அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

குமாஸ்தாவின் பெண்
6

சோமு, என் ஆசை நாயகனாக இருக்க வேண்டிய சூதும், வஞ்சனையும் பொய்யும் நிறைந்த நடத்தைகளைச் செய்து வந்து, அதிக பழக்கமாக்கி விட்டது. யாரோ லிலி என்ற ஆங்கிலோ இந்திய லேடியாம், வயது அவனைவிட அதிகமாகவே இருக்கும். அவளைப் பிடித்துக் கொண்டு ஆடத் தொடங்கினான். என் காதுக்கு இது முதன்முதல் எட்டியபோது நான் கண்டித்தேன். இனி என் வீட்டு வாயிற்படி ஏறக்கூடாது என்றேன். ‘இல்லை கண்ணே! வியாபாரச் சம்பந்தமாக அவளிடம் பழகினேன். உன்னை நான் விடுவேனோ மறப்பேனோ’ எனக் கெஞ்சினான். ஆனால் காரியம் மிஞ்சிக் கொண்டே வந்தது. சோமுவின் நடத்தையை மிராசுதாரரே எனக்கு எடுத்துக் கூறி, எச்சரித்து வந்தார். சோமுவின் கெட்ட குணம் தெரிந்தால் நான் அவனைவிட்டு விடுவேன். தனக்கு முழுச் சொந்தம் ஏற்படும் என்று மிராசுதாரர் எண்ணினார்.

“காந்தா! கை சலிக்காதுதானே உனக்கு நான் பணம் கொடுத்தேன். கடைசியில் துரோகம்தானே செய்தாய்.”

“துரோகமென்ன செய்தேன். நமது குடும்பச் செலவுக்கு ஏற்றபடி உம்மால் பணம் தர முடியவில்லை. ஏதோ பால்ய சினேகமாயிற்றே என்று சோமுவைக் கேட்டேன். அதனால்தானே காலந்தள்ள முடிகிறது. உமது வருவாய் குறைந்துவிட்டது என்பதற்காக எந்தச் செலவைக் குறைத்துக் கொள்ள முடிகிறது?”

“முடியுமா? முடியாததுதான். பிறந்தது முதல் பணத்திலேயே புரண்டவள்.”

“போதும் நிறுத்துங்கள். பிறக்கும்போது யாரும் தங்கக் கவசத்தோடு பிறப்பதில்லை. கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தேன், உம்மை யார் என்னை இழுத்து இப்படிச் செலவிட்டு வாழும் வாழ்க்கையில் கொண்டு வரச் சொன்னது?”

“சரியான கேள்வி.”

‘நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தவள்’ திடீரென்று எப்படி வாழ்க்கையை மாற்றிக் கொள்வது? நாலு பேர் கை தட்டிக் கேலி செய்யமாட்டார்களா? உங்களுக்குத் தானே அது கேவலம். மிராசுதாரர் பாடு தீர்ந்து விட்டது. காந்தா பாடு காய்ந்து விட்டது என்று கூறுவார்களே. அக்குறை வராமல் பார்த்துக் கொள்கிறேனேயொழிய எனக்கென்ன உம்மீது ஆசை குறைந்து விட்டதா? சோமுமீது ஆசை புரண்டோடுகிறதா?”

“ஆசை இல்லாமல்தானா அவன் பேருக்கு உயில் எழுதியிருக்கிறாய்?”

“உயில் எழுதினேனா? நானா?”

“உயிலென்றால் உயிலேதான்? உன் பேருக்கு 20,000 ரூபாய்க்கு இன்ஷியூர் செய்திருக்கிறாயே, அது நீ இறந்துவிட்டால் அவனுக்குத்தானே போய்ச் சேர வேண்டுமென்று எழுதியிருக்கிறாய்.”

“அப்பா! அதையா சொன்னீர்கள். அதற்குப் பணம் அவரே கொடுக்கிறார். வந்தால் அவரே எடுத்துக் கொள்கிறார். நமக்கு என்ன இதிலே நஷ்டம்?”

“ரொம்ப நியாயந்தான்”

“சரி சரி பேச்சை நிறுத்தும், என் இஷ்டம்”

“ஆமாம்! உன் இஷ்டப்படிதான் காரியம் நடக்கிறது. நடக்கட்டும், நீ அவனை நம்பிக்கொண்டு இரு. அவன் லிலியை இழுத்துக் கொண்டு திரியட்டும்.”

