அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

குமாஸ்தாவின் பெண்
5

“யாரது, காந்தாவா?” என்று சோமு ஆச்சரியத்துடன் ஆவலுடன் கேட்டான். ஆமாம் என்று நான் கூறவில்லை. கூறுவானேன். அவருக்குத் தெரியவில்லையா என்ன? “அடையாளமே தெரியவில்லையே” என்றார் சோமு. அவர் கூடத்தான் மாறியிருந்தார். யார்தான் மாறாமலிருக்கிறார்கள்? எது மாறாது இருக்கிறது, சம்பிரதாயப்படி? ஆகவே, அதற்கும் நான் பதில் ஏதும் சொல்லவில்லை.“ “காந்தா, ஏன் பேசமாட்டேனென்கிறாய்” என்று கேட்டார் சோமு. பேச வேண்டுமாமே? நானே என்னிடம் பேச அவருக்கு அவ்வளவு ஆசையா? ஆசையை மட்டந்தட்ட வேண்டுமல்லவா? என் அளவு கடந்த ஆசையை அடியோடு அழித்தவர்தானே சோமு!

“உன்னைக் கண்டு நான் எவ்வளவு களிப்படைகிறேன். எவ்வளவு ஆவலோடு பேசுகிறேன். நீ என்னிடம் பேசவும் பிரியப்படவில்லையே. என்னைப் பார்க்க உனக்கு இஷ்டமில்லையா?” என்று சோமு சற்றுச் சோகத்துடன் கேட்டார்.

சோகமா! என் எதிரிலே தாரை தாரையாகக் கண்ணீர் விடட்டுமே. எனக்கென்ன? என் கண்களைக் குளமாக்கிய கொடுமையை நான் மறந்தேனோ, “சரி, இவ்வளவு வெறுப்புடன் இருக்கும் உன்னிடம் நான் ஏனம்மா பேச வேண்டும். ஏதோ பாலிய சினேகமாயிற்றே என்று பேசினேன். உனக்கு இப்போது புது அந்தஸ்து வந்துவிட்டது. பழைய மனுஷ்யாள் பிடிக்கவில்லைபோல் இருக்கிறது. நான் வருகிறேன்” என்று வாட்டத்துடன் சோமு கூறினான்.

போகாதே கண்ணே! என்று அவர் கையைப் பிடித்து இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொள்வேனா என்ன, போகிறேன் என்றால், செய்யுங்கள் என்றுதானே சொல்வேன். அவர் ‘வாட்டம்’ அவ்வளவு பெரிதா! நான் வடிய வாட்டத்தை விடவா...?

“நான் போய் வரட்டுமா?” என்று மீண்டும் கேட்டார் சோமு.

ஸ்நானத்துக்கு வெந்நீர் தயாராயிற்று என்று அதே நேரத்தில் வேலையாள் சொன்னான். இதோ வருகிறேன் என்று அவனுக்குப் பதில் கூறிவிட்டு, செய்யுங்கள் என்று சோமுவுக்கும் பதில் கூறிவிட்டு, சோபாவை விட்டு எழுந்திருந்து உள்ளே போனேன். டைகர் என் கூடவே வந்துவிட்டது. சோமுவிடம் நான் நடந்து கொண்டது தவறு என்கிறீர்களா?

ஹலோ!

யாரது?

நான்தான் சோமு!

சரி,
இன்று மாலை தியேட்டருக்கு வருகிறீர்களா!

சொல்வதற்கில்லை.

சொல்லக்கூடாதா?

புரோகிராம் தெரியாது.

காந்தா, இவ்வளவு கடுமையாக இருக்காதே என்னை நீ என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

என்னவென்று நினைத்துக் கொள்ள வேண்டும்?

என்னைச் சித்திரவதை செய்கிறாய்.

அப்படியா?

ஆமாம், ஆமாம்.

சரி; சரி.

டெலிபோனை வைத்துவிட்டேன்; சோமு பதைபதைத்துக் கொண்டிருப்பார் அந்தப் பக்கத்திலே. படட்டும், படட்டும். நான் சித்திரவதை செய்கிறேனாம். ஏன் செய்யக் கூடாது?

இது டெலிபோன் மூலம் சோமு என்னிடம் சரசமாடிக் கண்ட பலன்! சோமுவுக்கு என் போக்கு உள்ளே சுவாலையைக் கிளப்பிவிடுமல்லவா. கடைசியில் ஒரு நாள் வீட்டிற்கு வந்து வலிய பேசத் தொடங்கினான்.

