அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

குமாஸ்தாவின் பெண்
3

“அக்கா! அவர் படித்தார். கடிதத்தை முதலிலே பிரித்தார். பிறகு காந்தாவை இப்படிப் பட்டவள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லையே. இப்படி ஓர் அந்நியனுக்குக் கடிதம் எழுதலாமா? இதெல்லாம் சினிமா பார்ப்பதாலும், நாவல் வாசிப்பதாலும் வருகிற கேடுகள். தரித்திரம் பிடுங்கித் தின்கிறது. இந்த இலட்சணத்திலே துடுக்குத் தனமும் தாண்டவமாடுகிறது. உன் அக்காவிடம், காதலாம்! ஆசையாம்! எதற்காக ஆசை? பணம் இருக்கிற என்னிடம் அதற்காகத்தானே இந்தப் பிளான். அதற்கு வேறே ஆளைப் பார்க்கச் சொல்லு. நான் கலியாணம் செய்து கொள்வது என்று தீர்மானித்துவிட்டால் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கேற்ற பெண்கள் ஆயிரம் கிடைக்கும். நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை. அதிலும் இப்படிப்பட்ட வெட்கம் கெட்டவளைக் கண்ணெடுத்தும் பாரேன்” என்று திட்டினார். நான் அழுதுவிட்டேன். அக்கா. “ஏன் அந்தக் கடிதம் எழுதினாய்?” என்று சாந்தா சோகத்துடன் கூறினாள்.

“நான் என்ன செய்வது? மனம் அனலில் விழுந்த புழுப்போல துடித்தது. மிக்க கேவலமான காரியத்தையன்றோ செய்து விட்டேன்? சோமு என்னை ஏற்க மறுத்ததோடு, ஏளனம் செய்யவுமன்றோ இடங்கொடுத்து விட்டேன். அவருடைய அந்தஸ்து என்ன? நான் யார்? அவர்மீது எனக்குக் காதல் ஏற்பட்டதென்றால், அவரது பணத்தைப் பெறுவதற்கே நான் பசப்புகிறேன் என்று அவர் கருதுகிறார். நான் செய்தது தவறு. கண்ணிழந்தவள் காட்சிக்குச் செல்வானேன்? காலிடறி விழுவானேன்? செவிடனுக்குச் சங்கீதம் ஒரு கேடா?

என் கடிதத்தைக் கண்ட அவர் சிரித்தாராம். எவ்வளவு ஏளனம்? என் இருயத்தில் இடம்பெற்று என்னை வாட்டி வதைத்த எண்ணங்களை நான் அக்கடிதத்தில் எழுதினேன். அதைக் கண்டு அவர் சிரித்தாராம். நீங்கள் சற்றுப் படியுங்கள் என் கடிதத்தை. சிரிக்க வேண்டுமா? அழவேண்டுமா? கூறுங்கள். இதோ என் கடிதம் படியுங்கள்.

“என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட குணரூபா!”
என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் திருவடிகளைப் பணிந்து அடியாள் எழுதும் கடிதத்தை முழுவதும் படிக்கக் கோருகிறேன்.