“லிலியோடாவது திரியட்டும், ரோசோடாவது அலையட்டும், எனக்கென்ன? நான் எப்படி அவரைக் கட்டுப்படுத்த முடியும். நான் உம்மைப் பிரிய இசைகிறேனா? அதுபோல அவருக்கும் நான் மட்டும் போதவில்லை அலையட்டும்.”

“அலையட்டும், தொலையட்டும், உன் உயிரையும் போக்கட்டும், எனக்கென்ன?”

“என் உயிரைப் போக்கத்தான் நீங்கள் உதித்தீர்களே. அவர் ஏன் போக்குகிறார்.”

“ஏனோ? உன் உயிர் போனால் எனக்காக 20,000 ரூபாய் வரப் போகிறது!” என்று மிராசுதாரர் கேட்டார். இந்தச் சம்பாஷணை எனக்குச் சஞ்சலத்தையும், திகிலையும் உண்டாக்கிற்று. என் உயிருக்கே ஆபத்து வருமோ என்று அஞ்சினேன்.

மிராசுதாரருக்கும், எனக்கும் நடந்த காரமான பேச்சிலே என்னிடம் கடைசியாக அவர் கூறிய வார்த்தை என் மனத்தில் பெருந்திகிலைக் கிளப்பிவிட்டது. ஒரு வேளை பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு சோமு... சீச்சி, என் மீது அவருக்கு எவ்வளவு பிரியம். என் பொருட்டு எவ்வளவு சொத்து போயிற்று. ருக்குவைக் கூட மறந்தார். அவர் கேவலம் பணத்துக்காக என் உயிரைப் போக்குவாரா? சே, ஒருக்காலும் செய்யமாட்டார். ஆமாம் என்மீது ஆசையிருந்தால் ஏன் அந்த ஆங்கிலோ மாதைக் கட்டி அழுகிறார். இது ஒரு பேச்சாகுமா? ஏதோ ஆண் பிள்ளைதானே அவளிடம் ஒரு மயக்கம். அதற்காக என்னைக் கொல்லத் துணிவாரா? ஒருக்காலும் இல்லை. மிராசுதார் வீணாக மிரட்டுகிறார் என்று நானே எண்ணிக் கொண்டேன். ஒரு விதமான பயம் என் மனத்தில் புகுந்துவிட்டது. மருண்ட கண்ணுக்கு இருண்ட இடமெங்கும் பேய் என்பார்களே, அதுபோல எனக்குச் சோமுவின் பேச்சும் நடத்தையும் வரவர திகிலைக் கிளப்ப ஆரம்பித்தது. சந்தேகம் பலமாகி விட்டது. முதல் நாள் சற்று ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டு வந்தேன். லிலியின் நடவடிக்கைகளையும் கவனித்துக் கூற ஏற்பாடு செய்தேன். மிகவும் சீர் குலைந்த என் வாழ்வில் செந்தேன் போல் வந்து சேர்ந்தார் என்று சோமுவை நான் எண்ணியது போய், எந்த நேரத்தில் என்ன ஆபத்து வருமோ என்று அஞ்சத் தொடங்கினேன். ஆனால் சோமு எப்போதும் போலவே என்னிடம் பிரியமாகவே நடந்து வந்தார். ருக்குவைக் கூடத் தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

