அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

குமாஸ்தாவின் பெண்
4

“விஷயம் விபரீதமாகிவிட்டதே தெரியுமோ” என்று பேச்சை ஆரம்பித்தார் அப்பா.

“என்ன சொல்லுங்கோ? என்ன விபரீதம்” என்று அம்மா அச்சத்துடன் கேட்டாள்.

“மிராசுதார்....!” என்று இழுத்தாற்போல் மெதுவாக சொன்னார் அப்பா.

அம்மா பதைத்து “மிராசுதாருக்கு என்ன?” என்று கேட்டாள்.

“அவனுக்கு என்ன? கல்லுப் பிள்ளையார் போலிருக்கான். மெதுவாகப் பேசடி. அவள் காதிலே விழப் போகிறது. மிராசுதாரன் நம்ம குடியைக் கெடுத்து விடுவான் போலிருக்கு. காந்தா மீது கண் வைத்து விட்டான். இன்று காலையிலே அவன் தைரியமா, என்னிடம் சொல்லுகிறான், ஏன் சாமி நம்ம வீட்டிலே இருந்தா எவ்வளவு செல்வமாக வாழும் தெரியுமா என்று, எரிகிறது. இனி அரைக்ஷணம் இந்த ஊரிலே இருக்கப்படாது” என்றார் அப்பா.

“அம்மா ஐயோ தெய்வமே அநியாயக்காரன் அழிந்து போக அம்பிகே! நீதாண்டியம்மா துணை!” என்று கூறி அழுதார்கள். அப்பா சமாதானம் கூறினார்கள். வயோதிகப் பருவத்திலே அவர்கள் பாபம் என்னால் வதைக்கிறார்கள். நான் குடும்பத்துக்குச் சுமை மட்டுமல்ல. அவர்கள் வயிற்றுக்கே பெருந் தீ! நான் அபலை மட்டுமல்ல அபாயக்குறி!

கடன்பட்ட நெஞ்சம் கலங்காதிருக்குமா? என் அப்பா ஓர் பச்சைப் பிராமணன். அவர் பிழைக்குமிடமோ காமாந்தகாரரின் கொலுமண்டபம். அவனோ என்னைப் பெற வேண்டுமென்று ஏதேதோ சூழ்ச்சி செய்த வண்ணம் இருந்தான். அவனுடைய உப்பைத் தின்று வளரும் நாங்கள், அவனை என்ன செய்ய முடியும்? அவனை விரோதித்துக் கொள்ளவும் முடியாது. இணங்குவதோ கூடாது. இந்நிலையில் தவித்தோம். ஆசை கொண்ட அவன், நான் அந்தணக் குலமென்றோ விதவையென்றோ கருதுவானா? மேலும் காலம் எப்படிப்பட்டது! பிராமணர்களிடம் பயபக்தியுடன் இருந்ததுபோய், வெறுப்புடன் மக்கள் வாழும் காலம். ஆகவே மிராசுதார் நாளாகவாக, தமது எண்ணத்தை ஜாடை மாடையாகக் காட்டிக்கொண்டே வந்தார். நான் தெரிந்தும் தெரியாதவள்போல் நடந்து கொண்டேன். எங்கள் வீட்டுக்கு மிராசுதாரர் வேதகிரி முதலியார் வருகிறபோது, எனக்கு அடிவயிறு ‘பகீர்’ என்றாகிவிடும். என்னை இணங்கச் செய்ய இந்த முறை பலிக்காதது கண்ட மிராசுதாரர், வறுமையை ஏவி, எங்களை வாட்டி, சரணடையச் செய்யத் துணிந்து விட்டார். சில்லறைக் கடன்காரர்களைத் தூண்டி விட்டார். அவர்கள் அப்பா மீ து படை எடுத்தார்கள். பல்லைக் காட்டினார் – இல்லை போ என்றார் கடன் கொடுத்தவர்கள் கண்டிக்கலாயினர். கோர்ட்டுக்கு அப்பா போக நேரிட்டது. கடன் தொல்லையுடன் அப்பாவுக்கு உடலிலும் தொல்லை ஏற்பட்டு விட்டது. கிடைக்கிற சம்பளத்திலே பகுதி, பழைய கடனைத் தீர்க்கச் சரியாகிவிடும். சாப்பாட்டுக்கே சனியன் பிடித்துக் கெண்டது. சாந்தா புஷ்பவதியானாள். அப்பா காய்ச்சலில் விழுந்தார். ஒரு மாதமாக வேலைக்குப் போகவில்லை. எங்கள் நிலைமை எப்படி இருக்குமென்பதை ஈவு இரக்கமுள்ளவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள். கடன்காரர்கள் தொல்லை. காய்ச்சல். வருமானம் பூஜ்யம், வாட்டம், இவை போதாதா ஒருவரைச் சித்திரவதை செய்ய? புண்ணில் வேலிடுவது போல, அடிக்கடி வேதகிரி வருவார். “ஐயருக்குக் காய்ச்சல் எப்படி இருக்கிறது?” என்று விசாரிப்பார். மிராசுதார் வந்து போகும்போதெல்லாம்,‘காந்தா என்ன சொல்லுகிறாய்? இந்த வறுமையை ஓட்டும் வல்லமை எனக்கிருக்கிறது, என்னை வசீகரிக்கும் அழகும் இளமையும் உன்னிடம் இருக்கிறது. பரஸ்பரம் உதவி செய்து கொள்வோம். சம்மதமா?” என்று என்னைக் கேட்பது போலிருக்கும் அவருடைய பார்வை.

