படுவார்களே யன்றிப் பழிக்க மாட்டார்கள். அவர்கள் தூற்றினாலும் சரி, கவலையில்லை. நான் காந்தாவின் டைரியைப் பிரசுரிக்கத்தான் போகிறேன். நாமிருவரும் சேர்ந்து முகவுரை எழுதுவோம்” என்று சங்கரன் கூறினான். அங்ஙனமே செய்தான். எவ்வளவோ எதிர்ப்புகளை அடக்கிச் சாந்தாவைக் காதலியாகப் பெற்றவன் சங்கரன், அது வேறு கதை! ஆகவே அவன் தீர்மானித்தால் நிறைவேற்றாமல் விடுவதில்லை. காந்தாவின் ‘டைரி’ புத்தக ரூபமாக வெளிவந்தது! சிலர் கண்ணீர் வடித்தனர். படித்து முடித்ததும் சிலர், “இதை வெட்கமின்றி வெளியிட்டானே பிரகஸ்பதி” என்று சங்கரனைத் திட்டினார்கள். ஆனால், அந்த டைரிதான் இதோ இனி நான் உங்களுக்குத் தரப்போவது, கேளுங்கள் காந்தாவின் டைரியை...! காந்தா எழுதியதில் சிறுசிறு பிழைத் திருத்தங்கள் செய்தேனேயன்றி விஷயத்தை மாற்றவில்லை. காந்தா எழுதினதில் காணப்பட்ட எழுத்துகளில் இருந்த பிழையை நான் திருத்தினேனேயன்றி அவள் எண்ணத்தை, நடந்த சம்பவங்களை, காந்தா எழுதினபடி அப்படியேதான் உங்களிடம் தருகிறேன். பாருங்கள் இந்தப் பரிதாபப் பெண்ணின் படத்தை.

இந்த நாடகக் கம்பெனிக்காரர்கள் வண்டி எங்கள் வீட்டுப் பக்கமாக வரும்போதெல்லாம் எனக்குக் கோபந்தான் வருவது வழக்கம். விதவிதமான பயங்கரங்களைக் காட்டிக் கொண்டு, ரக ரகமான நோட்டீசுகளைப் போட்டுக்கொண்டு, மனத்தைக் கெடுத்தே விடுகிறார்கள். நெஞ்சை உருக்கும் பாடல்கள், உல்லாசமான சம்பாஷனை, உயர்தரமான நடிப்பு, அற்புதமான சீன் ஜோடிப்பு, அவர் பாடுகிறார், இவள் ஆடுகிறாள் என்றெல்லாம் நோட்டீஸ் போட்டு ஆசையைக் கிளப்பி விடுகிறார்கள். எங்களிடத்திலே பணமா இருக்கிறது. நாடகத்திற்குப் போக? அப்பாவுக்கு வருவதோ மாதம் 26 ரூபாய். அடுப்பிலே உலை தவறாது ஏறினாலே போதும். இந்த இலட்சணத்திலே தம்பிக்கு வேறு, பள்ளிக்கூடச் சம்பளம் கட்ட வேண்டும். அவன் படித்துவிட்டு என்ன சாதிக்கப் போகிறானோ தெரியாது. சாந்தாவின் குரல் தங்கக் கம்பிபோலிருக்கிறது. பாட்டுச் சொல்லிக் கொடுத்தால் ரம்மியமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள். எனக்கோ இன்னமும் கலியா –