பிராணேசா! தங்களைக் கண்ட நாள் முதல் எனக்குத் தங்கள்மீது அளவுகடந்த ஆசை உண்டாகிவிட்டது. நாளாகவாக அந்த ஆசை எனக்குப் பித்தம்போல் வளர்ந்து விட்டது. இதனைத் தங்களுக்குத் தெரிவிக்கும் துணிவு எனக்குக் கொஞ்சத்தில் வரவில்லை. மகாரூபவானும், குணாளரும் செல்வனுமாகிய தங்களைக் கணவராக அடையும் பேறு மகா கேவலமான நிலையில் உள்ள எனக்கு, தரித்திரத்தைக் கட்டிக் கொண்டு புரளும் எனக்குக் கிட்டாது என்று எண்ணினேன். தங்களுடைய அந்தஸ்திற்கு எத்தனையோ ரதிகள் கிடைப்பர். பணக்காரப் பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டு பங்களாவில் உலவ, உங்களுக்கு ஆண்டவனின் கடாட்சம் இருக்கிறது. நான் உங்கள் மனைவியாக முடியுமா? திருடனுக்கு இராஜவிழி வருமா. இதை எண்ணி நான் என் ஆசையை அடக்கிப் பார்த்தேன். முடியவில்லை. தங்கள் வீட்டில் சமையற்காரியாகக் கூட ஆகமுடியாத அவ்வளவு அபாக்கியவதியாகத்தான் நான் இருக்க முடியும். ஆனாலும் குழந்தைகள், ‘சந்திரனைப் பிடித்துக் கொடு’ என்று தாயாரைக் கேட்பதுபோல், நான் தங்களைத் தரும்படி தினமும் தேவியை வேண்டுகிறேன். மனமோ பேராசை கொள்ளாதே என்று எவ்வளவோ கூறினேன் என் மனதுக்கு. மனது உம்மிடம் லயித்துவிட்டது. தாங்கள் வெறும் பணக்காரராக மட்டும் இருந்தால் பரவாயில்லை. என் மனத்தைக் கொள்ளை கொண்டீர்கள். என்னைத் தங்கள் தர்ம பத்தினியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தங்கள் திருப்பாத கமலங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்; சாதாரண பணக்காரராக மட்டும் தாங்கள் இருந்தால் அவர் பணம் அவரோடு, நமக்கென்ன அதைப் பற்றி என்று நான் எண்ணிக்கொண்டு என் விதிப்படி காரியம் நடக்கட்டும் என்று நான் இருந்து விட்டிருப்பேன். ஆனால் தங்களின் சுந்தரவதனத்தைப் பார்க்க பார்க்க என் ஆவல் கொழுந்துவிட்டு எரிகிறது. தங்கள் புன்னகை எனக்கோர் புதுமையான உணர்ச்சியை ஊட்டுகிறது. தங்கள் பேச்சு எனக்குச் சங்கீதமாக இருக்கிறது. இங்கு வீட்டிலே எவ்வளவோ தொல்லை. கஷ்டம் சொல்லி முடியாது. அப்பாவின் அழுகுரல், தங்கையின் சோகம் இவையெல்லாம் என்னை வாட்டியபோதிலும், தங்களை ஒருமுறை கண்டதும் என் துக்கமத்தனையும் பறந்து போகின்றன. துரையே! என் தம்பியிடம் தாங்கள் பேசும்போது பணம் மிகக் கேவலமென்றும், செல்வம் நிலையற்றது என்றும் கூறியிருக்கிறீர்கள். பணக்காரர்களிடம் இருக்கும் டாம்பீகம், ஆணவம் தங்களிடம் துளியும் இல்லாமல் தர்ம சிந்தனையும், தயாள நோக்கமும் கொண்டு என் கண்கண்ட தெய்வமாகக் காட்சியளித்து வருகிறீர். அபலையாகிய நான் கூச்சத்தை விட்டு தங்களிடம் பிச்சை கேட்கிறேன். தங்கள் அன்பை அளித்து என்னை இரட்சியுங்கள். எனக்கு வாழ்வு தானம் செய்யுங்கள். பக்தர்கள் தமது குறைகளைக் கடவுளிடம் கூறி வேண்டுவனபோல் நான் தங்களிடம் என் குறையைக் கடாட்சிக்க கோருகிறேன். ஓர் இளமங்கை இவ்விதம் எழுதுவது தகாது என்று எண்ணி என்னை உதாசீனம் செய்து விடாதீர்கள். கண்ணன் மீது கொண்ட காதல் ருக்மணி எழுதிய காதல் கடிதத்தைப் படித்துப் புளகாங்கிதமடையும் பக்தர் தாங்கள். என் காதல், ருக்மணி கொண்டிருந்த காதலுக்குக் குறைவானதல்ல. ருக்மணி பிராட்டி இராசா மகள். நான் ஏழை குமாஸ்தாவின் பெண். ஆசை அரண்மனைக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்தக் குடிசையில் இருக்கும் குமரிக்கு, இராச மாளிகையில் ருக்மணி கொண்ட ஆசைபோலவே இருக்கிறது. பித்துக் கொள்ளி வாயாடி, வெட்கங் கெட்டவள் என்று இக்கடிதத்தைக் கண்டுவிட்டு என்னைக்கூற எண்ணாதீர். என் தம்பி தங்களிடம் என் விஷயமாகப் பேசி தாங்கள் அலட்சியம் செய்ததாக எனக்குக் கடிதம் எழுதினான். அதைக் கண்டதும் மனம் துடித்தது. கண்களில் நீர் ததும்பிற்று. அதன் துளிகள் இக்கடிதத்தில் உள்ளன. என்மீது கிருபை வைக்கக் கோருகிறேன்; தங்களுக்குப் பணிவிடை செய்து வாழ்வதைவிட எனக்குப் பாரினில் பரமானந்தம் வேறு இல்லை. எனது அன்பை உமக்கு அபிஷேகித்து உம்மை வணங்குகிறேன். ஓர் ஏழைப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வது கேவலம் என்று மற்ற பணக்காரர்கள் கருதுவர். தாங்கள் அவ்விதமான குணமுடையவரல்ல. நான் தங்களின் பணத்தைக் கண்டதில்லை. தங்களைக் கண்டேன். தங்கள் திருமுகத்தில் தாண்டவமாடும் தேஜசில் சொக்கினேன். சொர்ண ரூபா! என்னைத் துடுக்குக்காரி என்று துப்பி விடாதீர். நான் பணக்காரக் குடும்பத்தினளாயிருந்தால், என்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி அநேகர் தங்களிடம் சொல்லியிருப்பார்கள். நானோ ஏழை. எனக்குத் துணை யார் வர முடியும்? இப்போது என் மனத்தைத் திறந்து கடிதம் எழுதுகிறேன். இப்போது என் மனோ பீஷ்டம் நிறைவேறுவதற்கு வேறு மார்க்கம் இல்லை. என்னைப் பற்றிச் சற்று ஈவு இரக்கம் காட்டுங்கள். என் கண்களில் ததும்பும் காதலை நோக்குங்கள். என் பெரு மூச்சையும், இரவில் நான் புரளுவதையும், தலையணை
யைக் கண்ணீரால் நனைப்பதையும் நீர் கண்டதில்லை. நான் அபலை. எனக்கு உமது அருளைத் தரவேண்டுகிறேன். அன்பே என்னைக் கைவிடாதீர்.