அப்பாவை மதனபள்ளி ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போனால்தான் பிழைப்பார் என்று டாக்டர் முடிவாகக் கூறிவிட்டார். அம்மாவின் கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகிற்று. மஞ்சளும் குங்குமமும் போகுமே, மக்கள் தெருவில் நின்று திண்டாடுமே, நான் என்ன செய்வேன், ஜகதீஸ்வரி! என்று அம்மா அழுதார்கள். ஜகதீஸ்வரிக்கு இந்தக் கஷ்டம் எப்படித் தெரியும்! அவள் வாழ்கிறாள், வாட்டம் வருத்தமின்றி.

மதனபள்ளிக்குப் போகவேண்டுமாம். மதன பள்ளிக்கு நான் வர இசைந்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர மிராசுதார் இருக்கிறார். அப்பாவின் சாவைத் தடுக்க வேண்டுமானால் நான் மிராசுதாருக்குச் சரசக் கருவியாக வேண்டும். ஆனால் அது நேரிட்டால் உலகம் பழிக்காதோ! அப்பாவின் மானம் பறிபோகுமே. குடும்பக் கீர்த்தியும், குலப்பெருமையும் என்ன கதியாவது, வறுமையை விரட்ட நான் விபசாரத்தை உதவிக்குக் கூப்பிடவேண்டிய நிலை நேரிட்டது. என் மனம் அந்த நிலையில் எவ்வளவு பாடுபட்டிருக்கும்? நான் சொன்னால் யார் நம்புவார்கள்? பாய்ந்தோடி வரும் புலியைக் கண்டு பயந்து, பாழுங்கிணற்றில் குதித்தாவது உயிரைக் காப்பாத்திக் கொள்வோம் என்று எண்ணுவதில்லையா? வறுமை என்னை வதைக்கிறது. அதனை நான் வதைக்க வேண்டுமானால், மிராசுதாரின் வைப்பாட்டியாக இசையவேண்டும்.
அப்பா படுக்கையில் புரளுவதும், அம்மா கண்களைக் கசக்கிக் கொள்வதும், சாந்தா திகைத்துக் கிடப்பதும், என் மனக் கண்களிலே சதா தாண்டவமாடின. விபரீத எண்ணங்கள் என் மனத்திலே உதித்தன.

“காந்தா! அடி முட்டாளே! தானாக வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளாதே.”

“வேண்டாமடி காந்தா! பாபக்கிருத்யம் செய்யாதே. ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது. கெட்ட எண்ணங் கொள்ளாதே. கடவுள் தண்டிப்பார்.

“அவர் யார் உன்னைத் தண்டிக்க! உன் கஷ்டத்தைப் போக்க இதுவரை அவர் என்ன உதவி செய்தார்? சீச்சி! பைத்தியக்காரி, பணம் இல்லை கையிலே. படுக்கையிலே அப்பா சாகக் கிடக்கிறார். அடுப்பிலே காளான் பூத்திருக்கிறது. உலகிலே பணம் படைத்தவர்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள். நீ வறுமையால் உருக்குலைந்து போகிறாய். உன் அப்பா பிழைக்கவும், குடும்பம் நடக்கவும், நீ வாழவும் மிராசுதாரர் மார்க்கம் காட்டுகிறார். அதைப் பாரடி! பார்த்துப் பிழை”