நாடக வண்டிகளைப் பார்க்கக் கூடாது என்றிருந்தவள் அன்று பார்க்க வேண்டியதாயிற்று. “குமாஸ்தாவின் பெண், குமாஸ்தாவின் பெண்!” என்று கூறினர். நானும் ஒரு குமாஸ்தாவின் பெண்தானே! ஆகவே நோட்டீசை வாங்கச் சொன்னேன். சாந்தா ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வந்தாள். கதைச் சுருக்கம் அதில் இருந்தது. அசல் எங்கள் குடும்பக் கதைதான். ஆகவே, இந்த நாடகத்தை எப்படியாவது போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆசை பிறந்தது. அப்பாவிடம் சொன்னேன். அவர் என்ன செய்வார் பாவம், “கண்ணில்லை யோடி காந்தா, பெரிய பெண்ணாயிருக்கே, நோக்குத் தெரியாதோ நம்ம ஆத்துக் கஷ்டம்” என்று சொன்னார். வறுமை பிடித்து வாட்டும் நாங்கள் குடியிருக்கும் வீட்டுப் பக்கமாக, பாழாய்ப் போன சினிமா, டிராமா வண்டிகளும், பட்டுப் புடவைக்காரனும், பம்பாய் சேட்டும் ஏன்தான் வரவேண்டும்? நாசமாய்ப் போகிறவாள் எங்களை வறுமையோடாவது விட்டு வைக்கக் கூடாதா? இல்லாதவாளிடம் வருவானேன், இது வேண்டுமா, அது வேண்டுமா என்று கேட்பானேன்? இப்படிச் சித்திரவதை நடக்கிறதே உலகில் சிவனே என்று அவாளவாள், அவாவா காரியத்தைக் கவுனிச்சுண்டேதான் இருக்கா? மனுஷ்யர் மட்டுமா, தெய்வங்ககூட சும்மாதான் இருக்கு.

இரண்டாம் வாரம், மூன்றாம் வாரம் ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் எனக்கு ஓயாத தொல்லை. அப்பாவுக்குச் சங்கடம். என் முகத்தைக் கண்டு அவரால் சகிக்க முடியவில்லை.

“காந்தா, நாளைக்கு ரெடியா, இரு. நாடகம் செல்வோம். சாந்தாவும் வரட்டும்” என்று ஒரு தினம் அப்பா சொன்னார்.

“என்ன வாலிபந் திரும்புகிறதோ, குடும்பம் கிடக்கிற கிடப்பிலே நாடகம் வேறே வேண்டியிருக்கோ, இங்கேதான் நல்லதங்கா நடக்கிறதே, நாடகம் போறாராம் நாடகம்” என்று அம்மா கோபத்தோடு கூறினார்கள். வாஸ்தவந்தானே. அந்த முக்கால் ரூபாய் இருந்தால் எங்கள் குடும்பத்துக்கு எவ்வளவோ சௌகரியம்.

நாடகம் சினிமா இவை இருக்கும் உலகத்திலே பணப் பஞ்சம் ஏன் இருக்க வேண்டும்? குமாஸ்தாவின் பெண் நாடகம் எவ்வளவு அருயைமாக இருந்தது தெரியுமோ? என்ன அருமையாக நடிக்கிறார்கள், டி.கே. சண்முகம் கம்பெனியார். இராமு வேடத்திலே சண்முகம் நடிப்பது எல்லோருக்கும் பிடித்தது. சீதா இறந்தது கேட்டு இராமு, சீதா! சீதா, என்று அலறிக் கொண்டு ஓடும்பொழுது, மனம் துடிக்கிறது. சீதாவாக நடிக்கும் சிறுவன் அசல் பெண்போல்தான் தெரிகிறான். சீதாவின் தங்கை சரசுவாக எம்.எஸ். திரௌபதி என்ற பெண் ஜோடியாக நடிக்கிறாள். “நீங்கள் மிராசுதாரர், உங்காத்துலே விதவிதமாகக் குடங்கள் இருக்கும். எங்களுக்கு இருப்பது இந்த ஒரு குடந்தான்” என்று சரசு கூறும்போது கசியாதவர்கள் இல்லை. குமாஸ்தாவாக நடிப்பவர் ரொம்ப நன்றாக நடித்தார். ஆமாமா, யாரைச் சொல்லி யாரைச் சொல்லாமல் விடுகிறது. நீங்கள் பார்க்க வேண்டும் அவ்வளவுதான். நான் எவ்வளவு சொன்னாலும் போதாது, புரியாது போங்கள்.