காந்தா

இந்தக் கடிதத்தைக் கண்டுதான் அவர் சிரித்தாராம். திட்டினாராம். என்னைக் கண்டதால் உண்டான தோஷம் தீரவோ என்னவோ, அவர் தாயார் சகிதம் சில நாட்களுக்கெல்லாம் தீர்த்த யாத்திரை செய்யக் கிளம்பிவிட்டார். தீர்த்த யாத்திரையாம்; என்னைத் துடிக்க வைத்துவிட்டு, மண்டியிட்டுச் சென்ற என்னை மார்பில் உதைத்துக் கீழே தள்ளிவிட்டு, பிச்சை கேட்கச் சென்ற இந்தப் பேதையைப் பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டு, என்னைச் சாகடித்து விட்டு, அவர் தீர்த்த யாத்திரைக்குச் சென்றுவிட்டார். என் அன்பை அவர் நிராகரித்ததுபோல் அவரது அன்பை ஆண்டவரின் நிராகரிக்காமலா போவார்.

வாழ்க்கøயிலே இனி எனக்கு என்ன இருக்க முடியும்? ஒரு பெண் தனது உள்ளன்பை எடுத்துக் கூறியும், அது கேலி செய்யப்படும்போது கண்டால் பிறகு உலகில் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்? மனம் உடைந்து ஏன் வாழ்வது. எதற்கு அந்த வாழ்வு? பூபாரமாக இருப்பதில் என்ன பயன்? என்னைப் பெற்றவர்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் கவலைப்படுவார்கள். எனக்கோர் வரன் கிடைக்கவில்லையே வரதட்சணை தர வழியில்லையே என்று அவர்கள் வாடுகிறார்கள். என்னை யார் கலியாணம் செய்து கொண்டாலும் எனக்கு ருசி இருக்கப் போவதில்லை. சோமு தீர்த்த யாத்திரைக்குப் போனபிறகு நான் நடைப்பிணமானேன்; என் தேக காந்தி மங்கத் தொடங்கிற்று. உடலிலேயும் உள்ளத்திலேயும் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. வாழ்விலே வெறுப்புண்டாயிற்று. சமைப்பதும், படுப்பதும், அழுவதும் கண்களைத் துடைத்துக் கொள்வதும், இவையே என் நித்திய கர்மங்களை. நித்திரை என்னைப் பிரிந்தது. புண்பட்ட என் மனம் ஆற வழி என்ன?