“பணத்துக்காக உன் மானத்தை இழக்காதே”

“மானம் வேறு தொங்குகிறதா உனக்கு? உலகில் உண்ணச் சரியான உணவின்றி வாழ வழியின்றி இருப்பதனால், மானம் போகவில்லையா? சுத்தத் தரித்திரம், அன்னக் காவடி, நித்தியப் பட்டினி என்று இப்போது உலகம் உன் குடும்பத்தைத் தூற்றுகிறதல்லவா? கடன்காரன் கேட்கிறானே, வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா, வயிற்றுக்கு என்ன தின்கிறீர்கள், என்று. மானம் இருக்கிறதா? அந்த நேரத்திலே, உன் குடும்பத்தை யாரடி மதிக்கிறார்கள்? பணமில்லை என்றால் பிணந்தானே!”

ஏழையாக இருக்கலாம். சகித்துக் கொள்ளலாம். ஆனால் விபசாரம் செய்து வாழ்க்கையை நடத்துவது என்றால் உலகம் வெறுக்கும்.”

“உலகம் வெறுக்குமா? பேஷ்! பேஷ்! காந்தா! இப்போது உலகம் உங்கள் குடும்பத்திடம் பாசம் வைத்திருக்கிறதா? உலகம் உங்களிடம் ஆசை கொண்டால், இப்ப ஏனடி உண்ணவும் வழியின்றிக் கிடக்கிறீர்கள்? உலகமாம், உலகம்! எந்த உலகத்தைப் பற்றி உளறுகிறாய், புத்தகங்களிலேயே படிக்கிறாயே அந்த உலகமா! பைத்தியமே! அது வேறு! உண்மை உலகம் வேறு. ஏழைகளின் உலகமே தனிரகம். அதனை ஏறெடுத்துப் பார்க்காது, பணக்கார உலகம். பணக்கார உலகத்தின்மீது படை எடுத்துச் செல். உன் அழகையும் இளமையையும் அம்புகளாகக் கொள். மிராசுதாரர் வில்லாக வளைவார். உன் மனம் போனபடி, அம்புகளைப் பணக்கார உலகில் பறக்கவிடு. அப்போது அந்த உலகம் உன் காலடியில் வந்து விழும். செய்து பார்.”

“காதைப் பொத்திக் கொள்ளடி காந்தா! அத்தகைய பேச்சைக் காதால் கேட்பதும் தோஷம். பணத்தைக் கண்டு மயங்காதேர. அது ஒரு பிசாசு!”

“பணமா பிசாசு? அந்தப் பிசாசுதானடி உலகிலே பூஜிக்கப்படுகிறது. அதன் கடாட்சம் இருப்பவர்களைத் தான், பூர்வ புண்ணியத்தால், நிம்மதியாகச் செல்வமாகக் குபேர சம்பத்துடன் வாழுகிறார்கள் என்று, உலகம் துதிக்கிறது. அதன் சக்தி அபாரம்! உனக்குத் தெரியாதா? அனுபவமில்லையா? இதோ உன் அப்பாவைப் பார். அவர் சாவதும், பிழைப்பதும், அந்தப் பிசாசைப் பொறுத்துத் தானே இருக்கிறது.”

“ஆமாம்! ஆனாலும்...”

என் மனத்திலே இந்தச் சொற்போர் நடந்தபடி இருந்தது. சாதாரண காந்தாவுக்கும் சஞ்சலப்படும் காந்தாவுக்கும் இந்தச் சம்பாஷணை நடந்து வந்தது.

அப்பா ஈனக்குரலுடன் இருமும் வேளையிலும், அம்மா விம்மும் வேளையிலும், தங்கை சாந்தா தன் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்ளும்போதும், காசு தராவிட்டால் மருந்து கிடையாது என்று டாக்டர் கண்டிப்பாகக் கூறும்போதும், “காந்தா! இன்னமும் யோசிக்கிறாய்?” என்று ஒரு குரல் என் செவியிற் கேட்கும். “ஜாக்கிரதை காந்தா உன் கற்பை இழக்காதே” என்று மற்றோர் குரல் கூறும்.