கதை தெரியுமோ, முதல் தரமானது. ஒரே ஒரு குமாஸ்தா. எங்கப்பாபோல் அவருக்கு இரண்டு பெண்கள், ஓர் ஆண். எங்காத்திலே நாங்கள் இருப்பதுபோல் சீதா மூத்தவள், நல்ல அழகி. சரசா இளையவள் எங்கள் சாந்தா போல். அழகு, குணம் எல்லாம் என் தங்கை போலத்தான். வறுமை பிடுங்கித் தின்கிறது. எங்காத்திலே இருக்கிற கஷ்டம்தான் சீதாவுக்கு இராமு என்ற ஒருவன் மேலே ஆசை. அவனுக்கோ கோவில் குளம், பூசை, புத்தகம் முதலியவற்றிலே ஆசை. அவளையும் கலியாணம் செய்து கொண்டு அவன் கோவிலுக்குப் போவதை எந்தக் கடவுள் வேண்டாமென்று கூறிவிடுமோ தெரியவில்லை. அவன் கல்யாணமே கூடாது என்று கூறிவிட்டான். எந்தக் கோவிலும் பிள்ளையார் கோவில் தவிர, தேவி இருக்கே. நாம் ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று இராமு யோசிக்கவில்லை. யோசிக்க நேரமேது? சதா தேவாரம் திருவாசகம் படிக்கவும், குளித்துப் பூசை செய்யவும் நேரம் போய்விடுகிறது. வரதட்சணைதான் ஒரு சாபக்கேடு இருக்கிறதே எங்க குலத்திலே. சீதாவுக்குப் பணமேது? ஒரு கிழவனிடம் தள்ளுகிறார்கள்; அவன் சாகிறான். மொட்டச்சியாகிறாள் சீதா. பிறகு அந்த ஊர் மிராசுதாரன் சீதாவைக் கெடுக்க வருகிறான். எவ்வளவோ கஷ்டம் குமாஸ்தா காலமாகிறார். சீதா தற்கொலை செய்து கொள்கிறாள். பிறகு இராமு சரசாவைக் காப்பாற்றுகிறான். அவனை ஒரு கரம்புக்காரனுக்குக் கலியாணம் செய்ய ஏற்பாடாகிறது. கலியாணப் பந்தலிலேயே சண்டை. “போடா போ! சரசாவை நானே கலியாணம் செய்து கொள்கிறேன்” என்று இராமு கூறிவிட்டுக் கலியாணம் செய்து கொள்கிறான். சரசா நிம்மதியாக வாழ்கிறாள். இது கதை. பார்த்தால்தான் தெரியும். இதில் உள்ள சுவை.

சீதாவை ஒரு கிழவனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கும் சீன் நடக்கும்போது, என்கதி என்னாகுமோ என்று எண்ணி, கண்களில் நீர் தளும்ப, அப்பாவை நோக்கினேன். அவர் மனம் வேதனையில் இருந்ததுபோல தெரிந்தது. துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதால் அப்பா கம்மலான குரலுடன், ‘பாவி கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்தானே’ என்று குமாஸ்தாவைத் திட்டினார். என் மனத்தில் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அப்பா என்ன கஷ்டம் வந்தாலும் சீதாவைக் கிழவனுக்குக் கொடுத்ததைப் போல என்னைக் கலியாணம் செய்துவிட மாட்டார்கள் என்று தைரியம் பிறந்தது.