திடீரென்று ஒரு தினம் ருக்கு இறந்து விட்டதாகத் தந்தி வந்தது சோமுவும் ஊருக்குச் சென்று இரண்டு வாரங்கள் கழித்து சென்னைக்குத் திரும்பினார். திரும்பியவர் மனைவி இறந்ததாகத் தேம்பி அழவில்லை. துளியும் துக்கங் காட்டவில்லை. ஆனால் எனக்கு ஆச்சரியத்தையும், பயத்தையும் கிளப்பிவிட்டது அதுவல்ல. சோமுவிடம் பணம் தாராளமாக நடமாடத் தொடங்கிற்று. பணம் ஏது என்று விசாரித்தேன். ருக்கு 5,000 ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்யப்பட்ட செய்தி கிடைத்தது. ருக்கு இறந்தால் பணம் கணவனுக்கு என்று இன்ஷ்யூர் இருந்ததாம். ருக்கு இறக்கவில்லை. கொல்லப்பட்டாள் என்று உடனே தோன்றிற்று. பணத்துக்காக மெல்ல மெல்லக் கொல்லும் ஏதோ ஒரு வகை விஷத்தைக் கொடுத்துச் சோமு தன் சொந்த மனைவியைக் கொன்று விட்டான் என்று மிராசுதாரர் கூறினார். சுத்த அபாண்ட பழி... என்று மிராசுதாரரிடம் நான் வாதிட்டேன். ஆனால் என் மனத்தில் மிராசுதார் கூறியதே உண்மை என்று தோன்றிற்று. இயற்கையாக மரணமடைவதுபோல் ஏதோ சூது செய்துதான் சோமு ருக்குவைக் குற்றுயிராக்கித் தாய் வீட்டுக்கு அனுப்பினான் என்று தீர்மானித்தேன். ஆனால் சோமுவை நான் எப்படிக் கேட்பது?
இன்ஷ்யூர் கம்பெனிக்கு எழுதி, நான் இறந்தால் சோமுவுக்குப் பணம் போய்ச் சேரவேண்டும் என்பதை மாற்றிவிட்டால், என் உயிருக்கு ஆபத்து இராதல்லவா? அதுவே நல்ல யோசனை, என் பெயருக்கும் எழுத வேண்டாம். உன் தங்கை பேருக்கு எழுதிவிடு என்று மிராசுதாரர் கூறினார். இதைச் செய்யத்தான் சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். சோமுவுக்குச் சந்தேகம் வராத விதத்திலே காரியத்தை நடத்த எண்ணினேன். ஏனெனில் நான் உயிரையும் இழக்க விரும்பவில்லை. இன்ஷ்யூர் விஷயத்தில் நான் அவசரப்பட்டு ஏதாகிலும் செய்தால் சோமு கோபித்துக் கொண்டு என் சினேகமே வேண்டாமென்று கூறிவிடுவார். அல்லது பணம் இல்லாமற் போனால் போகிறது என்று பழிதீர்க்க என்னைக் கொல்ல முயன்றால் என்ன செய்வது என்று பலவிதமான பயம் பிடித்துக்கொண்டது. சோமுவின் பக்கத்தில் படுத்துத் தூங்க பயந்தேன். அவன் கொண்டு வரும் சிற்றுண்டி, அவன் அனுப்பும் டானிக் இவற்றைக் கூட உபயோகிப்பதில்லை. எதிலே என்ன விஷம் கலந்திருக்குமோ என்ற பயமாகவே இருந்தது.

பயங்கொண்ட எனக்குச் சோமு, பழையபடி தீர்த்த யாத்திரை போனால் என்ன? அவனுக்கு இன்பமூட்டும் என்னை அவனால் வாழ்க்கையை வளைத்துக் கொண்டு விபசாரியான என்னை – விபசாரியாகியும் அவனுக்கு விருந்தான என்னைக் கொன்று பணம் பெற எண்ணிடும் பேர்வழி தீர்த்த யாத்திரைக்
குத்தானா போகவேண்டும், பரலோக யாத்திரைக்குப் போனால்தான் என்ன? என்னிடம் ஆசை போய், என் பணத்தை எவளோ ஒரு சட்டைக்காரிக்குக் கொடுக்கத் துணிந்தபிறகு, சோமு இறந்தால் என்ன? அவனைக் கொன்றால்தான் என்ன? என்று கோபம் உண்டாயிற்று.

இந்தச் சமயத்தில் எங்கள் வீட்டு வேலைக்காரியின் சிறுபெண் இறந்துவிட்டது. நோய் நொடி ஒன்றுமில்லை. குழந்தை இறந்த செய்தியைக் கூறிய வேலைக்காரி மூலம் ஒரு பயங்கரமான உண்மை வெளியாயிற்று. அதாவது என்னைக் கொல்ல ஏற்கெனவே ஏற்பாடு செய்து விட்டான் என்பது.

அவன் தரும் தின்பண்டங்களை நான் தின்னாததால் எனக்கு விஷமூட்டச் சோமு விசித்திரமான முறையைக் கையாண்டான். அது என்னைக் கொல்லுவதற்குப் பதிலாக வேலைக்காரப் பெண்ணைக் கொன்றுவிட்டது.