“காந்தா என்னைச் சற்று நம்பு. நான் முன்பு செய்தது தவறு. உன்னை நன் கொடுமைப்படுத்தினேன். அதை மறந்து விடு. இப்போது நான் மனமார நேசிக்கிறேன்.”

நேசியுங்களேன், அதில் என்ன தப்பு? யார் வேண்டாமென்கிறார்கள்?

இவ்வளவு வெறுப்பாகப் பேசாதே காந்தா, வேலால் புண்ணைக் குத்துவதுபோல் இருக்கிறது.
என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

என்ன செய்வதா? என்மீது அந்தக் கடுமையான பார்வையைச் செலுத்தாதே. பழைய காந்தாவாக இல்லையே நீ.

பழைய காந்தாவும், புதுக் காந்தாவும். இது என்ன பித்தம்?

பித்தந்தான், ஆனால் அதற்கு நீதான் காரணம்.

நானா?

ஆமாம், என்னை நீ இன்னமும் வாட்டாதே. நீ இனி இப்படியே நடந்து கொண்டால், நான் தற்கொலை செய்து கொள்வேன்; அந்தக் காலத்தில் நீயாக என்னை மணம் செய்த கொள்ள விரும்பியபோது, நான் முட்டாள்தனமாக மறுத்துவிட்டேன். வாழ்வைப் பாழாக்கிக் கொண்டேன். உன்னை இங்குக் கண்டது முதல் என் மனம் ஒரு நிலையில் இல்லை.

இது சகஜம். கொஞ்ச நாளில் சரியாகிவிடும்.

காதகீ, பாதகீ, போக்கிரி என்று கூறிக்கொண்டே சோமு கன்னத்தில் அடித்தார். நான் கோபித்தும் கொள்ளவில்லை, சிரித்தேன். அவருடைய மனத்தில் எரியும் வேதனையில் என் சிரிப்பு எண்ணெய் வார்த்தது போலிருந்தது. தலைகால் தெரியாமல் என்மீது மோகங்கொண்டு விட்டார். அவரது ஆசை நிறைவேறும் முன்னம்; அவர் எவ்வளவு பட வேண்டுமோ அவ்வளவும் பட்டுந்தான் ஆகவேண்டும். பழி வாங்காது விடக்கூடாது என்றுதான் எனக்குத் தோன்றிற்று. அந்த எண்ணம் எனக்கு உண்டானதில் ஆச்சரியமுண்டா?

“அஷ்ட தரித்திரனுக்கு அதிர்ஷ்டம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதுபோல், கேவலம் சோற்றுக்கே வழியில்லாது இருந்தவள் ஜாதி ஆசாரத்தை விட்டு, குலத்தைக் கெடுத்துக் கொண்டு எவனுடனோ குலாவி வாழ்கிறாள். அவளுக்குக் கர்வம் இல்லாமலா போகும்? ஆனால் இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு இருக்கமுடியும்? மிராசுதாரரின் சினேகிதம் போனால் லாட்டரி அடிக்க வேண்டியதுதான். என்ன கர்வம் எவ்வளவு அலட்சியம் என்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி கடிதம் போட்டாளையா அந்தக் குட்டி. இப்போது அவள் செய்கிற பிகுவும் பேசுகிற பேச்சும் எப்படி இருக்கிறது தெரியுமா? அந்தக் கடிதம் கூட என்னிடம் இருக்கிறது” என்று சோமு கோபத்துடன் பங்களாத் தோட்டக்காரனிடம் கூறினாராம். அவனைச் சந்தித்து என்னைப் பற்றி விசாரித்து விட்டு பிறகு தமக்கிருக்கும் துக்கத்தை ஆற்றிக் கொள்ள ஆத்திரத்தோடு என்னைத் திட்டி இருக்கிறார். தோட்டக்காரன், ‘ஐயா’விடம் சொல்லிவிட வேண்டும் என்றான். நான் வேண்டாம் என்று தடுத்துவிட்டேன். என்னைச் சோமு வைத்து எனக்குக் கோபம் தரவில்லை. அந்தத் தட்டு சோமுவின் மனத்திலே மூண்டுவிட்ட ஆசையிலே தோன்றியது அல்லவா? நான் உதாசீனமாக நடத்த, நடத்த, அந்தத் தீ கொழுந்து விட்டு எரியத்தானே எரியும்! தீ எரியும்போது வேதனை தாளமாட்டாது இப்படியெல்லாம் பேசிக்கொண்டுதான் இருக்கச் சொல்லும். என்னைச் சோமு உதாசீனம் செய்தபோது என் துக்கத்தை தலையணையிலே நீராகப் பெருக்கித் தீர்த்துக் கொண்டேன். நான் பெண்பால், அவர் ஆண்பிள்ளை! ஆத்திரத்தைக் காட்டுகிறார். காட்டட்டுமே, அது எனது வெற்றியைத்தானே வெளிப்படுத்திற்று! சபாஷ் காந்தா, என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.
* * *