இப்படிப்பட்ட நாடகங்களைப் பார்த்த பிறகாவது நம்ம குலத்திலேயிருந்து இந்த வரதட்சணைப் பேயை ஓட்டிவிட வேண்டாமா? கதை முடிந்தது. வீட்டுக்கு வந்தோம். அம்மாவிடம் கதையைச் சொன்னபோது அவள், ‘ஆமாம்! அந்த ஏழைப் பிராமணன் வேறே என்ன செய்வான்? எத்தனை நாளைக்குச் சீதாவை வீட்டிலேயே வைத்திருக்க முடியும்? கிழமோ, குருடோ எதுவோ ஒன்றின் தலையில் கட்டித்தானே தீர வேண்டும்’ என்று கூறினாள். “சீ! முட்டாளே! அவன் காரியம் மகா பிசகு” என்று அப்பா வாதாடினார். சாந்தா தூங்கி விட்டாள். எனக்கோ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த பேச்சு பயத்தை உண்டாக்கிவிட்டது. என்னை அழைத்துக் கொண்டு போகப் படு கிழவன் வருவதாகவும், நான் பயந்து கொண்டு அப்பாவிடம் ஓடுவது போலவும் கனவு கண்டேன். மறுதினம் காலையில் எழுந்ததும், வாசலில் நின்று கொண்டு தெருவை நோக்கினேன். எதிர்வீட்டில் ஒரு சுந்தர வாலிபன் நின்று கொண்டிருக்கக் கண்டேன்.

நெடு நாட்களுக்கு முன்பே கல்கத்தா சென்றிருந்த அலமு, தன் கணவனை இழந்துவிட்டு மகனுடன் ஊர் திரும்பி எங்கள் வீட்டு எதிர்வீட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு, அதில் குடியேறினாள். அவள் வரப்போகிறாள் என்பது எனக்கு முன்னாலே தெரியும். அவள் பிள்ளைக்குத் தலைசீவிச் சடை போட்டுப் பொழுது போக்கலாம் என்று நான் எண்ணியதுண்டு. ஆனால், அலமுவின் மகன் நான் எண்ணிக் கொண்டிருந்தபடி சிறிய அம்பியல்ல! அலமுவின் பிள்ளைதான், நான் நாடகம் போய்வந்த மறுதினம் காலையில் என் கண்களுக்குக் காட்சி அளித்தது. நான் தொட்டு விளையாட முடியாத பருவம், என்கிட்ட வரமுடியாத வயது. ஏறக்குறைய இருபது இருக்கும் என்கிட்டே அந்தச் சுந்தர ரூபன் வர முடியாது என்று கூறினேனல்லவா! அவன் என்ன செய்தான் தெரியுமோ! யாரது புதிதாக இருக்கிறதே என்று நான் பார்த்தேனோ இல்லையோ, ஒரே தாவாகத் தாவி என் நெஞ்சில் புகுந்து கொண்டான். அந்த உருவம் எதிர்வீட்டு வாசற் படியண்டைதான் இருந்தது. ஆனால், என் நெஞ்சிலே சித்திரம் பதிந்துவிட்டது. சுந்தரமான அவனது பெயர் சோமசுந்தரம். அலமு அதிர்ஷ்டக்காரி என்று அடிக்கடி அம்மா என்னிடம் கூறுவதுண்டு. அலமுவுக்கு ஐசுவரீயம் இருக்கு என்பதால் நான் நாக்கைத் தட்டுவது வழக்கம். ஐசுவரீயம் இருக்கட்டுமே அவளிடம், அதனால் நமக்கென்ன என்று கூறுவதுண்டு. ஆனால், இப்படிப்பட்ட மைந்தனை அலமு பெற்றிருப்பது எனக்கென்ன தெரியும். அந்தச் செல்வத்தை நான் பெற வேண்டும் என்று, பார்த்ததும் எண்ணினேன். முன்னாளிரவு நான் கண்ட நாடகத்தால் பல எண்ணங்கள் என் மனத்திலே உதித்தன. அதிலே முக்கியமானது கருத்துக்கிசைந்த மணாளனைப் பெற வேண்டும் என்பதுதான். அதே எண்ணத்தை அணைத்துக் கொண்டுதான் முன்னாள் இரவு நான் தூங்கினேன். காலையில் எழுந்ததும் என் கண்களில் சோமசுந்தரம் தென்பட்டால், எனக்கு எப்படியிருக்கும்! நீங்களே யோசியுங்கள். பசியோடு உலவும் ஒருவன் பட்சணக் கடையருகே வருகையில், கமகமவென வாசனை வீசினால் நாக்கில் நீர் ஊறாதா! நான் இதோ வெளிப்படையாகக் கூறுவதைப்போலப் பல பெண்கள் கூறமாட்டார்கள். ஆனாலும் நான் மயங்கினதைப் போல மயங்காத பெண்கள் எத்தனை பேர் இருக்க முடியும்? அந்த மரக் கட்டைகளைப் பற்றிப் பேசுவானேன்?