ஒரு நாள் சோமு எனக்கு ஜவ்வாது டப்பி ஒன்று வாங்கிக் கொடுத்தான். புருவத்துக்கு ஜவ்வாது கலந்த மை பூசிக் கொள்வது வழக்கம். நான் மறந்தாற்போல் அந்த டப்பியை எங்கோ வைத்துவிட்டேன். அது காணாமற் போய்விட்டது. அது வேலைக்காரப் பெண்ணிடம் அகப்பட்டதாம். அதைத்தான் அந்தப் பெண் பிரதி தினம் புருவத்துக்குப் பூசிக் கொண்டே வந்தாள். அது மெல்ல மெல்ல அவள் உயிரைப் போக்கும் விஷம் கலந்த ஜவ்வாது. அந்தப் பெண் குழந்தையின் அழகை வருணித்த வேலைக்காரி, என் ஜவ்வாது டப்பியை எடுத்துச் சென்று பூசிக்கொண்டு வந்த செய்தியைக் கூறினாள். அதைக் கேட்டதும் எனக்கு என்னமோ சந்தேகம் தோன்றிற்று. அந்த டப்பியை எடுத்து வரச் சொல்லி மிச்சமிருந்த ஜவ்வாதை ஒரு டாக்டரிடம் அனுப்பிச் சோதிக்கச் செய்ததில், அதில் ஒரு வகையான விஷம் கலந்திருப்பதைக் கூறினார். இன்னமும் சும்மா இருக்க என் மனம் இடந்தருமா? ஜவ்வாதில் விஷமிட்டு என்னைக் கொல்லத் துணிந்தானே, பாதகன் என்று என் மனம் பதறிற்று. எவ்வளவு உறவாடினேன். கடைசியில் எவ்வளவு துரோகச் சிந்தனை கொண்டான் சோமு. என் உயிரைக் குடித்து விட்டு அவன் லிலியுடன் குலாவிக் கொண்டிருக்க விடுவேனா? அவன் எனக்குப் பயணற்றுப் போனான். ஆகவே, அவன் இனி எனக்குத் தேவையில்லை. பயணற்றுப் போனதுடன், என் உயிருக்கு உலை வைக்கவும் துணிந்தான். ஆகவே, அவன் உலகில் இருக்கவும் விடக்கூடாது என்று தீர்மானித்தேன். என் ஆசையை மறக்க அவன் துணிந்தபோது அவனிடம் நான் ஏன் பாசம் காட்ட வேண்டும்? அவன் என்னைக் கொல்லு முன்பு நானே அவனைக் கொல்லுவது என்று துணிந்தேன்.

கொலை நடந்த இரவு – மிராசுதாரர், என்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அது லிலி வீட்டு பட்லரிடமிருந்து பெற்ற கடிதம். அதில் ஆங்கிலத்தில் இருந்ததை அவர் படித்து விளக்கினார். ரோஜா புஷ்பத்தில் திராவக ரூபமான விஷத்தைத் தெளித்து எனக்குத் தருவது என்றும்; அது உயிரைப் போக்கி விடுமென்றும் பணம் விரைவில் கிடைக்குமென்றும் சோமு லிலிக்கு கடிதத்தில் எழுதியிருந்தான். பணம் பெறாமல், வர வேண்டாம் என்று லிலி கடுமையான உத்தரவிட்டதால் சோமு ரோஜா புஷ்பத்தில் விஷமிட்டு என்னைக் கொல்ல ‘பிளான்’ போட்டு விட்டான். லிலி குடித்து மயங்கியிருந்த வேளையில் பட்லர் இக்கடிதத்தையும், சோமு எழுதிய வேறு கடிதங்களையும் எடுத்து வந்து மிராசுதாரரிடம் கொடுத்தான். அவன் மிராசுப் பண்ணையில் ஒரு காலத்தில் வேலை பார்த்தவன்.

இக்கடிதத்தைக் கண்டதும், என்னையுமறியாமல் என் கண்களில் நீர் பெருகிற்று. மிராசுதாரர், “பைத்தியமே அவன் வந்தால், வராதே என்று கூறிவிடலாம்.” ஏன் பயம் என்று தேற்றினார். “வேண்டாம்! இன்று ஓர் இரவு மட்டும் என் இஷ்டப்படி நடக்க உத்தரவு கொடுங்கள்” என்று கெஞ்சினேன், அவரும் சம்மதித்தார்.