நேரில் பேசிப் பயனில்லை. டெலிபோனில் பேசிப் பயனில்லை. கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் திட்டியும் எதனாலும் பலன் கிடைக்காமல் போயிற்று. ஆனால் சோமுவுக்கு வெகு வேகமாக வளர்ந்து கொழுந்து விட்டெரிந்த தீ அணையுமா? எப்படியேனும் என்னை இணங்கச் செய்ய வேண்டுமென்று கருதி மறுபடியும் ஒருநாள் வீடு வந்து பேசினான். அப்போது நான் “சிறந்த வேதாந்தியான நீர் கேவலம் காந்தகாரத்திலே மூழ்கலாமோ? எவ்வளவு படித்தவர், என் போன்ற கெட்டவளின் சகவாசம் ஆகுமா? வேண்டாம் சோமு விட்டுவிடு. நான் என்ன, என்னைவிட உன் மனைவி அழகு, என்று கூறுகிறார்கள்” என்று நான் சோமுவுக்குப் புத்திமதி கூறத் தொடங்கினேன்.

“காந்தா! வேதாந்தமெல்லாம் போய் வெகுநாட்களாகிவிட்டன. கையில் இருந்த காசில் பெரும்பகுதி அந்த இழவுக்கே அழுதுவிட்டேன். கடைசியில் ஒரு பணக்காரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டேன். ஆனால் வாழ்க்கையிலே ருசி இல்லை. உன்னைக் காண்பதற்கு முன்பும் நான் எத்தனையோ முறை உன்னைப்பற்றி எண்ணி எண்ணி ஏங்கியதுண்டு.”

“என்னைப் பற்றிய சேதியைக் கேள்விப்பட்ட பிறகுமா?”

“ஆமாம்! நான்தானே உன்நிலை கெட்டதற்குக் காரணம். நான் வீணான வேதாந்தமும், விரசமும் கொண்டு, ஏதோ உலகிலேயே நான்தான் புது நாயன்மார் என்று எண்ணிக்கொண்டு, கலியாண பந்தமே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே, உன்னை நான் கலியாணம் செய்து கொள்ள மறுத்தேன். இந்த ஆறு வருடத்தில் நான் அநேக பாடங்கள் தெரிந்து கொண்டேன். உலகில் வாழ்க்கை இன்பம் இருக்க வேண்டுமானால், மனமொத்த காதலியைக் கூடி வாழ வேண்டும். பாடுபட்டுப் பிழைக்க வேண்டும். பலருக்கு நன்மை தரும் காரியம் செய்ய முயலவேண்டும். வெட்டிக்கு வேதாந்தம் பேசிக்கொண்டு, பணத்தையும், காலத்தையும் பாழாக்கிக் கொண்டு இருக்கக் கூடாது. காந்தா! நான் மணம் செய்து கொண்டவளுக்கு என்னிடம் ஆசை இருக்கக் காரணமில்லை. எனக்கும் அவளிடம் ஆசை கிடையாது. ஆனாலும் ஏதோ வாழ்ந்து வந்தேன். உன்னைக் கண்டது முதல், நீ அன்று மூட்டிவிட்ட காதல் பெரிய ஜூவாலையாகிவிட்டது. இனி உன்னோடு வாழ்ந்தால்தான் நான் வாழமுடியும் என்னை நீ ஏற்றுக் கொள்.”

“அது எப்படி முடியும்?”