இவ்வளவையும் எண்ணிக்கொண்டு நான் சோமசுந்தரத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டயிருந்தேன், என்று எண்ணுகிறீர்களா, அதுதான் இல்லை. ஒருமுறை பார்த்தேன். தலைகுனிந்து கொண்டே யோசித்தேன். யாராக இருக்கும் என்று. அலமுவின் மகன் என்ற யோசனை தோன்றிற்று. மறுபடி ஒருமுறை பார்த்தேன். அதற்குள் அம்மா சொன்னார்கள். “காந்தா! அவன் அலமுவின் பிள்ளை” என்று. உடனே நான் வேறு வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டேன்.

அலமுவும் எங்கள் அம்மாவும் பாலிய சிநேகிதமாம். ஆகவே, அடிக்கடி அவர்கள் வீட்டு விஷயங்களைப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்க ஆரம்பித்தது. முதலிலே அம்மாதான் ஏதாவது பேச ஆரம்பிப்பார்கள். அந்தச் சுவாரஸ்யமான பேச்சை நான் முடிக்க விடுவதில்லை. கேள்வி மேல் கேள்வி போடுவேன். அது எப்படி, இது எப்படி என்று விசாரிப்ப÷ன்! இப்படிப் பேசிப் பேசிச் சோமசுந்தரத்தைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

சோமசுந்தரம் பெயருக்கேற்ற ரூபவான். தங்கமான குணம், நல்ல படிப்பு, இளமை, இவ்வளவும் ஒருங்கே பொருந்தியவன். எவள் ‘கொடுத்து வைத்திருக்கிறாளோ’ அவரது மனைவியாகி மகிழ்ச்சியோடு வாழ. கைக்கு எட்டாத கனியானாலும், நினைப்புக்கு எட்டாமற் போகுமா? அதுபோல் எனக்குச் சோமுவின் மீது எண்ணம் விழுந்தது. இத்தகைய மணாளன் கிடைத்தால் மகிழ்ச்சியோடு வாழலாம். உலகில் எதற்குப் பிறந்தோம். சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே! ஆனால் சுந்தரம் என்னைக் கண்டு ஆசைப்பட்டாலும் என் வறுமையைக் கண்டால் பயப்படுவார். கதைகளிலே வருவதுபோல், ஏழைப் பெண்ணாக இருந்தாலும் எனக்கு அவள்தான் வேண்டும் என்று சொல்லி என்னைக் கலியாணம் செய்து கொண்டால், எவ்வளவு இன்பமான வாழ்வு எனக்குக் கிடைக்கும். எனக்கு அந்த வாழ்வு கிடைத்தால் என் தங்கை சாந்தாவுக்கு எப்படிப்பட்ட மேலான இடத்திலே வரன் தேடுவேன் தெரியுமா? எங்கள் வறுமை ஓடியே போகும். வாட்டம் தீர்ந்து விடும் – இத்தகைய எண்ணங்கள் அலைபோல் மனத்தில் மோதும். எப்படியோ நான் ஓர் இன்ப மாளிகையை என் மனத்தில் கட்டிவிட்டேன்.