இரவு சோமு வந்தான். வாட்டமுற்ற முகம், வஞ்சனை துளியும் தெரியாதபடி நடந்தான். கையிலே நான் எதிர்பார்த்த ரோஜா இருந்தது. நானும் நன்றாகவே நடித்தேன். ரோஜாவைப் பெற்றுக் கொண்டேன். ஏதோ வேலையாக உள்ளே போவது போல் போய், அந்த ரோஜாவை வைத்துவிட்டு, நான் வாங்கி வைத்திருந்த ரோஜாவைத் தலையில் அணிந்து கொண்டு சோமுவிடம் வந்து கொஞ்சலானேன். ஜடையில் இருப்பதைத் தெரிந்து கொண்ட சோமு மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

“சோமு! உன்னை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்” என்று நான் பேச்சைத் துவக்கினேன்.

“ஓராயிரம் கேள் ஒய்யாரி” என்றான் சோமு.

“எனக்கு நீ ஜவ்வாது வாங்கிக்கொண்டு வந்தாயே, அது ஜவ்வாதுதானா?” என்று கேட்டேன்.

“ஆமாம், ஏன்? என்ன விசித்திரமான கேள்வி?” என்று சோமு கேட்டுவிட்டுச் சிரித்தான். ஆனால் அவன் முகத்தில் சிறிது பயமும் தட்டிற்று.

“அந்த ஜவ்வாது ஒரு பெண்ணின் உயிரைத்தான் போக்கிற்று” என்று நான் துணிந்து கூறினேன்.

“என்ன காந்தா! விடுகதை பேசுகிறாய்” என்று கேட்டான் சோமு. அவன் குரலில் நடுக்கம் உண்டாயிற்று.

“டாக்டரின் பரீட்சை நடந்தது” என்று நான் சொன்னேன்.

“பைத்தியமா, உனக்கு? உளறுகிறாய்! ஜவ்வாதுக்கும் டாக்டருக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேலிபோல் சோமு பேசினான். ஆனால் முகத்திலே வியர்வை முத்து முத்தாகத் தோன்றிவிட்டது.

“ஜவ்வாதில் கலந்திருந்த விஷத்துக்கு என்ன பெயர்” என்று தைரியமாகவே நான் கேட்டேன்.

“இது என்ன கிரகசாரம் காந்தா? நீ கூறுவது எனக்கொன்றுமே புரியவில்லையே” என்றான் பாசாங்குக்காரன் பாதகன்.

“புரியாது, ஆனால் எனக்குப் புரிந்து விட்டது. என் உயிரின் விலை 20,000 ரூபாய் அல்லவா?” என்றேன் நான்.

“நான் இனி அரை க்ஷணமும் இங்கு இருக்கமாட்டேன். உன் பணத்துக்காக உன்னைக் கொல்ல நான் உனக்கு ஜவ்வாதில் விஷமிட்டுக் கொடுத்தேனோ? இது என்ன அபாண்டம்” என்று கூறிக்கொண்டே சோமு, “ஏதோ ஒரு காகிதம் கொடு; என் பெயருக்கு நீ எழுதி வைத்திருக்கும் இன்ஷ்யூர் தொகையை மாற்றிவிட்டு, நான் வெளியே போகிறேன். அரை விநாடிகூட இந்தப் பழிச்சொல்லைக் கேட்ட பிறகு, அந்தப் பணத்துக்கு நான் சொந்தக்காரனாக இருக்க மாட்டேன். யார் பேருக்கு மாற்றி எழுத வேண்டும் சொல்” என்று கோபத்துடன் கேட்பவன்போல் சோமு நடித்தான்.

“லிலி பேருக்கு எழுது” என்று நான் கூறினேன்.

“விளையாடாதே” என்றான் சோமு.

“ஏன் விளையாடக் கூடாது?” என்று கேட்டுக் கொண்டே, நான் அவனைத் தழுவிக் கொண்டேன். அந்த நேரம் வரையில் அவனுடன் கோபித்துக் கொண்டு பேசிய நான், திடீரென்று அவனை அணைத்துக் கொள்ளவே சோமு பயந்தான். “இதென்ன சோமு! ஒரு பெண் தழுவிக் கொண்டால் பயப்படுவதா?” என்று நான் கேலி செய்து சிரித்தேன். என் சிரிப்பிலே கோபமே தொனித்தது. அவனும் என் கூடவே சிரித்தான். ஆனால் முகம் பயக்குறிகளையே காட்டிற்று. என் கை பெருவிரலில், நான் ஓர் இடும்பு உறை போட்டுக் கொண்டிருந்தேன். அது, ஜவ்வாது டப்பியின் மேல் மூடிதான்.