மனங்குளிர மார்க்கம் இல்லை. காந்தா இறந்து விட்டாள். வெறும் குமாஸ்தாவின் பெண், கூனோ, குருடோ, செவிடோ, ஊமையோ யாரோ ஒருவனுக்குப் பெண்டாகி அவனிடம் சோறு பெற்று, சாவு வந்ததும் சுகம் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் பெண்தான் மிச்சம். மணமில்லா மலரும், மதியிலா இரவும் சுவையற்ற வாழ்வும் என்ன பயன்? உப்பில்லாப் பண்டம் நான், எந்தக் குப்பையில் கிடந்தாலென்ன?

கூந்தல் நரைத்துவிட்டால் தலைமயிர் கருக்கும் தைலம் பூசிக் கொள்கிறார்கள். பல் போய் விட்டால் டாக்டர் போலிப் பற்கள் கட்டுகிறார். காலிழந்தவர்களும் கட்டையை ஊன்றிக் கொண்டு நடக்கக் காண்கிறோம். அதுபோல், இன்பமாக வாழலாம் என்ற என் எண்ணத்தில் மண் விழுந்த பிறகு, சக்கை போன்ற சாதாரண வாழ்வுக்காவது வழி பிறந்ததா? இல்லை, மாளிகை இடித்தாலும் மதிற்சுவரிலே கொஞ்சமும் மண்டபத்திலே பாதியுமாவது இருக்குமே. அதுபோலாகிலும் என் மனக் கோட்டை இடிந்ததில் கொஞ்சமாவது மிச்சம் இருக்கக் கூடாதா? கூட கோபுரம் வெறுங்குப்பை மேடாகிவிட்டது. எங்கள் குடும்ப பாரத்தைக் குறைப்பதற்காகவேனும் எனக்கோர் துணைவர் கிடைக்க வேண்டுமே! அதாவது சரியாகக் கிடைத்ததா? எனக்கா கிடைக்கும்! கூன்பட்ட என் வாழ்வு நிமிரவில்லை. வளைந்த என் வாழ்க்கை முறியத் தொடங்கிற்றேயொழிய, ஊன்றுகோலின் உதவி பெற்று உலவும் வழியும் பிறக்கவில்லை.

நான் திகில்பட்டுக் கொண்டிருந்தது போலவே என் திருமணம் நடந்தது. என்னை மனைவியாகப் பெற்ற மகானுபாவருக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். நரை மயிர், நல்ல கறுப்புச் சாயம் பூசிக் கொண்டிருந்தார். பல் பல போய்விட்டன. பொய்ப் பற்கள் கட்டிக் கொண்டிருந்தார். கன்னங்களில் குழி, கை கால்களில் படை, அதை மாற்ற சந்தனம் பூசிக் கொண்டிருந்தார். உடலோ உலகில் உழன்றதால் இளைத்துப் போயிருந்தது. அதன்மீது பளபளப்பான பட்டு சரிகைப் போர்வைகள் அவருக்கு! இந்த லட்சணத்திலே காச நோய். எனக்கு முன்பு அவருக்குப் படுக்கையறைப் பதுமைகளாக இருந்துவிட்டு பரந்தாமன் திருவடி நிழலை அடைந்த பத்தினிமார் மூவர். நான் நாலாந்தாரம் அவருக்கு. அவரிடம் பணம் இருந்தது. ஏழ்மையில் நெகிழ்ந்து கொண்டு நானிருந்தேன். கிடாபோல் வளர்ந்தவனை எவனுக்காவது பிடித்துக் கட்டி வைக்காமலிருக்கலாமோ என்று கேட்டு ஊரிலே பல பித்தர்கள் இருந்தனர். எத்தகைய பொருத்தமும், தட்சணை தந்தால் சரியாக இருக்கிறதெனக் கூறும் சோதிடர் சிலர் இருந்தனர். உலகிலே எது இல்லை? பளபளப்பான தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் பாம்பு இல்லையா? எப்படியோ ஒன்று என் கழுத்தில் தாலி ஏறிற்று. அவர் முகத்திலே களை உண்டாயிற்று. வீடோ மாடோ குறைச்சலான விலைக்குக் கிடைத்துவிட்டால் மகிழும் முதலாளிபோல் அவர் என்னைப் பூரிப்போடு பார்ப்பார். என் இளமை, அழகு, யாவும் அவருக்குத்தானே சொந்தம். இவ்வளவு லலிதமான பொருளை மிக மலிவாக வாங்கி விட்டோமே என்ற சந்தோஷம் அந்த வியாபாரிக்கு. பூரிப்பான வைர மோதிரத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்ளும் டம்பக்காரன் போல் அவர் நான் போகும்போதும், வரும்போதும் என்னைப் பார்த்துக் களிப்பார். அவருக்கு ஆனந்தந்தான். மூன்று மனைவிகள் இறந்தும், இத்தகைய ‘முத்து’ எனக்குக் கிடைக்க வேண்டி இருந்ததால்தான் என்றுகூடச் சொன்னார்.