குடும்பத்திலே வேதனை, அப்பாவின் உடலிலே வேதனை, என் மனத்திலும் வேதனை, இந்தச் சோதனையில் நான் தத்தளித்தேன். உலகிலே வழக்கப்படி காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என் மனத்திலே எரிமலை இருப்பது பற்றி யாருக்கு என்ன கவலை. எங்கள் கஷ்டத்தை நிவர்த்திக்க ஒருவரும் முன் வரவில்லை. கண்ணாடியைக் காண நேரிடும்போது, “ஆமாம்! காந்தா, பார்த்தாயா? நீ எவ்வளவு இளையவள், நல்ல முகவெட்டு, அழகு ததும்புகிறது. ஆனால் அசடே! எவ்வளவு அவதிக்கு அளாயிருக்கிறாய். ஏன் இந்தச் சிறையிலே கிடக்கிறாய்? வா வெளியே! உன்னை வரவேற்க மிராசுதாரர் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று காந்தா நம்பர் இரண்டு கூறுவாள். காந்தா, நம்பர் ஒன்று “வேண்டாம் விபரீதப் புத்தி வினாசகாலே என்று எசச்ரிக்கை செய்வாள். இந்த இரு காந்தாக்களின் போராட்டம் இடைவிடாது நடந்தது இறுதியில் வறுமையால் வாடிய காந்தா நம்பர் ஒன்று வாழவேண்டுமென்று ஆசை கொண்ட காந்தாவிடம், இரண்டாம் நம்பர் காந்தாவிடம், தோற்றுத்தான் போனாள். மிராசுதாரர் அப்பாவை, மதன பள்ளிக்கு அனுப்பினார். அவருக்கு இல்லாத அக்கறையா? விஷயம் அப்பாவுக்குத் தெரியாதபடி மூடி வைத்தேன். ஊராரின் வாயை மூட முடியுமா? அம்மாவின் கண்ணீர் பெருகிற்று. “தலையிலே இடி விழுந்ததேடி பாவி” என்று அம்மா வைதார்கள். நான் பழைய காந்தா என்று எண்ணிக்கொண்டு! மிராசுதாரரின் மடியிலே விழுந்த எனக்கு, அம்மாவின் அழுகை பற்றி கவலை உண்டாகவில்லை. நான் ஆயிரந் தடவை அழுதிருக்கிறேன் முன்பு! அப்பா பிழைத்துக் கொள்வார் அது போதும் என்று இருந்தேன். ஆனால் அப்பா மதன பள்ளியிலேயே இறந்து விட்டார். பூவையும் குங்குமத்தையும் அம்மா இழந்தார்கள். நானோ, அழுதேன், புரண்டேன், அலறினேன். பிறகு, கண்களைத் துடைத்துக் கொண்டேன். புதிதாக எனக்குக் கிடைத்த பூவும் குங்குமமும் பெற்றுக் கொண்டு, புது உலகில் வசிக்கப் புறப்பட்டேன்.

மிராசுதாரரின் ஏற்பாட்டின்படி நான் வீட்டை விட்டு வெளியேறி தனிப் பங்களாவில் வசிக்கலானேன். நான் வாழ்வதுடன் என் உதவியைக் கொண்டு அம்மாவும் தங்கையும் வாழலாம். பணம் தர நான் தயாராக இருந்தேன். அம்மா ஒரு காசுகூட அந்த விபச்சாரியிடமிருந்து பெறமாட்டேன் என்று கூறிவிட்டார்கள். அம்மாவுக்குத் தெரியாது நான் எப்படி எப்படிக் குடும்பத்துக்கு உதவி செய்தேன் என்பது. ஏலம் போன வீட்டை மீட்டேன். என் பேருக்கு விலைக்கு வாங்கினேன். வீம்புக்கு அதை உயில் வேறு கைக்குப் போக விடுவேனோ? குடும்பம் நடத்த என்னிடம் பணம் வாங்க மறுத்து விட்டார்கள். ஆனால் நான் மாதா மாதம் பல அறநிலையங்களின் பெயர் வைத்துப் பணம் அனுப்பிப் கொண்டே இருந்தேன். அம்மாவுக்கு விஷயமே தெரியாது.