“ஏன் முடியாது? என்மீது உனக்கு ஆசை இல்லையா? நிச்சயமாகச் சொல் காந்தா. ஆசை இல்லையென்றால் அடிக்கடி உன்னைக் கண்டு பேச அனுமதிப்பாயா? உன்னைக் கன்னத்தில் அடித்ததைக் கூடப் பொறுத்துக் கொண்டாயே. தோட்டக்காரன் எதிரில் திட்டினேன். பிறகும் என்னிடம் சகஜமாகவே பேசுகிறாயே! இருப்பதை மறைக்காதே என் மீது ஆசை உண்டு உனக்கு. முன்பு உன் ஆசையை நான் வீணாக்கினேன். இன்று நம்மிருவர் விருப்பமும் ஒன்று கலக்கட்டும்.”
“அதுதானே முடியாது.”

“ஏன் காந்தா முடியாது?”

“நான் வேறொருவனின் பொருள். என்னை வறுமைப் பிணியிலிருந்து மீட்டு, உலகில் நிம்மதியாக வாழச் செய்யும் மிராசுதாரரின் வைப்பாட்டி. ஆமாம்! உமது மனைவியாக இருக்கத் தவம் கிடந்தேன். முடியவில்லை வேறு ஒருவன் பெண்டானேன். அவன் விட்டுச் சென்றான். காட்டு ரோஜாவாக இருந்தேன். கவலையில் மூழ்கினேன். துக்கத்தில் துடித்தேன். கஷ்டத்தின் மேல் கஷ்டம் வந்தது. காப்பாற்றவோ ஆதரவு தரவோ, ஐயோ பாவம் என்று சொல்லவோ யாரும் முன் வரவில்லை. குடும்பத் தொல்லை கொட்டிற்று. விஷம் தலைக்கேறிற்று. சோமு! நான் விபச்சாரியாக வேண்டிய நிலையும் வந்தது. நான் குலமாதாக, குடும்ப விளக்காக, உன் தர்மபத்தினியாக இருக்க அவாவினேன். இன்று உனது கண்களை மயக்கும் காமவல்லியாக இருக்கிறேன். பணம் படைத்த நீ என்னை மணந்து கொள்ள மனமின்றி கைவிட்டாய். வேறோர் பணக்காரப் பெண்ணை மணம் செய்து கொண்டாய். வாழ்க்கையிலே வசீகரம் இல்லை என்று இன்று வருத்தப்படுகிறாய். ஏற்பாரற்றுக் கிடந்த ஏழையாகிய நான் விதவையாகி வேதனைப்பட்டபோது எனக்கு வாழ்வு என்ற ஒன்று இருக்க முடியுமா? என் இளமையும், அழகையும், அன்பையும், ஆவியையும் உனக்கு அர்ப்பணம் செய்ய நான் முன்வந்தேன். உன் காலடியிலே வைத்தேன். நீ உதைத்துத் தள்ளினாய். இப்போது என்னை அடையவேண்டுமென்று அலைகிறாய், என் மனம் அந்நாட்களில் பட்ட பாடு என்ன என்பது உனக்குத் தெரியுமா? ஒரு பெண் தன் கூச்சத்தையும் விட்டு தன்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி கடிதம் எழுதவும் துணிந்தாள் என்றால் அவளுடைய விருப்பம் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தாயா? பணக்காரக் குடும்பத்தவராக இருந்தால் உமக்கு உள்ளம் என்ற ஒரு வஸ்து இருக்கும் என்பதுகூடத் தெரியாது போயிற்று. பணம் குறையக் குறைய நீர் உமது வைராக்கியத்தை விட்டு, ஒரு பெண்ணை மணந்துகொண்டீர். அன்று என்னை உதறித் தள்ளினீர். இன்று என்னைத் துரத்திக் கொண்டு வருகிறீர். ஆனால், உமது பிடிக்கு அகப்பட முடியாத உயரத்தில் நான் இருக்கிறேன். எனக்கு இப்போது வாழ்க்கையைப் பற்றிய கவலை இல்லை. வேண்டியதைப் பெறப் பணம், ஏவல் புரிய ஆட்கள், சிங்கார மாளிகை, செல்வச் சாமான்கள், நகைகள், நாசூக்குகள் எல்லாம் காத்துக் கொண்டு கிடக்கிறேன், என் முகத்தைத் தனது ‘மோட்ச லோகம்’ என்று கருதும் ஒரு சீமானின் ஆதரவில் நான் இப்போது இருக்கிறேன். நீ என்னைத் தொலைவில் நின்று, கண்டு பெருமூச்செறியலாமே தவிர, அடைய முடியாது. நான் மாடியில் நிற்கிறேன். நீ படிக்கட்டில் நிற்கிறாய். நான் முன்பு அபலை. அப்போது ஆதரிக்க முன் வரவில்லை, நீ. இப்போது நான் உன்னை ஏற்றுக் கொள்ள முடியுமா? மேலும் மிராசுதாரர் என்னாவது...”