எனக்குத் திருமணம் நடந்தது. திவ்வியமான நாளாம். மங்களமான முகூர்த்தமாம். மங்களத்தின் லட்சணம் மறுமாதமே தெரிந்துவிட்டது. கழனியைச் சுற்றிப் பார்த்து விட்டு வரச்சென்ற கணபதி சாஸ்திரிகள் – என் கணவர் கால் வழுக்கிக் கீழே விழுந்து சில நாட்கள் படுக்கையில் இருந்துவிட்டுப் பரலோகப் பிராப்தியானார். நான் விதவையானேன். சகுனத் தடையானேன். சமுதாயத்தின் சனியனானேன். பெற்றோரின் கண்களில் நீர் வழியும்படியான நிலைபெற்றேன். தீ மிதித்தவள்போல் தங்கை சாந்தா திகில் அடையக் கூடிய உருவைப் பெற்றேன். என் இளமையும் எழிலும் போகவில்லை. என் கண்ணொளி போகவில்லை. நான் அபலையானேன். ஆனால், அழகியாகத்தான் இருந்தேன். தாலி இழந்தேன். ஆனால் காய்ந்த தளிர் போலிருந்தேனே யன்றி சருகாக இல்லை, குங்குமமிழந்தேன். ஆனால் பொட்டிடாத என் நெற்றியும் பொலிவுடன்தான் இருந்தது. பார்சிக்காரிகள் பொட்டிடுவதில்லை. நம்ம காந்தாவின் முகம் அவாளுடையதைப் போலவே இருக்கிறதென்று அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். வாடாத பூவாக இருந்தேன். ஆனால் விஷவாடை உள்ள மலர் என்று உலகம் என்னைக் கருதிற்று. அது என்னுடைய குற்றமா? எனக்கு மணம் செய்வித்து விடவேண்டும் என்று துடித்தவர்கள், இன்று எனக்குத் துணையாகவா இருந்தார்கள்? ஏதோ அவள் எழுத்து என்று கூறிவிட்டு, என்ன செய்யலாம் கொடுத்து வைக்காதவள் என்று கூறிவிட்டு, அவரவர்கள் காரியத்தை அவரவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள்.

உலகினிடம் வெறுப்பும் உண்டாக எனக்கு இந்த ஒரு சம்பவம் போதாதா? ஒழுங்காக நாணயமாக, நாலு பேருக்குப் பயந்து நடந்து கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்களே அதை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்னை இந்த உலகம் ஒழுங்காகவா நடத்திற்று? சாகப்போகும் கிழவனுக்குச் சல்லாபக் கருவியாக்கிற்று. இது ஒழுங்குதானா? என் இளமை அவனுக்குப் பலியிடப்பட்டது. நியாயமா அந்தச் செயல்? அவன் இறந்தும் நான் இருந்தும் இறந்தவளாக வேண்டும் என்று உலகம் கட்டளையிட்டது நீதியாகுமா? உலகத்திலே கொடுமைக்கு ஆளான நான் நன்றி செலுத்தி நல்லவளாக வாழ வேண்டுமா! நல்லவள் என்றால் என்ன பொருள்? நாதனை இழந்த நாரி, வாழ்வை இழந்து விடுவதுதானா? என் வாழ்வு. என் பொருள் அல்லவா? அதனை, இறந்த என் கணவருடன் சேர்த்து வைத்தும் கொளுத்தினார்களே அதையும் நான் சகித்துக் கொள்ள வேண்டுமாம். எத்தனை எத்தனையோ விதவைகளின் விதியை எனக்கு உதாரணம் காட்டினார்கள்.