என் தங்கை சிறு பெண்ணாகையால் அடிக்கடி அலமு அத்தையிடம் போய்ப் பேசுவாள். தோட்டத்திற்குச் சென்று விதவிதமான மலர்களைக் கொண்டு வருவாள். அலமுவும் சாந்தாவிடம் அன்பாக இருக்கவே, இந்தத் தொடர்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. ஒவ்வொரு நாளும் சோமு என்னைப் பற்றி ஏதாவது பேசாதிருப்பதில்லையாம். அதை அப்படியே சாந்தா வீட்டில், ‘பிளேட்’ வைப்பாள். சாந்தா கூறுவதைக் கேட்க எனக்குப் பரமானந்தமாக இருக்கும். அப்பா பெருமூச்செறிவார், அம்மா “அகிலாண்டேஸ்வரியின் கிருபை எப்படியோ, யார் கண்டார்கள்” என்று உருக்கமாகச் சொல்லுவார்கள். சாந்தா குறும்புப் பார்வையுடன் என்னை நோக்கிச் சிரிப்பாள். அவளுடைய கன்னத்தை நான் நோகாதபடி கிள்ளுவேன். இந்த ஆனந்தம் எங்கள் குடும்பக் கவலையைக் கூட ஓர் அளவுக்குக் குறைத்தது. பாம்பும் தேளும் நெளியும் குழியிலே விழுந்தவன் கைக்குக் கிடைத்த வேரைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறபோது, தேன் கூட்டிலிருந்து துளி தேன் சொட்ட அதைச் சுவைத்துச் சந்தோஷப்பட்டான் என்று கதை சொல்வார்களே அதைப் போலிருக்கிறது எனது சந்தோஷம்.

“காந்தா, கேட்டாயோ சங்கதி? இன்னிக்குச் சுந்தரம் உங்க அக்காவுக்கு ஏன் இன்னும் கலியாணம் ஆகவில்லை என்று கேட்டான்” என்று சாந்தா கூறினாள் ஒரு நாள். நான் புன்சிரிப்பை அடக்கிக்கொண்டு ஏதோ வேலை செய்வதைப்போல் இருந்துவிட்டேன். ‘நீ என்ன பதில் சொன்னே’ என்று அம்மா ஆவலுடன் கேட்டார்கள்.

“இன்னும் நல்ல இடம் கிடைக்கவில்லை, என்று சொன்னேன்” சாந்தா கூறினாள்.

“குட்டி பிகுவோடுதான் பேசியிருக்கா” என்று அம்மா கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்தார்கள்.

“சதா அவா ஆத்திலே உனக்கு என்னடி வேலை” என்று நான் சாந்தாவைக் கேட்டு அதட்டினேன்.
“அதுயார் வீடு? அலமு அத்தை வீட்டுக்கு நான் கோபாமெ வேறெ யார் போவா?” என்று கம்பீரமாகக் கேட்டாள் சாந்தா.

“அவா உன்னை அழைக்கிறாளோ தாம்பூலம் வைத்து!” என்று நான் கேலி செய்தேன்.

“தாம்பூலம், மேளதாளம், சீர்செட்டு, வரிசை எல்லாம் வைத்து உன்னை அழைக்கப் போறாளே அலமு அத்தை, அப்போது செய்யம்மா அதிகாரம்” என்று சாந்தா பதிலுக்குக் கேலி செய்ய ஆரம்பித்தாள்.

“வர வர நீ துஷ்டையாகிறாய்” என்று கூறிக்கொண்டே சாந்தாவைப் பிடித்திழுத்து கன்னத்தைத் திருக எண்ணினேன். அவள் என் பிடிக்கா அகப்படுவாள்! ஒரே ஓட்டமாக ஒடிப்போய் அலமு வீட்டிலே புகுந்து கொண்டாள். பார்க்கிறேன் நான். சாந்தா சோமுவிடம் ஏதோ பேசிக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.