அதைக் காட்டினேன் சோமுவிடம், “இதுதான் சோமு, அந்த ஜவ்வாது டப்பியின் மூடி. இந்த டப்பியிலிருந்த ஜவ்வாதைப் பூசிக்கொண்டுதான் என் வீட்டு வேலைக்காரியின் பெண் இறந்துவிட்டாள். ஜவ்வாதில் விஷங்கலப்பது சாமர்த்தியமாகாது. அந்த டப்பியின் மேல் மூடியிலே கலக்க வேண்டாம்” என்று கூறிக்கொண்டே, ஆக்ரோஷத்துடன் சோமுவை அணைத்துக் கொண்டு அவனது நெஞ்சுக் குழியில் கைப் பெருவிரலில் போட்டிருந்த இரும்பு மூடியை வைத்து அழுத்தினேன். திடுக்கிட்ட சோமு திணறினான். என் பிடி தளரவில்லை. அவனது கண்கள் வெளியே வந்து விடும் போலிருந்தன. நான் பயப்படவில்லை. அவனைக் கொன்று விடுவதென முடிவு செய்த பிறகு பயம் ஏது? அப்போது அந்த வஞ்சகன் சரேலென்று என் ஜடையில் கை வைத்து ரோஜாவை எடுத்து அதனை என் நாசியில் வைத்து அழுத்தினான். இரும்பு தன் உயிரைக் கொல்லும் முன்னம் மலர் என் உயிரைக் கொல்லுமென்று எண்ணினான். “உன் ரோஜா வேறு, இது வேறு” என்று நான் கூறிக்கொண்டே, நெஞ்சுக் குழியில் அதிக பலத்தோடு அழுத்தினேன். கண்கள் மூடிக் கொண்டன, கை தளர்ந்து கீழே தொங்கிற்று, கழுத்து சாய்ந்தது, சோமு பிணமாகக் கீழே விழுந்தான். பிணத்தை ஹாலிலேயே கிடத்திவிட்டு, நேரே என் அறைக்குச் சென்று, அவ்வப்போது துண்டு துண்டாக எழுதி வைத்திருந்த இந்த என் வரலாற்றை எழுதி முடித்தேன். ஒரு கொலை செய்துவிட்டு, இவ்வளவு “பாரதத்தை” எப்படி எழுதினேன் என்று ஆச்சரியப்படுவீர்கள். தங்கை சாந்தாவுக்கு விஷயம் தெரியட்டும் என்றுதான் எழுதினேன். தூக்குமேடை ஏறப்போகும் நான், என் துயர்மிக்க கதையை என் தங்கைக்கேனும் கூறாவிட்டால் மனம் துடிக்கும். ஆகவே, நிம்மதியுடன் சாவதற்காகவே இதை எழுதினேன்.
* * *

கன்னியாக இருக்கையில் காதல் கொண்டு, அது கனியாததால், வெம்பிய வாழ்வு பெற்று, விதவையாகி, விதவைக் கொடுமையிலிருந்து விடுதலை பெற விபசாரியாகி விபசார வாழ்க்கையிலே ஆனந்தம் பெற ஆசை நாயகனைப் பெற்று, அவனது துரோகத்தால் துயருற்று, அவனைக் கொன்ற காந்தாவின் கதை இதுவே. போலீசாரிடம் தானே நேரில் சென்று கூறி, கொலையை ஒப்புக்கொண்டு, தடுமாற்றமின்றி கோர்ட்டில் நின்று தண்டனை பெற்று, தூக்கு மேடை ஏறி, தன் வாழ்வைத் துண்டித்துக் கொண்டாள் காந்தா. போலீசுக்குப் போகும்
முன்னம், கறுப்புச் சீலையைப் போர்த்திக் கொண்டு, சாந்தாவைக் கண்டு செய்தி ஏதும் பேசாது, “இதோ, இதுதான் உன் காந்தா!” என்று கூறிவிட்டு – வரலாற்றுக் கட்டை அவளிடம் தந்து போனாள். அந்தக் காட்சியை இன்னும் சாந்தா மறக்கவில்லை! எப்படித்தான் மறப்பாள்?

(திராவிட நாடு - 1942)