‘ஜாக்கிரதை! சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நாலு பேர் எதிரே வரவிடாதீர்கள். காலமோ கெட்டுப் போச்சு, பெண்ணே, சிறுசு, மூக்கும் முழியும் சுத்தமாக, அச்சுப் பதுமை போல் இருக்கிறது. தப்பித் தவறி ஏதேனும் நேர்ந்துவிட்டால் தலைமுறை தலைமுறைக்கும் கெட்ட பெயர் நீங்காது” என்று என் பெற்றோர்க்கு உறவினர் புத்திமதி கூறலாயினர். வெந்த புண்ணிலே வேலிட்டனர். நாங்களோ ஏழைகள். என்ன சொன்னாலும் தலையை அசைக்கத்தானே வேண்டும். செல்வன் வீட்டிலே சென்று இதுபோல் சொன்னால், நாக்கைத் துண்டிப்பார்கள். ஏழை குமாஸ்தாவிடம் உறவினருக்கு என்ன பயம்? எல்லாம் உனது நன்மைக்குத்தான் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறார். ‘காந்தா நல்லவள்தான், இருந்தாலும் அறியாதவள். யாரும் கொஞ்சம் கண்காணிப்பகத்தான் இருக்க வேண்டும்” என்றுரைத்தனர். அப்பாவிடம், எவ்வளவு அக்கறை பாருங்கள்! எங்கள் ஏழ்மையைக் கண்டு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. என் வாழ்வு கொள்ளை போவதைத் தடுக்க யாரும் வரவில்லை. எல்லாம் முடிந்து நான் விதையானதும், என் விதவைத் தன்மையைக் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்ய உபதேசிக்க உற்றார் வந்தனர். அவர்களுக்கிருந்த கவலையெல்லாம் குலப்பெருமைக்குப் பங்கம் வரக்கூடாது என்பதுதான்! என்னைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. எனக்கு வீடே ஜெயில், அப்பா, அம்மா காவலாளிகள் – உறவினர் போலீஸ், ஊரார் தண்டனை தரும் நீதிபதிகள். இது உலகம் எனக்கு உண்டாக்கி வைத்த ஏற்பாடு. இதற்காகவா நான் பிறந்தேன்?

விதவைகள் உலகில் நான் வாழ்ந்து கொண்டிருந்த போதுதான் மிராசுதார் வேதகிரி முதலியாரை அடிக்கடி கண்டேன். மரம் பழுத்தால் வௌவால் வருமென்பார்களே அதுபோல் அவர் எங்கள் வீடு வரத்தொடங்கினார். அவர் பெரும் பணக்காரர், அவரிடந்தானே எங்கள் ஜீவனம் நடக்கிறது. அடிக்கடி அப்பாவிடம் முதலியார் வந்து பேசத் தொடங்கியதும் எல்லோருக்குமே சந்தேகம் பிறந்தது. கூப்பிட்ட நேரத்துக்கு ஓடோடிப்போய் இட்ட வேலையைச் செய்ய அப்ப சித்தமாக இருக்கும்போது மிராசுதார் எங்கள் வீட்டுக்கு வந்து வலிய பேசுவதென்றால் அது ஊராருக்கே ஆச்சரியமாகத்தானே இருக்கும். என் கணவன் எனக்களித்த தாலியையும் நான் இழந்து விட்டேன். அவரால் எனக்குக் கிடைத்தது வேறெதுவுமில்லை. அவருடைய சொத்து முதல் தாரத்துப் பிள்ளைகளுக்குப் போய்விட்டது. ஜீவனாம்சத்துக்கு வழக்குத் தொடுக்கவேண்டுமென்றார்கள். பணம் ஏது? வக்கீலுக்குக் கொடுக்க காசு இருந்தால் அதை வயிற்றுக்குக் கொடுப்போமே நாங்கள், என், கலியாணம் எனக்கு அளித்தது ஒன்றுமில்லை. விதவை கோலந்தான் மிச்சமாயிற்று.

அடிக்கடி அழுது சிவந்த என் கண்கள் செந்தாமரைப் போல் வேதகிரி முதலியாருக்குத் தோன்றிற்று போலும். அதற்கு நானா ஜவாப்தாரி? என் மனநிலை வேண்டுமானால் நான் ‘கெட்ட’ எண்ணங்களைக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள முடியும். பிறர் மனத்தை அப்படி இப்படி அசையாதே என்று எப்படி அடக்க முடியும் பிறர் கெட்ட எண்ணங்கொண்டால், அதற்கு என்ன செய்வது? என் கண்ணைக் கட்டுப்படுத்தி விட்டேன். வேதகிரி முதலியாரின் கண்களை நான் என்ன செய்யமுடியும்? அவரது பார்வையும் பேச்சும், அவரது உள்ளத்தை வெளிப்படுத்திற்று. தெரிந்து கொண்டேன். திடுக்கிட்டேன். ஆனால் என் செய்ய முடியும்? புலி முன் மான் போரிட முடியுமா...?