அம்மாவுக்கு ஒரு தம்பி உண்டு. சுத்த தத்தாரி. நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலே கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. நான் மிராசுதாரரிடம் சிநேகிதமான பிறகு என்னை அண்டினான். அவன் அந்த உலகத்து ஆசாமி. அவன் மூலம் பணம் அனுப்புவேன். அவன்தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அக்காவின் கஷ்டத்துக்கு உதவுவதாகக் கூறி அம்மாவை ஏய்த்து வந்தான். இந்தத் தாராள தபால் சேவகன் உத்தியோகத்துக்குத் தக்க சம்பளம் தந்தும் வந்தேன். என்னிடம் பணமா இல்லை? பணம் என் பாதத்தைத் தொட்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தது. மிராசுதாரரின் ‘மோகனாங்கி’ ஆன பிறகு பணமே எனக்குப் பரிவாரம். உல்லாச உலகில் நுழைந்தேன். என் ஏற்பாட்டின்படி சாந்தாவுக்கு சங்கீத வாத்தியார் அமர்த்தப்பட்டார். அம்மா தன் தம்பியின் கருணைப் பிரவாகம் இது என்று எண்ணினார்கள். சாந்தாவின் குரல் குயில் போன்றது. வெகு விரைவிலேயே நல்ல பாடகியாகினாள். என் செல்வாக்கை உபயோகித்தேன். ரேடியோவிலே சாந்தாவுக்கு மாதத்திலே நான்கு முறை ‘சான்ஸ்’ கிடைக்க ஆரம்பித்தது. குடும்பக் கஷ்டத்தைத் தீர்க்க சாந்தாவின் சங்கீதம் உதவிற்று. ஆனால் அந்தச் சங்கீதத்தைப் பயன்படும்படி செய்தவள் யார்? அம்மாவுக்கு அது தெரியாது. சாந்தாவுக்கு ஜாடை மாடையாகத் தெரியும்.

மண்டையை உருக்கும் வெயிலில் இருந்துவிட்டுக் குளிர்ந்த சோலைக்குள் போய் உட்கார்ந்தால் எப்படி இருக்கும்? வாழ்க்கை எனக்கு அத்தகையதாயிற்று. உலகம் ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதம் ஏதோ உளறிற்று. அதுவும் என் எதிரில் அல்ல. பிறகு என்னைப் பற்றிப் பேசுவதையும் விட்டு விட்டது. நான் குடிபுகுந்த குதூகலம் நிறைந்த புது உலகமோ என்னைக் கைலாகு கொடுத்து வரவேற்று அந்த உலகின் அழகைக் காணச் சொல்லிற்று. இவ்வளவு இன்பம் இருக்க இவற்றை விட்டு வீண் காலந்தள்ளினேன். மிராசுதாரர் வாங்கின மோரிஸ் மைனர் காரில் டிரைவர் துரைசாமி 40 மைல் வேகத்தில் ஓட்ட மிராசுதார் என் தோள் மீது கையைப் போட்டபடி இன்று தாராசசாங்கம் நாடகம் போகலாமா என்று கேட்கும்போது தான் ஆகட்டும், நாடகத்திலே உட்காரும்போது என் வைரத்தோடும் தொங்கட்டமும் ஒளிவிட சிவந்த என் அதரத்தைப் பிளந்து கொண்டு நகைப்பு ஒளி தரவும், அதைக் கண்டு ‘குஷி ஆட்கள்’ கண்ணை என் பக்கம் திருப்பிப் பூசை செய்யும்போதுதானாகட்டும், “டே! ராமா, டீ, போட எவ்வளவு நேரம் என்று நான் அதட்ட, ‘வந்தேனம்மா’ என்று பணிந்து கூறிக்கொண்டு சமையல்காரன் வரும்போதுதான் ஆகட்டும், இந்தப் புது மோஸ்தர் நிலக்கண்ணாடி பீரோ இந்த ஹாலிலே ரம்மியமாக இருக்கிறது என்று நண்பர்கள் புகழக் கேட்கும்போது தானாகட்டும், சுராஜ்மல் கம்பெனியார், புது மோஸ்தர் நகைகளை அனுப்பி வைக்கும்போது தானாகட்டும், நான் ஆனந்தம் அடையாமல் இருக்க முடியுமா? இவ்வளவுதானா! என் புன்சிரிப்புக்கு மிராசுதாரர் ஏங்கிக் கிடப்பார். எனக்குத் தலைவலி என்றால் அவருக்கு மனவலி. டாக்டர்கள் இரண்டு மூன்று பேர் வந்து விடவேண்டும். எனக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து பார்த்து குறிப்பறிந்து நடப்பதே அவருக்கு வேலை. அவர் மனம் மகிழ்ந்தால்தான் மனோகரமாக வாழ முடியும் என்று கருதினார். பெட்ரோல் போடாத மோட்டார் ஓடுமா? அதுபோல் குஷியில்லாத குட்டியைக் கொண்டு எப்படிக் காலந்தள்ளுவது? குட்டிக்குக் குஷி பிறக்க வேண்டுமானால் என்ன வேண்டுமோ அதை வரவழைத்துத் தரத்தானே வேண்டும் என்று மிராசுதாரர் கூறுவார். அது நான் நுழைந்த புது உலகின் சட்டம். என் அழகுக்கு அவர் அடிமை. அந்த அழகு வளர வளர அவரது அடிமைத்தனமும் வளரும். ஆகவே, என் அழகை அதிகரிக்கச் செய்வதிலே எனக்கு அக்கறை பிறந்ததிலே ஆச்சரியம் என்ன? என்னுடைய ‘பாஷன்’ தான் ‘மாடல்’ ஆகிவிட்டது. ‘ஜாலி கர்ல்’ என்பது எனக்குப் புது உலகம் தந்த பட்டம். ‘லக்கிபெலோ’ என்று மிராசுதாரைப் பாராட்டுவார்கள். எவ்வளவு வறுமையில் வாடினேனோ, அவ்வளவு செல்வத்தில் புரண்டேன்.