“அவன் மண்டையில் இடி விழட்டும் எனக்கென்ன?”

“உமக்கு ஒன்றுமில்லைதான். ஆனால் எனக்கு?”

“உனக்குப் பணத்தின்மீது அவ்வளவு பேராசையா பிடித்து விட்டது?”

“பேராசையல்ல! அதன் அருமையைத் தெரிந்து கொண்டேன். அடைந்தும் இருக்கிறேன் அதை இழக்க மனம் வருமா?”

“பணந்தானா பெரிது?”

“சந்தேகம் என்ன? வாழ்க்கையில் பணம் பிரதானமாக இருக்கும் விதமாகத்தானே உலகம் இருக்கிறது. ஏழையென்றும், பணக்காரரென்றும் இரு ஜாதிகள் உலகில் இல்லாமல் ஒரே ஜாதியாக இருந்தால், இந்த எண்ணம் எனக்கும் இராது. இந்தக் கேள்வியும் பிறந்திராது. பணமின்றி எங்கள் குடும்பம் பாடுபட்டபோது, பணமா பெரிது என்று வேதாந்தம் பேசிக் கொண்டு, எங்களை யாரும் காப்பாற்ற முன் வரவில்லையே. பணம் எந்த விதத்திலோ என்னிடம் வந்த பிறகுதானே நான் பரிமளத்தோடு வாழ முடிந்தது” என்று கூறினேன். சோமு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்ததைக் கண்டேன். என்னால் அதற்குமேல் பிடிவாதம் செய்ய முடியவில்லை. ஆகவே, நான், “அழாதே கண்ணா, நான் உன்னை அதிகமாகத்தான் வாட்டி விட்டேன். இதோ பார்! கொஞ்சம் சிரி, இன்னமும் ஏன் துக்கம். இதோ போதுமா, இன்னொரு முத்தம் தரட்டுமா, ஆஹா முகத்திலே இப்போதுதானே சந்தோஷம் தோன்றுகிறது. சோமு, இப்படி உன்னைத் தழுவிக் கொண்டு கொஞ்சிக் குலவ நான் எவ்வளவு நாட்கள் எண்ணி எண்ணிக் கிடந்தேன் தெரியுமா. வியர்வையைத் துடைத்துக் கொள். இதோ முந்தானையால் துடைத்துக் கொள். இனி உனக்கு நான் விருந்தாக இருப்பேன், பயப்படாதே. மிராசுதாரர் கண்களில் படக்கூடாது. விஷயம் அவர் காதுக்கு எட்டக் கூடாது. கொஞ்சம் இரகசியமாக இருக்கட்டும். ஆனால் நீதான் என் ஆசை நாயகன், என் இன்பக் களஞ்சியம், என் உல்லாசப் புருஷன், என் உயிருக்குயிர், ஏன் இன்னமும் விம்முகிறாய் கண்ணே! இதோ பார். இப்படி இருந்தால் நான் மறுபடியும் கோபித்துக் கொள்வேன் பார், பார் மடியிலே படுத்துக் கொண்டாயே. என் மடிதான் உனக்கு மஞ்சமா? என்று சோமுவிடம் கொஞ்சி விளையாடினேன். என்னிடம் தஞ்சமடைந்த சோமு என் இதழ் சுவைத்தான், முத்தம் தந்தான், இன்ப ஆற்றிலே நீந்தினோம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அடைய முடியாமற்போன சோமு இன்று என்னிடம் அடைக்கலம் புகுந்து விட்டான் அடிமை நம்பர் இரண்டு என்று என் மனத்திலே பதிவு செய்து கொண்டேன்.