“சாமி! மகா பொல்லாத ஊர் இது?”

“ஏன்? என்ன விசேஷம்?”

விசேஷமென்ன இருக்கும்? வீண் வம்பளப்புதான். வாய்க்குப் பூட்டா சாவியா?

என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கொன்றும் விளங்கவில்லையே?

ஏன் சாமி அந்த வயிற்றெரிச்சலைக் கேட்கிறீர்கள்? நல்லது கெட்டது தெரிந்து கொள்ளாத நாய்கள் ஏதேதோ வம்பும்தும்பும் பேசுகின்றனவாம்.

யார் பேசறா? எதைக் குறித்துப் பேசறா? விளங்கச் சொல்லுங்கள் கேட்போம்.

நான் இங்கே ஏதோ சத்விஷயம் பேசிவிட்டுப் போக வருகிறேன் பாருங்கள், அதைப்பற்றி ஊரார் தாறுமாறாகப் பேசுகிறார்களாம். எனக்கொன்றும் தலை போய்விடாது. நேற்றுதான் கேள்விப்பட்டேன். மனசு துடிதுடித்து விட்டது. நம்ம காந்தா இருக்கே, அதுக்கும் எனக்கும் ஏதோ நடப்பதாகப் பேசுதாம் நாய்கள்...

சிவ! சிவ! தங்கள் வாயாலேயா அதைச் சொல்ல வேண்டும்? மகா பாவம்! தோஷம். அத்தகைய பேச்சு சொன்னவா நிச்சயம் அழிந்து போயிடுவா.

இல்லை சாமி! இதுகளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்கள். என்னடா ஒரு குடும்பத்தின் பேரை இப்படிக் கெடுக்கிறோமே என்று கொஞ்சமாவது ஈவு, இரக்கம், நீதி, நாணயம் இருக்கிறதா? கண்ணாலே கண்டால்கூட இந்த மாதிரி விஷயங்களை விவேகிகள் வெளியே சொல்ல மாட்டார்கள். இங்கே பார்த்தா ஒண்ணுமில்லை. நான் ஒரு பாவத்தையும் அறிந்தவனல்ல. ஏதோ பொழுது போக்கா வருகிறேன். பேசுகிறேன். போகிறேன். இதற்கு இப்படி வம்பளப்பு நடக்கிறது. இந்த ஊரிலே கேட்டது முதல் என் மனசு சரிபடவேயில்லை. வரக்கூடாது என்று நினைச்சேன் முதலிலே. வராமல் போனா ஓஹோ விஷயம் வெளியிலே தெரிந்துவிட்டதென்று முதலியார் இப்போது போகவில்லை என்று யோசித்தபிறகு வந்தேன். நான் போய் வருகிறேன் சாமி பசங்கள் சௌக்கியந்தானே?

மிராசுதாருக்கும் அப்பாவுக்கும் ஒரு நாள் இதுபோல் பேச்சு நடந்தது. ஊரார்மீது பழிபோட்டு மெதுவாகத் தமது கருத்தைத் தெரிவித்த தந்திரப் பேச்சு இது. ஊரார் வம்பளக்கவுமில்லை. மிராசுதாரர் வேண்டுமென்றே இப்படி ஒருபுகார் செய்து வைப்போம் என்று செய்தார். நன்றாகத் தெரிந்தது. ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? ஊரார் வம்பளக்கிறதாகச் சொல்கிறீர்களே? நீங்கள் இனி தயவுசெய்து இங்கே வரவேண்டாம் என்று அப்பா மிராசுதாரரிடம் கூறமுடியுமா? கூறினால் அந்த ஆள் கோபித்துக் கொண்டு அவ்வளவு அலட்சியமா உனக்கு? என்று வைவாரே, வேலை போய் விடுமே, பிறகு பிழைப்புக்கு என்ன செய்வது?

ஓர் இரவு, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சம்பாஷணை வாழ்வு எவ்வளவு வேதனைக் குழியில் விழுந்து விட்டது என்பதைக் காட்டிற்று.