தரித்திர நாராயணியாக இருந்த நான் தங்களுக்குச் சுந்தரியானேன், விசாரம் பஞ்சாய்ப் பறந்தது. பொன் குடத்துக்கு பொட்டிட வேண்டுமா என்பார்கள் பழமொழி. ஆனால் பொன் குடம் மெருகு பூசாது இருந்தால் எப்படிக் காணப்பட்டேன். ஆனால் முகத்திலே ஒருவித சோகம். கண்களிலே பசிக்குறி காணப்பட்டு வந்தது. புது உலகில் கிடைத்த மெருகு என் அழகை அதிகரிக்கச் செய்தது. மேகத்தை விட்டு வெளியேறிய நிலவு எப்படி இருக்கிறது, வறுமையை விட்டு நீங்கி வெளிவந்த என் வசீகரமும் அப்படியே இருந்தது. என் புது வாழ்க்கையில் நான் வாழ்வின் மதுபானத்தை மனங்கொண்ட மட்டும் பருகினேன். பரவசமானேன். எங்கள் அப்பாவை விரட்டிய மிராசுதாரர், என் விழியைத் தன் வழியாகக் கொண்டு என் பேச்சை வேதமாகக் கொண்டு என் மடியைத் தேவலோகம் எனப் புகன்று, என் சரசத்தை எதிர்நோக்கிக் கிடக்கும்போது, நானே பெருமையும் அடைந்ததுண்டு. பணம் என் கையிலே புரளும்போது பூரித்தேன். வசீகர வாழ்விலே வேகமாகப் புகுந்தேன். ஆழமாக நுழைந்தேன். ஆனந்த வல்லியானேன். உலகம் உயிரோடு என்னை முன்பு வாட்டிக்கொண்டிருந்தது. இப்போது? என் ஏவலாளியாயிற்று. இந்த நேரத்தில் என் அழகில் சொக்கி மிராசுதாரர் கிடக்கவும், மிராசுதாரர்க்குக் கிடைத்தவள் நமக்குக் கிடைக்கவில்லையே என்று வேறு குட்டிக் குபேரர்கள் ஏங்கவும், ஆறு ஆண்டுகள் மூழ்கிக் கிடந்தேன். மிராசுதாரர் எனக்கு அலாதீன் தீபமானார். சோதிமயமான வாழ்வு வாழ்ந்தேன். ஊரார், அதாவது நான் முன்பு வசித்துக் கொண்டிருந்த உலகில் யார் என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ தெரியாது. அதனைக் கவனிக்க எனக்கு நேரமில்லை. விதவிதமாகச் சிங்காரித்துக் கொள்ளவும். வகைவகையான களியாட்டங்களில் ஈடுபடவும், பற்பல பக்தர்களுக்குத் ‘தரிசனம்’ தரவும், பலபேர் தவமிருந்து வரம் பெறாது திகைக்கக் கண்டு நகைக்கவும்; நேரம் இருந்ததே தவிர, அந்தப் பழைய உலகைப் பற்றி எண்ண நேரமேது? என் உல்லாச வாழ்வு உச்ச நிலையில் இருக்கையில் ஒரு நாள், இந்தச் சமயத்தில் சோமு என்னைக் கண்டால் என்ன எண்ணுவான்? என்று ஒரு புதுமையான எண்ணம் தோன்றிற்று. அந்த எண்ணம் வளரவும் தொடங்கிற்று. சில நாட்கள் சென்றன. சோமு என்னைக் காணும் சம்பவம் நிகழ்ந்தது.