சோமுவும் நானும் மிக்க சல்லாபத்தோடு சில நாட்கள் உதகமண்டலத்தில் இருக்க முடிந்தது. மைசூர் ரேசுக்குச் சென்றிருந்த மிராசுதாரர் பலத்த நஷ்டத்துடன் உதகை வந்தார். சென்னைக்குப் பயணமானோம். சோமு புதிய மோட்டார் கம்பெனியின் சென்னை ஆபிசுக்கு வேலையை மாற்றிக் கொண்டு, சென்னை வந்து சேர இரண்டு மாதங்கள் ஆயின, அதுவரை எங்களின் இன்பக் கணைகளாகக் கடிதங்கள் இருந்தன. காதல் சுவை சொட்டச் சொட்டக் கடிதம் எழுதுவார் சோமு. நானும் மனமகிழ்ச்சி அவருக்குத் தெரிவிப்பேன். இருவரும் ஆவலோடு ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொள்ளும் நாளும் வந்தது.

சோமுவின் வரலாற்றைக் கூற மறந்து விட்டேனே. அடைந்த ஆனந்தத்தில் அதை மறந்தேன். என்னை வெறுத்து வேதாந்தத்தைத் துணைக்கழைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பின சோமு, மோட்டார் ஏஜண்டாகி மோகணாஸ்திரத்தால் தாக்கப்பட்டு என்னை வந்தடைவதற்கு முன்னால் பரம்பொருளை நாடி பல பல குருமாரை அடுத்தாராம், வேதாந்தம், சித்தாந்தம் பயின்றாராம். பூசைகள் பலப்பல செய்தாராம். ஒவ்வொரு குருவும் ஒவ்வோர் விதமான வழி காட்டிகளாம். ஆண்டவனைக் காண ஒவ்வொரு வழியும் ஒவ்வோர் ஆயிரம் ரூபாயை விழுங்கிற்றேயொழிய, ஆண்டவ தரிசனம் ஆலயத்தில் காண்பதோடு நின்று விட்டதாம். லோகமே மாயை, வாழ்வதே அநித்தியம் என்று போதித்த குருமார்கள், ரொக்கத்தைப் பற்றி அக்கறை கொண்டதையும் ஒரு பூசா முறையை மற்றோர் பூசா முறைக்காரர் குறை கூறுவதையும் ஒரு தத்துவத்தைக் கூறி, மற்றோர் தத்துவத்தை ஒருவர் போதிப்பதையும், எல்லாத் தத்துவக்காரரும் பணத்தினிடம் மட்டுமே பரமபக்தி கொண்டிருப்பதையும் சோமு தெரிந்துகொள்ள நெடுநாட்கள் பிடித்தனவாம். அனுமத் உபவாசிகளாம் மாகாளியைக் கூப்பிட்டபோது வரவழைக்கும் மகா மந்திரவாதிகளாம் மற்றும் யாராரோ, சோமுவுக்கு இருந்த மதப்பித்தைச் சாக்காக வைத்துக் கொண்ட மட்டும் கொள்ளையிட்டுக் கொழுத்தார்களாம். பணம் குறையக் குறைய தாயின் திட்டு அதிகரித்ததாம், இவரின் புத்தியும் துலங்கிற்றாம். பிறகுதான் வடநாட்டில் உள்ள ஒரு வக்கீலின் மகளை மணந்து கொண்டு வாழ்க்கையை நடத்தினார். தாயும் காலமானார்கள். பம்பாயில் மோட்டார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு அமர்ந்தார். அதன் உதகை பிராஞ்சுக்குச் சீசனுக்காகத் தன் மனைவியுடன் வந்திருந்த போதுதான் என்னைக் கண்டார்.

சென்னையிலிருந்து சோமு வந்த பிறகு மிராசுதாரர், கண்களுக்குத் தெரியாதபடிதான் எங்கள் சந்திப்பும் சல்லாபமும் இருந்து வந்தன. ஆனால் நாங்கள் மிராசுதாரரின் கண்களை ஏய்த்தோமே தவிர, காதை அடைத்து வைக்க முடியுமா? மிராசுதாரர், அடிக்கடி என்னிடம் உறுமத் தொடங்கினார். சோமுவிடம் கூறும்போதெல்லாம், “கிடக்கிறான் தள்ளு, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தைரியமூட்டினார். மிராசுதார் என்மீது கொண்டிருந்த ஆசை இந்த வதந்திகளால் மட்டும் குறைந்து விட்டதாகக் கூறுவதற்கில்லை. அவருடைய பொக்கிஷமும் வறண்டு வரத் தொடங்கிற்று. ஆகவே, சோமுவிடம் நான் காசு எதிர்பார்த்து நேசங்கொள்ளவில்லை என்ற போதிலும், அவராகப் பணம் தரும்போது கூறிவிட மனம் வரவில்லை. ருக்குவின் தோடும் தொங்கட்டமும், நோட்டும் ரூபாயுமாக மாறின. அவளது தங்கச் சங்கிலியும், தாழம்பூ வளையலும் என்னிடம் பண ரூபத்திலே வந்தன. இவற்றைச் சோமு கூறவில்லை, நான் கேள்விப்பட்டது. தனது மனைவியிடம் தொந்தரவு செய்து நகைகளைக் கழற்றி விற்று எனக்குப் பணம் தருவதாகக் கூற சோமு எப்படிச் சம்மதிப்பார்? நான் கேட்கும்போதெல்லாம் இந்த மாதத்தில் கமிஷன் அதிகம் கிடைத்தது என்று பொய் கூறுவார். ருக்கு அவரது மனைவி, நான் இருந்திருக்க வேண்டிய இடத்தில் வந்து நின்றவள் – நகைகளை மட்டுமா இழந்தாள், பாவம் கலங்கியிருப்பாள்; கதறியிருப்பாள். நன் என்ன செய்வது? நான் வாழ வேண்டுமானால்; இதைக் கவனித்தாலா முடியும்? பிறர் அழ, அதுதான் வாழும் பேர் வழி உலகில் நான் ஒருத்திதானா? வட்டிக்காரர்கள் வாழ்கிறார்களே. நான் மட்டும் ஏன் வீண் வேதாந்தம் படித்தும் பாழ்படவேண்டும்? ஒருவர் வாழ மற்றொருவர் பாழாக வேண்டுமா என்று என்னைக் கேட்டால் கூடாது என்றுதான் சொல்லுவேன். ஆனால், நீ வாழ்வது அவ்விதமாக இருக்கிறதே “ருக்கு தன் கணவனைப் பிரிந்து வாழுகிறாளே. நகைகள் போய் விட்டன என்று நொந்து கொள்கிறாளே. அவளுடைய கஷ்டத்துக்கு நீதானே காரணம். அவள் அழ, நீ சிரித்துக் கொண்டு சிங்காரியாக வாழ்கிறாயே, தகுமா?” என்று கேட்பீர்கள், நான் சொல்லுகிறேன். “தகாதுதான். ஆனால் என்னைக் கேட்கிறீர்களே, மற்றவர்களைக் கேட்பதுதானே! பலருடைய சிங்கார வாழ்வு இவ்விதமாகத்தானே இருக்கிறது? என்னைப்போல் இன்பத்தை விற்பவரைத்தானே குறை கூறுகிறீர்கள். இதையும் கொடாது ஏய்த்துப் பிழைக்கும் பேர்வழிகள் ஏழைகளின் ஏமாளித்தனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு சொகுசாக வாழ்வோர் இல்லையா? இதோ என் மிராசுதாரரின் வாழ்வு இன்பமயம், அவரது பண்ணையாள் பகல் பட்டினி. இதையும் கேளுங்கள், இத்தகைய முறையே கூடாது என்று சொல்லுங்கள். உலகத்தை ஒழுங்காக அமைத்துவிடுங்கள். நான் மட்டுமா? ஏய்த்துப் பிழைக்கும் எவருக்கும் இடமில்லாதபடி செய்து விடுங்கள். அது நல்லது என்பேன், என்னை மட்டும் தண்டித்து விட்டு பிறரைச் சும்மா விட்டுவிடுவதென்றால், அது தகாது.

என்னுடைய டாம்பீக வாழ்வுக்கு ஏற்றவிதமாக நடந்து கொள்ள சோமு முயன்றதில் அபாரமான செலவு ஏற்பட்டுக் கொண்டே வந்தது. வேலையும் போயிற்று. வேறு வேலைக்குச் செல்லவில்லை. தானே யாரையோ பிடித்து ஒரு மோட்டார் ஏஜென்சி எடுத்தார். அதற்குப் பாக்கி இருந்த நகைகள் அடகு. பாவம், தனது நிலையை மட்டும் என்னிடம் காட்டிக் கொள்வதில்லை. சோமு மட்டுமா? மிராசுதாரரே சற்று அடங்கிக் கிடந்தார். அவருக்கு வறட்சி, ஆகவே சோமு விஷயமாகக் கண்டுங்காணாது இருந்துவிட்டார். இவ்விதமாகவே மூன்றாண்டுகளுக்கு மேல் நடந்தது.