பசி கிடையாது! தூக்கம் கிடையாது! தூக்கம் வராது! நாரதரின் தம்பூரு, நந்தியின் மத்தளம், அரம்பை, ஊர்வசியின் நடனம், காமதேனு, கற்பக விருட்சம், தங்கக் கோபுரம், பவள மாளிகை, பச்சைப் புற்றறை, சிங்கார நந்தவனம், பாரிசாத மணம்; இன்னும் ‘தேவலோகத்தை’ எப்படி எப்படியோ வர்ணிக்கிறார்கள். இவற்றைப் பெற நாம் ஏதோ புண்ணியக் காரியம் செய்யவேண்டும். செய்தால் இத்தகைய உலகத்திலே போய்ச் சுகமாக வாழலாம். கெட்ட காரியம் செய்தால் அக்கினிக் குண்டம் அகன்ற வாய்ப் பாம்பின் புற்று, நெருப்புச் சிலை, முள் பீப்பாய், செக்கு செந்தேள், ஈட்டி முனை, அரிவாள் நுனி, சம்மட்டி அடி, சக்கரம் என்று ஏதேதோ பயங்கரமான பொருள்கள் நிறைந்த நரகலோகத்தில் புகவேண்டும் என்று கூறுகிறார்கள். என்னைக் கேட்டால் சொல்வேன். பணம் படைத்தவர்கள், புராணப் புரட்டர்கள் என்றும் தேவலோகத்தை இங்கேயே அடைய முடியும். ஏழைகளுக்கு உலகம் நரக வேதனையைத்தான் தருகிறது. உதகமண்டல உச்சியிலே வெப்பத்தை நீக்கிக் கொள்ள நங்கள் போனபோது, ‘தேவலோகம்’ எங்களை வரவேற்றது. நான் மகா கெட்டவள், விதவைக் கோலத்தை விட்டு விபசாரியானேன். ஆகவே ‘நரகம்’ எனக்கு வரும் என்று புராணீகர்கள் கூறுவார்கள். ஆனால் தேலோகத்தில் நான் இருப்பது அவர்களுக்குத் தெரியுமோ? அழகிய பங்களா, அதை அடுத்துப் பூந்தோட்டம், அதிலே பல வர்ணப் பூக்கள், வானத்திலே மேகம் மோகன ரூபத்தில் உலாவிற்று. பனிநீர் தெளிப்பது போன்ற சிறு தூறல், பட்டு விரித்தது போன்ற பாதை, மேனகை, அரம்பரையர் போன்ற மாதரின் சிரிப்பு, அருமையான சினிமா, ஆனந்தந் தரும் உண்டி வகைகள், ஆயாசத்தைப் போக்கும் கேளிக்கைகள், அடடா! உதக மண்டலத்தில் நான் கண்ட உல்லாசம், எனக்கு உச்சிமுதல் உள்ளங்கால் வரை புளகாங்கிதந்தான் இருந்தது. இவ்வளவு சுவை வாழ்க்கையிலே இருக்கிறது. வாழ்வது மாயம். மண்ணாவது திண்ணம் உலகமே மாயை என்று கூறும் பேர்வழிகளும் இருக்கிறார்கள். யாருக்கு உலகம் மாயை, பணம் படைத்தவர்களுக்கா? சுத்த பைத்தியக்காரத்தனமான பேச்சு. உலகம் அவர்களின் ஊஞ்சல். அவர்கள் அதிலே சாய்ந்து கொண்டு ஆடிச் சல்லாபிக்கிறார்கள். அதைக் கண்டு இல்லாத
வர்கள் எனக்கும் அங்கே இடங்கொடு என்று கேட்கத் தொடங்கினால் என்ன செய்வது என்று கிலி கொண்டு தந்திரமாக இந்த வேதாந்தத்தைப் போதித்து விட்டார்கள். சர்க்கரை டப்பியைக் குழந்தை எடுக்கப்போனால், வீட்டிலே சொல்லவில்லையா, ‘அதைத் தொடாதே அது மருந்து’ என்று குழந்தைகள் நம்பி விடவில்லையா? அதுபோல, ‘உலகம் மாயை’ என்ற பேச்சை விஷயத்தை உணராத வரையில் கேட்டு நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ காய்கிற சூரியனையும் நாங்கள் ஏய்த்து விட்டோம். பேப்பரிலே படித்தோம் 110 டிகிரி, 108 டிகிரி, ஆறுபேர் மண்டை வெடித்து விட்டது. என்று வெயில் கொடுமையின் செய்திகளை. நாங்கள் சூரியனை அடங்கி ஒடுங்கி இருக்கும்படி செய்து விட்டோம். கொஞ்ச நேரம் வந்து உலவட்டுமா என்று எங்கள் அனுமதியைக் கேட்டுக் கொண்டு சூரியன் வந்து போவது போலத்தானே உதக மண்டலத்திலே இருந்தது. கண்ணுக்கும், கருத்துக்கும் இங்ஙனம் நாங்கள் விருந்து தந்து கொண்டு, வேடிக்கையாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்தோம்.

“பாம்பாக வந்தாண்டி அவன்
படுக்கையிலே புரண்டாண்டி
வேம்பென்று வெறுத்தேண்டி
பின்னால் வேதனைப் பட்டேண்டி,
கண்ணன் செய்த கபடம்
என்னை மிகக் கலக்கிவிட்டதடி
சொர்ண நிறமான பாம்பு
சொகுசாக ஆடு தென்றான்
கண்ணாலே காண்போம் என்றேன்
அது என் கன்னிப்பழம் தின்றதே”

என்று ‘அல்லி’ பாடினாள் என்பதாக என் வீட்டு வேலைக்காரப் பெண் எனக்குப் பங்களாத் தோட்டத்திலே பாடி கதை சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் கூறிய கதையைக் கேட்டுக்
கொண்டு நான் என் பிரியமுள்ள குச்சு நாய் டைகரின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டு இருக்கும்போது, யாரோ என்னைப் பார்க்க வந்திருப்பதாக வேலைக்காரன் வந்து அழைத்தான். மிராசுதாரர் மைசூர் ரேசுக்குப் போய் விட்டார். ஆகவே, நானே வீட்டுக் காரியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். கூப்பிடுவது யார்? என்று தெரியவில்லையா என்று வேலைக்காரனைக் கேட்டேன் இல்லை என்றான். எப்படி இருக்கிறான்? எதற்குப் பார்க்க வேண்டுமாம்? என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனேன். ஹாலில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு பேப்பரைப் படித்துக் கொண்டிருக்கக் கண்டேன். நேரே என் அறைக்குச் சென்று, அலங்காரம் ஏதாகிலும் குறைந்து விட்டதா என்று கண்ணாடியில் பார்த்துவிட்டு, ஹாலுக்கு வந்தேன். உட்கார்ந்திருந்த மனிதன் எழுந்து நின்றான். இருவரும் வாய் பிளக்க நின்றோம். என் எதிரில் நின்றவர் சோமு. எதிர்பாராத சந்திப்பு. ஒரே விநாடியில் என் மனத்தில் பல ஆண்டுகளாகப் படிந்திருந்த நினைவுகள் தோன்றி, என் உள்ளதை ஒரு விநாடியில் குலுக்கிவிட்டது. நான் ஆச்சரியப்பட்டது போலவே சோமுவுக்கும் இருந்திருக்கும். சோமுவும் ஆச்சரியத்தால் அசைவற்று, பேச்சற்று நின்றான். சோமு நான் அங்கு இருப்பதை அறிந்து வரவில்லை. நானும் வந்திருப்பது சோமு என்று எண்ண இடமே இல்லை. சோமு புதிதாக வந்துள்ள மோட்டார் தேவைப்படுமா? இல்லையானால் பழைய காருக்குப் புதுச்சாமான் தேவையா? என்று விசாரித்து வியாபாரம் செய்யவே அங்கு வந்தான் எனப் பிறகு தெரிந்தது. மோட்டார் கம்பெனியின் ஏஜெண்ட் வேலையில் சோமு இருப்பது எனக்கு எப்படித் தெரியும்? பங்களாக்கள் தோறும் சென்று மோட்டார் வியாபாரத்துக்கு ஆர்டர் சேகரிக்கும் வழக்கப்படி எங்கள் பங்களாவுக்குச் சோமு வந்தான். நல்ல கிராக்கி கிடைக்கும் என்று எண்ணித்தான் உள்ளே நுழைந்து இருப்பான்! ஆமாம்! நல்ல கிராக்கியாகத்தான் கிடைத்தது!